Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் டிசம்பர் 2007

ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. குறிப்பும்-மொழிபெயர்ப்பும்:
இராமானுஜம்

தடுமாற வைக்கக்கூடிய நிகழ்வுகளைக்கொண்ட வருடம் 1919 ஆம் ஆண்டு. முதலில் பிப்ரவரி புரட்சி. பிறகு அக்டோபர் புரட்சி. நாடகக் கலைக்கு புதிய இலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதுவரை கலாரீதியான அனுபவத்திற்குச் சந்தர்ப்பம் கிடைக்காத பல லட்சம் மக்கள் கூட்டத்திற்கு அது தன் கதவுகளை திறந்துவிட வேண்டும். செல்வம் எவ்வளவோ இருந்தும் Leonid Andreyeve - யின், ‘arathema’ - வில் வரும் நல்ல லாசர் போல் உணவு கேட்டு நின்ற லட்சக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க முயற்சித்தும், நம்பிக்கை இழந்தது போல நாங்களும் எங்கள் அரங்கிற்கு வந்த பெரும் மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதும் செய்ய முடியாதவர்களாக இருந்தோம்.

அதே சமயத்தில் அந்தக் கால கட்டத்தில் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பணி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பரவசமும் பெருமிதமும் கொண்டிருந்தோம். முதலில் எங்கள் நாடகக்குழு பற்றியும் சாதாரண ஜனங்களுக்காக எழுதப்படாத நாங்கள் நாடகங்கள் பற்றியும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முயற்சித்தோம். விவசாயிகளுக்கு அவர்களைப் பற்றியும், அவர்களுடைய உலகப் பார்வைக்கு ஏற்றாற் போல் வடிவமைத்து தான் நாடகம் இருக்கவேண்டும் என்று ஒரு கருத்து நிலவியது.

அது போலவே தொழிலாளருக்கு அவர்களுடைய வாழ்க்கையும், அவர்களுடைய சிக்கல்களும். ஆனால் ஒரு விவசாயி தன் வீட்டில் சலிப்பூட்டும் அளவிற்கும் தன் வாழ்க்கையை பார்த்துவிட்டதாகவும், மற்ற மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றும், சாத்தியப்படுமானால் மேலும் ஒரு அழகான வாழ்க்கையையே பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார்கள்.

தொடக்கத்தில் பல தரப்பட்ட பார்வையாளர்களை எதிர்கொண்டோம். வறுமையில் உள்ள மக்கள், செல்வம் படைத்தவர்கள், நாகரிகமானவர்கள், நாகரிகமற்றவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், குதிரை வண்டிக்காரர்கள், வாயிற்காவலர்கள், குமாஸ்தாக்கள்,மோட்டார் வண்டி ஓட்டிகள், கண்டெக்டர்கள், தொழிலாளர்கள், வேலைக்காரர்கள், சிப்பாய்கள். நாங்கள் எங்களுடைய வழக்கமான நாடகங்களை வாரத்திற்கு ஒரிருமுறை ளுடிடடினடிஎயமேடிஎ அரங்கில் நிகழ்த்தினோம்.

ஒவ்வொரு முறையும் காட்சி அமைப்பு மற்றும் இதர நாடகப் பொருட்களை அந்த அரங்கத்திற்கு தூக்கிச் சென்றோம். குறைந்த அளவிலான பார்வையாளர்களுக்கு வடிவமைக்கப்பட்ட நாடகம் மிகப்பெரிய அரங்கில் நிகழ்த்தப்படப் போகும்போது இயல்பாகவே அது தன் வீரியத்தை இழக்க நேரிடுகிறது. இருப்பினும் பெரும்பாலும் எங்கள் நாடகம் எப்போதும் அரங்கு நிறைந்து இருந்ததோடு, இடையூறுகள் எதுவுமற்று மிகக் கவனமாக பார்க்கப்பட்டு, இறுதியாகத் திரை விழுந்த வுடன் மிகப்பெரிய அளவில் கரகோஷம் எழுப்பப்பட்டது.

ருஷ்யர்கள் மற்றவர்களைக் காட்டிலும் பிரமாண்டமான காட்சிகளில் தங்களை இழக்கும் நோயினைப் பெற்றிருந்தார்கள். இந்த பிரமாண்டம் எந்த அளவுக்குக் கூடுகிறதோ அந்த அளவிற்கு அவர்கள் உணர்ச்சியின் பிடிக்குள் சிக்கி அதே அளவிற்கு அவர்களுக்கு நாடகம் பிடித்து இருக்கும். சாதாரண ஒரு ருஷ்யப் பார்வையாளன் கொஞ்சம் அழுவதற்கும், வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பதற்கு தத்துவார்த்தமான சில வார்த்தைகளைக் கேட்பதற்கும் சாத்தியப்படக்கூடிய நாடகங்களையே விரும்பினான்.

அதே சமயத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான பளிச்சிடக்கூடிய சுவையான பாத்திரம் அவனைக் கொஞ்சமும் பாதிப்பதில்லை. இந்தப் புதுப் பார்வை யாளர்கள் அவர்கள் அறியாமலே எங்கள் நாடகத்தின் சாராம் சத்தை உணர்ந்து கொண்டார்கள். உண்மைதான், சில மிக நுண்ணிய விஷயங்களைத் தவறவிட்டார்கள். எப்போது சிரிக்க வேண்டுமோ அப்போது சிரிக்காமல் போனார்கள். அதே சமயத்தில் நாடகத்தில் எதிர்பார்க்காத எதிர்வினையையும் தோற்றுவித்ததுண்டு. அவர்களுடைய சிரிப்பு ஒரு நடிகனுக்கு அவன் பேசும் வசனத்தில் சிரிக்க வைக்கக்கூடிய வாய்ப்புள்ளதையும் அதை அந்த நடிகன் தவறவிட்டதையும் உணர்த்தியது.

ஒரு மேடை நிகழ்விற்கு ஒரு பெரும் கூட்டத்தின் எதிர்வினை சரியாக ஆராயமுடியாமல் போனது வருத்தப்படக் கூடிய விஷயம்தான். ஒரு நடிகனுக்கு இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு நகரத்தில் சில இடங்களில் ஏன் நாடகம் ஏறக்குறைய ஒருமித்த மனதோடு எல்லாராலும் பாராட்டப் படுகிறது என்பதும் வேறு இடங்களில் நகைச்சுவைகளால் சற்றும் பாதிக்கப்படாதவர்களாக இருப்பதும், எதிர்பாராத இடங்களில் சிரிப்பதும் இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. இந்தப் புதுப் பார்வையாளர்கள் ஏன் தங்களை இப்படி வெளிப் படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் நாங்கள் விரும்பும் எதிர்வினையை அடைவதற்கு எப்படி எங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதும் எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

அவையெல்லாம் மிகவும் சுவராசியமான நிகழ்வுகள் என்பதோடு எங்களுக்குப் பல விஷயங்களைக் கற்றும் கொடுத்தது. குறிப்பாக அரங்கின் இந்த புதிய சூழலை உணர்ந்து கொண்டோம். இந்தப் புதிய பார்வையாளர்கள் அரங்கிற்குப் பொழுதை கழிப்பதற்கு மேலாக புதியதாக ஒன்றைக் கற்பதற்கு வந்தார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்.

எனக்கு நினைவு இருக்கிறது. என்னுடைய விவசாய நண்பர் ஒருவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் எங்கள் குழு போடும் எல்லா நாடகங்களையும் பார்ப்பதற்காகவே மாஸ்கோ வருவார். வழக்கமாக என் சகோதரி தன்னுடைய வீட்டில்தான் தங்க வைப்பார். முதல் காரியமாக அவர் தன் மூட்டையை அவிழ்த்து, மஞ்சள் நிறத்தில் உள்ள பட்டுச்சட்டை - அது அவருடைய அளவிற்கு ஏற்றதாக இல்லை என்றாலும், தடித்த பருத்தி டிரவுசர், புது பூட்ஸ் இவற்றை ஒரு அழகோடு அணிந்து கொண்டு தலைமுடியைப் படிய வாரி, இரவு உணவிற்கு எங்களோடு சேர்ந்துகொள்வார்.

பளப்பளக்கும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தரையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும்போது, மிகச் சுத்தமாகவும் அழகாகவும் தயாரிக்கப் பட்ட உணவு மேஜையின் முன் அமரும்போதும், அவருடைய கழுத்துப் பட்டையில் கைக்குட்டையைத் திணித்தப் போதும் வெள்ளி ஸ்பூனில் சாப்பிடத் தொடங்கும் போதும், ஒவ்வொரு நாளும் உணவு உண்ணுவதை ஏதோ சடங்கு செய்வது போல் அவர் மாற்றும் போதும், ஒரு சிறிய சந்தோஷப் புன்னகையை அவரால் மறைத்துக் கொள்ள முடியாமல் போனது.

உணவிற்குப் பின் புதிதாக என்ன நாடகம் உள்ளது என்று கேட்டு, அன்று இரவு நடக்கும் நாடகத்தைப் பார்க்கப் புறப்படுவார். நான் எப்போதும் அரங்கில் என் இருக்கையை அவருக்கு கொடுப்பேன். நிகழ்ச்சியைப் பார்த்தபின் பெறும் சந்தோஷத் தோடும், பூரிப்போடும் சில சமயங்களில் முகம் சிவந்தும், சில சமயங்களில் முகம் வெளிறியும் போக, அவருடைய சிந்தனை களையும் உணர்வுகளையும் ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வர நகரத்தின் வீதிகளில் மணிக்கணக்காய் நடப்பார்.

அவருக்காக எப்போதும் காத்திருக்கும் என் சகோதரி அவர் திரும்பிய பின் பழக்கப்படாத அவருடைய இந்த மூளை உழைப்பிற்கு உதவி செய்வார். எங்கள் குழுவின் எல்லா நாடகங்களையும் பார்த்தபின், அவருடைய பட்டுச்சட்டை, டிரவுசர், பூட்ஸ் என்று எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி, வந்தபோது அணிந்திருந்த குடியானவனின் துணியை அணிந்துகொண்டு கிளம்பிவிடுவார். அங்கிருந்து விஷயங்களை உள்வாங்கிக்கொள்வதற்கும், மாஸ்கோவில் இருந்தபோது அவர் அனுபவத்தை மனத்தளவில் மீண்டும் வாழ்வது போலவும் தத்துவார்த்தமாகப் பல கடிதங்களை அவர் எனக்கு எழுதுவார்.

இவர் போலவே பல பார்வையாளர்கள் எங்கள் அரங்கிற்கு உண்டு என்று நம்புகிறேன். இத்தகையவர்களின் இருப்பை நாங்கள் உணர்வதோடு மட்டுமில்லாமல் அவர்கள் பால் எங்களுக்குள்ள கலை ரீதியான கடமையையும் நாங்கள் உணர்ந்திருந்தோம்.

“உண்மையைச் சொல்வதென்றால், எங்கள் கலை சொற்ப ஆய்வைக் கொண்டது. இருப்பினும் எங்களுடைய மற்ற சமகால கலைகளோடு ஒப்பிடும்போது, மற்ற எல்லாக் கலை களைக் காட்டிலும் இது தவிர்க்க முடியாதது.’ நான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். ‘நினைத்துப் பாருங்கள். எத்தனை சக்தி வாய்ந்தது இது! இதனுடைய தாக்கம் என்பது ஏதோ ஒரு மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. ஒரே சமயத்தில் பல நடிகர்களாகவும், ஓவியர்களாகவும், மேடை நிர்வாகிகளாகவும் இசைக் கலைஞர்களாலும் உருவாக்கப்படுகிறது. அத்தோடு நாடகம், இசை, மொழி, நடனம் என்று பல கலைகள் ஒரே சமயத்தில் இணைகிறது. இது ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. ஒரே சமயத்தில் ஒரு மக்கள் கூட்டத்தைப் பாதிக்க, அது கூட்டுணர்வை ஏற்படுத்தி அவர்களுடைய புரிதலை ஆழப்படுத்துகிறது.’

இந்தக் கலைதான் நான் சொல்ல வருவது. ஒரே தருணத்தில் பல கலைஞர்களின் உழைப்போடு பல கலைகளின் சேர்க்கையால் மாசற்ற, நம்பகத்தன்மை வாய்ந்த மலினப்படாத இந்த பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பார்வையாளர்கள் மீது இந்த மேடைக் கலை கொண்டுள்ள ஆளுமையை ஒரே ஒரு நிகழ்வைக் கொண்டு சொல்ல முடியும். இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அது அக்டோபர் புரட்சி தொடங்கப்பட்ட நேரம். அன்று இரவு இராணுவப் படைகள் கிரெம்ளின் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஒருவித மர்மமான தயாரிப்பு அடித்தளத்தில் நிகழ்ந்துகொண்டிருந்தது. மிக அமைதியாக ஜனக் கூட்டங்கள் எங்கோ நகர்ந்துகொண்டிருந்தன. நகரத்தின் மற்றப் பகுதிகளில் ஆள் நடமாட்டம் அற்று வெறிச்சோடிக் கிடந்தது.

தெரு விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு இருந்தன. காவல்துறை பின்வாங்கப்பட்டு இருந்தது. இருந்தும் எங்கள் அரங்கில் செக்கோவின் ‘Cherry orchard’ நாடகத்தைப் பார்க்க அதுவும் எந்த வர்க்கத்தை எதிர்க்க மக்கள் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தார்களோ, அந்த வர்க்கத்தின் வாழ்க்கையைப் பற்றிய நாடகத்தைப் பார்க்க ஆண்கள் பெண்கள் என்று ஆயிரக் கணக்கில் கூடியிருந்தார்கள்.

ஏறக்குறைய முழுவதுமாகச் சாதாரண ஜனங்களால் நிரம்பியிருந்த அரங்கு எதிர்பார்ப்புகளோடு எதிரொலித்தது. திரைக்கு இரு பக்கங்களிலும் ஒருவித மர்மத் தன்மை நிறைந்திருந்தது. ஒப்பனை போட்டு தயாராக இருந்த நடிகர்களான நாங்கள், திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு அரங்கிலிருந்து வரும் சப்தங்களைக் கூர்ந்துகவனித்தோம்.

‘நாம் நிச்சயமாக இந்த நாடகத்தை முடிக்கப்போவதில்லை’ என்று யாரோ ஒருத்தர் கூறினார். மேலும், ‘நம்மை மேடையிலிருந்து விரட்டியடிக்கப் போகிறார்கள்’ என்றார்.

திரை விலகியது. எங்கள் இதயங்கள் குழப்பங்களை எதிர்பார்த்து அடித்துக்கொண்டிருந்தது. ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! இறந்துகொண்டிருக்கும் மேல் தட்டு வாழ்க்கை, செக்கோவின் கவித்துவமான படைப்பில், அதுவும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் நினைத்துப் பார்த்தால் சற்றும் பொருத்தம் இல்லாதது, பார்வையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. பார்வையாளர்களின் கவனம் சிதறாத் தன்மையை வைத்து, எங்கள் நிகழ்வுகளில் இதுதான் பெரும் வெற்றிகண்ட நிகழ்வு என்று சொல்லமுடியும்.

பரிசுத்தமான தியாகத்தை வேண்டி நின்ற அந்தக் கணத்தில், பழைய வாழ்க்கைக்கு விடை கொடுப்பதற்கு முன் கவித்துமான வெளியின் காற்று அவர்களுக்கு தேவைப்பட்டது போலும். திரை விழுந்த பின் மிகப் பிரமாண்டமான கரகோஷம் எழுப்பப்பட்டது. ஆனாலும் பார்வையாளர்கள் மவுனமாக அரங்கைவிட்டு வெளியேறினார்கள். யாருக்குத் தெரியும், அவர்கள் புது வாழ்க்கைக்காக நேரடியான யுத்த களத்திற்குக் கூட சென்று இருக்கலாம். உடனடியாக வீதிகளில் துப்பாக்கி சுடுவது துவங்கியது. பாய்ந்து வரும் தோட்டாக்களில் இருந்து தப்பிப்பதற்காக சுவர்களை கட்டி அணைத்தபடியே, ஆபத்துகள் நிறைந்த வழியே வீடுபோய்ச் சேர்ந்தோம்.

அக்டோபர் புரட்சி முடிந்துவிட்டது. எங்கள் நிகழ்ச்சிகள் இப்போது எல்லோருக்கும் இலவசம் என்று பிரகடனப்படுத்தப் பட்டது. அடுத்த ஒன்றரை ஆண்டுகள் அனுமதிச் சீட்டு விற்கப்பட்டதே கிடையாது. எல்லாம் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. நாங்கள் இப்போது புத்தம் புதிய பார்வையாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதில் பெரும்பாலோருக்கு எங்கள் அரங்கு பற்றியோ அல்லது அரங்குக்கலை என்று ஒன்று இருப்பது பற்றியோ முற்றிலுமாக ஏதும் அறியாதவர்கள். நேற்று நாங்கள் பலதரப்பட்ட பார்வையாளர்களுக்காக நாடகத்தை நடத்தினோம். அதில் அறிவு ஜீவிகள் என்று யாரும் கிடையாது. இன்று வேறு புதிய பார்வையாளர்களுக்கு நாங்கள் நாடகத்தை நிகழ்த்தவேண்டும்.

இவர்களை எப்படி அணுகுவது என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அது போலவே பார்வையாளர்களுக்கு எங்களை எப்படி எதிர்கொள்வதென்று தெரிந்திருக்கவில்லை. நாங்கள் எதிர்பார்த்தது போலவே வழக்கமானதும் அரங்கு சூழலும் ஒரே சமயத்தில பெரும் மாற்றத்திற்குள்ளானது. முதலிலிருந்து தொடங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அமைதியாக உட்கார வேண்டும், பேசக்கூடாது, நேரத்திற்கு வரவேண்டும். புகைப்பிடிக்கக்கூடாது, நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது தொப்பி அணிந்திருக்கக் கூடாது. இவையெல்லாம் கலை என்ற அளவில் பாலபாடம் என்றாலும் இந்தப் புதிய பார்வையாளர்களுக்கு நாங்கள் இதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டியிருந்தது.

எங்களுக்கு முதலில் கடினமாக இருந்தது. ஓரிரு சமயங்களில் விஷயங்களைப் புரிந்து கொள்ளாத பார்வையாளர்கள் சப்தம் எழுப்பி, காட்சியின் மனநிலையை அழிக்க நேர்ந்த போது, இக்கட்டான நிலையிலிருந்து நடிகர்கள் சார்பாக நான் தலையிட நேர்ந்தது. ஒரு சமயத்தில் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் என் வழக்கத்திற்கு மாறாகக் கடினமாகப் பேசி விட்டேன். பார்வையாளர்கள் அமைதி காத்து மிகக் கவனமாக என் பேச்சைக் கேட்டார்கள். நான் திரும்பச் சொல்கிறேன். இது போல் இரண்டு மூன்று முறைகள்தான் நிகழ்ந்துள்ளன.

இந்த இரண்டு மூன்று தருணங்களில் இந்தப் பார்வையாளர்கள், மற்றவர்களை எப்படி எச்சரித்தார்கள் என்று இன்றுகூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. பத்திரிகைகளில் இது பற்றி எதுவுமே எழுதப்படவில்லை. ஆணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை, இருந்தும் இதற்குப் பிறகு பார்வையாளர்கள் நடத்தையில் இதுபோல் ஒரு திடீர் மாற்றம் எப்படிச் சாத்தியாமானது? மக்கள் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் அரங்கிற்கு வந்தார்கள். இப்பொழுதெல்லாம் அவர்கள் பேசுவதோ, புகைப்பிடிப்பதோ கிடையாது. நான் நடிப்பில் பங்கேற்காத சமயங்களில் பார்வையாளர்கள் நிரம்பி இருந்த அரங்கின், வராண்டாவில் நடக்கும்போது வாலிபர்கள் மிக மெல்லிய குரலில், மிக வேகமாக மற்றவர்களுக்கு இப்படி விஷயத்தைத் தெரிவித்தார்கள்:

‘அவர் வந்துகொண்டிருக்கிறார்!’

அவர்! பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அந்த மனிதன்தான் என்பதில் சந்தேகமில்லை. உடனடியாக அவர்கள் தங்களுடைய தொப்பிகளைக் கழட்டினார்கள். அதாவது ஒரு கலைக் கூடத்தை எது நிர்வகிக்கிறதோ அதன் விதிமுறைகள் படி.

யுத்தத்தின் போதும், புரட்சியின்போதும் பெரும் திரளான மக்கள் எங்கள் நாடகத்திற்கு வந்தார்கள். ஒவ்வொரு தேசிய இனத்திலிருந்தும், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மேற்குப்படை பின்வாங்கியபோது மாஸ்கோ முழுவதிலும் அகதிகளாய் நிரம்பியிருந்த மக்கள் அரங்கு கலையில் ஆறுதல் தேடி வந்தார்கள். நல்லது, கெட்டது என்று அவர்களுக்கு உரிய பழக்கவழக்கங்களை எங்கள் அரங்கிற்குக் கொண்டுவந்தார்கள்.

நாடக நிகழ்வின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை நாங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டியிருந்தது. நாங்கள் இதைச் செய்து முடித்தவுடன் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்து கீரிமியாவிலிருந்தும் மாஸ்கோ நோக்கி வந்தார்கள். இவர்களில் எல்லோரும் ஒரே ஒரு முறை மட்டுமே எங்கள் அரங்கிற்கு வந்திருக்கலாம். ஒருவேளை மீண்டும் ஒரு முறை வராமலும் போயிருக்கலாம்...

புரட்சிக்குப் பின் நாங்கள் பலதரப்பட்ட மக்களுக்கு நாடகங்களை நிகழ்த்தினோம். ஒரு சமயம் ருஷ்யா முழுவதிலுமியிருந்து இராணுவ அதிகாரிகள் மாஸ்கோவில் கூடி இருந்தார்கள். பிறகு இளைஞர்கள் நிறைந்திருந்தார்கள். அடுத்து நாடகக்கலை பற்றி அறிந்திராத தொழிலாளர்களும், கிராமப்புற மக்களும் வந்தார்கள். இவர்கள்தான் பார்வை யாளர்கள் என்ற பதத்திற்கு மிகச் சிறந்த அர்த்தத்தைக் கொடுத் தார்கள். இவர்கள் அரங்கிற்குப் பொழுதைக் கழிப்பதற்காக வரவில்லை.

மிக முக்கியமானதை எதிர்பார்த்தும், இதற்குமுன் பார்த்திருந்ததை எதிர்பார்த்தும் வந்தார்கள். இவர்கள் நடிகர்களைப் பாராட்டிய விதம் நம்மை நெகிழ வைக்கும். ஆனால் அதே சமயத்தில் மிகப்பெரிய அளவில் தங்களை நடிகர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு குப்பைக் கூட்டம் உருவாகத் தொடங்கியது. இத்தகையவர்களை உண்மையான கலை என்பதிலிருந்து பிரிக்க முடியாமல் போனதால், அரங்கை சுரண்டத் தொடங்கினார்கள். கபடமற்ற பார்வையாளர்கள் முன் மலிவான ஜோடனைகளை அரங்கேற்றி அரங்குக் கலையை லாபகரமாக மாற்றினார்கள்.

இதில் கலைக் கூடத்தைச் சேர்ந்த நாங்களும் அடக்கம். மிகவும் பரந்துபட்ட ஜனநாயக ரீதியான பார்வையாளர்களுக்கும் நடிகர்களான எங்களுக்கும் இடையேயான உறவை, பரஸ்பர அன்பை இது பெருமளவு பாதித்தது. நான் இதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எங்கள் குழுவில் உள்ள நடிகர்கள் சிலர் தேவையான அளவிற்கு வளர்ச்சி அடையாதவர்களாகவும், அரங்கு வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கணத்திற்கு தகுதியற்றவர்களாகவும் இருந்தார்கள்.

குறிப்பு:-

1. இந்த கட்டுரை 1926-ல் எழுதப்பட்டது. இதற்கான குறிப்புகள் 1917 பிப்ரவரி மற்றும் அக்டோபர் புரட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்டது. அப்போது ஸ்டானிஸ்லாவ்ஸ்கி மாஸ்கோ நடிகர்கள் சங்கம் சம்பந்தமாக, அரங்குக் கலையில் சீர்திருத்தங்களை கொண்டுவர முயற்சி செய்த காலம்.

2. 1984-ல் தான் இந்த கட்டுரையின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது.

3. உரைநடை இலக்கியத்தைத் தொடர்ந்து, உரைநடை நாடகம் ஒரு புதிய அரங்கிற்கான தேவையை முன் வைத்தது. இந்த உரைநடை அரங்கு யதார்த்த வடிவிலான அரங்கை முன் வைத்தது. பழக்கப்பட்டு போன மேடையாக்கம் மற்றும் நடிப்பு நீர்த்துப்போய் சூத்திரங்கள் அடிப்படையில் இயங்கியபோது அதை கேள்விக்குட்படுத்தியவர், உலக அளவில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி முதன்மையானவர். ஒரு விஞ்ஞானியைப் போல் நடிப்புக் கலையை மிகத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்து The Method acting என்ற முறையை உருவாக்கியவர். யதார்த்த அரங்கை அதன் கவித்துவ எல்லைக்கு எடுத்துச் சென்றவர்.

இவருடைய முக்கிய சீடர்கள் Vakhtangov மற்றும் Mayer Hold. இவர்கள் இருவரும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி யதார்த்த அரங்கை விமர்சித்ததும் அதை தொடர்ந்து இவர்களுக்கு இடையேயான கடிதப் பரிமாற்றங்கள் மிகவும் சுவராசியமானவை. இன்று அரங்குக்கலை ஸ்டானிஸ்லாவ்ஸ்கி முன்வைத்த யதார்த்த அரங்கை கடந்துவிட்ட போதிலும் நடிகர்கள் தொடர்பான அவருடைய விஞ்ஞான பூர்வமான கோட்பாடு இன்றுவரை உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

திரைப்பட நடிப்புக்கும் இவருடைய கோட்பாடு மிகப்பெரிய அளவில் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. செக்காவ், கார்க்கி நாடகங்களை இவர் மேடையேற்றிய விதம் இவர்களைப் பற்றி ஸ்டானிஸ்லாவ்ஸ்கி எழுதிய கட்டுரைகள் தமிழில் வர வேண்டியவை. பெரும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த இவரது சொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டதும், ஸ்டாலின் இவரின் நாடகங்களை பலமுறை விரும்பி பார்த்ததும் உதிரித் தகவல்கள். தமிழ்நாட்டில் நான் அறிந்தமட்டில் பேரா. சே. இராமனுஜம் மட்டுமே ஸ்டானிஸ்லாவஸ்கி பாணியில் நடிகர்களை கையாளுவதில் மிக திறமை மிக்கவர்.

பார்வையாளர்கள் இல்லாத நாடகம் சாத்தியமில்லை என்ற சூத்திரம் எல்லோரும் அறிந்தது போல் தோன்றும். ஸ்டானிஸ்லாவ்ஸ்கி இதை முழுமையாக உணர்ந்துகொண்டார். ஒரு நாடகக் கலைஞன் ஒரு இலக்கியவாதியிடமிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்ந்துகொண்டான். பார்வையாளனும் நாடகத்தின் பங்கேற்பாளன் என்பதைப் பார்வையாளன் பார்வையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சித்தார். அவர் பார்வையாளர்கள் மீது அன்பு கொண்டிருந்தார். தன்னை நிறுவிக் கொள்வதற்காக அவர் நாடகக் கலையை உபயோகிக்கவில்லை. நாடகக் கலையைப் புரிந்துகொள்வதற்கு அர்ப்பணித்துக் கொண்டார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com