Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

தலையங்கம்

பொறுப்பிலுள்ள பிரதிநிதிகள் நேர்மையாக செயல்பட வேண்டும்

“உங்கள் நூலகம்” பன்னிரண்டாம் இதழ் மகத்தான நவம்பர் சோவியத் புரட்சி, உள்ளாட்சித் தேர்தல், இசை இதழாக உங்கள் கைகளில் தவழ்கிறது. நவம்பர் புரட்சி உலக மக்களின் இந்நாளைய வாழ்க்கை, நடைமுறை, எல்லாவற்றிலும், குறிப்பாக இந்திய மண்ணில், மாற்றத்தை கொண்டு வந்தது. அதனை நினைவு கூர்வது ஒரு கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. உள்ளாட்சி அமைப்புகள் முன்னுள்ள பிரச்சினைகளைத் தலையங்கம் ஆய்கிறது. தமிழகத்தில் மார்கழி மாதம் இசை வெள்ளம் பெருகிப் பொங்கிப் பாயும் மாதம். இதனையொட்டியும் கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

மக்கள் ஆட்சியில் மக்கள் நலன் பேணுதல் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். இதை நினைவில்கொண்டு கொள்கைகளும் திட்டங்களும் இருக்கவேண்டும். நடைமுறைகள் பயன்தருவதாக அமையவேண்டும். அதிகாரவர்க்கம் மனித நேயத்துடன் இயங்கவேண்டும். இதற்கும் மேலாக ஊராட்சிப் பொறுப்பில் உள்ள பிரதிநிதிகள் நேர்மையாகவும் நாணயமாகவும் தொண்டு உள்ளத்துடனும் செயல்படவேண்டும். இதுவே மக்களாட்சியின் அடித்தளம். மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் பின்னிப்பிணைந்த கொள்கை எளிய நடைமுறை இன்றியமையாதவை.

அண்மையில் மாநில ஆட்சி மாறிற்று. தொடர்ந்து ஊராட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. பிரிட்டிஷ் ஆட்சியில் ஊராட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தல்களுக்குக் கட்சி அடிப்படையாகயிருந்தது. சாதி மதபேதங்கள், மேலோர் கீழோர், ஆண்டான் அடிமை என்னும் பாகுபாடுகள் நிலவும் இந்திய நாட்டில் இவ்வேற்றுமைகளற்ற மக்களாட்சியை அமைக்கவேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். இல்லையேல் சுதந்திரத்துக்கு அர்த்தமே இல்லை.

ஊராட்சி மன்றங்கள் அடித்தட்டு மக்கள் நலன்களுக்காகச் செயல்பட வேண்டுமானால், பிரதிநிதிகளும் அரசியல் அதிகாரிகளும் திட்டங்களைச் சரிவர நல்வழியில் நிறைவேற்ற வேண்டுமானால் பொருளாதார அடிப்படையில் வலிமை வாய்ந்தவையாக இருக்க வேண்டும். அதாவது, பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் ஊராட்சி மன்றங்களுக்கு நிதி திரட்டும் வசதிகள் மிகக் குறைவானவை. மாநில, மத்திய அரசுகளுக்கு உள்ள அதிகாரங்கள் அதிகமானவை. மாநிலங்களுக்கு மத்திய அரசு 30.5ரூ நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதிக விகிதம் ஒதுக்கவேண்டும் என மாநில அரசுகள் விரும்புவது இயற்கையே. தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8ரூ நிதி ஒதுக்குவதாகத் தெரிகிறது.

ஆனால், இடதுசாரி அரசுகள் மேற்கு வங்கத்தில் 50ரூ, கேரளாவில் 30ரூ ஒதுக்குகின்றன எனப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அதேபோது உள்ளாட்சி மன்றங்களுக்குக் கூடுதலான அதிகாரங்களும் பொறுப்புகளும் வழங்கப்படவேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற காலத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், முனைவர் க. பழனித்துரை அவர்கள் உள்ளாட்சித் துறை, பற்றி எழுதிய அருமையான நூல்கள் சிலவற்றை வெளியிட்டது. அவற்றில் கடமைகள், பொறுப்புகள் அதிகாரப்பரவல், சேவை போன்ற பிரச்சினைகள் அலசப்படுகின்றன. நூல்கள் பலர் பாராட்டு தலைப் பெற்றுள்ளன.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து பெருகிவரும் இந்த நூற்றாண்டில் நாடுகளுக்கு இடையே உள்ள தூரமும் நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் இடையே உள்ள வெளியும் குறுகி வருகின்றன. இதன் பலனாக நகரங்களில் காணக்கிடைக்கும் வாழ்நிலையும் வசதிகளும் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் தேவை என உணரப்பட்டு வருகின்றது. செய்தி ஊடகங்களும், தொலைக்காட்சியும், கணினிகளும் சிற்றூர்களையும் சென்றடைந்துள்ளன. தொலைதூரத்தில் வாழும் மக்கள் பயனாளிகளாக மாறியுள்ளனர். ஊராட்சி மன்றங்கள் இப்புதிய வளர்ச்சி நிலைகளை மனதில்கொண்டு செயல்படவேண்டும்.

மக்களின் பிரச்சினைகள் மிகப்பல. தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் கிடைத்தல், ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை வசதிகள், போக்குவரத்து, சாலை வசதிகள், கழிப்பிடம் அமைத்தல், கொசுத்தொல்லை ஒழித்தல் (HIV) எச்.ஐ.வி., தொற்றுநோய்கள், அம்மை, சிக்கன் குன்யா, டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள், காசநோய், காலரா, மகப்பேறு, குழந்தை வளர்ப்பு, மருத்துவ வசதிகள் என்பன. இவை உரிய முறையில் அக்கறையோடு கவனிக்கப்படவேண்டும்.

தனியார் மயமாதல் என்னும் கொள்கை அண்மைக் காலத்தில் தலைதெறிக்கும் வேகத்தில் வலிமைபெற்று வந்துள்ள தனால் தாய்மொழி வழிக் கல்வி தரக் குறைவானதாகவும், பயனற்றதாகவும் கருதப்பட்டு ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் லாபநோக்கோடு பல ஊர்களில் பட்டித் தொட்டிகளிலெல்லாம் செயல்படத் தொடங்கியுள்ளன. “என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பாரதி பாடினான். உலகில் எல்லாத் துறைகளிலும் முன்னேறிய நாடுகள் தாய்மொழி வழிப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டவை என்பது உண்மை.

சீனா, ஜப்பான் இதற்கு எடுத்துக்காட்டுகள். மிகச் சின்னஞ்சிறிய நாடான கியூபா தலைநிமிர்ந்து நிற்பதற்கும் இதுவே காரணம். தாய்மொழி வழிக் கல்வி என்னும் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதன் பின்னரும் பொதுமக்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பது விடுதலை இயக்கத்தின் கோரிக்கையாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. மருத்துவ வசதிகள் சாதாரண மக்களை எட்டும் படியிருந்தன. ஆனால் கடந்த பத்தாண்டுக் காலமாக உலக மயமாதல் தனியார் மயமாதல் என்னும் கொள்கை அடிப்படையில் தனியார் மருத்துவமனைகள் மூலை முடுக்குகளில் எல்லாம் பலமாடி அடுக்குகளாக எழுந்துள்ளன.

மருந்துகள் விலையும் நினைத்துப் பார்க்கமுடியாத அளவு அதிகரித்து வந்துள்ளது. மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் நோயாளிகளைக் கசக்கிப் பிழிந்து வருகின்றனர். இந்த இழிநிலை நீங்கவேண்டும். சோஷலிச நாடுகளில் இலவச மருத்துவ வசதி இருப்பதுபோல இங்கு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் நியாயமான செலவில் மருத்துவ வசதி மக்களுக்குக் கிடைக்கவேண்டும். இல்லையேல் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே இல்லாததாகிவிடும். இதுபற்றி மத்திய மாநில அரசுகளும் ஊராட்சி மன்றங்களும் சிந்திக்கவேண்டும்.
மருத்துவ வசதிகள் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்க ஊர்தோறும் மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். நோய் நொடியற்ற நலவாழ்வு என்பது மக்கள்நல அரசின் (Welfare State) அடிப்படைக் கோட்பாடாக இருத்தல் வேண்டும்.

எப்படியும் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகிவிட வேண்டும் எனும் எண்ணம் தீவினைவசமாக அண்மைக் காலங்களில் சிற்றூர்களில் வாழும் மக்கள் உட்பட சிலரிடை யேயும் வளர்ந்து வந்துள்ளது. தொல்பழங்காலப் பெருமை பேசும் தமிழகம் சில கேடுகளை தவிர்க்கமுடியாது சந்தித்து வருகிறது. லஞ்சலாவண்யம், ஏமாற்று, அதிகார துஷ்பிரயோகம் என்னும் தீங்குகளெல்லாம் அதிகரித்து வந்துள்ளன. ஊடகங்கள் செய்தித்தாள்கள் பல இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி வந்துள்ளன. தொழிற்சங்கங்களும் தன்னார்வ நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் இத்தீங்குகளை நீக்கத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இத்தீங்குகள் தொடர்ந்தால் மக்களாட்சி மலர வாய்ப்பில்லை. சுரண்டல் தொடரும்.

மாதருக்கு உரிய ஒதுக்கீடு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளதால் பெண்கள் தலைமையில் இயங்கும் ஊராட்சி மன்றங்கள் தலைவருடைய பினாமிகளாக, அவருடைய கணவரோ நெருங்கிய உறவினரோ செயலாற்றுவதாகச் செய்தித்தாள்கள் சான்றுகளுடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இப்போக்கு ஆணாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதாகும். வென்ற மாதரசிகள் துணிந்து தம் மனசாட்சி, அரசு விதிகள்படி செயலாற்ற முன்வரவேண்டும். இல்லையேல் பெண்ணடிமைத்தனம் தொடர்ந்து வளரும்.

ஊராட்சி உறுப்பினர் எவர் தவறு செய்தாலும், கையூட்டு, லஞ்சலாவண்யம், ஒரு சார்புப் போக்கு - தன்னலம் என்பன, சமூகக் குற்றங்களாகக் கருதப்பட வேண்டும். இக்குற்றங்கள் சாட்டப்படுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஊராட்சி முறை தமிழகத்துக்குப் புதியதன்று. ஊராட்சித் தேர்தல் “குட வோலை” முறை தமிழத்தில் இடைக்காலத்தில் எல்லா ஊர்களிலும் இருந்ததாகப் பல கல்வெட்டுகள் சான்று தருகின்றன. சோழன் பராந்தகன் காலத்தில் கி.பி. 919, 921 ஆண்டுகளில் எழுதப்பட்ட உத்திரமேரூர் கல்வெட்டுகள் இதற்கு முக்கியமான சான்றாதாரங்களாகக் கருதப்படுகின்றன. அக்காலத்தில் ஊர், சபை, நகரம் என்பன உள்ளாட்சி அமைப்புகள். பல கல்வெட்டுகள் இத்தேர்தல் முறை பற்றிச் சொல்லுகின்றன. இன்று வார்டு (Ward) என்று அழைக்கப்படுவது அன்று “குடும்பு” என்னும் பெயர் பெற்றிருந்தது.

உள்ளாட்சி அமைப்புகள் கழனிவாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், தோட்டவாரியம் வேலிவாரியம், பொன்வாரியம், பஞ்சவாரியம், சம்வத்சர வாரியம், ஏரிவாரியம், குடும்பு வாரியம் எனப் பல வாரியங்கள் அமைத்து அவற்றின் வழிச் செயல்பட்டன என அறிகிறோம். கல்வெட்டுகள் கால்வேலி நிலமுடையோர், சொந்த வீட்டுமனையுடையோர், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர் உறுப்பினர் ஆவதற்கு உரிமையுடைவராவர் என்று கூறுகின்றன. ஒருமுறை உறுப்பினராகயிருந்தவர் ஐந்து ஆண்டுகள் கழித்துத் தான் உறுப்பினராகும் தகுதிபெறுவார். உறுப்பினராகயிருந்து கணக்குக் காட்டாதவர், கூடாத நட்புடையோர், பாதகம் புரிந்தோர் உறுப்பினர் ஆவதற்குத் தகுதியில்லாதவர் ஆவர்.

கள்ளக் கையெழுத்திட்டவர், பிறர் பொருளை கவர்ந்தோர், தண்டிக்கப்படுவர், லஞ்சம் பெற்றோர், ஊருக்குத் துரோகம் செய்வோர் தகுந்த பிராயச்சித்தம் செய்வார்களேயானால் தேர்தலில் நிற்கும் உரிமை பெறுவர் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. ஆனால் அக்காலத்தில் சொத்துரிமை அடிப்படை. இக்காலத் தேர்தல் முறையில் இது இல்லை.

வரலாற்று ஆராய்ச்சிப் பேராசிரியர் அறிஞர் கே.கே. பிள்ளை சோழர் காலத்தில் கிராம உள்ளாட்சிமுறை இயங்கியதையும் தவறிழைத்தோர்க்கு வழங்கப்பட்ட தண்டனையையும் விரிவாக எடுத்துச் சொல்லி இவ்வாறு முடிக்கிறார். “அக்காலக் கிராம ஆட்சி உண்மையிலேயே மக்களாட்சியாகத் திகழ்ந்து எல்லோர்க்கும் நன்மை செய்ததேயன்றி இக்காலத்தேபோல் அதிக பலம் பெற்ற ஒரு கட்சி ஆட்சியாகவில்லை. இத்தகைய பெரும்பான்மைக் கட்சி ஆட்சிமுறை ஆங்கிலேயர் ஆட்சி வந்த பின்னர் ஏற்பட்ட ஒன்றேயாகும். இந்த முறையில் பல தீமைகள் விளைந்து வருவதை இன்றைய நாளில் காண்கிறோம்.

இன்றைய நிலை பெரும்பான்மைக் கொடுங்கோன்மை என்று அரசியல் அறிஞர்கள் கூறுவதையும் கேட்கிறோம். இத்தகைய தீங்குகள் அக்காலக் கிராம ஆட்சிமுறையில் ஒரு சிறிதும் இல்லை. அதன் காரணம் கட்சி மனப்பான்மையற்ற பொதுமக்களால் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவு நிலைமையும், கடமை உணர்வும், பொதுநல நோக்கும் கொண்ட சான்றோர் ஆட்சி இருந்ததனாலேயே எனலாம்”. (சோழர் வரலாறு பக்கம் 463-464).

“அரசனெவ்வழி, குடிகளவ்வழி என்பது அக்கால வழக்கம். இக்கல்வெட்டுகள் எல்லாம் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டவை. இக்காலத்துள்ளது போல ஜனநாயகப் பண்புகளும் ஆட்சிமுறையும் அந்தக் காலத்தில் இருந்ததில்லை. மன்னராட்சி நடைபெற்றது. இன்றுள்ள மக்களாட்சியின் நோக்கும் போக்கும் இலக்கும் வேறு. அரசியல் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுவது ஜனநாயகத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக வளர்ந்து விட்டது. ஆயினும் இந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுபவர்களும் நடுநிலைமை, கடமை உணர்வு, பொதுநல நோக்குக் கொண்ட மக்கள் ஊழியராக, தன்னலமற்ற நல்லவராகப் பணியாற்றுதல் வேண்டும் என்பதனை அரசியல் கட்சிகள் தக்க நடவடிக்கைகள் எடுத்து உறுதி செய்தல்வேண்டும். தமிழர்கள் கண்ட நல்ல மக்கள் நல மரபுகள் பேணிக் காக்கப்படவேண்டும்.

“இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்” - (குறள் 316)




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com