Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

தமிழிசையின் ஒளிச்சுடர்
ப. தியாகராசன்

தமிழிசையைப் பாதுகாத்து வளர்த்த அறிஞர்கள் தமிழகத்தில் மிகச் சிலரில் “தமிழிசை மூவர்” எனச் சிறப்பிக்கப் பெற்ற முத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவர் “பண்ணாராய்ச்சி வித்தகர்” எனப் பாராட்டப்பட்ட குடந்தை ப. சுந்தரேசனார்.

தமிழிசையில், இசைத்தமிழில், பண்ணிசையில் ஏழிசையில் ஒப்பாரும் மிக்காருமின்றி ஒளிச்சுடராக விளங்கியவர் இவர். இவர் உயர்தனிச் செவ்விசையை செம்மையாகக் கற்று, இசையிலக்கணம் நன்கு பயின்று, இசையை முறையாகப் பாடுகின்ற ஆற்றல் உடையவர். இவரின் தமிழிசைப்புலமை நுண்மாண் நுழைபுலமும் உண்மையும் உயர்வுமுடையது; நெறிதவறாதது; செழுமையும் முழுமையுமுடையது. தமிழிசையே இவரின் உயிர்; தமிழ்பண்ணே இவரின் உயிர் மூச்சு.

பல்கலைகளுக்குப் பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் குடந்தை நகரில் 28.5.1914 ஆம் ஆண்டு திரு. பஞ்சநாதம் பிள்ளை, திருவாட்டி குப்பம்மாள் இருவருக்கும் பிறந்த இவரின் பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்புவரையில்தான். ஏனெனில் பிறக்கும் போதே வறுமையும் இவருடன் கூடப்பிறந்தது. பின் காசுக்கடையொன்றில் பணியமர்ந்தார் என்றாலும், இயற்கையாக இவரிடம் குடிகொண்டிருந்த இசையார்வம் இவரை இசைத்தட்டுப் பாடல்களுக்கு ஈர்த்துச் சென்று அவற்றில் வல்லமையும் பெற்று அப்பாடல்களைப் பாடலானார்.

பல்வேறு நூல்நிலையங்களுக்கும் சென்று, பழந்தமிழ் நூல்கள் பலவற்றையும் தாமே பயின்றார். இசை இலக்கணம் பயில முயன்றபோது இவருக்குக் கருவியாகப் பயன்பட்ட நூல்கள் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிர்த சாகரம்’என்னும் நூலும், பேராசிரியர் சாம்பமூர்த்தியின்‘இசை நூலும்’ ஆகும்.

திருவாரூர் இசைக்கலைப் பாங்கு என்பது பழந்தமிழக இசைக்கலையாகும். அப்பாங்கினின்று சற்றும் வழுவாத முறையுடையது குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசைப் பாணி. அஃது இக்காலத்து இசைப் பேரறிஞர்களாலும் உய்த்துணர இயலாத இசை என்பர்.

1933 ஆம் ஆண்டு வெளியான ‘சுதேசமித்திரன்’வாரந்தோறும் வரும் இதழில், திருவனந்தபுரம் இலக்குமணன் பிள்ளை இசைத் தொடர்பான கட்டுரைகள் எழுதி வெளியிடுவார்.

அதனைத் தொடர்ந்து படித்து வந்த திரு. சுந்தரேசனார், அவரிடம் இசை பயில வேண்டும் என்ற ஆவல் உந்த குடந்தையிலிருந்து திருவனந்தபுரம் நடந்தே சென்று திரு. இலக்குமணன் பிள்ளையைச் சந்தித்துத் தன் ஆவலை வெளிப்படுத்தியுள்ளார். திரு. இலக்குமணன் பிள்ளையும், இவரின் ஆவலைக்கண்டு மகிழ்ந்து பாராட்டித் தன் வீட்டில் தங்கவைத்து இசை தொடர்பான சில செய்திகளையும் சொல்லி, அவற்றை முழுமையாகப் பயில இஃது ஏற்ற இடமன்று எனக் கூறிக் குடந்தை சென்று இசைபயில அறிவுறுத்தி, வழிச் செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பியுள்ளார்.

இவர் திரு. கந்தசாமி தேசிகரிடம் முதன் முதலாக இசைபயின்று, பின்னர் வேப்பத்தூர் திரு. பாலசுப்பிரமணியரிடம் சிலகாலம் பயின்றுள்ளார். அதன் பின்னர், பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக, 1935 முதல் குடந்தை இராமச்சந்திரரிடம் மிகச் செம்மையாக உயர்தனிச் செவ்விசைப் பயிற்சியினைப் பெற்றதாக இவரின் வரலாறு கூறுகின்றது.

இவ்வாறு முறையான தமிழிசை பயின்ற திரு. சுந்தரேசனார் பல்வேறு இசையரங்குகள் நடத்தியுள்ளார். அதன் காரணமாக இவர் ‘தென்னக உயர்தனிச் செவ்விசைப் புலவர்’ (The South Indian Classical Musician) என பெருமைப் படுத்தப்பட்டது.

இவர் பெரிய புராணத் தொடர் சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளதனாலும் மூவர் தேவாரமும் நன்கு கற்று அதில் பண்ணாராய்ச்சி செய்து தேவாரப் பாடல்களைப் பண்ணிசையுடன் பாடியுள்ளதனாலும் இவருக்குப் “பண்ணாராய்ச்சி வித்தகர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

திரைப்படங்களின் இயற்கை, காதல் காட்சிகளுக்கு மூலமாக விளங்குவது தேவாரம் என்பதால் “... வண்டு யாழ் செய்குற்றாலம்” என்ற வரியினை எடுத்துக்காட்டி விளக்கம் தருவார்.

பல்வேறு இசையரங்குகளில் திருப்புகழ், திருமுருகாற்றுப் படை, சிவபுராணம், பாரதியின் பாடல்கள், கர்நாடகப் பாடல்கள், இந்திப் பாடல்கள், தெலுங்குக் கீர்த்தனைகள் மற்றும் மராட்டியப் பாடல்களையும் பாடிக் கேட்போருள்ளத்தைக் கொள்ளை கொண்டுள்ளார். பிறமொழிப் பாடல்களின் இசை பற்றி அறிய கன்னடம், தெலுங்கு, மராட்டி, இந்தி மொழிகளையும் கற்றார்.

தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் மெய்யன்பர்கள் பலரும் கூடி 1946இல் ‘அப்பர் அருள் நெறிக்கழகம்’என்ற அமைப்பை நிறுவி அவ்வமைப்பில் திரு. சுந்தரேசனாரைக் கொண்டு தொடர் இசைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தச் செய்து, அன்பர்களின் இசையார்வத்தை வளர்த்தார்.

பண்டைய இசைத்தமிழ் இலக்கணம் கற்பதற்காகச் சிலப்பதிகாரப் பதிப்புகள் அனைத்தையும் நன்குக் கற்று ஆய்ந்துள்ளார். அக்காலத்தில் செந்தமிழிலும், தமிழ் மொழியிலும் வெளியான யாழ்ப்பாணத்து விபுலாநந்த அடிகளின் தமிழிசையாராய்ச்சிக் கட்டுரைகளைத் திரட்டி ஆய்ந்துள்ளார். இவ்வாராய்ச்சிக் கட்டுரைகளே இவரின் இசையாராய்ச்சிக்கு உந்துவிசையாக இருந்துள்ளன.

தற்போதைய திருவாரூர் மாவட்டம் குடவாசலுக்கு அண்மையிலுள்ள திருக்கொள்ளம்பூதூர் (திருக்களம்பூர்) என்ற ஊரில், 1947இல், அன்று அமைச்சராகவிருந்த திரு. அவினாசிலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளின் ‘யாழ்நூல்’அரங்கேற்று விழாவில் அடிகளாரே வியந்துப் போற்றும் வண்ணம் யாழ்நூலின் சிறப்புகளை எடுத்துரைத்த போதுத் “தங்களைத் தெய்வந்தான் இங்கு அனுப்பியது” எனக்கூறி உச்சிமுகந்து மெச்சியணைத்துக் கொண்டார், அடிகளார்.

தகையான ஒருவரிடம் தக்க செயலைத் தருவதே சிறந்தது என உணர்ந்த அடிகளார் 103 பண்களின் பெயர் முறைகளை நிகண்டு நூல்களிலிருந்துத் தொகுத்துச் செப்பம் செய்து விட்டோம்; அவற்றிற்குரிய ஏற்ற இறக்க இசை நிலைகளையும் கணித முறையில் நிறுவி விட்டோம்; ஆனால் எப்பெயருக்கு எவ்வுரு என்பதை நூல் அளவை இல்லாமையால் எம்மால் ஏதும் செய்ய இயலவில்லை; இனி அப்பணியை முறையாக இசை பயின்ற தங்களிடமே விடுகிறேன், தங்களுடைய இசையாராய்ச்சி வழியே நிறுவித் தாங்கள்தாம் இதனைப் பரப்பல் வேண்டும் எனக்கூறி மிகப் பெரும் பொறுப்பினை அடிகளார் ஒப்படைத்தார்கள். திரு. சுந்தரேசனார் இதுவே தம் இசையாய்வில் தமக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசாகும் என மகிழ்ந்து, அன்று முதலாகப் பட்டி தொட்டிகளெங்கும் அடிகளாரின் தமிழிசைக் கருத்துகளைப் பரப்பலானார்.

இவர் திருவையாறு அரசர் கல்லூரியில், 1949 முதல் 1952 ஜூன் திங்கள் வரையில் புலவர் வகுப்பு இசையாசிரியராகப் பணியாற்றிப் பின்னர், 1952 ஜூலை முதல், 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணி செய்து, அங்குப் பணி செய்த சாம்பசிவம் என்பவரிடம் கருத்து வேறுபடவே அங்கிருந்து விடுபட்டுத் தமிழிசைப் பணியைத் தொடர்ந்து செய்து வரலானார். அக்காலத்தில் அப்பணியைச் செய்ய மிதி வண்டியிலேயே சென்று திருவையாறு, திருமானூர், திருமழபாடி, பூவாளூர் எனப் பல்வேறிடங்களில் இசைச் சொற்பொழிவுகள் செய்து மக்களின் மனத்தில் நீங்காவிடம் பிடித்து நிலைத்துள்ளார்.

அதன் பொருட்டே இவரின் இசை மாணாக்கர்களான கோடிலிங்கம், வயித்தியலிங்கம் ஆகிய இருவரும் திருச்சி மாவட்டம் இலால்குடி எனச் சொல்லப்படுகின்றத் திருத்தவத் துறையில் ஆண்டு தோறும் சிலை (மார்கழி)த் திங்களில் நாடுகாண் குழு அமைத்த அந்நாளில் திரு. சுந்தரேசனாருக்கு மூன்று நாட்கள் விழாவெடுத்துப் பெருமைப்படுத்துகின்றனர். அந்நிகழ்ச்சியில் இசைத்துறையில் சிறந்து விளங்குகின்ற ஆடவர், மகளிர் என ஆண்டுக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முறையே ‘பெரும்பாண நம்பி’, ‘பெரும்பாண நங்கை’என்ற பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணியை விடுவித்த இவர், மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு அக்காலத்தில் மாதமிரு முறை வெளியான ‘தமிழர் நாடு’என்ற இதழுக்குத் தமிழிசைக் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியனுப்பி, வெளியான அக்கட்டுரைகளுக்குக் கிடைத்த உருவா பதினைந்தைக் கொண்டு தம் வாழ்க்கையை நடத்தினார்.

இச்சூழலில், குடந்தை பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் தேவார இசையாசிரியர் பணியொன்று காலியாக இருந்தது. திரு. சுந்தரேசனாரின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர், அப்பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர். அவ்வுறுப்பினரின் பரிந்துரையின் பேரில் அவ்வாசிரியப் பணியைப் பெற அன்பர்கள் பலரும் அறிவுறுத்தியுள்ளனர். காந்தியக் கொள்கைகளில் பிடிப்புக் கொண்ட இவர், அப்பணிக்கு விண்ணப்பிக்கிறேன், என் திறனை ஆய்ந்துப் பணி கொடுத்தால் ஏற்பேன்; ஆனால், நான் எவரின் பரிந்துரையினையும் நாடமாட்டேன் எனக் கூறி மறுத்துள்ளார்.

மாந்த வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு திருப்பு முனை நிகழ்வாகும். கொண்டான் குணமறிந்து ஒழுகுகின்ற பாங்கு எல்லாப் பெண்களுக்கும் அமைந்திடுவதில்லை. 1944இல், திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்த இவர், வாழ்வின் அனைத்து நலன்களையும் பெற்றதாகவேக் கருதி வாழ்க்கை நடத்தினார். எள் முனையளவுக்கூட மனங் கோணாதுத் தன் கணவரின் அனைத்து நிகழ்வுகளிலும் துணையிருந்தார் சொர்ணத்தம்மாள். “ஒன்றன் கூறாடை உடுப்பவரே யாயினும், ஒன்றினார் வாழ்வே வாழ்வு” என்ற கலித்தொகை வரியினைக் கருத்தினிலேந்தித் தன் கணவரின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்க்கை நடத்தினார்.

இவர்களுக்கு 1947 ஆம் ஆண்டு, ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அதன் பின்னர் குழந்தைப் பேறு இல்லை. அதன் காரணமாகச் சுந்தரேசனாரின் அரிய படைப்புகள் யாவும் காப்பாற்ற இயலாமல் போயின. அருட்செல்வரும் பொருட்செல்வருமாகிய பொள்ளாச்சி என அழைக்கப் படுகின்ற பொழில்வாய்ச்சி நா. மகாலிங்கம் அவர்கள், இவரின் குடும்பத்துடன் நெருங்கிய நட்பு கொண்டு சுந்தரேசனாரின் இசையில் இன்பம் கண்டுள்ளார். அதன் காரணமாகப் பல உதவிகள் செய்து வந்துள்ளார். 1981 ஆம் ஆண்டு திரு. சுந்தரேசனார் மறைந்த பின்பும் திருவாட்டி சொர்ணத்தம்மாளின் பண்பில் மதிப்புக் கொண்டு மாதம் உருவா 300/- பணம் விடுத்து உதவி வந்துள்ளார்.

‘ஏழிசைத் தலைமகன்’என அறிஞர்களால் சிறப்பிக்கப்பட்ட சுந்தரேசனார் ‘முதல் ஐந்திசைப் பண்கள்’, ‘முதல் ஐந்திசை நிரல்’, ‘முதல் ஆறிசை நிரல்’, ‘முதல் ஏழிசை நிரல்’, ‘இசைத் தமிழ்ப் பயிற்சி’ என ஐந்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழிசை குறித்த தொன்மையான நூல்கள் பல அழிந்து போயின. அவற்றில் ஒன்றுதான் கடைச்சங்கக்காலத்துப் ‘பஞ்ச மரபு’ என்னும் சேறை அறிவனார் எழுதிய இசை இலக்கண நூலாகும் (குடந்தை - குடவாசல் சாலையில் உள்ள திருச்சேறையைச் சார்ந்தவர் இந்நூலின் ஆசிரியர் சேறை அறிவனார் என்றும், மதுரை மாவட்டத்தில் உள்ள சேற்றூர் என்பதன் மரூஉ மொழியே சேறை என இரு கருத்துகள் ஆய்வில் உள்ளன.

இந்நூலின் மூலப்படி ஒன்று ஓலைச்சுவடியில் எழுமாத்தூர் 88 வேலம்பாளையம் திரு வே. இரா. தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் இருந்ததையறிந்த அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள், இதனைத் தாளில் செப்பம் செய்து பதிப்பிக்க ஏற்றவர் குடந்தை ப. சுந்தரேசனார் எனக்கருதி, அப்பெரும் பொறுப்பினை ஒப்படைத்தார்கள். இவர் அந்நூலை அவர்கள் எதிர்பார்த்த வண்ணமே செய்து முடித்தார். உலகத் தமிழ் கழகக் குடந்தைக் கிளையினர் நடத்திய ‘நித்திலம்’ என்னும் திங்களிதழ் வாயிலாகவும் தமிழிசைக் கருத்துகளைப் பரப்பியுள்ளார்.

இவரின் பிற நூல்களான ‘ஓரேழ் பாலை’, ‘இரண்டாம் ஐந்திசை நிரல்’, ‘இரண்டாம் ஏழிசை நிரல்’, ‘பரிபாடல் இசை முறை’, ‘பாணர்கள் பயிற்றுவித்த இசை முறை’, ‘இசைத் தமிழ்ப் பயிற்சி நூல்,’ ‘இசைத்தமிழ் அகர நிரல்’, ‘வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம்’, ‘சேக்கிழார் கண்ட இசைத்தமிழ்’, ‘பெரும் பண்கள் பதினாறு’, ‘நூற்றுமூன்று பண்கள்’, ‘தாள நூல் 1 முதல் 6 வரை’, ‘கடித இலக்கிய இசைத்தமிழ்க் குறிப்புகள்’, ‘இசைத்தமிழ் - தமிழிசைப் பாடல்கள்’, ‘இசைத் தமிழ் வரலாறு’ என்பவையும், இன்ன பிற நூல்கள்யாவும் வெளிவராமலேயே மறைந்துவிட்டன.

குழந்தை போன்று கள்ளமற்ற வெள்ளை உள்ளத்துடன் அன்பொழுகப் பழகும் அருளாளர் திரு. சுந்தரேசனார். இவரை அறியாத பெருமக்களுமில்லை; தொடர்பு கொள்ளாத நன்மக்களும் இல்லை. பெரும்பாலானக் கல்லூரிகளும், பள்ளிகளும், ஊர் அவைகளும் இவரை அழைத்து இசைச் சொற்பொழிவுகளை நடத்தி அவற்றைக் கேட்டுப் ‘பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில் விளைசுகமே’ என்ற வள்ளலாரின் வரிக்கு ஏற்ப இன்பம் கண்டுள்ளனர்.

அக்காலத்தில் புலவர் பட்டவகுப்பில் சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை நீங்கலாகப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டது. சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை நடத்த அக்காலத்தில் ஆசிரியர்கள் இல்லை என்பதே அதன் காரணம். ஆனால், நாகையில் கோ.வை. இளஞ்சேரன் அவர்களின் நன் முயற்சியால் இயங்கிய நாகைத் தமிழ்ச் சங்கம் திரு. சுந்தரேசனாரை அழைத்து அவ்வரங்கேற்றுக் காதையை மாணவர்களுக்குக் கற்பிக்கச் செய்தனர்.

சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையில் கண்கூடுவரி, கானல்வரி, கிளர்வரி, தந்துரைவரி, புறவரி, கிளர்ச்சிவரி, தேர்ச்சிவரி, உள்வரி என்ற இலக்கண வரம்புகள் உள்ளன. அவ்விலக்கண வரம்பிற்குள் கோவலன் மாதவியின் காதல் வாழ்க்கையை நடித்துக் காட்டும் ஆற்றல் திரு. சுந்தரேசனாருக்கு மட்டுமே இருந்தது.

தமிழிசையில் காணப்படுகின்ற எழிற்கை, தொழிற்கை, கபோதகை போன்ற அபிநய முத்திரைகளை விளக்கிக் கூறும் ஆற்றல் படைத்தவர். நாட்டிய மேடையின் அமைப்புப் பற்றிக் கூறும் திரு. சுந்தரேசனார்; நன்னிலம், மென்னிலம், வன்னிலம் என்ற மூன்று நிலங்களின் தன்மைகளை ஆய்ந்து மேடை அமைக்க வேண்டும் என்பார். முப்பத்திரண்டு இலக்கணங்கள் பொருந்திய ஒரு மனிதனின் இரு விரல்களுக்கிடை ஓர் அங்குலம் என்ற அளவுகோல் கொண்டு எதிரொலியில்லாது மேடையமைக்கும் இலக்கணத்தை இவர்தான் முதன் முறையாக அறிவிக்கின்றார்.

இத்தகைய ஆற்றல் மிக்க இவர் தமிழிசையின் தனிச்சுடராக விளங்கினார் என்றாலும், தமிழ்நாடு அவரை அடையாளம் காணவில்லை. மாறாக அயல் நாட்டினர் அவரின் ஆற்றல் அறிந்து குரோ என்ற பிரஞ்சு நாட்டறிஞர், சுந்தரேசனாரின் பண்ணிசைப் பாடல்களை அவரின் குரலிலேயே ஒலிப்பதிவு செய்து, 1965 ஆம் ஆண்டு தன் நாட்டிற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்துள்ளார்.

மிகுந்த இறைப்பற்று கொண்ட இவர் பன்னிருதிரு முறையில் நன்கு பயிற்சியுடையவர். அதன் காரணமாகச் சிவ மடங்கள் அனைத்திற்கும் சென்று திருமுறைப் பாடல்களைப் பண்ணுடன் பாடிப் பரவசப்படுத்துவார். இதனால் “திருமுறைச் செல்வர்” என்ற பட்டத்தைச் சில மடங்கள் இவருக்கு அளித்துச் சிறப்பித்தன. அவ்வாறே “சண்டீசர்” என்ற பட்டமும் கொடுத்துப் பாராட்டப்பட்டுள்ளார்.

நாகைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய திரு. கோ.வை. இளஞ்சேரனின் இயற்பெயர் மெய்கண்ட சிவம் என்பதாகும். மிகுந்த சிவப்பற்றுடைய திரு. சுந்தரேசனார் இவரை மெய்கண்ட சிவம் என்று அழைக்கும் அளவுக்கு ஒவ்வொரு முறையும் அவ்வாறு உச்சரிக்கும்போது சிவபெருமானை உச்சரிப்பதாகவே தோன்றுகிறது எனக்கூறித் தன் இறைப் பற்றினை வெளிப்படுத்துவார்.

“பண்ணாய்வான் பசு” எனப் புனைந்தழைக்கப்பட்ட திரு. சுந்தரேசனார், 1969 ஆம் ஆண்டு, நாகையில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தமிழ்க்கடல் மறைமலையடிகளின் திருவுருவச்சிலை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பண்ணமைத்துப் பாடியபோது அனைவரும் சில நிமிடங்கள் மெய்ம்மறந்தனர். அதன் பின்னர் முதல்வருக்கு அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு அவரின் ஆற்றல்கள் அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட்டன.

மொழி ஞாயிறு பாவாணரால் தொடங்கப்பட்ட உலகத் தமிழ்க் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்பட்டுள்ளார் திரு. சுந்தரேசனார். 31.12.1972 ஞாயிறு அன்று, தஞ்சை அரண்மனை இசைமன்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கழக மாநாட்டில், தமிழிசையின் தலைமகன் திரு. சுந்தரேசனார் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி மாநாட்டைத் தொடங்கியபோது பாவாணர் புத்துணர்வு கொண்டதாகக் கூறுகின்றனர். அன்று முதல் பாவாணர் இவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டு இவரிடம் அன்பு காட்டிப் பழகினார்.

அவ்வாறே 1973 ஆம் ஆண்டு, தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் சிலைத்திறப்பு விழாவிற்காகத் திருவாரூர் வந்திருந்த பாவாணரைச் சந்தித்துத் தான் பதிப்பித்த, ‘பஞ்சமரபு’ என்னும் இசை இலக்கண நூலை அவருக்குப் பரிசாகக் கொடுத்து, அதில் வரும் சில பாடல்களைப் பண்ணோடு பாடிக் காட்டியுள்ளார். இந்நிகழ்வு மூலம் ‘ஐந்து’ என்ற தமிழ்ச் சொல் ‘பஞ்ச’ என்று மாற்றப்பட்டுள்ள செய்தியை, திரு. சுந்தரேசனாருக்குத் தெரிவித்துள்ளார் பாவாணர்.

திரு. சுந்தரேசனாரிடம் தமிழிசை தழைத்து செழித்து, வளங்கொழித்தாலும் வறுமை வாட்டி வருத்தியுள்ளது. ஒரு முறை ஓர் இசை நிகழ்ச்சிக்காக திருமழபாடி இசையன்பர்கள் ஏற்பாடு செய்து அழைத்திருந்தனர். இவரும் ஏற்றுக் கொண்டு குடந்தையிலிருந்து மிதிவண்டியில் திருமழபாடி செல்லும் சாலையில் கொள்ளிட ஆற்றில் குளித்துத் தான் உடுத்தியிருந்த ஆடைகள் அழுக்குப் படிந்திருந்தமையால், அவ்வழுக்காடையுடன் அந்நிகழ்ச்சிக்குச் செல்ல மனமின்றி அவற்றை நனைத்துத் துவைத்துக் கோவணமணிந்து, துவைத்த அவ்வாடைகளைக் கரையிலே உலர்த்திக் கொண்டிருந்தார். அதன் காரணமாக நிகழ்ச்சிக்குக் காலத்தோடு செல்ல இயலவில்லை. தாமதத்தை உணர்ந்து விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவர் திரு. சுந்தரேசனாரைத் தேடி அவ்வழியே வர, இவரின் இந்நிலை கண்டு மனம் வெதும்பினார்.

அவ்வாறே ஈங்கு வேறொரு நிகழ்வினையும் குறிப்பிடுவது நன்று. 1972 ஆம் ஆண்டு, தஞ்சை மன்னர் சரபோசிக் கல்லூரியில், நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்குத் தமிழிசைக் குறித்துப் பேச திரு. சுந்தரேசனார் அழைக்கப்பட்டார். இரண்டாம் நாள் இசையரங்கு நிகழ்ச்சியும் தொடங்க வேண்டிய நேரம் கடந்து கொண்டிருந்தது. அப்போது மாணவர்களின் அமைதியின்மை வெளிப்பட்டது. இதனையறிந்த அக்கல்லூரியின் முதல்வர், திரு. சுந்தரேசனாரை ஏற்பாடு செய்த தமிழ்த்துறைப் பேராசிரியரை அணுகி, தாமதம் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது, திரு. சுந்தரேசனார் அரங்கிற்குள் நுழைந்து நிகழ்ச்சியைத் தொடங்கியவுடன் மாணவர்களின் கூட்டம் பெட்டிப்பாம்பாக அடங்கி அவரின் இசையில் மயங்கி இன்பம் கண்டு மெய்ம்மறந்தது.

அன்றைய நிகழ்ச்சியில் அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு சிலப்பதிகாரக் கானல் வரிகள். பூம்புகார் தொடங்கிக் காவிரியாற்றின் வடகரை வழியாக அனைவரையும் மதுரை மாநகருக்குத் தன் தன்னிகரற்ற தமிழிசை மூலம் அழைத்துச் சென்ற உணர்வு ஏற்பட்டது. திரு. சுந்தரேசனாரின் நிகழ்ச்சி முடிவுற்று இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தபோதுதான் குடந்தையிலிருந்து தஞ்சைக்குப் பேருந்தில் வர அப்போது 75 பைசாக் கூட அவரிடம் இல்லாது நடந்தே வந்ததன் காரணமாகத் தாமதம் நேர்ந்தது என்பதையறிந்து, அனைவரும் உளம் நொந்தனர்.

தமிழிசையின் செல்வராக விளங்கிய திரு. சுந்தரேசனார் இறுதிவரையில் சொந்த வீடின்றி வாடகை வீடுகளிலேயே குடியிருந்தார்; நான்கு முழ வேட்டி ஒன்று; சட்டை ஒன்று என வாழ்ந்தார். அவர் வாழ்ந்த குடந்தைப் பேட்டை நாணயக்காரத் தெருவில் இன்றும் அவரின் இசைத்திறமையினை இனிமையுடன் நினைவு கூறும் பல அன்பர்கள் உள்ளனர்.

கோவை மாவட்டம் புன்செய்புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றத்தினர் 19.2.1975 அன்று தமிழிசைத் துறையில் தன்னிகரற்று விளங்குபவரும், இசைத்துறை பாவாணரெனப் பாராட்டப் பெறுபவருமான தமிழிசைத் தலைமகன் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தனித் தமிழிசை நூல்களை வெளியிடத் தமிழக அரசு முன்வருதல் வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றி அன்றைய தமிழக அரசுக்கு விடுத்தது. இன்றையத் தமிழக அரசு அம்முயற்சியில் ஈடுபட்டால் அழிந்து வருகின்றத் தமிழிசையைத் தடுத்து நிறுத்தி வளர்த்தெடுக்கலாம்.

தமிழிசையின் தலைமகன் திரு. சுந்தரேசனாரைத் தமிழக அரசு புரிந்துகொண்டு, அவரின் இறுதிக்காலம் அஃது என அறியாது, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் பணியமர்த்தம் செய்து ‘சிலப்பதிகாரத்தில் இசைப் புலம்’என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டார். அதனை ஏற்று அங்குத் தங்குவதற்கு ஒரு தனியறை எடுத்துத் தன் பணியைச் செம்மையாகச் செய்து வந்த அந்நேரத்தில், தமிழிசையில் படிந்திருந்த காமாலையைக் களைந்தெறிய முற்பட்ட அப்பெருமகனார்க்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் இருந்த போது, அவர் திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; அது பயனின்றி 9.6.1981 அன்று அவரின் உயிர் பிரிந்து அனைவரையும் ஆழ்துயரில் ஆழ்த்தியது.

“பண்ணாராய்ச்சி வித்தகர்” குடந்தை ப. சுந்தரேசனார் இல்லையெனில் இசைத்துறையில் தனித்தன்மை பொருந்திய தமிழர்களின் நிலை வெளிப்பட்டிருக்காது; மிச்சம் மீதியுள்ள இத்தன்மையும் அழிந்திருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக விளங்குகிறது.

இசை என்பது பண்பாட்டின் ஒரு கூறு; அது நம் வாழ்வில் இன்பம் பயக்கக் கூடியது. அதன் காரணமாகவே ‘ஏழிசையாய் இசைப்பயனாய்’என ஆளுடை நம்பி கூறினார். இதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழிசையின் தனிப்பேரொளி குடந்தை ப. சுந்தரேசனார் தமிழிசையை வளர்த்தெடுக்க முற்பட்டார். ஆனால் அவரின் பொருளியல் சூழலால் அவை முடிவு பெறாமலேயே முடிந்துள்ளது. அவர் விட்டுச் சென்றுள்ளப் பணியை நாம் மேற்கொண்டு செய்வோமெனில், அஃதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com