Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2007

மண்வாசனையில் மலர்ந்த ‘கந்தாயம்’
மு.மதியழகன்

படைப்பும் படைப்பாளியும் ஒன்றாகக் கலக்கும் மையப்புள்ளி வட்டார இலக்கியங்களில்தான் வேர்கொண்டு எழ முடியும். மக்களின் வாழ்க்கை யோடு, வாழ்க்கையாய் வாழ முடிந்தவர்களுக்கு மட்டுமே வசப்படும் கதைகள், வீரியவிதைகளாக உயிர்கொண்டு முளைக்கும். அந்த வகையில் ‘கந்தாயம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பை மா. நடராஜன் படைத்துள்ளார்.

எலும்பும் சதையுமாய் உயிர்ப்பித்து எழும் ரணவலிகளின் அடையாளமாக இச்சிறுகதைகள் விளங்குகின்றன. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையில் இடர்ப்படும் சிறு பிரச்சினைகளும் பெருந்தீயாய் அவர்களின் மனதிற்குள் விருட்சங்களை விதைத்துவிடும். கணவன் - மனைவி உறவாகட்டும், பங்காளிச் சண்டையாகட்டும் - எந்தவொன்றிலும் தீர்க்கமாக முட்டி மோதிக்கொள்ளும் வாழ்க்கை இம்மக்களுடையது.

முடிவுகள் எடுப்பதில் தீர்க்கமானவர்களாக இழப்புகள் எதுவரினும் கவலைப்படாதவர்களாக வாழ்க்கைக்குப் புது அர்த்தத்தைக் கொடுக்கும் வலிமையுள்ளவர்களாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைப் போலிச்சாயம் எதுவுமின்றி கொங்கு மொழியிலேயே பதினான்கு கதைகளைப் படைத்துள்ளார் ஆசிரியர்.

மண்ணும் மண்சார்ந்த உறவுகளும் கிராமத்து மனிதர்களின் அடையாளமாக ‘கந்தாயம்’ கதை வெளிப்படுத்துகிறது. கந்தாயம் என்பது நிலவரி. நிலவரியை இழப்பவன் - பூமியை விற்பவன் உயிரை இழப்பதற்குச் சமம். கிராமிய மக்களின் - கொங்கு மக்களின் ஆளுமைக் குறியீடாக ‘அய்யன்’ என்னும் பாத்திரம் விவசாய நிலம் என்பது விளைச்சலுக்கான ஒன்றாக இல்லாமல் அம்மனிதர்களின் உயிராக வடிவம் கொள்கிறது. பூமியை விற்பது தன்னையே மாய்த்துக்கொள்ளும் செயலாய் அய்யனின் பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிராமத்து வாழ்வில் வறுமை என்பது அவர்களுக்கான வாழ்க்கையாக - விவசாயம் வினாக்குறியாக அமைந்துவிடும் அவலத்தை ‘அப்பா போட்ட கோடு’ கதை பேசுகிறது. தன் மகனின் விருப்பத்திற்காக அவன் விரும்பிய வாழ்க்கையைக் கலப்பு மணத்தை ஏற்றுக்கொள்ளும் புதுமையின் அதிர்வுகள் பழைமையுடன் வெளிப்படுகின்றன. கிராமத்துக்காரனுக்கு ஒன்றும் தெரியாது என்ற நகரவாசிகளின் மேட்டிமைத் தனத்தை - தனது சமூகச் செயல்களால் வெளிச்சப்படுத்தும் இக்கதாப்பாத்திரங்கள் கொங்கு வட்டார மக்களின் சமூக ஆவணங்களாக அமைகின்றன. “கவுண்டிக்கம்” கதை கிராமத்து வாழ்வியலில் மனிதநேய உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

மனித மன உணர்வுகளில் ஏற்படும் மீறலை இன்னொரு வடிவம், பீறிடும் பிரியம், விலகிப்போகும் வேர்கள் போன்ற கதைகளில் பார்க்கமுடிகிறது. பெண்பார்க்கும் படலத்தில் வெளிப்படும் இளைஞன் ஒருவனின் மனவக்கிரங்களை இன்னொரு வடிவம் வெளிப்படுத்துகிறது. உறவுக் காதலர் இருவரின் உணர்வோட்டங்களைப் பீறிடும் பிரியம் கதை பேசுகிறது. இக்கதையில் வரும் மாடு ஒ ஆடு என்னும் சொல்லாடல் இக்கதையை வேறொரு தளத்திற்குப் பழமை - புதுமை என்பதாக நகர்த்திச் செல்கிறது.

பழமையில் ஊறிப்போன பெற்றோர்களின் முரண்டுபிடித்தல் மாடாகவும் புதுமையில் மென்மை காணும் காதலர்களின் உணர்வுகள் ஆடாகவும் வடிவம் கொள்கிறது இக்கதை. சராசரி இளைஞனுக்குள் தகிக்கும் காம உணர்வும் கிராமிய வாழ்வினூடாக அதனை வெளியுலகத்திற்குத் தெரியாமல் மறைக்கும் பெற்றோர்களின் மன உணர்வும் விலகிப்போகும் வேர்கள் கதையாகப் படைக்கப்பட்டுள்ளது.

‘கீரை கனக்கிறது’ கதை நம்மனதைக் கனக்கவைக்கும் தன்மையுடையது. பிழைப்புக்கான வாழ்க்கை, வாழ்க்கைக்கான உழைப்பு, உழைப்பிற்கான மன உறுதி கொண்ட பெண்ணாகக் கீரைக்காரி லட்சுமி தடம் மாறாத நெஞ்சினாளாக இக்கதையில் படைக்கப்பட்டுள்ளாள்.

“இனி எதற்காக”, “தீர்மானம் திரும்புகிறது” என்ற இரண்டு கதைகளும் பிள்ளையில்லாப் பிரச்சனையை இருவேறு தளங்களில் பேசுகிறது. குழந்தை இல்லாத ஏக்கம், விரக்தி, வெறுமை, சொந்தங்களிடம் உறவு இல்லாமை, நகர்ப்புறம் சார்ந்த மனித மனங்களின் கண்டுகொள்ளாத் தன்மை. இவையனைத்தும் யாருக்காக இந்த வாழ்க்கை என்ற அவலத்தைத் தரும் முடிவாக ‘இனி எதற்காக கதை’ ஒருவொருக்கொருவர் உதவி புரிவதும் உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வதும் பிறரையும் மதிக்கக் கற்றுக் கொண்டு வாழ்வதும், வாழ்தலுக்கான வேர் என்பதனை இழையோட்டமாக இக்கதை வெளிப்படுத்துகிறது இளமையில் வலியமறுத்த உறவுகளை முதுமையில் நாடிப்போகவேண்டிய அவசியத்தை ‘தீர்மானம் திரும்புகிறது’ கதை சொல்கிறது. நகர வாழ்வில் உழன்று எவருக்கும் பயன்படாத ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட அழுத்தங்களை இருவேறு கோணங்களில் அவலமாகவும் கவனமாகவும் இரண்டு கதைகளும் பேசுகின்றன.

குழந்தைத் தொழிலாளர் அவலம் குறித்துச் சின்னக்கன்று, விரியும் சிறகுக் கதைகள் பேசுகின்றன. சின்னக்கன்று கதையில் குறைவான ஊதியத்தில் கடுமையான வேலைப்பளுவைக் குழந்தையான இன்னாசியின் மீது திணிப்பதும் அதனை எதிர்கொள்ளமுடியாமல் அவன் தவிப்பதும் இதிலிருந்து விடுபட முயற்சிக்கும் நிகழ்வுகளும் இக்கதைக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளன. ‘விரியும் சிறகு’ கதை பண்ணையத்தில் வேலை பார்க்கும் குழந்தைத் தொழிலாளியின் அவலம் குறித்தது.

கிராமிய பண்ணைமுறை என்பது பரம்பரை பரம்பரையாக விவசாயக் கூலிகளைக் கொத்தடிமைகளாக்கி அவர்களை ஏதுமற்றவர்களாக ஆக்குவது. இங்கே, இளம் வயது சிறுவன் பண்ணை அடிமைமுறைக்குத் தள்ளப்பட்டு மனதளவிலும் உடல் அளவிலும் ரணங்களைச் சுமந்தவனாகக் காட்டப்படுகிறான்.

‘கிழிந்த சட்டை கதை’, எல்லோர் வாழ்விலும் நிகழும் ஏமாற்றங்களின் - எதிர்பார்ப்புகளின் வலிய மவுனமாகக் கருதலாம். ஊர் பெரிய தனக்காரர் மகனின் மணவிழாவிற்குச் செல்லும் பண்டாரம் ஆறுமுகத்தின் உற்சாகம் கிராமத்து எளிய மனிதர் வாழ்வில் நிழலாடும் ஏக்கத்தின் உணர்வலையாகவும் கிழிந்த சட்டை அணிந்தால் ஏற்பட்ட கசப்புணர்வும் வெறுமையும் இக்கதையில் பதிவுகளாக அமைந்துள்ளன.

நகரமயமாக்கலில் விளைந்த புதிய குடியிருப்புகளில் வாழும் மனித வாழ்க்கை குறித்தான பதிவுகள் ‘சாயும் மரம் சாயட்டுமே’ கதையாக வடிவமெடுத்துள்ளது. நகரமும் நகரம் சார்ந்த மக்களின் வாழ்க்கையோட்டம் ஓர் அந்நியத்தன்மையாக வடிவம் கொள்வதையும், கிராமப்புற வாழ்விலிருந்து. அம்மக்களிடமிருந்து கற்க வேண்டிய மனித நேயத்தை இவர்களுக்கு வலியுறுத்துவதையும் இக்கதைத் தெளிவுபடுத்துகிறது. தனிமனிதத் தன் முனைப்பு மனித மனங்களைச் சிராய்க்கும் கதை ஒத்திகை. போலி முகங்களைக் கழற்றி எறிந்துவிட்டு நிஜ உலகிற்குப் பயணிக்கும் கதையாக ஒத்திகை அமையப் பெற்றுள்ளது.

உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க வீடும் இல்லாமல் உழைப்பையே மூலதனமாக்கி - உயிர்வாழும் வாழ்க்கை; வெட்டொன்று துண்டு இரண்டாக வெளிப்படும் மன வெளிப்பாடுகள்; உறவுகளை விட, தன்னை விட மண்ணை - பூமியை உயிராக நேசிக்கும் மகத்துவம். வாழ்தல் என்பது தனக்காக மட்டுமன்று. வாழ்தலின் வாழ்க்கையை அவர்களின் மொழியில் ரத்தமும் சதையுமாய் கதையாக்கித் தந்திருக்கிறார் மா. நடராசன். கதை உரையாடல்களில் கொங்குமண் வாசனையும் யதார்த்த உயிர்ப்பும் ததும்பி நிற்கின்றன.

கொங்கு மண்ணின் மன அசைவுகளை விகாரங்களை இலட்சியங்களை ‘கந்தாயம்’ மண்ணின் மணத்தோடு பேசுகிறது எனலாம்.

கந்தாயம்
ஆசிரியர் : மா. நடராஜன், விலை : ரூ. 50, வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
41-பி, சிட்கோ எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com