Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

இலக்கியப் பரண்: மறையும் நூல்கள் வரிசை - 5
பா. ஆனந்தகுமார்

“சாந்தலிங்க சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய வைராக்கிய சதகம் மூலமும் சிதம்பரசுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய உரையும்”, சுப்பராய தேசிகரவர்களது கல்விப் பிரவாக அச்சுக்கூடம் சென்னை 188.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி.1678) தமிழகத்தில் வாழ்ந்த சைவசித்தாந்த சாத்திர அறிஞர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் பேறையூர் சாந்தலிங்க சுவாமிகள். இவர் கன்னடதேசத்தில் அரசராக இருந்து பின்னர் துறவு பூண்ட குமாரதேவரின் ஆசிரியர்; வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல் ஆகிய நான்கு சைவ சித்தாந்த சாத்திர நூல்களை இயற்றியவர். சாந்தலிங்க சுவாமிகளுடன் இந்நான்கு நூல்களுக்கும் இவரது மாணாக்கராகிய குமாரதேவரின் மாணாக்கர் சிதம்பரசுவாமிகள் உரை செய்துள்ளார். சிதம்பர சுவாமிகளின் வைராக்கிய சதகஉரை 1880-களில் திரு சண்முகசுவாமிகளால் பார்வையிடப்பட்டு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ள. சாந்தலிங்க சுவாமிகளின் ‘வைராக்கிய சதகம்’ சதக இலக்கிய வகையின் இலக்கணத்திற் கேற்ப நூறு பாடல்களைக் கொண்டு இலங்குகின்றது. நூல் இரண்டு பகுதிகளாய் அமைந்து முதற்பகுதி 50 சாத்திரப் பாடல்களையும் இரண்டாம் பகுதி 50 தோத்திரப் பாடல்களையும் கொண்டுள்ளது. நூலுக்கு முகப்பில் கணபதி வணக்கமும் சுப்பிரமணியர் வணக்கமும் இடம் பெற்றுள்ளன.

‘வாழி நெஞ்சமே’ என மனதை விளித்து, மனதை இவ்வுலகப் பற்றுக்களில் இருந்து விடுபடக் கூறி அதனைத் தவத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக நூலின் சாத்திரப் பகுதி அமைந் துள்ளது. மனத்திற்கும் மனத்திலிருந்து பிரிந்து வந்த விவேகத்திற்கு மிடையிலான உரையாடலாக சிவஞானம் நூலில் உணர்த்தப் படுகின்றது. மனைவி, மக்கள் முதலாகிய உறவு, செல்வம் முதலான பொருள், அரச பதவி முதலான சுகம், வீடு முதலான இடம், புகழ் ஆகிய இவ்வைந்தும் மனத்திற்குப் புறப்பற்றுக்களாகவுள்ளன. ஆயின் இவ்வைந்தும் நிலையற்றது. சிவனது திருவடியே ஒருவனுக்கு உறவு, பொருள், சுகம், இடம், புகழ் என நூலின் முற்பகுதியில் மனதிற்கு உணர்த்துகிறார் நூலாசிரியர். பின்னர் மனத்தை சுவர்க்க இன்பத்தை நோக்கித் தவம் செய்யப் பண்ணுவிக்கின்றார். தவம் செய்யும் போது மனதை அசைவற நிற்கச் செய்வதற்கான வழிமுறைகளைத் தொடர்ந்து விவேகம் உபதேசிக்கின்றது; ஐம்புலக் காட்சியும், கரண வாசனையும் (நினைப்பு) மறைப்பும் மனதை விட்டு நீங்க வேண்டுமென்று அறிவுறுத்துகின்றது. மறைத்தலையும் நினைத்தலையும் செய்து விட்டது ஆணவமும் மாயையும். எனவே அதனை நீங்க துறவின் மூலம் பரபத்தி நானத்தைப் பெற வேண்டுமென விவேகம் வழி காட்டுகின்றது. மலம் நிறைந்த குடிசையாகிய இவ்வுடம்பின் கண்வைத்த ஆசையை விட்டு நீங்கினால் உமாபதி வீடு பேற்றினைத் தருவானென்கிறார், சாந்தலிங்க சுவாமிகள்.

“மலக்குடில் இதில் அவாவை நீக்க உமாபதி தரும் வீடே” மேலும் ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி, மனத்தை தீமை சேர் விஷயங்களில் செல்லவிடாது, சோமசேகரனே சரணம் எனத் தொழுது நில்லாமல் நாளெல்லாம் கழித்தாயே என மனதை நோக்கிக் கூறுகின்றார்.

“ஆமையார் உறுப்பு ஐந்தையும் ஓர்மெயுள் / அடக்கலிற் புலனைந்தும் / தீமை சேர் விடயங்களிற் செலாது அமைத்து / உள்ளமே சிவைபாக / சோமசேகரன் சரணமே சரணெனத் / தொழுது நின்றழுதன்னோ / நாம நாவினாற் செபித்திலை அவத்திலே / நாளெல்லாங் கழித்தாயே” (பாடல் எண் : 37)

மாதர் மீது இச்சை வைத்து உழல்கின்ற மனமே! அம் மாதத் உடல் மீதிருக்கும் ஆடையணிகலன்களைக் களைந்தால் அது “வெறும் புழு மலக்கூடு அல்லால்” வேறில்லை. எனவே சங்கரன் தன் வாதம் தன்னை நாடுதி. நீ பர சுகத்தைப் பெறலாம் என்று தொடர்ந்து மனதை இறைஞானத்தில் வைராக்கியத் தோடு ஈடுபடச் சொல்கின்றார். இறைவனைப் போற்றி, திருநீறணிந்து உருத்திராட்ச மாலையணிந்து, ஐந்தெழுத்து (நமச்சிவாய) மந்திரத்தை உச்சரித்து, குரு - லிங்கம் - சங்கமம் என்ற மூவுருவை வணங்கினால் பிறப்பிறப்பினை மாற்றலாம் நெஞ்சே! என மேலும் நெஞ்சினுக்கு அறிவுறுத்துகின்றார். இறுதியாக சிவனடியார் அல்லாதவர் மலைபோல் செல்வத்தைச் சொரிந்தாலும் அவர் மீது புல் நுனியளவு கூட அன்பு வைத்திடாதே. சிவனடியாருக்கு அடியாராய்த் திரிந்து பணி செய்வாயாகில் நீ மிக நல்லை. இதனை நீ நம்பவில்லையெனில் பொல்லாயாவாய் எனக் கூறி வைராக்கிய சதகத்தின் முற்பகுதியாகிய சாஸ்திரப் பகுதியை முற்று விக்கின்றார், சாந்தலிங்க சுவாமிகள்.

“மனம் தானுமன்று தன்வயமுமன்று என்று அறிந்து, அதனை விடுவித்துத் தன்னையும் அதனையும் கூட்டவும் பிரிக்கவும் வல்ல சிவத்தை நோக்கி விவேகம்” கூறுவதாக பிற்பகுதியில் உள்ள சிவதோத்திரப் பாடல்கள் ஐம்பதும் அமைந்திருப்பதாக உரையாசிரியர் சிதம்பரசுவாமிகள், உரைக்கின்றார். சாத்திரப் பகுதிக்கு உரையெழுதிய சிதம்பரசுவாமிகள் தோத்திரப் பகுதிக்கு உரையெழுதவில்லை. சாத்திரப் பாடல்கள் ஐம்பதும் அந்தாதித் தொடையில் அமைந்திருப்பதைப் போல தோத்திரப் பகுதியும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது.

“தேவே உனையன்பினிற் பூசை செய்தேனுமல்லேன் / நாவான் மிகப் பாடி நின்றாடி நயக்குகில்லேன் / நோவாது உழறி மனத்தோடு இவனுற்றளேன் மற்று / ஆவாளியென் வருமென்பது அறிந்திலனே” என இறைஞானத்திலிருந்து தான் விலகி நிற்றலை பொறுத்தருளுமாறு பல தோத்திரப் பாடல்களில் வேண்டுகின்றார்; நீயே அருள் செய்தால்தான் நான் உன்னையடைய முடியுமென்கின்றார், நூலாசிரியர்.

வைராக்கிய சதகத்திற்கு சிதம்பரசுவாமிகள் எழுதிய உரையில் திருவாசகம், பொன்வண்ணத் தந்தாதி, ஒழிவிலொருக்கம், ஞானவாசிட்டம், ஆனந்தத் திரட்டு, அருணகிரியந்தாதி, சிவஞானதீபம் முதலான சைவ சமய நூற்கள் மட்டுமின்றி திருக்குறள், நாலடியார் முதலான அவைதீக நூற்களும் பொருத்தமான முறையில் மேற்கோள் காட்டப் பெற்றுள்ளன. “கொடுவதாம் பொருள் செல்வமே பல்வகைக் / கிலேசப் பற்றது தன்னை / விடுவதே சுகமெனவும் ஓர்ந்தநிலை” (பாடல் : 5) என்ற மூலப் பகுதிக்கு மிகப் பொருத்தமான கீழ்வரும் திருக்குறளை மேற்கோள் காட்டுகின்றார், உரையாசிரியர்.

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் / அதனின் அதனின் இலன்” நூலின் முகப்புப் பக்கத்திற்குப் பின்புறமுள்ள பக்கத்தில் இடம் பெற்றுள்ள விளம்பரத்தில் தெலுங்கு வல்லாளராஜன் எக்ஷகான மொழி பெயர்ப்பு, அருணாசல புராண தீபதரிசன சுருக்கம், கடிகை முத்துப்புலவரின் திக்குவிசயம், கம்பரின் செம்பொற்சிலையெழுபது ஆகிய நூற்கள் கல்விப் பிரவாக அச்சுக்கூடத்தில் விற்பனைக்கு உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தலிங்க சுவாமிகளின் ‘கொலை மறுத்தல்’ நூல், ஆறுமுக நாவலரின் சிதம்பர சைவப் பிரகாச வித்தியாசாவை தரும பரிபாலகர் விசுவநாதபிள்ளையால் ஏழாம்பதிப்பாக வெளியிடப் பெற்றுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைவ சமய சாத்திர நூல்கள் விரிவான மீள் வாசிப்பிற்குள்ளானதையே இத்தகைய வெளியீடுகள் உறுதிப்படுத்துகின்றன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com