Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

கட்டுரை

பெரியாரியமும் - பெண்ணியமும்
டி.செல்வராஜ்

இந்திய - உபகண்டத்திலும், தமிழகத்திலும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னும், நாடு அந்நிய ஆட்சியினின்றும் விடுதலை பெற்ற பின்பும் பெரும் சுயேச்சைக்கும், அவதூறுக்கும் ஆளான இரு பெரும் இந்தியத் தலைவர்கள், அண்ணல் அம்பேத்கார் மற்றும் பெரியார் ஈ.வே. ராமசாமி ஆகியவர்கள்.

இவர்கள் இருவரும் நாட்டு விடுதலைக்கு எதிரானவர்கள் என்றும், வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகள், கையாட்கள் என்றும் வெகுவாகத் தூற்றப்பட்டார்கள். ஆனால் பெரியார் இராமசாமியின் ஆரம்ப அரசியலே நாட்டு விடுதலை இயக்கம் அதற்குச் சான்று, இந்த நாட்டு விடுதலை இயக்கத்தில் மறக்கவும், மறைக்கவும் முடியாத அவர் நடத்திய வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டம்.

இவ்விரு தலைவர்களும், இந்து மதத்தினுடையவும், வைதீகத்துக்கும், வருணதர்மத்துக்கும் கடும் எதிரிகளாகத் திகழ்ந்தனர். மத வாதிகளும், சனாதனிகளும், இவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். நாக்கில் நரம்பின்றித் தூற்றவும் செய்தனர். ஆனால், இவர்களுக்கு எதிராக அமைக்கப்பட்ட வியூகம் உடைந்து நொறுங்கிப் போனது. ஏற்றுக்கொண்ட லட்சியத்தினின்று இம்மியும் பிறழாது, சாதிக் கொடுமைக்கு எதிராகவும், மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும், நாட்டு விடுதலைக்காகவும் விடாப் பிடியாகப் போராடினார்கள். அன்று அவர்கள் எழுப்பிய கேள்வி இன்று விஸ்வரூபம் கொண்டு நிற்கிறது. இந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் மறுக்க முடியாத பிரச்சினையாக உருப்பெற்று நிற்கிறது. பெண்விடுதலை, தலித் விடுதலை இல்லாமல் இந்திய சமூகத்தின் முழுமையான விடுதலை இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, உலக அரங்கிலும், இந்திய அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலிலும், இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பரிணாம மாற்றங்களையும் கணக்கில் கொண்டு, இவ்விரு தலைவர்களது கருத்துக்களும், சிந்தனைகளும், மறுவாசிப்புக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
அண்ணல் அம்பேத்காரின் எழுத்துக்களும், கருத்துக் களும் தொகுக்கப்பட்டது போன்று. பெரியார் இராமசாமியின் கருத்துக்களும், எழுத்துக்களும் இனியும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. பெரியாரின் எழுத்துக்கள் மட்டும் சுமார் 15,000 (பதினைந்தாயிரம்) பக்கங்கள் வரும் என்று பெரியாரின் சிந்தனைகளைத் தொகுப்பதை லட்சியமாகக் கொண்ட திரு ஆனைமுத்து குறிப்பிடுகிறார். பெரியார் நாடு விடுதலை ஆவதற்கு முன்னும், நாடு விடுதலை அடைந்த பின்பும், தமிழ் நாட்டு அரசியலிலும், சமூக இயக்கத்திலும் பெரும் பங்கு வகித்தவர்.

எனவே, பெரியார் இராமசாமி இந்தியச் சமூகச் சூழலிலும் அரசியலிலும் அவர் ஏற்படுத்திய தாக்கம் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும். அப்போதுதான் பெண்விடுதலை பற்றியும், தலித் விடுதலை பற்றியும் பெரியார் சொல்லியுள்ள மகா அதிர்ச்சி தரும் கருத்துக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும். காந்தியடிகள் பெண் விடுதலை மற்றும் தலித் விடுதலை என்கிற கோட்பாடுகளை வருணதர்ம சனாதனம் என்கிற சட்டக் கூட்டுக்குள் வைத்தே பார்த்தார். அவர்தான் ஒரு இந்து என்கிற கருத்தாக்கங்கள் ஊன்றி நின்றன. ஆனால் பெரியார் இராமசாமி வருணதர்மத்துக்கு வெளியே நின்று வருணதர்ம சட்டக் கூட்டைத் தகர்ப்பதன் மூலமே பெண் விடுதலையையும், தலித் விடுதலையையும் ஒட்ட முடியும் என்று கொண்டார்.

தமிழ் நாட்டில், மாபெரும் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பெரியார் இராமசாமி காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய சனாதனக் கொள்கையையும், போக்கையும் எதிர்த்து, 1935-ம் ஆண்டு நடைபெற்ற காஞ்சிவரம் காங்கிரஸ் கட்சியினின்றும் விலகி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து அதன்பின்னர் திராவிடர் கழகமாகப் பரிணாமம் பெற்று, அவரால் வளர்க்கப் பட்ட திராவிட இயக்கமானது அவரது காலத்திலேயே பல்வேறு கூறுகளாகப் பிரிந்து, எந்தப் பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்துக் குரல் எழுப்பினாரோ அந்தக் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரண்பட்ட வகையில், தமிழக ஆட்சியை, அந்தப் பார்ப்பனிய சக்திகளிடம் ஒப்படைக்கும் நிலைமைக்கு மலினப்பட்டுப் போனதையும் தமிழகம் கண்டது. ஆனால் பெரியாரைப் பொறுத்தமட்டில் தான் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டைத் தனது அந்திம காலம் வரை கடைப்பிடித்தார் என்ற உண்மையையும் மறந்து விட முடியாது. பெண் விடுதலைக் கோட்பாட்டிலும் உறுதியான புரட்சிகரமான போக்கையும் பெரியார் கடைப்பிடித்தார்.

பெண்ணியம் என்பது, இன்று உலக அரங்கிலும், தேசிய அளவிலும் சக்திமிக்கச் சமுதாய இயக்கமாகப் பரிணாமம் பெற்றுள்ளது. ஆணாதிக்க அமைப்பு முறையை எதிர்த்துப் பலமான போராட்டங்களும் இயக்கங்களும் நடைபெற்று வருகிறது. அரசியல் அரங்கில், சில மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புக்களில் பெண்களுக்கு முப்பத்தி மூன்று சதவீத இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை சக்தி மிக்க குரலாக உயர்ந்து வந்துள்ளது. இப்படிப்பட்ட இன்றையச் சூழலில் பெரியாரின் பெண்ணியக் கோட்பாடுகள் முன்னிலைப் படுத்தப்படுவதுடன் பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவது, பெண்ணிய இயக்கத்திற்கும் பெண்களின் விடுதலைக்கான போராட்டங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரக்கூடியதாக இருக்கும்.

திராவிட சித்தாந்த வாதிகள், பண்டைத் தமிழகத்தில், அதாவது சங்க காலம் என்கின்ற சங்கம் மறுவிய காலத்தில் பெண்ணாகப்பட்டவள் முழுமையான சுதந்திரம் பெற்றவளாகவே இருந்தாள் ஆனால் ஆரியர்கள் தென் நாட்டுக்கு வந்து, ஆரிய கலாச்சாரம் ஆதிக்கம் பெற்ற பின்பே பெண் அடிமைப்படுத்தப் பட்டாள் என்றும், வருணதர்மம் தமிழர் பண்பாட்டில் புகுத்தப்பட்ட பின்னரே பெண் அடிமைத்தனம் உருவாயிற்று என்றும்; சங்க காலம் பொற்காலம் என்றும் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் இந்தக் கூற்றில் கிஞ்சித்தேனும் உண்மை கிடையாது. அன்றைய சமுதாய எதார்த்தத்தைத் திரித்துக் கூறுவதாகும். பழம்பெரும் தமிழ் இலக்கண நூலாகக் கருதப்படும் தொல்காப்பியம் பண்டையத் தமிழகத்தில் நிலவிய தமிழர் சமுதாய அமைப்புப் பற்றியும் வரன் முறைகள் பற்றியும் சில சித்திரிப்புகளைத் தருகிறது. அதில் பெண்ணுக்கு விதிக்கப்படும் வரன் முறை பற்றிச் சில சித்திரிப்புக்களைப் பற்றி வரும் ஒரு சில சூத்திரங்கள்.

“முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை”
(மகடூ - பெண்) (தொல் - புறத்திணை 59)

அதாவது, இந்தச் சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பெண்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பதாகும்.

மட்டுமல்லாமல் பெண்ணுக்கென்று கீழ்க்காணும் இலக்கணம் சொல்லப்படுகிறது.

“அச்சமும், நாணும், மடனும் முந்துருத்தல் நிச்சமும் பெண்பாற்குரிய என்ப”
(களவியல்)

அதாவது, பயமும், நாணமும், அறியாமையும் முற்பட்டு நிற்பதே பெண்ணுக்குரிய குணமாகும். இந்துவ சூத்திரம் தெளிவிப்பது என்னவென்றால், பெண் அச்சம் கொண்டவளாக மட்டுமல்ல அறியாமையிலும் வைக்கப்பட்டிருந்தாள் என்று விளக்குகிறது. மட்டுமல்லாமல், மிகவும் வெறுக்கப்படும், மிருகத் தனமான சதி அல்லது உடன்கட்டை என்கிற மாண்ட கணவனுடன், அவனது மனையாளையும் எரிக்கின்ற மூடப்பழக்கம் பண்டைத் தமிழ் நாட்டில் இருந்தது என்கிற விவரமும் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

“நல்லோர் கணவனொடு நலி சாழல் புகீஇச்
சொல் இடையிட்ட பாவை நிலையும்”

இந்தச் சூத்திரத்தின் பொருள் என்னவெனில் கற்புள்ள மனைவி தனது கணவனுடன் உடன்கட்டை ஏறப்போகும் போது, அதனை வேண்டாமென்று தடுப்பவர்களுடன் எடுத்துக் கூறும் பாவை நிலையும் என்பதாகும். எனவே, சங்க காலத்திலேயே, மாண்ட கணவனுடன் அவன் மனையாட்டியையும் சேர்த்துத் தீயிலிடும் வழக்கம் இருந்தது என்பது தெளிவாகிறது. அல்லாமலும் பெண்கள் உடன்கட்டை ஏற்றப்படுவதையும்; பெண்கள் கைமை நோன்பு கடைப் பிடிப்பதையும் சிலாசித்துப் பல கவிதைகள் புறநானூற்றில் காணப்படுகின்றன.

அதே போன்று தமிழர் வேத நூல் எனப் போற்றப்படும் வள்ளுவனின் திருக்குறள் ஆண் பெண் இருபாலர் பற்றிச் சமத்துவக் கருத்தை முன்வைக்கிறது என்கிற தவறான கருத்தும் சொல்லப்படுகிறது. வள்ளுவன் அவனது கால நிலைக் கேற்ற கருத்தையே முன்வைக்கிறான். பெண் வழிச் சேரல் என்கிற அதிகாரம் இந்த உண்மையைத் தான் வெளிப்படுத்துகிறது. உதாரணமாக

“இல்லால் கண் தாழ்ந்த இயல்பினன் எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும் (கு. 903)

அதாவது மனைவிக்கு அடங்கிப் போகும் இழிந்த தன்மையுடைய ஒருவனுக்கு எப்போதும் நல்லவர்கள் இருக்கும் கூட்டத்தில் நாணத்தையே ஏற்படுத்தும் என்பதாகும்.

“அறவினையும், ஆன்ற பொருளும், பிறவினையும் பெண் ஏவல் செய்வார்கள் இல் (கு. 909)

அதாவது, அறம் செய்வதும், சிறந்த செல்வத்தைச் சேர்த்தல் ஆகிய செயல்களும் தன் மனைவியின் ஏவலைச் செய்வார்களிடம் இருப்பதில்லை. இது வள்ளுவத்தில் காணப்படும் குறை என்று கொள்ள முடியாது. வள்ளுவன் காலத்தில் நிலவிய சமூக நிலைமையையே வள்ளுவன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளான் என்றே கொள்ளவேண்டும்.

பெண்விடுதலை, பெண்ணுக்கான சுதந்திரம் என்கிற கருத்து, நிலப்பிரபுத்துவ இறுக்கமான அமைப்பு உடை பட்டு, முதலாளித்துவ சமூக அமைப்பு தோன்றிய காலை எழும் ஜனநாயகக் கோட்பாடாகும். பெண் என்பவள் ஆண் மகனது அடிமை அல்லது அவனது உடைமை (ஏனைய உடைமை களைப் போன்று) என்ற அடிமை நிலையினின்றும் ஓங்கி ஒளிக்கும் இன்றைய நிலைமைக்கும் பல கட்டங்களைத் தாண்டி வர வேண்டியிருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விளிம்பு நிலை வாதம் பேசுபவர்கள், பெண்ணியத்தையும், தலித்தியத்தையும், ஒட்டுமொத்த சமுதாய இயக்கத்தினின்றும், இயக்கங்களினின்றும் வேறுபடுத்தித் துண்டு துக்காணிகளாகப் பார்க்க முயலுகிறார்கள். பெண்களும் சரி, தலித்துக்களும் சரி, இந்தச் சமுதாயத்தின் அங்கங்கள். எனவே, ஒட்டு மொத்த சமுதாய விடுதலையுடன் சம்மந்தப் பட்ட பிரச்சினைகளே பெண் விடுதலையும் தலித் மீட்சியும், எனவே பெண்ணும் சரி, தலித் மகனும் சரி, தாங்கள் இழந்த உழைப்பின் பலனையும், உடைமையின் பலனையும் திரும்பப் பெற வேண்டும்.

எனவே உழைப்பின் பலனைப் பெற்று, புதியதோர் சமுதாயத்தை உருவாக்குவதற்கும், அமைப்பதற்காகவும் நடைபெறும் போராட்ட சக்திகளின் ஒரு அங்கமே பெண்ணும், தலித்மகனும். எனவே இந்த நாட்டின் முற்போக்குச் சக்திகள் நடத்தும் சமூக விடுதலைக்கான போராட்டத்துடன் இணைந்ததே பெண் விடுதலையும், தலித் மக்களின் மீட்சியும்.

முற்போக்குச் சக்திகள் நடத்தும் போராட்டத்துடன் இணைந்தது பெண்விடுதலை என்ற மட்டில், பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள், பரிசீலிக்கப்பட வேண்டும். நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஏனெனில் பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் வெறும் கருத்துக்கள் அல்ல; மாறாக நடைமுறைப் படுத்தப்படவேண்டிய கருத்துக்களாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com