Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

மெல்லத் தமிழ் இனி வாழும்
கண. குறிஞ்சி

“காட்டு மிராண்டித்தனமான நாடுகளைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களால் ஆளப்படுகின்றன” என்றார் பேகன். “என்னுடைய அருமையான நண்பர் யார் என்றால், நான் படிக்காத புத்தகம் ஒன்றைக் கொண்டு வருபவரே” என்றார் ஆபிரகாம் லிங்கன். அதாவது சமுதாயத்தையும், தனி மனிதனையும் ஒரே சமயத்தில் மேம்படுத்துவது புத்தகங்களே என்பது இவற்றால் புரிகிறது. அதனால்தான் கடந்தகால வரலாறு, புத்தகத்தின் சிறப்பைப் பல்வேறு பதிவுகளால் நாளும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

ரோமானியர்கள் தமக்கு அறிவுத்தாகம் ஏற்பட்ட போதெல்லாம் மாசிடோனியா மீது படையெடுத்து நூல்களைக் கவர்ந்து வந்து தம் இலத்தீன் மொழியில் இலக்கியங்களை வளர்த்தனர்.

படையெடுப்பின் போது நூல்களை மதித்துப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில், அலெக்சாந்தர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள். அதிலும் குறிப்பாக மாமன்னன் அலெக்சாந்தர், கவிஞர் ஹோமரின் நூல்களைப் படிக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை. போர் நடைபெறும் பொழுது கூட, இரவு நேரத்தில் மாடி வீட்டில் ஹோமரின் படைப்புகளைப் படிப்பதைத் தனது முக்கியக் கடமையாகக் கொண்டிருந்தான்.

“ஹோமரைப் படிக்காத நாள், என் வாழ்வில் வீணான நாள்” என்று அவன் பிரகடனப்படுத்தினான். (“The day that I have not studied Homer, is the day lost to me” என்பது அவனது கூற்று.)

* தனது அரண்மனை நூலகத்தில் ஏராளமான நூல்களைச் சேகரித்து வைத்த அக்பர், எழுதப் படிக்கத் தெரியாதவர். நல்ல நூல்களை அடிக்கடி படிக்கச் சொல்லிக் கேட்டு தனது அறிவை மேம்படுத்திக் கொண்டார்.

* 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக நாட்டு மன்னர் அப்துல் காசம் இஸ்மாயில் ஒரு புத்தகப் பிரியர். 1,17,000 புத்தகங்கள் அவர் அரண்மனையில் வைத்திருந்தார். படையெடுப்புக் காலத்தில் தமக்குப் பிடித்த புத்தகங்களையும் கூடவே எடுத்துச் செல்வாராம் அவர். இவற்றைச் சுமந்து செல்ல ஒட்டகங்களுடன் நூலக அதிகாரிகளும் சென்றார்கள் என வரலாறு கூறுகிறது.

* நெப்போலியன் செயிண்ட் ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த போது, தன்னுடைய இறுதி நாட்களில் துன்பத்தை வெல்லப் புத்தகங்களையே நாடினான் என்பது சரித்திரப் பதிவு.

* டால்ஸ்டாய் தம் 15 ஆம் வயதில் ஒரு நாள் நூலகத்தில் ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’நூலைப் படித்தார். அன்று முதல் ரூசோவின் உருவம் தாங்கிய பதக்கத்தைப் பெருமையுடன் தன் கழுத்தில் அணிந்து கொண்டார்.

* வியட்நாமை பிரான்சு ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பொழுது, வியட்நாமியக் கவிஞர் ஒருவன் குறிப்பிட்டான். ‘பிரெஞ்சுக்காரர்களின் ஆயுதங்கள் எங்களை அடிமைப்படுத்தின. ஆனால் அவர்களது நூல்கள் எங்களுக்கு விடுதலை தந்தன’.

* ஆங்கிலேயர்கள் ஷேக்ஸ்பியரின் நூல்களின் மீது வைத்திருந்த மரியாதை குறித்து ஒரு சொல்வடையே உண்டு. “சூரியன் மறையாத பிரிட்டிஷ் பேரரசு வேண்டுமா அல்லது ஷேக்ஸ்பியரின் நூல்கள் வேண்டுமா என்று கேட்டால், எங்களுக்குப் பேரரசு வேண்டாம்; ஷேக்ஸ்பியரின் நூல்கள்தான் தேவை” என்று ஆங்கிலேயர்கள் தங்களைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்களாம்.

* அதே போல் ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ (unto his fast) என்ற நூல் தன்னை மாற்றி அமைத்ததாக காந்தியார் குறிப்பிடுவார்.

* திருக்குறள்தான் தன் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாகக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அடிக்கடி கூறி வருவதை நாம் அறிவோம்.

* தூக்கு மேடைக்குப் போகும் முன்பு வரை மாவீரன் பகத்சிங் லெனினது நூலைப் படித்துக் கொண்டிருந்ததாகப் பகத்சிங் பற்றி எழுதிய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் குறிப்பிடுகின்றனர்.

இப்படி நூல்களின் அருமை பெருமையை விளக்கக் கடந்த கால வரலாற்றிலும், சமகால வரலாற்றிலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

ஆனாலும் என்ன?

தமிழ்ச் சூழலில் நூல்களின் விற்பனை என்பது மனதுக்கு உவப்பை ஊட்டக் கூடியதாக இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கணிணியின் வருகை, போதிய விற்பனை நிலையங்கள் இல்லாமலிருத்தல், ஆங்கில வழிக்கல்வி பெருகி வருதல் எனக் காரணங்கள் பல இருப்பினும் தேவையான நூல்களை வாசகனின் வாயிற்படிக்குக் கொண்டு செல்லாமலிருப்பது ஒரு முக்கியக் காரணம் என்பது அண்மைக் காலத்தில் தாமதமாக நமக்குப் புரிகிறது. இப்பெருங் குறைபாட்டைத் தவிர்க்குமுகத்தான், புத்தகச் சந்தை சென்னையில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. அது பெரும் வெற்றியையும் பெற்றுள்ளது. ஏறக்குறைய 60 இலட்சம் மக்கள் தொகையுள்ள சென்னை தமிழகத்தின் தலைநகரமாகவும் இருப்பதால் இவ்வெற்றி சாத்தியமாயிருக்கிறது.

சென்னையைத் தொடர்ந்து நெய்வேலியிலும் புத்தகச் சந்தை நடைபெற்று வருகிறது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனும் மாபெரும் பொதுத்துறை தொழில் நிறுவனம் இம்முயற்சிக்குப் பெருந்துணையாக இருந்து வருகிறது. ஆனால் ஒப்பீட்டளவில் சென்னையைப் போன்ற சிறப்புகளோ, மக்கள் தொகையோ ஈரோட்டிற்கு இல்லை. அதே போல், நெய்வேலியில் உள்ளது போன்ற மாபெரும் பொதுத்துறை நிறுவனமும் ஈரோட்டில் இல்லை. இருப்பினும் த. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’துணிச்சலாக ஈரோட்டில் கடந்த ஆண்டு முதன் முறையாகப் ‘புத்தகத் திருவிழாவை’10 நாட்கள் ஏற்பாடு செய்தது. அதில் 75 பதிப்பகங்கள் பங்கேற்றன; மொத்தம் 1 3/4 கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்பனை ஆயின. திடுமென நிகழ்ந்த இம்மாபெரும் சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது; பதிப்புலகமே வாய்பிளந்து நின்றது.

‘அருமை உடைத்து என்று அசவாமை வேண்டும்’எனும் வள்ளுவப் பேராசானின் மந்திரத்தை உள்ளத்தில் தாங்கி, மக்கள், சிந்தனைப் பேரவை நண்பர்களும் அதன் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரனும் இந்த ஆண்டு ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் - திறந்த வெளி அரங்கில் - 157 புத்தகப் பதிப்பாளர்கள் பங்கேற்க, ஆகஸ்டு 5 முதல் ஆகஸ்டு 15 வரை 11 நாட்கள் புத்தகத் திருவிழாவைக் கண்டோர் மலைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏறக்குறைய ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்புத்தகத் திருவிழாவிற்கு வந்துள்ளனர். கொங்கு மண்டலத்தைச் சார்ந்த 200 கல்வி நிறுவனத்தின் மாணவ-மாணவிகளும் இதில் அடக்கம். ஒரு புத்தகம், ஒரு ரூபாயிலிருந்து ஐயாயிரம் / பத்தாயிரம் என்ற விலையில் நூல்கள் வேகமாக விற்பனை ஆயின. மொத்தம் 21/2 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்துள்ளது. 110 பதிப்பாளர்கள் 157 கடைகள் அமைத்திருந்த இப்புத்தகக் கண்காட்சி எல்லா நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பெருவெள்ளமெனத் திரண்ட மக்களின் அளப்பரிய ஆர்வத்தால், காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என அனுமதி நேரம் மாற்றப்பட்டது. கண்காட்சி ஆகஸ்டு 15 இரவு 10 மணியோடு முடிந்துவிட்ட பிறகும் பல கடைகளில் விற்பனை தொடர்ந்து நடைபெற்றது என்பது மகிழ்ச்சியான பதிவு.

ஈரோடு புத்தகச் சந்தை எனப் பெயரிடாமல் ‘ஈரோடு புத்தகத் திருவிழா’எனப் பொருத்தமாகப் பெயரிட்டிருந்தனர். நாள்தோறும் நடைபெற்ற இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு, சென்னை புத்தகச் சந்தையில் கூடுவதைக் காட்டிலும், பல மடங்கு மக்கள் வெள்ளமெனத் திரண்டனர். குமரி அனந்தன், தவத்திரு பொன்னம்பலம் அடிகளார், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், கவிஞர் மு. மேத்தா, கவிஞர் நந்தலாலா, தா. பாண்டியன், நடிகர் சிவகுமார், த. ஜெயகாந்தன், முனைவர் வா.செ. குழந்தைசாமி, தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் சி. சுப்பிரமணியம் ஆகியோர் புத்தகப் படிப்பின் இன்றியமையாமை மற்றும் சிறப்பு குறித்து விரிவுரையாற்றினர். பேராசிரியர் அப்துல்காதர் தலைமையில் பட்டி மன்றமும் நடைபெற்றது.

தமிழகத்தின் சராசரி எழுத்தறிவு 74% சதவீதத்தை விடக் குறைவானவர்களே எழுத்தறிவு பெற்றுள்ள ஈரோடு மாவட்டத்தில் (61.5%) 2005/2006 ஆகிய இரண்டு ஆண்டுகளும் தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வெற்றிகரமாகப் புத்தகக் கண்காட்சியை நடத்துவது என்பது எளிய செய்தி அல்ல!. யுனெஸ்கோ கணக்கெடுப்பின்படி, ஒரு மனிதன் சாதாரணமாக ஆண்டுக்கு இரண்டாயிரம் பக்கம் படிக்க வேண்டும். ஆனால் நம் மக்கள் 32 பக்கங்கள்தான் படிக்கின்றனர். இப்படிப்பட்ட அவலமான சூழ்நிலையில் தமிழ்ச் சாதியினரை ஓர் அறிவுப் புரட்சியின் நெம்புகோல்களாக மாற்ற முயல்வது அசாதாரணமானது. இவ்வெற்றிக் கனியைப் பறித்தெடுக்க எடுத்த முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல!

“வெறும் புத்தக வணிகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புத்தகத் திருவிழாவை நடத்தாமல், நல்ல நூல்களை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தும் உயர்ந்த நோக்கிலும், அவ்வாறு கிடைக்கப் பெறும் சிறந்த நூல்களை வாசிக்கத் தூண்டும் எண்ணத்திலும் இப்புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது...... சடங்கு பூர்வமாகவோ, சம்பிரதாயத்திற்காகவோ நடத்தப்படாமல் முழுக்க முழுக்கச் சமுதாய நோக்கிலேயே இது நடத்தப்படுகிறது” என்பது புத்தகத் திருவிழாவின் நோக்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

ஈரோடு புத்தகத் திருவிழா 2006 அதை மெய்ப்பித்திருக்கிறது. ஏதோ பேராசிரியர்களும், அறிவு ஜீவிகளும் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இல்லாமல், அதிகம் படிக்காதவர்களும் வெறும் கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்தவர்களும் பங்களிப்புச் செய்த மாபெரும் விழாவாக இது அமைந்தது. உதாரணமாக ஆட்டோ தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பெரும் எண்ணிக்கையில் இப்புத்தகச் சந்தையில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், அதன் வெற்றிக்குப் பெருமளவு துணை நின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1) இல்லந்தோறும் நூலகம்.

2) நூலகமில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.

3) நல்ல நூல்களே நல்ல நண்பர்கள் - என முப்பெரும் முழக்கங்களை முன் வைத்து ஆண்டுதோறும் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் இந்த ஆண்டுக் குவிமையமாக ‘கொங்கு மண்டலம் - அறிவுக் களஞ்சியம்’எனும் சிறப்பு முழக்கம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கேற்ப கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்ட மக்கள் ஈரோட்டை நோக்கி ஈர்க்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக மாணவ-மாணவிகளின் கவனம் புத்தகங்கள் மேல் திரும்ப ரூ. 250/-க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு “நூல் ஆர்வலர்” என்ற சான்றிதழ் பேரவை சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கை செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு நல்ல எதிர்வினை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிக்கு ஈரோடு, கோவை சார்ந்த நிறுவனங்கள் கூட்டச் செலவுத் தொகையை ஏற்றுக் கொண்டது பாராட்டத்தக்கது; முன் உதாரணமாகக் கொள்ளத்தக்கது.

ஈரோட்டின் புத்தகக் கண்காட்சி வெற்றி, ஒரு முக்கியமான செய்தியை நமக்குத் தெளிவாக்குகிறது. ‘நுகர்வோரை நோக்கி, நூல்கள் சென்றால், வெற்றி நிச்சயம்’என்பதுதான் அது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் மண், அதற்கு ஒளிமிக்கதோர் எடுத்துக்காட்டாக - முன்னோடியாக - ஆண்டு தோறும் திகழும் என்னும் உத்தரவாதத்தை மக்கள் சிந்தனைப் பேரவை நமக்களித்துள்ளது. இதற்காக அவர்கள் சிந்திய வியர்வை, மிகுந்த மரியாதைக்குரியது. தமிழ்கூறு நல்லுலகு இவர்களை மனதார வாழ்த்தும் என்பதில் சற்றும் ஐயமில்லை.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com