Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

கட்டுரை

படிக்கும் பழக்கம்
என்.ஆர்.சுப்பிரமணிய ராஜா

படிக்கும் பழக்கம் :

நாட்டின் மிகப்பெரிய சொத்தாக இன்று இருந்து வருவது மனித வளம். அம்மனித வளத்தை மேம்படுத்துவது கல்வி. கல்வி என்பது ஒரு தொடர் நிகழ்வு. பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சிறந்த கல்வியைப் பெறப் படிக்கும் பழக்கம் தேவை. படிக்கப்படிக்க வேகமாகப் படிக்கின்ற பழக்கம் உண்டாகிறது. அதுவே படிப்பாற்றலாக மாறுகிறது. படிப்பதால் வார்த்தை வளம் பெருகுகிறது. கருத்து வளம் கூடுகிறது. பேசுகின்ற பொழுதும் தெளிவோடு பேச முடிகிறது.

“சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் / நாப்பழக்கம், வைத்ததொரு / கல்வி மனப்பழக்கம்” என்ற ஒளவையின் வரிகளுக்கேற்பப் படிக்கும் பழக்கத்தினை வளர்க்க வேண்டும்.

தேச விடுதலைக்காகச் சிறை சென்ற உன்னத சிற்பிகள் சிறையின் கொடுமைகளை மறக்கப் படிப்பதிலே மனதைச் செலுத்தினார்கள். பிரயாண நேரங்களில் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் பலரிடையே அதிகமாக உள்ளது. தனிமையை இனிமையாக்க நல்ல புத்தகங்கள் பயன்படுகின்றன. அருமையான பழங்கள் அளிக்க முடியாத இனிய சுவையை நல்ல புத்தகங்கள் அளிக்கிறது.

அக்பர் காலத்தில் முல்லா என்ற சிறுவன் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து இறுதியில் அக்பர் அவையில் இடம் பெற்றான். 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக நாட்டு மன்னர் அப்துல் காசிம் இஸ்மாயில் ஒரு புத்தகப் பிரியர். 1,17,000 புத்தகங்கள் அவர் நூலகத்தில் இருந்தன. படையெடுப்புக் காலங்களில் அதில் பல புத்தகங்களையும் உடன் எடுத்துச் செல்வாராம். 400 ஒட்டகங்கள் புத்தகங்களை எடுத்துச் செல்ல, நூலக அதிகாரிகளும் உடன் செல்வதோடு, மன்னர் கேட்கும் நூலை எடுத்து தருவார்களாம்.

உலக வரலாற்றின் மாற்றங்களுக்குப் பல புத்தகங்கள் தான் வித்திட்டன. கார்ல்மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” என்ற நூல் உலகப் பொருளாதாரத்தின் அடிப்படையையே மாற்றி உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரின் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அடிமைகளாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த உலகின் கருப்பு இன மக்களை நாமும் மனிதர்கள்தான், நமக்கும் வாழ உரிமைகள் உண்டு என்று உணரச் செய்தது. அவர்கள் வாழ்வை மீட்டுத் தந்தது “அங்கிள் டாம்” என்ற நாவல்தான்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் வாழ்வில் ஒரு கனத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றம் நிகழ்த்திய நூல் “அண்டு திஸ் லாஸ்ட்” கடையனுக்கும் கதிமோட்சம் என்பதாகும். குஜராத்தியில் “சர்வோதயம்” என்று மொழி பெயர்த்தார். தனது ஆழ்மனத்துக் கருத்துக்கள் யாவும் ரஸ்கினின் நூலில் எதிரொளிக்கக் கண்டார். எனவே தான் அந்த நூல் தன்னை ஒரேயடியாகக் கவர்ந்தது என்கிறார். தனது வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்று கூறுகிறார். புத்தகங்களின் சாதனைகள் புத்துலக விடியலுக்குக் கதவுகளைத் திறந்து விடும் என்பதை வரலாறுகள் நிரூபித்துள்ளன.
படிக்கத் தெரியாதவனை மரம் என்றார் ஒளவையார்.

படிக்காதவன் உடம்பு பாழ் என்றார் விளம்பி நாகனார்.

- கற்றறிந்த அறிஞர்கள் இப்படிச் சொல்லியது கடுமையான வசைபாடுதல் அல்ல ஐயோ இப்படி படிக்காமல் வாழ்கிறார்களே என்று நினைத்து வருந்தி நெஞ்சம் இறங்கி அனுதாபப்பட்டுக் கூறினார்கள். புத்தகங்கள் இல்லாத வீடு “புதைகாடு” என்றார் பண்டித நேரு அவர்கள். எந்த வீட்டில் புத்தகங்கள் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது என்று கூறினார் பிளேட்டோ.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்றார் ஒளவை பாட்டி “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அறிஞராகத் திகழ்ந்த மாமன்னர் அதிவீராம பாண்டியர்.

ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து. ஒரு மனிதன் படித்தால் அவனது அறிவு ஏழு தலைமுறைகளுக்கும் வழிவழியாக பயன்படும் என்ற திருவள்ளுவர், ஒரு மனிதன் எப்படித்தான் சாகும் வரைக்கும் படிக்காமல் இருக்கிறான் என்று வியக்குகிறார். “காலை எழுந்தவுடன் படிப்பு” என்று பாரதியார் ஒவ்வொரு நாளையும் படிப்போடு துவக்கு என்று பறைசாற்றுகிறார். கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது ஒரு பழமொழி. நல்ல நூல்கள் கிடைத்த இடத்திலெல்லாம் விடாது படிக்கப் பழகிக் கொண்டால் ஒரு பெரும் புலவரைப் போல அறிவைப் பெறலாம் என்பதே இதன் கருத்து. மனிதனை உயர்த்துவது பணமன்று, பதவியன்று, குலமன்று, பருமனன்று, உயரமன்று, அறிவு ஒன்றுதான். அந்த அறிவைப் பெறப் படித்தல் அவசியம். கற்றனைத்து ஊறும் அறிவு என்றதும் இதனையே, படிக்கப் படிக்க அறிவு வளரும். அதனை பிறர்க்குச் சொல்ல சொல்ல மேலும் விரியும். இந்தச் சிறப்பு கல்விச் செல்வத்திற்கு மட்டுமே உரியது.

கல்வியின் அளவு :

“கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு” என்பது முதுமொழி. கல்வி கரையில கற்பவர் நாள் சில என்றார் புலவர் ஒருவர். 1938-ம் ஆண்டு நெல்லை இந்துக் கல்லூரியில் மாடிப்பகுதியில் தமிழ் அன்பர்கள் முதுபெரும் புலவர் வெள்ளைக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்களின் 80வது பிறந்தநாள் விழாவை வெகுச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். அந்த விழாவிற்குத் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் தலைமை தாங்க வந்தார்கள். மாடிக்கு ஏறும் போது உடன் வந்த தமிழறிஞர் பாஸ்கர தொண்டைமான் “படி, படி” என்று எச்சரித்துக் கொண்டே வந்தார். சில படிகள் ஏறியதும் சிறிது தூரம் சமமாக தளம் இருக்கும். பிறகு மீண்டும் படிகள் கட்டப்பட்டிருக்கும். அந்தப் பகுதி வந்ததும், “இன்னும் படி, இன்னும் படி” என்று தொண்டைமான அவர்கள் சொல்லி அழைத்துப் போனார்கள்.

தலைமை உரை நிகழ்த்தும் போது தமிழ்த் தாத்தா நான் எவ்வளவோ படித்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கு மாடிக்கு ஏறி வரும்போது உடன் வந்த இளைஞர் “இன்னும் படி, இன்னும் படி” என்று சொன்னதும் தான் இன்னும் நான் படிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்று சொன்னார்.

இதிகாச நூல்கள், இலக்கிய நூல்கள், வரலாற்று நூல்கள், பொருளாதார நூல்கள், அறிவியல் நூல்கள், தத்துவ நூல்கள், தற்காலக் கவிதை நூல்கள் இவற்றை முறையாகப் படிப்பதனால் உலகத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. பிறரிடம் எப்படிப் பழக வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அதனால் எப்படி வாழ வேண்டும் என உணர்ந்து முன்னேற முடிகிறது. ஒரு நாட்டின் நாகரீக வளர்ச்சிக்கு அளவுகோல் என்ன? அங்கு எவ்வளவு பேர் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதே தான்.

படிப்பு மனிதனின் அஞ்ஞான நோயை நீக்குகிறது. மெய்ஞ் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் வளர்க்க உதவுகிறது. படிப்பு என்பதே ஒரு அழகு ஆகும். அது இல்லாநிலை இழிவு ஆகும். மூலிகைகளால் இரும்பும் பொன்னாவது போல் புத்தகங்களால் மனிதன் புனித நிலையடைகிறான். நூல்களால் அடையும் பயன்கள் அளவில்லாதவை. அத்தகைய நூல்களைப் படிக்க நமக்கு நூல் நிலையம் அவசியம் தேவையாகும்.

நூலகம் என்பது ஒருவன் வாழ்நாள் முழுவதும் கற்பதற்கு நுழைவாயில். நூலகத்தை ஒருவன் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால் அவன் பெறுகின்ற ஆற்றல், அவன் பெறுகின்ற தெளிவு, ஞானம் நாம் எத்தனை ஆசிரியர்களை வைத்திருந் தாலும் அவர்கள் மூலமாக கொடுக்க முடியாது. நூலகத்தைப் பயன்படுத்துவது பள்ளி வயதிலே தொடங்க வேண்டும்.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவியல் அறிஞர்கள், பெரிய தொழிலதிபர்கள் ஆகிய யாவரையும் உங்களுக்கு வழிகாட்டியாக, எதிர்கால நோக்குடையவர்களாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருந்தது எது என்று கேட்டால் நூலகம் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட நூலகக் கல்விக்கு நாம் நமது பள்ளிப் பிள்ளைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஒரு மாணவன் ஒரு புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துப் படிக்கின்றபொழுது பாடப்புத்தகத்தை படிப்பது போல இங்கும் அங்கும் கோடிட்டுக் கொண்டு படிப்பதில்லை. முதல் பக்கத்தில் தொடங்கி இறுதி பக்கம் வரை படிக்கிறான். படித்ததை அவன் மனதிலே நிறுத்திக் கொள்கிறான்.
மு.வ. போன்ற சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய கதைகளைப் படிக்கின்ற பொழுது அதில் வருகின்ற நல்ல கதாபாத்திரத் தினுடைய பண்புகள் அவன் மனதிலே பதிகின்றன. வாழ்நாள் முழுவதும் தாக்கம் இருக்கின்றது. அவனை நல்ல மனிதனாக, நல்ல குடிமகனாக நடைபோடச் செய்கிறது. நிலம் வைத்திருந்தால் மட்டும் போதாது பயிர் செய்ய வேண்டும். விளைச்சலைக் கொண்டு பசி போக்கிக் கொள்ளவேண்டும். அதுபோலப் புத்தகங்கள் வாங்கினால் மட்டும் போதாது அவற்றைப் படித்தறிய வேண்டும்.

ஒரு நபர் ஓராண்டுக்குச் சராசரியாக 2000 பக்கங்களைப் படித்திருக்க வேண்டும் என்று “யுனெஸ்கோ” பரிந்துரை செய்கிறது.
நம் நாட்டில் ஒரு நபர் சராசரியாகப் படிப்பது 32 பக்கங்களைத்தான். இது சராசரி விகிதம்.

தொடக்கத்தில் படிப்பறிவில்லாத நெப்போலியன் பிற்காலத்தில் புத்தகப் புழுவாகவே மாறினார். சோவியத் யூனியனுக்குப் படையெடுத்துத் திரும்பிய நெப்போலியன் அங்கிருந்து கொண்டு வந்தது பொன்னையோ பொருளையோ அல்ல. லட்சக்கணக்கான புத்தகங்களைத்தான்.
நெப்போலியனின் நூலகத்தில் இருந்த அனைத்து மொழி நூல்களுள் “கம்ப இராமாயணமும்” ஒன்று.

இன்று படிக்கும் பழக்கம் குறைந்ததேன்?

மக்களின் ரசனை, மொழி பற்று, சிந்தனைகளின் கோணங்கள் ஒரு மாறுபட்ட திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். கேபிள் டிவிக்களின் கவர்ச்சியால் தாத்தா, பாட்டிகளின் பொறுப்பும் அகன்றது. அம்மாவும் சம்பாதிக்க கிளம்பிய பின் பெற்றோர் பொறுப்பும் கை நழுவியது. அரவணைப்புக்கு ஏங்கி நிற்கும் குழந்தைகளைக் கார்ட்டூன் சேனல்களும், வீடியோ கேம்களும் அடிமையாக்கி விட்டன. தாங்குவோரும், வாங்குவோரும் இன்மையால் அரிய சிறுவர் பத்திரிகைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகி யுள்ளது. பொழுது போக்கு என்றாலே தொலைக்காட்சியும், கார்ட்டூன் சினிமாவும்தான் என்ற எண்ணத்தை மாற்ற முயல வேண்டும். படிப்பதில் ஆர்வம் காட்டக் கூடிய நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். எனவே படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வோம்.

தங்கள் வாழ்க்கையை விடவும் புத்தகங்களைப் பெரிதும் விரும்பும் மக்கள் இருக்கிறார்கள். எத்தனையோ இடர்களுக் கிடையில் தாம் விரும்பும் நூல்களை அவர்கள் பாதுகாக் கிறார்கள். இன்று தரமான நூல்கள் வெளி வருவதில்லை. விலை அதிகமாக இருக்கின்றது. தரமான புத்தகங்கள் வெளிநாடுகளில் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வேண்டும். அதுவே குறிக்கோளாய் இருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். சிறு கிராமங்களில் கூட நூலக வசதி உள்ளது. படிக்கும்பொழுது நுனிப்புல் மேய்ந்தது போல் இல்லாது முனைப்போடு படிக்க வேண்டும்.

விஞ்ஞான அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ள இந்நாளில் இளைஞர் மனதை வேறு திசைக்கு மாற்றுவதற்கு உரிய சாதனங்கள் அதிகமாக வந்து விட்டன. இதனால் இளைஞர்களுக்கிடையே படிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்தத் தடைகள் எல்லாம் நீக்கி வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டுமானால் இளைஞர்கள் படிக்கும் பழக்கத்தைக் கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆர்வம் உண்டாவதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இளைஞர்களுக்குப் படிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை மேற்கோளுடன் சிறு சிறு கதைகள் மூலம் விளக்கலாம். அறிஞர் அண்ணா சென்னையில் கண்ணிமாரா நூலகத்தில் உள்ள 90 சதவீத நூல்களைப் படித்திருப்பதாக அறிய முடிகிறது. அதுபோல் சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் லண்டன் பல்கலைக் கழக நூலகத்தைத் தவறாமல் பயன்படுத்தியமையால் இந்திய அரசியல் அமைப்பை நமக்கு தெளிவாக அமைக்க முடிந்தது.

பஞ்ச தந்திரக் கதைகளில் புதைந்துள்ள நமது பண்பாடு, கலாசாரம், நெறிமுறைகள், படித்தல் மூலமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இவைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை என்றால் காலப் போக்கில் அழியக் கூடிய அபாயம் உள்ளது. அதாவது வளர்ந்து வரும் விஞ்ஞானம் படிக்கும் பழக்கத்தைக் குறைக்கிறது. உலகை ஒழுங்கு முறையில் இனிது நடத்தி வரும் அமைப்புகள் பலப்பல. அவைகளுள் உயிர்ப்பாய் திகழ்வது ஒன்று அது நூல் என்பது. எனவே நூல் பல கற்று வாழ்வில் முன்னேறுவோமாக.

“காலம்” என்னும் ஆழ்கடலை நீந்துவதற்கு அறிவு என்னும் துறைமுகத்தை அடையக் கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளதைச் சிறந்த அறிஞர்களின் உயர்ந்த நூல்களே என்றார் “கவி தாகூர்”, புதிய உலகை உருவாக்கும் புரட்சி நூல் களையே வாசிக்க வேண்டும். தினமும் சுவாசிக்க வேண்டும்.

காகிதமில்லாச் சமுதாயம் உருவாகி வரும் இந்நிலையில் மக்கள் வாங்கக்கூடிய விலையில் புத்தகங்களைத் தயாரிக்கப் பதிப்பாளர்கள் வழிவகைகளைக் கண்டறிந்தால் அதுவும் புத்தக வாசிப்பை அதிகரிக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com