Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

ரத்தக்களறிகளை எதிர்த்துக் குரல் எழுப்பியவர்
மணிக்கொடியான்

2006 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குத் துருக்கி நாட்டுப் பிரபல நாவலாசிரியர் ஆர்ஹான் பாமுக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த அறிவிப்பு துருக்கி நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சலசலப்பையும் கிளப்பத்தவற வில்லை. ஏனெனில் பாமுக் சமீபத்திய வரலாற்றில் துருக்கி நாட்டின் ரத்தக் களறிச் சம்பவங்களைக் கிளப்பியதுடன் அவை சம்பந்தமாகத் தற்போதைய அரசு நியாயமான அரசியல் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

பாமுக் கிளப்பிய ரத்தக்களறி சம்பவங்களில் ஒன்று, முதல் உலக யுத்தத்தின் போது துருக்கியின் கரங்களால் 15 லட்சம் ஆர்மேனியர்கள் கொல்லப்பட்டனர் என்பதாகும். ஆனால் துருக்கி அரசு, இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூறப்பட்டது என்றும் அப்போது ஏராளமான முஸ்லீம்களும் கொல்லப்பட்டனர் என்றும் கூறியது. இரண்டாவது சம்பவம் துருக்கியிலேயே 1980 ஆம் ஆண்டுகளிலும் 1990ஆம் ஆண்டுகளிலும் தனி நாடு கோரிப் போராடிய குர்தீஷ் இனமக்கள் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகும். பாமுக்கின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த துருக்கியரசு பிரிவினை வாதிகள் மீதான நடவடிக்கை படுகொலையாகாது என்று கூறியது. இந்தப் படுகொலைகள் சம்பந்தமாகத் துருக்கி அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ள வில்லை என்றும் பாமுக் குற்றஞ்சாட்டினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்வீடன் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில் பாமுக் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறியபோது தேசிய வெறியர்கள் அவர் மீது பாய்ந்தனர். துருக்கியின் தேசியத் தன்மையை அவமானப்படுத்தி விட்ட துரோகி என்று ஆவேசப் பட்டனர். அப்போது அவர் துருக்கியில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார். மேலும் பாமுக் அரசியல் ரீதியாகத் துருக்கிக்கு எதிராக படுகொலைச் சம்பவங்களைக் கிளப்பியதால் அவரைச் சிறையில் தள்ளும் நோக்குடன் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராவதற்கு அதனுடன் துருக்கி பேச்சுவார்த்தை நடத்தி வரும் பின்னணியில், பாமுக்கிற்கு எதிரான துருக்கி அரசின் விசாரணை நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக விமர்சித்தன. துருக்கி அரசு ஒப்புக்கொண்ட கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு எதிரான வகையில் பாமுக் மீது வழக்கு தொடுக்கப்படுவதாகவும் கண்டித்தன. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் இலக்கிய வாதிகளும் எழுத்தாளர்களும் பாமுக்கிற்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்தனர். இந்தப் பின்னணியில் அவர் மீதான நடவடிக்கை களைக் கடந்த ஜனவரியில் துருக்கி அரசு கைவிட்டது.

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் பிறந்த ஆர்ஹான் பாமுக்கிற்கு 54 வயதாகிறது. பிரச்சினைகளுக்குரிய இலக்கியவாதியான பாமுக், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் அவ்வப்போது பாடம் நடத்தும் பேராசிரியராகவும் (Visiting Professor) பணியாற்றுகிறார். துருக்கியில் 1860ல் மதசார்பற்ற அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட அமெரிக்கர்கள் பள்ளியிலும், ராபர்ட் கல்லூரியிலும் படித்தவர் பாமுக். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு மதரீதியான பயிற்சியோ வளர்ப்பு முறையோ கொடுக்கவில்லை. எனவே மதரீதியான சிந்தனை அவரிடம் இருக்கவில்லை. இவருடைய நூல்கள் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

எதிர்காலத்துடன் கடந்த காலத்தின் தொடர்பு, நாகரிகங்களுக்கிடையேயான மோதல்கள், மதச் சார்பற்ற தேசிய வாதத்துடன் இஸ்லாம் மதத்தின் தொடர்பு, மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய கலாசாரங்களிடையே இணைப்பு ஆகிய கருத்தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தமது இலக்கியங்களைப் பாமுக் படைக்கிறார். இவருடைய இலக்கியங்களில் பிரபலமானவை பனி (snow). என்னுடைய பெயர் சிவப்பு (My name is red) ஆகிய நாவல்களாகும். வெள்ளைக்கோட்டை (The white castle) உள்ளிட்ட மேலும் பல நாவல்களை எழுதியுள்ளார். அவருடைய முதல் நாவலான “ஸெவெடெட்பேயும், அவருடைய மகன்களும்” (Seveded Bey and his sons) என்னும் நாவல் 1982ல் வெளியானது. அது, அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். நிஸான்டாஸியில் (இங்குதான் பாமுக் வளர்ந்தார்). வாழ்ந்த இஸ்தான்புல்லின் செல்வக்குடும்பம் ஒன்றைப் பற்றியதாகும்.

1988ல் முஸ்லீம் நாடான எகிப்தின் இலக்கியவாதியான நாகுய்ப் மாஹ்பவுஸ் என்பவருக்கு (இவர் கடந்த ஆகஸ்டில் தான் மரணமடைந்தார்) இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு முதல் தடவையாக ஒரு முஸ்லீம் நாட்டின் எழுத்தாளரான பாமுக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

பாமுக், துருக்கி நாட்டு அரசுக்கு எதிராக குரல் எழுப்பியவர் என்பதால்தான் அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது என்று துருக்கியில் ஒரு தரப்பினரால் கூறப்படுகிறது.

கெமல் கெரின்க்ஸிஸ் என்பவர் தேசிய வெறி பிடித்த வழக்கறிஞரும் பாமுக்கிற்கு எதிரான வழக்கை உருவாக்குவதில் முன்னணியில் இருந்தவரும் ஆவார். பாமுக்கிற்கு அறிவிக்கப் பட்டுள்ள நோபல் பரிசு பற்றி கூறுகையில் “இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால் பாமுக்கிற்கு நோபல் பரிசு, அவர் எழுதிய புத்தகங்களுக்காக கொடுக்கப்படவில்லை. அவருடைய வார்த்தைகளுக்காக, ஆர்மீனியர்கள் படுகொலை பற்றிக் குரல் எழுப்பியதற்காகத் தான் இந்தப் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் அரசுகளுக்கு எதிரான எழுத்தாளர்களே இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்படு கிறார்கள் என்று வாதிடும் இவர்கள், கடந்த ஆண்டு 2005-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து நாட்டின் நாடக ஆசிரியர் ஹரோல்டு பின்டெர், இராக் யுத்தத்தில் தன்னுடைய நாடு ஈடுபட்டதை எதிர்த்து குரல் எழுப்பியவர்களில் முக்கியமானவர் என்றும் 2004ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரியா நாட்டு இலக்கியவாதியான எல்பிரிட்ஜெலிநெக், அந்நாட்டின் கன்சர்வேடிவ் அரசியல்வாதிகளுக்கு எதிரானவர். அந்நாட்டில் பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர் என்றும் கூறுகிறார்கள்.

ஆனாலும் பாமுக்கிற்கு துருக்கி நாட்டு வெளி விவகார அமைச்சகம் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில் அவர் தொடர்ந்து வெற்றிகளைப் பெற வேண்டும். அவருக்கு கிடைத்துள்ள நோபல் பரிசு, துருக்கி நாட்டு இலக்கியங்களை வெளிநாட்டு வாசகர்களிடம் பரவலாக்குவதற்கு உதவும்” என்று கூறியுள்ளது. மேலும் துருக்கி நாட்டுச் சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் பாமுக்கிற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

அவர் தாம் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட பின்பு அளித்த பேட்டி ஒன்றில் தம்முடைய முதல் புத்தகங்கள் வெளிவரும்போது, முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சாயம் போய்க் கொண்டிருந்தனர் என்றும் 60 ஆம் ஆண்டு களிலும் 70 ஆம் ஆண்டுகளிலும் வெளியான இலக்கியங்கள் காலங் கடந்தவையாகி விட்டன என்றும் கூறுகிறார்.

ரயில்பெட்டிகள் தயார் செய்யும் தொழிற்சாலை அதிபர் ஒருவரின் பேரனான ஆர்ஹன் பாமுக், சமூக யதார்த்த வாதத்திற்கு மாதிரி எழுத்தாளர்களான ஸ்டெய்ன்பெக், கார்கி போன்றோர் மீது தாம் ஒரு போதும் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனாலும் அவர், தன்னுடைய 3 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த மாரீன் ப்ரீலிக்கு அளித்த பேட்டியொன்றில் தனது இளமைக் காலத்தைப் பற்றி கூறுகிறார். அதில் அவர் தாம் 19 வயதிற்குட்பட்டிருந்த போது இடது சாரிக் கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் அவர்கள் (இடது சாரியினர்) தன்னை தன்வீட்டுப் பையன் (Apartment boy) என்று கூறுவார்கள் என்று அவர் நினைவு கூறுகிறார். “இப்போதெல்லாம் நாம் அபார்ட்மென்ட்களில் வாழ்கிறோம். ஆனால் நான் சிறுவனாக இருந்தபோது அது மேற்கத்திய, நவீன வாழ்க்கை முறையாக கருதப்பட்டது” என்றும் பாமுக் குறிப்பிடுகிறார். எனக்கு நல்ல மார்க்சிஸ்ட் நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னுடைய வீட்டுக்கு வருவார்கள்; புத்தகங்களை பார்ப்பார்கள். இது எனக்கு பெருமையாக இருந்தது என்றும் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் (மார்க்சிஸ்ட்கள்) அரசியலில் அக்கறையில்லாத என்னைப் போன்றவர்கள் வெறுமென புத்தகங்களை படிப்பது தங்களுடைய திறமையை வீணடிப்பதாகும்” என்று நினைத்திருக்கலாம் என்றும் பாமுக் கூறியுள்ளார் (டெக்கான் ஹெரால்டு, அக்.29, 2006).

பாமுக் தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து “அவர் ஸ்வீடன் நாட்டுச் செய்திப் பத்திரிக்கையொன்றுக்கு அளித்த பேட்டியில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் சரியாகவே கவுரவிக்கப்பட்டுள்ளேன். நான் ரொம்பவே திருப்தியடைந்துள்ளேன். இந்த (இன்ப) அதிர்ச்சியிலிருந்து சுமூக நிலைமைக்கு வர முயல்கிறேன்” என்று கூறினார். ஆனால் இவர், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சி.என்.என். துருக்கி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “நான் உண்மையிலேயே இந்த நோபல் பரிசு இலக்கிய விஷயத்தையெல்லாம் விரும்பவில்லை. இது முட்டாள் தனமானது. இதிலெல்லாம் எனக்கு அக்கறை இல்லை. அது என் சிந்தனையில் இல்லாத விஷயம் என்று நான் எப்போதுமே சொல்லி வருகிறேன்” என்று கூறியிருந்தார்.

2006 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ள பாமுக்கிற்கு 14 லட்சம் டாலருக்கான காசோலையும் ஒரு தங்க மெடலும் பாராட்டு பட்டயமும் கிடைக்கும். மேலும் நோபல் பரிசு நிறுவனரான ஸ்வீடன்காரரான ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் நடைபெற உள்ள ஆடம்பரவிருந்தில் 2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகளைப் பெறுபவர்களுடன் பாமுக்கும் கலந்து கொள்ளவிருக்கிறார்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com