Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

தலையங்கம்

மகத்தான சோவியத் நவம்பர் புரட்சி
- ஆர். பார்த்தசாரதி

ருஷ்யாவில் 1917 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் (பழைய நாள்காட்டி படி 25 அக்டோபர்) நடைபெற்ற புரட்சியை வரவேற்ற பாரதி அதனை “யுகப்புரட்சி” என்று மதிப்பீடு செய்து இவ்வாறு பாடுகிறார்:

“ஆகாவென்றெழுந்ததுப் பார் யுகப்புரட்சி / இடிபட்ட சுவர் போலக் கலிவீழ்ந்தான் / குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமைநீதி / கடியொன்றி லெழுந்தது பார்: குடியரசென்று / உலகறியக் கூறிவிட்டார் / அடிமைக்கு தளையில்லை யாருமிப்போது /அடிமையில்லை, அறிக” என்று பாடினார். ஜான்ரீட் “உலகைக் குலுக்கிய பத்துநாட்கள்” என்னும் புகழ்பெற்ற நூலில் விவரமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்துச் சொல்லியுள்ளார்.

உலக முதலாளித்துவ ஏடுகள் லெனினை ருஷ்யாவுக்கு எதிரான “ஜெர்மன் ஏஜெண்ட்” என்று வர்ணித்தபோதிலும் இந்தியாவில் பத்திரிகையாளராகயிருந்த ஹார்னிமனும் அரசியல் தலைவரான பாலகங்காதர திலகரும் அந்த வசை மொழியை நம்ப மறுத்தனர். திலகரும், லாலாலஜபதிராயும் அவரை ஓர் அவதார புருஷனாகவே மதித்தனர். உலகத்தில் பல எழுச்சிகள், கிளர்ச்சிகள், புரட்சிகள் நடைபெற்றன. ஆனால் இப்புரட்சி உலகையே தலைகீழாக மாற்றிய பெரும்புரட்சி. உலக முதலாளித்துவத்தின் கீழ் அகப்பட்டுச் சிக்கிச் சீரழிந்து வந்த காலனி நாட்டு மக்களுக்கும் உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கும், ஊக்கமும் நம்பிக்கையும் தந்து தொழிலாளி வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்தியவர் விளாடிமிர் இல்லிச் உல்யானவ் லெனின் ஆவார்.

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் இணையற்ற தலைவராக விளங்கிய ஹோசிமின் “ருஷ்யப்புரட்சி உலகம் முழுவதும் வாழும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டியெழுப்பியதோடு, காலனி நாடுகளில் சார்ந்து தழுவி வாழும் அடிமை நாட்டு மக்கள் விடுதலை பெறும் வழியையும் காட்டிற்று. ஏகாதிபத்தியத்தின் கொடும்தளைகளை உடைத்தெறிந்து அதன் அடித்தளத்தையே அழித்துச் சிதைத்து அதற்கு மரண அடி தந்தது. அதன் இடியோசை, நீண்ட நெடுங்காலமாக ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்த ஆசிய மக்களை விழித்தெழச் செய்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேச விடுதலைப் போராட்டம் எனும் காலக்கட்டத்தைத் தொடங்கி வைத்தது” (தேர்வு நூல் - தொகுதி 4, பக்கம் : 141, 147-265). பண்டித ஜவாஹர்லால் நேரு தம்முடைய ‘இந்தியாவைக் காணல்’ எனும் நூலில் “சோவியத் புரட்சி மனித குலத்தை மயக்கத்திலிருந்து எழுப்பிப் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிச் செல்ல ஒளிவிளக்கைத் தந்துள்ளது. உலகம் புதிய நாகரிகத்தைச் சென்றடைவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளது”. (பக்கம் 58) என்று குறிப்பிடுகிறார்.

சோவியத் புரட்சி பற்றிய செய்தி இந்திய நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளித்தது. போல்ஷிவிக் முறை வன்முறை என்று மகாத்மா காந்தி கருதிய போதிலும் அவ்வெற்றியை அவர் மனம் திறந்து பாராட்டினார். தேசியப் போராட்டம் விறுவிறுப்படைந்தது. சுபாஷ் சந்திரபோசும், வெளிப்படையாகவே சோவியத் நாட்டையும் அதன் வெற்றியையும் பாராட்டினார்.

சுருங்கச் சொல்வதானால் மானுடத்தை விழிப்புறச் செய்து நல்வாழ்வுக்கான போராட்டத்தைச் சாதி-மத, மேலோர், கீழோர், ஆண்டான் அடிமை என்னும் வேற்றுமை நீங்கிய சமத்துவம் காண அடித்தளம் அமைத்துத் தந்தது, இயக்கத்தை தொடங்கிவைத்தது இப்புரட்சி எனலாம்.

அடிமைத் தளையில் உழன்ற காலனி நாட்டு மக்களுக்கு விடுதலை உணர்ச்சியையும் முதலாளித்துவத்தின் கீழ்ச் சிக்கிச் சீரழிந்த தொழிலாளி வர்க்கத்துக்கு ஆளும் வர்க்கமாக உயர முடியும் என்ற நம்பிக்கையையும் ஊட்டிய சோவியத் புரட்சி இனம், மொழி சார்ந்த மக்களிடையேயும் சமத்துவம் காண முடியும் என்பதனையும் எடுத்துக்காட்டியது. ஜார் ஆட்சியின் போது ருஷ்யாவில் வாழ்ந்திருந்த பிற இன மக்கள், குறிப்பாக இஸ்லாமியர் இரண்டாம் தர, மூன்றாம் தரக் குடிமக்களாகக் கருதப்பட்டனர். சோவியத் ஆட்சி மலர்ந்த பத்து நாட்களில் எல்லாத் தேசியங்களும் சமமாக நடத்தப்படும். பிரிந்து செல்ல விரும்பும் தேசியம் தனித்துச் செல்ல உரிமை வழங்கப்படும். ஒரு மொழிக்கோ, ஒரு மதத்திற்கோ காட்டப்படும் தேவைக்கு அதிகமான சலுகைகள் நீக்கப்படும். சிறுபான்மை இனங்கள் வளர்ச்சியும், சமத்துவமும் உறுதி செய்யப்படும் என்று லெனின் அரசு பிரகடனம் செய்தது. இதற்கான திட்டங்களை வகுத்தது. உலகெங்கும் பல நாடுகளில் வாழும் அடக்கி ஒடுக்கப்பட்ட தேசிய இன மொழி பேசும் மக்களை விழிப்படையச் செய்தது.

முதலாளித்துவத்திற்கு முன்னிருந்த சமூக, பொருளாதார உருவாக்கங்களில் இனங்களும், குடிகளும், குலங்களும் இருந்தன. அவற்றை அழித்து முதலாளித்துவம் வளர்ந்தது என லெனினியம் சுட்டிக்காட்டியது. இந்தக் கருத்தாக்கத்தில் ஸ்டாலினுடைய பங்கு சிறப்பானது. வரலாற்று வளர்ச்சிப் போக்கில் எல்லா நாடுகளிலும் தேசிய இன, மொழி, உணர்ச்சிகள் தோன்றி வளரத் தொடங்கின. பிளவுண்டு கிடந்த தேசியங்களும் அடக்கி ஒடுக்கப்பட்ட தேசியங்களும், இனங்களும், ஒற்றுமையையும், விடுதலையையும் வேண்டிப் போராடும் என்று மார்க்சியம் கூறிற்று. அக்காலத்தில் இதுவே உலக நாடுகள் எல்லாவற்றிலும் இருந்த நிலைமை.

மார்க்சியம் இன, மொழி, விடுதலையையும் சமத்துவத்தையும் ஆதரித்தது. ரஷ்யாவில் அடக்கி ஒடுக்கப்பட்ட இனங்களுக்கும், மொழிக்கும் சமத்துவம் வழங்கப்பட்டதினால், ஒலி வடிவம் மட்டும் பெற்றிருந்த மொழிகளுக்கு வரிவடிவம் அமைத்துத் தந்ததனால் நெடுங்காலம் ஒன்று பட்ட சமுதாயமாகச் சோவியத் யூனியன் காட்சி தந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் இக்கொள்கை தளர்ந்தது. ரஷ்யமொழி மேலாண்மை பெற்றது. சோவியத் தகர்வுக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். ஆனால் ஊன்றிப் பார்க்கும் அளவில் சோவியத் புரட்சிக்குப் பிறகு அந்த நாடு முதலில் கையாண்டு வந்த கொள்கையே பிற நாடுகளுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளது என்பது புலனாகும். இந்தியாவும் இதற்கு ஓரெடுத்துக்காட்டு.

மார்க்சிய-லெனினியம் தொழிலாளி வர்க்க சித்தாந்தம் இந்திய நாட்டில் சிதறிக் கிடக்கும் தொழிலாளிகள் தொழிற் சங்கங்களை அமைத்தனர். “1920 ஆம் ஆண்டு (31-10-1920) அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் அமைந்தது. இதனை அமைத்தவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள். அந்த அமைப்பில்தான் கம்யூனிஸ்டுகள் இயங்கினர். தொழிலாளி வர்க்கத்தின் துணை வர்க்கமான விவசாயிகளை ஒன்று திரட்டிப் போராடுவதற்காக 1936 ஆம் ஆண்டு அனைத்திந்திய கிசான் சபை அமைக்கப்பட்டது. இவ்வர்க்க அமைப்புகள் நடத்திய போராட்டங்களும் கிளர்ச்சிகளும் எண்ணற்றவை. பலனாக இவ்வர்க்க நலன்கள் பாதுகாக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

முதல் உலகப்போர் 1914 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் காந்தி இந்தியா திரும்பினார். அவர் திரும்பியதும் இந்திய நாட்டின் பல கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வெடித்தன. திலகர் மாண்டேலா சிறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்தார். எழுச்சிகளையும் கிளர்ச்சிகளையும் அடக்க 1919ம் ஆண்டு ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜாலியன் வாலாபாக்கில் நடந்த எதிர்ப்புக் கூட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 375 பேர் மாண்டனர். 1200 பேருக்கும் மேல் காயம்பட்டனர். பஞ்சாப் படுகொலைக்குப் பின் பகத்சிங் எழுச்சியைக் காண்கிறோம். லெனின் மறைவு நினைவு ஆண்டுக் கூட்டத்தில் 1930 ஜனவரி 21 ஆம் நாளன்று பகத்சிங் - “லெனின் வாழ்க, கம்யூனிசம் வெல்க” என்று முழங்கினர். இதிலிருந்து விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தியாக வீரர்கள் உள்ளத்திலும் லெனினும் சோவியத் நாடும் பெற்றிருந்த மதிப்பு மிக உயர்ந்தது. வலிமையானது என்பது தெரிய வரும்.

இந்திய நாட்டு விடுதலைக்குப் பின்புலமாக இருந்தது சோவியத்நாடு. நேரு தலைசிறந்த பாசிச எதிர்ப்பாளர் (Antifacist) முக்கியத் தலைவர்களில் ஒருவராக நேரு பங்காற்றினார். நாடு சுதந்திரம் பெற்ற பின் அவர் பின்பற்றிய, வகுத்தளித்த ஐந்தாண்டுத் திட்டங்களுக்குச் சோவியத் நாடு முன்னோடி. ஸ்டாலின் காலத்தில் ருஷ்யாவை முன்னேற்றுவதற்காக ஐந்தாண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால், மிகக் குறுகிய காலத்தில் மிகப் பின்தங்கிய நாடாக இருந்த ரஷ்யா பொருளாதாரத் துறையில் மிக வளர்ந்த நாடாக எழுச்சி பெற்றது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நுகத்தில் சிக்கி எல்லாம் இழந்து பொருளாதார வளர்ச்சியில் மிகப் பின்னால் இருந்த இந்திய நாட்டை முதன்மை நாடாக்க வேண்டும் என்னும் நேருவின் எண்ணத்தைச் சோவியத் ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கிற்று எனலாம்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தியின் அறைகூவலுக்கு இணங்கப் பள்ளிகளிலும் - கல்லூரிகளிலும் படித்திருந்த மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1936 ஆம் ஆண்டு அனைத்திந்திய மாணவர் சம்மேளனம் உருவாயிற்று. தொடக்கக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் அன்று காங்கிரசிலிருந்த முகமது அலிஜின்னா. தொடங்கி வைத்தவர் ஜவாஹர்லால் நேரு. அன்று தொடங்கிய மாணவர் சம்மேளனம் பல ஆக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது. குறிப்பாக 1943 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தில் மாணவர் சம்மேளனம் ஆற்றிய பணி மகத்தானது. இந்த அமைப்பைச் சேர்ந்த பலர் இயல்பாகவே பொதுவுடைமையராயினர்.

இந்தியத் தேசிய காங்கிரஸ் கொடி அமைத்துத் தந்தவராகக் காமா அம்மையார் கருதப்படுகிறார். 1907 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் நடந்த சோஷலிச காங்கிரசில் அம்மையார் பங்கு பெற்றார். அவருக்கு மாக்சிம் கார்க்கியைத் தெரிந்திருக்கிறது. கார்க்கியின் கவிதை ஒன்றில் காமா ஈடுபாடு கொண்டு அதன் வயப்பட்டதாகத் தெரிகிறது.

அரசியலில் 1925 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதும் 1929 இல் மீரட் சதி வழக்கு நடைபெற்றதும் மிக முக்கிய நிகழ்ச்சிகள். இவை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் வேர் கொள்ளச் செய்தன. இது தவிர கம்யூனிஸ்ட் அகிலமும் அதன் தலைவர்களும் பொதுவுடமை இயக்கம் வளர்வதற்கும் வழி நடத்துவதற்கும் ஆற்றிய பணிகள் மிகப் பல. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரசும், அனைத்திந்தியக் கிசான் சபையும், அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் செயல்பட்டு முத்திரை பதித்தன. வெற்றிகள் ஈட்டின.

நோபல் பரிசு பெற்ற சந்திர சேகர வேங்கடராமன் சோவியத் நாட்டுக்கும், இந்திய நாட்டுக்கும் விஞ்ஞான உறவுப் பாலத்தை அமைக்க அடிக்கல் நாட்டினார். அவரைத் தொடர்ந்து மேகநாத் சாஹா இரு நாடுகளுக்குமிடையே உருவான உறவை வலுப்படுத்தினார். அவருக்குப் பின் இந்திய விஞ்ஞானிகளுக்கும், சோவியத் விஞ்ஞானிகளுக்கும் இடையே எழுபதாண்டுக் காலமாகப் பயனுடைய உறவு நீடித்து வருகிறது. இவ்வுறவு பல துறைகளில் பரிணமித்து வருகிறது.

1920-30 இடைப்பட்ட ஆண்டுகளில் புதிய ரஷ்யாவைப் பற்றி அறிய இந்தியர்களிடையே அவா எழுந்தது. இதன் பலனாக மாக்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய், ஆன்டான் செக்காவ், தாஸ்தாயெவ்ஸ்கி முதலான தலைசிறந்த ரஷ்யப் படைப்பாளிகள் அறிமுகமாயினர். ஆங்கிலப் புதினங்களை எத்தகைய ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இந்திய மக்கள் விரும்பி வரவேற்றுக் கற்றார்களோ, அதனைவிட அதிகமாகச் சமத்துவ சமுதாயம் காணப் போராடி வெற்றி பெற்று முன்னேறத் துடிக்கும் சமுதாயத்தின் இலக்கியங்களை இந்திய மக்கள் ஆர்வமாகப் படித்தனர். இதனால் ரஷ்ய இலக்கிய பாணியில் இந்திய மொழிகளில் ஏழ்மையை எதிர்த்துப் புதிய சமத்துவ சமுதாயத்துக்காகப் போராட வழிகாட்டும் சிறுகதைகளும் புதினங்களும் வெளிவரத் தொடங்கின.

நோபல் பரிசு பெற்ற கவியரசர் ரவீந்திரநாத தாகூர் 1930 ஆம் ஆண்டு சோவியத் நாடு சென்று திரும்பினார். அவர் அங்குக் கண்டதையும், கேட்டதையும் கடிதங்களாக வடித்துத் தந்தார். தமிழகத்திலிருந்து பெரியார், ஈவேரா சோவியத் நாடு சென்று திரும்பினார். பண்டித ஜவாஹர்லால் நேரு பாசிச எதிர்ப்பு தலைவர்களில் ஒருவரானார். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்குப் பாராளுமன்றமான ரிச்ஸ்டாக் தீயிட்டு கொளுத்தினான். ஆனால் அதற்காக உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவரான ஜார்ஜ் டிமிட்ரோவ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். வழக்கு நடைபெற்றது. உலகத் தொழிலாளி வர்க்கம் ஆர்த்தெழுந்தது.

இந்தப் பின்புலத்தில் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குச் சென்ற பலர் மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். இவர்களில் சிலர் லண்டனில் 1935ம் ஆண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைத்தனர். அமைப்பாளரான ஸஜத்ஸாகீர் மார்க்சிய இலக்கியங்களைப் படித்தது அதற்குத் தூண்டுக்கோலாக அமைந்தது என்று குறிப்பிடுகின்றார். இதன் எதிரொலி இந்தியாவிலும் கேட்டது. 1936 ஆம் ஆண்டு லக்னோவில் புகழ் பெற்ற இந்தி, உருது எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் தலைமையில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. அமைப்பும் உருவாயிற்று. புதிய சகாப்தம் பிறந்தது. ரஷ்யப் புதினங்கள் பல மொழி பெயர்க்கப்பட்டன. பொதுவுடைமை இலக்கியம் செல்வாக்குப் பெற்றது. சங்கத்தின் கிளைகள் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்பட்டன. இந்தி மொழி தொடங்கி அசாமிய மொழி வரை காஷ்மீர் - டோக்ரி முதல் தமிழ் வரை இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளிலும் இச்சங்கத்தின் செல்வாக்குப் பெருகிற்று. புதிய உலகம் புதிய சமுதாயம் காண விழைந்த எழுத்தாளர்கள் பலர் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கீழ் இயங்கினர்.

1943 ஆம் ஆண்டு கொடிய வங்காளப் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் இந்திய முற்போக்கு நாடக சங்கம் (IPTA) உருவாயிற்று. மேடை நாடகங்கள் முதல் தெரு முனை நாடகங்கள் வரை படைப்பதற்கும், நடைபெறுவதற்கும் இச்சங்கம் பெருதவி செய்தது. கலை மக்கள் கலையாயிற்று.

மார்க்சியம் லெனினியம் உலகத்தில் முதன் முதலில் தோன்றிய புதிய சிந்தனை அறிவியல் ஆதலால் இயக்கவியல் பொருள்முதல் வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்னும் ஆய்வு நெறிமுறை இந்தியச் சிந்தனையாளர்களுக்கு அறிமுகமாயிற்று. சோவியத் ஆராய்ச்சி அறிஞர்களால் இந்திய அரசியல் பொருளாதார சமூக வரலாறு. வேத காலம் முதல் அண்மைக் காலம் வரை எழுந்த இலக்கண இலக்கிய சமயப் படைப்புகள் ஆகியவை புதிய கோணத்தில் மார்க்சிய லெனினிய ஆய்வு நெறிமுறையில் அணுகி ஆராயப்பட்டன.
வரலாறைப் பொறுத்த அளவில் பண்டைய இந்திய வரலாறு தொடங்கி இக்கால வரலாறு வரை மார்க்சியம் லெனினியம் என்னும் புத்தொளியில் நூல்கள் பல எழுந்தன. இந்திய மொழிகள், பண்பாடு பற்றிய நூல்கள் பல இயற்றப்பட்டன. இந்திய அறிஞர்களும் இந்த ஆய்வு நெறிமுறையினால் ஈர்க்கப் பெற்றனர்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தமிழர்கள் சோவியத் ஆய்வறிஞர்களுக்குக் கடன்பட்டவர்கள். ஏனெனில் அவர்களே சிந்துச் சமவெளி நாகரிகம், ஆரியருடையதன்று. ஆரியர் அல்லாதார் படைப்பு அங்கு வழங்கிய மொழி தொல் திராவிட மொழி என்று வரையறுத்துக் கூறினர். தமிழ்நாட்டில் அரசு என்னும் அமைப்பு வடபுலச் செல்வாக்கின்றித் தோன்றி மலர்ந்தது என்று அறுதியிட்டுச் சொன்னார்கள். தென்னகத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகள் எல்லாம் வடபுலத்தின் சாயல்களாகவே அமைந்தன என்னும் வாதத்திற்கு இது பதிலாக அமைந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபுறம் ஏழை எளிய மக்களின் புது, சமத்துவ வாழ்வுக்காக அடித்தளம் நாட்டியதோடு மறுபுறம் உலக அமைதி காக்கவும் விடுதலை பெற்ற நாடுகள் அதனைப் பேணிக் காக்கவும் பல துறைகளில் முன்னேற உதவி செய்தும் அரும் பணியாற்றி வந்துள்ளது.

ஒரு சிறு கட்டுரையில் சோவியத் புரட்சியின் உலக அளவிலான செல்வாக்கை மதிப்பீடு செய்வது எளிதன்று. ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றை நினைவு கூர்வது இக்கட்டுரையின் நோக்கம்.

பாரீஸ் கம்யூன் சில திங்களில் வீழ்ந்தது. சோவியத் நாடு 75 ஆண்டுகளுக்கு பிறகு சிதைந்தது. அது இயங்கிய காலத்தின் உலகம் பெற்ற பலன்கள் அளப்பரியவை. பத்தாண்டுக் காலமாக உலக வரலாற்றில், சிந்தனைப் போக்கில் ஒரு வெற்றிடம் காண்கிறோம்.

சோவியத் நாடு இல்லாத போது என்னென்ன அவலங்கள் உலக அரங்கில் நடைபெறும் என்பதனை அண்மைக்கால உலக வரலாறு உலக மக்களுக்கு குறிப்பாக வளரத் துடிக்கும் விடுதலை பெற்ற நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகின்றது.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com