Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

மதிப்புரை

பெரியாரின் வலதுகரம்
கி. வீரமணி

‘சிந்தனைச் சிற்பி’ என்று நம் அனைவராலும் அழைக்கப்படக்கூடிய சிங்காரவேலர் அவர்களைப் பற்றி மூன்று நூல் தொகுப்புகளைத் தொகுத்து காலம் காலமாக நமக்கு நிலைக்கக் கூடிய வகையிலே பேராசிரியர் முத்து குணசேகரன் அவர்களுடன் புலவர் பா. வீரமணி அவர்கள் இணைந்து மிகச் சிறப்பாக இந்தப் பணியினைச் செய்திருக்கிறார்கள்.

சிங்காரவேலர் அவர்களுடைய கருத்துக்களை உலகெங்கும் பரப்பக்கூடிய ஒரு சிறப்பான பணியினை இந்த நூல் மூலம் செய்து இருக்கிறார்கள். எப்பொழுதுமே நம்முடைய பாரம்பரியத்திற்கு, நம்முடைய மக்களுக்கு ஒன்றைச் சொல்லுகின்றோம். வேரை மறந்து விடக்கூடாது. ஆங்கிலத்திலே ரூட் (சுடிடிவ) என்று சொல்லுகின்றார்களே அதை நாம் மறந்து விடக்கூடாது. வருகின்ற தலைமுறையினர் எவ்வளவு பெரியவர்களாக வாழ்ந்தாலும் கூட வேரைப் பாதுகாக்க வேண்டும்.

அந்த வேர் பட்டுப் போகாத வேராக இருந்தால் இலையுதிர் காலத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. வேர் பட்டுப் போகாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார், சிங்காரவேலர் ஆகியோர் சிந்தனைகளைப் பட்டுப்போகாமல் நாம் காத்து வருகிறோம். இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்ற பெருமை பெற்றவர் சிங்காரவேலர் அவர்கள். நம்முடைய நாகை முருகேசன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்திலிருந்து வந்தவர்.

ஏ.எஸ்.கே. அய்யங்கார் அவர்களை அறிந்திருப்பீர்கள். அய்யங்கார் என்று பெயர் இருப்பதற்குச் சங்கடப்பட்டு பெயரையே கெசட் மூலம் விளம்பரப்படுத்தி அதைவிட்டு விட்டு வந்தவர். துறைமுகத் தொழிலாளர்களின் தலைவராகத் திகழ்ந்தவர். தந்தை பெரியாரிடமும், சிங்காரவேலரிடமும் மிகுந்த மரியாதை கொண்டவர். ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா.” என்ற நூலை அய்யா அவர்களுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்களை அழைத்து, எங்களைப் போன்றவர்களை அழைத்து அந்த நூலை வெளியிடச் செய்தார்கள்.

இந்தியத் தத்துவஞான விமர்சனம் என்ற புத்தகத்திலே தந்தை பெரியார், சிங்காரவேலரின் படத்தையும் பிரசுரம் செய்து, ‘அர்ப்பணம்’ செய்திருந்தார். ம. சிங்காரவேலர் பெரியாரின் வலதுகரமாக இருந்து, ஜாதி, மத, மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்துத் தமிழகத்தில் பேரியக்கத்திற்கு வித்திட்டவர் என்று எழுதி நூலை காணிக்கையாக ஆக்கியிருக்கிறார்.

இந்தக் காணிக்கையாக்கியதற்கு என்ன காரணம் என்பதை விளக்கிக் கொண்டு வருகின்ற போது “தோழர் எஸ்.ஏ. டாங்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் 1937-ல் சென்னைக்கு வந்து தொழிற் சங்க இயக்கத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வழிகாட்ட வந்தார். தோழர் ம. சிங்காரவேலர் அவர்கள் எங்களை அழைத்துக் கொண்டு தினசரி மாலை 2/65 பிராட்வே அலுவலகத்திற்கு வந்து சந்திப்பதும், ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடும் இடமும் அதுவே. அந்த அலுவலகத்தில் தங்கி உரையாடி அறிவுரை வழங்கிச் செல்வது வழக்கம். என் மீது அவருக்குத் தனி அன்பு.

அச்சுத் தொழிலாளர்களுடைய பொதுச் செயலாளராக நான் இருந்தேன். ஒரு நாள் அச்சுத் தொழிலாளிகளுடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்றோம். தோழர் ம. சிங்காரவேலர் வழக்கறிஞர் உடையோடு குறுக்கிட்டார். அவரை அணுகி வணக்கம் என்றேன். உடனே என்னை கட்டி அணைத்துக் கன்னத்தைக் கடித்துவிட்டு இங்கு எதற்காக வந்தாய்? என்று என்னை வினவினார். எனக்கு வந்த கோபம் கொஞ்சம் நஞ்சமல்ல. அச்சுத்தொழிலாளர்களின் தலைவரான என்னை தொழிலாளர்களின் முன்னிலையிலே அவமானப்படுத்தி விட்டார் என்ற எண்ணம் ஒருபுறம். அன்று மாலை டாங்கேயிடம் புகார் செய்தேன்.

சின்ன வயதிலே கட்சி மீது உனக்கு உள்ள துடிப்பையும் உணர்வையும் கண்டு சிங்காரவேலருக்கு உன் மீது அவ்வளவு அன்பு. ஆகவேதான் கடித்து விட்டார் என்று டாங்கே விளக்கம் சொன்னார்.

என் இதயம் கவர்ந்த ஒருவரும், தலை சிறந்தவருமான தோழர் சிங்காரவேலர் என்பால் கொண்ட அன்பை வலியுறுத்தவே எழுதினேன். அவர் அன்புக்கு எதைச் செய்தாலும் ஈடாகாது என்றாலும் இச் சிறுநூல் அம்மாபெரும் சிந்தனையாளருக்கு ஒரு சிறு காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன் என்று ஏ.எஸ்.கே. எழுதி இருக்கிறார்.

ஹிரேன் முகர்ஜி தன்னுடைய ஒரு ஆங்கில நூலில் பின் வருமாறு குறிப்பிடுகிறார். ‘இன்னும் இரு நூறு ஆண்டுகள் கழித்து இந்தியாவினுடைய வரலாறு எழுதப்படுமேயானால், அதிலே மற்றத் தலைவர்களுடைய குறிப்புகள் இருக்கிறதோ, இல்லையோ, இரண்டு பேரைப் பற்றித்தான் குறிப்புகள் இருக்கும். ஒருவர் பெரியார். இன்னொருவர் சிங்காரவேலர்.

இந்நூலின் மூன்றாம் தொகுதியில் அத்தியாயம் 164-இல், பக்கம் 1553-ல் சொல்லில் கொடுங்கோன்மை என்ற தலைப்பில் ‘கடவுள், ஆன்மா, உயிர், நரகம், மோட்சம் முதலிய மாயை சொற்கள் மனிதனுடைய சொல்லின் திறமையால் உண்டான வைகளே ஒழிய கண்ணால் பார்க்கும் பொருளல்ல. மற்ற இந்திரியங்களிலாகிலும், தன் அனுபவத்தால் வந்தவைகளல்ல. பேசும் சக்தி மனிதனுக்கு வந்திராவிட்டால் இந்தச் சொற்கள் உலகில் தோன்றியே இருக்காது. மனிதனுக்கு முன்பாக பல கோடி வருஷங்களுக்கு முந்தி உலகில் தோன்றிய சீவன்களெதற்கும் இந்த மாயை சொற்கள் கிடையாது.” இதைப் பார்க்கும் போது மனிதர்களுக்கு மட்டும்தான் கடவுள், மிருகங்களுக்குக் கிடையாது என்பது மிகப் பெரிய ஆய்வுக்குரிய செய்தி என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

இதே தொகுதியிலே ஒரு தலைப்பு இரண்டுமுறை அச்சாயிருக்கின்றது. ஒருவேளை வலியுறுத்த வேண்டும் என்று போட்டார்களா? அல்லது வேறு வகையிலே வந்ததா? என்பது தெரியாது. ஒருமுறை அல்ல, இரண்டு முறை சொன்னால்தான் கட்டாயம் மனதிலே பதியும். தவறுதலாக இருந்தால்கூட நல்லது என்ற முறையிலே எடுத்துக்கொள்ள வேண்டும். சிங்காரவேலரின் தொகுதி இரண்டில் அத்தியாயம் 77-ல் பக்கம் 898-இல் “குடிஅரசு” ஒன்பதாம் ஆண்டின் வைபவம் சமதர்ம விஜயம்” என்ற தலைப்பில் “சமதர்மமே தருமம். மற்றெல்லாம் அதர்மம் என்போம். உலக சமாதானத்திற்கு வழி சமதர்மம் வழி வகுக்கும். வலியவர்க்கும், எளியவர்க்கும் ஒரே நீதி கிடைக்குமிடம் சமதர்மம்.

உலக மக்களுக்கு எல்லாம் உண்ண, உடுக்க, வசிக்கக் கிடைப்பது சமதர்மம். ஜாதி மத சண்டைகள் அற்ற இடம் சமதர்மம். சோம்பலற்ற இடம் சமதர்மம். வீண் வியர்த்த செலவுகள் அற்ற இடம் சமதர்மம்’ என்கிறார்.

இது மட்டுமல்ல. இன்னொரு சுவையான செய்தி இத்தொகுப்பில் ஒன்றாவது தொகுதியில் 538ஆம் பக்கத்தில் உள்ளது. ‘இன்னொரு விஷயம்-நமது நிருபர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ரங்கூன், கொழும்பு, கோலாலம்பூர் முதலிய இடங்களிலிருந்து சில தோழர்கள் தாங்கள் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கப் போவதாகவும் அதற்கு விஷயங் களை எழுத வேண்டும் என்றும் கேட்கிறார்கள். என்னுடைய வயதும், திரேக வன்மையும், நமது நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி விடவில்லை.

மேலும் நமது ‘குடிஅரசு’ ஒன்றை ஆதரித்தாலே போதுமானதென்று எண்ணுகின்றேன். மேல் நாட்டில் ஒவ்வொரு பத்திரிகையும் லட்சக்கணக்காகச் செலவாக நமது நாட்டில் பத்தாயிரத்துக்குக் கூட இடமில்லை. இந்த நிலைமையில் ஊருக்கு ஒரு பத்திரிகை ஆரம்பிப்ப தென்றால் அது வீண் எனத் தோன்றுகிறது. இதனை நமது நிருபர்கள் கவனிக்க வேண்டும் என்கிறார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தந்தை பெரியாரோடும், குடிஅரசு இதழோடும் எவ்வளவு ஒன்றிப்போயிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளமுடிகிறது. ஒரு பக்கம் பொதுவுடமை தத்துவம், இன்னொரு பக்கம் சமதர்ம விளக்கங்கள் இன்னொரு பக்கம் சுயமரியாதை என்று வாழ்ந்தவர்.

சுயராஜ்யமா? சுயமரியாதை ராஜ்யமா? என்ற கேள்விக்கு ‘சுயராஜ்யம் என்று நீங்கள் சொல்லும் பொழுது அது ராமராஜ்யமா? அது வருணாசிரம தர்மராஜ்யம். அது எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கக் கூடிய ஆட்சி அல்ல. ஆகவே சுயமரியாதை ஆட்சிதான் வேண்டும். சமதர்ம ஆட்சிதான் வேண்டும்’ என்று ஒரு நூலிலேயே சிங்காரவேலர் எழுதி இருக்கிறார். மூடநம்பிக்கைகளை, சாடி விஞ்ஞானத்தை விளக்கி அறிவார்ந்த கருத்துக்களை எடுத்துச் சொன்னவர்.

நம்முடைய தலைவர்கள் அடித்தளத்திலே பிறந்தவர்கள். இது வரலாற்று உண்மை. அதே நேரத்தில் அந்தத் தலைவர்கள் ஏதோ அவர்களுக்கு மட்டும்தான் உரிய தலைவர் என்பது போல அந்த வட்டத்திற்குள்ளே அவர்களை அடைத்து விடுவது என்பது அவர்களுக்கு நாம் செய்கின்ற பெரிய துரோகம். இந்தச் செயல் தவறானது.

அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்தவராக இருக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அவர் தலைவரல்ல. அனைத்து மக்களும் அம்பேத்கர் தலைவர். புரட்சிச் சிந்தனையாளர் என்று நாம் சொல்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல மீனவர் சமுதாயத்திலே சிங்காரவேலர் பிறந்திருந்தாலும் அவர் மீனவ சமுதாயத் தலைவர் என்ற வட்டத் துக்குள்ளே அடைத்து விடக்கூடாது. இவர் இந்தியாவிற்கே, ஏன் அகில உலகத்திற்கே வழி காட்டியாக இருக்கக் கூடியவர்.

எனவே பெரியார், அம்பேத்கார், சிங்காரவேலர் ஆகிய தலைவர்களைப் பின் பற்ற வேண்டும். அப்படிப்பட்ட நிலையிலே வேர்கள் பழுதுபட்டு விடக் கூடாது. வேரைப் பார்த்துத்தான் மரத்தை நிச்சயிக்க வேண்டுமே தவிர, வெறும் இலைகளைப் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி : விடுதலை

சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம்
தொகுப்பாசிரியர் : முத்து. குணசேகரன், பா. வீரமணி. வெளியீடு : தென்னிந்திய ஆய்வு மையம்,
42 ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014, விலை : ரூ. 750.00.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com