Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

மதுரைப் புத்தகத் திருவிழா 2006 - ஒரு பருந்துப் பார்வை
க. பசும்பொன்

புத்தகம் என்பது நாம் துளிர்விடுகின்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. நதியைப் போல் தொடர்ந்து ஓடவும், பலரின் தாகத்தைத் தணிக்கவும் தனி ஜன்னல்களைத் திறந்து விடுகிறது. இருட்டறைக்குள் இருக்கின்ற நமக்கு வெளிச்சத்தை விநியோகிக்கிறது என்ற தன்னுடைய நூலில் வெ. இறையன்பு குறிப்பிடுகிறார். 19ம் நூற்றாண்டின் அமெரிக்க சமூகச் சீர்திருத்தவாதி ஹென்ரி வார்ட் பீச்சஸ் கூறியதுபோல்” புத்தக நிலையத்திலிருக்கும் போதுதான் மனித இயல்பு மிகவும் இளகிய தன்மையுடன் செயல்படுகிறது”. வாசிப்பை நேசிப்பதை அனைத்து தரப்பினரிடமும் வளர்ப்பதற்காக இப்புத்தகத் திருவிழா தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 2006, செப்டம்பர் 1 முதல் 10 வரை மதுரையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் புத்தகத் திருவிழா மிகச் சிறப்பாக நடந்தேறியதற்கு அனைத்து வகை உழைப்பினையும் நல்கியவர் மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் ஆவார்.

உலகில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான 2006 ஃபிராங்ஃபாடு புத்தகக் கண்காட்சியின் இயக்குநர் ஜெர்சென்பேஸ் கூறுகையில் இது வணிகம், பண்பாடு மற்றும் சமூகப் பொருளாதாரம் சார்ந்தது என்றார். இக்கூற்று மதுரை புத்தகத் திருவிழாவிற்கும் பொருந்தும்.

புத்தகத் திருவிழாவின் தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் தலைமை ஏற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் பொ. மோகன் முன்னிலை வகித்தார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்றார். நல்லி குப்புசாமி செட்டி வாழ்த்துரை வழங்கினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கச் செயலாளர் திரு. ஆர்.எஸ். சண்முகம் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியினைத் செய்தி மற்றும் சுற்றுலாத்துறைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்கள் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பொ. மோகன் தன்னுடைய முன்னிலையுரையில் எந்த நாட்டில் அறிவு வளர்ச்சி விழிப்புணர்வு ஏற்படுகிறதோ அந்த நாடுதான் மேம்பாட்டை அடைய முடியும் என்று குறிப்பிட்டார். தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் உரையில் அரசு நிருவாகங்கள் பொதுவாகச் சூறாவளிகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும். முதன் முதலாக மதுரை மாவட்ட நிருவாகம் புத்தகத் திருவிழா என்ற தென்றலைப் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கியுள்ளது என்றார். தொடக்க விழாவின் முடிவில் காலந்தோறும் இலக்கியங்களின் பணி எழுச்சியூட்டுவதா? மகிழ்ச்சி கூட்டுவதா? என்ற தலைப்பில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் நடுவராக இருந்து பட்டிமன்றத்தைச் சிறப்பாக நடத்தினார்.

பொழுது போக்கையே பயன்பாட்டு அறிவாக மாற்றக் கூடிய வகையில் புத்தகத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மாலையில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் வழங்கிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், ரேவதி முத்துச்சாமி வழங்கிய சிலப்பதிகார நாட்டிய நாடகம், ஸ்ரீசத்குரு சங்கித வித்யாலய மாணவ, மாணவியர் வழங்கிய இசைக்கருவிகள் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள், கலை வளர்ச்சி மைய சோமு வழங்கிய நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், மீனாட்சி ராகவன் வழங்கிய பரதநாட்டியம் மற்றும் பல்சுவை நடனங்கள் பள்ளி, மாணவ மாணவியர் வழங்கிய கலைநிகழ்ச்சிகள், மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களின் கூடல் கலைக்குழு வழங்கிய நிழல் விழாத தேசம் எனும் நவீன நாடகம், மதுரை பாலா வழங்கிய காமெடி பாய்ஸ் நிகழ்ச்சி, திண்டுக்கல் சக்தி கலைக்குழு வழங்கிய தப்பாட்டம் போன்றவை மிகச் சிறப்பாக நிகழ்ந்தன.

உண்மையின் தன்மையை உணரக் கூடிய வகையில் பிற்பகலில் உலகத் திரைப்படங்களான Water Salles - Central Station, Gus Van sant - elephant, Mike leigh Vera Drake, Kim-ki-Dik-spring Summer Fallwriting Spring, Mohrenmakhmalbaf - The Cyclist , Victoria de Sica - bicycle thieves, Charlie chaplin-னின் The Great dictator ஆகியவையும் Bumika, Satyajit Ray - Charulath, ஆகியோரின் திரைப்படங்களும் மிகச் சிறந்த குறும்படங்களான ஆர்.வி. ரமணியின் பாவைக்கூத்து, புகழேந்தியின் டிசம்பர் 6, சொர்ணவேலின் சுபாஸ் சந்திரபோஸ், தினகரன் ஜெய்யின், மருதிருவர், சசிகாந்தின் வேலி, பாரதி கிருஷ்ணகுமாரின் இராமையாவின் குடிசை, அறிவுமதியின் நிலம், ரேவதியின் உங்களில் ஒருத்தி, லீனா மணிமேகலையின் பறை,

அமுதனின் செருப்பு, அம்சன்குமாரின் பாரதி வாழ்க்கை வரலாறு ஆகியவையும் திரையிடப்பட்டன. இவற்றை பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து பார்த்தனர். இந்த உலகத்திரைப்பட, குறும்படத் தொடக்க விழாவில் திருமதி. திலகவதி ஐ.பி.எஸ். கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

தினசரி மாலையில் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் உரைவீச்சு நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், எழுத்தாளர் த. ஜெயகாந்தன், தமிழருவிமணியன், ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் அப்துல்ரகுமான், அறிவுமதி, பிரபஞ்சனும், தமிழ்ச்செல்வனும் சிறப்புரையாற்றினார்கள்.

வியாழக்கிழமை (7.9.2006) அன்று கவிதை வாசித்தல் எனும் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளரான பா. தேவேந்திரபூபதியும் கவிஞர் மாலதிமைத்ரி, கலாப்ரியா சல்மா, கனிமொழி, யவனிகா ஸ்ரீராம், கவிதா, மு. சத்யா, சல்மா, பௌத்த அய்யனார், உமாமகேஸ்வரி, தமிழச்சி தேவதேவன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.

சென்னை, ஈரோடு ஆகிய நகரங்களை அடுத்து மதுரையில் மிகப் பெரிய அளவில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. புத்தகத் திருவிழாவை மழை, வெயில் பாதிக்காத வகையில் 176 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இத்திருவிழாவில் புத்தகங்கள் வாங்குவதற்கு வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அனைத்து நூல்களும் 10 விழுக்காடு தள்ளுபடியில் விற்கப்பட்டன. தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் இங்கு வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். கோடை பண்பலை சார்பில் ‘புத்தகத் திருவிழா கலாட்டா’ என்ற சிறப்பு நிகழ்ச்சி 10 நாட்களும் ஒலிபரப்பப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இயக்குநர் திரு. சோமாஸ்கந்த மூர்த்தி, நிகழ்ச்சி தயாரிப்பு அலுவலர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பவித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

புத்தகத் திருவிழா நிறைவு விழாவிற்கு முன்பாக மணிமேகலைப் பிரசுரம் சார்பில் தன்னம்பிக்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 6 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு மாண்புமிகு அமைச்சர்கள் தமிழரசி மற்றும் தங்கம்தென்னரசு வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். கவிஞர் வைரமுத்துவும் வந்திருந்து சிறப்பித்தார்.

புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் சர்வோதய இலக்கிய பண்ணை நவநீதக் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தலைவர் காந்தி கண்ணதாசன் மதுரை புத்தகத் திருவிழா - ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றும் போது 10 நாட்களில் சுமார் 8.40 லட்சம் பேர் வந்திருந்தனர். இதில் 60 ஆயிரம் பேர் பள்ளி, மாணவ மாணவிகள் ஆவார்கள். 25 லட்சம் புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வணிகவரி உதவி ஆணையர் பா. தேவேந்திர பூபதி ரூ. 3 கோடியே 3 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் அ. கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூறினார். மதுரை மாநகராட்சி ஆணையர் திரு.டி.ஜே. தினகரன் முன்னிலை வகித்தார்.

நூல்கள் வாசிப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி நடத்தப்பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முறையே பரிசுகள் ரூ. 3000, ரூ. 2000, ரூ. 1500 மற்றும் ஆறுதல் பரிசுகள் ரூ. 500 வீதம் ஆட்சியரின் துணைவியார் திருமதி. ஹேமலதா உதயச்சந்திரன் வழங்கினார். இவ்விழாவில் நேர்முக உதவியாளர் (பொது) சி. வடிவேல், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் சிவ. சரவணன் மற்றும் திரு. சங்கரவடிவேல், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் க. பசும்பொன், திரு. ரத்னவேல், திரு. சோமாஸ் கந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் த. உதயசந்திரன் இப்புத்தகத்திருவிழா நிறைவு விழாவில் மிகச் சிறப்பான பேருரையை ஆற்றினார்.

“என்னை படிக்கத் தூண்டியது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்திய புத்தகக் கண்காட்சிதான்”

- த. உதயச்சந்திரன் இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சியர்

“இப்புத்தகத் திருவிழாவை மதுரை மக்கள் பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றி இருக்கிறீர்கள் இத்திருவிழா தற்காலிகமாக நிறைவுற்று இருக்கின்றது. இத்திருவிழா மிகப் பெரிய வெற்றி பெற்று இருக்கின்றது வெற்றியில் எள்ளளவும் சந்தேகமில்லை. இயற்கை குறுக்கீட்டோடு முடிந்து இருக்கின்றது. இடைத்தேர்தல் பரபரப்புக்கிடையே மழையை நிறுத்த வேள்வி செய்யலாமா என்று கொள்கைத் தடுமாற்றம் ஏற்படுமளவிற்கு இதில் ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது.

இதழியல் நண்பர்கள் அரசு அலுவலகத்தில் பணியிட மாற்றம் நடைபெற்றதைப் போல் கடந்த பத்து நாட்களாகப் பணியாற்றினர். என்னுடைய எட்டு வயதில் நாமக்கல்லில் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தில் மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவல் தான் நான் முதன்முதலாக படித்த நூல். என்னைப் படிக்கத் தூண்டியது, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்திய புத்தகக் கண்காட்சிதான். திரும்பி நடந்துவந்த சாதனைகளைப் பார்த்தால் அரிமா நோக்காக இருக்கின்றது. என்னை நெகிழச் செய்த இரு சம்பவங்கள் ஒன்று உடல் ஊனமுற்றவர் தவழ்ந்து வந்து நூல்களைப் பெற முயன்றது, இன்னொன்று எனது வாகன ஓட்டுநர் முருகேசன் மதுரைப் புத்தகத் திருவிழாவில் சமண நூல்கள் கிடைக்கவில்லை என்றார், பிறகு தேடிக் கண்டுபிடித்துவிட்டார். அவர் கண்டுபிடித்தது சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்” என்னும் புத்தகம்.

கனரா வங்கி அரசு ஊழியர்களுக்குக் கடன் அட்டைகள் வழங்கி நூல்களை வாங்க வகை செய்தது. அதனடிப்படையில் அரசு ஊழியர்கள் 185 பேர் கடனுதவி பெற்று ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கியுள்ளனர். உலகப் புகழ் பெற்ற இலக்கியங்கள் தமிழில் ஆக்கம் செய்யப் பெற வேண்டும். ஜாக்கிசான் தமிழ் பேசுவதை வரவேற்கிறேன். தொலைக்காட்சியில் தமிழ் குறுந்தகடுகள் அதிகம் வரவேண்டும்.

பள்ளிக் குழந்தைகளைச் சின்னத்திரையிலிருந்து மீட்கப் புதியதளம் அமைக்கப்பட வேண்டும். அதற்காகக் குறுந்தகடுகளில் புத்தகங்களை வெளியிடப் பதிப்பாளர்கள் முன் வரவேண்டும். பள்ளி, கல்லூரிகளில் வாசகர் வட்டம் மற்றும் திரைபயில் கழகம் ஏற்படுத்தப்படும். அதன்மூலம் மாணவர்கள் ஒன்றிணைக்கப்பட்டுப் பிரபலமான உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும். மதுரையில் ‘சங்கம்’ எனும் பெயரில் இலக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும். பொங்கல் விழா மக்கள் விழாவாகக் கொண்டாடப்படும். சித்திரைத் திருவிழாவைப் பண்பாட்டு விழாவாகக் கொண்டாடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்புத்தகத் திருவிழா 2007 ஆகஸ்ட் 3 முதல் 12 வரை மேலும் செம்மையாக நடத்தப்படும்” என்று ஆட்சியர் கூறினார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com