Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

கட்டுரை

ம. சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா
முத்து. குணசேகரன், புலவர் பா. வீரமணி

பேராசிரியர் முத்து. குணசேகரன், புலவர் பா. வீரமணி இருவரும் இணைந்து அரிதின் முயன்று தொகுத்த ம. சிங்காரவேலரின் அனைத்துக் கட்டுரைகளும், பேச்சுக்களும் அடங்கிய ‘ம. சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம்’ மூன்று தொகுதிகளைக் கடந்த 24-3-2007 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார்கள். தென்னக ஆய்வு மையமும், நியூ செஞ்சுரி புக் ஹவுசும் இணைந்து கலைவாணர் அரங்கத்தில் நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பின்னர் நியூ செஞ்சுரியின் பொது மேலாளர் திருமிகு துரைராஜ் அவர்கள், தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞரையும் மற்றும் சிறப்பு விருந்தினர்களையும், களஞ்சியத் தொகுப்பாசிரியர் களையும் விழாவிற்கு வருகை புரிந்த பெருமக்களையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்கள். நூல் பதிப்பாசிரியர் திருமிகு ஆர். பார்த்தசாரதி அவர்கள் விழாவில் முன்னிலை ஏற்றார்கள்.

வரவேற்புக்குப் பின் சிந்தனைக் களஞ்சியத் தொகுப் பாசிரியர்களான திரு. முத்து. குணசேகரன் அவர்களுக்கும், புலவர் திரு. பா. வீரமணி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ‘ம. சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம்’ மூன்று தொகுதிகளை வெளியிட, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் திரு. தா. பாண்டியன் அவர்களும், மார்க்சிஸ்டுக் கட்சியின் தலைவர் திரு. என். வரதராஜன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

இவர்களையடுத்து மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமியவர்களும், மங்களூர் துறைமுகத் தலைவர் திரு. பொன் தமிழ்வாணன் அவர்களும், கல்வி வள்ளல் திரு. ஏ. சாமிக்கண்ணு அவர்களும், சென்னைத் துறைமுக அதிகாரி திரு. பெ. முத்து அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களாகிய திரு. உ. பலராமன் அவர்களும், திரு. இரா. மதிவாணன் அவர்களும், டாக்டர் திரு. ஜெயச்சந்திரன் அவர்களும், கவிஞர் திரு. சே.வை.ரா. சிகாமணி அவர்களும், திரு. என். கந்தசாமி அவர்களும், திரு. கு. நற்குணன் அவர்களும் நூல் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவிற்கு இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஆர். நல்லகண்ணு அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்கள். அவர் தமது தலைமை உரையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தொடக்க காலத்தில் தேசிய இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுப் போராடியவர் என்றும், குறிப்பாக ஒத்துழையாமை இயக்கத்தின்போது காந்தி அடிகளின் அறிவுரையை ஏற்றுத் தம்முடைய வழக்கறிஞர் அங்கியைத் தீயிட்டுக் கொளுத்தி, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக ஒத்துழையாமையைத் தொடங்கினவர் என்றும், பிற்காலத்தில் ஒரு சமதர்மவாதியாக உருப்பெற்றுத் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டாகத் தோன்றினார் என்றும், சாதிமத வேறுபாடுகளையும், மூட நம்பிக்கைகளையும் ஒழிக்க விஞ்ஞான பூர்வமான விளக்கங்களைத் தந்தவர் என்றும் கூறினார்.

இத்தகுச் சிறப்பு வாய்ந்த சிந்தனiயாளரின் சிந்தனைகளைத் தொகுத்த தொகுப்பாசிரியர்கள் இருவருக்கும் பாராட்டையும் தெரிவித்தார். தேசிய இயக்கத்தில் முன்னணியில் நின்ற சிங்காரவேலர் பெரியாரோடு சுயமரியாதை இயக்கத்திலும் தீவிரமாகப் பங்காற்றியவர். தொடக்க காலத்தில் அயோத்திதாஸ் பண்டிதருடன் இணைந்து பௌத்த சங்கத்தை நிறுவி, பௌத்த சிந்தனை களையும் சிங்காரவேலர் பரப்பி வந்தார் என்று அவர் கூறினார்.

முதல் நூலைப் பெற்றுக்கொண்ட தோழர் திரு. தா. பாண்டியன் அவர்கள் தம் உரையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி என்றும், பல விஞ்ஞானக் கருத்துக்களைத் தமிழில் எழுதிய மிகச் சிறந்த சிந்தனையாளரென்றும், சிறந்த வழக்கறிஞராக விளங்கி வாதாடியதோடு மட்டுமன்றி மக்களின் உரிமைக்காகப் போராடிய மாபெரும் வீரரென்றும், இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொழிலாளர்களின் திருநாளான ‘மே நாளை’க் கொண்டாடியவரென்றும், தொழிற் சங்கங்களுக்கு முன்னோடியாக விளங்கிய தலைவரென்றும் பாராட்டினார்.

அடுத்து நூலினைப் பெற்றுக்கொண்ட திரு. என். வரதராஜன் அவர்கள், ம. சிங்காரவேலர் 1925இல் கான்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்டு மாநாட்டிற்குத் தலைமை வகித்த அரும்பெரும் தலைவரென்றும், 1923ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் முதன் முதலில் மே தினத்தைக் கொண்டாடியவ ரென்றும், கம்யூனிஸ்டு அறிக்கையைப் பெரியாரோடு இணைந்து தமிழகத்தில் முதன் முதலில் வெளியிட்டவரென்றும், மற்றும் 1922ஆம் ஆண்டிலேயே கயா காங்கிரஸ் மாநாட்டிலேயே பூரண சுதந்திரத்தைப் பற்றிய தீர்மானத்தை முதலில் கொண்டு வந்தவரென்றும், மீனவர் சமுதாயத்தில் பிறந்து, பகுத்தறிவுப் பாதையில் வளர்ந்து, மார்க்சிய சிந்தனையில் உயர்ந்து மாவீரனாக வாழ்ந்து மறைந்தாரென்றும் சிங்காரவேலர் சிறப்பைப் பாராட்டிக் கூறினார்.

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்தப் புரட்சி வீரனுக்கும் மற்றும் வீரதீர வரலாற்றிற்கு முத்திரை குத்தும் பெருமை மிகுந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் வரதராஜன் குறிப்பிட்டார்கள்!

வாழ்த்துரையாற்றிய திட்டக் குழுவின் துணைத் தலைவர் திரு. மு. நாகநாதன் அவர்கள் தம்முடைய உரையில் மூலதனத்தை மொழிபெயர்த்தவரும், தன்னுடைய மாமனாருமான சுதந்திரப் போராட்ட வீரரான ஜமதக்கினி அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறையில் இருந்தபொழுதுதான் சிங்காரவேலரைத் திருச்சி சிறைச்சாலையில் சந்தித்தா ரென்றும், அதே சிறையில் மூதறிஞர் இராஜாஜி இருந்தாரென்றும், இராஜாஜி ஜமதக்கினியை நோக்கிப் பக்கத்தறையில் ஒரு கிழவர் இருக்கிறாரென்றும், அந்தக் கிழவர் அறைக்கு எக்காரணத்தைக் கொண்டும் செல்லாதீர் என்றும், அப்படிச் சென்றுவிட்டால் அவர் உமக்கே மார்க்சிச விஷத்தை ஊட்டிவிடுவாரென்றும் எச்சரித்தார் என்றும் கூறினார்.

இருப்பினும் ஜமதக்கினி அவர்கள் இராஜாஜியின் பேச்சைக் கேட்காது சிங்காரவேலரைச் சந்தித்து நாள்தோறும் உரையாடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தாரென்றும், அந்தப் பழக்கத்தின் காரணமாகப் பின்னர் அவரிடம் மார்க்சிசத்தை முறையாகக் கற்றாரென்றும் கூறினார். மேலும் சிங்காரவேலர் சிறைச்சாலையில் இருந்தபொழுது நோயில் நலிந்து வாடியபொழுது ஜமதக்கினியே அவருக்குத் துணையாக இருந்து உதவினார் என்றும், சிங்காரவேலரிடம் கொண்ட பெரும் நட்பும், அந்நட்பின் காரணமாக அவர் பெற்ற சிந்தனை வளர்ச்சியின் காரணமாகவுமே பின்னாளில் காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தைத் தமிழில் முதன் முதலில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவராக அவர் ஆகினார் என்றும் அப்பெயர்ப்பை சிங்காரவேலருக்கே காணிக்கை ஆக்கினார் என்றும் மு. நாகநாதன் குறிப்பிட்டார்கள்.

மேலும் சிங்காரவேலர் ஒரு சிறந்த தலைவராக மட்டுமன்றித் தத்துவம், பொருளாதாரம், உளவியல், வானியல் ஆகிய துறைகளைப் பற்றி அக்காலத்திலேயே விளக்கிய பல்துறை மேதையென்றும் பாராட்டினார். மூடநம்பிக்கைகளைச் சமுதாயத்திலிருந்து வேரோடு களைய அறிவியல் பூர்வமான விளக்கங்களை அந்நாளில் அளித்தவர் சிங்காரவேலரே என்றும், அச்சிந்தனைகள் இக்காலத்திலும் பயன்படுவன வென்றும் அச்சிந்தனைகளை மேன்மேலும் பரப்புவதற்கு அரசும், மக்களும் துணைபுரிய வேண்டுமென்றும் நாகநாதன் கூறினார்.

அடுத்துப் பாராட்டுரை வழங்கிய திராவிடக் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தம் வாழ்த்துரையில் முற்போக்குக் கட்சிகள் பங்கேற்றுள்ள இந்த விழா கூட்டணியின் குடும்ப விழாவாகும் என்றும், இந்தக் கூட்டணி இப்போதைய அரசியல் சூழலில் மேலும் நீடிக்க வேண்டுமென்றும் கூறினார்.

இந்தச் சிந்தனைக் களஞ்சியத்தை வெளியிட்டபொழுது நூலைப் பெற்றுக்கொள்ள வந்தவர்களிடம் பணம் எங்கே என்று கலைஞர் கேட்டார். அவ்வாறு அவர் கேட்டது கலைஞர் பெரியார் வழியில் வந்தவர் என்பதை இந்நிகழ்வின் வாயிலாக உறுதி செய்கின்றார் என்று குறிப்பிட்டார். மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கும், விஞ்ஞான விளக்கங்களை அளிப்பதற்கும் சிங்காரவேலர் தந்தை பெரியாருடன் இணைந்து அரும்பணியாற்றினார் என்றும், மூடநம்பிக்கைகளைக் குறித்து உலகம் முழுமையுமுள்ள தமிழர்கள் எழுப்பிய வினாக்களுக்குக் குடியரசு மூலம் சிங்காரவேலர் விளக்க மளித்ததை உணர்வுடன் குறிப்பிட்டார்.

சிங்காரவேலரின் பெரும்பான்மையான கட்டுரைகள் பகுத்தறிவு, புரட்சி, குடியரசு ஆகிய இதழ்களில் வெளிவந்தன வென்றும், அக்கட்டுரைகள் அசைக்க முடியாத உண்மைகளை விளக்குவனவாகவும் இருந்தனவென்றும் குறிப்பிட்டார். இறுதியில் சிங்காரவேலரின் சொல்லின் கொடுங்கோன்மை எனும் கட்டுரையை எடுத்துக்காட்டிச் சொற்கள் மனிதனால் படைக்கப்பட்டனவென்றும், அச்சொற்களையும் காட்டு மிராண்டிகளாக இருந்து மனிதனாக மாறிப் பல நூற்றாண்டு களுக்குப் பின்னரே சொற்களைப் படைத்தானென்றும், அந்தச் சொற்களைக் கொண்டே மனித இனம் அஞ்சுகிறதென்றும் குறிப்பிட்டார்.

சைகையாலும், சத்தத்தாலும் மற்ற மிருகங்கள் தத்தம் செய்கைகளைக் காட்டுகின்றன. ஆனால் மனிதனோ தம் குறிப்புகளைச் சொற்களால் குறிப்பிடுகின்றான். கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம் முதலிய சொற்கள் மனிதனுடைய திறமையால் உண்டானவையே தவிர கண்ணால் பார்க்கக்கூடிய பொருள்களல்ல. பேசும் சக்தி மனுதனுக்கு வந்திராவிடில், இந்தச் சொற்கள் தோன்றியே இருக்காதென்றும், மனிதனுக்கு முன்பாகப் பலகோடி ஆண்டுகளுக்கு முந்தி உலகில் தோன்றிய எந்த மனித உயிர்களுக்கும், விலங்குகளுக்கும் இந்த மாயைச் சொற்கள் கிடையாதெனச் சிங்காரவேலர் எழுதியிருப்பதை அவர் எடுத்துக்காட்டினார்; ஆறறிவற்ற விலங்குகள் கடவுள், ஆன்மா, நரகம், மோட்சம் என்ற சொற்களைக் கண்டு அஞ்சுவதில்லை; நடுங்குவதில்லை. ஆனால் ஆறறிவு படைத்த மனிதனோ இந்தச் சொற்களைக் கேட்டவுடன் அஞ்சுகிறான். தான் உருவாக்கிய சொற்களுக்குப் பயந்து நடுநடுங்கித் தன் ஆயுள் முழுமையுமே சொற்களின் கொடுங்கோன்மைக்கு ஆளாகின்றான். கொடுங்கோல் அரசுகள் செய்யும் கொடுமைகளை விடப் பன்மடங்குக் கொடுமைகள் இந்த மூடச் சொற்களால் விளைகின்றன.

விலங்குகள் இந்தச் சொற்களுக்குச் சிறிதும் அஞ்சி நடுங்காமல் இருக்க மனிதன் மட்டும் சொற்களின் மூட நம்பிக்கைக்கு அஞ்சுவது எப்படிச் சரியாகும்? என்று சிங்காரவேலர் குறிப்பிட்டிருப்பதை மிகச் சிறந்த முறையில் தமக்கே உரிய பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி விளக்கினார்.

இறுதியாகச் சமதர்மமே உயர்ந்த தர்மமென்றும், மற்ற தர்மமெல்லாம் அதர்மம் என்று சிங்காரவேலர் கூறியதை கி. வீரமணியவர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் எடுத்துக் கூறித் தம் உரையை நிறைவு செய்தார்.

விழாவின் இறுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்கள். அது வருமாறு:

தமிழகம் சமுதாயத் துறையிலே, கலைத் துறையிலே, அரசியல் துறையிலே, தொழிலாளர்களை வாழவைக்கும் பணியிலே முற்போக்கான சமதர்ம பூமியாக மிளிரவேண்டும் என்பதுதான் நமது கனவு. அந்தச் சுயநலம் நிறைவேற சிந்தனையாளர் சிங்காரவேலரின் கருத்துக்கள் நமது இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் சென்று சேரவேண்டும்.

சட்டசபையிலே வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் சிங்காரவேலர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். சிங்காரவேலரின் நினைவு போற்றப்படும். அவருடைய புகழ் மேலும் மேலும் பரவிட ஆவன செய்யப்படும். அது அரசின் வாயிலாகவே நடத்தப்படும் என்று இயற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவருடைய கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பெரு முயற்சியிலும் அரசு ஈடுபடும் என்ற உறுதியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இன்றல்ல; நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சிங்காரவேலரின் கருத்துக் களைப் பரப்பும் பணியில் இளமைப் பருவத்திலேயே ஈடுபட்டேன்.

எனது இளமைக் காலத்தில் தந்தை பெரியார், சிங்காரவேலர், கைவல்யம் முதலானோர் எழுதிய பல கட்டுரை களைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். சிங்காரவேலரின் கருத்துக்களைப் பகுத்தறிவு, குடிஅரசு பத்திரிகைகள் மூலம் தினமும் படித்து வந்தேன். இப்போது சிங்காரவேலர் பற்றி 1000 பேரிடம் கேட்டால் 100 பேருக்குத்தான் தெரிகிறது. இதை வெட்கத்தோடு சொல்ல விரும்புகிறேன். 1000 பேருக்கும் சிங்காரவேலரைத் தெரியும் என்ற நிலை உருவாக வேண்டும். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தனது புத்தகத்தில், ‘சமதர்ம ஆட்சியில் வேலை செய்ய சக்தியுள்ள நாட்டு மக்கள் எல்லோருக்கும் வேலை உண்டாக்கி, அவர்கள் உணவுக்கும் வேண்டிய பொருள் கொடுக்கப்படும். உழைக்க முடியாத வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் உணவு கொடுத்து ஆதரிக்கப்படும். கர்ப்பமான பெண்கள் யாவருக்கும் இரட்சண்ணிய உதவி புரியப்படும்’ எனக் கூறியுள்ளார்.

நாம் இதையெல்லாம் செய்துவிட்டு இங்கு வந்து அமர்ந்துள்ளோம். அவருக்கும், நமக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு? ஆனால் இந்தக் கொள்கை ஆக்கத்தால், கொள்கை நிறைவேற்றத்தால் அவரோடு நாம் இப்போது வாழ்வது போன்ற உணர்வு அல்லவா ஏற்படுகிறது? சிங்காரவேலர் தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் என்பது தென்னகத்துக்கே பெருமை. சென்னையிலே பிறந்த சிங்காரவேலரின் பெயர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கும் சென்னையிலே ஒரு பகுதிக்கும் சூட்டப் பட்டுள்ளது. வெறும் பெயர்களை வைத்தால் மட்டும் போதாது. அவர் என்ன சொன்னார் என எண்ணிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

அவர் கிராமங்களெல்லாம் நகரங்களாக இருக்க வேண்டும் எனக் கருதினார். நானும் கிராமங்களையெல்லாம் நகரங்களாக ஆக்கவேண்டும் என்றுதான் எண்ணுகிறேன். நகரங்களின் வசதிகள் அனைத்தும் கிராமங்களுக்கும் வந்தாக வேண்டும். பெரியார், சிங்காரவேலர் போன்றவர்களின் கருத்துக்கள் மக்களிடம் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்த நோக்கிலே முந்தைய தி.மு.க. ஆட்சியில், சமூக சீர்திருத்த மன்றம் என்ற தனி இலாகாவே உருவாக்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் அது கலைக்கப்பட்டது. அந்த மன்றம் இப்போது மீண்டும் உருவாக்கப்படும். பேராசிரியர் நன்னன் அந்த அமைப்பின் தலைவராகச் செயல்படுவார் என்றார் கருணாநிதி.

நியூ செஞ்சுரி புத்தக பொறுப்பாளர்கள் நன்றி சொல்ல கூட்டம் நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com