Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் டிசம்பர் 2007

வான்ட்டா வாசிலெவ்ஸ்காவின் - வானவில்
(ஸ்டாலின் பரிசு பெற்ற நாவல்)
எஸ்.ஏ.பெருமாள்

இரண்டாம் உலகப்போரில் இட்லரை எதிர்த்துச் சோவியத் குடியரசுகள் நீண்ட போர் தொடுத்தன. ஸ்டாலின் தலைமையில் மக்களும் செஞ்சேனையும் இணைந்து இட்லரின் பாசிசப்படைகளை எதிர்த்து ஐந்தாண்டுகளுக்கும் மேல் போராடி வென்றனர். இரண்டு கோடிப் பேர் இறந்தனர். அவர்கள் லட்சக்கணக்கான ஜெர்மானிய நாஜிகளைக் கொன்று குவித்து விட்டே மரித்தனர். மங்காப்புகழ்ச்சி சோவியத் மக்களின் வீரம் உலக மக்களை எழுச்சி பெறச் செய்தது. ஏகாதிபத்தியங்களை எதிர்த்த போரில் உலகமக்கள் இறங்கினர். இந்தியா உள்பட பல நாடுகள் விடுதலை பெற்றன.

பாசிச எதிர்ப்புப் போரில் நிகழ்ந்த சம்பவங்களை ஆதாரமாய்க் கொண்டு ஏராளமான சோவியத் நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும் வெளிவந்தன. அவை உலக இலக்கியத்தில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. அந்த அமர இலக்கியங்களைப் படைத்த படைப்பாளிகள் பெரும்பாலும் நாஜி எதிர்ப்புப் போரில் நேரடியாய்ப் பங்கேற்றவர்கள். துயரங்களை அனுபவித்தவர்கள். அதனால்தான் அவர்களது படைப்புகள் அழியாப் புகழுடன் நிலைத்து வாழுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த வானவில். உக்ரேனியப் போர் முனையில் நின்ற செஞ்சேனையின் வீராங்கனையான வான்ட்டா வாசிலெவ்ஸ்கா எழுதிய இந்த நாவல் தனி ரகமானது. ஸ்டாலின் பரிசு பெற்றது ஆகும்.

இட்லரின் நாஜிப் படைகள் சோவியத்தின் அனைத்துக் குடியரசுகள் மீதும் தாக்குதல் தொடுத்துப் பெரும் நாச வேலைகளில் ஈடுபட்டன. நகரங்களையும் கிராமங்களையும் அழித்தனர். மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்தனர். பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோரைக் கூட அந்த வெறியர்கள் விட்டுவைக்கவில்லை.

கொல்லப்பட்டவர்களின் பிணங்களைக் கூட அடக்கம் செய்ய அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆடு, மாடு, கோழிகள் உட்பட அனைத்தையும் ஜெர்மன் ராணுவம் பறிமுதல் செய்து தின்று தீர்த்துவிட்டது. கண்ணுக்குத் தப்பியவைகளையும் அவர்கள் தேடிப்பிடித்துத் தின்றனர். பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாயினர்.

வானவில் நாவலில் கதைக்களம் உக்ரேன் குடியரசில் ஒரு கிராமத்தில் நிகழுகிறது. உக்ரேன் ஜெர்மனியின் காலடியில் கீழே விழுந்து மிதிபட்டது. உக்ரேன் ரத்தத்தால் நனைந்திருந்தது. எரிந்து கருகிக் கிடந்தது. மனிதர்கள் பிணங்களாகி புதைக்கப் படாமல் கிடந்தனர். உக்ரேன் அன்னையின் நெஞ்சில் ஜெர்மானியர்கள் தங்கள் பூட்சுக்கால்களால் மிதித்துத் துவைக்கிறார்கள்.

உக்ரேனைக் கடந்த இரண்டு வருடங்களாய்க் கைப்பற்றி அவமதித்து விலங்கிட்டனர். எனினும் உக்ரேன் துணிவோடும், வீரத்தோடும் எதிரிகளை எதிர்த்துப் போர் புரிந்தது. பாசிஸ்டுகளை வீழ்த்தி, வென்று புதிய வரலாறு படைத்தது. மகத்தான செஞ்சேனையுடன் இணைந்து மக்களும் போர்புரிந்தனர். ஒரு கிராமத்தில் கொடுங்குளிர் வீசும் காலத்தில் மரணத்திற்கு அஞ்சாமல் ஜெர்மன் ராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட கிராமவாசிகளின் கதை இது.

அந்தக் கிராமத்தில் முந்நூறு குடிசைகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறைந்தது ஒருவனாவது போர் முனைக்குச் சென்றிருக்கிறான். அவர்களில் பெடோஸ்யா என்ற பெண்மணியின் ஒரே மகன் மட்டும் கிராமத்திலேயே ஜெர்மனியர்களால் நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொல்லப் பட்டான். அவனது உடல் அருவிக்கரையோரம் கிடக்கிறது. அவனது உடலை அடக்கம் செய்ய ஜெர்மானியர் அனுமதிக்க வில்லை.

அவனது உடலைப் போலவே கொல்லப்பட்ட பலரது உடல்களும் புதைக்கப்படாமல் கடந்த ஒரு மாத காலமாகப் பனியில் கிடக்கின்றன. பிரேதங்களில் இருந்த துணிகளைக் கூட ஜெர்மன் நாய்கள் உருவிக்கொண்டன. கிராமத்தின் நடுவில் ஒரு இளைஞனின் உடல் தூக்கிலிடப்பட்டுப் பல நாட்களாய் தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்த உடல்களை அடக்கம் செய்ய முயற்சிப்பவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதனால் பெடோஸ்யா தனது மகனின் உடலை அருவிக் கரைக்குச் சென்று தினசரி யாருக்கும் தெரியாமல் பார்த்து வருவாள். மகனின் முகத்தைத் தன் கைகளால் வருடிப் பார்ப்பாள். அவனது கை, கால்களைத் தடவிக்கொடுப்பாள். கண்ணீர் வடித்துவிட்டு விடுதி திரும்புவாள்.

மகனைப் பறி கொடுத்துவிட்டுப் பெரும் துயரத்தில் இருந்த பெடோஸ்டாவைப் பரிகசிப்பதைப் போன்று ஜெர்மன் அதிகாரி தனது வைப்பாட்டியை அவருடைய வீட்டில்தான் தங்கவைத்திருக்கிறான். ஒரு புட்டி பிரெஞ்சு ஒயினுக்காகவும், ஒரு ஜோடி பட்டுக் காலுறைகளுக்காவும் தன்னை விற்று, தனது தேசத்தைக் காட்டிக் கொடுத்த உள்ளூர் விபச்சாரி அந்தப் பெண்.

அவள் செம்படையில் அதிகாரியாய் இருக்கும் தனது கணவனுக்கும், கணவாயில் இறந்து கிடக்கும் சிறுவர்களுக்கும் துரோகம் செய்தவள் அவள். அந்த நெறிகெட்ட சிறுக்கி தனது வீட்டில் இருப்பதையும், தனது இறகு மெத்தையில் அவள் படுப்பதையும், அந்த ஜெர்மன் அதிகாரியுடன் அவள் சல்லாபம் செய்வதையும் பெடோஸ்யா அடியோடு வெறுத்தாள். ஆனால் அந்த வேசி புஸ்ஸிக்குக் கிழவி பெடோஸ்யா தினமும் சென்று அவளது மகன் வாஸ்யாவின் சடலத்தைப் பார்த்துவரும் ரகசியம் தெரியும்.

அதை வைத்தே அவள் பெடோஸ்யாவை மிரட்டினாள். அந்த ஜெர்மன் அதிகாரி குர்ட்டிடம் புஸ்ஸி அந்த ரகசியத்தை மட்டும் சொல்லிவிட்டால் அவள்கதி அதோகதிதான். இந்தக் காலத்தில்தான் கொரில்லா வீராங்கனை ஒஸினா பிரசவத்து க்காகக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் நிறைமாத கர்ப்பிணி ஆனால் ஜெர்மானியர்கள் அவளைக் கைது செய்து விட்டனர்.

அவளிடம் கொரில்லா முகாம்கள், செஞ்சேனை பற்றிய விபரங்களை அறிய குர்ட் கடுமையாய் சித்ரவதை செய்தான். ஆனால் அவள் வாயிலிருந்து எதையும் பிடுங்க முடியவில்லை. அவளுக்குக் குழந்தை பிறந்தது. ஒஸினா காட்டிக் கொடுக்க மறுத்ததற்காக அவளது பிறந்த குழந்தையை அவள் கண் முன்னாலேயே சுட்டுக் கொன்றனர். பிறகு அவளையும் கொன்றுவிட்டனர். ஓஸினாவுக்கு ரொட்டி கொடுக்க வந்த எட்டு வயதுச் சிறுவனையும் ஜெர்மானியர் சுட்டுக் கொன்றனர்.

ஜெர்மானியர்கள் வேறொரு கிராமத்தைச் சேர்ந்த காப்ளிக் என்ற துரோகியை இந்தக் கிராமத்தின் அதிகாரியாக நியமித்தனர். அவனது பிரதான வேலை கிராமமக்களிட மிருந்து உணவுப் பொருட்கள் வாங்கி ஜெர்மன் ராணுவத்துக்கு உணவளிப்பதுதான். வெளியிலிருந்த தானியம் முழுவதையும் அவர்கள் கொள்ளையடித்தனர். ஆனால் மக்கள் பூமிக்குள் புதைத்து வைத்துள்ள தானியங்களை ஜெர்மானியர்களின் கிராம அதிகாரியால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

வீடுவீடாய்த் தேடியும் அவர்களுக்கு ஒரு தானியமணி கூடக் கிடைக்க வில்லை. மேலும் ஒஸினாவுக்கு ரொட்டி தரப்போய் சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு வயதுச் சிறுவனின் மறைவுக்காக மக்கள் கண்ணீர் சிந்தினர். செம்படையில், கொரில்லாப் படையில் இருக்கும் தங்கள் கணவர்களும், புதல்வர்களும் வந்து இதற்கெல்லாம் பழிதீர்ப்பார்கள் என்று அவர்கள் உறுதியாய் நம்பினர். பெடோஸ்யா துன்பம் வந்த பின் அழக்கூடாது என்று பெண்களிடம் கூறினாள்.

ஜெர்மானியர்கள் துப்பாக்கி முனையில் வீடுவீடாய் சென்று பால், ரொட்டி, ஆடு, கோழி களைக் கேட்டனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. ஜெர்மன் தளபதி மூன்று நாள் கெடுவிதித்து அதற்குள் தங்களுக்குத் தேவையானதைத் தராவிட்டால் மரணம் நிச்சயம் என்று கிராம வாசிகளை மிரட்டினான். கிராம அதிகாரி காப்ளிக் வீடுவீடாய் சென்று மிரட்டினான்.

கிராமத்திலிருந்த முந்நூறு வீடுகளிலும் மக்கள் கஷ்டப்பட்டு, அழுது செஞ்சேனையின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். உள்ளூரில் சிறை வைக்கப் பட்டுள்ள ஜந்து செஞ்சேனை வீரர்களைக் காப்பதற்காவது அவர்கள் வந்தே தீருவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தனர். அன்று இரவு காப்ளிக் ராணுவ முகாமிலிருந்து தனியே தனது அறைக்கு வரும் போது பெண்கள் அவனைப் பிடித்து ஒரு வீட்டில் அடைத்தனர்.

அவன் மீது மக்கள் நீதிமன்றம் விசாரித்து மரண தண்டனை விதித்தது. வீட்டுக்குள்ளேயே அவனைத் தூக்கிலிட்டுக் கொன்று பனிக்கிணற்றில் புதைத்துவிட்டனர். ஜெர்மானியர்களுக்குத் துணைபோன அவனுக்குச் சரியான தண்டனையைப் பெண்கள் வழங்கிவிட்டனர்.

கேப்டன் வெர்னர் கூட்டுப் பண்ணையின் கணக்குப் புத்தங்களைத் துருவித்துருவி ஆய்வு செய்தான். தானியம், மாமிசம், கொழுப்பு ஸ்டாக் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தான். கணக்குப்படி இருப்பில் எதுவுமே இல்லை. கூட்டுப் பண்ணையைச் சேர்ந்த கால்நடைகளைக் கூட மக்கள் கிராமத்திற்கு வெளியே காட்டுக்குள் ஓட்டிவிட்டனர். ஒரு விமானம் பறந்து வருகிறது.

அது தங்களின் செம்படை விமானம் என்று கருதி கிராமம் முழுவதும் திரண்டு அண்ணாந்து பார்க்கிறது. அது அருகில் தாழப் பறந்தபோது அனைவரும் மண்டியிட்டு விமானத்தின் அடிப்பகுதியைப் பார்த்தனர். அதில் சிவப்பு நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருந்தது. தங்கள் விமானம்தான் பறக்கிறது என்ற கர்வமும் நம்பிக்கையும் கிராமப் பெண்களுக்கு ஏற்பட்டது.

கேப்டன் வெர்னர் அவனே நேரடியாக சிப்பாய்களோடு வீடுவீடாகப் புகுந்து கோழி அல்லது குஞ்சு கொடு என்று கேட்டான். ஊர் முழுக்கத் தேடியும் ஒரே ஒரு குஞ்சுதான் கிடைத்தது. அதைக்கூட அவர்கள் சுட்டு வீழ்த்தியதால்தான் கிடைத்தது. ஒரு வீட்டில் சினைப்பசு ஒன்று இருந்தது. அதை இழுத்துக்கொண்டு சென்றனர். பசுவின் எஜமானி பசுவின் பெயரைச் சொல்லி அதைப் பிரசவிக்கும்வரை விட்டுச் செல்லுமாறு கெஞ்சினாள்.

ஆனால் ஜெர்மானியர் அதை அடித்து இழுத்துச் சென்றுவிட்டனர். அவள் தன் அருமைப் பசுவின் வயிற்றைத் தடவிப் பார்க்க விரும்பினாள். பசு தனது எஜமானியைப் பெரிய கண்களால் பார்த்தது. பின்பு வருத்தத்தோடு தலைகுனிந்தவாறு சென்றது.

சிறைவைக்கப்பட்டிருந்த செம்படை வீரர்களை ஜெர்மானியர்கள் தெருவில் இழுத்து வந்தனர். பெண்கள் தெருவில் திரண்டனர். ஒரு செம்படைவீரன் நாங்கள் சாப்பிட்டு ஒரு வாரமாகிறது என்றான். வீட்டுக்குள்ளிருந்து ஒரு ரொட்டியை எடுத்துக்கொண்டு ஒரு பெண் அவர்களை நோக்கி ஓடினாள். ஜெர்மானியன் துப்பாக்கியால் அவளை அடித்து வீழ்த்தினான்.

ரொட்டியை எடுக்க ஓடிய செம்படை வீரனை சுட்டுக் கொன்றான். மற்றொரு வீரனையும் சுட்டுக் கொன்றான். பெண்கள் நெருக்கியடித்து வருவதைப் பார்த்து ஒரு செஞ்சேனை வீரன் “நாட்டு மக்களே! இதில் பயனில்லை. வீணில் உங்கள் உயிருக்கு ஆபத்தைத் தேடிக் கொள்கிறீர்கள். பயனில்லை, போய்விடுங்கள்” என்று உரத்த குரலில் கூறினான். சொந்த நாட்டில் அந்த வீரர்களுக்கு ஒரு வாய் உணவு கூடத் தர முடியவில்லை என்று அந்தத் தாய் அழுது புலம்பினாள்.

பின்பு பெண்கள் சேர்ந்து ஓட்ஸ்அப்பம் தயாரித்துச் சிறுவர் களிடம் கொடுத்தனர். நடந்து எங்கோ சிறை முகாமுக்குக் கொண்டு செல்லப்படும் அந்தச் செஞ்சேனை வீரர்களுக்குப் பின் தொடர்ந்து போய் கொடுத்து வரும்படி கூறினர். ஆனால் சிறுவர்கள் தோல்வியடைந்து அப்பங்களைத் திருப்பிக்கொண்டு வந்தனர். அனைவருக்கும் அது வருத்தமாக இருந்தது.

துயரத்தில் ஆழ்ந்திருந்த பெண்களைச் சாந்தப்படுத்த கிராமத்தில் எஞ்சியிருந்த ஒரு தாத்தா மெதுவான குரலில் பாடினார். அந்தப் பாட்டு உக்ரேன் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இந்தப் பாடல்.

“அந்தோ நீதியில்லை, உலகில் நீதியில்லை / அநீதி ஆளுகிறது அனைத்தையும் / அந்தோ நல்ல வாழ்க்கை வாழவேண்டி / நீதிக்கும் உரிமைக்கும் போராட வேண்டும் / அந்தோ நீதிக்கும் உரிமைக்கும் / போரிடும் வீரன் வாழ்த்தட்டும் கடவுள்.”

அந்த வயோதிகர் இப்பாடலைப் பாடியபோது துக்கமும் எழுச்சியும் ஒருசேர எழுந்தது.

இரவில் செம்படை வீரர்கள் கிராமத்திற்குள் வந்து விட்டார்கள். கிராமத்திலிருந்த ஜெர்மன் காரியாலயத்தின் மீது அவர்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.

தாய் நாட்டுக்கு ஜே, தோழர் ஸ்டாலினுக்கு ஜே! என்று முழக்கமிட்டவாறு சுடத் தொடங்கினர். ஜெர்மன் தளபதியும் வீரர்களும் காரியாலயம் இருந்த வீட்டைப் பூட்டி உள்ளே பதுங்கிக் கொண்டனர். பெஸ்சாரிக்கா செம்படை வீரர்களிடம் அந்த வீடு தன்னுடையதே என்றும், அதைத் தீயிட்டுக் கொளுத்து மாறும் கூறினார்.

தாய் நாட்டின் எதிரிகள் அழிக்கத் தனது வீடு எரிந்து அழிந்தால் பரவாயில்லை என்று அந்தத் தாய் கருதுகிறாள். ஆனால் செம்படை வீரர்களுக்கு வீட்டைக் கொளுத்த மனம் வரவில்லை. அவர்கள் ஜன்னல் வழியே எறிகுண்டுகளை எறிந்தனர்.

ஜெர்மானிய தளபதி புகையில் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தான். மாலாஷா என்ற பெண் துப்பாக்கியால் வெர்னரின் தலையில் அடித்தாள். அவனது தலை பிளந்து கீழே விழுந்தான். ஆனால் வெர்னரால் மாலாஷா சுட்டு வீழ்த்தப்பட்டாள். இறந்த பின்பும் அவள் கைகள் துப்பாக்கியை இறுகப் பற்றியிருந்தது. ஓடி ஒளிந்த ஜெர்மானியர்களைப் பெண்கள் படை தேடித் தேடி அழித்தது.

சிறைப் பிடித்தது. அந்தக் கிராமத்தையே அழித்த வெர்னர் ஒரு பெண்ணால் அடித்துக்கொல்லப்பட்டான். ஜெர்மானியர்கள் அழிந்து கிராமம் விடுதலை பெற்றது.

கிராம மக்கள் திரண்டு இறந்தவர்கள் அனைவரையும் மாதா கோவில் மைதானத்தில் புதைத்தனர். ஒரு மாத காலமாய் பனிக் கட்டிகள் மீது கிடந்த பிணங்களையும் அடக்கம் செய்தனர். அவர்கள் யாருமே அழாமல் கம்பீரமாய் நின்றனர்.

தாய் நாடு அவர்களை என்றும் மறக்காது என்று உணர்ச்சி பொங்க ஷாலோவ் கூறினான். கடைசியாக ஜெர்மானியர்கள் சுட்டுக்கொன்ற ஒரு தொட்டில் குழந்தையையும் அடக்கம் செய்தனர். குழியை மூடிய பின்பு தனது ஒரே மகனைப் பறிகொடுத்த மல்யுச்சிக்கா “வசந்தகாலத்தில் நாம் இந்தப் புதைமேட்டில் பூச்செடிகளை நடுவோம்” என்றாள். கணவனையும் மகனையும் போரில் இழந்த பெரோஸ்யா “அதில் பசும்புல்லையும் நடுவோம்” என்றாள்.

ஒரு விவசாயி தன்னிடமிருந்து ஒரே ஆட்டுக்குட்டியை வெட்டிச் சமைத்துச் செம்படை வீரர்களுக்கு விருந்து வைக்க முன்வந்தான். ஆனால் ஜெர்மானியர்கள் தின்றது போக மிஞ்சிய ஒரே ஆட்டுக் குட்டியை நாங்கள் தின்னமாட்டோம் என்று மறுத்துவிடுகிறார்கள்.

பெண்கள் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்த உப்பிட்ட பன்றி இறைச்சி, தேன், பூண்டு, சூரிய காந்தி விதைகளைத் தோண்டி எடுத்தனர். ஜெர்மானியர்களுக்குப் பயந்து புதைத்து வைக்கப்பட்டவை அல்ல. அவற்றைச் செம்படை வீரர்களுக்கு அளித்துப் பசியாற்றினார்கள். காயம்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை செய்ய ஊரே திரண்டு சேவை செய்தது.

எல்லாம் முடிந்தபின் கூட்டம் ஜெர்மானியர்களைக் கைதுசெய்து வைத்திருந்த இடத்துக்கு வருகிறது. தங்கள் குடும்பங்களை அழித்த அந்தக் கயவர்களை அழிக்கத்துடிக்கிறது. ஆனால் அவர்களைச் செஞ்சேனை தடுத்து விடுகிறது. “ஜெர்மன் ராணுவம் பின்வாங்கி ஓடுவதையும், பசியால் மடிவதையும் இவர்கள் பார்க்கட்டும். ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கொடுக்க நாதியில்லாமல் இவர்களது கூட்டாளிகள் சாக்கடையில் இறந்துகிடப்பதை இவர்கள் காணட்டும்.

இவர்களின் மனைவி சபிப்பதையும், குழந்தைகள் நிராகரிப் பதையும் கேட்க இவர்கள் உயிரோடு வாழட்டும். மரணம் வேண்டுமென்று இவர்கள் கெஞ்சட்டும்” என்றான் ஒரு செம்படை வீரன். கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கிய இந்தச் செஞ்சேனையைத் தவிர உலகின் எந்த ராணுவத்திடமும் இத்தகைய ஒழுக்கத்தையோ, மனிதாபிமானத்தையோ காணவே முடியாது.

தொடர்ந்து வெற்றிச் செய்திகள் அந்தக் கிராமத்தை நோக்கி வருகின்றன. பல கிராமங்களை ஜெர்மானியர் பிடியிலிருந்து செஞ்சேனை விடுதலை செய்துவிட்டது. அங்கிருந்த செம்படையை அடுத்த போர்க்களத்துக்குச் செல்ல மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துவிட்டது. தாங்கள் தயாரிக்கும் உணவை உண்டு விட்டுச் செல்லுமாறு வீரர்களை கிராமமே மன்றாடுகிறது. இன்னும் ஓரிரு நாட்கள் இருந்து உண்டு,

ஓய்வெடுத்துச் செல்லுமாறு வேண்டுகிறது. ஆனால் அவர்களோ “உங்கள் பாதுகாப்புக்கு வேறு வீரர்கள் வருவார்கள். அவர்களுக்கு உதவுங்கள். எங்களுக்காக ஜெர்மானியர்கள் காத்திருக்கிறார்கள்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டுவிட்டனர்.

செம்படை கிளம்பும்போது வானவில் பிறை வடிவத்தில் வானத்தில் பிரகாசித்தது.

ஒளிவீசும் பாதை, ரோஜா வர்ணத் தோடும், அழகிய ஊதா நிறத்தோடும், சூரியகாந்தியின் தங்க நிறத்தோடும், பூவரசு மரத்தின் புதுத்தளிரின் வர்ணத்தோடும் வானவில் சுடர் விட்டு எரிந்தது. ஒளிவீசும் நாடாவைப் போல வானவில் கிழக்கிலிருந்து மேற்குவரை நீண்டு கிடந்தது. அது மண்ணையும் விண்ணையும் இணைத்தது.

வானவில்லின் ஒளியில் செம்படை அணிவகுத்துச் செல்வதை கிராமவாசிகள் மறையும் வரை இமை கொட்டாமல் பார்த்து நின்றனர். அவர்களின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. நாவல் இத்துடன் முடிகிறது. அற்புதமான இந்த நாவல் வெளிவந்து அறுபதாண்டுகள் ஓடிவிட்டன. பாசிசத்தை எதிர்த்த போரில் சோவியத் குடியரசுகளின் மக்கள் ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடினர். பிடிவாதமாய் நின்று ஜெர்மானியை வென்றனர்.

ஒரு உக்ரேனிய கிராமத்தின் வீரகாவியம் இது. காலத்தால் அழியாது நிற்கிறது. அந்தக் காலத்தில் ஒரு நாவல் ஸ்டாலின் பரிசு பெறுவது சாமானிய விசயமல்ல. இந்நாவல் அப்பரிசைப் பெற்றுள்ளது. பாசிசத்தின் வேர்கள் பூமியில் இன்றும் பதித்து கிடக்கிறது. அது எப்போதும் தழைத்து வளரலாம். அப்போது இந்த நாவல் போராடும் மக்களை ஊக்கப்படுத்தும். படித்து உணர்ந்தால் மட்டுமே அது புரியும். தமிழாக்கிய நாதன் சகோதரர்களையும் மறக்க முடியாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com