Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் டிசம்பர் 2007

கொச்சி மெட்ரோ பிலிம் சொஸைட்டியின் திறப்பு விழாவும்
கேரள கலை இலக்கியவாதிகளின் சங்கமமும்
எ.எம்.சாலன்

கடந்த செப்டம்பர் மாதம் 6 - ஆம் தேதியன்று எர்ணாகுளம் பட்டணத்தின் இதயபாகத்தில் எம். ஜி. ரோட்டோரமாக இருக்கும் கானூஸ் சினிமா கொட்டகையின் ஓரமாக உள்ள அரங்கத்தில் வைத்துக் கொச்சி மெட்ரோ பிலிம் சொஸைட்டியின் துவக்கவிழா நடைபெற்றது. இதைப் பத்மஸ்ரீ. திரு. மம்மூட்டி அவர்கள் வந்து தொடங்கி வைத்தார்கள். இச்சங்கத்தின் திறப்புவிழாவில் பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் கே. ஜி. ஜார்ஜ், திரு. கமல், பிலிம் சொஸைட்டி ஃபெடரேஷன் செயலாளர்

திரு. எஸ். சுரேஷ்பாபு, பிரபல இலக்கியவாதி கே. எல். மோகன வர்மா, டெபுடி மேயர். திரு. மணிசங்கர், திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள், கலைஞர்கள், இதழியலாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவைத் துவக்கி வைத்துப் பேசிய திரு. மம்மூட்டி அவர்கள், தனது பால்யகால நினைவுகள், எர்ணாகுளத்திலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவருக்கும், பட்டணத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த பிலிம் சொஸைட்டிக்கும் இடையே இருந்து வந்த உறவு, அதன் விளைவால் பிற்காலத்தில் திரைப்பட நடிகர் என்ற முறையில் அவருக்குக் கிடைத்த பலன், அது அவருடைய வளர்ச்சிக்கு அளித்த பங்கு - போன்றவைகளைக் குறிப்பிட்டுப் பேசினார். அது மட்டுமின்றிச் சங்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவை இன்று மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றியும் விவரித்தார். மேலும், அவர் தன்னைப் பற்றியும், தனது தொழிலைப் பற்றியும் குறிப்பிடும்போது, நம் நாட்டில் நடிகர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான நடைமுறைகளைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

அதாவது, நடிகர்கள் (மம்மூட்டி உட்பட) ஒரு போதும் இன்னின்ன திரைக்கதையுள்ள படங்களில்தான் நடிப்போம் அல்லது இன்னார் எடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்போம் என்றோ, ஒரு போதும் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. நானும் அப்படித்தான். இன்னின்ன (அதாவது கலைப்படம், கமர்சியல் திரைப்படங்கள் எனப் பிரித்துப் பார்த்து) படங்களில்தான் நடிப்பேன் எனப் பிடிவாதம் பிடித்தது கிடையாது. ஆரம்பம் முதலே நான் எல்லாத் திரைப் படங்களிலும் பாரபட்சமின்றி நடித்தேன். அவைகளெல்லாம் நம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளே! இதை நான் இங்கே எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால், திரைப்படத் துறையில் நம் நாட்டில். சில நடிகர் - நடிகைகள், சில தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ‘ஒரு திரைப்பட நடிகன் என்று சொல்லும் போது அவன் எல்லாவிதமான திரைப்படங்களிலும், எல்லா மாதிரியான வேடங்களையும் ஏற்று நடிக்க வேண்டும்.’

சிலர் நம் திரைப்படங்களை (குறிப்பாக மக்களின் வாழ்க்கையினை அடிப்படையாக வைத்து அதிக மசாலாத்தனம் சேர்க்காமல் எடுக்கும் திரைப்படங்களை) கமர்சியல் படங்கள், (அதாவது வெகுஜனங்களின் ரசனையைச் சுட்டி அவர்களுக்காக வேண்டியே நாங்கள் படங்கள் எடுக்கிறோம் எனச் சொல்லிக்கொண்டு தயாரிக்கும் படங்களைத்தான் திரு. மம்மூட்டி இவ்வாறு குறிப்பிட்டார்.) கலைப்படங்கள் எனச் சொல்லிக்கொண்டு திரைப்படங்களைப் பிரித்துப் பார்த்து - நல்லத் திரைப்படங்களின் பக்கமாக மக்களை நெருங்கவிடாமல் செய்யும் பொய்ப்பிரச்சாரங்களும் இன்று நம்மிடையே நடைபெற்று வருவதையும் திரு. மம்மூட்டி சுட்டிப் பேசினார்.

தரமான திரைப்படங்களை மக்கள் ரசிப்பதற்குக் கற்றுக் கொண்டதால், மக்களை ஏமாற்றிக் கோடிக் கோடியாகப் பணத்தைச் சம்பாதிக்கின்றனர். இதனோடு இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அதாவது மக்களின் அடிப்படையான பிரச்சனைகளையும், சமூகத்திலுள்ள மிக முக்கியமான விஷயங்களையும் மையமாகக் கொண்டு படங்கள் தயாரிக்கப்படும்போது சாதாரண மக்கள் விழிப்படைந்து விடுவார்களோ என்ற பயமும் கூட அவர்களைப் பிடித்து இப்படி ஆட்டலாம்! எனவேதான் அவர்கள் பொய்ப்பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள் போலும்?

ஆக நம் மக்களின் இன்றைய ரசனை ஒருபோதும் மாறிவிடக் கூடாது என்பதில் நம் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கோடிகோடியாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகர்கள் - போன்றவர்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்பதை இந்தத் துவக்கவிழா எடுத்துக் காட்டியது.

சிறப்புரை நிகழ்த்திய திரைப்பட இயக்குநர். திரு. கே. ஜி. ஜார்ஜ் அவர்கள் உரையாற்றும்போது திரைப்படங்களின் ஆரம்பக்காலத்தைப் பற்றிச் சில விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். அன்றைய காலத்தில் சர்வ தேசிய அளவுக்குப் பிரபலமான ஒரு திரைப்படத்தைச் சமூக உணர்வுள்ள ஓர் இயக்குநர் காண வேண்டுமானால், வெளிநாட்டிலிருந்து கப்பல் வழியே அது இங்கு வந்து சேர்வதற்கான சிரமம், காலதாமதம் - போன்றவை களைப் பற்றிக் குறிப்பிட்டார். அதோடு, பிலிம் சொஸைட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் முற்போக்குத் திரைப்பட இயக்குநர். திரு. சத்யஜித்ரே அவர்கள், அதை நம் நாட்டில் முதல்முதலாகத் துவக்கி - செயல்பட வைத்ததையும் குறிப்பிட்டார்.

இந்த விழாவுக்குத் திரு. ஜார்ஜ் அவர்களைத் திட்டமிட்டே அழைத்திருக்க வேண்டும். அவற்றுக்கான சில காரணங்களையும் இங்கே சொல்லியாக வேண்டும். கேரள மாநிலம், சர்வதேச அளவுக்குப் பல பிரபலமான திரைப்பட இயக்குநர்களை உருவாக்கித் தந்த மாநிலம் என்பது நம் எல்லோரும் அறிந்த விஷயமே! ஆனால் ஏனைய இயக்குநர்களுக்கும்

திரு. கே. ஜி. ஜார்ஜ் அவர்களுக்கும் அடிப்படையிலேயே சில வித்தியாசங்கள் உண்டு. குறிப்பாக திரு. அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், பக்கர் போன்றவர்கள் தரமான படங்களை இயக்கும் இயக்குநர்களாக இருந்தபோதிலும் கூட, ஆசைப்பட்டுச் சென்றால் சாதாரண ஏழை - எளிய திரைப்பட ரசிகர்களால் ஒரு மணி நேரம் கூட, அவர்களுடைய படங்களைத் தியேட்டர்களில் உட்கார்ந்து பார்க்க இயலாது. படங்களின் தரம் உயர்ந்ததாகத்தான் இருக்கும்! என்றாலும் கூட, தங்கள் படங்களின் கதையினையும், சம்பவங்களையும் அவர்கள் முன்னோக்கி நகர்த்தும் முறை, கலைத்தன்மையைக் கூட்டுவதற்காக வேண்டி அவர்கள் கையாளும் வித்தை, பொதிந்து வைத்திருக்கும் மர்மம், ஜடம் போல் நகரும் கதாப்பாத்திரங்கள், - போன்றவைகள் நம் ரசிகர்களின் பொறுமையை இழக்கச் செய்துவிடுபவை.

உதாரணமாக, ஒருவன் பீடியை வாயில் வைத்துக்கொண்டு வானத்தை வெறித்தவாறு அரைமணிக்கூராக உட்கார்ந்துகொண்டிருப்பது. சில வேளைகளில் இறந்துபோன கதாபாத்திரங்கள். மீண்டும் கோவில் நடையில் வந்து உட்கார்ந்துகொண்டி ருப்பது, காதலித்த பெண்ணே தன் அண்ணனுக்கு மனைவியாக வரும்போது கொழுந்தனாரை (அதாவது பழைய காதலனை தெரியாமல் விழித்து நிற்பது போன்றவைகளைச் சுட்டலாம்).

நாம் மேலே கண்ட விஷயங்கள் திரு. அடூர் கோபாலக் கிருஷ்ணன், அரவிந்தன் போன்றவர்களின் சர்வதேசிய அளவுக்குப் புகழ்பெற்ற படங்களில் வரும் காட்சிகளாகும். அது மட்டுமின்றிச் சில சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்று புரிந்துகொள்ள இயலாதவாறும் அறுந்தும் காணப்படும். கலையின் உள்ளடக்கமாக நாம் ஒரு சேதியைத் தேர்ந்தெடுக்கும் போது அதன் நோக்கம் என்ன? சமூகத்திற்குச் சில விஷயங்களைத் தெரிவிக்கவோ அல்லது உணர்த்துவதற்காக வேண்டியே.

நாங்கள் மசாலாப்பட இயக்குநர்கள் அளவுக்குக் கீழே இறங்கமாட்டோம் எனக் காட்டிக் கொள்வதற்காகத் திரைப்படம் முழுவதிலும் நாம் மேலேகுறிப்பிட்ட விஷயங் களைப் புகுத்தும்போது - அது, நம் சாதாரண திரைப்பட ரசிகர்களைச் சோர்வடையச் செய்துவிடும். அதுமட்டுமின்றி கலைப் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என மக்களை எண்ணும்படி செய்து, தரமான திரைப்படங்களின் அருகே செல்லவிடாமல் அவர்களை விலகி ஓடச் செய்துவிடும்.

அறிவு ஜீவிகளுக்காக வேண்டி எடுக்கப்படும் திரைப்படங்கள் (நாம் மேலே சுட்டிய முறையில் இயக்கும் திரைப்படங்கள் அதிகமாக அறிவு ஜீவிகளால் மட்டுமே ரசிக்க முடியும் என்பதால் நான் இவ்வாறு அடையாளப்படுத்துகிறேன்) இயக்குநர்கள் வணிக நோக்கில் எடுக்கப்படும் திரைப்பட இயக்குநர்கள் அளவுக்குத் தரம் தாழ்ந்து போகவேண்டாம். ஆனால் அதே வேளையில் எளிய ரசிகர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் அளவுக்கு அவர்களது படங்கள் அமையவேண்டும். இன்று அப்படிக் கிடையாது. ஆனால் திரு. கே. ஜி. ஜார்ஜ் அவர்கள் இதிலிருந்து முற்றிலும் விதி விலக்கானவர். நாம் மேலே எடுத்துக்காட்டிய விஷயங்கள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பல சிறந்த மலையாளத் திரைப்படங்களைத் திரைப்பட உலகத்திற்குத் தந்தவர், அவர்.

Film Society - களெல்லாம் ஏராளமான திரைப்படக் கொட்டகைகள் உள்ள இன்றைய பட்டணங்களில் தேவைதானா? என்ற கேள்வி நமக்கு எழலாம். எந்தத் திரைப்படம் ஆனாலும் சரி. யார் நடித்ததாக இருந்தாலும் சரி. சௌகர்யமாக உட்கார்ந்து பார்க்கிற அளவுக்கு A/C - யும் இருக்கைகளும் உள்ள இக்காலத்தில் எதற்கு இம்மாதிரியான பிலிம் சொஸைட்டிகள்?

இன்றைய நமது திரைப்படக் கொட்டகைகளால் செய்ய இயலாத பல அரிய சாதனைகளை இந்தச் சங்கங்களினால் சாதிக்க முடியும். திரைப்படங்களைப் பற்றிய சர்ச்சைகளையும் விவாதங்களையும் இவைகள் நடத்துகின்றன; இதன் பொறுப்பாளர்கள் பல தரமான திரைப்பட இயக்குநர்களை அழைத்துக்கொண்டு வந்து அவர்களது அனுபவங்களை மக்களோடு சேர்ந்து பகிர்ந்து கொள்ள உதவுகிறார்கள். பார்க்கக் கிடைக்காத பல உள்நாட்டு, வெளிநாட்டுத் தரமானத் திரைப்படங்களை மக்களுக்குக் கிடைக்கும்படிச் செய்கிறார்கள். திசை தெரியாமல் போய்க்கொண்டிருக்கும் நம் திரைப்பட ரசிகர்களைத் திசைப்படுத்துகிறார்கள்.

மெட்ரோஃபிலிம் சொஸைட்டியின் துவக்கவிழா முடிந்ததும் கானூஸ் தியேட்டரில் ‘பர்சானியா’ என்ற குஜராத் பற்றிய திரைப்படம் திரையிடப்பட்டது. இது, சமீபத்தில் ஆர். எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத் குஜராத்தில் செய்த நடவடிக்கைகளைப் பற்றி திரு. ராகுல் தோலாக்கியா இயக்கியப் படம். ‘மதம் அபின் போன்றது’ என, மார்க்ஸ் சொன்னதன் பொருளை இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பார்சி குடும்பத்தை மையமாகக் கொண்டு சுழலும் படம்.

இதனுள்ளே ஒரு அமெரிக்கக் கதாப்பாத்திரம் வருகிறது. ஆலன் வெப்பிங்ஸ் என்பது இவருடைய பெயர். மகாத்மா காந்தியை மையமாகக் கொண்டு அகமதாபாத்திற்குப் படிக்க வந்தவர். இவர் மூலமாகவும் சில சமூக உண்மைகள் நமக்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. இவை போக குஜராத் மாநில அரசின் கவனக்குறைவும், சில போலியான நடவடிக்கைகளையும், அதன் ஏமாற்று வேலைகளையும் காண முடிகிறது.

நெருப்புக்கு இரையாகும் ரயில், வேற்று மதத்தைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக வேண்டி வாளுக்கு இரையாகும் கர்ப்பிணிப் பெண்; (மல்லாக்கப் படுக்க வைத்து வயிற்றை வாள் கொண்டு கீறிப் பிளக்கிறார்கள்), கலவரத்தின் விளைவால் தன் மனைவி மக்களையும், உற்றார் உறவினர்களையும் தேடியலையும் மனிதர்கள், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகப் படுகொலை செய்யப்படும் தாத்தா, தீ வைத்துக் கொளுத்தப்படும் வீடுகள், கட்டடங்கள், கடைகள், இவைகளை கைகளைக் கட்டிக்கொண்டு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரிகள், பொய்யான அறிவிப்புகளைச் செய்து மக்களை ஏமாற்றும் மந்திரி என, இப்படி எண்ணற்ற விஷயங்களைக் கலை நயத்துடனும், சமூக உணர்வோடும் இப்படம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இது, பல திரைப்பட இயக்குநர்கள் எடுக்கத் தயங்கும் விஷயமும் கூட! இந்தத் திரைப்படம் வெளியாகும் வேளையில், குஜராத்தில் இதை வெளியிடக் கூடாது எனக் குழப்பம் பண்ணி, தடைசெய்யக் கோரியது இந்துமதச் சக்திகள்.

அந்த வேளையில் குஜராத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது? அவற்றுக்கான காரணங்கள் என்னென்ன? அதன் பின்னால் ஒளிந்திருந்து செயல்பட்ட சக்திகள் எவை? போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் இந்தப் படத்திலிருந்து விடை கிடைக்கிறது.

நம் நாட்டில் எவ்வளவோ திரைப்படக் கொட்டகைகள் இருக்கின்றன? இருந்தும் என்ன பயன்? இம்மாதிரி சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படங்களைக் காட்ட முன் வருவதில்லையே! ஒருவேளை தீவிர மத வெறியர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படங்கள் திரைக்கு வருமானால், அவற்றுக்குத் தீ வைக்கவும் இவர்கள் தயங்கமாட்டார்கள்.

ஆக, ‘பர்சானியா’ திரைப்பட இயக்குநர் திரு. ராகுல் தோலாக்கியாவிற்குச் சிறந்த திரைப்பட இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்தது. அதோடு, இந்தப்படம் குஜராத்தில் வெளியிடப்படவில்லையென்றாலும் கூட, சர்வதேச அளவில் பிரபலமாகிவிட்டது.

இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் நாம் மெட்ரோ ஃபிலிம் சொஸைட்டி போன்ற சங்கங்களைப் பற்றி எண்ண வேண்டியிருக்கிறது. அது மட்டுமின்றி எட்டாத தொலைவில் எடுக்கப்படும் சில நல்ல தேசிய - சர்வதேசிய திரைப் படங்களையும் கூட இம்மாதிரி சங்கங்களே இன்று நமக்குக் காண்பதற்குத் துணை நிற்கின்றன. விழாவில் சங்கச் செயலாளர் வர்க்கீஸ் மேத்யு வரவேற்புரை ஆற்ற திருமதி. கைரளி நன்றி தெரிவித்தார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com