Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் டிசம்பர் 2007

சிறுமி செடலும் சாமி செடலும்:
ப.பத்மினி

எழுத்தாளர் இமையம் அவர்கள் ஏப்ரல் 2006இல் எழுதிய ‘செடல்’ எனும் நாவலை வாசிக்கும் போது ஏற்பட்ட வாசிப்பு அனுபவத்தை முன்வைத்து இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.

இமையம் அவர்களின் ‘செடல்’ எனும் இந்நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்பாகம் வறட்சியில் வாடும் ஒரு கிராமத்தில், மழைவேண்டி கூத்தாடி சாதியைச் சார்ந்த ‘செடல்’ எனும் சிறுமிக்கு பொட்டுக் கட்டி விடுவதிலிருந்து தொடங்கி அவள் பூப்படைவது வரை முடிகிறது.

இரண்டாவது பாகம், வேற்றுக்கிராமத்தில் வாழ ஆரம்பிக்கும் செடல், தான் பிறந்த கூத்தாடி சாதியின் தொழிலான கூத்தாடியாக மாறி எட்டு ஊர்களுக்கும் மிகச்சிறந்த ஆட்டக்காரி என்று பெயரெடுப்பதில் முடிகிறது.

மூன்றாவது பாகம் அவள் பிறந்த கிராமத்திற்குத் திரும்ப வந்து எதிர்கொள்ளும் சிக்கல்களையும் இறுதியாக தன் அடையாளத்தை அவளாகத் தேர்ந்தெடுப்பதில் முடிகிறது.

1935-40களில் மழையின்றி வறட்சியால் ஏற்பட்ட பஞ்சத்தில் சிக்கிய ஒரு கிராமத்தைப் பின்புலமாக வைத்து இந்நாவல் தொடங்குகிறது. பஞ்சத்திற்குப் பரிகாரமாய் கிராமத்தில் பறத்தெருவிலுள்ள கூத்தாடி குடும்பத்தைச் சேர்ந்த பூவரும்பு மற்றும் கோபாலின் எட்டாவது பெண்ணான செடலை பொட்டுக்கட்டி விடுவது என்று பஞ்சாயத்துத் தலைவரான நடராஜபிள்ளை முன்மொழிகிறார்.

‘சாமி என்னிக்குமே சாவப் போறதில்லை. எம்மவளும் தாலியறுக்கப் போறதில்லை. சாமி செத்தாத்தானே தாலியறுக்க? எம்மவ நெற சுமங்கலிதான் சாவற முட்டும்...” (பக்.5) என்று தொடங்கும் வரிகளே காலங்காலமாய் எல்லாச் சமூகத்திலும் பொட்டு கட்டி விடப்பட்ட பெண்களை ஒடுக்க வீசப்பட்ட வரிகள். இங்கு பொட்டுக்கட்டி விடுதல் என்பது இயற்கையாக மிக எளிதில் ஒடுக்கக் கூடிய சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பறித்து கடவுளுக்கு அர்ப்பணிப்பது என்ற சடங்கை அடிப்படையாகக் கொண்டது. ஏழு அல்லது எட்டே வயதான செடலை பொட்டுக் கட்டிவிடும் யோசனைக்கு செடலின் தந்தை உணர்வுத் தளத்தில் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும்போது ஆண்டாண்டு கால மதநம்பிக்கையையும் சடங்கையும் முன்வைத்து அவரின் எதிர்ப்பு அடக்கப்படுகிறது.

இந்து மதத்தில் மதநம்பிக்கைகளைக் காட்டிலும் சடங்குகளே பிரதான இடம் வகிக்கின்றன. சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தகைய சடங்குகளில் மதநம்பிக்கைகளைக் காட்டிலும் சாதியப் படிநிலை அங்கீகாரமே மேலோங்கி நிற்கின்றது. இந்த அதிகாரமே அடிநிலை மக்கள் மீதும் பெண்கள் மீதும் சடங்குகளின் பேரால் எளிதாகத் தன் அதிகாரத்தைச் செலுத்துகிறது.

இந்தக் காரணங்களினாலேயே பறத்தெருவிலுள்ள எவரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கச் சந்தர்ப்பமும், சாத்தியமும் இல்லாமல் சிறுமியான செடலின் வாழ்க்கை பலிகொடுக்கப்படுகிறது. இந்த அதிகாரப்படுத்தலின் வன்மத்தை மறைக்க போலித்தனமான ஒரு ஒப்பந்தம் போடப்படுகின்றது. அதாவது செடலுக்கு எந்த எந்த ஊரார் அவளுக்குத் தேவையான உணவு, உடை அளித்து அவள் வாழ்க்கையைப் பாதுகாப்பார்கள் என்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்தமும் ஒரு சடங்குதான் என்பது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உயர்சாதிக்காரர்களுக்கும் தெரியும். குடியானவர்களுக்கும் தெரியும். ஏன், பறத்தெருக்காரர்களுக்கும் தெரியும்.

பொட்டுக்கட்டி விடுவதில் ஊரார் அனைவருக்கும் இருந்த முனைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சிறிதளவும் இல்லை. இந்த ஒப்பந்தமும் கூட பொட்டுக்கட்டி விடுதல் எனும் சடங்கின் ஒரு நீட்சியே எனலாம். பொட்டுக்கட்டி விடப்பட்ட சிறுமி செடல்-சாமி செடலாக மாற்றப்பட்டு துணைக்கு ஆதரவற்ற ஒரு கிழவியின் துணையோடு செல்லியம்மன் கோயிலுக்கு அருகாமையிலுள்ள ஊராரால் கட்டப்பட்ட ஒரு குடிசையில் தாய்தந்தையை விட்டுப் பிரித்து தங்க வைக்கப்படுகின்றாள். அதற்குப் பின்நடந்த பல்வேறு நிகழ்வுகளில்-பஞ்சத்தின் தொடர்ச்சி, செடலின் தாய்-தந்தை கண்டிக்குச் செல்லுதல் போன்றவை செடலைக் கிழவியோடு குடிசையில் நிரந்தரமாகத் தங்க வைக்க நேரிடுகின்றது.

ஊராரும், தர்மகர்த்தாவும், ஐயரும் சேர்ந்து சிறுமி செடல் என்கிற பெண்ணின் தேவைகளைக் காட்டிலும் ‘சாமிப்புள்ள செடல்’ என்ற தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்ணை பிரதானப்படுத்துகிறார்கள். சிறுமி செடல் சிறுவயதுப் பருவத்தையும், அதன் வாழ்க்கையையும் தொலைக்கின்றாள். நல்ல உணவு கிடைக்கப் பெறாத நேரத்தில் தனக்கு விதிக்கப்பட்ட ‘சாமிப்புள்ள’ என்ற எண்ணத்தோடு ஏதாவது ஒரு வீட்டுக்குச் சென்றால் சக வயது ஊர்ப்பிள்ளைகள் அவளை ‘சாமிப்புள்ள’ எங்காவது வீடு வீடாகப் பிச்சையெடுத்துத் தின்னுமா என்று கேலி பேசுகின்றனர்.

ஊருக்காக ஊரின் நன்மைக்காக பலியாக்கப்பட்ட சிறுமி செடலின் பசியைத் தீர்க்கவோ, வறுமையைத் தீர்க்கவோ ஊர்க்காரர்களோ, ஊர்ப்பெரியவர்களோ முன்வருவதில்லை. இருந்தும் பொட்டுக்கட்டி விடப்பட்டும் மழைபெய்யாததால் செடலை விரதமிருக்கச் சொல்கிறார்கள். விரதத்திற்கு வேண்டி அவளுக்குக் கொஞ்சம் வரகரிசியை இராமலிங்க ஐயர் தருகிறார்-செடலும் அறிவுறுத்தப்பட்டபடி ஒருவேளை வரகரிசிச் சோறு உண்டு விரதமிருக்கிறாள். இங்கு சடங்கைத் தொடரவே சாமிசெடலுக்கு வரகரிசி கொடுக்கப்படுகின்றதே யொழிய சிறுமி செடலின் பசிக்காக அல்ல. சிறுமி செடல் என்ற சாதாரணப் பெண்ணின் அடிப்படைத் தேவையான பசியை நிவர்த்தி செய்ய யாரும் தயாராயில்லை.

ஆனால் சாமி செடலுக்காக எதையும் செய்ய ஊர் தயாராயிருந்தது. சிறுமி செடலும் கூட இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் நல்ல உணவு உண்ண வேண்டும் என்ற ஆசை வந்தாலும், பசியெடுத்தாலும் கூட தன்னைச் சாமியாக்கியவர்கள் வீட்டின் முன்போ, உறவினர்கள் முன்போ போய் அவள் நிற்கவில்லை. ஆனால் பறத்தெருவுக்குப் போக ஆர்வம் கொள்கிறாள். ஏனெனில் பறத்தெருவுக்குப் போனால் மட்டுமே வீட்டுவாசலில் சாப்பிடும் யாராவது ஓரிருவர் இவளை அழைத்து இரண்டு வாய் கொடுப்பார்கள். பறத்தெருவில் மட்டும் சாத்தியப்படும் சூழ்நிலைகளில் சிறுமி செடலின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

சிலசமயம் நல்ல உணவு வகைகளைச் சமைத்துக் கொண்டிருக்கும் வீட்டில் இருக்கும் பிள்ளைகளை விளையாட அழைக்கும்போது சிலநேரங்களில் உணவும், பல நேரங்களில் வசவும் கிடைக்கும். சில நேரங்களில் ‘நான் சாமிப்புள்ள’ என்று சொல்லி வேண்டியதை சாதித்துக் கொள்ளவும் முயலுகின்றாள். இந்த முயற்சி சிலசமயம் வெற்றியாகவும், பல சமயங்களில் தோல்வியாகவும் முடிகிறது.

சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட முயற்சிசெய்யும் போது “நீ எதுக்கு இங்க வர்ற? நீ எங்க சேத்தாளி இல்ல போ. ஒங்கூட இனிமே சேரமாட்டோம். பொட்டுக்கட்டி விட்டவுங்க கூட, கூத்தாடி சாதிக்காரி கூட சேந்தா எங்கம்மா திட்டும். தஞ்சாவூரு தாசி., கும்பகோணத்து வேசி, சீரங்கத்து தேவிடியா” (செடல்-பக்.93) என்று ஒதுக்கப்படுகின்றாள். மற்றொரு சமயத்தில் இலுப்பைத் தோப்பில் இவள் இலுப்பங் கொட்டையைப் பொறுக்கியதற்குத் தண்டனையாக தோப்புக் காரனிடம் நூறு தோப்புக்கரணம் போடுகிறாள். குடித்தெருப் பெண் இவள் சாதிப் பெயரைச் சொல்லி, கீழ்த்தரமாகத் திட்டுகிறாள்!

செடல் சாதாரணப் பெண்ணா, சாமியா என்று தேவைக்கு ஏற்றாற்போல வெளிப்படுத்தும் உரிமை செடலுக்குக் கிடையாது. ஆனால் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள், அவர்கள் வசதிக்கேற்ப செடலைப் பார்க்கின்றனர். செடலை ‘செடல்’ என இயல்பாகப் பார்த்து அவள்மீது இரக்கம் செலுத்தும் ஒரே பெண் மீனாட்சிதான். இவள் பறத்தெருவைச் சேர்ந்தவள்.

செடலுக்குத் துணையாக இருக்கும் கிழவி செடலின் ‘சாமித்தன்மை’ காப்பாற்றப்படும் வரையே தன்வாழ்க்கையும் ஓரளவாவது ஓடும் என்று நம்பிக்கொண்டிருப்பவள். அவளுக்குச் சிறுமி செடலின் வாழ்க்கையை விட சாமி செடலின் மூலமாக பெற்றுக்கொள்ளும் ஆதாயமே முக்கியமாகப்படுகின்றது. செடலின் வாழ்க்கை ‘சிறுமி-சாமி’ எனும் அடையாளக் குழப்பங்களுக்கு இடையே செடலின் வாழ்க்கை சிக்கிக் கொள்கிறது.

பொட்டுக்கட்டி இரண்டாண்டுகளுக்குப் பின்புதான் ஊரில் மழைபெய்கின்றது. சாமி செடலின் விரதத்தால்தான் மழை பெய்தது என்ற நம்பிக்கை ஊர்முழுக்கப் பரவுகின்றது. சாமி செடலின் மவுசு கூடுகிறது. இதற்குப் பிறகு பறத்தெருவில் யாருக்கு என்ன உடம்பு சரியில்லை என்றாலும் மந்திரிக்கவோ. பச்சிலைச் சாறு பிழியவோ, திருநீற்றை நெற்றியில் பூசவோ பொதுவாக அய்யரிடம் ஓடுபவர்கள், அய்யர் ஊரிலில்லை என்றால் செடலை நோக்கித்தான் வந்தார்கள். அய்யரை விட செடலுக்குத்தான் கைராசி என்று ஊருக்குள்ளும் பேசிக் கொண்டார்கள்.

அவளுக்குத் துணையாயிருக்கும் கிழவி ‘மழை பெய்து விட்டது. இனி எல்லாமும்’ சரியாகிவிடும். தங்கம் போல இவளைப் பல ஊரார்களும் ஊட்டி வளர்ப்பார்கள். வரும் தைமாதத்தில் திருவிழா சமயத்தில் செல்லியம்மன் சாமி தூக்கும் எல்லா ஊர்களிலும் தாலாட்டு பாடக் கூப்பிடுவார்கள். அப்படிப் போகும்போது எல்லா ஊர்களிலும் படி வாங்கி விடலாம். எந்த ஊராக இருந்தாலும் பதினெட்டு நாள் திருவிழா நடக்கும். அத்தனை நாட்களும் மூன்று வேளையும் நெல் அரிசிச் சோறு சாப்பிடலாம்.

இடுப்புக்குக் கட்டிக் கொள்ள மஞ்சள் துணி தவறாமல் தருவார்கள். கோயிலுக்கு வருபவர்களிடம் நயமாகப் பேச வேண்டும். “அம்மனுக்குப் பொங்கல் வைக்க, காவு கொடுக்க சிறப்புக் கொடுக்கச் செல்ல வேண்டும். யாருடைய கையில் எது இருந்தாலும் கூச்சமற்றுக் கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டும்” என்று அறிவுறுத்துகின்றாள்.

மேலும் கூத்தாடி சாதியில் பிறந்தவளாக இருந்தாலும் இவள் ஒருத்திதான் சுத்துப்பட்டு கிராமத்திற்கெல்லாம் பிறந்த ஒரே பெண்மாதிரி என்றும் இவளுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு என்றும் கிழவி சாமி செடலின் உரிமையைச் செடலுக்குப் புரிய வைக்கிறாள்.

ஊரில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும் சாமி செடலுக்கு ஆள்வந்து விடும். முதல் சொட்டு எண்ணெய் உள்நாக்கில் வைத்தால்தான் நோய் வராது. வயிற்றுப்போக்கு, வாந்திபேதி இருக்காது என்று செடல்சாமி நம்பவைக்கப் படுகின்றாள்.

ஊரில் எந்தக் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றாலும் செல்லியம்மன் கோயிலுக்குத் தூக்கி வந்து விடுவார்கள். பிள்ளைகள் என்றில்லை. விதைக்கிற தானியங்களைக் கூட செடலின் கையில் கொடுத்து படைக்கச் சொல்லி வாங்கிக் கொண்டு போனார்கள். செடல்சாமியின் கைபட்டால் போதும் என்ற நம்பிக்கை. ஊர் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் செடல்சாமி எவரையும் முகம்மறித்துப் பேசமாட்டாள். வருபவர்கள் ஒன்றும் தராவிட்டாலும் அவர்களிடம் சண்டைக்குப் போகமாட்டாள்.

செடல்சாமியை முன்னிறுத்தி தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் சிறுமி செடலுக்கு இல்லையா? அல்லது அப்படிச் செய்வது சாமி செடலுக்கு இழுக்கு என்று நினைத்தாளா? தெரியவில்லை. எனினும் சாமி செடலுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளைச் சிறுமி செடல் எக்காரணம் கொண்டும் மீறாமல் இருந்தாள். மூங்கில் பின்னுகிற தொம்பர் கூட்டத்தைச் சார்ந்த தொம்பக் கிழவி கிழங்கு கொடுக்க இவள் அதை வாங்க மறுக்கிறாள்.

காலையிலிருந்து ஏதும் சாப்பிடாததால் வயிறு கிடந்தாலும் இருக்கிற பசிக்கு ஒரு தூக்குக் கிழங்கைக் கூடத் தின்றுவிடலாம் என்று நினைத்தாலும் தொம்பக் கிழவியிடமிருந்து வாங்கி சாப்பிட்டால் தீட்டு ஒட்டிக்கொண்டதாக நையாண்டி செய்வார்களென்னு புனைவுக் கருத்தாக்கங்களிலிருந்து சிறுமி செடலாகவோ அல்லது சாமி செடலாகவோ இருந்து மீற முடியவில்லை.

சிறுமி செடலாக இருந்தாலும், சாமி செடலாக இருந்தாலும் பசிதீர்க்க அவள் போராடத்தான் வேண்டியிருந்தது. சாமி செடலாக அவள் மாறும் போதும் அதற்கான முழு உழைப்பும் அவளிடமிருந்து பெறப்படுகின்றது. எந்த ஊருக்குப் பள்ளுப்பாட்டுப் பாடப் போனாலும் செடலுக்குச் சேர்த்துத் தான் காப்புக் கட்டுவார்கள். விடிகாலையில் பள்ளுப்பாடி அம்மனைத் துயிலெழுப்ப ஆரம்பித்தால் மீண்டும் அவள் குளித்துவிட்டுச் சாப்பிடும்போது வெள்ளி முளைத்துவிடும்.

பாடல்களைச் சத்தமாகப் பாடிப்பாடி தொண்டைச் சதை கழன்றுவிடும். காப்பறுப்பது வரை செடலுக்கு ஓய்வு ஒழிச்சல் கிடையாது. காப்பறுத்து முடித்ததும் நடராஜபிள்ளை வீட்டில் சம்பந்தி விருந்து நடக்கும். அந்த விருந்தில் கூட சாமி செடலுக்கு மாட்டுக்கொட்டகையில்தான் சோறு போடப்பட்டது. காப்பறுப்பது முன்பு வரை சாமி செடலாக இருந்தவள் காப்பறுத்தவுடன் சிறுமிசெடலாக, சாதாரண செடலாகக் கூத்தாடி செடலாக மாற்றம் பெறுகிறாள்.

இந்த ஒருவேளை உணவை மாட்டுக் கொட்டகையில் உண்பதற்குத் தான் சிறுமி செடலின் வாழ்க்கை பறிக்கப்பட்டதா? இவள் வாழ்க்கை உதாசீனப்படுத்தப்படுவதின் உச்சக்கட்டம்-நாவலின் முதற்பாகத்தின் இறுதியில் வெளிப்படுவது நம்மை நிலை குலையச் செய்கிறது.

தொடர்ந்து பலத்த மழை பெய்துகொண்டிருக்கும் ஒருநாளில் சிறுமி செடல் பூப்படைகின்றாள். பருவ மெய்தியிருக்கிறோம் என்று அவள் அறிந்த மாத்திரத்தில் அவளுடைய மனதில் முதலில் தோன்றிய எண்ணம் கோயிலுக்கோ அல்லது கோயில் அருகோ போகக்கூடாது என்பது மட்டுமே.

கொட்டும் மழையில் எங்கு ஒதுங்குவது என்று புரியவில்லை. தாய் தந்தை இல்லை. தன்னை ஆயிரம் திட்டினாலும் தன்னோடிருந்த கிழவியும் இல்லை. அவளும் இறந்து விட்டாள். செடல், முதலில் பறத்தெருவிலுள்ள தங்கள் உறவினர்கள் வீட்டுக்குச் செல்கிறாள். அவர்களோ வெளியூர் சென்றிருக்கின்றனர். வீடு பூட்டிக் கிடக்கிறது. அடுத்து ஐயர் மற்றும் தர்மகத்தா வீட்டுக்குச் செல்கிறாள் அவர்களும் வீட்டில் இல்லை என்றதும் திரும்பி வருகிறாள். சற்றுநேரம் என்ன செய்வதென்று புரியாமல் அலைந்தபின் மீண்டும் தர்மகர்த்தா வீட்டிற்குச் செல்கிறாள்.

அவரோ விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனடியாக அய்யரைப் பார்க்கச் சொல்லிவிட்டு. மழையில் நனைந்துகொண்டிருக்கும் ஆட்டைத் திண்ணைக்கு இழுத்துச் செல்கிறார். அய்யர் வீட்டுக்குச் சென்ற செடல் பெருந்தயக்கத்திற்குப் பிறகு தான் பூப்படைந்த செய்தியைத் தயங்கித் தயங்கிச் சொல்கிறாள். அய்யரோ இவளைக் கோயில்பக்கம் போய்விடாதே என்றும், இதைச் சாக்காக வைத்து சாதிசனத்தோடு சேர்ந்துகொள் என்றும் அறிவுரை கூறுகிறார். எதிரே தென்படும் சனங்களோ இவள் பூப்படைந்ததை அறியாமல்கோயில் வீட்டுக்கு ஓடு என்று கூறுகின்றனர்.

செடல்-சாமி செடலாக மாறிய பின்-பெருமழை வந்தபோது ஊர் மெச்சியதையும், சாதாரண சிறுமி செடல் தன்னை அனைவரும் கைவிடுவதை உணர்ந்து. ஊர்மக்கள் மீது நம்பிக்கை இழக்கிறாள். ஆடுமாடு கூட நனையாமல் அதை வீட்டுக்குள் அழைத்துக் கொள்பவர்கள் தன்னைப் புறக்கணிப்பதைச் செடலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. செடல் முடிவு எடுக்கிறாள். கோயிலுக்குச் சென்று கணுக்கால் அளவு தேங்கியிருக்கும் நீரில் சாமி முன் விழுந்து தன் குடிசைக்குள் செல்கிறாள். ஆடைகளைப் பிழிந்து அணிந்து கொள்வதோடு தரையில் படிந்திருக்கும் இரத்தக் கறைகளைக் காலால் தேய்த்துவிடுகிறாள். செடலின் இந்தச் செயலை நாம் எப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளப் போகிறோம்?

செடலின் இந்தச் செயலுக்கான அவளின் அடிப்படை மன அமைப்பில் இரண்டு உதாரணங்களை நாம் சொல்ல முடியும். முதலில் பொட்டுக் கட்டிய பின் தன் தாய் தந்தை யரிடமிருந்து பிரிக்கப்பட்ட கோபத்தால் தன் கழுத்தில் தொங்கும் பொட்டை அரிவாள் மனையில் அறுக்கப் போகிறாள்.

இரண்டாவது ஒரு தாய் தன் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று இவளிடம் அழைத்துக் கொண்டு வர, இவள் திருநீறு பூசியபின் செடல் அந்தத் தாய்க்கு, நாளைக்குள் குழந்தைக்கு உடம்பு சரியாகவில்லை என்றால் அய்யரிடம் போவதைக் காட்டிலும், ஊருக்குள் புதிதாக வந்திருக்கும் பாதிரியாரிடம் சென்றால் மருந்து கொடுப்பார் என்று இரகசியமாகச் சொல்கிறாள்.

சாமி செடலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை விட சிறுமி செடல் மீதே இவளுக்கு நம்பிக்கை உள்ளது. மேற்கண்ட நிகழ்வுகள், சாமி செடலின் மீது உள்ள வெறுப்பின் வெளிப்பாடாகவே சிறுமி செடல் வழியாக வெளிப்படுகிறது எனலாம். மேலும் நடைமுறைக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான முரண் இங்கு வெளிப்படுகின்றது. தீட்டுப்பட்டால் கோயிலுக்குப் போகக்கூடாது என்பது நம்பிக்கை. ஆனால் வேறு வழியில்லை அங்குதான் போக முடியும் என்பது நடைமுறை. இங்கு நம்பிக்கையைக் காட்டிலும் நடைமுறை மீறிச் செயல்படுகிறது. அதேபோல் இவள் திருநீறு பூசியதும் உடல்நிலை சரியாகிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் நடைமுறையில் அது உண்மையல்ல என்று உணரும்போது மாத்திரை சாப்பிடப் பாதிரியாரிடம் செல் என்று சாமி செடலே கூறுகிறாள்.

செடல் பூப்படைந்த பின் கோயில் வீட்டுக்குச் சென்று, கோயில் புனிதத்தைக் கெடுத்ததற்காக சாமியிடம் தான் மன்னிப்புக் கோருகிறாளேயொழிய ஊர்மக்களின் விதிமுறைகளை அவள் சட்டை செய்யவில்லை. செடல் ஒதுங்கிய கோயில் குடிசையும் கூட அந்தப் பெருமழையில் இடிந்துவிடுகிறது. செடல்-இனி ‘செடல்’ என்கிற தன் தனியிருப்பைப் பற்றி எவரும் அக்கறை காட்டப்போவதில்லை என்று உணர்கிறாள்.

சிறுமி செடல் மீது மட்டுமல்ல, சாமி செடல் மீதும் இந்த ஊருக்கு அக்கறையில்லை என்று தீர்மானித்து ஊரைவிட்டு வெளியேறி பெருவெள்ளம் போகும் ஆற்றில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணுகிறாள். அப்போது அந்த வழியே வரும் செடலின் தூரத்து உறவினரான பொன்னன் செடல் என்ற சாதாரணப் பெண்ணுக்கு இரக்கம் கொண்டு அவளைத் தன்னுடன் வந்து விடுமாறு அழைக்கின்றான்.

பொன்னன் பலமுறை வேண்டியும் இவள் பதிலளிக்கவில்லை. பல கேள்விகள் கேட்டும் இவளுடைய பதில்கள் எல்லாமே மௌனங்களாகவே இருந்தன. இந்த மௌனங்களை நாம் எப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளப் போகிறோம்?

செடல்-சிறுமி/சாமி என்ற இரண்டு நிலையிலுமே தன் சொந்த ஊரால் புறக்கணிக்கப்பட்டாள். அவளைப் பொறுத்த மட்டில் சிறுமியின் தேவைகளும்/சாமியின் தேவைகளும் ஒன்றுதான். சாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண் என்றுமே ‘தாலி அறுக்க மாட்டாள்’ என்று பெருமை பேசிய இந்த ஊர்தான் செடல் சாமியைச் சுமந்த, சிறுமி செடலையும் புறக்கணித்தது. ஆனால் அதே சமயத்தில் அவளுடைய கூத்தாடி சாதியைச் சார்ந்த பொன்னனோ அவளைச் சாமி செடலாகப் பார்க்கவில்லை. செடலுக்கும் அது புரிகிறது.

செடல், சாமிக்காகப் படைக்கப்பட்ட தன்னைச் சாமியாகத்தான் பார்க்கப்பட வேண்டும் என்று நினைத்தாளா? எனினும் செடல் பொன்னனுடன் செல்லத் தீர்மானித்தவுடன் சாமி செடலைப் புறக்கணித்து சாதாரண செடலாகத் தான் அவனுடன் செல்கிறாள்.

இங்கு ஒரு வேளை பொன்னன் வராமலிருந்தால் செடலின் கதி என்ன என்னும் கேள்வி எழுகிறது. செடல் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும். அப்படி நடந்திருக்குமாயின் சடங்குகள் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த இந்த மனங்கள் எவ்விதத்திலும் குற்றவுணர்வுக்கோ, அவமானத்திற்கோ உள்ளாகியிருக்காது என்பதை நிச்சமாகச் சொல்ல முடியும். இந்த மரணத்திற்கான பொறுப்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு மிகச் சுலபமாக வேறொரு சடங்கை முன்னிறுத்தியிருப்பார்கள்.

எனினும் செடல்-தான் புறக்கணிக்கப்பட்ட பிறகு எடுத்த முடிவுகள் அதிகாரத்திற்கு எதிரான கலக முடிவுகளே. ஆதரவற்ற நிலையில் கோயில் குடிசைக்குள் சென்றதும், பொன்னனோடு ஊரைவிட்டுப் போவதும் இவளுக்குப் பொட்டுக்கட்டிய அதிகாரத்திற்கெதிரான கலகங்களாகவே பார்க்க முடியும்.

சிறுமியான செடலுக்குத் தன்னுடலையும் சாமி செடலின் உடலையும் பிரித்துப் பார்க்கும் பக்குவம் இல்லாமல் போனது. ஆனால் இவளைத்தவிர எல்லோரும் இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்கும் பக்குவத்தை அறிந்திருந்தனர்.

சாமி செடல் ஊரின் நன்மைக்கானவள். சிறுமி செடல் கூத்தாடிச்சி ஊருக்குப் பாரமானவள். இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை செடல் உ™ரும்போது அவள் தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் தளத்திற்குப் போகிறாள். இந்தத் தீர்மானம் எடுக்க செடலுக்கு உதவுவது, முதற்பாகத்தில்

அறிமுகமாகும் லட்சுமி எனும் கூத்தாடிச்சி. இவள் செடலுக்கு தான் எவ்வாறு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறேன் என்று கூறுகிறாள். தன்னைச் சுற்றிலும் இருக்கிற பாலியல் சார்ந்த சீண்டல்களைச் சமாளித்து, அதே நேரத்தில் தனது உடலையே மூலதனமாக வைத்துத் தன் வாழ்க்கை எவ்வாறு நகர்கிறது என்று கூறுகின்றாள்.

“நான் யாருக்கும் மசியமாட்டன். சிரிச்சே கடுக்கா கொடுத்திடுவன். ரொம்ப மீறுனா இப்பத்தான் தூரம் பட்டுச்சின்னு சொல்லிடுவன். ஆனாஆளச் சும்மாவுடமாட்டன். பகடரு வாங்கணும், மைபொட்டு வாங்கணும், ரிப்பனு வாங்கணும், சீலத்துணி வாங்கணுமின்னு காசியக் கறந்துடுவன்’.... (செடல்-பக். 78) என்று கூறுகிறவள் தன் உடலையே தனக்கான மூலதனமாகவும் வன்மை வாய்ந்த ஆயுதமாகவும் கொள்கிறாள்.

“பள்ளுப்பாடிப் போற எடத்திலே சிரிச்ச மொகமா இருக்கணும். கோவக் குறியே மொவத்திலே இருக்கக் கூடாது. இடிச்சாலும், கிள்ளுனாலும் சிரிக்கணும். சீர்கொடுக்கிறப்ப கனமா கேக்கணும். படிவாங்க வூடுவூடாப் போவும் போது ஆம்பளகிட்டெதான் பேசணும். சிரிக்கணும். சிரிச்சிப்பேசியே சரக்க எறக்கணும். ஓரக்கண்ணால பாக்கணும் ஒதட்டே கடிக்கணும். சடயத்தூக்கி முன்னாலெ பொட்டுக்கணும். தலசீவாம, பகடரு போடாம ஒரு வேளை கூட இருக்கக்கூடாது. எதை எப்படி செஞ்சாலும், நம்பப் பண்டத்தை மட்டும் காட்டக் கூடாது” (செடல்-பக். 79)

கூத்தாடிச்சி லட்சுமியின் இந்த உத்தியைத்தான் செடலும் இரண்டாம் பாகத்தில்தான் கூத்தாடிச்சியாக மாறும்போது பின்பற்றுகிறாள். சாமி செடலாக உருமாறுவதா அல்லது கூத்தாடிச்சி செடலாக வாழ்வதா எனும் நிலையில் வாழ்க்கையைத் தன் விருப்பப்படி வாழும் தீர்மானத்திற்கு உறுதியாய் அவளை நிற்க வைத்தவள் மற்றொரு கூத்தாடிச்சியான பாஞ்சாலி.

சாமி செடலாக இருந்து உடலின் தேவைகளை அது என்னவென்று தெரிந்துகொள்ளாமலேயே அதனுடைய பயனை அறிந்துகொள்ளாமலேயே சவம் போலவா வைத்திருப்பது என்ற கேள்வியைத்தனக்குள் எழுப்பும் செடல், ‘செடல் என்பது தன் உடம்புதான். கர்ப்பப்பை உடலின்தாகம், பெருந்தீ என்றைக்குமே அணையாதது. தன்னுடைய உடலின் தேவையும், உலகமும் பிறர் அறிய முடியாத ஒன்று. உடம்பு நிஜம். அதன் தாகம் நிஜம். தேங்கியிருக்கும் நீர் விஷமாகிவிடும்.

உடம்பைப் பிணத்தைப் போல் வைத்திருப்பதோ, அதனுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதோ முடியாத காரியம்” (செடல்-பக். 266) என்பதைச் செடல் உணர்கிறாள் எனினும் இதுவரை அவளுடைய உடலைக் கொண்டாளவும், கொண்டாடவும் வெளிச்சத்தில் எவன் வந்திருக்கிறான்? எனும் கேள்வியும் அவளுள் துக்கமாய்ப் பீறிடுகிறது. இதுதான் மக்கட்தொகை கணக்கெடுப்பு செய்ய வருபவனிடம் சலிப்பாய் ஊற்றுகிறது.

‘பேரு சொல்லுங்க’

‘செடலு’

‘அவரு பேரு’

‘யாரு?’

‘வூட்டுக்காரரு பேரு?’

‘ஓம் பேரயே எயிதிக்க’

‘என்னாம்மா இது?’

‘நான்தான் சொல்றன், ஓம்பேரயே எயிதிக்க’

‘அப்படியொருத்தன் இருந்தாத்தான சாவறதுக்கு பொட்டுக்கட்டி வுட்டவளுக்குப் பிரிசனா இருக்க இந்த ஒலகத்தில எந்த ஆம்பள இருக்கான்? மீச வச்ச ஆம்பள?’

‘ஒங்கச் சாதியிலயுமா இந்த மாரி செய்யுறாங்க?’

‘பொட்டச்சின்னா எந்த சாதியா இருந்தாலும் ஒண்ணுதான். தொக்குத்தான்’ (செடல்-பக். 244) சமூகத்தில் பெண்ணுக்கான எந்த மதிப்பீடுமற்று, அனைத்துச் சமூகப் பெண்களுமிருக்கும் நிலையில் பொட்டுக் கட்டிய பெண்ணின் நிலை சமூகத்தில் ‘தொக்காக’ இருப்பதும் வருத்தும் உண்மையே. இந்த உண்மையின் வலிதான் அவளைக் கூத்தாடிச்சியாக நிலைகொள்ள வைக்கின்றது.

மூன்றாவது பாகத்தில் இடம் பெறும் பாஞ்சாலி எனும் கூத்தாடிச்சியே, பொட்டுக்கட்டி விடுதலின் வரலாற்றையும் அதன் அரசியலையும் செடலுக்குப் புரிய வைக்கிறாள். லட்சுமி எனும் கூத்தாடிச்சி உடலை வைத்து எவ்வாறு தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் என்கிறாள். ஆனால் பாஞ்சாலியோ அதே உடலைக் கலைக்காகப் பயன்படுத்தி எவ்வாறு வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்கிறாள்.

சிறுமி செடல்-சாமி செடலைப் புறக்கணிக்கின்றாள். சாதாரணப் பெண் செடல்-கூத்தாடிச்சி செடலாகத் தன்னை அடையாளம் காண்பதில் நிறைவடைந்து நிற்கின்றாள். ஒடுக்கப்பட்ட சமூகமும் ஒடுக்கப்பட்ட பெண்களும் காலங்காலமாக, ஆரவாரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி தங்கள் கலகத்தை அதிர்வுகளோடு தம் மௌனங்களின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகின்றனர். இப்படைப்பின் மூலம் ‘இமையம் அவர்களும் ஆரவாரமின்றி, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மௌனங்களின் வழி கலகக்குரலை அழகியலுடன் வெளிப்படுத்தியுள்ளர்.

(சென்னை வளர்ச்சி நிறுவனத்தில் 22-9-2007 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது.)

செடல்
ஆசிரியர் : இமையம், விலை : ரூ. 250, வெளியீடு : க்ரியா,
H - 18, மனை எண்.3, சவுத் அவென்யூ, திருவான்மியூர், சென்னை - 41.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com