Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

நாவில் துவர்க்கும் இயேசுவின் திராட்சை ரசம்
பா. தேவேந்திர பூபதி

புத்தகங்கள் என்பன ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை, போக்கைக் காட்டுகின்ற கண்ணாடியாகவே இருந்து வந்திருக்கின்றன. புத்தக வாசிப்பின் மூலமாகப் பல்வேறு தரப்பட்ட நல்ல நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்தச் சமுதாயம் கண்டு கொண்டு வந்திருப்பதை மறுக்க முடியாது. புத்தக வாசிப்பின் மூலமாகத் தான் ஒவ்வொரு சமுதாயத்தினுடைய ஏற்றத்தாழ்வுகளைச் சீராக்க முடிந்திருக்கிறது. உதாரணமாக, இன்று உலகையே தனது பொருளாதாரத்தின் வளர்ச்சியின் கீழ் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சீனாவில் படித்துள்ளோரின் சராசரி எண்ணிக்கை எண்பது விழுக்காட்டிற்கும் அதிகம் ஆகும்.

Devendra Boopathi இந்தியாவில் தன்னைக் கடவுளின் பிறந்த மாநிலமாக (God’s own country) காட்டிக்கொள்ளும் கேரளாவின் விழிப்புணர்வுக்குக் காரணம் அவர்களின் படிப்பறிவுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. புத்தக வாசிப்பின் மூலமாகத்தான் தங்களை மாபெரும் சக்கரவர்த்தியாக நிரூபித்துக் கொண்டவர்களின் பட்டியலானது அலெக்ஸாண்டர் தொடங்கி அக்பர், சிவாஜி, நெப்போலியன், ஹிட்லர் என நீண்டு கொண்டே வந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. நல்ல புத்தகங்கள் நல்லவரையும் அது அல்லாத புத்தகங்கள் உலகத்தை அச்சுறுத்துபவர்களையும் உருவாக்குகின்றன என்பதை நாம் நெப்போலியனை வைத்தும் ஹிட்லரை வைத்தும் உணர்ந்து கொள்ளலாம். நெப்போலியன் தன் தாயிடம் ‘ஹோமரின் காப்பியங்களும், என் வாள்முனையும்’ இந்த உலகத்தினை அடிமைப்படுத்தும் என அடிக்கடி கூறுவாராம். வாள்முனை தற்போது பேனாக்களாகவும், கணிப்பொறியாகவும் மாறியிருக்கின்றது. மாக்கியவல்லியின் இளவரசன் தான் ஹிட்லரை ஒரு கொடூரமானவனாக்கியது என்று அறிஞர்கள் சொல்வதுண்டு.

அறிஞர்களைப் போற்றுவது என்பதும் அவர்களைப் பாராட்டுவது என்பதும் தொன்றுதொட்டு தமிழ்மண்ணில் இருந்து கொண்டே வந்துள்ளது. ஒரு நாட்டின் புகழ் அங்கு வசிக்கின்ற அறிஞர்களின் எண்ணிக்கையில் நிர்ணயிக்கப்பட்டது. நமது அரசர்கள் புலவர்களுக்கு வழங்கிய பரிசுகளிலிருந்து இதை அறிய முடிகிறது. பட்டினப்பாலையை பாடிய உருத்திரங்கண்ணனாருக்குப் பதினாராயிரம் பொன்னும் கொடுத்து ஒரு மணி மண்டபமும் கட்டிக்கொடுத்தான் கரிகால பெருவளத்தான். பின்னர்ப் பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னுடைய படையெடுப்பின் போது உருத்திரங்கண்ணனாருக்குப் பரிசுகளாய் கொடுத்தவற்றுள் மணிமண்டபத்தை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றையெல்லாம் சூறையாடினான் என்று கதைகளின் மூலம் மன்னர்கள் அறிஞர்கள் மீது வைத்துள்ள பேரன்பைக் கண்டுள்ளோம்.

பண்டைக் காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியின்மையாலும் அளவிறந்த மனித உழைப்பின் தேவையாலும் அறிஞரின் கருத்துக்களைச் சுவடிகளில் பதிப்பிப்பது மற்றும் தலைமுறை தலைமுறையாகப் பேணிக்காப்பது என்பது ஒரு சிரமமான காரியமாக இருந்த காரணத்தாலும் கல்வி முறை ‘குருகுல’க் கல்வி முறையாகவும் பாடமுறை மனப்பாட முறையாகவும் இருந்து வந்தமையால் கல்வியும், அறிவும், ஒரு சாராருக்கே சொந்தம் என்பது போன்ற மாயை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நிலவி வந்தது. இதனால் கல்வியென்பது கடவுட்கொடையாகவும் பாவித்த அவலம் இன்றும் நம்மிடையே காணத்தான் கிடைக்கின்றது.

“மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்குக் காரணமான கண்டு பிடிப்பு சக்கரம்தான்” என்பது போலவே அதன் வளர்ச்சியின் உச்சத்திற்குக் காரணம் அச்சு இயந்திரம் என்பதுவும் ஒரு மறுக்க முடியாத உண்மை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் புழக்கத்திற்கு வந்தது. கிறித்துவ மிசனரிகளால் தரங்கம்பாடியில் சீகன்பால்கு பாதிரியாரால் வேதாகமம் படிப்பிப்பதற்காகத் தமிழகம் வந்திறங்கிய அச்சு இயந்திரம் படிப்படியாகத் தமிழனின் ஒவ்வொரு நாடித்துடிப்பிலும் கலந்து போனது. பொதுவாகவே தமிழ் மற்றும் தமிழனின் வளர்ச்சியை இரு கூறாகப் பிரித்தோமானால் அச்சு இயந்திரத்திற்கு முன் பின் என்றுதான் பிரிக்க முடியும். உலகம் தோன்றியது முதல் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கும் வரை கண்ட வளர்ச்சியை விட அச்சு இயந்திரம் கண்டுபிடித்த பின் அடைந்த வளர்ச்சி பல்லாயிரம் மடங்கு பெரிதாம். இந்த வேள்வியில் தன்னை ஆகுதியாக்கிய பெரியவர்களின் பட்டியலில் ஆறுமுக நாவலர், உ.வே.சா., நா. கதிர்வேற்பிள்ளை, சிங்காரவேலு முதலியார், தாமோதரம்பிள்ளை எனப் பலரும் உண்டு. அது நீண்டு கொண்டே வருவதை நாம் காண முடியும்.

வாசிப்பு என்பது சுவாசிப்பாக மாறிப்போகாத வரைக்கும் எந்தவொரு முன்னேற்றத்தையும் இயல்பாய்க் காண இயலாது. வாசிப்பு என்பது பல்வேறு காலக்கட்டத்தினுடைய அனுபவப் பகிர்வு. ஒரு வார்த்தை உருவாவதற்குப் பல நூறு ஆண்டுகள் தேவைப்படுகிறது. அந்த வார்த்தையே வாக்கியமாக மாறிப் பல்வேறு வாக்கியங்களின் தொகுப்பு புத்தகமாய் மாறுகின்ற வேளையில் பன்னெடுங்காலமாய் தவமிருந்து பெற்ற அனுபவத்தை ஒரு சில விநாடிகளில் நமக்குத்தரும் அற்புதமான சாதனம் புத்தகமன்றி வேறில்லை. ஒரு சிறந்த படைப்பை உருவாக்குவதன் மூலம் மனிதன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கால எல்லையைத் தாண்டி பல்வேறுபட்ட மக்களோடு தன்னைப் பிணைத்து அவர்களின் நிகழ்வுகளில் பங்கேற்றுத் தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருப்பான். அதன் வெளிப்பாடுதான் நம்மில் பலர் இன்றும் இயேசு கிறித்துவோடும், கௌதம புத்தனோடும், மகாத்மா காந்தியினோடும் உரையாடிக் கொண்டிருக்கிறோம். கி.பி. நான்காம் ஆண்டில் அவதரித்த இயேசு அளித்த திராட்சை ரசத்தின் இனிப்பும் துவர்ப்பும் இன்னும் என் நாவின் நுனிகளில் எஞ்சியிருக்கின்றன. கௌதம புத்தரின் புத்தம் சரணம் கச்சாமியானது தொடர்ந்து என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பதும் இந்தப் புத்தகங்களின் மூலமாகத்தான். புத்தகங்களால் மட்டுமே காலத்தை வெல்ல முடியும்.

முன்பெல்லாம் கல்வி கற்பதற்காகவும், அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அறிவை வளர்ப்பதற்காகவும் கண்டம் விட்டுக் கண்டம் ஏகும் ஒரு பறவையைப் போல் நம் முன்னோர்கள் நாலந்தாவிற்கும், தட்சசீலத்திற்கும், காசிக்கும், பிற அயல்நாடுகளுக்கும் சென்றதாக அறிவோம். இதற்கெல்லாம் காரணம் அந்நாளில் அவர்களுக்கெல்லாம் தற்போது உள்ளது போல புத்தகம் என்னும் அற்புதக் கருவி வாய்க்கப் பெறவில்லை.

இன்று கதவுகளால் அடைப்பட்ட அறையின் உள்ளிருந்தே அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டத்தினைப் பற்றியும் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இனவெறித் தாக்குதல் பற்றியும் ஐரோப்பாவில் நிகழ்ந்த தத்துவ எழுச்சி பற்றியும் வாசிப்பதற்கு வகையாகப் புத்தகங்கள் கிடைக்கப் பெறுவது இன்றைய அறிவியலின் உச்சகட்ட எழுச்சியாகும். ஓர் ஊருக்கு செல்லாமலேயே அந்த ஊரின் ஏதோ ஒரு மூலையில் வசித்துக் கொண்டிருக்கும் ஒரு நண்பனுடைய வீட்டின் இடப்பக்க சன்னல்கள் இருக்கும் துவாரத்தையும் அதன் வழியே நுழைந்து கீதம் எழுப்பும் காற்றையும் எந்த ஒரு நபரும் அந்த நகரத்தின் நபரைப் பற்றிய புத்தகம் படிப்பதன் மூலமாக உணரலாம்.

புத்தகங்கள் நம்முடைய பழமையையும், தொன்மத்தையும் மீட்டுத்தருவது உதாரணமாகப் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய ‘அழகர் கோவில்’எனும் புத்தகத்தின் வாயிலாக நீண்டகாலமாக நிலுவையில் நின்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பு அங்குப் பூசை முறையில் இருக்கும் அந்த தலைக்கட்டுக் காரர்களுக்குச் சாதகமாய் வழங்கப்பட்டது. நல்ல புத்தகங்கள் பண்பாட்டையும், அன்பையும், நன்னெறியையும் பேணிக்காக்க வல்லன. அதே சமயம் எழுத்தின் பெயரால் நிகழும் வன்முறைகளும் நம்மை துன்புறுத்துவதாகவே இருக்கின்றன. தலைமுறை தலைமுறையாக வனங்களில் வசித்துவரும் அல்லது பன்னெடுங்காலமாக அவர்கள் அனுபவித்து வரும் நில உரிமையை ஆவணங்கள் மூலமாக நிரூபிக்கச் சொல்லிப் பேசவியலாத விலங்கினங்களைப் போலப் பாவித்து வேட்டையாடுவது நாம் பெற்ற படிப்பறிவின் சாபமாகக் கூடத் தோன்றுகிறது. இப்பேர்பட்ட சூழ்நிலையில் வாசிப்பின் சாளரங்களைத் திறந்து நறுமணமிக்க காற்றின் அருமையை அனைவருக்கும் உணரச் செய்ய வேண்டியது தற்போதைய கால கட்டத்தில் தேவையாய்க் கூட இருக்கிறது.

நெருக்கடி மிகுந்த சமூகத்தில் நேரமின்மை காரணமாயும், மன அயர்ச்சியின் காரணமாயும், வீட்டினுள் அமர்ந்து தன் விருப்பமின்றித் தொலைக்காட்சிப் பெட்டிக்கு மூளையை அடகு வைக்கும் இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாம் அவர்களுக்குப் புத்தக வாசிப்பைத் தவிர வேறென்ன சரியான பரிசை வழங்கிவிட முடியும்? புத்தகங்களைத் தவிர வேறெந்தப் பொருளும் நல்ல மாற்றத்தை அவர்களுக்கு உண்டுபண்ணப் போவதில்லை. இப்படியொரு சரியான தருணத்திலே நாம் பல்வேறு சிறப்புடைய மதுரை மாநகரிலே ஒரு புத்தகச் சந்தைக்குத் தயாராக இருக்கின்றோம். மதுரை என்றவுடனே நம் கண்ணில் நிழலாடுவன தமிழ்ச் சங்கமும் அது சார்ந்த தமிழ்ப் பணியும்தான்.

தன் பாடல்களால் பல அதிர்வுகளை உண்டாக்கிய சங்கத் தமிழின் பெண்பாற்புலவர் வெள்ளி வீதியாரின் சொந்த மண்ணில் அறிவுப் புரட்சிக்கு மீண்டும் ஒரு கவிதை புத்தகச் சந்தை வாயிலாக விதைக்கப்பட்டிருக்கிறது. வட நாட்டிலே அறிவுக்குப் புகழ் பெற்ற காசி, நாலந்தா, தட்சசீலம் போல் தென்னாட்டிலும் புகழ் பெற்ற மிகப்பழமையான திருவிளையாடல்கள் நடைபெற்ற மதுரையில் புத்தகச் சந்தை நிகழ்வது என்பது உழைப்பை மறந்து உறங்கிப் பிரம்படிபட்ட சிவனைப்போல் கேளிக்கையில் மூழ்கி அறியாமையெனும் ஆழ்ந்த நித்திரைக்குள் மிதந்து கொண்டிருக்கும் மாந்தரை மீண்டும் தட்டி எழுப்ப வந்த பிரம்பின் ஓசையை நமக்கு நினைவுறுத்துகிறது. மற்ற எந்தப் புத்தகச் சந்தைக்கும் இல்லாத சிறப்பு இந்தப் புத்தகச் சந்தைக்கு உண்டு. பொழுது போக்கையே அறிவாக மாற்றக் கூடிய வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சி களும் வேறெப்போதும் இல்லாதவகையிலே உண்மையின் தன்மையை உணரக்கூடிய வகையிலே, திரையிடப்படுகின்ற உலகத் திரைப்படம் மற்றும் குறும்பட நிகழ்வும் இந்தக் கண்காட்சியை மேலும் மிக முக்கியமானதாக்குகின்றது.