Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

சமூகம் சார்ந்த முன் மாதிரி ஆய்வு
இரா. காமராசு

தமிழ் ஆராய்ச்சியானது புதிய புதிய அணுகுமுறைகளோடும் கோட்பாடுகளோடும் புதிய களங்களில் நிகழ்ந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. என்றாலும், கல்விப்புல வட்டாரங்களில் போலச் செய்தல், சூத்திரத் தன்மை, கூறியது கூறல் என்பதாக ஆராய்ச்சியானது தன் ஆளுமை இழந்து நிற்பதும் கவலை அளிக்கிறது. அணுகுமுறைச் சிறப்பும், நுட்பப் பார்வையும், சமூகப் பிடிப்பும், தீவிர உழைப்பும் கூடிய முன் மாதிரி ஆய்வுகள் இன்றையத் தேவையாகின்றன. அந்த வகையில் முனைவர்.

அ. குணசேகரனின் ‘தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள்’ எனும் ஆய்வு நூல் கவனிக்கத்தக்கதாக உள்ளது. தமிழ்நாவல் ஒன்றேகால் நூற்றாண்டு வரலாறு உடையது. இந்த நெடும்பரப்பில் எழுபதுக்கு பிந்தைய இருபத்தைந்தாண்டுகளை எல்லையாகக் கொண்டு, தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள் குறித்த இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாவல் வகைப்படுத்தத்தில் ‘குடும்ப நாவல்’ என்ற சொல்லாடல் வெகுஜனத் தன்மை கொண்டது. பெரும்பாலும் குடும்பப் பெண்களை மையமிட்டு மேலோட்டமாக, வணிக ரீதியான வெற்றியைக் குறிக்கோளாக்கி, எவ்விதச் சமூக அக்கறையுமின்றி எழுதிக் குவிக்கப்பட்ட நாவல்களைப் (?) புறந்தள்ளி, தமிழின் முதல் நாவலான வேதநாயகரின் பிரதாப முதலியார் சரித்திரம் தொடங்கி அண்மைக் காலம் வரையான நாவல் வளர்ச்சிக் கட்டங்கள் ஒவ்வொன்றிலும் குடும்பம் எடுத்தாளப்பட்ட சித்திரிக்கப்பட்ட விதத்தினை ‘தமிழ் நாவல் வரலாற்று வளர்ச்சியில் குடும்பம்’ எனும் முதல் இயலில் ஆராய்கின்றார்.

அடுத்ததாக அமைந்த ‘குடும்ப அமைப்பு; மாற்றங்களும் சிதைவுகளும்’ எனும் இயல் குடும்பம் பற்றிய சமூகவியல் உண்மைகளை எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. குடும்பம் என்பது ஒரு அமைப்பா, ஒரு நிறுவனமா, ஒரு கருத்தாக்கமா என்பன போன்ற விவாதங்கள் மேலெழும் இன்றையச் சூழலில் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் குடும்பத்தின் தோற்றம், வளர்ச்சி, பணிகள், தாய்வழி, தந்தை வழி மரபுகள் குறித்து சிறப்பாக விளக்குகிறார். குடும்ப அமைப்பு மாற்றம் புதிய வாழிடம் தேடி, கூட்டு செயற்பாடு, தனிமனித சமத்துவம், பெண்ணுக்கான சமத்துவம், வாழ்க்கைத் துணை தேர்வு, குடும்ப நெறிகள் நெகிழ்தல் ஆகிய காரணிகளில் நிகழ்வதையும் சுட்டுகின்றார். அடுத்து குடும்பச் சிதைவு, சிதைவின் வகைகள், சிதைவிற்கான காரணிகள் தரப்படுகின்றன. சிதைவிற்கான அகக்காரணிகளுடன் புறக்காரணிகளான கல்வி, நகர் மயமாதல், தொழில் மயமாதல், திருமண முறைகளில் ஏற்படுகின்ற மாற்றம், சட்ட முறைமைகள் ஆகியனவும் விளக்கப்படுகின்றன.

அனைத்துச் சிக்கல்களுக்கும் அடிப்படையாக அமைவது பொருளாதாரம். பொருளாதாரமே குடும்ப உறவுகளையும் ஏன் மனித உறவுகளையும் கூடத் தீர்மானிக்கிறது. பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பச் சிதைவுகளுக்கு எப்படி காரணமாக அமைகின்றன என்பதை வேள்வித்தீ, கீறல்கள், கடல்புறத்தில், நைவேத்தியம், விளக்குமட்டுமா சிவப்பு, சிறகுகள் முளைத்து, சிதறல்கள், வீடு, மண்ணகத்துப் பூந்துளிகள் ஆகிய நாவல்களை முன் வைத்து ‘தமிழ் நாவல்களில் பொருளாதாரச் சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும்’ எனும் இயலில் ஆராய்கின்றார்.

குடும்பச் சிதைவுகளுக்கு அகக்காரணியாக அமையும் உளச்சிக்கல்கள் குறித்து அடுத்த இயல் ஆராய்கின்றது. பாலுறவுச் சிக்கல்கள் குடும்பச்சிதைவுகளுக்கு முக்கிய காரண மாகின்றன. பாலுறவு பற்றிய கண்ணோட்டம், பாலுணர்வு குடும்பத்தில் பெறும் இடம், வயது காரணமான பாலெழுச்சி, எதிர் பாலினரோடு நெருக்கம், திருமண வாய்ப்பு தள்ளிப்போதல், திருமணத்திற்குப் பின் ஏற்படும் பாலுறவுச் சிக்கல்கள், பாலுணர்வுத் தேவை நிறைவேறாமை ஆகியவை பாலுறவு குறித்துச் சிக்கல்களாக இனம் காணப்படுகின்றன. இவை திருமணத்திற்கு முன் திருமணத்திற்குப் பின் என பகுக்கப்படுகின்றன. இச்சிக்கல்கள் காணலாகும் நாவல்கள் ஆராயப்படுகின்றன. பாலியல் சிக்கல் தவிர்த்த மனநோய்க் கூறுகள் குடும்பச் சிதைவுக்கு காரணமாவதும் நாவல்கள் வழி எடுத்துரைக்கப்படுகின்றன. சில நேரங்களில் சில மனிதர்கள், பைசா நகரத்து கோபுரங்கள், ரிஷி மூலம், நிலமென்னும் நல்லாள், ஒரு மனிதனின் கதை, வலிய வீடு, ஒரு கடலோர கிராமத்தின் கதை ஆகிய நாவல்கள் இப்பகுதியில் பகுத்தாராயப்படுகின்றன.

‘தமிழ் நாவல்களில் பெண்ணுரிமையும் குடும்பச் சிதைவுகளும்’ எனும் இயலில் பெண்ணுரிமை விளக்கப்பட்டு, இதன் பொருட்டு குடும்பங்களில் சிதைவுகள் ஏற்படுவது புதிய சிறகுகள், சுழலில் மிதக்கும் தீபங்கள், சுந்தரகாண்டம், கனவு மெய்ப்பட வேண்டும், புத்தம் வீடு, மகாநதி, ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம், பாலங்கள் ஆகிய நாவல்களின் வழி ஆராயப்படுகின்றது. பெண்தான் குடும்பத்தின் விளக்காக, குலக்கொடியாக காலம் காலமாக சித்திரிக்கப்படுகிறாள். சாதியும், மதமும், சடங்குகளும் பெண்ணை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றன. மண் விடுதலைக்கு முன் நிபந்தனை பெண் விடுதலைதான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இந்நிலைமையில் பெண் கல்வி பெறுவது, வேலைக்குச் செல்வது, சுயமாக நிற்பது, வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது, பிள்ளைப் பேற்றைத் தீர்மானிப்பது, ஆணைச் சமமாகப் பாவிப்பது ஆகிய பெண் விடுதலைக் கூறுகள் மரபான - இறுக்கமான - கெட்டித்தட்டிப் போன ஆணாதிக்கத் தன்மை கொண்ட குடும்ப அமைப்பை சிதைவுக்குள்ளாக்குவது இவ்வியலில் சிறப்பாக எடுத்துரைக்கப்படுகின்றது.

முனைவர் அ. குணசேகரனின் மார்க்சியச் சார்பும், சமூக விடுதலை ஆர்வமும் இவ்வாய்வை நாவல் குறித்த இலக்கிய ஆய்வாக மட்டும் அல்லாமல் சமூகவியல், உளவியல் சார்ந்து பன்முக ஆய்வாகவும் பரிணமிக்கச் செய்துள்ளது.

“நாவல்கள் சமூகவியல் மற்றும் உளவியல், அறிஞர்களின் பார்வைகளைக் கொண்டிருப்பதுடன் மேற்சுட்டிய சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் படைத்துக் காட்டுவதிலிருந்து எதிர்காலத்தில் கடந்த காலத்தை அறிய உதவும் சமூக வரலாற்று ஆவணங்களாகவும் விளங்கவல்லன.”

தங்கு தடையற்ற நடை, பிறமொழிக் கலப்பு அதிகமில்லாதத் தன்மை, சிக்கல்களையும் படைப்புகளையும் பொருத்திக் காட்டி விவாதிக்கும் பாங்கு ஆகியன நூலை அழகும் கம்பீரமும் மிக்க படைப்பாக்கியுள்ளன. உலகமய நுகர்வியச் சூழலில் குடும்பங்களின் சிதைவுகள் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. குறைந்தபட்சம் சிதைவுக்கான காரணங்களைத் தெரிந்து தெளிந்தாலாவது சிதைவைத் தவிர்க்கவும் தடுக்கவும் முயலலாம். குடும்ப அமைப்பைச் சிதைப்பது நம் நோக்கமல்ல; சீர்திருத்துவது; ஜனநாயகப் படுத்துவது; சமத்துவப்படுத்துவது நம் கடமை என்கிற உணர்வுந்துதலை இந்நூல் வழி உருவாக்கிச் சமூகம் சார்ந்த ஆய்வின் விளைவை நிரூபிக்கும் முனைவர் அ. குணசேகரன் பாராட்டுக்குரியவர்.

தமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள்

ஆசிரியர் : அ. குணசேகரன், வெளியீடு : என்சிபிஎச்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 75.00


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com