Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

கல்விப் புரட்சிக்கான நூல்
ராணிதிலக்

கியூபா சின்னஞ்சிறு நாடு. 1 லட்சத்து 11 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாடு. இதைச் சோசலிச சமுதாயமாகக் கட்டிக் காக்கும் தலைவர், உலகம் வியக்கும் ஃபிடெல் காஸ்ட்ரோ. ஐக்கிய அமெரிக்கா என்ற பேய்சக்தியால் 45 ஆண்டு கால பொருளாதாரம், மறைமுகத் தடைகளையும் கடந்து இன்றும் வறுமையில் உயிர்வாழ்ந்தபடி இருந்தாலும் கல்வி என்ற அளவில் செல்வச் செழிப்பு மிகுந்தது; லாப நோக்கமற்றது; மிக முக்கியமாக மக்களுக்கானது. ஃபிடெல் காஸ்ட்ரோவின் 80 வயது நிறைவையொட்டி, அந்நாட்டின் கல்வியைப் பற்றித் தமிழில் வெளிவந்துள்ள நூல் இது. இந்நூலில் பதிப்புரை, அணிந்துரை நீங்கலாக 8 கட்டுரைகள் உள்ளன. கியூபா எல்லாவற்றிலும் புரட்சியைக் கண்டிருக்கிறது. அதில் கல்வியும் சேர்த்து. இக்கல்விப் புரட்சி சாதாரணமாக வந்ததல்ல. வலிகளால் பிறந்தது; மன உறுதியால் நிகழ்ந்தது. இக்கட்டுரைகளை வாசிப்பவர்கள் இப்படித்தான் உணர்வார்கள்.

கியூபாவின் புரட்சி, 1-10-1959 இல் நிகழ்ந்தது. அப்போது மக்களிடம் எழுத்தறிவு அதிகம் இல்லை. இதைத் தீர்க்க, 26-10-1960 அன்று காஸ்ட்ரோ எழுத்தறிவு இயக்கத்துக்கான அறிவிப்பை வெளியிடுகிறார். 22-12-1961 அன்று எழுத்தறிவு வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. ஓர் ஆண்டு, சில சொச்சம் நாட்களில் கியூபா, பல வலிகளை, மனதில் அழியாத வடுக்களைக் கண்டது. இந்த எழுத்தறிவு படையின் உறுப்பினராக விளங்கியவர்கள், கியூபாவில் படித்த இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள். இவர்களின் படையின் பெயர் கான்ரேடோ பெனிட்டிஸ் படை. விளக்கு இதன் சின்னம். எழுத்து இயக்க அறிவிப்பு முதல் வெற்றிவிழா வரையிலான நாட்களில் மூன்று கொலைகள் நிறைவேறின.

கான்ரேடொ பெனிடிஸ், டொமினிக், லாண்டிகுவாதான் கொலையுண்டவர்கள். இதற்குக் காரணம் அமெரிக்கா, அமெரிக்காவின் அடிவருடியாக இருந்த கியூபாவின் எதிர்ப்புரட்சிக்காரர்களும் இதற்குக் கூட்டு. ஸ்பெயினுக்கு எதிராகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹொஸே மார்த்தி, உழவர்களுக்கு அறிவொளி புகட்ட ஆசிரியர்படை அமைத்தார். அக்கனவை நிறைவேற்ற ஃபிடெல், அமெரிக்காவுக்கு எதிராக எழுத்தறிவு இயக்கப்படையை அமைத்தார். பதினொரு வயதான சிறுவர்களுக்கும் இதில் ஆசிரியர் பணி. இவர்களின் மாணவர்கள் தந்தையின் வயதை ஒத்தவர்கள். இவர்கள் உழவர்களோடு பகலில் ஈடுபட்டனர். இரவில் கற்றுத்தந்தனர். இவர்கள் இருவரும் தாயகத்தைக் கண்டெடுத்தனர்.

இங்கு மொழியோடு, அரசியலும் கற்றுத்தரப்பட்டது. இதற்கு வானொலியும் தொலைக்காட்சியும் பயன்பட்டது. ‘பொதுப் பிணைப்பும் பொது உணர்வும் பொது நோக்கமும் காண வேண்டும்’ என்பதே இதன் கனவு; நோக்கம். ஒரே ஆண்டில் நாட்டின் எழுத்தறிவின்மை 26.3 விழுக்காடிலிருந்து 4 விழுக்காட்டுக்குக் குறைந்தது. இந்த வெற்றியை ஐ.நா. கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு 1964இல் அறிக்கையாக வெளியிட்டுப் பாராட்டியது. இந்த வெற்றி அனுபவத்தைப் பங்கிட்டுக்கொள்ள. பல்வேறு நாடுகளில் பணியாற்றியது. அழைப்பு விடுத்த நிகரகுவாவில், 29,000 கியூபா மாணவர்கள் பங்கேற்றனர். அங்கும் இரு ஆசிரியர்கள் கொல்லப்படுகிறார்கள். ‘எங்களை அனுப்புங்கள்’ என்றனர் பல லட்சம் கியூபா மக்கள். இவற்றைத் தான் விரிவாகச் சொல்கிறது. முதல் கட்டுரையான ‘எழுத்தறிவு படையெடுப்பு’.

இரண்டாவது கட்டுரை ‘மக்கள் உரிமை, அரசின் கடமை’. இதில் கியூபாவின் இலவசக் கல்வி பற்றிப் பேசப்படுகிறது. ‘நிதி மூலதனத்தைக் காட்டிலும் மனித மூலதனம் பன்மடங்கு மதிப்புமிக்கது’ என்றார் ஃபிடெல். யாரும் எக்காரணத்தைக் கொண்டும் படிக்காதவர்களாக இருக்கக் கூடாது என்கிற நிலைப்பாடுக்காகவும், ஆண் பெண் சமநீதியை நிலைநாட்டவும் கல்வி அளிக்கப்படுகிறது. அதுவும் இலவசமாக, வணிகம் இல்லாமல், சோசலிச பொருளியல் அடிப்படை இதற்காகக் கைவிடப்படவும் இல்லை. ஊனமுற்ற, மன வளர்ச்சி குறைந்த மாணவர்களுக்கு இதில் சிறப்பு ஏற்பாடும் அடக்கம். ‘தனியார் அற்ற அரசுக் கல்வி: அதுவும் சிறந்த கல்வி என்று யுனெஸ்கோவின் கோன்சாலஸ் பாராட்டுகிறார். இவற்றைப் பற்றி விரிவாகவும் புள்ளி விவரத்துடன் ஆசிரியர் எழுதுகிறார், இக்கட்டுரையில்.

கல்வியின் மொழி ஸ்பானிய மொழிதான். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை ஸ்பானிஷ்தான். தொடக்க நிலையில் வேற்றுமொழி இல்லை. 1 முதல் 4 வகுப்பு வரை கணக்கு, ஸ்பானியம், 5 இல் வரலாறு, இயற்கை அறிவியல், விழுமியக் கல்வி, 6 இல் புவியியல், அயல்மொழி 7 ஆம் வகுப்பில் ஸ்பானியம், இலக்கியம், உயிரியல் 8இல் இயற்பியல், வேதியியல், பத்தாம் வகுப்பில் கணினி, அடிப்படை ராணுவம், 11, 12இல் மார்க்சிய லெனினிய அடிப்படைகள் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றுடன் முறைசாராக் கல்வி நடைபெற்றது. கலைகள், நற்பண்புகளை வளர்ப்பதே இதன் நோக்கம்; பாடத் திணிப்பு அன்று. தொழில்நுட்பக் கல்விக்கும் தொழிற் கல்விக்குமான கல்வித் திட்டத்தையும் பயிற்சி முறைகளையும் வகுப்பதில் பொதுத் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

முதியோர், உழவர், தொழிலாளர்களுக்கானக் கல்வியும் இதில் உண்டு. இக்கல்வியின் நோக்கம், கியூப தேசிய உணர்ச்சி வளர்ப்பது; தாய்மொழிக் கல்விக்குத் துணை செய்வது. இவற்றைத் தரவுகளுடன், புள்ளிவிவரங்களுடன் 3 ஆவது கட்டுரையான ‘அனைவருக்கும் கல்வி, அனைத்தும் தாய்மொழியில்’ என்ற கட்டுரை விரிவாகக் கூறுகிறது. நான்காவது கட்டுரையான ‘இல்லந்தோறும் பள்ளிக்கூடம்’ என்பது படிப்பு இல்லங்களைப் பேசுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று, குடும்பத்தில் நிகழும் சிக்கல்களைக் கண்டறிந்து, மாணவர்கள் ஒன்று சேர்ந்து படிக்க ஒரு குடும்பத்தை அல்லது இல்லத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அப்படிப்பு இல்லம் பண்பாட்டுத் தரம், அவகாசமும் கொண்டதாக இருக்கும். புதிதாக அறியப்படும் கோட்பாடு கற்கப்படும். ஆசிரியர்களின் கற்பித்தலில் புதிய உத்திமுறைகள் பரிந்துரைக்கப்படும்; ஊக்கம் தரப்படும். இப்படியான செயல்பாட்டால், கியூபாவில் 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற வீதம் அமைந்தது. இக்கட்டுரையில் ஆசிரியரின் செயல்பாடுகள், பள்ளி அமைப்பு முறைகள், பாடத்திட்டங்கள், காலமுறைகள், சீர்திருத்தங்கள், கல்வித் தகவமைப்பு, செயல்பாட்டுக்கான ஆசிரியர்களின் வாய்ப்புகள், மலைகளிலும் கிராமங்களிலும் படிப்பவர்களின் எண்ணிக்கை எனப் பல செய்திகள் கருத்துக் கணிப்புடன் வெளிப்படுத்தப்படுகின்றன.

கல்வி என்பது அறிவு, தேர்ச்சி சார்ந்தது அல்ல; பண்பைச் சார்ந்தது; முக்கியமாக அறிவியல் சார்ந்தது. படிப்பையும் உழைப்பையும் இணைப்பது மார்த்தியின் கல்விச் சிந்தனைகளில் முதன்மையான ஒன்று. இதைக் கியூபா நிறைவேற்றி வருகிறது. மாணவர்களுக்குத் தோட்டவேலை, உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிய மனிதனை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டது கியூபா. தவறான பழக்கவழக்கங்களிலிருந்து மீட்பது. பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் கலை வகுப்பிற்குச் செல்ல வழிவகுப்பது. அமைப்பை மேம்படுத்தும் கூட்டு முயற்சியையையும் அணி உணர்வையும் சோசலிசக் கல்வியையும் கியூபா முதன்மைப் படுத்துகிறது. இதற்கான விழுமியங்களை, அறங்களைப் போதிக்கிறது. இம்முறையினால் நிகழ்ந்த பண்பாட்டு வளர்ச்சியாகப் புத்தகம் படிக்கும் பழக்கம் உருவானதை, இவ்வைந்தாவது கட்டுரையான, ‘படிப்பு வளம் பண்பு நலம்’ வெளிப்படுத்துகிறது.

ஆறாவது கட்டுரையான, ‘தேடுக்கல்வி திகழும் தேசம்’, சுற்றுச் சூழல், கிராமப்புற வளர்ச்சியைப் பற்றிய கல்வித்திட்டம், ஆசிரியப் பயிற்சி, ஆராய்ச்சி பற்றிப் பேசுகிறது. உருகுவே பள்ளி, பனாமா பள்ளி, லெனின் தொழிற்பயிற்சி மையம் போன்றவை ஏன்? எதற்காக அமைந்துள்ளன என்பதைப் பற்றி உரையாடுகிறது. உறைவிடப்பள்ளி, சிறப்புப் பள்ளி போன்ற வகைகள் புதுமையான பள்ளி நுட்பங்களாகக் கண்டறியப்படுவதை இக்கட்டுரையில் வாசகர்கள் அறியலாம்.

வாழ்வின் அடிப்படையில் மருத்துவத்தின் பங்கு முக்கியமானது. அமெரிக்கா போன்ற சுரண்டல் அதிகாரங்கள் மருத்துவப் படிப்புக்கென கட்டணங்களைப் பெறும்போது, கியூபா இலவசமாக வழங்குகிறது. இதைப்பற்றி எட்டாவது கட்டுரையான, ‘குறைவற்ற செல்வம்’ விரித்துரைக்கிறது. 2004, 2005 கல்வியாண்டில் கியூபாவில் 83 நாடுகளைச் சேர்ந்த 12,000 மாணவர்கள் மருத்துவம் பயின்றதை, அதில் 65 மாணவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்ததை இக்கட்டுரை குறிப்பிடுகிறது. இங்கு மருத்துவம் என்பது மரபு வழி பயிற்சிமுறை சார்ந்தது; நவீனத்தை நோக்கி அமைவது. பன்மடங்கு மேம்படுத்தப்பட்டது. 170 நபருக்கு 1 மருத்துவர் என, அமெரிக்காவைவிட இருமடங்கு உயர்ந்திருக்கிறது.

கடைசிக் கட்டுரையான ‘நிகர்வாழ்வு நேரிய கல்வி’யில் கியூபாவிற்கு அமெரிக்கா அளித்த வன்கொடுமைகள் பற்றியும், கியூபா தப்பித்து முன்னேறிய பாங்கையும் குறிப்பிடுகிறது. ‘சமூக நீதியை நிலைநாட்டாமல் அனைவர்க்கும் சமநீதியான கல்வி என்ற குறிக்கோளை இறுதியாகவும் உறுதியாகவும் அடைய முடியாது என்பதைக் கியூபாவிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்’ என்ற ஆசிரியர் தியாகுவின் எழுத்து முத்தாய்ப்பாக உள்ளது.

ஒட்டுமொத்த நூலை வாசிக்கும் நபர், நம் கல்வி குறித்த மனசாட்சியைத் திறப்பவராகிறார். நாம் ஏன் இந்தியாவில் படிக்கிறோம்? அல்லது நாம் ஏன் கியூபாவில் பிறந்து படித்திருக்கக் கூடாது? நம் இந்திய, மாநிலக் கல்வி ஏன் கியூபா கல்வி போல அமையக் கூடாது? என்ற கேள்விகள் எழலாம்.

கியூபாவின் வீழ்ச்சி என்பது நமது வீழ்ச்சியாகிறது. முதலாளித்துவ, சமநீதியற்ற வாழ்வில், இந்திய, தமிழகக் கல்வியில், கியூபாவின் கல்வி பற்றின படிப்பினை நமக்குத் தற்போது அவசியமானதுகூட. நம் முன்னேற்றம் கல்வி வழியாக எவ்வளவு தடைகளைப் பெற்றிருக்கிறது என்பதை, கியூபா கல்வி அமைப்பிலிருந்து நாம் உணர்ந்துகொள்ள முடியும். அறிவு, தேர்ச்சி, அதிகாரம், பணம், புகழ் மட்டுமே கல்வி அளிக்கக் கூடியதல்ல; நல்ல பண்பை, அறிவியலை, ஒழுக்கத்தை, பொது நீதியை, பொது சமுதாயத்தை வழங்க வேண்டியதுதான் கல்வி என்பதை இந்நூலின் வழியாக அறியமுடியும். இந்நூலை வாசிக்கும் கல்வியாளர்களோ அல்லது சிந்தனையாளர்களோ, நம் இந்திய, தாய்மொழிக் கல்வியில் புதிய மாற்றங்களை உருவாக்க முனையலாம்.

இந்நூலில் தியாகுவின் அயராத பணியைப் பாராட்டலாம். புள்ளிவிவரங்கள், தகவல்கள், தரவுகள், அட்டவணைகள் என ஆதாரங்களுடன் கட்டுரை எழுதியுள்ளார். எனவே, கல்வியில் புதிய மாற்றங்களை, விழுமியங்களை உருவாக்க நினைப்பவர்கள், தியாகுவின் அயராத உழைப்பில் உருவான, இந்நூலை வாசிப்பது சாலப் பொருந்தும்.

கியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம்,
ஆசிரியர் : தியாகு, வெளியீடு : என்சிபிஎச்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை -98. விலை : ரூ. 40.00.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com