Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

இலக்கியப் பரண்
பா. ஆனந்தகுமார்

மு.ரா. கந்தசாமிக் கவிராயர் இயற்றிய “குமணசரித்திரம்” மதுரை, விவேகபாநு அச்சியந்திர சாலைப் பதிப்பு, 1907.

சங்க கால கடையெழு வள்ளல்களான பாரி, ஓரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி ஆகியோருக்குப் பின் தமிழ்ப் புலவர்களை ஆதரித்த வள்ளலாகப் பெருஞ்சித்திரனாரால் புறநானூற்றில் சிறப்பிக்கப்படுபவன் குமணன். இவனுடைய வரலாற்றை மதுரை ‘விவேகபாநு’ பத்திரதிபரும் சேற்றூர் சமஸ்தான வித்துவானுமாகிய மு.ரா. கந்தசாமிக் கவிராயர் 351 விருத்தப்பாக்களில் குறுங்காப்பியமாக இயற்றியுள்ளார். இக்காப்பியம் முறையூர் ஸ்ரீமாந். பழ.சி. சண்முகஞ் செட்டியாரவர்கட்கு அவர்களது வள்ளன்மைக்கறி குறியாக சமர்ப்பிக்கப் பெற்றது. சமர்ப்பித்ததோடு அல்லாமல் இப்பிரதியைச் சண்முகஞ் செட்டியாருக்கு மணம் செய்வித்துமுள்ளார், நூலாசிரியர். “சண்முகமாலே நினது தகுதிக்கேற்ப மருவளருந் தொடைக் குமண சரிதவியற் றமிழ் மகளை மணஞ்செய் வித்தேன்... மகப்பேறுற்று உவக்கவென்றே” இலக்கியப் பிரதியைப் பெண்ணாய்ப் பாவித்து, அதனைத் தன்னை ஆதரித்த அரசனுக்கு உடைமையாக்குவது தெலுங்கு இலக்கிய மரபு.

தெலுங்கு இலக்கிய ஆதிகவி நன்னய்யா (11 ஆம் நூற்றாண்டு) தனது பாரதத்தை இராஜராஜ நரேந்திரனுக்குக் காணிக்கையாக்கி மணம் செய்வித்துள்ளார். நன்னயப் பாரதத்தின் நூலாசிரியன் (க்ருதிகர்த்தா) நன்னயப்பட்டு, நூலெனும் மணப்பெண்ணின் கணவன் (க்ருதி பர்த்தா), நரேந்திரன், நாயக்கராட்சிக் காலத்தில் இத்தெலுங்கு மரபு தமிழ் மரபிற்குள் நுழைந்திருக்க வேண்டும்.

இக்காப்பியத்திற்கும் ஆங்கிலத்தில் முகவுரை ஒன்று, மதுரை தமிழ்ச் சங்கத்தின் செயலரும் ‘விவேக பாநு’ஆசிரியருமான எஸ். சுவாமிநாதஐயரால் எழுதப் பெற்றுள்ளது. விவேகபாநு இதழுக்குப் பாரதியின் ‘தனிமையிரக்கம்” எனும் முதல் சானௌட் கவிதையை வெளியிட்ட (1904 ஜூலை) பெருமையுண்டு என்பதும் இங்குச் சுட்டுதற்குரியது. இம்முன்னுரையில் குமணனைத் ‘தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தின் கர்ணன்’ எனக் குறிப்பிடும் சுவாமிநாத ஐயர், குமணனின் வரலாற்றுப்பின் புலத்தையும் நூலாசிரியன், நூலின் பெருமைகளையும் விவரித்து இறுதியில் இந்நூல் பல்கலைக் கழகத்தில் பாட நூலாகும் (முதலாண்டு கலைத் தேர்வுக்கு) தகுதியுடையது எனப் பரிந்துரையும் செய்துள்ளார்.

திருநெல்வேலி ‘ஹிந்து காலேஜ் தமிழ்ப் பண்டிதர்’ மே.சொ. சுப்பிரமணியக் கவிராயர் இந்நூலுக்குத் தமிழில் நீண்ட முகவுரையொன்று எழுதியுள்ளார். அதில் குமணனுடைய வரலாற்றை விவரிப்பதற்கு ஆதாரமாகவுள்ள புறநானூற்றுச் செய்யுட்களையும், தனிப்பாடல் திரட்டிலுள்ள பாடல்களையும் குறித்து விரிவாக விளக்கியுள்ளார். இதன் பின்னர் இந்நூலை வாழ்த்தும் முகமாக இந்நூலின் அரங்கேற்ற விழாவிற்குத் (தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா) தலைமையேற்ற சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் ப்ரும்ம ஸ்ரீ மஹாமகோபாத்தியாயர்’ வே. சாமிநாதையரவர்களும், ‘அகலிகை வெண்பா’ பாடிய ‘திருநெல்வேலி ஜில்லா வெள்ளக்கால் ஸ்ரீமத் வெ.ப. சுப்பிரமணிய முதலியாரவர்களும்’ எழுதிய இரண்டு சாற்றுக் கவிகள் இடம் பெற்றுள்ளன.

குமணன் முதிரமலைக்குத் தலைவன், அவன் இரவலர்களின் புரவலன் என்பதைப் பெருஞ்சித்திரனார், பெருந்தலைச் சாத்தனார் செய்யுட்கள் வழி அறிய முடிகின்றது. ‘குமணன் புலவருக்காகத் தன் தலையைக் கொடுத்தான்’ என்கிற தொன்மக் கதை பெருந்தலைச் சாத்தனார் பாடலில் குறிப்பாக “வாள் தந்தனனே தலையெனக் கீய” என வருகின்றது. இத்தொன்மத்தை விரிவுபடுத்தித் தனிப்பாடல் திரட்டில் சில பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் குமணன் தன் தலையை அவன் தம்பி இளங்குமணனிடம் தந்து பரிசில் பெறுவதற்காக ஈய முற்பட்டானென்றும், அதனை மறுத்த புலவர் மாந்தையில் வாழும் சிற்பி ஒருவனிடம் குமணனின் தலையை மெழுகில் செய்து வாங்கி இளங்குமணனிடம் காட்டினாரென்றும், அதனைக் கண்டு இளங்குமணன் மனந்திருந்தி ஒன்று சேர்ந்தானென்றும் கதை விவரிக்கப்பட்டுள்ளது. இக்கதை நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு கந்தசாமிக் கவிராயர் ‘குமண சரித்திர’க் காவியத்தை இயற்றியுள்ளார்.

குமணனின் முதிரமலை இன்று உடுமலைப்பேட்டை அருகிலுள்ள குதிரைமலையென்றும், அதனருகிலுள்ள ‘கொழுமம்’ குமணத்தின் மரூஉவென்றும் ஸ்ரீவெங்கயர் புறநானூற்றில் பதிப்பில் தெரிவித்த கருத்தை வழிமொழிந்து நூலாசிரியர் காவியம் செய்துள்ளார். ஆங்கில முகவுரையில் சுவாமிநாதயர் இதனை நவீனக் கவிதை எனத் தெரிவித்தாலும் இடைக்காலப் பாணியில்தான் கவிதை உருவாக்கமும் கதை உருவாக்கமும் நிகழ்ந்துள்ளன. கவிராயரின் சைவப் பற்றும் ஆங்காங்கே மிளிர்கிறது. இதன் விளைவாக சங்க காலக் குமணன் காமவேளையும் மிஞ்சும் பேரழகனாகப் பெண்களுக்குத் தெரிகின்றான். குமணனிடம் இரவல் பெறும் பெருஞ்சித்திரனாரர் சைவசித்தாந்தம் கற்றறிந்த பேரறிவாளராகப் புனையப் பெற்றுள்ளார். இடைக்கால கவிதைக்குரிய சொற்சிலம்ப விளையாட்டும் காவியத்தில் இடம் பெறத் தவறவில்லை. ‘கிளை’ என்ற சொல் கொம்பு, கிளி, குதிரை, சுற்றம் மூங்கில், கைக்கிளை என பல்பொருளில் வரும்படி ஒரு விருத்தம் குமணன் குறித்து அமைந்துள்ளது.

“மாமரக் கிளையார் மணிச்சிறை கிளையாம் வல்விரைந் தெழுந்து உலகனைத்துந் / தாமொரு கிளையான் முரசெனுங் கிளையான் தடநெடும் படைவிழிப் பசுந்தோள் / வாமமார் கிளையார் மருவுகைக் கிளையான் வாடிப் புரியெழிற் குமண்”. குமணனுக்கும் இளங்குமணனுக்கு ‘கொடை’ குறித்த பொருளில் கருத்து மாறுபாடு ஏற்படுகிறது. குமணன் செல்வத்துப் பயன் ஈதலேயென்கிறான், அவன் தம்பியோ துய்த்தலுக்குரியதென்கிறான். இதன் விளைவாகக் குமணன் காடு செல்ல நேருகின்றது. செல்வத்துப் பயன் குறித்த இருவரின் உரையாடல் காப்பியத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளது. கொடையளித்து நாடிழந்தவர்களின் வரலாற்றை (இந்திரன், அரிச்சந்திரன்) இளங்குமணன் கூற குமணன் செல்வம் செல்லக் கூடியது, ‘வெறுக்கை’ (செல்வம்) வெறுக்கக் கூடியது என்கிறார். குமணன் காடு செல்லவேண்டுமென்று அவன் தம்பி கூறும் பகுதி, கைகேயி தசரதனிடம் காடேகும் வரம் கேட்கும் பகுதியை நினைவூட்டுகின்றது. இதே போன்று குமணன் காடு செல்லும்போது மக்களின் நிலையை எடுத்துரைக்கும் பகுதி, இராமாயணத்தில் இராமன் காடு செல்கின்றபோது மக்கள் நிலையைக் கம்பர் வருணிப்பதை ஒத்திருக்கின்றது.

கம்ப இராமாயணத்தைப் போன்று குறளிலும் பக்திப் பனுவல்களிலும் கவிராயர் நற்பயிற்சியுடையவரென்பதற்கு நூலுள் இடம் பெறும் பாக்களே சிறந்த சான்றுகள். சங்க இலக்கியங்கள் தமிழில் அச்சு வாகனமேறிய சூழலில் சங்ககாலம் குறித்தும் தமிழ் இலக்கியம் குறித்தும், தமிழ்ப் பண்பாடு குறித்தும் தமிழர்கள் பெருமிதம் கொண்டனர். அப்பெரும் தவவுணர்வில்தான் இதனைப் போன்ற தொன்மங்கள் நிறைந்த தமிழ் வள்ளல்களின் வரலாறுகள் காவியமாயின. ஆங்கிலேய எதிர்ப்பு தமிழ்நாட்டில் முகிழ்ந்த சூழலில், இதனைப் போன்ற நம் மண் சார்ந்த பெருமித வரலாறுகள் அவ்வெதிர்ப்புக்கு மறைமுக ஆதரவாக நின்றன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com