Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சி
தமிழில்: ஆர். பார்த்தசாரதி

புத்தகம் மிகத்தொன்மையான உலக அளவில் விரிந்து பரந்த பண்பாட்டு ஊடகம். “புத்தகங்கள் நாட்டு எல்லைகளையும் கடந்து பயணம் செல்லக்கூடும்”

ஜெர்மனியில் பிராங்க்பர்ட் நகரில் 2006 அக்டோபர் 3ஆம் நாள் புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைத்து ஜெர்மன் வெளிநாட்டு அமைச்சர் ஆற்றிய உரை:

ஜார்ஜ் லுயி போர்கேஸ் ஒரு சமயத்தில் கூறினார்: “மனிதன் பயன்படுத்தும் பல கருவிகளில் வியப்பூட்டுவது ஐயத்துக்கு இடமின்றிப் புத்தகம்தான். நினைவாற்றல் கற்பனை என்பனவற்றின் விரிவாக்கமே அது”.

நமது பண்பாட்டுப் பதிவுகளைப் பல வழிகளில் விரிவாக்கிக் காணலாம்; இதைக் குறிப்பாக இரு திசைகளில் செய்ய முடியும். பின்னோக்கி என்னும் போது பழைய நினைவு களைப் பாதுகாக்க வரலாறு எழுதுதல், நம்முடைய சொந்த அனுபவங்களுக்குக் காரணகாரியம், பின்புலம் வழங்குதல், முன்னோக்கி என்னும்போது எதிர்காலத்தில் நமது வினை யாற்றலை, விளையும் பலன்கள்-எண்ணப் பரப்பை விரிவாக்குதல், அறிமுகமில்லாதவற்றைக் கொண்டு அறிமுகமானவற்றைக் காண வாயில் அமைத்தல்.

பண்பாடு தவிர, நம் இதயம் இன்றுவரை நாட்டம் கொள்ளாத துறைகளை உள்ளொளியை காணப் புத்தகம் உதவுகிறது. அகக் காட்சி புறக்காட்சி, உள்வெளி என்பன உலகமயமாதலின் பின் புலத்தில் பிரித்துப் பார்க்க முடியாதவை. தெரியாததைக் கொண்டு தெரிந்ததை அறியும் முயற்சியில் தான் நாம் வளர்ந்து வருகிறோம். பண்பாட்டையும், சமுதாயத்தையும் சீரமைக்கிறோம். அந்தக் காரணத்திற்காகவே இந்த ஆண்டு பிராங்பர்ட்டில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் மிகச் சிறந்த விருந்தினர் என்னும் உயரிய நிலையை இந்தியாவுக்கு வழங்குகிறோம்.

பண்பாடு வகிக்கும் பாத்திரத்தை அறிந்துள்ளதனால் பொருளாதார அரசியல் தொடர்புகளுக்குப் பண்பாட்டு அடித்தளம் தேவை என்பதாலும் ஜெர்மனியின் அயல்நாட்டுக் கொள்கை இதை உணர்ந்து உள்ளதனாலும், கூடுமானவரை மக்கள் அனைவரும் பண்பாட்டில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக முயன்று வருகிறோம். அதாவது கலைஞர்களின் காப்புரிமையை நம் நாடும் மதித்துக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பண்பாட்டின் உச்சத்தை அளாவி நிற்கின்றன. நடப்பு மாதங்களில் ஜெர்மனியில் இந்தியாவின் சிறப்பு மிக அதிகமாக, இதுவரை இல்லாத அளவு உணரப்படுகின்றது. பல ஜெர்மனியர்களுக்கு இவை வியப்பையும், ஆர்வத்தையும் ஊட்டின. உலகத்தில் துடிப்போடு வளர்ந்து வரும் நிலப்பகுதி இந்தியா என்பது மட்டுமல்லாமல் நம்மிரு நாடுகளிடையே உள்ள ஒன்றுபட்ட, நெருங்கிய அரசியல் கூட்டுறவும் காரணம் எனலாம்.

இந்தியாவை மிக நெருங்கி நோக்குவது ஜெர்மனிக்குப் பலன்தரும். நம்முடைய பண்பாட்டைவிட மிகத் தொன்மையான பண்பாட்டை, நாம் நினைத்துப் பார்ப்பதைவிடப் பலவழிகளில் நவீனமயமாகி வந்துள்ள பண்பாட்டை அறிந்து கொள்வதற்கு இது துணைபுரியும். அதுமட்டுமல்லாமல் ஐரோப்பாவில் நமக்கு முன்னுள்ள அறை கூவல்களை மிக நுணுகி நோக்கித் தெரிந்து கொள்ளவும் உதவும்.

முதலில் வியப்பூட்டும் அரசியல் உலகை எடுத்துக் கொள்வோம். அடுத்த ஆண்டு ஜெர்மனி, ஐரோப்பியக் கூட்டமைப்பின் தலைமையை ஏற்க இருக்கிறது. ஐரோப்பாவை முன்னேற்றும் திட்டத்தில் வெற்றி காண்பதற்கான பொறுப்பு நமக்கு முன் எழுந்துள்ளது. இருபத்தேழு நாடுகள், இருபது வெவ்வேறான ஆட்சி மொழிகள், ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட மத சமூகங்கள் எல்லாம் கொண்ட 450 மில்லியன் மக்களுக்கு, அனைவரும் ஒன்றுபட்டு ஏற்று இயங்கத்தக்க திட்டத்தை உருவாக்க வேண்டும்.

நாம் அறிந்திராத இந்தியாவை அறிந்தால் நமது ஐரோப்பாவை அறியத் துணை செய்யும் என நம்புகிறேன். ஏனெனில் இந்தியாவுடன் தொடர்பு என்பது உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தோடு தொடர்பு கொள்ளுவது என்பதாகும். நானூறு மொழிகள், கிளை மொழிகள் அவற்றுள் இருபதுக்கும் மேலான தேசிய மொழிகள் பேசப்படும் இருபத்தெட்டு மாநிலங்களையும் நடுவண் அரசின் கீழ் இயங்கும் ஏழு சிறு மாநிலங்களையும் உடைய தேசம் இந்தியா.

அண்மையில் கெய்ரோவில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இந்த உண்மையை நான் நேரில் கண்டேன். நாம் அறிந்திராத பண்பாடுகளோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்கும் இவை என்ன சொல்லியிருக்கின்றன எனக் கண்டுபிடிப்பதற்கு இந்நாட்டின் குடியரசு தலைவர் ஒரு முஸ்லீம், பிரதமர் ஒரு சீக்கியர், மிகப் பெரிய ஆளும் கட்சியின் தலைவர் கிருத்துவப் பின்னணியுடைய ஒரு பெண், சில சமயங்களில் இந்த இந்தியா நமக்குப் புதிராகக் காட்சியளிக்கிறது. பல்வேறான வாழ்க்கை நெறிகள், பண்பாடுகள், மொழிகள், மதங்கள், நம்பிக்கைகள் எல்லாம் உள் முரண்பாடுகள் தெரிந்தும் தெரியாமலும் இருப்பினும், அடுத்தடுத்து நட்புடன் இயங்கிவருவதைப் பார்க்கும்போது; அரசியல் சட்டமும் நாடும் எல்லாவற்றையும் சேர்த்துவைத்துள்ள பாங்கு வியப்பூட்டுவது.

தேசியம் அல்லது முழு ஐரோப்பாவைப் பொறுத்து நமக்கு முன்னெழும் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படும்போது மனம் தளர்ந்து விடுவோம் என்னும் அச்சம் எழும்போது இதன் பரிமாணங்களை நாம் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். அரசு என்னும் நிலையிலிருந்து இந்திய நாடு அனுபவித்துவரும் சோதனைகளை உன்னிப்பாகக் காணும் போது ஐக்கிய ஐரோப்பாவைக் கட்டி அமைப்பதற்கான வலிமையையும், துணிவையும் நாம் பெறமுடியும். இப்பொழுது நடைபெறும் பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சி இதற்கான மிக முக்கிய வாய்ப்பினை நமக்கு அளித்துள்ளது. பண்பாடு என்பது மரபு வழிவரும் நம்பிக்கைகள், கொள்கைகள், மதிப்பீடுகள் என்பனவெல்லாம் இறுகி கெட்டித்தட்டிப் போனதோரமைப்பு எனப் பலர் நம்பும் இத்தருணத்தில் இதற்கு எதிரானதும் உண்மை என்பதனையும் காட்டுகிறது; அதாவது மனித சமுதாயம் நேர்காணும் மிகப்பெரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இடையீடு ஏதும் இல்லாத தொடர் வளர்ச்சியே பண்பாடு என்பதைக் காண்பார்கள். பண்பாடுகளின் நெருங்கிய தொடர்பும், உறவும் பெருகிவரும் இக்காலக்கட்டத்தில் பண்பாட்டுக் கூட்டுறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும், பண்பாடு பற்றிய விவாதங்களும் சிறப்பிடம் பெறுகின்றன.

இந்திய நாட்டுக்குப் பயணம் செய்து அங்குக் கண்டவற்றையும் அனுபவித்தவற்றையும் இலக்கியமாகவும், சித்திரங் களாகவும் தீட்டி கண்டங்களிடையே காணப்படும் இணைப்பு களை எடுத்துக் காட்டிய பெருமை குந்தர் கிராப்ட்டுக்கு உரியது.

சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் விவாதம் இவற்றிலிருந்து பண்பாடு உயிர் பெற்றுத் தொடர்ந்து வாழ்கிறது. நாம் இதை மறத்தல் ஆகாது. குறிப்பாக விலக்குவதற்கு ஒரு கருவியாகப் பண்பாட்டைப் பயன்படுத்தி வரும் ஜெர்மனி இதை மறக்கவே கூடாது. ஐரோப்பிய நாட்டுத் தேசியங்களும் ஜெர்மன் தேசியமும் மக்கள் புலப் பெயர்ச்சியினால் பண்பாட்டுத் துறையில் மிக அதிகமாகப் பலன் பெற்று வந்துள்ளன.

இந்தியா, ஆப்பிரிக்கா, கரிபியன், ஆசிய கண்டங்களில் பிறந்த மக்கள், ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் வழிகளில் ஐரோப்பாவில் நிலவும் நாட்டுப் பண்பாடுகளையும் கூட்டுப் பண்பாட்டையும் செழிப்பித்து வருகின்றனர்.

அடையாளம், குறிப்பாகப் பண்பாட்டு அடையாளம் குறிப்பிட்ட ஒரு சில காரணங்களால் நிர்ணயம் செய்யப் படுகிறது. ஆனால், இது மாற்ற முடியாததன்று. மாறாகப் பண்பாட்டு அடையாளத்தின் பரிமாணங்களை ஓரிரண்டாகக் குறுக்கி விடுவது சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு, தங்களுடைய அடையாளத்தைத் தாங்களே கண்டு தேர்வு செய்யத் தடை செய்யும். இதன் அஞ்சத்தக்க விளைவுகளை நம்முடைய வரலாற்றிலிருந்தே அறிகிறோம்.

அடையாளங்களைக் குறுக்கி விடுவது, மனிதர்களைக் குட்டையர்களாக ஆக்கிவிடுவதற்கு ஒப்பாகும் என்று இந்தியச் சமூக வல்லுநரும் பொருளாதார மேதையுமான அமர்த்தியாசென் கூறியுள்ளார். பண்பாட்டு அடையாளம் நிலைத்த பண்பு எனக் கருதுவோர் பண்பாட்டு நினைவுகளைச் சிறுமைப்படுத்தி மக்கள் ஆர்வத்தையும், கற்பனையையும் மாற்றத்துக்கான தேவையையும் நிராகரித்து விடுகிறார்கள்.

அமர்த்தியாசென்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஐரோப்பியர்கள் வேறுபாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே. மனிதர்களைக் குட்டையர்களாக்கு வதும் ஒரே பண்பாட்டைச் சார்ந்து நிற்பதும் கூடாது. பண்பாட்டுத் தேர்வுகளைப் பிரித்துகொள்ள வேண்டும். அவை சமுதாயத்துக்கு, அடையாளத்தைத் தரும் அதன் வலிமையையும் அதிகரிக்கும்.

சென்றடையத்தக்க பல்வகைமை

பல பிரிவினைகளிடையே ஒருமைபாடு அடையத்தக்கதே. உண்மையில் நாம் மக்களைத் தனிதனியான அவர்களுடைய பண்பாட்டு அல்லது மதச்சார்புகளில் நிற்க விட்டுவிடுவதில்லை. ஏனெனில் பல்வேறு வகைப்பட்ட பண்பாடுகளையும் மதநம் பிக்கைகளையும் உடைய மக்கள் தெளிவான சில வரையறுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றுவார்களேயானால் சாத்தியமாகும். ஒருமைப்பாடு ஐரோப்பியர்களான நாம் ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்து 21ம் நூற்றாண்டில் புதிதாகக் காலடி எடுத்து வைப்பதற்காகத் தெளிவானதான, சென்றடையத் தக்கதான இலக்குகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். 21ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்கள் நீதி அடிப்படையான அமைதி தவழும் இடத்தை அடைவதற்கு முயல வேண்டும்.

தனித்தும் கூட்டாகவும் நிலை பெற்ற அடையாளத்தை, கட்டுக்கோப்பை வழங்குவது பண்பாடு. எனில் அந்தப் பண்பாட்டின் தலையாய ஊடகம் புத்தகம் தான் என்று சொல்ல வேண்டும். ஓரளவு இது உண்மை; காரணம் பண்பாடு பற்றிய உரையாடலின் மிகப் பழமையான உலகளாவிய ஊடகம் புத்தகமே. பண்பாடுகளுக்கும் கலைகளுக்கும் இடையே இயல்பாக உள்ள பிணைப்பு புத்தகங்களே; புத்தகக் கண்காட்சியும் பெர்லின் திரைப்பட விழாவும் இந்தியத் திரைப்படமும், வியக்கதக்க வகையில் இவ்வுண்மையை உறுதி செய்துள்ளன. இவ்வுலகப் புத்தகக் கண்காட்சியின் செயல்பாடுகள் பண்பாடு களை இணைப்பதாகவும் விவாத மேடைகளையும் உருவாக்குவதாகவும் உள்ளன.

அண்மையில் கெய்ரோவில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இந்த உண்மையை நான் நேரில் கண்டேன். கூட்டுச் செயல்பாட்டுத் திட்டங்களானவை கொள்கை பேசுவதை விட அறிந்திராத பண்பாடுகளோடு நேரடித் தொடர்பு கொள்ளச் செய்யவும், இவை என்னதான் சொல்லுகின்றன என்பதை அறிந்து கொள்ளவும் துணை செய்யும்.

பண்பாட்டின் விளைவுகள், குறிப்பாகப் புத்தகங்கள் மொழி வகுக்கும் எல்லைகளை மொழியாக்கமும் நில எல்லைகளை வாணிபமும் கடக்கப் பேருதவி செய்யும். நமது புலக்கட்சிகளை மாற்றியும் அகத்தையும் புறத்தையும், தெரிந்ததையும் தெரியாததையும் இணைத்துக் காட்டும் புத்தகங்கள் புது வழிகாட்டியாகவும் விளங்கும். இவ்வாறு புத்தகங்கள் கலைகளின் அயல்நாட்டு அமைச்சர்கள் என வழங்கப்படலாம்.

பண்பாடு வகிக்கும் சிறப்பான பாத்திரத்தையும் பொருளாதார அரசியல் தொடர்புகளுக்குப் பண்பாட்டு அடித்தளம் தேவை என்பதையும் ஜெர்மனியின் அயல்நாட்டுக் கொள்கை உணர்ந்துள்ளதனால் மக்கள் அனைவரும் பண்பாட்டு நிகழ்ச்சியில் கூடுமானவரை பங்குபெற வேண்டும் என்பதற்காக முயன்று வருகிறோம். கலைஞர்களின் காப்புரிமையை நம் நாடும் மதித்துக் காப்பாற்ற வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம்.

(தி இந்து 9.10.2006 - தமிழில்: ஆர். பார்த்தசாரதி).


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com