Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு
ஏ.எஸ். மணி

“இந்தியாவில் கம்யூனிச இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் காலனி ஆட்சி நடைபெற்ற காலத்தில் இந்தியாவில் நிலவிய சமூகப் பொருளாதாரச் சூழல்களை நாம் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது” - இவ்வாறு கூறுகின்றனர் இந்நூலின் ஆசிரியர்கள் ‘அறிமுகத்தில்’.

தொன்மையான நன்கு வளர்ச்சி பெற்ற நாகரீகத்தைக் கொண்ட இந்தியாவின் பொருளாதார அடித்தளம் விவசாயமாக இருந்தபோதிலும், கிராமப்புறத் தொழில்கள் அறிவியல், கணிதம், வானவியல், உலோகவியல் மற்றும் கலை, பண்பாடு ஆகியவற்றிலும் போற்றற்கரிய சாதனைகளைப் படைத்தது என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்வர். மேலும் பல மேற்கு, கிழக்கு ஆசிய நாடுகளுடன் பலமான (ஏற்றுமதி, இறக்குமதி) வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் காலனி ஆட்சி எவ்வாறு இந்த அடிப்படைகளைத் தகர்த்தெறிந்து 1813 வரை ஏற்றுமதி நாடாக விளங்கியதை இறக்குமதி நாடாக ஆக்கியது என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. அன்னிய ஆட்சியாளர்களுக்குப் பலத்த ஆதரவாக நின்ற நிலப்பிரபுத் துவத்தின் கொடுமைக்கு விவசாயிகள் உட்படுத்தப்பட்டனர். வரிவசூல் என்ற பெயரில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் பங்கிற்கு விவசாயமக்களைப் பிழிந்து எடுத்தனர். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பட்டினியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சம் மக்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை இந்நூல் கொடுத்துள்ளது.

தங்கள் உரிமைகளையும் தனிச்சலுகைகளையும் பறிகொடுத்த விவசாயிகளும் பழங்குடி மக்களும், குறுநில மன்னர்களும் நடத்திய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டின் பல பாகங்களில் இடையறாது நடைபெற்றன. 1800களில் தென்னிந்தியாவில் நடைபெற்ற கலகங்களும் 1857-59 ஆண்டுகளில் வட இந்தியாவில் நடைபெற்ற புரட்சி இயக்கங்களைப் போலவே எழுச்சியூட்டும் இயக்கங்களாக அமைந்திருந்தன. இந்த இயக்கங்களின் தலைவர்கள் தேசபக்தர்கள் (கட்ட பொம்மன், திப்புசுல்தான் மற்றவர்கள்).

சாதி அடிப்படையிலான இயக்கங்களும் கலகங்களும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டமாக மட்டுமின்றி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டமாக எப்படி வடிவம் பெற்றது என்பதைப் பல நிகழ்வுகளை ஆதாரம் காட்டி விளக்குகிறது இந்த நூல். சாதி அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் அரசுப் பணிகளில் பிராமணர்கள் ஆதிக்கத்திற்கு எதிராக பல மாநிலங்களில் நடந்த இயக்கங்கள் பற்றியும் தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுத்திய பெரிய பாதிப்பை உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். 1883ல் ‘நியூயார்க் டிரிப்யூன்’ பத்திரிகையில் எழுதிய தமது கட்டுரையில் மார்க்ஸ் பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலை அம்பலப்படுத்தினார். 1857ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த போர் வீரர்களின் போராட்டத்தை இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று இவர்கள் இருவரும் அழைத்தனர். இது நாடு தழுவியதாக இருந்ததோடு தங்கள் பகைகளை மறந்து இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து நடத்திய பெரும் போராட்டமாகும். தலைமை தாங்கியவர்கள் மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்கள் தலைமை தாங்கத் தகுதியற்றவர்கள். எனவே இப்போராட்டம் வெற்றி பெறவில்லை என்று கருதப்படுகிறது.

1857-59ல் நடந்த படை வீரர்களின் கலகங்களைத் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக ரயில்வேயை அமைத்ததுடன் சில நவீனத் தொழில்களையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம் நாட்டில் நிறுவினர். இந்த வளர்ச்சியினால் தொழிலாளி வர்க்கம் தோன்றியது. விவசாயத் தொழிலாளர்களும் கைவினைத் தொழில்களில் ஈடுபட்டு அவஸ்தைப்படுபவர்களும் தொழிற் சங்கங்களை நிறுவிப் போராட்டங்களை நடத்தி யதையும் நூல் குறிப்பிடுகிறது. வங்கப் பிரிவினையை (1905) எதிர்த்து நாடு தழுவிய எழுச்சியும் அன்னியத் துணிகள் பகிஷ்காரமும் நிகழ்ந்தன. பிரிட்டிஷ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் தேசிய முதலாளித்துவம் வலுப்பட ஆரம்பித்ததையும் தெரிந்து கொள்கிறோம்.

அடுத்து மேதை லெனின் தலைமையில் நடந்த மகத்தான அக்டோபர் புரட்சி நம் நாட்டின் மீதும், விடுதலைப் போராட்ட வீரர்கள் மீதும் ஏற்படுத்திய தாக்கத்தை நூல் விவரிக்கிறது. காலனி நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களுக்குத் தங்களின் நிபந்தனையற்ற ஆதரவை லெனின் பிரகடனப் படுத்தினார். அக்டோபர் புரட்சி பற்றியும் லெனின் பற்றியும் பல்வேறு இந்திய பத்திரிகைகள் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டன. மகாகவி பாரதி அக்டோபர் புரட்சியை யுகப் புரட்சி என்று வர்ணித்தார். தோழர் சிங்காரவேலு பெரியார் நடத்திய குடியரசில் கட்டுரைகள் எழுதினார். மலையாள, தெலுங்கு எழுத்தாளர்களும் லெனின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டனர்.

நமது போராட்ட வீரர்கள் ரஷ்யாவுக்கு விஜயம் செய்தனர். தாஷ்கெண்டில் 1920ல் 7 பேர் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. பெர்லின் மற்றும் காபூலில் கம்யூனிஸ்ட் குழுக்கள் இயங்கின. 1919ல் அமைந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதலும் கிடைத்தது. தங்களுடைய தத்துவார்த்த ஸ்தாபன ரீதியான தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டே விடுதலை இயக்கங்களுக்குக் கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுடன் செயல்படும் முதலாளி வர்க்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அகிலம் ஆலோசனை வழங்கியது. அக்டோபர் புரட்சியும் அகிலத்தின் ஆலோசனையும் இந்தியா மற்றும் பிற காலனி நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதற்கு வழி வகுத்தன.

ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1921ல் காந்திஜி தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கம் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற போராட்ட அலைகளை ஏற்படுத்தியது. இந்த இயக்கத்தில் கலந்து கொண்ட பல தோழர்கள் பின்னால் கட்சியில் சேர்ந்தனர். கிலாபத் இயக்கம் விடுதலைப் போராட்டத்திற்குப் பலம் அளித்தது.

இந்தியாவில் சின்னம் சிறு கம்யூனிஸ்ட் குழுக்கள் ஆங்காங்கே தோன்றுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உண்மையில் பீதியடைந்தனர்.

1918-20 ஆண்டுகளில் உள்ளூர் மட்டத்திலும் தொழில் துறை அடிப்படையிலும் எண்ணற்ற தொழிற் சங்கங்கள் அமைக்கப்பட்டதையும் முதலாவது யூனியன் மதராஸ் லேபர் யூனியன் சென்னையில் நிறுவப்பட்டது பற்றியும் (சிங்காரவேலர், சர்க்கரைச் செட்டியார், திரு.வி.க. ஆகியவர்கள் முன் முயற்சியால் சாத்தியமாயிற்று). இந்நூல் விவரங்களை அளித்துள்ளது. 1920 அக்டோபர் 20ல் லாலாலஜபதிராய் தலைமையில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் நிறுவப்பட்டது.

1925ல் சிங்காரவேலர் தலைமையில் கான்பூரில் நடந்த கம்யூனிஸ்டுகள் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. ஆனால் அதன் செயல்பாட்டை முறைப்படுத்த ஸ்தாபன நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி அமைக்கப்பட்டது. இந்த கட்சிகளுக்குத் தலைமை தாங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றாலும் அது கம்யூனிஸ்ட் கட்சி அல்ல. 1928ல் அகில இந்திய தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சி அமைக்கப்பட்டது. சோன்சிங் ஜோஷ் இக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1928ம் ஆண்டு தொழிலாளி வர்க்க முன்னேற்றப் பேரலை எழுந்த ஆண்டு என்று குறிப்பிடும் இந்தநூல் அந்த ஆண்டு ஏப்ரல் முதல் 1929 மார்ச் வரை 203 வேலை நிறுத்தங்கள் நடந்தன என்றும் அவற்றில், 5,06,851 தொழிலாளர் பங்கேற்றனர் என்ற விவரத்தையும் அளித்துள்ளது. 1920களும் 1930களும் விவசாயிகளின் போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்த காலம் என்றும் இந்தப் போராட்டங்களுக்கு வந்த விவசாயிகள் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தங்களின் இயக்கங்களுக்குத் தலைமை தாங்க வேண்டுமென்று எதிர்பார்த்தனர் என்றும் இந்நூலில் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

1929 டிசம்பர் 31ம் தேதியன்று லாகூரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாடு முழு சுதந்திரம் வேண்டுமென்று கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம் நாடு தழுவியதாக அமைந்தது லாகூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பெரும் தலைவர் லாலாலஜபதிராய் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன் விளைவாக மரணமடைந்தார். அதற்குக் காரணமான கயவனைப் பகத்சிங் தோழர்கள் சுட்டுக் கொன்றனர்.

இந்நூல் விரிவாக எடுத்துக் கொண்ட ஒரு முக்கியமான விஷயம் விடுதலை இயக்கத்தின் பால் கம்யூனிஸ்டுகள் எடுக்க வேண்டிய நிலை பற்றியது. 2வது கம்யூனிஸ்ட் அகிலத்தில் (1920) லெனின் இது பற்றி தெளிவாகக் கூறினார். காலனி நாடுகளில் நடக்கும் விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு தர வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். ஆனால் 1928ல் நடந்த 6வது காங்கிரஸ் எடுத்த நிலை மாறுபட்டிருந்தது. இதில் உரையாற்றிய தோழர் ஸ்டாலின் இந்தியாவில் பூர்ஷ்வாக்களில் இரு பிரிவுகள் இருப்பதாகவும் அதில் சமரச போக்கைக் கடைப்பிடிக்கும் பிரிவை எதிர்க்க வேண்டும் என்றும் புரட்சிகரப் பிரிவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் இந்த இரு பிரிவுகளில் யார் யார் உள்ளனர் என்று தெளிவுபடுத்தவில்லை. 6வது அகிலம் எடுத்த குறுங்குழுவாதப் போக்கு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் காலனி எதிர்ப்பு இயக்கத்தின் பிரிவினை நீரோட்டத்தில் இருந்து கட்சியை தனிமைப்படுத்தியது என்றும் இந்நூல் கூறுகிறது.

இந்த தவறு 1935ல் திருத்தப்பட்டது. தோழர் டிமிட்ரோவ் ஐக்கிய முன்னணி தந்திரம் பற்றி சமர்ப்பித்த அறிக்கை உதவிகரமாக இருந்தது. கட்சி 1934ல் சட்டவிரோதமாக்கப் பட்ட போதிலும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் செயல் பாடுகளில் நமது தோழர்கள் சீரியபங்காற்றினர். காங்கிரஸ் அமைப்பிலும் அவர்களின் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது.

இந்த நூல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் மீது தொடுத்த அடக்கு முறைபற்றியும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட சதி வழக்குகளையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது. கதர் இயக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றிய பங்கு பற்றியும் பகத் சிங் தோழர்களும் பல்வேறு புரட்சியாளர்களின் தியாகங்களை பற்றியும் விவரித்துள்ளது. மிகப் பிரபலமான சதி வழக்கு (1929-33) மீரட் சதிவழக்கு இது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தொடுத்த கடுமையான தாக்குதல். 31 முக்கியத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அது அவர்களுக்குக் கிடைத்த அபரிமிதமான ஆதரவையும் அவர்கள் உறுதியுடன் போராடியதோடு தங்கள் லட்சியத்தை உலகுக்குப் பறைசாற்றியதையும் நூல் விரிவாக எடுத்துக் கூறுகிறது.

பகத்சிங் மற்றும் அவரின் சகாக்கள், பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர்கள், காந்திஜி, ஜவஹர்லால் நேரு மற்றும் தேச பக்தர்கள், முற்போக்காளர்கள் ஆகியவர்களின் ஆதரவைப் பெற்றனர். பிரிட்டனில் கிடைத்த ஆதரவும் குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர் ரஜினிபாமிதத்தின் இந்த வழக்குப் பற்றிய மதிப்பீட்டையையும் இந்நூல் கூறுகிறது.

மூத்த தோழர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதற் கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியின் கொடிய அடக்குமுறை தோழர்கள் மீது ஏவி விடப்பட்டது, தொழிலாளர், விவசாயிகள் நலனுக்காகத் தோழர்கள் தொடர்ந்து பாடுபட்டனர். இத்தோழர்கள் அனுபவம் காரணமாக ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்கும் பணியில் ஈடுபட உதவியது. முழுச் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையைக் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளச் செய்வதில் கம்யூனிஸ்ட்டுகள் முக்கிய பங்காற்றினர். இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய யுத்த தந்திரத்தில் அகிலத்தின் ஆறாவது காங்கிரஸ் தவறிய போதிலும் விடுதலைப் போராட்டத்திற்கு அது தொடர்ந்து ஆதரவு காட்டியது.

1908 பாலகங்காதரதிலகர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 6 நாட்கள் பம்பாய் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததை லெனின் பாராட்டியதையும் மூன்று கட்சிகள் அனுப்பிய வேண்டுகோளையும் கடவுள் மறுப்பும் புரட்சி வீரனான பகத்சிங் தமது லட்சியம் பற்றிக் கூறியதும் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளன. கேரளம், ஆந்திரா இயக்க முன்னோடிகள் பற்றிய விவரம் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பி. சீனிவாசராவ், பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் ஆகியோர் விடுதலைப் போரில் பங்கு பெற்று அமீர்ஹைதர்கான் முயற்சியால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளாகினர்.

இந்த நூலை ஆக்கியவர்கள் பாராட்டுக்குரியவர்கள். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்ப கால வரலாற்றை, அதன் சாதனைகளை, குறைகளை, நன்கு எடுத்துக்காட்டி இருக்கின்றனர். ஏராளமான தகவல்களைப் பயனுள்ள முறையில் அளித்துள்ளனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு - குறிப்பாக இளைஞர்களுக்கு இந்நூல் நன்கு பயன்படும். கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சித் தோழர்களும், ஆதரவாளர்களும் இதை படிப்பார்கள் என நம்புகிறோம். இதன் தமிழாக்கம் நன்றாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு
ஆரம்ப ஆண்டுகள் : 1920 - 1933 (தொகுதி - 1)
வெளியீடு : பாரதி புத்தகாலய, 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18, விலை : ரூ. 180.00

ஆசிரியர் குழு : இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மத்தியக்குழு அமைத்த வரலாற்றுக் கமிஷனால் உருவாக்கப்பட்டது. (தமிழில் : கி. இலக்குவன்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com