Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

மனித சமூகத்தின் வளர்ச்சியின் உச்சம்தான் கலை: யூமா. வாசுகி
நேர்காணல்: முத்தையா வெள்ளையன்

உனக்கும் உங்களுக்கும், தோழமை இருள், இரவுகளின் நிழற்படம், அமுதபருவம், வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு ஆகிய கவிதை தொகுதிகள், உயிர்திருத்தல் என்ற சிறுகதை தொகுப்பு, இரத்த உறவு என்ற நாவல், Marooning Thickets என்ற ஓவியங்களின் தொகுப்பு ஆகியவற்றின் படைப்பாளி. மலையாளத்திலிருந்து 11 சிறுவர் நூல்களை மொழி பெயர்த்தவர். இரண்டு இதழ்களே வெளிவந்த ‘மழை’ இதழின் ஆசிரியர். விட்டு விட்டு வந்தாலும் விடாமல் எட்டு இதழ்களாக வரும் குதிரைவீரன் பயணம் இதழின் ஆசிரியர். சொல்புதிது இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இதழான துளிர் ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர்.

கணையாழி, புதியபார்வை போன்ற இதழ்களில் பணியாற்றியவர். இவர் எழுதிய ரத்த உறவு நாவலும், இரவுகளின் நிழற்படம் என்ற கவிதை நூலும் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றவை. மரகத நாட்டு மந்திரவாதி என்ற சிறுவர் இலக்கிய நூலுக்காக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் என்சிபிஎச் வழங்கிய மொழிபெயர்ப்புக்கான தொ.மு.சி. ரகுநாதன் விருதை இந்த ஆண்டு பெற்றவர். ஸ்ரீராமன் கதைகள் என்ற மலையாள சிறுகதை தொகுப்பை சாகித்திய அகாதெமிக்காகவும், சிங்கிஸ் ஐத்மாத்தோவின் ஒட்டகக் கண் எனும் குறுநாவலை என்சிபிஎச் வெளியீடுக்காக மொழி பெயர்த்துக் கொண்டிருந்தபோது உங்கள் நூலகம் நேர்காணலுக்காக சந்தித்தோம்.

உங்கள் முதல் கவிதைத் தொகுப்பு பற்றி....

உனக்கும் உங்களுக்கும் என்ற கவிதைத் தொகுப்புதான் முதலில் வந்தது. அப்போது கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். தீவிரமாக கவிதை எழுதிக்கொண்டிருந்தேன். அவை கவிதை குறித்து எதுவும் தெரியாமல் பொதுவான ஆர்வத்தால் உந்தப்பட்டு எழுதப் பட்டவை. சேர்ந்த 60, 70 கவிதைகளிலிருந்து தேர்வு செய்து ஒரு தொகுப்பு கொண்டுவர நானும், என் நண்பன் அறிவுச் செல்வனும் விரும்பினோம். கையில் காசு இல்லை. அறிவுச் செல்வனின் அக்காவின் செயினை வாங்கி இதற்காக விற்றோம். அந்தத் தொகுப்பைக் கொண்டு வர இரண்டாயிரம் ரூபாய் செலவானது. ஏதோ அவசரத் தேவைக்கு வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். திரும்பக் கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து இருந்தார் அந்த அக்கா. ஆனால் அப்படி நடக்கவில்லை. அவரும் இறந்துவிட்டார். என் ஒவ்வொரு கவிதையும் என் பிரியமான அந்த செல்வி அக்காவிற்கு கடமைப்பட்டவை.

‘உனக்கும் உங்களுக்கும்’ தொகுப்பில் ஒரு முன்னுரை எழுதி இருந்தேன். ஆசிரியரைக் குறித்தும், அந்தப் புத்தகத்தின் விஷயங்களைக் குறித்தும் வெகுவாகச் சிலாகித்து எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான முன்னுரைகளைப் படித்ததினால், ஒரு எதிர்ப்பு உணர்வில் எழுதப்பட்ட முன்னுரைதான் அது.

இதில் என்னை நானே அதி கேவலமான மனிதனாக சித்தரித்திருப்பேன். அதாவது நான் மொடாக் குடிகாரன் போல, குடித்துவிட்டுத் தெருவில் வீழ்ந்து கிடப்பது போல, பல்வேறு விலை மகளிருடன் உறவு வைத்திருப்பது போல.... இப்படியெல்லாம் அந்த முன்னுரையில் வரும். அந்தப் புத்தகம் வந்தபோது ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதன் ஆசிரியரிடம் எப்படியோ அந்தப் புத்தகம் அகப்பட்டுவிட்டது. அவர் உடனடியாக என்னை அழைத்துச் சொன்னார். “நீங்கள் இது போன்ற நபராக இருப்பது பற்றி எங்களுக்குப் பிரச்சினை இல்லை. அது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் இப்படிப்பட்ட ஆட்களை நாங்கள் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டோம்” என்று என்னை வெளியேற்றினார்.

குமுதத்தில் சுஜாதா ஆசிரியராக இருந்தபோது அந்த முன்னுரையைப் பிரசுரித்தார். அது குறித்து எனது முகவரிக்கு நிறைய கடிதங்கள் வந்தன. என்னைக் காந்தியைப் போன்று அப்பட்டமான நேர்மையாளனாக சித்தரித்தும், மகா இழிந்தவனாகக் குற்றம்சாட்டியும் கடிதங்கள் வந்தன. விருது நகரிலிருந்து ஒரு பெண் கடிதம் எழுதியிருந்தார். “நான் பார்ப்பதற்கு வறுமையாக இருப்பனே தவிர, அழகாக இருப்பேன். நான் சொல்வதைப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை வெகு நாட்கள் ஒளித்து வைத்துப் படித்து கிளுகிளுப்பு அடைந்தேன். எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி போன்றவர்கள் ‘உனக்கும் உங்களுக்கும்’ தொகுப்பில் உள்ள நல்ல அம்சங்களைத் தொட்டுக் காட்டினர். சி. மோகன்தான் என்னைக் கவிஞனாக உருவாக்கினார்.

கவிதை எழுதுவதற்கான மனநிலை. . .

அது வரையறுத்தலுக்கு அப்பாற்பட்டது. மிக நெருக்கடியான ஒரு சூழலில், நிற்பதற்கு கூட இடமற்ற ஒரு பேருந்துக் கூட்டத்தில் பிதுங்கிப் பயணம் செய்யும்போது என் கவிதை வெளியில் மிக சுதந்திரமாக நான் பிரவேசித்து இருக்கிறேன். அந்த நெருக்கடியிலும் என் கவிதையை இயல்பாகப் பின்னிய படியே பயணித்து இருந்திருக்கிறேன். அதே சமயம் என் நீண்ட, மிக ஏதுவான, எந்தத் தொந்தரவும் இல்லாத ஓய்வுகளில் என்னால் ஏதுவும் எழுத முடிந்ததில்லை.

லௌகீக சிந்தனைகளுடன் தாஸ்தயேவ்ஸ்கி சாலையில் சென்று கொண்டிருக்கிறபோது, அந்தக் கவித்துவத்தின், படைப்பு மனநிலையின் மந்திரக்கோல் பிரக்ஞையில் பட்ட மாத்திரத்தி லேயே உயர்வான படைப்பு எழுச்சி நிலைக்கு ஆட்படுகிறார். இப்படி ஒரு குறிப்பு வெண்ணிற இரவுகளில் வருகிறது.

கவித்துவத்தின் பறவை இடையறாது மாந்திரீகத்தில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அது நம் தோளடையும் தருணத்தை நாம் நிதானிக்க இயலாது. படைப்பு மன நிலை என்பது முற்றிலும் அரூபம் சார்ந்தது. ஒருவித மாயத் தன்மையுடனும், எல்லையற்ற சுதந்திரத்தோடும்தான் படைப்பின் மனநிலை இயங்குகிறது. இந்த மன நிலையைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் ஆகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையின் ஓரத்தின் கல்லில் அமர்ந்து அழுதபடியே என் சில கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன். மனநிலை வாய்ப்பது என்பது மிக முக்கியமானதாகும். பாரதியார் கூட சில வருடங்கள் எட்டய புரம் மகாராஜாவின் விருந்தினராக இருந்த போது எழுதாமல் இருந்திருக்கிறார். சுந்தரராமசாமி போன்றவர்களும் பல வருடம் எழுதாமல் இருந்திருக்கிறார்கள்.

ஆகச் சாதாரண அற்ப விஷயம் கூட படைப்பு மனநிலையைப் புரட்டிப் போட்டுவிட முடியும். பழக்கப்பட்ட டீ குவளை காணாமல் போனால் கூட படைப்பாளிக்கு மிகுந்த சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. உயிர் கொல்லும் மனவாதையில் இருக்கும்போது படைப்பிலே அற்புதங்கள் துலங்கலாம். அதற்கு முரணாகவும் இருக்கலாம்.

கவிதையில் பாடுபொருள் எது என்பதை எப்படித் தீர்மானிக்க முடியும்?

அண்டசராசரத்தில் உள்ள அத்தனையுமே பாடுபொருள் தான். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இதில் அடிப்படையானது நம்முடைய நோக்குதான். ஒரு விஷயத்தை நாம் எப்படி அணுகுகிறோம், நம்முடைய அனுபவ சாராம்சத்திலிருந்து, ரசனை நுட்பத்திலிருந்து, அதற்கு என்ன அர்த்தம் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்த இடம்தான் ஒரு படைப்பாக மாறும் இடம்.

இல்லை... பாடு பொருள் என்கிற விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தீர்மானிக்கிறார்கள். நீங்கள் எதைப் பாடு பொருளாக வைத்துக்கொள்ள முடியும் என்று தீர்மானிக்கிறீர்கள்...

கவிதை என்னிடம் அதன் முதல் தீண்டல்களை உணர்த்துகின்ற சந்தர்ப்பம், பிறகு அது வளர்ந்து வருகிற சூழல் இவை இரண்டுமே பாடு பொருளைத் தீர்மானிக்கின்றன. அதாவது கவிதையின் முதல் பொறிக்கும் அது உருப்பெற்று வெளியேறுவதற்குமான இடைவெளியில்தான் பாடுபொருள் தீர்மானமாகிறது. முன்தாரணையுடன், இதைப்பற்றித்தான் எழுதியாக வேண்டும் என்று யாருமே கவிதையிடம் செல்ல முடியாது என்றுதான் தோன்றுகிறது. இது சகல கணக்கீடு களுக்கும் அப்புறத்தில் நிற்கிறது.

சங்கக் கவிதைகள், பிறகு புதுக்கவிதைகள் என்று... புது வடிவங்களும் பரந்துபட்ட வாசிப்புகளும் தோன்றின. நவீனக் கவிதைகளில் வடிவமாற்றம் பெரியதாக இல்லை என்றே தோன்றுகிறது. வாசகனுக்கு வாசிப்பதில் சிக்கல் இருக்கிறது. இந்தச் சிக்கல் மொழியால் அல்லது வடிவத்தால் ஏற்படுகிறதா?

இலக்கியக் கோட்பாடுகள் என்பதை இறுக்கமாக அணிந்து கொள்வதில் எனக்கு இசைவு இல்லை. ஓலைச் சுவடிகளில் எழுதிய காலத்தில் எழுது பொருட்கள் குறைவு. சுருங்கச்சொல்லி விளங்க வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இன்னமும் அதே பாணியை ஏன் விடாப்பிடியாகப் பின்பற்றுகிறோம் என்று தெரியவில்லை. கவிதை என்பதுதான் பிரபஞ்சத்தின் சுதந்திரம். கவிதையுடனான உரையாடல் அதே சுதந்திரத்துடன் நிகழவேண்டும். முதலில் பென்சிலால் எழுதுவது, பேனாவால் எழுதுவது பிறகு நான்கு, ஐந்து முறை திருத்தி திருத்தி பிரதி எடுப்பது போன்ற நடவடிக்கைகளின் அளவு கடந்த ஜாக் கிரதைத்தனம் ஒரு வகையில் கவிதார்த்தத்தின் எதிர் நிலையில் இருக்கிறது.

இறுக்கமான வடிவமாக மட்டும்தான் கவிதை இருக்க வேண்டுமா? நம் அகத்தின் வாழ்வுதானே கவிதை. அதில் பிசிறு இல்லாமல் இருந்துவிட முடியுமா? அளவு கடந்து செதுக்கிச் சீர் படுத்துவதன் மூலம் கவிதையை அதற்கு முரணாக மாற்றுகிறோம். கவிதை எப்போதும் கவிதைதான். சங்க இலக்கியமாக இருந் தாலும், நவீன கவிதையாக இருந்தாலும்.

சங்க இலக்கியக் கவிதைகளையும் நவீனக் கவிதைகளையும் படித்துத் தொகுத்த நண்பர்கள், சங்க இலக்கியத்தின் கவிதைத் தரத்தை நவீன கவிதை எட்டவில்லை என்று கூறுகிறார்கள். சங்க இலக்கியத்தில் உள்ள அதி நுட்பமான கவிதைகளை உதாரணம் காட்டிப் பேசும்போது நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சங்கத்தையும், நவீனத்தையும் ஒப்பிட்டு ஆராய வேண்டிய பணி மிகவும் முக்கியமானது. சமீப கால கவிஞர்கள் தங்கள் இயக்கத்திற்காக அபாரமான கவிதை வெளிகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நவீனத்தின் பல கவிதைகள் மனநிலையின் மேல் அடுக்குகளில் உள்ள கசடுகளை ஊடுருவி உள்ளார்த்தமான ஸ்படிக நீரோடையை தொடும் கவிதைகள். மிக சமீபத்தில் பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகளை வாசித்தது அரிய அனுபவம்.

திரும்பவும் வாசிக்கிற தன்மைக்குதான் வர வேண்டியிருக்கு. கவிஞனும், வாசகனும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதுதான் இன்றைக்கு நவீன கவிதையுடைய நிலைமையாக இருக்கிறது...

வாசகன் படைப்பாளியின் பார்வையை அடியொற்றி வரவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அணுகுமுறை இரண்டு விதங்களில் சம்பவிப்பதாக இருக்கலாம். படைப்பாளி தன் படைப்பில் மிக உயர்ந்த விஷயத்தை ஸ்தாபித்த நிலையில் வாசகன் மிக எளிமையாகவும் மிக திரிபாகவும் புரிந்துகொள்ள நேரலாம்.

மற்றொன்று, படைப்பாளி கருதியிருந்த விஷயத்தை விடவும், படைப்பு தன்னுள் பொதிந்து கொண்டிருக்கிற வீரியத்தை விடவும் மேலதிகமான உயரத்திற்கு அதை வாசகன் தன் நோக்கால் எழும்பச் செய்யலாம். படைப்பிலக்கியம் அனைத்திற்கும் இது பொருந்தும். படைப்பு பல்வேறு பரிமாணங்கள் கொண்டது என்பதே நவீன கலையின் போக்குவழி. இந்நிலையில் ஒரு கோட்டில் இருவரும் பயணிப்பது என்பது நடக்க இயலாதது.

ஒரு ஓவியத்தைச் சமீபிக்கும்போது ஓவியத்தின் நுட்பங்களுடன் சிறிதாவது பழகிய அனுபவம் வேண்டும். எழுத்தில் வாசிப்பு அனுபவமே பிரதானம். இது இல்லாமல் ஒரு படைப்பு எடுத்த எடுப்பிலேயே தன்னை அப்பட்டமாக இனங்காட்டிக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. படைப்பும், படைப்பாளியும் உறவுகொண்டு ஒரு போலச் செழுமை பெற வாசக தளத்திலிருந்து முயற்சி கோரப்படுகிறது.

ஓவியம் என்பதே அந்நியத் தன்மையில்தான் இருக்கிறது. நாவல், சிறுகதை போன்ற வடிவங்களை அணுகுவது சுலபம். ஓவியத்தின் தன்மையிலே கவிதையும் வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது....

நவீன ஓவியம், நவீன இலக்கியம் இரண்டுமே மேற்கத்திய தாக்கத்தினால் விளைந்தவைதான். ஓவியமாக இருந்தாலும், சிறுகதையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும் இன்ன பிற கலை வடிவங்கள் எதுவாக இருந்தாலும் அதன் கவிதார்த்த உட்கிடையிலேயேதான் அதன் தரம் தீர்மானிக்கப்படுகிறது. இறைமையின் வடிவங்களை பல்வேறாகச் சொல்வது போல கவித்துவத்தின் சாரங்கள் எனக் கலை வடிவங்களை காணலாம்.

கவிதை, சிறுகதை, நாவல் என்று ஒரு படைப்பாளி பயணம் செய்வதை வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாமா?

இது வளர்ச்சி இல்லை. இயல்பு. ஓவியன் வான்கா மிகப் பெரிய இலக்கிய தாகம் கொண்டவன். அவன் சாகோதரன் தியோவிற்கு எழுதிய கடிதங்கள் எல்லாம் இலக்கியப் பதிவுகள் தான். இது கலைஞர்களின் ஆளுமைப் பண்பு. மனித சமூகத்தின் வளர்ச்சியின் உச்சம்தான் கலை. அதற்கு மேல் எப்படி வளர முடியும்? கலைஞனுக்குக் கலை என்பது தகுதி கிடையாது. அவனுக்கான வாழ்கை முறை அது. அவன் ரசவாதி. கூடு விட்டு கூடுபாய்பவன். கடவுளைப் போல அனைத்திலும் நிறைந்து இருப்பவன்.

கவிதைக்கான தளம், அதற்கான படைப்பு, அதற்கான வாசிப்பு தளர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா?

படைப்புத் தருணங்களில் ஒரு கவிதையைப் பின்தொடர்ந்து போய் அதன் நெருக்கடியான வழிகளில் எல்லாம் பயணம் செய்து, இறுதியில் கொண்டு வந்து எதிரே நிறுத்தும் போது ஏற்படுகின்ற ஆன்ம சௌந்தர்யம் மட்டுமே படைப்பாளியை மேற்கொண்டு இயங்க வைப்பதற்கான உயிர். அந்தப் படைப்பு, அவன் மூலமாக வெளிப்படும் தருணம் அரிய மலர்ச்சிக்கு ஒப்பானதாகும். படைப்பில் மூழ்க மூழ்க இந்தப் பரவச உச்சங்களே லௌகீகக் திறமைகளை மழுங்கடிக்கின்றன. இதனாலேயே பல சந்தர்ப்பங்களில் படைப்பாளிகள் சமூகத்திற்கு மிக அந்நியமா கிறார்கள். தாஸ்தயேவ்ஸ்கி, காப்கா, புதுமைப்பித்தன், பிரமிள், நகுலன் போன்றவர்களை இவ்வகையில் குறிப்பிடலாம். மார்க்கோஸ் போன்ற சில விதிவிலக்குகள் உண்டு.

எந்த ஒரு நல்ல படைப்பாளியையும் நாம் பெரிய அளவுக்குக் கொண்டாடுவது இல்லை. திறந்த மனதுடன் படைப்பாளிகளை அங்கீகரிப்பதில்லை. சூழ்ந்த நெருக்கடிகள் அநேகம் இருப்பினும் படைப்பவன் எங்கிருந்தாலும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன், தீவிரமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறான். உக்கிரமான நதியை எதனுள் நாம் அடக்கி விட முடியும்? படைப்பது மட்டுமே படைப்புச் செயல்பாடு அல்ல. கலையின் அருள் திகைந்த படைப்பாளியின் சமூக இருப்பே பெருங்கலை இயக்கம்தான்.

மலையாளக் கவிதைகளையும், தமிழ்க் கவிதைகளையும் ஒப்பிட முடியுமா?

நான் படித்த வரையில் தமிழ்க் கவிதைகளை விட மலையாளக் கவிதைகள் பெரிய பாய்ச்சலை ஒன்றும் எட்டிவிடவில்லை. ஆயினும் நவீன இலக்கியம் குறித்து அக்கறையும் விழிப்புணர்வும் அவர்களிடம் தீவிரமாக இருக்கின்றன. குழந்தை இலக்கியம் பற்றி விரிவான செயல்பாடு அங்கே இருக்கிறது. இலக்கிய வாதிகளுக்கான மதிப்பும் மரியாதையும் கணிசமான அங்கீகாரமும் இருக்கிறது. நாம் நமது மிகப் பெரிய இலக்கிய சாதனையாளர்களை மிக அலட்சியமாக நலிவிற்குள் தள்ளியிருக்கிறோம். அங்கே புத்தகங்களின் விற்பனை அபரிமிதமாக இருக்கிறது. மக்கள் திருவிழாவிற்கு வருவது போலப் புத்தகக் கடைகளுக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். பல தடவை இதை நான் சந்தோஷமாக வேடிக்கை பார்த்து நின்றிருக்கிறேன்.

மொழி பெயர்ப்பில் தனி மனித செயல்பாடு கா.ந.சு.வில் இருந்துதான் ஆரம்பிக்கிறது....

கா.ந.சு.வின் பொய்தேவு நாவல் நவீன நாவலின் தொடக்கமாகக் குறிக்கப்படுகிறது. கா.ந.சு. மிக முக்கியமான படைப்பாளியும், தமிழ் இதுவரை அறிந்ததிலேயே மிகப் பெரிய படிப்பாளியும் ஆவார். கா.ந.சு. தான் இறப்பதற்குச் சில தினங்கள் முன்பு கூட ஆழ்ந்த முனைப்புடன் செயல்பட்டார். கா.ந.சு. அளவுக்கு விரிவான வாசிப்பும் மொழி பெயர்ப்பில் அபார ஞானமும் பெற்றவர் வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம். கா.ந.சு. என்ற நல்ல உள்ளத்தின் இடையறாத தூண்டுதலால்தான் நான் ‘அறுவடை’ நாவலை எழுதினேன் என்று சொல்வார் சண்முகசுந்தரம்.

உங்களுடைய கவிதைகளில் அதிகமாகப் பசியைப் பற்றிதான் இருப்பதாக சொல்கிறார்களே...

இல்லை. அது பசி மட்டும் கிடையாது. அதனுடன் சில விஷயங்கள் இணைந்து வெளிப்பட்டு இருக்கின்றன. பசி மட்டுமாகவே இருந்தாலும் கூட அது அற்புதமான பாடுபொருள். இந்தப் பொருளில் என்ன உன்னதம் குறைபட்டுவிட்டது? ‘பசி’களைப் பற்றி எழுதும்போது அதை எப்படி எழுதியிருக்கிறோம் என்பது தானே முக்கியம். என்னுடைய பசியை, ஒளிரும் உணர்வுப் பட்டைகள் வழியாக அடுத்தவனுக்கு ஏன் தரிசனம் ஆக்கக் கூடாது. இவர் பசியைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று போகிற போக்கில் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.

ஒரு பிரதி எழுதி முடிக்கப்பட்டவுடன், அந்த பிரதிக்கும் ஆசிரியருக்கும் தொடர்பில்லை என்றும் ஆசிரியர் இறந்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்...

இதில் முற்றிலும் உடன்பாடு உண்டு. ஒரு படைப்பு உருவாகி முழுமை பெற்று வருகிற வரையிலான ஆன்மீக வாழ்க்கைதான் படைப்பாளிக்குச் சொந்தம். படைப்பு வெளியான பிறகு அது வாசகனுக்கான சொந்த விஷயம். அதில் படைப்பாளி தலையிட முடியாது. அந்தப் படைப்பு தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி நிற்பது கூட பொருந்தாத ஒன்றாகவே தோன்றுகிறது.

படைப்பு என்பது ub normal ன்னு சொல்றாங்களே...

Normal என்று எதுவும் கிடையாது. ஒன்றை ub normal என்றால் normal எது என்று காட்டவேண்டும். உலகத்தில் உள்ள எந்த மனிதனையும் இயல்பானவன் என்று சொல்ல முடியாது. சில உடல் பாவனைகளை, சில பேச்சு வழக்குகளை, சில பழகும் தொனிகளை நம் வசதி கருதி நாம் பொதுவாக சமைத்துக் கொண்டு இருக்கிறோம். மனதின் அகழ்ந்த பயணத்தின் போது தான் அத்தனை மலினங்களும், அதற்கு நேர் எதிரான தன்மைகளும் வெளிப்படும். இதுதான் யதார்த்தம். இது யதார்த்தமில்லை என்று துல்லியமாகச் சொல்லமுடியாது. இரண்டுக்குமான வித்தியாசம் ஒரு புகை நூல் போலத்தான். படைப்பு இயக்கம் என்பது முற்றிலும் ub normal தொடர்புடையதுதான்.

காப்காவின் மனநிலை, தாஸ்தயேவ்ஸ்கியின் மனநிலை, வான்காவின் மனநிலை பற்றியெல்லாம் நிறைய ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

படைப்பு இயக்கமே மந்திரத்தன்மையும், பூடகமும் அருப வெளிகளும் நிறைந்த உலகம்தான். இதன் ஊடேயான ஒருமுகப் போக்கில் பிரக்ஞையற்ற, மனதின் ஆழத்தில் சித்தம் பதற்றமுறும் சில நிலைகளைக் கடந்து வராமல் இருக்க முடியாது. இந்த பிரக்ஞை திரிந்த தன்மையை நான் பெரிதும் நம்புகிறேன். பொங்கி மிதப்பதும் மூழ்கி மரிப்பதுவுமான தத்தளிப்பில் புதிய சுவாலைகள் சுடர்கின்றன.

ஒரு படைப்பாளி தன்னுடைய பிரதிக்கு நேர்மையாக இருக்க வேண்டுமா?

நேர்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இருக்கவும் முடியாது. உதாரணமாக வேறு களத்தில் வேறு துறையில் செயல்பட்டு, அதன் சகல கூறுகளை உள் வாங்கி உயிர்ப்போடு கொடுத்தால் அது என்னுடைய சொந்த வாழ்க்கையாகிவிடுமா? அது படைப்பு ரீதியான இன்னொரு வாழ்க்கை. இன்னொரு பரிமாணம். இது என்னுடைய வாழ்க்கை என்று எப்படி சொல்லமுடியும்?

ஒரு படைப்பில் ஈடுபடும்போது அந்தப் படைப்பு நிர்ப்பந்திக்கக் கூடிய விஷயங்களில் அந்த படைப்பாளி நேர்மையாக இருக்கவேண்டும். அதாவது அந்தப் படைப்பு அவனுள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவன் அதற்குப் பரிபூர்ண விசுவாசமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் அது காத்திரமான படைப்பாக வெளிப்படும். படைப்பு வேறு. படைப்பாளி வேறுதான். அதிகபட்சம் தன் படைப்பின் உருவாக்கத்தில் உண்மையாக இருக்க வேண்டும். அவன் பறவையாக கூடு பாய்ந்து இருந்தால் அப்பட்டமாக ஒரு பறவை அந்த படைப்பின் பக்கங்களில் வாழவேண்டும். இன்னொன்று, படைப்பின் அடிப்படையாக படைப்பாளியின் ஆளுமைப் பண்பே விரிந்து கிடக்கிறது.

நாவல் கட்டமைப்பில் பெரிதாக மாற்றம் வரவில்லை என்று சொல்கிறார்கள்....

வடிவம் சார்ந்து நாவல், சிறுகதை இவற்றில் அதிகமான அளவில் பரிசோதனை முயற்சிகள் வரவில்லை. ஆனால் கவிதை சார்ந்து நிறைய சோதனைகள் நடந்திருக்கின்றன. எத்தகைய பரிசோதனை முயற்சிகளும் தன்னுள் வலுவான கலைச்சரடை கொண்டிருக்கவில்லை எனில், காலத்தில் மிதப்பதற்கு முகாந்திரமும் இல்லை. இந்த நூற்றாண்டிலும் மகாகலைஞனாக திரும்ப, திரும்ப தாஸ்தயேவ்ஸ்கி பேசப்படுகிறார். இவரது படைப்புகள் எந்தப் பரிசோதனை முயற்சிகளிலும் சிரமப்பட வில்லை. அதில் உள்ள உளவியல் அம்சம்தான் அவரது படைப்புகளை பேரிலக்கியமாக மாற்றி இருக்கின்றன. குற்றமும் தண்டனையும் நூலை என் சகோதரியோடு இணைந்து மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன். வறட்டுத்தனமான பரிசோதனை முயற்சிகளால் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

ஒரு நாவலில் யதார்த்தமும், புனைவும் எந்த அளவுக்கு இருக்க வேண்டும். வாசகனை நம்ப வைப்பதில் பிரச்சினை இருக்கிறதே....

யதார்த்தம் என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். யதார்த்தத்தின் தடங்களில் பயணித்துப் புனைவுக்குள் நுழையும் போது அந்தப் புனைவு படைப்பாளியின் இதயத்தோடு நீக்கமற உணரப்பட்டால் அது யதார்த்தத்தோடு சேர்ந்துவிடுகிறது. அப்போது எது யதார்த்தம், எது புனைவு என்று பிரிக்க இயலாது. புனைவும், யதார்த்தமும் ஒன்றிணைந்து மயங்கிப் படைப்பாக மாறுகிறது. இது வெளிப்பாடு தொடர்புடையது. ஒரு யதார்த்த சூழலில் சில புனைவுகளை வலிந்து இணைக்கும் போது அது எளிதில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு விடும். ஆக, யதார்த்தம் போலப் புனைவும் உணரப்படுமானால் அந்தப் புனைவும் யதார்த்தமாக மாறிவிடுகிறது.

வட்டார இலக்கியத்தை பொறுத்தவரை அதற்கான பிராந்திய அடையாளங்களே போதுமானதா?

ஒரு வட்டாரத்திற்கான அம்சங்கள் அடையாளங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த வட்டாரத்திற்கு சென்றோ அல்லது அது பற்றிய ஆய்வுகளைப் படித்தோ தெரிந்து கொள்ளலாம். இதுதான் நோக்கம் என்றால் இதை இலக்கியம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. உலகின் எந்த மூலையைக் களனாகத் தெரிவு செய்துகொண்டாலும் மனித உணர்ச்சிப் போராட்டங்களே, உளவியலே, ஆன்மீகக் கூறுகளே இலக்கியமாக மேல் எழுகின்றன. அதன் நம்பகக் கூறுகளாக வட்டார விஷயங்கள் துணைபுரியும்.

படைப்பு மையம் கலை சார்ந்து உயர்வு பெறும்போது அதன் பிராந்திய விவரங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இது தவிர களம் சார்ந்த அடையாளங்களுக்கு வேறு முக்கியத்துவம் கிடையாது.

இலக்கியம் கண்ணாடி...

இந்தக் கருத்தில் வேறுபாடு உண்டு. எல்லா நிலைகளிலுமே காலத்தின் கண்ணாடியாக இலக்கியம் இருக்கமுடியாது. காலத்தின் முன் பின்னாகச் சென்று தன் களனைத் தெரிவு செய்துக் கொள்ளக் கூடிய அதீதப் புனைவுகள் தோன்றியிருக்கின்றன. மார்கோஸின் பல கதைகளை காலம் காட்டும் கண்ணாடி என்று சொல்ல முடியாது. இலக்கியம் காலத்தின் கண்ணாடியாக இருந்து சமூக நடப்புகளைப் பிரதிபலிக்கின்றது என்ற கருத்து மிகச் சில நிலைகளில் மாத்திரம் பொருந்தும்.

இதில் மொழியின் பயன்பாடு என்னவாக இருக்கும்?

படைப்பின் உருவாக்கத்திலே பெரும் அலைபாயுதல் நிகழ்கிறது. நுட்பங்களை, நெருக்கடிகளை, போராட்டங்களை, ஆனந்தங்களை செம்மையாக சொல்வதற்கான மிகப் பெரிய மனக்குமைச்சல் நடந்து கொண்டிருக்கிறது. மனதின் ஆயிரம் கைகள் மொழியைத் துழாவுகின்றன. அந்நிலைகளில் அந்த எழுச்சியோடு இணை சேர்ந்து போக முடியாத சந்தர்ப்பங்களும் மொழிக்கு ஏற்படுகின்றன. அப்போது புதிய பத சேர்க்கைகளின், புதிய சொல் முறைகளின் அற்புதம் நடப்பதற்கும் வாய்ப்புகள் கணிசமாகின்றன.

தன்னுடைய இயக்கத்தினால் மொழி புதுப்பிக்கப்படுகிறது என்ற எண்ணம் படைப்பாளிக்கு ஒரு போதும் இருப்பதில்லை. மொழியும் கலைஞனும் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் உரப்படுத்திப் போகும் காட்சியினையும் நாம் படைப்புகளில் சந்திக்கிறோம்.

கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என்ற நிலைப்பாடு தானாக உதிர்ந்த மாதிரி இருக்கு. கோட்பாட்டு ரீதியாக, தத்துவம் சார்ந்த படைப்புகள் குறைவாக உள்ளதே?

முதலும் முற்றிலுமாக கலை கலைக்காகவே செயல் பட்டால்தான் அது நல்ல மக்கள் கலையாக மாற்றமடையும். இதில் இரண்டாவது கருத்துக்கு இடம் கிடையாது. என்னுடைய நம்பிக்கை என்னவெனில் படைப்பு தனது விதியைத் தானே தீர்மானித்துக் கொள்கிறது. கலை கலைக்காக என்பதும், கலை மக்களுக்காகவே என்பதும் அந்தக் காலத்தில் கம்யூனிஸ பிரச்சார வசதி கருதி ஏற்பட்டது. அந்த முகமூடியை நாம் எல்லாக் காலங்களிலும் அணிந்துகொண்டு இருக்க முடியாது. தாஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், குப்ரின், சேகவ், துர்க்கனேவ், ஷோலகவ், அலெக்ஸி டால்ஸ்டாய் போன்ற எல்லோருமே மக்களுக்காகத்தான் எழுதினார்கள். எது நல்ல இலக்கியமோ அதுதான் மக்கள் இலக்கியமாக நீண்டு நிலைபெற்று வாழ்ந்து வருகிறது.

ஒரு படைப்பிலக்கியத்தின் பங்கு சமூகத்தில் என்னவாக இருக்கும்?

உணர்வுகளின் வாயிலாக இலக்கியம் மனித குலத்திற்குக் கொண்டு சேர்க்கும் வளமை அளப்பரியதுதான். அது மனிதனுடைய மனதில் நுண் உணர்வுகளையும் மிக மேன்மையான தன்மைகளையும் மேலெழுந்து வரச் செய்கிறது. மனதின், அறிவின் விசாலத்திற்கு கலை இலக்கியம் தவிர, வேறு புகல் இல்லை. கலை இலக்கியம்தான் மனித குலத்தின் பொக்கிஷம். இவை மூலம்தான் மனிதன் மீட்சியடைய முடியும். நேசிப்பதற்கு, அடுத்தவற்றின் மீது கவனம் கொள்வதற்கு, இந்த உலகத்தின் அத்தனை விஷயங்களின் மீதும் பார்வையைச் செலுத்துவதற்கு கலை இலக்கியங்கள் மட்டும்தான் கற்றுக் கொடுக்க முடியும். மனிதனின் மிக ஆதாரமான ஆன்மீக சம்பத்து இது. ஒரு சமூகத்தின் கலை இலக்கியங்கள் மேம்பட்டு இருக்கின்றன என்றால் அதன் செறிவு மக்கள் மனதிலும் இடம் பெற்று இருக்கும். வாழ்வில் கலந்து இருக்கும். கலை தன் பாதிப்புகளை எல்லையற்று நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. உதாரணமாக செக்கோவின் ‘ஆறாவது வார்டு’. என் உடலையும், மனதையும் பெரிய அளவுக்கு பாதித்த கதை. அது எங்கோ எப்போதோ எழுதிய கதை. இன்றைக்கும் தன் இருப்பை மிகத் தீவிரமாக உணர்த்துகிறது. அது ஏற்படுத்திய விளைவு எவ்வளவு தீவிரமானது!

வெண்ணிற இரவுகள் படிக்கும்போது ஒவ்வொரு மனிதனும் கடவுளாக மாறிப்போவான். தூய மனநிலையின் சிகரங்களில் சில நிமிடங்களேனும் உலவுவதற்குச் சித்திக்குமே. இது போன்ற படைப்புகளைத் தொடர்ந்து படைக்கும்போது, படிக்கும்போது மனிதன் ஏன் விடுதலை அடைய மாட்டான்? அவனுடைய மலினத்தின் கட்டுகள் ஏன் அறுந்துபோகாது? படைப்பின் வழியாகத்தான் தன்னுடைய ஆன்மீகத்தை நோக்கிச் சமூகம் உயர வேண்டியிருக்கிறது. எதனாலும் இட்டு நிரப்ப முடியாத பங்கு கலைக்கு இருக்கிறது. படைப்பின் சாளரம் வழியாக பிரபஞ்சத்தினைத் தரிசிக்கும் ஆற்றலை நாம் ஒவ்வொரு மனிதனிடமும் உருவாக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனும் முற்றிலு மாக வாழ்ந்து தீர்ப்பதற்கு தீவிர வாசகனாக மாறவேண்டும்.

நவீன ஓவியத்தில் யதார்த்த வடிவங்கள் மறுக்கப்படுவது.... இதைத்தான் சரி என்று சொல்வது....

நம்மிடம் அநேக வகை மாதிரிகள் உள்ளன. ஓவியங்களுடன் ஓவியத்தின் பாணிகளுடன் பழகி பரிச்சயம் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. அந்தத் தொடர்பின் அடிப்படையில்தான் பார்வையாளனுக்கும் நவீன ஓவியத்துக்கும் உரையாடல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒரு மொழியில் இயங்குகிற இலக்கியவாதிக்கு மரபு ரீதியான பயிற்சி எந்த அளவுக்கு அவசியமோ அது போலவே ஓவியத்திலும் மரபு ரீதியான பயிற்சியும் அவசியம். உருவங்களைச் சிதைக்கும் முயற்சிகள், இதற்கு அப்பாற்பட்டு நடக்க வேண்டிய பரிசோதனைகள்.

ஒரு நாவல் வாசகர்களால் நிராகரிக்கப்படும்போது படைப்பாளி சரியாக செயல்படவில்லை என்று கூறலாமா?

வாசகர்களால் நிராகரிக்கப்படுவதோ, வரவேற்கப்படுவதோ முக்கியமான விஷயம் இல்லை. வாசகர்களின் பாராட்டு மொழியையோ அல்லது தூஷணையையோ மனதில் கருதிக் கொண்டு நாம் எப்படிச் செயல்பட முடியும்? எந்த முன் தீர்மானமும் படைப்புக்கு எதிரானதுதானே. முன் தீர்மானத்தோடு, வாசகர் ஆதரவுக்கான ஏக்கத்தோடு செய்யும் படைப்பு முயற்சிகள் வர்த்தகமே இன்றி வேறு இல்லை. தன் இயல்பூக்கத்தைத்தான் படைப்பாளி முற்றிலும் நம்பியிருக்க வேண்டும். தவிர, படைப்பின் வெற்றி தோல்விகள் அவ்வப்போது உடனுக்குடன் தீர்மானிக் கப்படுவது அல்ல.

ஒரு பயனாளி இல்லாமல் படைப்பு சாத்தியமா?

படைப்பு என்பது வாசகர்களிடம் செல்வது அடுத்தக் கட்டம். ஆனால் எழுதும்போது வாசகர்களைக் கருத்தில் கொள்வது மிகப் பெரிய இடையூறாக அமையும். படைப்புக்கும் படைப்பாளிக்குமான போராட்டமே மிக முக்கியமானது. அந்தப் போராட்டம் படைப்பாளியிடம் ஏற்படுத்தக்கூடிய உணர்வுகளுக்கு நிகராக இந்த உலகத்தில் எதுவும் இல்லை. படைப்புக்கும் வாசகருக்குமான பிரச்சினை தனிப்பட்டது. இதில் படைப்பாளிக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

நவீனத்தில் மரபு உள்வாங்கி செழுமையாகிறது. இன்னொன்று மரபை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு நவீனத்தைத் தூக்கிப்பிடிக்கிறது இதில் எது சரி?

இலக்கியம், பெண்ணியம், தலித்தியம், அறிவியல், மருத்துவம், கல்வி, உளவியல் ஆகிய எல்லாமும் நவீனத்துவ சிந்தனைகளால் தாக்கம் பெற்றுத்தான் வருகின்றன. படைப்பிலக்கியத்தைப் பொறுத்தவரை மரபின் காத்திரமான அடித்தளத்தின் மீதுதான் நவீன இலக்கியம் எழுந்து வர வேண்டும். இதுதான் ஆரோக்கியமான விஷயமாக இருக்க முடியும்.

மரபின் உள்ளார்த்தமான, வலுவான, மிக மேன்மையான சாரங்களை உட்கொள்ளாமல் நவீனம் உருப்பெறாது. நவீனம் தன்னுடைய ஜீவனை மரபிலிருந்துதான் எடுத்துக்கொள்கிறது. மரபின் மீது கால் வைத்துதான், அதை மீறி வேறு ஒரு தளத்தை நவீனம் அடைய முடியும். இலக்கியம் தவிர்த்த வாழ்வின் வேறு கூறுகளில் மரபை வேறு கோணத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது.

மரபின் வளமான கூறுகளை தன்வயப்படுத்திக் கொண்ட நவீனமே பெரும் சாதனைகளைத் தன் இலக்காக வரித்துக் கொள்ளும்.

ஒரு படைப்புக்குப் படைப்பாளி என்பவரைத் தவிர, எடிட்டர் என்பவர் தேவையா?

இது ஒரு மேற்கத்திய நடைமுறை. படைப்பின் சாதகங்களும், பாதகங்களும் முற்றிலும் படைப்பாளியைச் சார்ந்தவைதான். என்னை விடவும், ஒரு ஆசிரியர் குழுவினர் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? பாரதிக்கு யாராவது எடிட்டர் இருந்திருப்பார்களா? ப. சிங்காரத்திற்கும், ஜி. நாகராஜனுக்கும், பிரமிளுக்கும் யார் எடிட்டர்? மிகப் புரிந்துணர்வு கொண்ட நண்பர்களிடமிருந்து வருகின்ற ஆலோசனைகளுக்குப் படைப்பின் உருவாக்கத்தில் பங்கு இருக்கிறது. உட் திடமற்ற படைப்பை ஒரு எடிட்டர் தூக்கி நிறுத்திவிட முடியாது.

கவிதைக்கான விமர்சனப் போக்கு...

எந்த ஒரு படைப்பையும் எல்லா வகையிலும் ஆராய்ந்து ஒரு படைப்பின் தரத்தை நிதானிக்க விமர்சகரால் ஆகாது. தன் வாசிப்புக்கு தோன்றுகிற சில அம்சங்களை மையமாக வைத்துத் தான் அபிப்பிராயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒரே படைப்பு ஒரே வாசகனால் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் வாசிக்கப்படும்போது, அந்தப் படைப்பு ஏற்படுத்தும் உணர்வு சூழ்நிலைக்குத் தக்கவாறும் மாற்றமடைகிறது. கவிதையைப் பற்றி வருகிற தற்கால விமர்சனங்கள் நிறைவு தரவில்லை. ஒரு கவிதை விமர்சனம் என்னுள் ஏற்படுத்துகிற உணர்வுக்கும், விமர்சனம் செய்யப்பட்ட கவிதையைப் படிக்கும்போது ஏற்படுகிற உணர்வுக்கும் மிகப் பாரதூரமான இடைவெளியை உணர்கிறேன். கவிதை விமர்சனத்தின் தளத்தில் காழ்பு, வெறுப்புகள் தனிப்பட்டுத் தெரிகின்றன.

கவிதையை அணுகுவதற்கான திறந்த மனநிலையைக் கொள்வது விமர்சகர்களுக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. மனத்தடைகள், ஒவ்வாமை, முன்தீர்மானம், நட்பு சார்பு போன்ற அம்சங்கள் விமர்சனத்தைத் தீர்மானிக்கின்றன.

கவிதை விமர்சனம் மிக மிகக் கவனமாகக் கையாள வேண்டிய ஒன்று. ஒவ்வொரு கவிதையின் பின்னாலும் படைப்பாளியின் மனம் இருக்கிறது.

இலக்கியம் என்பது பெரும் வருவாய் ஈட்டித்தரும் தொழில் களம் அல்ல படைப்பாளிக்கு. அவனுடைய அர்ப்பணிப்பு சிலபோது வாழ்க்கையே பணயம் கேட்கிறது. விமர்சிப்பவர்களும் தங்கள் மனசாட்சியை முன் நிறுத்தி விமர்சிக்க வேண்டும். விமர்சனமும் படைப்புக்கலைதானே...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com