Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் டிசம்பர் 2007

சமயங்களின் அரசியல்
ஆ.செல்வபெருமாள்

தமிழ்நாட்டின் பன்னெடுங்கால பரந்துபட்ட சமய வரலாற்றைத் தொ. பரமசிவன் சமயங்களின் அரசியல் என்ற நூல் பொதியுறை வடிவில் நமக்குத் தருகின்றது. தொல்சமயக் கூறுகளின் சில இயல்புகளைக் குறிப்பிட்டுவிட்டு அதன் பின்பு சுமார் ஐந்தாம் நூற்றாண்டு முதல் தமிழ் நாட்டில் வழங்கி வந்த சமயச்சூழல், அவை பெற்ற மாற்றங்கள் கண்ட எதிர்ப்புகள், செய்த அரசியல் எனப் பலபடித்தான செயல்பாடுகளை இலக்கிய, தொல்லியல் வழிபாட்டு ஆதாரங்களின் வழியாக நீட்டித்து கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சில சம்பவங்கள் வரை இந்நூல் பகுப்பாய்கின்றது.

தமிழ்நாட்டின் உட்பகுதியில் ஆக்கம் பெற்றிருந்த சமணமும் கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த பௌத்தமும், அவற்றின் நகர்மையம், துறவுத் தலைமை, வணிகர் புரவு, நிர்வாணம் மக்களின் வாழிடங்களைத் தவிர்த்து மலைக்குகைகளில் தங்குவது, தொடர்ந்த பயணம் போன்ற காரணிகளால் செல்வாக்கிழந்தது என்று நூலாசிரியர் பட்டியலிடுகின்றார். திகம்பரத் துறவிகளின் வழியாக வெளிப் பட்ட ஆணாதிக்க உணர்வு, சமண - பௌத்த மார்க்கங்களை வெறுக்க வழி வகை செய்தது.

தமிழக வரலாற்றில் பக்தி இயக்கம் என்பது சமண, பௌத்த மதங்களுக்கு எதிராகப் பிறந்த ஒரு கலக இயக்கம் என்றும் சமணமும், பௌத்தமும் நிறுவன மதங்களாகவே இருந்த போதிலும் ஒரு பேரியக்கமாக உருவாகத் தேவையான உணர்ச்சி அவற்றின் வெளிப்பாடுகளில் இல்லாததினால் சைவ வைணவ வன்முறை சொல்லாடல்கள் அவற்றை வென்றுவிட்டன. (பக்.5)

தமிழகத்தில் சைவ பக்தி இயக்கம் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இயங்குவதற்கு முன்பான அதன் பாதையைத் தொ. பரமசிவன் கீழ்க்காணுமாறு விளக்குகிறார். சைவ நெறி காசுமீரத்தில் ஸ்ரீகண்டர் என்பரால் உருவாகி ‘பாசுபதம்’, எனப்பெயர் வழங்கப்பெற்று அவரது மாணவர் வகுலீசர் முயற்சியால் வளர்ச்சி பெற்று கி. மு. மூன்றாம் நூற்றாண்டளவில் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில் செல்வாக்குப் பெற்றது.

பாசு பதத்தின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு என்னவென்றால் சமண பௌத்த துறவு நெறிகளுக்கு எதிராக அது ஆணும் பெண்ணும் சமம் என்ற வாழ்க்கை முறையினை முன் வைத்ததுதான். எனவே பெண்ணின் பாலினச் சமத்துவத்தை மறுத்த சமண சித்தாந்தத்திற்கு எதிராகவே சைவம் உயிர்த்தெழுந்தது (பக் 8 -9)

சமணம் அழிந்து படக் காரணங்களில் ஒன்றாய் அமைந்த நிர்வாணக் கோலத்தை வேறு விதத்தில் சைவம் கைக் கொண்டதாகக் கூறி அதை ஒரு பண்பாட்டு வன்முறை என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அதாவது தாருகாவனத்து முனிவர்களின் மனைவியர் முன்னே சிவபெருமானின் ஆடை யில்லாக் கோலம் கொண்ட கதை, கைகளில் ஆயுதங்களுடன் காம உணர்வைத் தூண்டும் நிர்வாணத்தை முன்னிறுத்திய பிட் சாடனக் கதையும் சிற்பங்களும் போன்றவை நிர்வாணத்தைப் பெருமைப்படுத்திய சமயத்துறவு நெறியை விரட்டியடித்தது என்கிறார் நூலாசிரியர்.

நிர்வாணம் தமிழகத்தில் வெறுத்து மறுக்கப்பட்டது சைவம் உருவாகக் காரணங்களுள் ஒன்றாய் அமைந்தது என்று கூறிவிட்டு அதே நிர்வாண முறைமை இன்னும் வன்மமாகச் சைவத்திலும் தொடர்ந்து அதுவே நிர்வாணத் துறவு நெறியை விரட்டியடித்தது என்கிறார். நூலாசிரியர் இது சற்றும் தர்க்கப் பூர்வமாக அமையவில்லை.

தொடர்ந்து கி. பி. 10 ஆம் நூற்றாண்டு முன்னரே நிர்வாண பாசுபதரும் நிர்வாணக் காபாலிகர்களும் கன்னட நாட்டுக்குச் சென்றுவிட்டனர். சோழ அரசு எழுச்சி பெற்ற காலக்கட்டம் இது. இக்கால கட்டத்தில் அதாவது கி. பி. ஏழாம் நூற்றாண்டில் ஆடையுடன் கூடிய துறவியர் பொறுப்பில் மடங்களும் கோயில்களும் இருந்தன. இத்தகைய துறவு நெறியினர் தமிழ்ச் சைவத்தை உருவாக்கிய அப்பர், சம்பந்தர் காலத்தில் சுடுகாட்டுத் தலங்களில் வாழ்ந்தனர். அவை பிற்காலத்தில் கோயில்களாக மாற்றப்பட்டதற்கான பல ஆதாரங்களை நாட்டார் வழிபாட்டு மரபுகள் சடங்குகள் வாயிலாக நூலாசிரியர் நிறுவுகின்றார்.

கி. பி. ஏழாம் நூற்றாண்டளவில் தமிழகத்தின் வட பகுதியில் பல்லவ தென்பகுதியில் பாண்டிய நவீன அரசுகள் உருவாகி அவை தமக்கான தத்துவ மேலாண்மையாக வேதத்தை நிலைநிறுத்தின. சமண, பௌத்தத் துறவிகள் அதற்கு எதிரான கருத்து நிலையைக் கொண்டிருந்தனர். ஆனால் வேதப் பார்ப்பனர்கள் அரசதிகாரத்தை அண்டிப்பிழைத்தனர். அரசர்களுக்குப் பல புனித சடங்குகளைச் செய்வித்து அவற்றின் மூலம் பொன்னும், பொருளும் பெற்றனர். அரசு என்ற நிறுவனமும் சிவன், திருமால் போன்ற தெய்வங்களுக்கான கோயில்களின் உருவாக்கமும் மக்கள் திரளை மிக மென்மையாகக் கவர்ந்ததுடன் அவர்களைக் கீழ்தகு நிலையுள்ளோராகவும் கருத்தாக்கம் செய்தது.

இக்கட்டத்தில் வேதப்பிராமணர் வேத மதத்தின் பிடிக்குள் சைவத்தை வளைத்திடும் கருத்தியலை வென்றெடுக்க, சிவப்பிராமணர்கள் கருவறைப்பூசைகள் செய்வோராயினர். பின்னாளில் வடநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்த வேதப்பிராமணர் பெருந்தொகையில் அக்கிரகாரங்களில் குடியேறினர். கோயில்களில் கொண்டாடப்பட்ட திருவிழாக்கள், ஊர்வலம் போன்ற நடைமுறைகள் மக்களைப் பெருமளவுக்குச் சைவத்தின் பால் ஈர்த்தன. பிறப்பால் உயர்வு தாழ்வு சுட்டப் படும் கருத்தியலை எதிர்த்திட்ட அப்பர் போன்றோரின் சமத்துவக் குரல் அப்போது எடுபடவில்லை. மேலும் பார்ப்பனர்களின் ஆன்மிக அதிகாரமும், வேளாளர்களின் நில உடமை சார்ந்த சமூகப் பொருளாதார அதிகாரமும் அன்று உருவாகி வந்த அரசுகளின் அங்கீகாரத்தைப் பெற்றன. (ப. 18)

பண்பாட்டுத் தளத்தில் ஆணாதிக்க உணர்வுடைய துறவு நெறிக்கு எதிரான பெண்களின் உணர்வுகளைக் குடும்பம் என்ற அமைப்பை முன்னிறுத்திப் பக்தி இயக்கம் பயன்படுத்திக் கொண்டது என்கிறார் நூலாசிரியர் (ப. 19)

இந்நூலில் நவீன அரசு உருவாக்கத்திற்கும் குடும்பம் என்ற அமைப்பு ஏற்புடைமைக்கும் பக்தி இயக்கம் முழு முதற்காரணமாய் அமைந்தது என்ற தொனி தெரிகிறது. அரசு, குடும்பம், சமயம் ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்து வலுப்படுத்திக்கொண்டன என்பதே சரியாயிருக்க முடியும். இதையேதான் நூலாசிரியர் வேறொரு இடத்தில் குடவரை கோயில்களைப் பாட முன்வராத தேவார மூவரும் ஆழ்வார்களும் கற்கட்டுமானக்கோயில்களைப் பாடியதின் வாயிலாகச் சொத்துடைமை நிறுவனங்களாக வளரும் அரசுருவாக்கத்திற்குத் துணை நின்றன என்கிறார். (ப. 24)

கருத்தியல்களின் அடிப்படையில் கோயில் கட்டிட அமைப்புகள் மாறுவது மேலாதிக்க அதிகாரத்தை உருவாக்கு கின்றது என்ற கருத்துக்கு நூலாசிரியர் மிகுந்த அழுத்தம் தருகின்றனர். ஆனால் அதே அளவுக்குத் தொழில் நுட்ப வளர்ச்சி, வேளாண் விளைச்சல் பெருக்கம், கலைத்திறன் ஆட்களிடம் ஏதாவதொரு வேலை வாங்கிட வேண்டும் என்ற நிலவுடைமைக் கருத்தியல் போன்றவையும் பிரம்மாண்ட கோயில்கள் உருவாக்கத்தில் பங்கு வகித்திருக்கக்கூடும் என்று நாம் ஊகிக்கவும் வாய்ப்புண்டு.

தூய்மை தீட்டு கருத்தாக்கம் வலுப்பெற்ற கட்டம் இது என்கிறார் நூலாசிரியர். இந்தக் கருத்தியல் அடிப்படையிலேயே தமிழகம் உள்ளிட்ட சாதிய ஏற்றத்தாழ்வை பல உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள் பகுப்பாய்வு செய்து ஏராளமான ஆய்வுகளை வெளியிட்டுள்ளனர். சாதிய ஏற்றத்தாழ்வை மேற்குறிப்பிட்ட தூய்மை தீட்டு எதிர்மறை அல்லாத விதமாக விதமாக முழுதும் ஆட்சியதிகாரம் என்ற முழுதும் அரசியல் கருத்தியல் அடிப்படையில் பார்பதற்கும் வாய்ப்பு இருப்பதை நிக்கோலஸ் டர்க்ஸ், பீட்டர் கிளாஸ் போன்றோர் முறையே வரலாற்றுத் தரவுகளைப் பயன்படுத்தித் தமிழகத்தில் புதுக்கோட்டைப் பகுதியிலும் கர்நாடகத்தில் துளு பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டு சில வித்தியாசமான முடிவுகளுக்கு வந்துள்ளனர்.

மேலும் வாய்மொழி வழக்காறுகள் இனக்குழுச் சமூகவியல் கருத்தாக்கங்கள் வழியிலும் ஆராயப்படுமானால் வேறு விதமான ஆய்வு முடிவுகளோ அல்லது நூலாசிரியரின் ஆய்வு முடிவுகளுக்கு இன்னும் வலு சேர்க்கின்ற விதத்திலோ விளக்கங்கள் கிடைக்கப் பெறலாம்.

வைதிகப் பார்ப்பன மரபு, தொல் திராவிடத் தெய்வங்கள் சிலவற்றை கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடங்கி எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் புறந்தள்ளவும் முடியாமல் திணறியிருக்கிறது என்றும் நாட்டார் தெய்வ மரபுகளைக் கீழானவை என வைணவ மேலாண்மை புறந்தள்ளியதையும் சில நேர்வுகளில் அவற்றை உட்செறித்துக் கொண்ட விதத்தையும் பல எடுத்துக் காட்டுகளின் மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சமணத்தோடு சைவமும், பௌத்தத்தோடு வைணவமும் மோதி வீழ்த்தின முறையினை அறிய தெளிவான சான்றுகள் நமக்குக் கிடைக்க வில்லை என்று நூலாசிரியர் கூறுகின்றார். ஆனால் நூலாசிரியர் சமணர்கள் கழுவேற்றப்பட்டமை போன்ற வன்கொடுமைகள் குறித்த சில சான்றுகள் கிடைத்தும் இந்நூலில் அவற்றைப் பதிவு செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. அதே சமயம் சமணர்களிடமிருந்தும் பௌத்தர்களிடமிருந்தும் பறிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை சைவர்களும் வைணவர்களும் பங்கிட்டுக்கொண்டவற்றின் பட்டியலையும் தொ. பரமசிவன் அவர்கள் தரத் தவறவில்லை.

நூலில் பட்டியலிடாத பல தமிழகக் கோயில்களையும் அவற்றின் கருவறைகளையும் துணிந்த பாரபட்சமற்ற பரிசோதனைக்கு உட்படுத்தினால் நூலாசிரியரின் கூற்று எந்த அளவுக்குச் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை என்பது புலனாகும். மேலும் அவை தகச்சமயங்களின் வீழ்ச்சியில் அரசதிகாரத்திற்குப் பங்கிருந்தது என்றும் பக்தி இயக்கம் கோயில்களில் வழிபடும் மக்களைத் தன்வயமாக்கிக் கொண்டது என்றும் நூலாசிரியர் கூறுவதில் தவறேதுமில்லை.

தமிழகத்தில் பல்லவ, பாண்டி அரசுகள் தங்கள் உருவாக்கத்தின் போது சமணம், வைணவம், அல்லது சைவம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மதச்சார்பு பெற்றிருந்த போதிலும் பேரரசாக உருவான சோழ அரசு சைவத்தையே போற்றியது என்பது நூலாசிரியரின் இன்னொரு முக்கியமான கருத்தாகும். நூலின் விமர்சனத்திற்குரியதாகச் சொல்ல வேண்டியதுள் முக்கியமானது தொ. பரமசிவன் அறுதியிட்ட முறையில் கருத்துக்களை முன்வைக்கும் முறையாகும். எடுத்துக்காட்டாக வேளாண் பொருளாதாரம் (பக். 29) பெருங்கோயிலோடு பிணைக்கப்பட்டது என்று கூறும் நூலாசிரியர் அது குடி ஊழிய முறை என்னும் “கிராமப் பொருளாதார - அரசியல் சட்டகத்தினோடும் உறவுடையது” என்பதற்கு அழுத்தந்தருவதில்லை.

சமயங்களின் அரசியல்
ஆசிரியர் : தொ. பரமசிவன், விலை : ரூ. 25, வெளியீடு : கங்கு, பரிசல் 1, இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, பத்மநாபா தெரு, சென்னை - 24.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com