Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

கொங்குதேர் வாழ்க்கை
பொதிகைச் சித்தர்

“ஓர் இலக்கியப் பிரதியின் அர்த்தம் அது தோன்றிய பொழுதிலேயே தீர்மானிக்கப்பட்டு எஞ்சா முழுமை பெற்று விடுவதில்லை. பின்வரும் சந்ததியினரால் புதிய அர்த்தங்கள் தரப்பட்டு புதிய பயன்பாடுகளுக்கு அது கொள்ளப்படுகின்றது.... இப்போது இலக்கிய வாசிப்பு என்பது தனித்ததொரு துறையாகவே வளர்ந்துள்ளது. ஏற்பு அழகியல் (Reception Aesthetics) என்று இத்துறை பெயர் பெற்றது”, எனத் தம் கவிதை மொழி; தகர்ப்பும் அமைப்பும் நூலில் குறிப்பிடுவார் முனைவர் க. பூரணச் சந்திரன்.

இந்த ரீதியில் ஒரு கவிதையை முன்வைத்து அதன் மீது தொடரும் சில வாசிப்புகளையும் ஒரு சேர நிகழ்த்திப் பார்ப்போமே. இவ்வாசிப்பிற்குரியதாகத் தெரிவு செய்யப்பட்ட கவிதை பிரேமிளின் வண்ணத்துப் பூச்சியும் கடலும்.

“சமுத்திரக் கரையின் / பூந்தோட்ட மலர்களிலே / தேன்குடிக்க அலைந்தது ஒரு / வண்ணத்துப்பூச்சி / வேளை சரிய / சிறகின் திசைமீறி / காற்றும் புரண்டோட / கரையோர மலர்கள் நீத்து / கடல் நோக்கிப் பறந்து / நாளிரவு பாராமல் / ஓயாது மலர்கின்ற / எல்லையற்ற பூ ஒன்றில் / ஓய்ந்து அமர்ந்தது.... முதல் கணம் / உவர்த்த சமுத்திரம் / தேனாய் இனிக்கிறது”.

இது பற்றி இரா. குப்புசாமியின் குறியீட்டியல் வாசிப்பு விரிவானது. அதன் சாராம்சத்தை மட்டும் இங்கே காண்போம். “இந்தக் கவிதையில் வயிற்றுப்பாடும் அழகுணர்ச்சியும் எதிரெதிர் நிலைகளில் வைத்துக் காட்டப்படுகின்றன. உயிருக்குத் தீனிபோடும், எல்லையற்ற, இரவு பகலற்ற, இடையீடின்றி மலரும் கடல், கடல் எல்லையற்றதன் குறியீடு, வண்ணத்துப் பூச்சி மனிதனுக்குக் குறியீடு... உலகியல் நிலையில் நாக்கு ருசியில் உப்பு, உயிரின் ருசியில் அழகுணர்ச்சியில் ஆனந்தமாக மாறுகிறது ‘மதுவித்தை’ கைவரப் பெறுகிறது” எனத் தொடரும் அவரது குறியீட்டியல் வாசிப்பு. (இரா. குப்புசாமி (சேலம் ஆர்.கே) ‘பொதிகை’).

“நொறுங்குண்ட நிலையிலிருந்து விடுபட்டு எல்லையற்ற விடுதலையை நிறைவை அடைதல் என்பதைக் கவிதை வண்ணத்துப் பூச்சியில் நிறைவேற்றுகிறது.... ஒவ்வொன்றின் நிறைவும், ஒவ்வொருவருடைய நிறைவும், அதன் போக்கில் உருப்பெறுமாறு நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், இது கைநழுவ இடமில்லை என்பதும், இவ்வுணர்வு நிலையின் உன்னத தர்க்கம்” என வில்லியம் ஜேம்ஸின் மனித உணர்வு நிலை குறித்த உளவியலாய்வு ரீதியில் தொடர்கின்றது ‘அரும்பு’ இதழில் ஆ. அமிர்தராஜ் வாசிப்பு.

“அப்பூவின் ருசி முதல் கணத்தில் உப்புக் கரிப்பு, ஆனால் வற்றாத ஆசையின் உந்தலானது. பின்னர் அதைத் தேனாக ருசித்துக் கொண்டது. இது பற்றி மன அலசல் ஆசையின் சேத்திரத்திலிருந்து (Love Object) கிடைக்கும் மனத்திருப்தி என்கிற தென் ஆதரவு இச்சை உணர்வின் உந்தல், கற்பனையின் செயற்பாடு மீதானது” என லெக்கானிய உளப்பகுப்பாய்வாகத் தொடரும் க. செல்லப்பாண்டியன் வாசிப்பு (ப்ராய்டிய லெக்கானியப் பார்வையில் கதைகள், கவிதைகள்....)

“தொல்காப்பியப் பொருளதிகாரம் திராவிட இலக்கிய இயலின் - ஆய்வுச் சித்தாந்தத்தின் மூலக் கருவாகும் எனத் ‘தொல்காப்பியத்தின் சமகால முக்கியத்துவம்’ கட்டுரையில் வலியுறுத்திச் சொல்வார் அய்யப்ப பணிக்கர். “தொல்காப்பியப் பொருளதிகாரம் மனோதத்துவ உண்மைகளின் அடிப்படையில் எழுந்த ஓர் அற்புதமான இலக்கிய சம்பிரதாயக் கலை” என ஏலவே சுட்டினார் ஏ.வி. சுப்பிரமணிய ஐயர்.

பிரேமிளின் இக்கவிதையினை நான் சித்தர் மெய்யியலுக்கும் தொல்காப்பியப் பொருளதிகாரக் கோட்பாடுக்கும் ஊடாக அணுகத் தலைப்படுகின்றேன். “வேலிகட்டா எல்லை சொல்லி இதற்குள் என்று எதற்குள்ளும் அடங்கிக் கிடக்க தேனீ சம்மதியாது. தேனியின் ஷேத்திரம் விரிவானது. விலங்கு இல்லாத தேவசஞ்சாரி அது. யாராலும் அதற்கு விலங்கிடவும் இயலாது. எங்கெங்கும் என்றென்றும் நிறைந்துள்ள எழிலைக் கொண்டு எழில் ஆக்கி எழிலே ஆகி என்றும் வாழவே பிறக்கிறது தேனீ” என்பார் எம்.வி. வெங்கட்ராம். தேனீயின் கொங்குதேர் வாழ்க்கை போன்றதே ஞானியின் வாழ்க்கையும் என்பார் புத்தரும்.

“As a bee collects nector and departs without injuring the flower or its colour or its fragrance so as sage lives” - Buddha

“கொங்கலர் மணம் கூட்டுண்டு / குளிர்ந்து மெல்லென்று தென்றல் / அங்கங்கே கலைகள் தேனும் / அறிவின் போல் இயங்கும் அன்றே” என்பார் பரஞ்சோதி. ஆக இப்படி தேனீயையும், தும்பியையும், தென்றலையும் போல் தேடி அலைந்து திரியும் தேட்டமே ஞானியினுடைய தேடலும். இங்கே வண்ணத்துப்பூச்சியின் அலைதலும் அத்தகு சித்தத் தேடலின் குறியீடே. பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் அத்தேடல் ஊடே வாழ்க்கையின் பொருள் எந்தத் தத்துவத்திற்கும் ஊடாக வாய்க்கவில்லை. தத்துவம் யாவும் கடந்த தத்துவாதீத வெட்ட வெளியில் தான் காலாதீதமாய் வாய்க்கின்றது. பேத மெலாம் கடந்த அப்போதம். அது வாய்க்குமுன் கைத்துக் கிடந்த வாழ்க்கையே இகத்திலேயே பரமாக இனித்தம் உடைத்தாகி விடுகின்றது. நாமிங்கே தொல்காப்பியப் பொருளதிகார வாயிலாக இதனை அணுகலாம்.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது / தானமர்ந்து வரும் மேவற் றாகும்” எல்லா உயிரும் எய்தவல்ல இன்பம் யாவும் அவ்வவற்றின் விருப்பத்தின் பாற்பட்ட ஒன்றாகவே அதற்கு வாய்க்கும். தானமர்ந்து வரும் மேவற்றாமே எனத் தொல் காப்பியம் சுட்டும் மெய்ம்மையினையே (Fact) முதற்கணம் உவர்த்த சமுத்திரமே தேனாய் இனிப்பது உணர்த்துகின்றது.

‘ஆசையின் சேத்திரத்திலிருந்து கிடைக்கும் மனத் திருப்தி’ என லெக்கானிய உளப்பகுப்பாய்வும் சுட்டிக்காட்டுகின்றது. இதனையே உன்னத தர்க்கமாய் உளவியல் ரீதியில் சுட்டிச் சென்றார் அமிர்தராஜ் கூட. இதன் மூலமாகவும் தொல் காப்பியத்தின் சமகால முகாமையினை நாம் உணரலாகின்றது.

“அது / அப்போதைக்கு அப்போது / அமைகின்ற தோது / இனிப்பதுவோ கசப்பதுவோ / அதற்குள்ளே ஏது / தண்ணீரும் மலைத்தேனாய் அள்ளூறும் / அருநெல்லிக் கனியுண்ட நாவல் / சர்க்கரையும் / நற நறெனக் குறுமணலாய்க் / கைப்பெல்லை காட்டிவிடும் / சிறு குறிஞ்சா இலை மென்ற நாவில்” எனப் பொதிகைச் சித்தர் கவிதையும் இதனையே சுட்டும்.

இனிப்போ கசப்போ பொருளில் இல்லை. அதனை ஏற்கும் தருணத்தின் மனோபாவத்திற்கு ஏற்பவே அது பொருட்படுத்தப்படுகின்றது. எதன் அழகும் காணும் பொருளில் இல்லை. பார்வையின் தரிசனத்தில் தானது வாய்ப்பதாகின்றது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com