Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

நூர் விமர்சனம்

பரீஸ் பொலெவோய் எழுதிய உண்மை மனிதனின் கதை
எஸ்.ஏ.பெருமாள்

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து உலக இலக்கியத்தில் சோவியத் இலக்கியத்தின் தாக்கம் அழியாத இடத்தைப் பெற்றிருந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகும் கூட அது தொடர்கிறது. புஷ்கினும், டால்ஸ்டாயும், கார்க்கியும், ஷோலகோவும் இன்றும் நிலைத்து நிற்கிறார்கள்.
இலக்கியத்தில் யதார்த்தவாதத்தையும், அதிலிருந்து சோசலிச யதார்த்தவாதத்தையும் சோவியத் எழுத்தாளர்கள் உருவாக்கி வளர்த்தனர். மனித வாழ்வு மேம்பாடடைய வேண்டுமென்பதே அவர்களது குறிக்கோளாய் இருந்தது. ருஷ்யப் புரட்சிக்கு முந்தைய காலத்தில் இலக்கியம் முதலாளிகள், நிலப்பிரபுக்களை எதிர்த்துப் புரட்சி செய்யத் தூண்டியது. அதில் கார்க்கியின் ‘தாய்’ நாவல் தலைசிறந்தது.

புரட்சி வெற்றியடைந்தபின் புரட்சி அரசை வீழ்த்துவதற்கு எதிர்ப்புரட்சியாளர்கள் போர் தொடுத்தனர். அக்காலத்தில் நிகொலாய் ஆஸ்திராவ்ஸ்கியின் ‘வீரம் விளைந்தது’ போன்ற நாவல்கள் வெளிவந்தன. அவை எதிர்ப்புரட்சியாளர்களுக்கு அளித்தது அதன்பின் சோஷலிச வாழ்வின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இலக்கியங்கள் தோன்றின.

சோவியத் இலக்கியத்தின் உச்சக்கட்டமாக இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நாவல்கள் தோன்றின. ஹிட்லரின் நாஜிப் படைகளை எதிர்த்து மகத்தான செஞ்சேனையும் மக்களும் போராடினர். வெறி கொண்ட ஹிட்லரின் படைகளைப் புதைகுழிக்கு அனுப்பினர். அக்காலத்தில் பல நாவல்களும் சிறுகதைகளும் தோன்றின. வானவில், போர் இல்லாத இருபது நாட்கள், உண்மை மனிதனின் கதை தனிச்சிறப்பானது. செஞ்சேனையின் வீரமிக்க விமானி அலெக்ஸேயின் சாகசங் களை இருகால்களையும் போரில் இழந்தாலும் தொடர்ந்து போராடும் மனவுறுதியை மெய்சிலிர்க்கும் முறையில் இந்நாவல் தருகிறது.

இந்நாவலாசிரியர் பரீஸ் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான பிராவ்தா பத்திரிக்கையின் போர்முனை நிருபர். ருஷ்யாவில் அர்யோல் பிரதேசத்தில் ஜெர்மானியர்கள் பெரும் விமானப் படைத்தாக்குதல் நடத்தினர். சோவியத் போர் விமானங்களும் எதிர்த் தாக்குதல் நடத்தின. நாற்பத்தியேழு ஜெர்மன் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. சோவியத் தரப்பில் மூன்று விமானங்களும், ஐந்து விமானிகளும் மட்டுமே சேதமானது. இவை பற்றிய செய்தி சேகரிக்கவே பிராவ்தா அவரை அனுப்பியது.

போர்முனையில் செஞ்சேனையின் விமானப் போராளி களைப் பரீஸ் சந்திக்கிறார். அதில் ஒருவரைப் பின்தொடர்ந்து விசாரிக்கச் செல்கிறார். உள்ளே சென்றதும் அந்த விமானி ‘விளக்கைச் சற்றுத் தணித்துவிட்டு அவன் உடை களைந்தான். ஏதோ பொத்தென்று தரையில் வீழ்ந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே கண்டதை என்னால் நம்பமுடியவில்லை. தரையில் இரு பொய்க்கால்களை வைத்தான். கால்கள் இல்லாத விமானி. அதிலும் போர் விமானமோட்டி. இன்று மட்டுமே ஏழு முறை பறந்து இரண்டு பகை விமானங்களை வீழ்த்தியவன் என்று பரீஸ் குறிப்பிடுகிறார்.
இருபத்திரெண்டு வயதில் போர் விமானத்தையோட்டி ஜெர்மானியர்களால் சுட்டு வீழ்த்தப்படுகிறான் கதாநாயகன்.

அந்த விபத்தில் இரண்டு கால்களும் முறிந்து போகின்றன. அடர்ந்த காட்டினூடே அவன் தவழ்ந்து, வந்து நெடுந்தூரம் பயணிக்கிறான். கரடி போன்ற மிருகங்களின் தாக்குதல்களி லிருந்து தப்பித்து மனிதர்களிடம் வந்து சேர்கிறான். ராணுவ மருத்துவமனையில் அழுகிப்போன அவனது இரு கால்களும் துண்டிக்கப்படுகின்றன. தாய் நாட்டைக் காக்கும் தர்மயுத்தத்தில் அவனால் ஒரு முடவனாய் முடங்கிக் கிடக்க முடியாது. மீண்டும் விமானியாகி எதிரிகளின் விமானங்களைச் சுட்டு வீழ்த்த வேண்டுமென்று கடமையுணர்ச்சி அவனை வாட்டுகிறது. அவனுக்கு இரண்டு கட்டைக்கால்கள் பொறுத்தப்படுகின்றது. அந்தக் கட்டைக்கால்களில் ராணுவ பூட்சுகளை மாட்டித் தனது முழங்கால்களில் பொறுத்தி நடைப் பயிற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வீரம் விளைந்தது நாவலும், அதன் கதாநாயகனும் நினைவுக்கு வருகிறார்கள். தொடர்ந்து கடுமையான பயிற்சிகளுக்குப் பின் கட்டைக்கால்களோடு விமானியாய் மீண்டும் சுட்டு வீழ்த்துகிறான். அவன் தான் உண்மை மனிதன்.

அலெக்சேய் தனது கதையைச் சொல்லச் சொல்ல பிராவ்தா நிருபர் இரண்டு நோட்டுப் புத்தகங்களில் குறிப்பெடுத்துக் கொண்டு பின்பு சற்று சிறந்த நாவலாய்ப் படைத்துவிட்டார். இரண்டாம் உலகப் போர் முடிந்து நாவல் வெளியானபின் நாவலின் கதாநாயகன் நாவலாசிரியரைச் சந்திக்கிறான். போர் முடிந்தபின் அவன் தனது காதலியைத் திருமணம் முடித்து விக்தர் என்ற மகன் இருப்பதாகவும் கூறுகிறான். அவனது தாய் வீட்டுக்கு வந்து மகனையும் மருமகளையும் கண்டு மகிழ்ச்சியோடு பேரனைச் சீராட்டியபடி வாழ்ந்து வருகிறாள் என்றும் கூறினான்.

1950-ம் ஆண்டு நாவலாசிரியர் - கதாநாயகனின் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த உண்மை மனிதனின் கதை வாழ்க்கை நாவல் வெளிவந்த பின்பும் தொடர்கிறது. இந்தத் தகவல்களை நாவலாசிரியர் தனது பின்னுரையில் விரிவாக எழுதியுள்ளார். இந்நாவலுக்கு சோவியத் அரசு அவருக்குப் பரிசு வழங்கி கௌரவித்தது.

இந்நாவலின் சிறப்பம்சம் இயற்கைக் காட்சிகளையும் மனித நடவடிக்கைகளையும் வானப்போர்க் காட்சிகளையும் ஒரு திரைப்படம் போலக் காட்டுவதாகும். அற்புதமான வர்ணனைகள் பக்கத்துக்குப் பக்கம் மயில் தோகை விரித்தாடுவது போன்ற பேரழகுடன் திகழ்கிறது. பறவைகளின் சஞ்சாரம். மிருகங்களின் நடமாட்டம் இலைகள் கிளைகள் அசைவொலிகள் நம்மைக் கானகத்துக்குள் இழுத்துச் செல்கின்றன.

போரில் தாங்கள் கைப்பற்றிய கிராமங்களில் ஜெர்மன் ராணுவத்தினர் செய்யும் அட்டூழியங்கள் சொல்லிமாளாது. விதவிதமான அக்ரமங்கள் பெண்களை முற்றிலும் நாசமாக்கியது உட்பட வாசகருக்கு வெறுப்பேற்றுகிறது. சோகத்தினூடே சிரிப்பூட்டும் சம்பவங்களுக்கும் குறைவில்லை.
ஜெர்மானியர்களால் சூறையாடப்பட்ட ஒரு கிராமத்தை கதாநாயகன் காயங்களோடு சென்றடைகிறான். முதலில் அவனை ஜெர்மானியன் என்று சந்தேகப்பட்ட கிராமத்து பெண்கள் பின்பு அவன் செஞ்சேனை வீரன் என்று தெரிந்ததும் அவன் மீது அக்கறை கொண்டு கவனிக்கிறார்கள்.

அவனுக்குக் கோழிச்சாறு கொடுத்தால் தெம்பு வரும் என்று கிராமத்தி லிருந்த எல்லாக் கோழிகளையும் வாத்துகளையும் ஜெர்மானியர்கள் பிடித்துத் தின்றுவிட்டார்கள். ஒரேயொரு கோழிமட்டும் பதுங்கித் தப்பித்துவிட்டது. ஜெர்மானியர்கள் போனபின் பெண்கள் அந்தக் கோழிக்குக் கொரில்லாக் கோழி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அந்தக் கோழியின் எஜமானி ஒரு பெண். அவள் அந்தக் கோழியைப் பலரும் கேட்டுத்தர மறுத்து விட்டாள். ஆனால் அந்தப் பெண்மணி செஞ்சேனை வீரனுக்கு என்றதும் தனது கொரில்லாக் கோழியை அறுத்து சூப் வைத்துக் கொடுக்கிறாள். பெண்கள் மகிழ்ச்சியில் ஆரவாரிக்கிறார்கள்.

அந்தப் பெண்கள் அனைவருமே ஜெர்மானியர்களால் வயது வித்தியாசமின்றி கற்பழிக்கப்பட்டார்கள். அங்கு ஒரே ஒரு இளம் பெண்ணை மட்டும் மூடிப் பதுக்கி வைத்துக் கற்பழிப்பிலிருந்து பெண்கள் தப்புவித்து விடுகிறார்கள். நாஜி மூர்க்கர்களின் கையில் சிக்காதவர்கள் கொரில்லாக் கோழியும், அந்தக் கொரில்லாப் பெண்ணும்தான். இந்தக் காட்சியை வாசிக்கும் போது நாமே அந்தக் கிராமத்தில் நேரடியாய் வாழ்வது போன்ற உணர்வேற்படுகிறது. துன்பத்திலும், இன்பம் என்பார்களே, அதைக் காட்சிப்படுத்துவதில் ஆசிரியர் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.

நாஜிகளுடன் யுத்தம் துவங்குவதற்கு முன் காதலித்தவர் களைப் போர் ஐந்தாண்டுகளாய்ப் பிரித்து விடுகிறது. காதலன் ஒரு போர் முனையிலும் காதலி ஒரு போர்முனையிலும் பிரிகிறார்கள். போருக்குப் பின்பு உயிரோடு எஞ்சிய ஜோடிகள் இணைந்து வாழ்கிறார்கள். இருவரில் ஒருவர் இறந்தாலோ அல்லது இருவருமே இறந்தாலோ துயரம் சூழ்ந்து விடுகிறது.

போர்முனைகளிலுள்ள காதலர்களுக்கிடையே கடிதங்கள் பரிமாறப்படுகின்றது. பரஸ்பரம் கடிதம் கிடைத்துவிட்டால் அதிர்ஷ்டம்தான், இல்லையேல் ஏக்கம் மட்டுமே மிஞ்சும். ஆனால் இரு கால்களையும் இழந்த அலெக்ஸேய்க்கு அவனது காதலி ஓல்காவின் கடிதம் கிடைத்து விடுகிறது. அவளும் போர் முனையில் நிற்பவள்தான். அவள் கடிதத்தில் ‘என் அன்பே, தியாகத்துக்கு அஞ்சுவது காதலாகுமா? நமது காதல் அம்மாதிரிக் காதல் இல்லை. அருமை அலெக்ஸேய் அப்படியிருந்தால் என் கருத்தில் அது காதலேயில்லை.

என்னையே எடுத்துக்கொள் வோமே ஒருவாரமாக நான் குளிக்கவில்லை. கால்சட்டைகளும் துணிகள் பிய்ந்து விரல்கள் எல்லாப் புறங்களிலும் துருத்தும் பூட்சுகளைப் போட்டுக்கொண்டு வளையவருகிறேன். அதற்கடியில் ஊதா நிறத்தில் ஏதோ தென்படுகிறது. களைத்து அழுக்கேறி மெலிந்து போய்விட்டேன்நான். இப்போது நான் இங்கிருந்து உன்னிடம் வந்தால் நீ என்னை அருவருத்து ஒதுக்கியிருப்பாயா அல்லது கடிந்து கொள்ளத்தான் செய்வாயா?

வேடிக்கையான ஆள் நீ! உனக்கு என்ன நேர்ந்திருந்தாலும் (இரு கால்களை இழந்திருந்தாலும்) சரியே. எப்போதும் எந்த நிலையிலும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள். நான் உன்னைப் பற்றி நிறைய நினைக்கிறேன். பதுங்குக் குழிக்குள் வந்த பின்பு நாங்கள் அனைவருமே அடித்துப் போட்டாற்போல் உறங்கிவிடுகிறோம். அதற்கு முன்பு அடிக்கடி உன்னைக் கனவில் கண்டு வந்தேன்.
நான் உயிரோடிருக்கும்வரை உன்னை எதிர்பார்ப்பேன். எப்போதும் எந்த நிலையிலும் உன்னை எதிர்பார்க்கும் இடம் ஒன்று இருக்கிறது என்பதை மனதில் இருத்திக்கொள். முத்தங்கள் என் அன்பே என்று எழுதியிருந்தாள்.

ஒரு வாசகன் என்ற முறையில் எத்தனையோ காதல் கடிதங்களை நான் வாசித்து இருக்கிறேன். மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கடிதம்தான் எனக்கு முதல், இரண்டாவதாக எனக்குப் பிடித்த காதல் கடிதம் இதுதான். நெஞ்சில் உரமூட்டும் காதல் கடிதம். நீங்களும் இந்த நாவலைப் படியுங்கள். உண்மை மனிதனின் கதை உங்களை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கும். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அருமையாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

உண்மை மனிதனின் கதை
ஆசிரியர் : பரீஸ் பொலெவோய், தமிழில் : பூ. சோமசுந்தரம், வெளியீடு : என்.சி.பி.எச்., சென்னை - 98, விலை : ரூ. 120.00


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com