Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

பண்பாடும் பண்பாடு
நா. மம்மது

நம் இசை பண்ணிசை - பண் விரிவாக்கம் என்ற ஆளத்திமுறை (ஆலாபனை) நம் இசையின் தனிச்சிறப்பு. எனவே நம்முன்னோர் இதற்கு இன்னிசை (Melodic Music) என்றே பெயரிட்டுள்ளனர். நமது இசையின் இனிமையே பாடலில் அமைந்துள்ள பண் என்ற இராகத்தால் உருவாகின்றது.

சுரும்பியும், நிமிறும், சிறைவண்டும் தும்பியும் பண்பாடுவதாக நம் இலக்கியங்கள் எங்கும் செய்திகள் நிரம்பியுள்ளன.

மானிடன் இப்பூவுலகில் தோன்றுவதற்கு நெடுங்காலம் முன்பே வண்டு, பறவை விலங்குகளிடம் பண்கள் தோன்றியிருந்தன. வண்டு, பறவை, விலங்குகளிடமிருந்து இசையை மனிதன் அறிந்து கொள்ளத் தலைப்பட்டான்.

மொழி தோன்றுவதற்கு முன் வாழ்ந்த மானிடனின் ஆடல் வெற்றொலிகளுக்கும், சிறப்பாக தாளத்திற்குமே அமைந்திருந்தது. எனவே அவன் தாளத்தை அறிந்திருந்தான். மயிலின் காலசைவு, விலங்குகளின் நடை இவைகளிடமிருந்தே தாளத்தை அறிந்தவன் மானிடன்.

ஆகவே தாளமும், பண்ணும் சேர்ந்த இசை என்பது மானிடன் கண்டு பிடிப்பல்ல. இசை இயற்கையில் இருப்பது. (Music is not An Invention of Mankind; But A Discovery).

இது உலகப் பொதுவானது. தொன்மையான பண்பாட்டு இனங்களின் வரலாறு இந்த உண்மையை உணர்த்துகின்றது. நமக்குக் கிடைக்கும் நூல்களில் தொல்காப்பியம் காலத்தால் முந்தியது. நமது முதல் நூல் 3000 ஆண்டுகள் பழமையானது. தொல்காப்பியர் இலக்கியங்கள் கண்டதற்கு இலக்கணம் கண்டார். அவருக்கு முன்பே இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். ஆக நமது இலக்கிய, பண்பாட்டு எல்லை 5000 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது.

இசை குறித்து அதன் அடிப்படை குறித்துப் பல்வேறு நுட்பமான, அடிப்படையான செய்திகளைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து” என்று தொல்காப்பிய பாயிரத்தில் பனம்பாரனார், ஒரே நாடாகத் தமிழ் நாட்டைக் குறிப்பிடுகிறார்.

ஆயினும் இயற்கை அமைப்பால் தமிழ் நாடு, நான்கு பிரிவுகளாக இருந்தது.

“முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” என்று தமிழக இயற்கைகளில் வகைகளை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று வகைப்படுத்துகிறார். (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - சூத்திரம் 951). காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை / மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி / வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் / கடலும், கடல் சார்ந்த இடமும் நெய்தல்.

மக்கள் வாழ்வுக்கு முதற்பொருளாக அடிப்படைப் பொருளாக இருப்பது நிலமும், காலமும். நமக்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் இவைகளைத் தருவது நிலமே. நம் பண்பாடு, வாழ்க்கை நிலம் சார்ந்தது. காலம் நிலத்துடன் சேர்ந்து இயங்குவது. இந்த நால் வகை நிலத்திற்கும் கருவாக அமைந்திருக்கும் மூலங்களைக் கருப்பொருள் என்பார் தொல்காப்பியர்.

ஒரு நிலத்தின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ், அதன் பகுதி ஆகியவையே தொகையாக, கூட்டமாக இருந்து மானிட வாழ்வைப் பண்பாட்டு மயமாக்குவதால் சிறப்படையச் செய்வதால், கருவாக இருப்பதால் இவைகளைக் கருப்பொருள் என்றார்.

அக்கருப் பொருளில் தாளக்கருவியான பறையையும், யாழ், பகுதி என்று பண்களையும் குறிப்பிடுகிறார்.

நம் பண்பாட்டை உருவாக்குவதில் வளர்ப்பதில் நம் இசையான பண்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

பண், பண்படுத்துகிறது நம்மை; பண்படுத்தி நம் பண்பாட்டை உருவாக்குகிறது.

நால்வகை நிலத்திற்குப் நான்கு வகைத் தெய்வம், முதலியன கூறுவது போல் நால்வகைப் பண் பெறும் பண் கூறுவார். பகுதி என்று சிறுபண் கூறுவார். பெரும் பொழுது, சிறு பொழுது கூறியதைப் போல பெரும்பண், சிறுபண் கூறுவார்.

பெரும்பண்ணை, யாழ் என்பார். சிறு பண்ணை யாழின் பகுதி என்பார் தொல்காப்பியர்.

தமிழகத்தில் நிரந்தரமான பாலை வனம், பாலை நிலம் இல்லை. வான் பொய்த்து, மழையின்றிக் குறிஞ்சியும், முல்லையும் தற்காலிகமாகப் பாலையாகும்.

அப்பாலையையும் ஓர் திணையாகவே அதற்கும் பிரிவு என்ற உரிப்பொருள் முதல் முப்பொருளும் கூறுவார்.

எனவே நாற்பெரும் பண், ஐந்நிலப்பண், ஏழ்பெரும் பண் என்று நம் இசை பெருக்கமடைந்து வந்தது.

முல்லைநிலம்

காடும் காடு சார்ந்த முல்லை நிலத்திற்குரிய மலர் முல்லை. முல்லை என்ற மலரின் பெயர் முல்லை நிலம் என்று நிலத்திற்கு ஆகி வந்தது. பின்பு அந்த முல்லை நிலத்திற்குரிய பெரும் பண்ணான முல்லை யாழிற்கும் ஆகிவந்தது.

யாழ் என்றே கருவிப் பெயர் சேர்ந்து அந்நிலப்பண் முல்லையாழ் என்றழைக்கப்பட்டது.

முல்லை மலரின் பெயர், நிலத்திற்கும் அந்நிலப் பண்ணிற்கும் ஆகி வந்தது நம் பண்பாடும் கலையும், இசையும் நிலம் சார்ந்தது என்பதைத் தெரிவிக்கிறது.

தொல்காப்பியர் காலத்தில் யாழ் என்று அழைக்கப்பட்ட பெரும் பண் - கர்த்தா இராகம், பண்பாடும், பண்பாடு சிறந்த, சிலப்பதிகார காலத்தில் ‘பாலை’ என்றே அழைக்கப்பட்டது. சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையில் அடிகளாரும், உரையாசிரியர்களும் இதை விரிவாகக் கூறுகிறார்கள்.

பாலை என்பது முல்லை நிலத்திற்குரிய செடி. ஏழு பிரிவாக அதன் இலைகள் அமைந்திருக்கும். ஏழு சுரங்களால் பெரும் பண்களும் இருப்பதால், ஏழு சுரப்பண்கள் பாலை என்றே பெயர் பெற்றுள்ளன. ஏலேலக்கிழங்கு என்ற கப்பக்கிழங்கு இந்தச் செடியிலிருந்து கிடைப்பது.

திருநெல்வேலி மாவட்டத்தில் குறிப்பாக தென்காசி, குற்றால வட்டாரத்தில் ‘ஏலேலக்கிழங்கு’என்றும் ‘ஏலப் பிலைக்கிழங்கு’ என்றும் கூறுவார்கள். இதன் உண்மை வடிவம் ‘ஏழிலைப் பாலைக்கிழங்கு’. இது ஆங்கிலத்தில் Als Tonia Scholaris என்று வழங்குவதாக இசை ஆய்வாளர் டாக்டர் எஸ். இராமநாதன் தனது முனைவர் பட்ட ஆய்வேடான Music in sila PP thi karam என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இவ்வாறாக முல்லை நிலப் பெரும் பண்ணான முல்லையாழ் என்பது ‘பாலை யாழ்’ என்ற சிறப்புப் பெயரைப் பெறுகிறது.

குறிஞ்சியாழ்

மலையும் மலைசார்ந்த நிலப் பகுதிக்கான பெரும்பண் குறிஞ்சியாழ். குறிஞ்சி என்ற மலரின் பெயரை நிலமும், நிலப் பண்ணும் பெறுகின்றன. இந்த மலையகப் பண் குறிஞ்சியாழ் என்று தொல்காப்பியர் காலத்தில் பெயர் பெறுகிறது.

மருதயாழ்

வயலும், வயல் சார்ந்த நிலமும் மருதநிலம். மருத மரங்கள் நிறைந்தது. மருத மரப் பெயரால் இந்நிலம் மருதநிலம் என்ற பெயர் பெறுகிறது. அந்நிலப் பெரும் பண்ணிற்கு மருதப் பண் என்ற பெயரையும் தருகிறது.

நெய்தல் யாழ்

கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் நிலம் ஆகும். நெய்தல் மலரால் இந்நிலம் நெய்தல் நிலம் என்று பெயர் பெறுகிறது. நெய்தல் நிலப் பெரும்பண் நெய்தல் யாழ் என்று அழைக்கப்பட்டது.

பாலையாழ்

ஏற்கனவே கூறியபடி, பாலி என்ற ஒருவகை மரத்தால் இந்நிலம் பெயர் பெறுகிறது. அச்செடியின் பெயரே நிலத்தின் பெரும் பண்ணிற்கும் பாலை யாழ் என்று வழங்கியது.

சிலப்பதிகாரகாலம்

தொல்காப்பியர் காலத்து அய்வகை நிலத்திற்குரிய ஐந்து பெரும் பண்களின் வரிசையில் ஏழ் பெரும் பாலைகள் என மேலும் இரண்டு பெரும் பண்கள் பற்றிய செய்திகளைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

1. முல்லையாழ் என்ற முல்லை நிலப்பண் செம்பாலை என்றும்

2. குறிஞ்சியாழ் என்ற குறிஞ்சி நிலப்பண் படுமலைப்பாலை என்றும்

3. நெய்தல்யாழ் என்ற நெய்தல்நிலப்பண் செவ்விழிப்பாலை என்றும்

4. பாலையாழ் என்ற பாலைநிலப்பண் அரும்பாலை என்றும்

5. மருதயாழ் என்ற மருதநிலப்பண் கோடிப்பாலை என்றும் நெய்தல் நிலத்திற்கான மேலும் ஒரு பெரும் பண்ணாக விளரிப்பாலையும், மருதநிலத்திற்கான மேலும் ஒரு பெரும் பண்ணாக மேற்செம்பணியும் நம் இசை மரபில் சிலப்பதிகார காலத்தில் புதிய பெயர்களைப் பெறுகின்றன.

இளங்கோ அடிகளும் சிலப்பதிகார உரையாசிரியர்களும் தெரிவிக்கின்ற செம்பாலை இன்றைய அரிகாம்போதி என்றும் படுமலைப்பாலை இன்றைய நடபைரவி என்றும் / செவ்விழிப்பாலை இன்றைய செவ்வழி என்றும் / அரும்பாலை இன்றைய சங்கராபரணம் என்றும் / கோடிப்பாலை இன்றைய கரகரப்பிரியா என்றும் / விளரிப்பாலை இன்றைய தோடி என்றும் / மேற்செம்பாலை இன்றைய கல்யாணி என்றும் / நம் இசை ஆய்வாளர்களால் தற்காலம் கண்டறியப்பட்டுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com