Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் டிசம்பர் 2007

உயிர் பிரிவது மட்டுமா மரணம்?
வே.இராமசாமி

கண்ணாடிக் கடைகளில் பழங்களை அடுக்கிவைத்து ஸ்டிக்கர் ஒட்டி விற்கிறார்கள். பழத்தை இம்மி பைசா கூட குறைத்து நம்மால் வாங்க முடியாது. தள்ளுவண்டிக் கூழும் விற்கிறது. அதற்கும் செம்பு ஐந்து ரூபாய் என்று விலை இருக்கிறது. நம்மிடம் இருப்பது மூன்று ரூபாய்தான் என்றாலும் செம்பு நிறைய ஊற்றித் தருகிறான் கடைக்காரன். எப்படியோ விற்கும் பொருளின் பண்பு விற்பவனுக்கு வந்துவிடுகிறது. அதேபோல ஒரு கவிதையின் பண்பு வாசகனோடு எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதில் கவிஞனின் கவிதையின் வெற்றி அடங்கியிருக்கிறது. மயூரா ரத்தினசாமியின் ‘நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை’ கவிதைத் தொகுப்பை இப்படிப் பார்த்தால் ஒரு மெல்லிய மனப்பதிவாக மட்டும் மிஞ்சியிருக்கிறது. எல்லாம் வாய்த்துவிட்ட மத்தியதர வாழ்க்கையின் சலிப்பான அழகியல் வியப்பாக உள்ளது.

கூடவே, புறங்கழுத்தில் மிகச்சரியாக விழுந்த மழைத் துளியைப்போல சிலாகிக்க வைக்கும் வரிகள் விரவிக்கிடப்பதைச் சுட்டி ரசிக்கவும் முடியும். ‘நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை’ என்ற தொகுப்பின் தலைப்பே மனதில் உருவாக்கும் காட்சிப் படிமங்கள் தனி கவியழகாக விரிகிறது. இந்த வரி ‘விக்ரமாதித்தன்’ செண்பகாடவிக்குப்/போகிற வழியில்/ கண்டு ரசித்த/ காட்டுப் பன்றிகளால்/ கொண்ட சந்தோஷம் எவ்வளவு? என்று கேட்ட உணர்வைத் தருகிறது.

தனிவீதி/அதன் சோபையை வரைந்துகொண்டிருந்தது ஒரு கிழநத்தை/என்றெழுதிய குட்டி ரேவதியின் வார்த்தைச் சித்திரத்தோடு ஒப்பிடத் தோன்றியது. எங்கோ எப்போதோ போகையில் வயிறு குலுங்கச்சென்ற சினைப்பன்னியைப் பற்றிய வண்ணதாசன் மன உணர்வைப் பிரதிபலிக்கிறது. மேற்சொன்ன மூன்று கவிஞர்களின் படைப்புணர்வு அந்த இடத்தில் குறிப்பிட்ட நத்தை என்னாகுமென்ற கேள்வியின் பதைப்புத் தான் இவ்வரிகளின் தனிச்சிறப்பு நசுங்காமல் தப்பிக்கட்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்.

மேலும் இந்தத் தொகுப்பின் மிகக் கனமான இரண்டு வரிகள் நம்மோடு எல்லாக் காலத்திலும் தங்கும். அது, உயிர் பிரிவது மட்டுமா மரணம்? என்பது படைப்பாளிகள் தங்களின் குரலாக மயூரா ரத்தினசாமியின் இந்தக் கவிதையை அடையாளம் காண்பார்கள். நுகர்வு வெறி என்கிற பேய் உச்சத்திலிருக்கும் இந்த நவீன மரணத்தை விட கொடிய முளைகளில் இவ்வாழ்வு இயங்கும் தருணங்களென்று நிறைய இருக்கின்றன. இதற்கு மேல் அந்த உணர்வை வேறு சொற்களில் எழுத முடியாதபடி கச்சிதமாக எழுதியுள்ளார்.

‘கர்ப்ப வாசல்’ கவிதை மிக முக்கியமான கவிதை. எப்படி எனில் பெண்மொழி வெகு வீச்சோடு செயல்படும் இந்தச் சூழலில், “ரத்த ஒழுக்கைப் பார்த்துப் பதறி/அம்மா அழுதாள்/இனி கணவன் இரவில்/அழைக்கும் போதெல்லாம்/உன் நினைவுதான் வருமென்று சொல்லி,” என்று கவிஞர் எழுதியிருப்பது முற்று முழுக்காகப் பெண் மொழியிலேயே ஒலிக்கிறது. யாரேனும் பெண் கவிஞர் எழுதினால் இந்தப் பார்வை கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. (மேற்படி அந்தக் கவிதை தாயும் தகப்பனும் முயங்குவதைப் பார்த்த பிள்ளை பேசுவதாக அமைந்துள்ளது.)

இந்தக் கவிதையை வைத்து ஒரு பெண்மொழியில் தீவிரமாக இயங்கும் தோழர்களிடம் ஒரு கேள்வி கேட்கலாம். பெண், பதியினால்-கணவனால்-காதலனால் மட்டுமே ஒடுக்கப்படுகிறாளா? சகோதரனால்-தாயால்-தந்தையால்- நுட்பமாக அடக்கப்படுவதைப் பற்றி ஏன் பெண்மொழி பேசவில்லை-அல்லது ரொம்பச் சொற்பமாகப் பேசுகிறது? இப்படியான ஒரு பார்வையில் பெண்-மொழி புதுவிரிவு கொள்ள இக்கவிதை உதவும் என்று நம்பலாம்.

மற்றபடி ‘காலுடை காதை செகப்பு’, ‘ஆதிவாசி’ போன்ற கவிதைகள் அதனதன் அனுபவப் பின்புலத்தில் சிறப்பான சொல் முறையில் வெளிப்பட்டு மிளிர்கின்றன. சில கவிதைகள் ‘அரூபக் கத்தியாய்’ எதுவுமில்லாமல் தாண்டும் அவகாசம் இருக்கும். அது மயூரா ரத்தினசாமிக்கும் இருக்கும்தானே? நெடுஞ்சாலை நத்தையைப் போலவே மனிதருக்கு நிறைய கவித்துவக் கேள்விகள் இருக்கின்றன... அதிலொன்று

பறவைகள் மீண்டும் கூடடைய
எதை அடையாளப் படுத்திச்செல்கின்றன?

பறவை! கவிதை இரண்டும் பயணிக்கும் திசையின் புதிர் விளங்காதவரை நிச்சயம் லாபம்தான் கவிதைக்கு.

நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை
ஆசிரியர்: மயூரா ரத்தினசாமி, விலை : ரூ. 40, வெளியீடு: மயூரா பதிப்பகம், 37, தொட்டராயன் கோயில் வீதி, காட்டூர், கோயம்புத்தூர் - 641009


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com