Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2007

கலைகளின் விளக்கமாக ஆயகலைகள்
முகிலை இராச பாண்டியன்

கலைகள் இத்தனை என்று வரையறை செய்ய இயலாது. காலந்தோறும் கலைகளின் எண்ணிக் கையும் தன்மையும் வேறுபட்டுக் கொண்டிருக்கும்.

அத்தகைய கலைகளை அறுபத்துநான்கு என்று நம் முன்னோர் வரையறை செய்துள்ளனர்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் / ஏய உணர்விக்கும் என்அம்மை - தூய / உருப்பளிங்கு போல்வள் என் உள்ளத்துள்ளே / இருப்பவள் இங்கு வாராது இடர் என்னும் சரசுவதி அந்தாதிப் பாடல் கலைகள் அறுபத்து நான்கு என்று தெரிவிக்கிறது. கலைகள் என்னும் சொல்லுக்கு முன்ஒட்டாக ‘ஆய’ என்னும் சொல் சேர்க்கப்பட்டுள்ளதால் இது அழகுக் கலைகளை மட்டுமே குறிக்கும் எனலாம். அப்படி என்றால் அழகுக் கலை அல்லாத கலைகளும் உள்ளன என்பது உள்ளார்ந்த பொருளாக மறைந்திருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.

கலை என்ற சொல்லே அழகுக் கலையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. கலை என்னும் சொல்லில் ‘கல்’ என்னும் சொல்லும் ‘ஐ’ என்னும் விகுதியும் காணப்படுகின்றன. ‘கல்’ என்றால் புதியனவற்றைக் கற்று அறிதல் என்றும் ‘ஐ’ என்றால் அழகாகக் கற்றல் என்றும் அழகாக வெளிப்படுத்தல் என்றும் பொருள் கொள்ளமுடியும் என்னும் விளக்கத்துடன் ஆய கலைகள் என்னும் நூலைத் தொடங்கியுள்ளார் முனைவர் பாக்ய மேரி.

ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று அறிந்துள்ள தமிழரில் பெரும்பாலோர் அந்த அறுபத்து நான்கு கலைகளும் என்ன என்று அறிந்திருக்கமாட்டார்கள். அந்த அறுபத்து நான்கு கலைகளையும் பட்டியல் போட்டதுடன் அவற்றில் முப்பத்திரண்டு கலைகளை இந்த நூலில் விளக்கியுள்ளார் பாக்ய மேரி.

கட்டடக் கலை

இந்த முப்பத்திரண்டு கலைகளில் கட்டடக் கலை முதலாவதாக விளக்கப்பட்டுள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்திலேயே தமிழர் சுட்ட செங்கல்லைப் பயன்படுத்தியுள்ளனர் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த மூவாயிரம் ஆண்டுத் தொன்மைமிக்க தமிழரின் கட்டக் கலையை மூன்றாகப் பிரித்து விளக்கியுள்ளார் ஆசிரியர்.

மக்கள் வாழ் கட்டடங்கள் / மன்னன் வாழ் கட்டடங்கள் / மகேசன் வாழ் கட்டடங்கள் என்று வகைப்படுத்திக் கொண்டு கட்டடக் கலையை அணுகியதால் தமிழரின் கட்டடக் கலை நுட்பத்தைத் தெளிவுபடுத்த முடிந்துள்ளது. கோவலனும் கண்ணகியும் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய எழுநிலை மாடத்தையும் அவற்றில் சாளரங்களையும் அவற்றில் தொங்க விடப்பட்டிருந்த மணிமாலைகளையும் அழகுபட எடுத்துக் காட்டியுள்ளார்.

மக்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கு ஏற்ப வீடுகளும் அமைந்திருந்ததை இனம்பிரித்துக் காட்டியுள்ளதன் மூலம் அக்காலத்தில் கட்டடக்கலை மக்களின் தேவையை மையமாகக் கொண்டிருந்தது என்பதை உணர்த்துகிறார்.

வேளாண்மைத் தொழில் புரிந்தோரின் வீடுகள் அத்தொழிலுக்கு ஏற்றாற்போல் அமைந்திருந்ததையும் ஏழைகளின் வீடுகள் கூரை வேயப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. அந்தக் கூரை வீடுகளும் தொழில் சார்ந்து அமைக்கப் பட்டிருந்ததை நுட்பமாகத் தெரிவித்துள்ளார். பாலை நிலத்தில் அமைக்கப்பட கூரை ஈந்தின் இலைகளைக் கொண்டிருந்தது என்றும் மருத நிலத்தில் கூரை வைக்கோலால் அமைக்கப் பட்டிருந்தது என்பதையும் நெய்தல் நிலத்தில் தருப்பைப் புல்லால் கூரை வேயப்பட்டிருந்ததையும் தென்னங்கீற்றால் அமைக்கப்பட்டிருந்ததையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

கட்டடக்கலை பற்றித் தெரிவிக்கும் பகுதியில் கட்டடக் கலையின் வெளிப்பாட்டை மட்டும் வெளிப்படுத்திச் செல்லாமல் சாதாரண மக்களின் வாழ்விடத்தையும் தெரிவித்திருப்பது ஆசிரியரின் சமூகக் கண்ணோட்டத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.

தமிழகத்தை மூன்று வேந்தர்கள் ஆண்டனர் என்று அறிகிறோம். அவர்களின் அரண்மனையின் சிதைவுகளைக் கூடத் தற்காலத்தில் காண இயலவில்லை. சேரர்கள் ஆண்ட பகுதி தற்காலத்தில் தமிழ் நிலப் பரப்பில் இல்லை என்பதால் அதனைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் சோழனும் பாண்டியனும் ஆண்ட நிலப்பரப்புகளும் அவர்களின் அரண்மனைப் பகுதிகள் இருந்ததாகக் கருதப்படும் இடங்களும் இப்போதும் தமிழ்நாட்டில்தான் உள்ளன. எனினும் அவர்களது அரண்மனைகளையோ கோட்டைகளையோ ஏன் அடையாளப்படுத்த இயலவில்லை.

சோழன் ஆண்ட நிலப்பரப்பு மராத்தியர்களின் ஆளுகைக்கு உட்பட்டதும் பாண்டியர் ஆண்ட நிலப்பரப்பு நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்படுத்தும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அல்லது அந்தத் தமிழ் வேந்தர்களின் அரண்மனைகளின் மாறுபட்ட வடிவங்களாகவே தற்காலத்தில் காணப்படும் மராட்டியர்களின் அரண்மனையும் நாயக்கர்களின் அரண் மனையும் அமைந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் நம்மால் தற்போது காண முடியாத தமிழ் வேந்தரின் அரண்மனை அமைப்புகளை அழகாக இந்த நூலில் வடித்துள்ளார் ஆசிரியர்.

இறைவனுக்குக் கட்டப்பட்ட கோயில்களை மரக் கட்டடங்கள், செங்கல் கட்டடங்கள், பாறைக் கோயில்கள், கற்கோயில்கள் என்று முதலில் வகைப்படுத்திப் பின்னர் அவற்றை கரக் கோயில் முதல் ஆலக்கோயில் வரையிலான ஆறுவகைக் கோயில்களாக விரித்து எழுதியுள்ளதால் தமிழரின் கோயில் கட்டடக்கலையை முழுவதுமாக அறிந்துகொள்ள முடிகிறது. கரக்கோயிலின் வடிவத்திற்குத் தற்கால வள்ளுவர் கோட்டத்தை நினைவுபடுத்தி ஒப்பீடு செய்துள்ள ஆசிரியர் பாராட்டிற்குரியர்.

சிற்பக் கலை

பண்டைத் தமிழரின் நடுகல்தான் சிற்பக்கலைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டு, சிற்பக் கலையை நமக்கு அறிமுகம் செய்கிறார் ஆசிரியர் பாக்ய மேரி. மண்ணாலும் மரத்தாலும் பொன்னாலும் பிற உலோகங் களாலும் சிற்பங்கள் வடிக்கப்பட்டன என்பதையும் அவ்வாறு வடிக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளீடானவை, உள்ளீடு அற்றவை எனப் பகுக்கப்பட்டுள்ள தன்மையையும் பாக்யமேரி ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.

ஓவியக் கலை

கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றைக் காட்டிலும் ஓவியக்கலை மிகவும் பழமையானது என்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. குகை ஓவியங்கள், பாறை ஓவியங்கள், சுவர் ஓவியங்கள், துகில் ஓவியங்கள், கோட்டு ஓவியங்கள் என்று ஐந்தாகப் பிரித்து ஆய்வு செய்துள்ள தன்மை போற்றுதலுக்குரியது. குகை ஓவியங்களில் பழமையான கைமூர்க் குகை ஓவியங்களையும் அஜந்தா ஓவியங்களையும் நம் கண்முன் காட்சியாகப் படைத்துள்ளார். தமிழ்நாட்டில் பாறை ஓவியங்கள் காணப்படும் இடங்களைப் பட்டியல் போட்டு ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.

ஆடல் கலை

ஆடல் கலையை விளக்குமிடத்தில் மாதவியாடிய பதினோராடல்களையும் அவற்றின் சிறப்பினையும் முதலில் விளக்கிப் பின்னர் ஆரியக் கூத்து எத்தகையது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார். குரவைக் கூத்து, துணங்கைக்கூத்து, வெறியாட்டு முதலியவற்றை எளிய நடையில் வரைபடங் களுடன் அறிமுகம் செய்துள்ள தன்மை பாராட்டிற்கு உரியது. பழம்பெரும் கூத்து நூல்களையும் ஒரு கை அபிநயம், இரு கை அபிநயம் என்று அனைத்தையும் தெரிவித்திருப்பதால் ஆடல் கலையின் முழுமையை நூல் வழங்குகிறது.

இசைக் கலை

இசைக்கு மயங்கும் அசுணத்தைப் பற்றித் தெரிவித்து அந்த இசைக்கு மனிதர்கள் எவ்வாறு இசைந்தனர் என்பதை இசைக்கலையில் விளக்கியுள்ளார். மறைந்து போன இசைத் தமிழ் நூல்களையும் இசைக் கல்வெட்டுகளையும் தெரிவித் துள்ளதுடன் வடமொழியில் இசைக் குறிப்பு இருப்பதால் அந்த இசையைத் தமிழிசைக்கு அப்பாற்பட்டதாகக் கருதக் கூடாது என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளார் பாக்யமேரி. அறிவனாரின் பஞ்ச மரபு என்னும் இசைத் தமிழ் நூலையும் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தையும் அத்துடன், ‘யாழ் நூல்’ என்றாலே விபுலானந்த அடிகளார் என்று மட்டும் அறிந்திருப்பவருக்கு, ஆபிரகாம் பண்டிதரின் மகன் ‘ஆ. வரகுண பாண்டியன்’ என்பவர் எழுதியிருக்கும் ‘பாணர் கைவழி’ என்ற நூலிற்கும் ‘யாழ் நூல்’ என்ற பெயருண்டு என்ற செய்தியையும் ‘பாக்யமேரி’ தருகின்றார். தமிழர்க்கு மீண்டும் அறிமுகம் செய்துள்ளார். பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என யாழ் வகைகளைத் தெரிவித்திருப்பதுடன் செங்கோட்டி யாழின் தற்கால வடிவமே வீணை என்றும் இந்நூல் நிறுவுகிறது.

இந்த ஐந்து கலைகளையும் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, ஆடற்கலை, இசைக்கலை என்னும் ஐந்து கலைகளும் ‘நுண்கலைகள்” எனப் போற்றப்படும். இந்த நூல் எளிய நடையில் விளக்குவதுடன் ஒவ்வொரு கலையையும் விளக்கும்போதும் அந்தக் கலை சார்ந்த படங்களைத் தெளிவாக அச்சிட்டிருப்பதால் குறைந்த அளவு கல்வியறிவு பெற்றவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த ஆய்வு நூல் அமைந்துள்ளது. அரண்மனை அமைப்பையும் கோயில் அமைப்பையும் தெள்ளத் தெளிவாக்கியுள்ளது போல் யாழின் ஒவ்வோர் உறுப்புகளையும் தனித்தனியே குறிப்பிட்டு விளக்கியுள்ள தன்மை அனைவரையும் கவரும்.

பிற கலைகளாக இருபத்தேழு கலைகள் பற்றிய எளிய, இனிய அறிமுகத்தைப் ‘பாக்ய மேரி’ பாங்காகப் படைத்துள்ளார். அதன் மூலம், பருகுபொருள் செய்கலை, நீராடற் கலை, நீர்விளையாடற்கலை, உடலியற்கலை, படுக்கை தயாரிக்கும் கலை, நறுமணப்பொருள் இயல் அறிகலை, களிப்பு செய்கலை, காதணிக் கலை, சங்குவளை செய்கலை, அணிவகை இயற்றும் கலை, ஆடை அணிகளைத் தேர்ந்தெடுக்கும் கலை, பொம்மைக் கலை, கூந்தல் ஒப்பனைக் கலை, தொழில் நுட்பக் கலை, நிலத்தடிப் பொருள் இயல் அறிகலை, உலோகப் பொருள் இயல் அறிகலை, அறிவியற்கலை, தாய்மொழி தேர்ச்சிக் கலை, அகராதி இயல் அறிவுக்கலை, ஒரே முறையில் கேட்டவை கூறும் கலை, நினைவாற்றல் கலை, பேச்சாற்றல் கலை, படைப்பாற்றல் கலை, சமூகத்தில் பழகும் கலை, விடுகதைக் கலை, விசித்திரக் கணக்கிடு கலை, சொல் விளையாட்டுக் கலை ஆகிய கலைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வாயிலாக ‘ஆய கலைகள்’ அழகுற மிளிர்கின்றது.

இவ்வாறு, ஆ. கலைகள் அறுபத்து நான்கனுள் முப்பத் திரண்டு கலைகளின் விளக்கமாக அமைந்துள்ள ‘ஆய கலைகள்’ என்னும் ஆய்வு நூல், மீதமுள்ள முப்பத்திரண்டு கலைகளின் விளக்கத்தினை அறியும் ஆவலைத் தூண்டுவதனைப் படிப்போர் அறிந்துகொள்ள முடியும்.

ஆய கலைகள் (1-32)

ஆசிரியர் : முனைவர் பாக்கியமேரி, விலை : ரூ. 140,
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜான் ஜானி கான் சாலை,
சென்னை - 14.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP