Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் டிசம்பர் 2007

அலைதலில் கிளைத்த குறிப்புகள்
ஜமாலன்

சில முக்கியமான கடிதங்களும், கட்டுரைகளும் எழுதவேண்டுமென குறித்து வைத்த குறிப்புகளும், கையெழுத்துப் படியாகச் சில கட்டுரைகளும், கவிதைகளும் தூசி தட்டி எடுத்தேன். அவற்றில் பொருத்தமுள்ள இவற்றை பதிவில் வெளியிடுகிறேன். இவை 1998-வாக்கில் நண்பர்களுக்குக் கடிதங்களாகவும் எனது குறிப்பேட்டிலும் குறித்து வைக்கப்பட்டவை. ஆரம்பிச்சிட்டான்ய்யா குப்பையைக் கிளற... என்று எண்ணாதீர்கள். இன்னும் இக்குப்பைகள் கிளறப்படாமலே இருக்கிறது. அதாவது, இக்குறிப்புகளை விளக்கக்கூடிய கட்டுரைகள்தான் இன்னும் எழுதப்படவில்லை.

பதிவுலகம் போன்ற ஒரு வாய்ப்பு இல்லாத நிலைமையில் எழுதும் ஆர்வமற்று இக்குறிப்புகளை விரித்து எழுத வாய்க்கவில்லை. பதிவுலக நண்பர்கள்... இவற்றை விளக்கியோ மறுத்தோ எழுதலாம் என்பதால் இங்கு வெளியிடப்படுகிறது. தொடர்ந்து இவைகளை எனது பதிவுகளில் எழுதும் உத்தேசமும் உண்டு. நீங்கள் பின்னோட்டம் போடும் முன்பு ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே என்றுதான்.

1. ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி’ ‘தமிழ் மண்ணுக்கே இயல்பாய் அமைந்துள்ள குணங்களில் ஒன்று அநீதியைக் கண்டு வெகுண்டெழுவது.’ ஏதோ ஒரு தலையங்கத்திலோ அல்லது பேருரையிலோ அல்லது பேருந்தின் பேச்சிலோ எதிர்கொண்ட வாசகங்கள் இவை. இது போன்ற வாக்கியங்கள் தமிழில் இன்னும் எழுதப்பட்டு வருவது கவலைக்கிடமான விடயம்தான்.

இந்த வாக்கியம் தமிழ் பெருமித உணர்வையும், தமிழ் உயர் தேசிய உணர்வையும், தமிழ்-அதிகார உணர்வையும் சொல்லும் ஒருவகை பாசிச-பெருமிதமாகும். இவ்வாக்கியங்கள் உண்மையா? அப்பட்டமான பொய்தானே? இந்தக் கோயபல்ஸ்வகை பொய்யைப் பலரும் ஒரு மொண்ணையான அர்த்தத்தில் பயன்படுத்திதான் வருகிறோம். இதுபோன்ற வாக்கியங்களை எழுதுவதை தவிர்க்கலாம் என்று படுகிறது. இப்பார்வை வரலாற்றைத் தேர்வு செய்யும் நமது அரசியலின் பார்வை.

அதனால்தான் மன்னர்கள் நெருக்கடிக்கு ஆளானதைக் கண்டு வெகுண்டெழும் மக்கள் கூட்டம் என்பதாக ஒரு பொய்யை வரலாற்றின் பக்கங்களாகப் படித்துக்கொண்டே இருக்கிறோம். நமது கனவும், நமது உடலும் அரசிறையால் (அரசு மற்றும் இறையால்) உருவமைக்கப்பட்டது. அந்த அரசிறையையும் தமிழ்ச்சினிமாவின் ராஜராஜ சோழன்களால், கனவுக் கதாநாயகர்களால், வரலாற்றின் கதைகூறல்களால் உருவமைக்கப்பட்டது. இதிலிருந்து விடுபடுவது, நாம் உருவாக்கும் இத்தகைய போலிப்பெருமித வாக்கியங்களைத் தவிர்ப்பதும், அதை உணர்வுபூர்வமாக உணர்வதிலிருந்துமே சாத்தியம்.

2. மதங்களும், குறிப்பாக இந்திய பெரும் தத்துவங்களும், இஸ்லாம், இந்துமதம், கிறித்துவம், யூதம் போன்ற எல்லாப் பெருமதங்களும் மக்களை அதிகமாகவே கொன்று குவித்து விட்டன. அதற்கு மாற்றாகச் சிறுமத வளர்ச்சி சிறுதெய்வ வழிபாடு போன்றவற்றை, பகுத்தறிவிற்குப் புறம்பான, தொன்ம அடிப்படையில் முன்கொண்டு வருவது ஒரு மாற்றாக இருக்குமா? என்பதும் யோசிக்கத்தக்கது.

எனக்குத் தெரிந்து வைணவம், சூஃபியிஸம், சித்தர்கள், தாந்ரீகம், பௌத்தம் போன்றவை காதலைப் பேசிய மதங்கள், ஆத்மாவால் ஒடுக்கப்பட்ட உடலைப் புனிதப் படுத்த காதலை முன்வைத்தவை, பெருமதங்களின் ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிச்செல்லும் வழியை அம்மதத்தின் தர்க்க அமைப்பிற்குள்ளேயே கண்டடைந்தவை. காமசாஸ்திரம், கொக்கோகம், ஆணந்த ரங்கா, வள்ளுவரின் காமத்துப்பால் போன்ற நூல்கள் உடலை அதன் விஞ்ஞான அடிப்படையில் அணுகிய நூல்கள்.

இந்தியப் பாலியல் குறித்த சொல்லாடலில் இவற்றின் பங்கு தீவிரமான ஆய்விற்கு உரியவை. மதவாத பாசிசத்தினை சிதைப்பதற்கு, கருத்தியல் அளவில், இதுபோன்ற நுண்கூறுகளைப் பற்றிய ஆய்வும் விவாதமும் அவசியம்.

3. வரலாற்றை மறுப்பதும் அதற்குப் பொறுப்பேற் பதிலிருந்து விலகுவதும், செயலின்மையை வலியுறுத்துவதும், அல்லது செயலற்ற போக்கிற்குத் தள்ளுவதும், ஸ்தூலமற்ற மொழியில் பேசுவதும், தர்க்கச் சுகத்தில் திளைப்பதும், வர்க்கப் போராட்டத்தை மறுப்பதும் எனப் பின்நவீனத்துவத்தை ஒருவகை அத்வைதமாகக் காணும் மரபு மார்க்சியர்கள்கூட மாவோவின் பண்-முரண்பாடு என்கிற அமைப்பியலாளர்களின், குறிப்பாக அல்தூஸரின் கருத்தாக்கத்தை, அடிப்படையாகக் கொள்கிறார்கள்.

பின் நவீனத்துவம் என்கிற ‘பிரான்டை’ தவிர்த்துப் பார்த்தால், தெல்யூஸ்-கொத்தாரி போன்றவர்கள் முன்வைக்கும், மொழி என்பது ஒரு சமூக நிறுவனம். அது ஒருவகை குழுப் பேச்சாக (Collective utterance தமிழில் குழுப் பேச்சு என்று சொல்லலாமா? தெரியவில்லை. Speech என்பதற்குப் பேச்சு என்றால் utterance என்பதை எப்படிச் சொல்வது? utterance என்பது பேச்சின் ஒருவகை வன்முறையான வெளிப்பாடாகக் கொள்ளலாம்.) வெளிப்படுகிறது.

பேச்சு எல்லாம் முழக்கம் (Slogan) என்கிறார்கள், அதாவது அரசியலற்ற, வன்முறையற்ற, திணிப்பற்ற பேச்சு சாத்தியமில்லை என்கிறார்கள். பேச்சின் அடிப்படை செயல்களில் ஒன்று அதன் territorialization தான் என்றும், இலக்கியங்கள் எப்படி இந்த ‘இடமாக்கலை’ நிகழ்த்துகின்றன என்றெல்லாம் செல்கிறது இவர்களது ஆய்வு. இடமாக்கலும், நாடும் அரசியலின் அடிப்படை. இதையெல்லாம், லெனினின் முழக்கம் பற்றிய வரையறைகள், வர்க்க நலனில் வெளிப்படும் பேச்சு ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்க முடியும். “ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அதற்கான வர்க்கத்தின் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது” என்பதை இந்நோக்கில் வளர்த்தெடுக்க வேண்டும்.

4. வரலாற்றை இன்னும் மன்னர்களின் மானியச் சொத்தாகவே பாவிப்பதைவிட்டு வரலாறு மக்களுக்கானதாக அதாவது வரலாற்றை ஒடுக்கப்பட்ட மக்களின் வழியாக உருவாக்குவதுதான் தேவை. தலித்துகள், பெண்கள் போன்று காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலை அடையாளங் கண்டு அவர்களது வரலாற்றை எழுதவேண்டும். அல்லது இதுவரை வரலாறாகச் சொல்லப்பட்ட வீர சாகசக் கதைகளை, ‘குயிக்ஜோட்’ போல் தலைகீழாக்க வேண்டும்.

மன்னர்களை வேடிக்கை பொருட்களாக்குவது. நாட்டுப்புற நகைச்சுவை அல்லது நையாண்டி மூலம் மன்னர்களைப் பகடி பண்ணுவதன் மூலம் வரலாற்றை செயலிழக்கச் செய்வதுதான் இனியான மக்களின் வரலாறாக இருக்க முடியும். அதனை நாட்டுப்புற நகைச்சுவை என்கிற நாட்டார் ஆய்வுகளிலிருந்து கட்டமைக்க வேண்டும். அதனால், இனியாவது வரலாறு இடிப்பதற்கும், தோண்டுவதற்கும் அல்ல மக்களுக்கானது என்பதை மனதில் வைத்துக் கவனம் செலுத்தவேண்டும்.

5.வானம் பொய்த்துவிட்டது என்பதைப்போல மார்க்சியம் பொய்த்துவிட்டது என்கிற தவளைக் கூச்சலில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறையும் இருக்கும்வரை மார்க்சியத்தின் இருப்பு என்பது தவிர்க்க முடியாதது. உண்மையில் சோவியத், சீன சீஸோ-லிங்கவிஸ்டிக் வரை அல்தூஸர் முதல் பூஃக்கோ, தெல்யூஸ் கொத்தாரி வரை மார்க்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதிலிருந்து வளர்ச்சியடைந்தவர்கள்தான்.

பன்னாட்டு முதலாளியமாக வளர்ந்துள்ள ஏகாதிபத்தியம் ஏற்படுத்தி யிருக்கும் அரைக்காலனிய பண்பாட்டுச் சூழலில் நாம் பழைய வகையில், இன்றைய பிரச்சனைகளை எதிர் கொள்ளமுடியாது. அதனால்தான் பாலியல் சொல்லாடல்கள், தேசிய இனப் பிரச்சனைகள், பெண்ணியம், பாலினமாக்கல் பற்றியெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய நோக்கிலிருந்து பேச வேண்டியுள்ளது.

6. இன்றையத் தமிழர்கள் குறிப்பாகப் புலம் பெயர் தமிழர்கள் (ஈழத்தினர்) உலக சிந்தனையின் அனைத்து முன்னோடித் துறைகளைப் பற்றியும் பேசுகிறார்கள். அவர்கள் வழியாகத் தமிழின் ஆய்வுக்களம் விரிவடைந்துள்ளது. மார்க்சியம் அதன் தளத்தில் இச்சிந்தனைகளூடாக ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

மார்க்ஸ் தன்னளவில் ஒரு ஐரோப்பிய மையவாதப் பார்வையைக் கொண்டிருப்பதான விமர்சனங்கள் இருந்தபோதிலும், மனித விடுதலை பற்றிய கனவினை முறையான செயல்திட்டத்துடன் அணுகியது மார்க்சியம் மட்டுமே. அதே சமயம் மார்க்சிய வாதிகளிலேயே மொழியை நுணுக்கமாகப் புரிந்து கொள்ள முயன்ற ஸ்டாலினின் மொழிகுறித்த சிந்தனைகள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.

7.‘ஆசிரியன் இறந்து விட்டதான’ கருத்தாக்கம், விமர்சகனிடமிருந்து படைப்பாளி தப்பிச் செல்வதற்கான உத்தியாகிவிடாது. படைப்புடன் உயிர் பெற்று படைப்புடன் இறந்துவிடும் ஆசிரியன், வாசிப்பின் வழியாக உயிர்ப்பிக்கப் படுகிறான். ஆசிரியன் படைப்பின் ஒரு நிலையான புள்ளி இல்லை, படைப்பினூடே வந்து வந்து மறைபவன் என்பதுதான். இந்த ஆசிரியன் ஒரு எழுத்துருதான் (Word-being) அல்லது ஒரு பிம்பம். இந்தப் பிம்பம் வாசகனால் கட்டமைக்கப்படுவது.

எழுதும் ஆசிரியனின் வர்க்க, பாலியல் தன்னிலை என்பது எழுத்தினை வழிநடத்துவதாக இருக்கிறது. இல்லாவிட்டால் படைப்பில் ஒலிக்கும் பொதுக்குரலை எப்படி அடையாளம் காணமுடியும். படைப்பு என்பது இத்தகைய பல குரல்களின் ஒரு போராட்டக்களமாக இருக்கின்றது.

ஆசிரியன் தனது ஒற்றைக்குரலால் பிற குரல்களை ஒடுக்குவதை, ஆய்வுகள் வழியாக வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. விமர்சனம் படைப்பை அணுகுவதற்கான வழியைத் திறப்பதற்குப் பதிலாகப் படைப்பை கலைத்துப்போடுவதாக இருக்க வேண்டும். வாசகன் தன்போக்கில் அதனை கோர்த்துத் தனது வாசிப்பை நிகழ்த்திக்கொள்ள ஏதுவாகும்.

8. ஒருகதையில் எழுதப்படும் வர்ணனைகளே கதையின் சொல்லப்படாத மௌனிக்கும் பகுதிகளுக்கான தடயம். இதனைப் புது விமர்சனத்தில் தடம் (Trace) என்பார்கள். Physco-Linguistic-ல் எச்சம் (remainder) என்பார்கள். பேசியதில் உள்ள பேசப்படாததன் எச்சம். இவ்வர்ணனைகளிலும், அதற்கான தேர்வுகளிலும், பேச்சை உருவமைப்பதிலும், அவற்றை வரிசைப்படுத்துவதிலுமே படைப்பின் வர்க்க, பாலியல், சாதிய, மத தன்னிலை வெளிப்பாடு கொள்ளும். கதைவாசிப்பில் இவ்விடைவெளிகளை வாசகன் தனது அடையாளமாகக்கொண்டு படைப்பின் பரபரப்பிற்குள் குடியேறுகிறான்.

படைப்பை மையமற்றதாகச் சிதைப்பதன் மூலம் இந்நிலப்பரப்பை சிதைத்து வாசகன் தனக்கான பிரதியை உருவாக்கிக்கொள்ளச் செய்வதன் மூலம் வாசிப்பாளனை கொண்டாட்ட மனநிலைக்கு அல்லது வாசிப்பாளனை படைப்பூக்கமிக்கவனாக மாற்றுவது படைப்பாளியின் பொறுப்பாகிறது. விமர்சகன் அப்படைப்பில் உள்ள ஆசிரியன் என்கிற எழுத்துருவின் தன்னிலை அடையாள அடிப்படைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறான். இவ்வாறாக விமர்சனம் தீர்ப்பளிக்கும் நீதிமன்ற தீர்ப்பாக ஆகாமல் பிறிதொரு படைப்புச் செயலாக ஆகிறது.

9. “அப்பாவித் தமிழன்” போன்ற சொல்லாடல்கள். இன்னும் மனிதர்களை நல்லவர், வல்லவர், அப்பாவி, கள்ளன் என்று வகைப்படுத்துவது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வகைப்படுத்துதல் என்பதைத் தாவரவியலில் லிண்ணேயஸ் துவக்கி வைத்தார். இந்த வகைப்பாட்டியலை மனித சமூகத்திற்குள் பிரயோகித்து இனங்களாக, நிறங்களாக மனிதன் வகைப் படுத்தப்பட்டு எண்ணிக் கணக்கிடப்பட்டு அரசின் புள்ளி விவரங்களாக மாற்றப்படுகிறான்.

அதன்பின் அவை குழு அடையாளங்களாக மாற்றப்பட்டு, வரலாற்றின் கதையாடல்கள் வழியாக உயர்ந்தவை, தாழ்ந்தவை என்கிற படிநிலையாக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இதன் அதிகபட்ச அரசியல் வெளிப்பாடுதான் பாசிசம் அல்லது இனத்தூய்மை அல்லது வலிமை அல்லது திறமை மட்டுமே வாழ்வதற்கான காரணி என்பது. இவ்வாறாக, அறிவு வகைப்படுத்துதல் வழியாக ஒரு அதிகார தொழில் நுட்பமாக உருவாக்கப்பட்டது.

மேலும் வகைப்படுத்துதல் ஒருபடித்தானவர்களாக மனிதர்களை (Same X Other, Male X Female, Eastern X Western, Blace X White, Indian X Pakistan, Sinkala X Tamilian, Ariyan X Dravitan.. etc...) கட்டமைப்பதற்கான ஒரு காலனிய தொழில்நுட்பம். அது இப்படித்தான் துவங்கும். அப்பாவி, வளர்ச்சியற்றவன், காட்டுமிராண்டி, மூடநம்பிக்கையாளன் என்பதாக.

10. தமிழரது பாலியல் அறிவு குறித்து அல்லது தமிழ் பாலியல் என்கிற கருத்தாக்கம் குறித்துப் பேசப்பட வேண்டும். சங்ககாலத்தில் வேலன் வெறியாட்டம் மற்றும் நெய்யணி மயக்கம் எல்லாம் உடல்களைப் பொதுக்களத்தில் அலையவிட்டு அவற்றைக் கலப்பதுதான். சங்ககால மகளிர் மது அருந்திவிட்டு இரவுகளில் ஆட்டம் போடுவார்கள் என்கிறது சங்ககாலத் தமிழர் வரலாறு (Pre-Ariyan Tamil Culture-P.T.S.Iyangar).

உடன்போக்கு, மடலேற்றம் துவங்கி அகத்திணை இலக்கியங்களை ஒரு பாலியல் வாசிப்பிற்கே உட்படுத்தலாம். காதலியின் வாயில் ஊறும் நீரின் இனிமைக்கு இணையான நீர் உலகில் இல்லை என்கிறது வள்ளுவம். அது அன்று ஆனால் இன்றுள்ள தமிழன் என்று கூறித் தப்பிக்கலாம். அதற்குத் தமிழ் மாத இதழான ‘செக்ஸ் லைப்’-பின் அனுபவப் பகுதியில் இருந்துதான் உதாரணம் காட்ட வேண்டிவரும். பாலியல் கட்டுமானம் எப்படி மிகைப்படுத்தப்பட்டு மையமான பேசுபொருளாக ஆக்கப்பட்டது.

வரலாற்றில் என்பதையும் இந்தியப் பாலியலின் குறிப்பாகத் தமிழ் பாலியலின் கலாசாரக் கட்டுமானங்கள் எப்படிக் காலனியத்தால் உருவமைக்கப்பட்டது என்பதும் ஒரு முக்கிய ஆய்வுப்புள்ளியாகும். இந்தக் கலாசார ஏகாதிபத்தியத்தைக் கண்டடைந்து உடைத்துப் போடுவது அவசியம்.

11. மக்கள் தொகைப் பெருக்கம் உலகை அச்சுறுத்துவதாகக் கட்டமைக்கப்படும் சொல்லாடல்கள் மற்றும் தனது பயத்தை உலக பயமாக்குவது ஆகியன ஒரு ஐரோப்பிய தொழில் நுட்பம்தான் என்று மாவோ கூறினார். ‘மனிதன் பிறக்கும் போதே இரண்டு கைகளுடன் பிறக்கிறான்’ என்று. மால்த் தூஸியன் பூதம் உலகை விட்டகன்றாலும், இன்னும் இந்த வெள்ளை, ஆணாதிக்க, மத்தியதரவர்க்க மேட்டிமையினரை (elite) விட்டகலவில்லை.

அதனால்தான் தனது அச்சத்தை உலக அச்சமாகச் சித்திரிக்கிறார்கள். மக்கள்தொகை பெருக்கம் பற்றிய சொல்லாடல்கள் மக்களை ஒரு உழைப்புச்சக்தியாகக் கருதாததன் விளைவே. மக்களின் வாழ்வாதரங்களை நோக்கியதான தொழில்நுட்பங்களை வளர்க்காமல் நுகர்வு அடிப்படையிலான தொழில்களை வளர்த்து, அதற்கான நுகர்வுப் பண்பாட்டைக் கட்டமைத்துள்ளனர். இதுவே கவனமாக எதிர்க்கப்பட வேண்டியது.

12. உலகத்தின் மையமாக மனிதன் தன்னை கருதிக் கொள்ளும் மனிதமுதல்வாதம் என்கிற ‘ஹோமோ சென்டரிஸம்’ தான் உச்சமாகப் பாசிச கருத்தியலாக வளர்ந்தது. ஐரோப்பா மனிதனை மையமாக வைத்துக் கொண்டே தனது தத்துவார்த்த அறிதலை துவங்குகிறது. Politics of Humanisam பற்றிப் பேசப்பட வேண்டும். மனித நேயம் பேசிய முதலாளித்துவம்தான், மனித அழிவை அதிகப்படுத்தியது, அழகுப்படுத்தியது.

மனிதன் ஒரு பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பிய கண்டுபிடிப்பு என்கிற பூஃக்கோவின் மனித உடலிற்குள்ளான ஆதிகால செரித்தல்கள் பற்றிய ஆய்வு இதனை அம்பலப்படுத்துகிறது. மனிதநேயம் என்பது ஏழை எளிய மக்களுக்காக வருந்தி உதவி செய்வதோ அல்லது பிச்சைக்காரர்களுக்குக் காசுபோடுவதோ, குளிருக்குப் போர்வை தருவதோ அல்ல என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

13. மகிழ்வு, வேட்கை போன்ற உணர்வுகள் எப்படி அதிகார உறவுகளால் ஒரு உடலுக்குள் நுட்பமாகப் பின்னலாக்கப்பட்டு, அதனை அடைவதற்கான பாய்விற்கு உடல்கள் முடுக்கப்படுகின்றன என்கிற வேட்கைகளின் அரசியல் பற்றியது மற்றொரு ஆய்வு. ‘சுயம்’. ‘ஆத்மா’ போன்ற தத்துவார்த்த கூறுகளையே தொழில்நுட்பங்களாக, செய்தி பரிமாற்ற வினையாகக் கருதி நகரும் மொழியாய்வுகள்... அறிதல் என்கிற அடிப்படைச் செயலையே கேள்விக்குள்ளாக்கி விட்டுள்ளது.

இந்த நூற்றாண்டில் புனைவுகளால் புனையப் பட்ட ஒரு புனைவாக வாழ்க்கை மாறிக்கொண்டிருக்கும் உலகில் வாழ்க்கை விசித்திரமாகத் தெரிவதும், இலக்கிய உலகம், இலக்கிய பிறப்பு எல்லாம் விசித்திரமாகத் தெரிவதும் நமது அரசியல் மற்றும் அறிதலின் பிரச்சனைதான். நமது மகிழ்விற்கான வேதியியில் எப்படி அதிகார வினைகளால் இயக்கப்படுகிறது என்பதும் இவ்வாய்வின் தொடர்ச்சியாகும்.

14. புலம் பெயர்ந்த நிலையில் உருவாகும் எழுத்தின் அடையாளம் மற்றும் அரசியல் பற்றிய விவாதம் தேவை. காலனியம் உருவாக்கிய கலப்பின அடையாளம் (Hybrid Identity) பற்றிய ஆய்வுகள் இன்று அவசியப்படுகின்றன. பின்காலனியச் சூழலில் இக்கலப்பின அடையாளத்தின் இயக்கத்தைப் புரிந்துகொள்வது அவசியம். இந்திய மனிதன் என்பவன் சிந்திப்பதில் வெள்ளையனாகவும், நடைமுறையில் கருப்பனாகவும் (இந்தியனாகவும்) இருப்பதே கண்கூடு.

எதையும் சொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பரப்பில் சொல்லப்படும் விஷயங்கள் ஏனோ தானோ என்று இருக்கக்கூடாது என்கிற எழுத்தின் பொறுப்புணர்வு பற்றி அதிகம் அக்கறையும் யோசனைகளும் கொண்டவன் என்பதால், இன்று பெரும் அளவில் விவாதத்திற்குரியதான இக்குறிப்புகள் ஆதாரபூர்வமாக விளக்கப்பட வேண்டியவையா? அல்லது விவாதத்தின் மூலம் நிராகரிக்கப்பட வேண்டியவையா?... என்கிற பிரச்சனையை முன்வைத்து இவற்றைப் பதிவுலக நண்பர்கள் பேசும்பொருளாகக் கொண்டு ஒரு விவாதத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com