Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

மெக்காவை நோக்கி...
முத்தையா வெள்ளையன்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள், மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டார். அவரைச் சந்தித்தபோது கூறிய செய்திகள்.

“இந்திய மாஸ்கோ உறவு மேம்பாடு என்ற திட்டத்தின் அடிப்படையில், மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகமும், மாஸ்கோ பல்கலைக் கழக ஆசிய ஆப்பிரிக்க ஆய்வு துறையும் சேர்ந்து ‘வெளிநாடுகளில் இந்திய மொழிகள்’என்னும் கருத்தரங்கை நடத்தின.

கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தக் கருத்தரங்கம் நடந்து வருகிறது. ஒன்பதாம் ஆண்டுக் கருத்தரங்கில் இருபதுபேர் கலந்து கொண்டனர். இவர்களில் நானொருவனே தமிழன். மற்ற மூவர் ஆஸ்திரியாவிலிருந்தும், பல்கேரியாவிலிருந்தும் கலந்து கொண்டனர். மூவரும் அவரவர் நாடுகளில் இந்தி ஆசிரியர்கள். மற்ற பதினாறு பேரும் பஞ்சாப், மத்தியப்பிரதேசம், டெல்லி மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் இந்திக்காரர்கள்.

“இந்திய மொழி”களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை “இந்தி மொழி”க்கே செலவிடுகிறார்கள். வெளிநாடுகளில் இந்திய மொழிகள் என்ற கருத்தரங்கில் இந்தி மொழியைப் பற்றி மட்டும் தான் கருத்தரங்கம் நடந்தது. மூன்று நாட்கள் நடந்த கருத்தரங்கில் ஒன்று, இரண்டு அமர்வுகளில் தான் ஆங்கிலத்தில் கட்டுரை படித்தார்கள். மற்றவர்கள் எல்லாரும் இந்தியில்தான் பேசினார்கள்.

மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் இந்திக்கென்று தனித்துறை இருக்கிறது. தில்லியிலிருந்த பேராசிரியர் ஒருவர் தான் பொறுப்பில் இருக்கிறார். மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் ரஷ்யர்களும் இந்தி ஆசிரியர்களாக இருக்கிறார்கள். ரஷ்யர்களுக்கும் இந்தியாவின் இந்தி ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் தெரியாததால் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆங்கிலத்தில் பழகிப்போன நமக்குத்தான் பிரச்சினையாக இருக்கிறது.

தமிழ் இலக்கியம் எப்படிப் படிப்படியாகக் கற்பிக்கப்பட்டது? என்ற தலைப்பில், பத்தொன்பதாம் நூற்றாண்டு, அதற்கு முன்பாக சமயங்கள், மடங்கள் சார்ந்து கற்பிக்கப்பட்டது. தமிழ்ச் சங்கங்கள், பல்கலைக் கழகங்கள், அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு அணுகுமுறைகள், செம்மொழி, அகில உலகம் சார்ந்து கற்பிக்கப்பட்ட முறைமைகள், சமூகவியல் கண்ணோட்டத்தோடு கற்பிக்கப்படவேண்டும் என்று கட்டுரையை நான் அளித்தேன்.

மேலும் இந்தக் கருத்தரங்கில் நான் கலந்து கொண்டதற்கு முக்கியக் காரணம் பேரா. அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி. இவர் மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக இருக்கிறார். எட்டு ஆண்டுகளாக நடைபெற்ற கருத்தரங்கில் தமிழர்கள் யாரும் இதுவரை கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு நான் தமிழன் என்ற அடையாளத்தோடு கலந்து கொண்டதற்கு டுபியான்ஸ்கிதான் காரணம். இவர் சங்க இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்து இருக்கிறார். இந்தத் தமிழாசிரியரின் மகள் மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் இந்தி ஆசிரியராக இருக்கிறார். இந்தக் கருத்தரங்கின் கடைசி நாளன்று பத்து ரஷ்ய மாணவர்கள் இந்தியில் கவிதை படித்தார்கள்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, வங்காளம் போன்ற மொழிகளுக்கு இந்தி மொழி மாதிரி மற்ற மொழிகளுக்கு அங்கீகாரம் இல்லை. அங்குப் பட்ட வகுப்பு தொடங்கி ஆராய்ச்சி வகுப்பு வரை ஐந்தாண்டு படிக்கும் முறை இருக்கிறது. முதல் மூன்று ஆண்டுகள் வேறு ஏதாவது மொழியை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கலாம். இப்போது அங்குத் தமிழ் மொழி 10 பேர் படிக்கிறார்கள். முன்பு அந்த எண்ணிக்கை கூடுதலாக இருந்ததாம். இப்போது குறைவு என்கிறார்கள்.

பொதுவாக உலகில் உள்ள இந்தியத் தூதரகங்களில் இந்தி மொழிக்கென்று தனிப்பிரிவு, பண்பாட்டுப் பிரிவு, கலாசாரத் தூதர்கள் என்றெல்லாம் இருப்பதால் இந்தி வேலை வாய்ப்பு மொழியாக இருப்பதால் மற்ற மொழிகளை இந்திய தூதரகங்கள் ஊக்குவிப்பதில்லை. தமிழ் படித்தால் வேலை கிடைக்கும் என்று எந்த நிலையும் இல்லாததால் இந்த மாதிரி முடிவுக்கு வருவது முரணாகத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் டுபியான்ஸ்கி, மிகவும் வயதானவர். அவருக்குப் பிறகு அங்குத் தமிழாசிரியர் யாரும் இல்லை. பீட்டர்ஸ் பர்கிலும் இந்தியத் தூதரகம் இருக்கிறது. ஆனாலும் இந்தி படிக்கிற மாணவர்களைவிடக் குறைவாகத்தான் தமிழ் மாணவர்கள் இருக்கிறார்கள்.

இடதுசாரி மனநிலையோடு வளர்ந்தவர்களுக்கு மாஸ்கோ என்ற நகரம் புனிதமான ‘மெக்கா’. அதோடு இல்லாமல் அதனுடைய அரசியல் மற்றும் வரலாறு ஆகியவை என்னைப் போன்றவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியவை. நான் மாஸ்கோ நகரத்தில் பத்து நாட்கள் இருந்தேன். ஒரு வெளிநாட்டுக்காரன் பார்வையில், பத்து நாட்கள் பயணத்தில், எதைப் பதிவு செய்ய முடியுமோ அதைப் பதிவு செய்ய முயலுகிறேன்.

லெனின் காலத்து மாஸ்கோ, பிறகு 1953 வரை அதாவது ஸ்டாலின் காலத்து மாஸ்கோ, 1953 தொடங்கி குருஷேவ், பிரஷ்னேவ், ஆந்திரபோவ் உருவாக்கிய மாஸ்கோ என்றும், தகர்ந்து போன சோவியத் யூனியன் என்றும் பேசலாம் என்றே தோன்றுகிறது.

லெனின் காலத்தை எந்த விதமான விமர்சனத்துக்கும் ஆட்படுத்தாத பார்வை ஒன்று இருக்கிறது. சில விமர்சனங்களும் உண்டு. டிராட்ஸ்கி, புக்ரின் இவர்களைச் சார்ந்து விமர்சனம் செய்த குழுக்களும் இருந்தன. இவைகள் இல்லாமல் கட்சி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் அதிகாரம் பற்றிய நுண் அரசியல் சார்ந்த லெனின் காலம் பற்றிய விமர்சனங்களும் இருக்கின்றன.

லெனின் நிகழ்த்திக் காட்டிய அந்தப் புரட்சியை யாரும் இரண்டாம் பட்சமாகச் சொல்வதில்லை. லெனின் ஒரு மாபெரும் மனிதனாகப் பார்க்கும் தன்மை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடங்கிப் பல நிலைகளில் இருப்பதைக் காண்கிறோம். ஸ்டாலின் பற்றி உலகம் முழுவதும் விமர்சனங்கள் இருக்கின்றன. அவரைப் பற்றிய விமர்சனங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்தேன்.

அங்குள்ள மக்களுடன் தொடர்பு கொள்கிற வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் என்பது பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், அங்கு படிக்கிற மாணவர்கள், நம்மூரிலிருந்து அங்குத் தங்கி இருக்கும் நண்பர்கள் வாயிலாகத்தான் சில கருத்துக்களைத் தெரிந்து கொண்டேன். ஸ்டாலின் காலத்தில் உள்ளவர்கள், ஸ்டாலின் காலத்துக்குப் பிறகு பிறந்தவர்கள், சோவியத் தகர்ந்து போன பிறகு உள்ள இளைஞர்கள் என்ற அடிப்படையில் பார்க்கும் போது மூன்று தலைமுறையினர் பதில்களும் ஒன்றாக இல்லை என்றே தோன்றுகிறது.

சோவியத் காலத்தில் குடியிருப்புகள் பிரமாண்டமாக அசுர வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் குறைந்தது முப்பது மாடிகளுக்குக் குறையாமல் இருக்கின்றது. ஆறு, ஏழு குடியிருப்புகளுக்குப் பிறகு சமுதாயக் காடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையோடு ஒட்டி வாழ்கிற சமூக முறைமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அன்றைக்குக் கட்டப்பட்ட வீடுகள் இன்றும் வசதியாக உள்ளன.

ஸ்டாலின் காலத்தில் கட்டப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் உலகத்திலே சிறந்த ரயில்பாதை என்று பாராட்டப் படுகிறது. இதற்குப் பின்னால் சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நகரங்களில் கட்டப்பட்ட மெட்ரோவை விட மாஸ்கோ மெட்ரோ சிறப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. வெளியில் எவ்வளவு குளிரானாலும் உள்ளே இதமான காற்று வருகிறது. 1948-இல் தொடங்கி 1952-இல் மாஸ்கோ பல்கலைக் கழகத்தைக் கட்டி முடித்து இருக்கிறார்கள். ஒரு அரண்மனை வேலைப்பாடுகளுடன் கட்டடம் இருக்கிறது.

இவ்வளவு நிர்மாணங்களையும், ஜெயிலில் இருந்த கைதிகளை வைத்துதான் நடத்தப்பட்டது என்ற பிரச்சாரமும் உள்ளது. அங்குச் சோவியத் காலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், ஹோட்டல்களை மிகவும் பழமையானவை என்கிற அடிப்படையில் இப்போது உள்ள ஆட்சியாளர்கள் அகற்ற விரும்புகிறார்கள். கட்டடங்களை இடிக்கக் காண்டிராக்ட் முறை விடப்படுவதால் கையூட்டு கிடைக்கிறது என்கிறார்கள்.

ஸ்டாலின் காலத்திற்குப் பிறகு குளிர் நாடுகளில் பொதுவான ‘வெந்நீர் பைப்’ என்பதைப் பெரிய விஷயமாக இன்றைக்கும் சொல்கிறார்கள். இப்போது வெந்நீர் பைப்புகளில் வெந்நீர் வருவதில்லை. பணக்காரர்கள் வசிக்கிற பகுதிகளில் மட்டுமே வெந்நீர் வருகிறது.

மாஸ்கோவில் உடனடியாகப் பார்க்கக் கூடிய இடம் செஞ்சதுக்கம். செஞ்சதுக்கம் என்பது சின்ன மலைக்குன்று. 12-ஆம் நூற்றாண்டில் ஜார் மன்னர்கள் மாஸ்கோ நதிக்கரையில் தங்களுடைய அரண்மனையைக் கட்டிக் கொண்டார்கள். இயேசுவின் சீடர்கள் 12 பேர்களில் ஒருவர் அங்கு வந்ததாகவும், அதன் நினைவாக ஆலயமும் கட்டப்பட்டுள்ளது. அரண் மனையின் ஒரு பகுதியாக ஆலயம் உள்ளது. இங்கு உள்ள கட்டடங்களை யார் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இப்போது புட்கின் வசிக்கிறார். அங்கு சர்ச்சுகளும், கேத்திட்ரல்களும் இருக்கின்றன.

லெனின் உடல் இருக்கும் இடமும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் சமாதியும், அவர்களின் சிறு உருவச்சிலைகளும் இந்த இடத்தில்தான் உள்ளன. Red squre என்பது Red என்றால் ரஷ்ய மொழியில் அழகானது என்று அர்த்தம். மாஸ்கோவிலே அழகான பகுதி என்று இப்போது உள்ள அரசாங்கம் சொல்கிறது. நாம் செஞ்சதுக்கம் என்று சொல்லும் போது சிகப்பு என்பதைப் புரட்சியாகப் பார்க்கிறோம்.

லெனின் உடலைப் பார்க்கப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நேரமும், நாட்களும் சிக்கலாக இருக்கின்றன. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அறை திறக்கப்படுகின்றது. அந்த நாட்களில் காலை 11 முதல் 1 மணி வரை திறக்கிறார்கள். கருத்தரங்கில் கலந்து கொண்ட 19 பேரும் (என்னைத் தவிர்த்து) அங்குள்ள சர்ச்சுகளைப் பற்றியே பேசினார்கள். மறந்து கூட லெனினைப் பற்றிப் பேசவே இல்லை. லெனின் உடலைப் பார்க்க மூடுகிற நேரத்தில்தான் கூட்டிப் போனார்கள். மிகத் தீவிர முயற்சி எடுத்ததால்தான் லெனின் உடலைப் பார்க்க முடிந்தது.

பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. சீனர்களும், கொரியர்களும், ருஷ்யாவின் பிற பகுதிகளிலிருந்து வந்து இருந்தார்கள். லெனின் உடலை வைத்திருக்கும் அருங்காட்சியகம் எப்போது திறந்து இருக்கும், எப்போது மூடி இருக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. இப்பொழுது உள்ள அரசாங்கத்தால் முழுமையாக மூடவும் முடியவில்லை. தொடர்ந்து திறந்து வைக்கவும் முடியாத நிலை. பல்கலைக் கழகத்திலிருந்து எங்களை அழைத்துச் சென்றவரிடம், ஏன் லெனின் வைத்து இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வில்லை என்று கேட்டபோது, லெனினைப் பார்த்தவர்கள் திரும்பவும் மாஸ்கோ திரும்புவதில்லை என்னும் நம்பிக்கை உருவாக்கி உலவவிடப்பட்டிருக்கிறது.

மாஸ்கோ நகரில் தடுக்கி விழுகிற இடம் எல்லாம் சர்ச்சுகளாக இருக்கின்றன. பழைய சர்ச்சுகள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன. நான் தங்கி இருந்த இடத்துக்கு அருகில் ஒரு சர்ச்சில் இரண்டு பர்லாங் தூரத்துக்குத் தினசரி கூட்டம் நின்றது.

அதைப் பற்றிக் கேட்கும் போது ஜார் மன்னர் காலத்தில் இந்த சர்ச் கட்டப்பட்டது. சோவியத் புரட்சியின் போது மூடப்பட்டது. ஸ்டாலின் காலத்தில் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மிகப் பிரம்மாண்டமான கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு அரங்கு கட்டதிட்டமிடப்பட்டது. அந்த நேரத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால் பணம் செலவிட முடியவில்லை. பிறகு நீச்சல் குளமாக மாற்றினார்கள். பெரஸ்ரைக்கா காலத்தில் இந்தச் சர்ச் இடிக்கப்பட்டதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சோவியத் தகர்ந்த பின் பல பணக்காரர்கள் சேர்ந்து பல கோடி ரூபாயில் கட்டியிருக்கிறார்கள். அந்தச் சர்ச்சில் கன்னிமேரி தெய்வம் உள்ளது. இந்தக் கதை எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

மாஸ்கோவில் இன்னும் மிகவும் பழைமையான சர்ச்சுகள் உள்ளன. அந்தச் சர்ச்சுகள் எல்லாம் உடையாமல் பழைமையாக இருக்கின்றன. ஸ்டாலினுக்கு எதிரான ஒரு பிரச்சாரம் இவ்விதம் நடைபெறுகிறது. உலகின் இரண்டாவது பெரிய நூலகம் லெனின் நூலகம். இந்த நூலகத்தின் முன் மிகவும் பிரமாண்டமாக தாஸ்தவ்ஸ்கி சிலை நம்மைப் பரவசப்படுத்துகிறது. நூலகத்தின் கீழ்திசைப் பிரிவில் தமிழ்ப் புத்தகங்கள் இருக்கின்றன. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தான் பொறுப்பாளராக இருக்கிறார்.

பழைய நுல்களைப் பாதுகாப்பது. நூலகம் பற்றிய அருங்காட்சியகம், ஆராய்ச்சி பிரிவுகள் என்று இருக்கின்றன. படிக்கும் அறை மிகவும் பிரமாண்டமானது, அந்த அறையின் தலைப்பகுதியில் லெனின் சிலை உள்ளது. 1954ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்ப் புத்தகங்கள் சேகரிக்கப்படவில்லை. சோவியத் வெளியிட்ட அனைத்துத் தமிழ்ப் புத்தகங்களும் உள்ளன.

மிகப் பழைமையான இரண்டு தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன. 1835இல் அச்சிடப்பட்ட அகத்திய மகாமுனிவர் எழுதிய பஞ்சபட்சி சாஸ்திரம் மூலத்தோடும், உரையோடும் இருக்கிறது. இன்னொன்று 1851இல் அஸ்வகோஷ் எழுதிய வச்சதே சுட்சித என்ற புத்தகம். இந்தப் புத்தகம் பிராமண சாதி பேத கோட்பாட்டைக் கண்டிக்கும்படி அஸ்வகோஷ் எழுதிய சமஸ்கிருத நூல். இதை மொழிபெயர்த்து வெளியிட்டது யாழ்பாணம் அமெரிக்க மிஷன். இன்றைக்கும் எழுத்தாளர்களுக்கு அபரிமிதமான மரியாதை இருக்கிறது. டால்ஸ்டாய், புஷ்கின், கார்க்கி ஆகியோரது வீடுகள் அப்படியே பராமரிக்கப்படுகின்றன. அரபாத் தெரு என்று ஒன்று இருக்கிறது. அந்த தெருவில் போக்குவரத்து தடைச் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் உள்ள கட்டட அமைப்பு, விளக்குகள் உள்ளன. கைவினைப் பொருட்கள், புகழ் பெற்ற ஓவியர்கள் இருக்கின்றனர். இப்போது புது அரபாத் தெரு ஒன்று உள்ளது. அங்கு ‘ஒயிட்ஹவுஸ்’கட்டியிருக்கிறார்கள்.

செஞ்சதுக்கத்தில் முன்பு இருந்த நியாய விலை விற்பனைக் கூடம் இப்போது மிகப் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சாக மாற்றி உள்ளனர். ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ருஷ்யா மிகப்பெரிய பணக்கார நாடாக மாறி அமெரிக்காவோடு போட்டி போட வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.

மெக்னாலோடு, கோக்ககோலா விற்பனையும் அதிகமாக இருக்கிறது. தனிச் சொத்துரிமை என்பது வெறித்தனமாகவும், எதையாவது செய்து சொத்து சேர்ப்பதாகவும் பெரும்பான்மை ரஷ்யர்களின் செயல்பாடுகளாகவும் இருக்கின்றன.

மாஸ்கோவிலிருந்து 11/2 மணி நேர பயண தூரத்தில் லெனின் வீடு இருக்கிறது. அங்கு ஜீவா என்ற தோழரின் உதவியால் சென்றேன். அங்கும் எப்போது திறப்பார்கள் என்ற விபரமும் யாருக்கும் தெரியவில்லை. மிகப் பெரிய மாளிகை இருக்கிறது. அங்குக் கட்சிப் பிரமுகர்கள், விவசாயிகளை லெனின் சந்தித்ததாகக் குறிப்புகள் உள்ளன. அந்த மாளிகைக்குப் பக்கத்தில் சின்னதாக ஒரு வீடு. அந்த வீட்டில் தான் லெனின் வசித்தார். அந்த மாளிகையில் போல்ஷ்விக் வரலாறு தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. லெனின் இறந்த உடலைக் கொண்டு போன பாதையைப் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.

இரண்டு பக்கமும் மரங்கள் நடப்பட்டுள்ளன. நான்கு தோழர்கள் தூக்கிக் கொண்டு செல்வது போன்ற சிலையும் இருக்கிறது. அங்கு ஒன்று இரண்டு காவலர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு ருஷ்ய மொழி மட்டும் தெரிந்ததால் பேச முடியவில்லை.

சோவியத் ஆட்சி அமைப்பில் மருத்துவம், முதியவர்களுக்கான போக்குவரத்து இலவசம் இன்றும் அமலில் இருக்கிறது. கல்விக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போது இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் அச்சுறுத்துகிறது. எதைப் படித்தால் வேலை கிடைக்கும் என்ற தேடுதலுடனே அவர்களுடைய வாழ்க்கை நகருகிறது. முன்பு சோவியத் கூட்டமைப்பில் இருந்த சில பகுதிகள் மட்டும் இன்னும் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் செயல்பட்டு வருகின்றன என்பதை அறிய முடிந்தது.

தமிழ் படிக்கும் மாணவி என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, முன்பு “சோவியத் இஸ் பவர்” என்று இருந்தது. இப்போது மற்ற நாடுகள் போல எங்களுடைய நாடும் இருக்கிறது என்றாள்.

வீ. அரசு பேசியதிலிருந்து தொகுத்தது முத்தையா வெள்ளையன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com