Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2007

விடுதலை இயக்கத்தின் விடிவெள்ளி பகத்சிங்கின் நூற்றாண்டு விழா தலையங்கம்

பகத்சிங்கின் பாட்டனார் அர்ஜூன்சிங் பாட்டி ஜெயகவுர் குடும்பம் தீவிர தேசப்பற்று கொண்டது. தந்தை கிஷன்சிங்கும் இரு சித்தப்பாக்களும் வங்கப் பிரிவினைக்கு எதிராகப் போராடிச் சிறைத் தண்டனையை அனுபவித்தனர். கிஷன் சிங்கின் 2வது மகனே பகத்சிங் இவர் 27-9-1907ல் பிறந்தார்.

ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் அரசு நடத்திய கோரமான படுகொலை பகத்சிங்கைப் பொது வாழ்க்கையில் ஈடுபடச் செய்தது. அவர் லாகூர் தேசியக் கல்லூரியில் பயின்ற போது மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் பற்றிய நூல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்குத் தோன்றியது தான் நவஜவான் பாரத சங்கம். பகத் சிங்குடன் சுகதேவ், ஜெய்கோபால், பகவதி சரண், யஷ்பால், துர்க்கா தேவி போன்ற வீரர்கள் உறுப்பினராக இருந்தனர்.

அக்டோபர் புரட்சியும், 1921 ல் காந்திஜி தொடங்கிய சட்டமறுப்பு இயக்கமும் பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் நாட்டின் விடுதலைக்காகவும் சோஷலிச லட்சியத்திற்காகவும் தீவிரமாகப் போராட ஊக்குவித்தன. சட்டமறுப்பு இயக்கம் பெருவீச்சுடன் இருந்தபோது அடக்குமுறை தாங்க முடியாமல் மக்கள் சௌரி சாராவில் போலீஸ் நிலையத்தைத் தாக்கியதும் காந்திஜி இயக்கத்தை நிறுத்தி வைத்தது தவறு என்று பகத்சிங் கருதினார்.

இந்துஸ்தான் குடியரசுக் கழகம் என்ற புரட்சிக்காரர்களின் ரகசிய அமைப்பின் தலைவராக இருந்த சந்திரசேகர் ஆஸாத்தின் நட்பு பகத்சிங்கிற்கு கிடைத்தது. புரட்சி இயக்கங்களை உயிர்ப்பிக்க பல இடங்களுக்குப் பகத்சிங் போகவேண்டியிருந்தது. இதில் அவருக்குச் சுகதேவும் விஜயகுமார் சின்காவும் உதவினார்கள். சக தோழர்களுடன் விவாதித்து நவஜவான் பாரத் சபா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன் தலைவராகப் பகவதி சரணும் செயலாளராகப் பகத்சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘கீர்த்தி’ என்ற ஏட்டின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது ரஷ்யப் புரட்சி, மார்க்சிசம் பற்றிய கட்டுரைகளை பகத்சிங் படித்தார்.

ஜனநாயக சட்டமன்ற ஆட்சியை ஏற்று நடத்த இந்தியா பக்குவம் பெற்றுள்ளதா என்பதை அறிய சர்ஜான் சைமன் தலைமையில் ஒரு குழுவைப் பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்தது. குழு உறுப்பினர்களில் இந்தியர் எவருமிலர்.

அனைவரும் இந்தியாவை முழுதும் அறியாத பிரிட்டிஷ்காரர்கள் அதைப் பகிஷ்கரிக்கும்படிக் காங்கிரஸ் அறைகூவல் விடுத்தது. 1928 அக்டோபர் 30ம் தேதி அந்த குழு லாகூர் வந்தபோது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலாலஜபதிராய் தலைமை தாங்கினார். சாண்டர்ஸ் என்ற காவல்துறை அதிகாரியும் ஸ்காட் என்ற கண்காணிப்பாளரும் லஜபதிராயை அவமரியாதையாகப் பேசியதோடு, அவரைச் சூழ்ந்து நின்று மார்பிலும் தலையிலும் சரமாரியாகத் தடியால் அடித்ததன் விளைவாக அவர் நவம்பர் 17ம் தேதி மரணமடைந்தார்.

இந்தச் செய்தி நாட்டு மக்களை உலுக்கியது. பகத்சிங்கும் அவரது இரு தோழர்களும் போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க முடிவு செய்தனர். பகத்சிங் சுட்டதில் சாண்டர்ஸ் மரணமடைந்தான். பழிக்குப் பழி வாங்கியது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது. பகத்சிங் அவர் தோழர்கள் மீது லாகூர் சதி வழக்குத் தொடரப்பட்டது. “பகத்சிங் லஜபதிராயின் கௌரவத்தைக் காப்பாற்றினார்” என்று பண்டித நேரு குறிப்பிட்டார்.

அதேபோது வளர்ந்துவரும் தொழிலாளி வர்க்க இயக்கத்தை அடக்கி ஒடுக்கப் புதிய மசோதா ஒன்றை சட்டமன்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சி கொண்டுவந்தது.

இதைக் கண்டிக்க வேண்டும் என்று புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி பகத்சிங்கும் இரு குண்டுகளை (ஆளுக்கு ஒன்று) சட்டமன்றத்தில் வீசினர். யாரையும் கொலை செய்யும் நோக்கம் இல்லை, கண்டனம் தெரிவிப்பது மட்டுமே என்பதால் நோக்கம் இருப்பினும் இருவரும் போலீஸ் கைது செய்வதற்குச் இணங்கினர். ஆயுதங்களையும் கீழே வீசி எறிந்தனர் தங்கள் நோக்கத்தை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் வீசினர். இதற்காக நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

பகத்சிங் போலவே அவரது தோழர்களும் நாட்டின் விடுதலைக்காகவும் சோஷலிச லட்சியத்திற்காகவும் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்துகொண்டவர்கள். இந்துஸ்தான் குடியரசுப் படையின் உறுப்பினர்களாக அதன் வழிகாட்டுதலில் தங்களுக்கு அளிக்கப்பட்ட கடினமான புரட்சிப் பணிகளை எவ்விதத் தயக்கமும் இன்றி நிறைவேற்றினர். உயிர்த் தியாகம் செய்வதில் யார் முதலில் என்பதில் போட்டி! ஆழ்ந்த நட்பும் தோழமை உணர்வும் உறுதியாக இருந்தன. குடும்ப நலனைப் புறக்கணித்து நாட்டின் நலனுக்காக வாழ்ந்தனர். திருமணமே செய்துகொள்வதில்லை என்று பகத்சிங் தீர்மானமாக இருந்தார்.

“ஒரு சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு அகிம்சை மட்டும் ஆயுதமாகிவிடாது. அவசியமானால் நமது ஆன்ம வலிமையோடு, தோள் வலிமையையும் பிரயோகித்துத்தான் ஏகாதிபத்திய அரசைத் தூக்கி எறியவேண்டும் என்பதுதான் பகத்சிங் மற்றும் புரட்சியாளர்களின் கருத்தாகும்” என்ற பகத்சிங் மற்றும் தோழர்கள் என்ற நூலில் தோழர் எஸ். ஏ. பெருமாள் கூறுகிறார். வன்முறையை லட்சியமாக இவர்கள் கருதவில்லை. தாக்குதலை முறியடிக்க மட்டுமே.

இந்தச் சந்தர்ப்பத்தில் 1942 ஆகஸ்ட் இயக்கம் பற்றிக் காந்திஜி கூறியுள்ளதை நினைவு கூரலாம். 1942 ஆகஸ்ட் 8ம் நாள் காங்கிரஸ் மாநாட்டில் “வெள்ளையனே வெளியேறு” “செயல்படு அல்லது செத்துமடி” என்ற முழக்கத்தை முன் வைத்தார். காந்திஜி வைஸ்ராயைச் சந்தித்துப் பேச இருந்தார். ஆனால் ஆத்திரமூட்டும் முறையில் காங்கிரஸ் தலைவர்களையும் ஊழியர்களையும் இரவோடு இரவாக அரசு அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த தேசபக்தர்கள் சில இடங்களில் வன்முறையில் இறங்கினர். இது பற்றி வைஸ்ராய், காந்திஜிக்கு எழுதினார். அதற்குப் பதில் அளித்த காந்திஜி. தேசபக்தர்களுக்கு எதிராகக் கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்ட உங்கள் அரசுக்கு இது பற்றிப் பேச எந்தத் தார்மிக உரிமையும் இல்லை என்றார்.

பகத்சிங், அவர் உயிர்த் தோழர்கள் மீது தொடரப்பட்ட நாட்டையும் உலகத்தையும் ஈர்த்த லாகூர் சதிவழக்கில் 1930 அக்டோபர் 7ம் தேதி அன்னிய ஆட்சியின் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விவாதிக்கச் சந்தர்ப்பம் அளிக்காமல் தீர்ப்பு வழங்கியது. பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. தூக்குத் தண்டனை பெற்ற 3 தோழர்களும் எவ்விதத் தயக்கமும் இன்றி தூக்குக்கயிற்றைத் தழுவினர்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்ற குறிப்பிட்ட நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே பகத்சிங்கிற்கு தூக்குத் தண்டனை நிறைவேறியது. குறிப்பிட்ட நாளில் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்குமானால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும் எனும் அச்சமே காரணம். சிறை அதிகாரி அழைக்க வந்தபோது பகத்சிங் லெனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக் கொண்டிருந்தார். ‘நான் புரட்சிவாதி, மற்றொரு புரட்சிவாதியுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறேன் சிறிது பொறுங்கள்’ என்று கூறினார்.

இந்த மூவரின் பெற்றோர்களும் உறவினர்களும் அவர்களைச் சந்திக்கச் சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தூக்குக்கயிறைத் தழுவும் முன் ‘புரட்சி ஓங்குக’ என்று கோஷமிட்டனர். மற்றவர்களில் கிஷோரிலால், மகாவீர்சிங், விஜயகுமார்சிங், சிவ வர்மா, கயா பிரசாத், ஜெயதேவ், பி. கே. தத், கே. என். திவாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், குந்தன்லாலுக்கு ஏழாண்டு, பிரேமதத்தாவிற்கு மூன்றாண்டுச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டன. அஜய்குமார் கோஷ், சன்யால், கேஸ்விக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகத்சிங்கின் சகாவான அஜய்குமார் கோஷ் ஐம்பது, அறுபதுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். லாகூர் வழக்கின் தீர்ப்பைப் பற்றிப் பின்வருமாறு அவர் கூறுகிறார்.

“இந்த நாட்டில் நடந்த எந்த சதிவழக்கும் 1929 - 30 இல் நடந்த லாகூர் சதி வழக்கைப் போலப் பொது மக்களின் கவனத்தைக் கவர்ந்தது கிடையாது. மத்திய சட்டசபையில் குண்டுவெடித்த நாளிலிருந்து பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று வீரர்களும் தூக்குக் கயிற்றில் தொங்கிய நாள் வரையிலும் அந்தக் கைதிகள் மீதும், அந்த வழக்கின் மீதும் அரசியல் கைதிகளின் உரிமையைப் பாதுகாப்பதற்காகவும் தாங்கள் கொண்ட லட்சியங்களுக்காகவும் அவர்கள் நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் மீதுமே பொதுமக்களின் முழுக் கவனமும் திருப்பப்பட்டது.

பகத்சிங்கும் அவரது தோழர்களும் பல வீரக்கதைகளின் நாயகர்களாயினர். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அவர்களை ஏற்றிப் போற்றும் கவிதைகளும் பாடல்களும் முழங்கின”

பண்டித ஜவஹர்லால் நேரு தமது துக்கத்தை இவ்வாறு தெரியப்படுத்தினார்:
“நமக்கு யார் மிகவும் அன்பானவனாக இருந்தானோ, எவனுடைய மகத்தான தைரியமும் தியாகமும் இந்திய இளைஞர்களுக்கு ஆதர்ஷமாக விளங்கினவோ அவனை நம்மால் எவராலும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது”.

சோவியத் நாளேடு “பிராவ்தா” 1931 மார்ச்சில் பின்வருமாறு எழுதியது:
“லாகூர் மரண தண்டனையையொட்டி ஏற்பட்ட மக்களின் கோபாவேசம் மேன்மேலும் பெருகிவருகிறது. இந்திய அரசியல் வாழ்வின் பிற எல்லா நிகழ்ச்சிகளையும் லாகூர் மரண தண்டனை பின்னுக்குத் தள்ளிவிட்டது” இத்தோழர்களைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து நாடெங்கிலும் கண்டனக் கூட்டங் களும் பேரணிகளும் வேலை நிறுத்தங்களும் அலைபோல் எழுந்தன.

காந்தி - இர்வின் பேச்சின்போது இந்த மூன்று தோழர்களின் மீதான தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வைப்பார் என்ற கருத்து நாடு முழுவதிலும் தேசபக்தர்களிடையே இருந்தது. ஆனால் காந்திஜி அதைக் கண்டு கொள்ளவில்லை என்பது ஏமாற்றத்ததை அளித்தது.

மரண தண்டனை அடைந்த தோழர்களின் நினைவுக்கு பகத்சிங் நூற்றாண்டு விழாவில் அஞ்சலி செலுத்துவதும் தண்டனை அடைந்த, கஷ்டங்களை எதிர்கொண்ட பிற தோழர்களின் செயல்களைப் பாராட்ட வேண்டியதும் இன்றைய மக்களின் கடமை.

கீழ்க்கண்ட மூன்று தோழர்களின் மரணம் நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அரசாங்கத்தின் அலட்சியத்தால் மரணமடைந்தவர் ஜதீன்தாஸ்.

பகவதி சரண் வெடி குண்டைச் சரிபார்க்கும்போது அது வெடித்துச் சிதறியது. அவரது மனைவி துர்க்காதேவி நிலை குலைந்து போகாமல் அவரைப் பின்பற்றி உறுதியாக நின்று தொடர்ந்து புரட்சிப் பணிகளில் ஈடுபட்டுப் பெருமை பெற்றார். புரட்சிப் படையின் தளபதியும் நீண்டகாலம் போலீஸில் சிக்காமலிருந்தவருமான சந்திரசேகர் ஆசாத்தைத் துரோகி ஒருவன் காட்டிக் கொடுத்ததால் தன்னந்தனியே போலீஸ் படையுடன் போராடி வீரமரணம் அடைந்தார்.

சிறைத் தண்டனையை அனுபவித்த தோழர்கள் வெளி வந்த பின் கம்யூனிஸ்ட், தொழிற்சங்க இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டது பற்றிப் பெருமைப்படலாம்.

இன்றையச் சமூக அமைப்பைத் தூக்கி எறிந்துவிட்டுச் சோசலிச அமைப்பைக் கட்டுவதுதான் இளம் அரசியல் ஊழியர்களின் கடமை என்று 2-2-1931ல் வெளியிட வேண்டுமென பகத்சிங் வலியுறுத்தினார். மார்க்சிய தத்துவத்தைப் பின்பற்றித் தொழிலாளர்கள் விவசாயிகளைத் திரட்டுமாறும் அந்த வேண்டுகோளில் கூறினார்.

‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற விஞ்ஞான அடிப்படையிலான நீண்ட கட்டுரையைப் பகத்சிங் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதை முப்பதுகளின் துவக்கத்திலேயே எளிய நடையில் தமிழாக்கம் செய்து தமிழறிஞரும் கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் ப. ஜீவானந்தம் வெளியிட்டார். மொழிபெயர்த்து வெளியிட்ட ஜீவாவும் பெரியாரின் தமையனார் ஈ.வே.ரா.கிருஷ்ணசாமியாரும் தண்டிக்கப்பட்டனர். பேச்சுரிமை எழுத்துரிமைக்காகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் புரட்சிகரமான பணிகளும் தியாகமும் விடுதலை இயக்கத்திற்கு உத்வேகத்தை அளித்ததோடு இளைஞர்களை விடுதலை இயக்கத்திற்குப் பெரிய அளவில் ஈர்த்தன. சோஷலிசக் கருத்துக்களுக்கு ஆதரவு பெருகியது. இவர்களைப் போன்ற எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தின் விளைவாக நம் நாடு சுதந்திரமடைந்தது. இதுபற்றி எடுத்துச் சொல்ல, நூல்கள் வெளியிட இந்த நூற்றாண்டு விழா நல்ல சந்தர்ப்பத்தை அளித்துள்ளது. இவர்களின் லட்சியங்கள் நிறைவேற பாடுபடவேண்டும். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் 25 கோடி மக்களுக்கு ஒருவேளைச் சோறுதான் கிடைக்கிறது.

எல்லோருக்கும் வேலை, கல்வி, சுகாதாரம், இருப்பிடம், குடி தண்ணீர் என்ற நோக்கில் செயல்பட வேண்டியது அவசியம். சாதிபூசலும், வகுப்புக்கலவரமும் நமது முன்னேற்றத்திற்குத் தடைகளாக உள்ளன. ஏகாதிபத்தியச் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு, நமது சுதந்திரமும் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான உறுதிமிக்க செயல்பாடு கொண்ட இளைஞர்கள் வேண்டும்.

பகத்சிங் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்! மக்கள் வாழ்க்கை சிறப்புறப் பாடுபடுவோம்!!!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com