Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2007

ஒரு பெண்ணியப் போராளியின் இளமைப் பருவம்
இ.நந்தமிழ் நங்கை

ஒரு பெண்ணின் சுயசரிதையில் எவை குறிப்பிடப்பட வேண்டியவை, எவை மறைக்கப்பட வேண்டியவை என்ற சுய தணிக்கைகளுக்கு உட்பட்டே உண்மைவரலாறாகச் ‘சுயசரிதம்’ இருக்கவேண்டிய சூழல் நிலவும் இச்சமூகத்தில் ‘சுயசரிதத்தின் அரசியல் என்ன?’என்பதை ஆராயவேண்டிய தேவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஒரு பெண் தன்னுடைய சுயசரிதத்தை எழுதுவதில் எவ்வித நேர்மையையும் பின்பற்றத் தேவையில்லை என்பதையே இது வரையிலான வரலாறு நமக்குப் போதித்துள்ளது.

அச்சரிதத்தில் எவ்வளவு பூடகமாக, தன்னைச் சார்ந்த அனைவரையும் ஒரு பெரிய ஒளிவட்டத்திற்கு முன்னால் நிறுத்தியிருந்தால் அதற்கான வரவேற்பு என்பது தனி. தன் சுயத்தை விட்டுக் கொடுக்காமல் இலக்கியச் சமூகத்தில் தமக்கென மொழியை உருவாக்கி அதனுள் தீவிரமாகச் செயல்படும் பெண்களில் எத்தனைபேர் சுய தணிக்கையைப் பொருட்படுத்தாது உள்ளவாறே செயல்பட முடியும்? அவ்வாறு செயல்படுபவர்கள் கொடுக்க வேண்டிய விலை அதிகம்தான்.

இவ்வகையில், தஸ்லிமா நஸ்ரீனின் எழுத்துக்கள் ‘ஒரு சுயசரிதை’ என்ற தன்மையில் அவர்தம் சமூகத்தில் நிலவும் மத அடிப்படை வாதத்தையும், இன வாதத்தையும் எதிர்க்கிறது. ஒரு பெண் என்கிற நிலையில் அவளின் அறிவு மதக்கட்டுப்பாடுகளினால் மழுங்கடிக்கப்பட்டு, விலங்கிலிருந்து மனிதன் வேறுபடும் புள்ளியான ‘சிந்தித்தல்’ திறனையே அடக்குவதை அவருடைய சுயசரிதம் விளக்குகிறது.

“ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்” என்று சிமென்-டி-பௌவா (Simone de Beauvoir) தன்னுடைய இரண்டாம் பாலியம் (The Second Sex-1949) நூலில் குறிப்பிடுவார். எல்லாச் சமூகங்களிலும் பெண்ணின் நிலை இத்தகையதே. இஸ்லாமிய பின்புலத்தைச் சார்ந்த தஸ்லிமா வளர்க்கப்பட்ட விதமும் வீட்டில், சமூகத்தில், எல்லா இடங்களில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் ‘ஒரு பெண்ணாக’ இருப்பதன் வலியை உணர்த்தின.

குழந்தைப் பருவத்தின் கனவுகள் ஆகாயம் வரை விரிந்து செல்பவை; காரண காரியங்களைப் புரிந்துகொள்ள முயல்பவை, தேடுபவை. நாள்தோறும் பார்க்கக் கிடைத்தவற்றிலும், கேட்பவற்றிலும் கேள்விகளை அடுக்கிக் கொண்டே விடை காண முயல்வார்கள் குழந்தைகள். அவ்விளம்பருவம் கடந்தபிறகும் முள்ளாய் உறுத்திக்கொண்டிருக்கும் சந்தேகங்களும் கேள்விகளும் சமுதாயக் கட்டமைப்பின் சறுக்கலில் அப்படியே விடைகாண முடியாதவாறு உள்ளன.

அதனை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள், குறிப்பாகப் பெண்களாக இருந்தால் ‘அவர்கள் விலக்கிவைக்கப்பட வேண்டியவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சமூகத்தில் வாழவே அருகதையற்றவர்கள்.’ கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி ஹைதராபாத் மையப்பகுதியிலுள்ள ஒரு அரங்கில் தஸ்லிமா நஸ்ரீன் மதவாதிகளால் (சட்டமன்ற உறுப்பினர்கள்) தாக்கப்பட்ட சம்பவம் மேற்குறிப்பிட்ட நிலைக்குச் சான்று.

பங்களா தேஷ் ‘மைமன் சிங்’கில் பிறந்த தஸ்லிமா அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். கவிஞராக, நாவலாசிரியராக, பெண்ணியவாதியாக, மனிதாபிமானியாக அறியப்பட்டவர். ஆரம்பத்தில் இலக்கிய நயத்தோடு அழகியல் பூர்வமாக இருந்த எழுத்துக்கள் போகப்போகக் காத்திரம் நிறைந்தவையாக மாற்றம் பெற்றன.

முன்னர் இருந்த தன்மையிலேயே தங்கிவிட்டிருந்தால் தஸ்லிமாவும் சமூகத்தில் கிரீடங்கள் சூட்டப்பெற்று எல்லா வசதிகளையும் பெற்றவராக, சமூகத்தோடும், மதத்தோடும் சமரசம் கொண்ட ஒரு எழுத்தாளராக இருந்திருப்பார். இவரைப் போன்று பிரச்சனைக்குரிய சமகால ஆண் இலக்கியவாதிகளில் சிலர் இந்தளவுக்கு எதிர்ப்புகளையும் மிரட்டல்களையும் சந்தித்திருப்பார்களா என்பது சந்தேகமே. இவர் மீதான எதிர்ப்பு வலுத்தது ‘லஜ்ஜா’ நாவலுக்குப் பிறகும், அதன் பிறகு வெளிவந்த சுயசரிதைகளாலுமேயாம்.

‘லஜ்ஜா’ பங்களாதேஷ் அரசால் தடை செய்யப்பட்டதோடு, அவரை உலக அளவில் அனைவரும் அறியவும் வழிவகுத்தது. 1992 இல் வெளிவந்த அந்நாவல் 5 மாதங்களிலேயே 60,000 பிரதிகள் பங்களாதேஷில் மட்டுமே விற்றுத்தீர்ந்தன. அதற்கு அடுத்த மாதமே அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. இந்தியாவில், 1992 டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு, அவ்விடத்திலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள மக்களை எப்படிப் பாதித்தது என்பதையும், பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வாழும் பங்களாதேஷில் பயத்தோடும் தாங்கள் இதுவரை வாழ்ந்த இடத்தைவிட்டு ஓட நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலை நாவலின் உட்கருத்தாகக் கொண்டுள்ளார்.

மேலும் மதக்கட்டுமானம் பெண்களுக்கு நிர்ணயித்தவற்றைக் கடுமையாக எதையும் துணிச்சலோடு சொல்லியதில் நாடு கடத்தப்படுதலுக்கு உள்ளான அடிப்படைவாத மத அமைப்புகளால் ‘ஃபத்வா’ (Fatwa)வும் விதிக்கப்பட்டது.

தன்னை ஒரு பகுத்தறிவுவாதியாக, மனிதாபிமானியாக, பெண்ணியவாதியாக, மதச்சார்பற்றவராகக் கட்டமைத்துக் கொண்ட அவருக்கு எந்த அளவுக்கு எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் வலுத்தனவோ, அதே அளவிற்கு உலக அளவில் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். இவருக்குக் கிடைத்த விருதுகள் அவற்றைப் பறைசாற்றுபவை.

தொடக்கத்தில், சொந்த நாட்டில் வெளிவந்த பிரபலமான பத்திரிகைகளில் பத்தி எழுதும்போது, பெண்களின் சம உரிமைக்கு ஆதரவாக எழுதியதில் இஸ்லாம் பெண்கள் மீது விதித்த சமூகத் தடைகளைக் குறித்து விமர்சிக்கவும் ஆரம் பிக்கிறார். அதற்குப் பிறகு பெருவாரியான பெண்களிடமிருந்து வந்த வாழ்த்துக் கடிதங்களும், கூடவே ஆண்களுடையதும், பிரதிகள் அதிகம் விற்பனையுற்றதும் அப்பத்திரிகைகள் மேலும் அவரது எழுத்தினைப் பிரசுரிக்க ஆரம்பித்தன.

அவரது எழுத்துப் பெரும்பாலும் அதிர்வையும் ஆச்சரியத்தையுமே அளித்தது. பொதுவாகப் பெண்கள் காதல் கதைகள் எழுதுவார்கள், மகளிருக்கும் குழந்தைகளுக்கும் அறிவுரை கூறுவார்கள். மற்றவரிடமிருந்து வேறுபட்ட விதம் அவர்பால் கவனத்தைத் திருப்பியது. தஸ்லிமாவை வெறுத்த அடிப்படை மதவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் கூட அவரது எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்தனர்.

அவரது முதல் சுயசரிதத்தின் தலைப்பு ‘மேய பேலா’ (Meyebela) என்பது. வங்காள மொழியில் இச்சொல் பெண்பிள்ளைகளின் இளம்பருவத்தைக் குறிப்பதில்லை. ஆண் பிள்ளைகளின் இளம்பருவத்தையே குறிக்கப் பயன்படுத்தப்படுவது. தஸ்லிமா தன்னுடைய கட்டுரையில், ‘பெண் பிள்ளைகளின் இளம்பருவ’த்தைக் குறித்தபிறகு, மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர். ‘My Meyebela’ (ஆமேர் மேயபேலா) என்பது ‘ஒரு சிறுமியாக என்னுடைய அனுபவங்கள்’ எனப் பொருள் படுகிறது.

இந்நூல் தமிழில் புவனா நடராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. தஸ்லிமாவின் சிறுமிப்பருவத்தில் நடந்தவற்றையெல்லாம் சொல்லிச் செல்கிறது. சிறுமியான தஸ்லிமா கேட்கும் கேள்விகள் அனுபவம் நிறைந்த ஒரு பெண்ணையே கண்முன் நிறுத்துகின்றன.

“தாயின் கருவிலிருந்து தலைகீழாக வெளிவந்த குழந்தை. ‘ராஜ கன்யை’ பிறந்துவிட்டாள் என்று குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்குகிறது.” அப்பெண் குழந்தைதான் தஸ்லிமா நஸ்ரின். அச்சிறுமியால் பார்க்கப்படும் உலகம் பின்னர் கபடம் நிறைந்த உலகாக விரிவதை ‘என் இளமைக் காலம்’ காட்டுகிறது.

யுத்த பூமியிலிருந்து உயிர்வாழ்தலின் பொருட்டு இடம் பெயரும் குடும்பம். விடுதலை பெற்றபிறகு மீண்டும் சொந்த இடத்திற்குத் திரும்புகிறது. பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, அண்ணன்கள், மாமாக்கள், மாமிகள், சித்தப்பா, அப்பாவின் நண்பர்கள், வேலைக்காரப் பெண்கள், பீர் ஆமீருல்லா என அனைவரும் சிறுமியான தஸ்லிமாவின் பார்வைக்குத் தப்பவில்லை. ஏன், தஸ்லிமாவும் தன்னைப் பூடகமின்றி வெளிப்படையாகவே காட்டுகிறார். இச்சுயசரிதத்தை எழுதிய சூழலை, தஸ்லிமா பின்வருமாறு கூறுகிறார்:

“நாடு கடத்தப்பட்டு வாழும்போது தாய்நாட்டுத் துயரம் உங்களை வருத்தும். நான் என்னுடைய கடந்த காலத்தை நினைத்துக் கொண்டு என்னைக் கேட்டுக் கொள்வேன், ‘எனக்கு ஏன் இப்படி நடந்தது?’ இதை எழுதுவதன் மூலமாகச் சிலவற்றைக் கற்கமுடியும் என்று நினைத்தேன். நான் எதை உணர்ந்தேனென்றால், ஒரு குழந்தையாக இருக்கும்போதுகூட நான் வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறேன்.

அதிகமான கேள்விகள் இருந்தன. அவற்றை வெளிப்படுத்தியும் இருக்கிறேன். நான் நினைக்கிறேன், பெரும்பாலான பெண்கள் ‘அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் சமூக அமைப்பு முறை? ஒரே ஒரு கேள்வியைக் கேட்கிறேன், ஏன்? ஏன் நாம் அடிமைகளாக இருக்க வேண்டும்? நாங்கள் மனிதர்கள்” (இர்ஷாத் மன்ஜி நேர்காணல்).

இவ்வாறு கேள்வி கேட்கும் தஸ்லிமா, இஸ்லாமின் நடுநிலையற்ற கொள்கைகளுக்கு எதிராக, அதன் சட்டங்களுக்கு எதிராக, பெண்களை (உடைமை) உடைமையாகப் பாவித்து ஒடுக்கும் ஆணாதிக்கவாதிகளுக்கு எதிராகத் தன்னுடைய எழுத்தினைப் பதிவு செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது, அவரது நூல்களைப் படிப்பவருக்கு நன்கு விளங்கும்.

‘என் இளமைக் காலம்’ சுயசரிதையில் சிறுமியான தஸ்லிமாவுக்குச் சக சிறுவர்களிடமிருந்து வரும் கட்டளை,

“நீ பெண்பிள்ளை, பெண் பிள்ளைகள் கடைத்தெருவுக்குப் போகக் கூடாது”

“ஏன் போகக் கூடாது. நான் எப்போதும் போவேனே - தஸ்லிமா” (பக் - 11)

“பெண் பிள்ளைகள் ‘ஹாடூடூ’ விளையாடக்கூடாது” (பக் - 17)

“பெண் பிள்ளைகள் மீன் பிடிக்கக் கூடாது”

“பட்டம் விடவும் கூடாது” (பக் - 18)

“யார் சொன்னது செய்யக் கூடாதுன்னு? நான் இடுப்பில் கையை வைத்தபடி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றேன்.” எனக் கூறும் தஸ்லிமா எதையும் உறுதியோடு எதிர்கொள்ளும் மனோபாவத்தை இயல்பிலேயே கொண்டவர் என்பது விளங்கும். தனக்கு விவரம் தெரிய ஆரம்பித்தவுடன் அறிவுப் பூர்வமாகக் கற்பிக்கப்பட்டவற்றிலிருந்து மதச் செயல்பாடுகள் முற்றிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருப்பதை, பீர் ஆமீருல்லா வீட்டுக்குப் போகும்போது, மதத்தலைவர்கள் மக்களை எந்த அளவுக்கு முட்டாளாக்குகிறார்கள் என்பதை எள்ளல் தொனியோடு விமர்சிக்கிறார்.

“ஒரு பீடாவை வாயில் போட்டு ஆறேழு முறை கடித்து மென்ற பின்னர் அதைத் துப்புவதற்காக வைத்திருக்கும் பாத்திரத்தில் ஃபக் என்று துப்புவார். வெற்றிலைச் சாற்றின் எச்சில் அங்குச் சூழ்ந்துகொண்டு உட்கார்ந்திருக்கும் பெண்கள் மீது தெறித்து விழும். உடம்பின் மீது பட்ட வெற்றிலைச் சாற்றைச் சிலர் தங்கள் நாக்கால் நக்குவார்கள். சிலர் அந்த எச்சில் பாத்திரத்தின் மீதே குப்புற விழுவார்கள்...... (பக் 194-196)

‘ஆமீருல்லா எதைக் கூறுகிறாரோ, எதைச் செய்யச் சொல்கிறாரோ அதை அப்படியே நிறைவேற்றுவது அவரைப் பின்பற்றுபவர்களின் கடமையாக இருந்தது. உடை, பெயர், வாழ்கின்ற அனைத்தையும் அவர் கூறியபடி மாற்றியமைத்தால் அல்லாவின் ஆசியைப் பெற்றவர்கள். இறுதித் தீர்ப்பு நாளில் சொர்க்கத்துக்குச் செல்லலாம்’ எனக் கூறிச் செல்வதிலேயே சொல்லவந்ததை எளிமையாகப் புரிய வைத்துவிடுகிறார். மதத்தின் பெயரால் நடக்கும் மீறல்கள் பெரும்பாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவற்றைக் கேள்விக்குட் படுத்துவதும் தம் மதத்தையே சந்தேகிப்பது, மீறுவது போலாகும் (நசிஹத் செய்தல், அராபி மொழிக்கட்டாயம் போன்றவற்றால் நடக்கும் நிகழ்வுகள்).

“எதைக் கேட்டாலும் அதை அல்லா கொடுப்பார் என்றால் அதைவிட வேடிக்கையான விஷயம் வேறொன்றும் கிடையாது” (பக்-323)

மேற்குறிப்பிட்ட தஸ்லிமாவின் வரிகள் மத அடிப்படை வாதத்தை ஆட்டம் காணச் செய்பவை. அறிவுக்கு ஒவ்வாத எல்லாவற்றையுமே விமர்சிக்கிறார். இந்நூலோடு மற்ற மூன்று சுயசரிதைகளுமே, “இதிலுள்ள, இஸ்லாமிய உணர்வுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிரான கருத்துகள் பங்களாதேஷின் மத இணக்கத்தைக் குலைப்பவை” என்று அவ்வரசாங்கத்தாரால் தடைசெய்யப்பட்டன. ஆனால் கடைசியாக வெளிவந்த சுயசரிதையின் ஐந்தாம் பகுதி இன்னும் தடை செய்யப்படவில்லை.

‘போர்’ மக்களைப் பொதுவாகப் பாதித்தாலும், போர்க்காலங்களில் பெண்கள் மீது அவிழ்க்கப்படும் வன்முறைகள் ஏராளம். ‘கற்புடைய பெண்’ தெய்வத்திற்குச் சமமானவள். அவளது கணவனின் சொத்து அவள். அவளது திறமையும், அறிவும் அவளுக்குள்ளேயே அடக்கப்பட வேண்டியவை. மீறி வெளிப்பட்டாலோ, அல்லது அவனது, ஒடுக்கு முறைக்கு எதிராகப் பேசத் தலைப்பட்டாலோ ‘தவறான பெண்’.
“ஒரு நல்ல மனுஷியாக இருக்க வேண்டுமானால், முதலில் நான் சமுதாயத்தின் பார்வையில் ‘தவறாக’ இருக்கவேண்டும்.

நீங்கள் ‘தவறாக’ இருக்க விரும்பவில்லையானால் ஒருபோதும் நீங்கள் திடமாகவும் தனித்த மனிதனாகவும் உண்மையில் இருக்கமுடியாது” என்று குறிப்பிடுகிறார். என் இளமைப் பருவம் நூலில், அச்சிறுமியின் மனதில் தோன்றுபவை, ‘ஆண்’ மையச் சமுதாயத்தில் ‘பெண்’ எவ்வாறு பார்க்கப்படுகிறாள் என்பதற்கு எடுத்துக்காட்டு,


“நீ தூங்கிக் கொண்டிரு பெண்ணே. உன் கண் இமைகள் ஆடாமல் அசையாமல் இருக்கட்டும். உன் கை கால் எதுவுமே அசையாமல் இருக்கட்டும். கை விரல்கள் அசையாமல் இருக்கட்டும். உன் இதயம் நடுங்கக்கூடாது. உன் இதயம் நடுங்கினால் அவர்கள் கொசுவலையைத் தூக்கிப் பார்ப்பார்கள். கண்களிலிருந்து ஆசை பெருகும். நாக்கிலிருந்து நெருப்பு விழும். அவர்கள் பேசும்மொழி உனக்குப் புரியாது. டார்ச் விளக்கின் வெளிச்சத்தை உன்மீது பொழிவார்கள். முகத்தின் மீது, உன் மார்பகங்கள் மீது, உன் துடைகள் மீது. அவர்களுக்குத் தெரியக்கூடாது. நீ வெறும் உயரமான பெண்தான். உண்மையில் நீ யுவதி இல்லை. இளம் பெண்ணாக நீ இன்னும் மாறவில்லை. இன்னும் உன் மார்பகங்கள் எழவில்லை. அவர்களுக்குத் தெரியக்கூடாது பெண்ணே” (பக்-27)

குழந்தைப் பருவம் அறியாமையும் கேள்விகளும் நிறைந்தது. பெரும்பான்மை பெண் குழந்தைகள் இன்னதென்று அறியாத, உணராத வயதிலே பாலியல் வல்லுறவுக்கு அவர்களின் குடும்பத்தாராலேயே உட்படுத்தப்படுகின்றதை அதிகமான புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. இந் நூலிலும், குழந்தைமை மாறா சிறுமி தஸ்லிமா மாமாவினால் அத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுக் குழப்பமும் பயமும் ஒரு சேர, அவளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுகிறாள்.

கடந்த பதின்மூன்று ஆண்டுகளாகச் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல், இந்தியாவில் தற்பொழுது வசித்துவரும் தஸ்லிமா இன்று வரை. ‘எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும் என்னுடைய ஆயுள் உள்ளவரை, நான் தொடர்ந்து என்னுடைய குரலைப் பதிவு செய்வேன்’ என உறுதியாக இருக்கிறார்.

ஆண்களின் வார்ப்பில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட பெண், தான் தன்னையே தன் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வரும்போது அதிர்வுகள் தவிர்க்க இயலாதன. தஸ்லிமா நஸ்ரீனின் எழுத்துக்கள் அத்தகைய ஒடுக்குதலிலிருந்து வெளிப்பட்டு, அதன் அங்கீகாரத்தை, சமூக மாறுதலை வேண்டி நிற்பவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com