Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் டிசம்பர் 2007

புத்தகங்களும் நானும்
சு.தமிழ்ச்செல்வி

எனது வாசிப்பு அனுபவத்தை நினைவு கூர்ந்தால் சிறுவயது நாட்களில் கண்முன்னால் விரிந்து கிடந்த என் தாய் நிலமும் அதில் புழங்கிய கிராமத்து மனிதர்களும்தான் என் ஆதிப்பெரு நூலாய் நினைவுக்கு வருகிறது. அடர்ந்த பசிய தென்னந்தோப்புகள் அவற்றிடையே கொட்டியும் தாமரையும் பூத்துக் கிடக்கும் தோட்டங்கள் அதில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் கோரையும் வள்ளைக் கொடிகளும் படர்ந்த வாய்க்கால்கள், பச்சை மரகதப் போர்வையாய் பரந்துகிடக்கும் நெல் வயல்கள், தூரத்தில் ஆர்ப்பரிக்கும் நீலக்கடல் என என் சிற்றூரின் நிலக்காட்சிப் படிமங்கள் நினைவுப் பரப்பெங்கும் பதிந்து நிற்கிறது. அதுபோலவே அம்மண்ணில் பிறந்து வேர்வையும் கண்ணீரும் சிந்தி களிப்பெனில் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் உழைக்கும் பெருமக்களின் அடர்த்தியான வாழ்வனுபவங்கள்தான் நான் வாசித்த முதல் பெருங்கதையாடல்.

இப்படி என் கண்முன்னாலிருந்த நிலத்தை, மனிதர்களை ஒட்டியும் வேறுபட்டும் அமைந்திருந்த பன்னாட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களது பண்பாட்டை, அரசியலை, சமூக, தனிமனித உளவியலை எனக்கு அறிமுகப்படுத்தியது நூல் வாசிப்பு. உயர்நிலைப் பள்ளிக் கல்வியை வேதாரண்யம் குருகுலத்தில் விடுதியில் தங்கிப் பயின்றேன்.

அதுவரை சொந்த ஊரில் சுதந்திரமாய் சுற்றித்திரிந்த எனக்குக் கட்டுப்பாடான விடுதி வாழ்க்கை அதிக சோர்வை ஏற்படுத்தியது. பெற்றோரை பிரிந்த ஏக்கம் வேறு. இந்தச் சூழலில்தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே நான் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்திருந்தேன்.

குருகுலத்தில் அச்சகம் உள்ளது. அச்சடித்த புத்தகங்களை மூங்கில் தட்டியடைத்த கொட்டகைகளில் அடுக்கி வைத்திருப்பார்கள். பெரும்பாலும் ஓரம்வெட்டி ஒழுங்குசெய்யாத, அட்டை வேலை செய்யப்படாத புத்தகங்களாகத்தான் அவை இருக்கும். பள்ளிப்பிள்ளைகள் யாரும் விளையாடக்கூட அச்சகத்தின் பக்கம் போகமாட்டார்கள். நான் மட்டும் அங்குப் போய் மூங்கில் தட்டிக்குள் கையைவிட்டுப் புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து விடுவேன். அவ்வாறு எடுத்துவரும் புத்தகங்களின் ஓரங்களைப் பிளேடால் கிழித்துப் பாடப்புத்தகத்தின் அட்டையைப் போட்டுப் படிப்பேன்.

பிறகுதான் படிப்பதற்குப் பள்ளி நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரம் எனக்குத் தெரிய வந்தது. அந்நாட்களில் கதை, கவிதை, சுயசரிதை, போன்ற புத்தகங்களை எடுத்துப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் சாகசத் தன்மையுள்ள, மாயங்களும், வினோதங்களும் நிறைந்த கதைகளை விரும்பிப் படித்தேன். இப்படிப் படித்த சிந்துபாத், இரும்புக்கை மாயாவி போன்ற கதைகளிடையே ஒருநாள் கொலம்பசின் வாழ்க்கை வரலாற்றையும் படிக்க நேர்ந்தது. கடற்பயண வசதிகள் அதிகம் இல்லாத காலகட்டத்தில் புதிய நாடுகளைக் காணுவதற்கான அவருடைய போராட்டங்கள் என்னிடம் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் ஏற்படுத்தியது. அதே பருவத்தில் என்னிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு முக்கியமான நூல் ‘சத்தியசோதனை.’

நான் பயின்ற கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலச் சூழல், காந்தியடிகளின் எளிமை, உண்மை, விடுதலை மீது அவர் கொண்டிருந்த அவா, மதச் சகிப்புத்தன்மை, கிராமங்கள் குறித்த அக்கறை இவையெல்லாம் என்னுள் காந்தி பற்றிய மதிப்பை அதிகப்படுத்தியிருந்தன. இயல்பாகவே இளம்பருவத்தில் கூடுதலாகக் காணப்படும் கனவுத் தன்மை கலந்த பொதுநலன், தேசநலன் பற்றிய விருப்பங்கள் காந்தியை ஒரு தேசிய நாயகராக எனக்குள் வரித்துக்கொள்ள காரணங்களாக இருந்தன. இதனால் சத்திய சோதனையை ஒரு வேதநூலைப் போல அடிக்கடி படித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பொதிந்து கிடந்த எளிமை, வெளிப்படையான அணுகுமுறை, படிப்பினை இவையெல்லாம் எனது ஆளுமை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளதாய் இப்போது உணர்கிறேன்.

திருத்துறைப்பூண்டியில் ஆசிரியர் பயிற்சி பெற்றபோதும் அதன் பின் உள்ளூரில் ஆசிரியராய்ப் பணியாற்றிய போதும் புத்தகங்கள் எனக்கு எப்போதும் துணையாக இருந்தன. எங்களுக்கு அருகில் உள்ள இடும்பவனம் நூலகத்திலிருந்த எனது உறவினரான முருகையன் மாமாவும் எனது அண்ணன் மனோகரனும் நிறைய நூல்களை எடுத்துவந்து கொடுத்தார்கள். அப்படி அவர்கள் எடுத்து வந்த நூல்கள் ‘கண்டதும் கற்கும்’ வேட்கைக்குத் தீனியாக அமைந்திருந்தது. எது கிடைத்தாலும் படிப்பது என்கிற ஆர்வமே அந்த வயதில் முக்கியமாய்ப்பட்டது. சாண்டில்யன், சுஜாதா, லட்சுமி, தீபம் நா. பார்த்தசாரதி, அகிலன், ஜெகசிற்பியின், அமுதா கணேசன் என எவ்வித தெரிவுகளும் இல்லாமல் நிறையப் படித்தேன். புத்தகங்கள் ஒரு இனம்புரியாத கனவு உலகை எனக்குள் உருவாக்கியிருந்தது. எனது இளம் பருவத்துக்கு அந்தக் கனவுகள் தேவையாய் இருந்தன. மிகை உணர்வும், கற்பனையும், கனவுகளும் மிகுந்திருந்த பருவம் அது.

தடையற்ற வாசிப்பிற்குத் திருமணம் ஒரு முற்றுப்புள்ளியாய் அமையாதது என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். எனது கணவரும் கவிஞருமான கரிகாலன் எனது வாசிப்புச் செயல்பாட்டை ஊக்குவித்ததோடு நெறிப்படுத்திக் கொள்ளவும் உதவியாக இருந்தார். நாங்கள் இருவருமே ஆசிரியர்களாகப் பணியாற்றுவதால் ஓரளவுக்கு நூல்களை வாங்குவதும் சிரமமில்லாமலிருந்தது. எழுத்தாளர்களை நண்பர்களாகப் பெற்றிருந்ததால் நிறைய நூல்கள் அன்பளிப்புகளாகவும் கிடைத்தன. இவையெல்லாம் வாசிப்பை ஊக்கப்படுத்துகிற காரணிகளாக அமைந்திருந்தன.

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அம்பை, கி. ரா. சா. கந்தசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன் என மூத்த தலைமுறை எழுத்தாளர்களுடைய படைப்புகள் மற்றும் ஜெயமோகன், பாவண்ணன், ரமேஷ்-பிரேம், சோ. தர்மன், இமையம் ஞானதிரவியம், தபசி, கண்மணி குணசேகரன், சல்மா, மாலதிமைத்ரி, குட்டிரேவதி எனச் சமகால எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் தொடர்ந்து படித்துவருகிறேன்.

இன்று என்னைப் போல் பிறமொழிப் புலமையில்லாதவர்களும் மொழிபெயர்ப்பின் வாயிலாக உலக இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. விடியல், தமிழினி, நியூ செஞ்சுரி, பாரதி புத்தகாலயம், மருதா, காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் பெருமளவில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுவருகின்றன. பாரதியின் விருப்பப்படி எட்டுத்திக்கிலிருந்தும் இலக்கியம், வரலாறு, தத்துவம், சரிதை என வந்து குவிவது ஒரு சமூகம் வளர்ச்சியடைவதன் அறிகுறி என்றுதான் எண்ண வேண்டும்.

அவ்வகையில் எனக்கு மிகவும் பிடித்த இந்திய மொழி எழுத்தாளர்களுள் மகாஸ்வேதாதேவி முக்கியமானவர். குறிப்பாக அவரது ‘காட்டில் உரிமை’ எனும் புதினம்தான் நானும் எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தையளித்தது. முண்டாக்களின் கலகம் பற்றிய அப்புதினம் அதிகம் வெளிவராத இனக்குழுக்களை எழுத்தில் கொண்டுவர வேண்டும் என்கிற ஆர்வத்தை என்னிடம் ஏற்படுத்தியது. அதுபோல் பஷீரின் சோகமும், எள்ளலும் கலந்த படைப்புகள் எனது விருப்பத்துக்குரியவை. உரூப் பொற்றேகாட், எம். டி. வாசுதேவன் நாயர், முகுந்தன் போன்ற மலையாள எழுத்தாளர்களின் படைப்புகளில் வெளிப்படும் ‘பிரதேச அடையாளம்’ எனக்கான எழுத்து வகைமையை என்னுள் அடையாளம் காட்டியது. பிறமொழி இலக்கியங்களை மிகக்குறைவான விலையில் தொடர்ந்து அளித்து வரும் ‘இனிய உதயம்’ பத்திரிகையை இவ்வேளையில் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இதேபோன்று பிறதேசத்துப் படைப்பாளிகளான டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி, ஹெம்மிங்வே, காப்ஃகா, இவான்துர்கனேவ், மக்சீம் கார்க்கி போன்றோர்களின் படைப்புகள் என்னிடம் ஒருவித அகவிழிப்பு நிலையைத் தோற்றுவித்தன. பாரதிதாசன் கூறியபடி ‘மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி’ கொண்டேன். பல்வேறு நிலச்சித்திரிப்புகள், வாழ்வனுபவங்கள் என்னிடம் இப்பரந்துபட்ட மக்கள் திரள் மீது அளவு கடந்த நேசிப்பை உண்டு பண்ணியது.

முதுகலைத் தமிழை அஞ்சல் வழியில் கற்றேன். சங்க இலக்கிய வாசிப்பு தமிழ், தமிழர்வாழ்வு பற்றிய பெருமித உணர்வைத் தோற்றுவித்தது. சங்க இலக்கியங்களில் காணப்படும் சொற்களஞ்சியப் பெருக்கம், கவித்துவம் ஆகியவை தமிழ் மீதான காதலை அதிகரிக்கச் செய்தது. தொன்மையும், வரலாற்றுப் பாரம்பரியமும் மிக்க ஒரு தொல்குடிமரபின் வரலாற்றுத் தொடர்ச்சி நான் என எண்ணி பெருமைப்பட வைத்தது இச்சங்க இலக்கிய வாசிப்பு.

இலக்கியம் எனும் தளத்திலிருந்து எனது வாசிப்பு வெவ்வேறு எல்லைகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. பெரியார், அம்பேத்கர் போன்ற சமூக ஆய்வாளர்களின் சிந்தனை வரிசை நூல்களைப் படிக்கவேண்டும் என ஆவல் ஏற்பட்டுள்ளது. பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா போன்ற விடுதலை வீரர்களின் போராட்ட வரலாறுகளையும் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

என்னுடைய வாசிப்புச் செயல்பாடு என்னோடு நின்று விட்டால் அதை இயக்கப்படுத்த என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன். படித்த நல்ல கருத்துகளை உடன் பணிபுரிபவர்கள், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எனது பிள்ளைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தில் ஆர்வத்தை வளர்க்க முயல்கிறேன். ஆங்கில நூல்களை அவர்களைப் படிக்கச் சொல்லி விளங்கிக் கொள்கிறேன். புத்தகங்கள் திரும்பி வருமா, வராதா, முனை மடங்கிவிடுமா, கிழித்து விடுவார்களா, அடிக்கோடிடுவார்களா எனக் கவலைப்படாமல் வாசிக்கும் ஆர்வமுடன் கேட்பவர்களுக்கு நூல்களை இரவல் கொடுக்கிறேன். நண்பர்களது இல்ல விழாக்களில் புத்தகங்களை அன்பளிப்புகளாகத் தருகிறோம்.

புத்தக வாசிப்பு என்னை உயிரோட்டமுள்ளவளாக வைத்திருக்கிறது. எனக்குள் ஒளிந்துகிடந்த படைப்பாளியை அடையாளம் காட்டி ஓர் எழுத்தாளராய் என்னை மலர்த்தியிருக்கிறது. இனம், மொழி, சாதி, மத, தேச எல்லை கடந்து இயற்கையை, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையினரின்பால் பரிவுணர்வை வளர்த்திருக்கிறது. எந்நேரத்திலும் எவ்விடத்திலும் நிகழும் தவறொன்றைத் தட்டிக் கேட்கிற மனத்துணிவைத் தந்திருக்கிறது. நான் யார்? எந்த வர்க்கத்தின் பிரதிநிதி என்பதை எனக்குக் காட்டியிருக்கிறது. நான் யாருக்காக எழுத வேண்டும், யாருக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்கிற தெளிவை எனக்களித்திருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால். வாசிப்பு எனக்குக் கேள்விகளையும், விடைகளையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com