Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

கட்டுரை

வல்லிக்கண்ணனின் இலக்கியப் பங்களிப்பு: ஒரு சுருக்கமான பதிவு
ருத்ரன்

“எமது எழுத்துக்களை கதை, கட்டுரை, வசன கவிதை என்று எப்பெயரிட்டு வேண்டுமானாலும் அழையுங்கள்; நாம் கையாள விரும்புவது சொற்கள்தான்; சொற்களுக்கு உயிரூட்டுவதே எமது நோக்கம்” என்று தனது இலக்கியத்திற்கான உருவக் கோட்பாட்டினையும், “வாழ்க்கையும் காலமும் என்னுள் எழுப்பிய எழுப்புகிற உணர்ச்சிகளையும் எண்ணத்தையும்தான் நான் எழுத்தாக்கி வருகிறேன்” என்று தனது இலக்கியத்திற்கான உள்ளடக்க கோட்பாட்டினையும் அறிவித்துக் கொண்ட வல்லிக்கண்ணன், முழுமையான வாழ்க்கை வாழ்ந்த மனிதராக 86 ஆண்டுகள் உயிரோடிருந்தார்; முழுமையான இலக்கிய வாதியாக 70 ஆண்டுகள் எழுதினார்.

இத்தகைய வாழ்க்கையும் பெருமையும் மகிழ்ச்சிக்குரியன. எனினும், அவரது மரணம் எதிர்பாராத வருத்தத்தை அளித்திருக்கிறது என்பதையும், ஒரு மூத்த எழுத்தாளரை - இலக்கியத்தின் பன்முகங்களையும் வசப்படுத்தி பல்வேறு வெற்றிகளை ஈட்டிய திறமையாளரை, தமிழ் எழுத்துலகம் இழந்து விட்டது என்பதையும் மறுக்க முடியாது. எனவே, வல்லிக்கண்ணன் மீதான நினைவேந்தல்களும் அவர் குறித்த படைப்புகளும் வரவேற்புக்குரியன. அந்த வகையில், நியூ செஞ்சுரி புத்தக நிலையம் ஏற்பாடு செய்திருக்கும், ‘வல்லிக்கண்ணனின் இலக்கியப் பங்களிப்பு’ குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பாராட்டத்தக்கதாகும்.

12-11-1920-ல் பிறந்த வல்லிக்கண்ணன், தனது இயற்பெயரான கிருஷ்ணசாமி என்பதையும், தனது ஊரான ராஜவல்லிபுரம் என்பதையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்னும் பெயரைச் சூட்டிக் கொண்டார். கண்ணனும் கிருஷ்ணனும் ஒரே அவதாரத்தின் இரண்டு பெயர்கள் என்று கொள்ளப்படுவதால், கிருஷ்ணன், கண்ணன் என்றாகியது.

ஏறத்தாழ 1930-ன் நடுப்பகுதியில் எழுதத் தொடங்கிய வல்லிக்கண்ணனுக்கு, 1937-ல் அரசுப் பணி கிடைக்கிறது. எழுத்தின் மீது கொண்ட அதீத ஆர்வமும், சாதிக்க வேண்டும் என்னும் மன உறுதியும் அரசுப் பணியில் நீடிக்கும் மனநிலையை அவருக்கு அளிக்கவில்லை. எளிய, உடனடியாக பணியைத் துறந்துவிட்டு, சென்னைக்குப் பயணப்படுகிறார்.

ரா.சு. கிருஷ்ணசாமி, வல்லிக்கண்ணன் ஆவதற்கு முன்பு ‘இளவல்’ என்னும் புனைப் பெயரில், இலக்கிய வட்டாரத்தில் அறியப்பட்டிருந்ததால், எழுத்து சார்ந்த சிற்சில பணிகள் கிடைத்தன. பின்னர் 1942 முதல் 1943 ஆகஸ்ட் வரை, ‘சினிமா உலகம்’ இதழிலும், 1943-ன் இறுதி நான்கு மாதங்கள், திரு.வி.க. விடமிருந்து சக்திதாசன் வாங்கியிருந்த, ‘நவசக்தி’யிலும், 1944-ல் ‘கிராம ஊழியன்’ இதழிலும் பணியாற்றினார்.
பாரதியாரால் தொடங்கி வைக்கப்பட்ட வசன கவிதை, புதுக்கவிதையாகப் புதுவடிவம் பெற்றதற்கு, மூலவர்களாக வர்ணிக்கப்படும் நால்வருள் வல்லிக்கண்ணனும் ஒருவர் என்னும் அங்கீகாரத்துடன் இலக்கியப் பாதையில் முன் நடந்த அவர், சி.சு. செல்லப்பாவின், ‘எழுத்து’ இதழில் கவிதை எழுதத் தொடங்கியதிலிருந்து மிகப் பிரபலம் பெற்றார்.

“1910-20களில் மேல் நாட்டு புதுக்கவிதைக்கு ஒரு உந்துதல் ஃபிராய்டிசம் மார்க்சியம் இரண்டிலிருந்தும் மனோதத்துவ லோகாயத தத்துவரீதியாகவும் ஏற்பட்டது” என்று மேலைப் புதுக்கவிதைகள் குறித்து ஆய்வுக் கருத்தினை வெளியிட்ட சி.சு. செல்லப்பாவின், ‘எழுத்து’ இதழில், மார்க்சியத்தை உள்ளடக்க மாகக் கொண்ட புதுக் கவிதைகள் எதுவும் பிரசுரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சி.சு. செல்லப்பாவை குருவாகவும் அதே வேளையில் நண்பராகவும் கருதிப் பழகிய வல்லிக்கண்ணனின் பெரும்பாலான தொடக்கக் காலக் கவிதைகள், ‘எழுத்து’வை அலங்கரித்தன.

மார்க்சியக் கவிதைகளை - மக்கள் பிரச்சினைகளைச் சொல்லி, அவைகளுக்குத் தீர்வுகளைச் சுட்டும் கவிதைகளை, ‘எழுத்து’ போன்ற இதழ்கள் புறக்கணித்ததற்குப் பின்புலமாக, கவிதையின் அரசியல் செயற்பட்டது. அந்த அரசியல், கலை கலைக்காகவே என்று சொல்லியது. இது, நவீன கோட் பாடுகளுள், பின் நவீனத்துவச் சிந்தனையின் சில அம்சங்களில் ஒன்றிணைகிறது. இந்தப் புரிதல், கலை கலைக்காகவே என்னும் கொள்கை சார்ந்த இலக்கியங்களின் சமூகப் புறக்கணிப்பையும் ஆபத்தினையும் உணர்த்தக் கூடியதாகும்.

இதன் தொடர்ச்சியாகவே, “அழிவின் வரம்பை மீறி வசனம் போகுமானால், அந்த நிமிடித்திலேயே அது கவிதையாகிவிட்டது என்று நிச்சயிக்கலாம்” என்றும், “எவ்வளவுக் கெவ்வளவு உணர்வைத் தீண்டாமல் அறிவுடன் கவி பேசுகிறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு வசனமாய் விடும்” என்றும் கவிதையின் லட்சணம் குறித்து கு.ப.ரா. குறிப்பிடுவதைப் பார்க்க வேண்டும்.

அதாவது, அறிவைத் துறந்துவிட்டு எழுதப்படும் வசனமும் கவிதையாகிவிடும். ஆனால், அறிவோடு இயைந்து எழுதப்படும் கவிதையும் வசனமாகிவிடும் என்பதே கு.ப.ராவின் கவிதை குறித்த இலக்கணம். இது, எதை எழுத வேண்டுமானாலும் அறிவு அவசியம் என்னும் அடிப்படை உண்மையை அறிந்திராத கு.ப.ராவின் அறிவின்மையைக் காட்டுகிறது.

எனவே, அன்றைக்கு, கு.ப.ராவை ஒத்த தூய இலக்கிய வாதிகளின் முகாம் ஒன்று இருந்த சூழல், மாற்று முகாம் ஒன்றினை - கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்னும் கொள்கை தரித்த எழுத்தாளர்களை உருவாக்கியது. குறிப்பாக, சுய புலம்பல்களையும் இயற்கை வர்ணணைகளையும் காம இச்சைகளையும் மட்டுமே கவிதைகளாக வெளிப்படுத்தி வந்த சூழ்ச்சியை எதிர்த்து, ‘வானம்பாடி இயக்கம்’ சிறகடிக்கத் தொடங்கியது.
இவ்வகைக் கவிதைகளைத் தாங்கி, ‘தாமரை’, ‘செம்மலர்’, ‘கார்க்கி’, ‘வானம்பாடி’, ‘உதயம்’ ஆகிய இதழ்கள், புதுக் கவிதைகளின் உருவம் மற்றும் உள்ளடக்கம் மீதான கருத்துப் புரட்சியைப் பரப்பின.

மக்களின் அவல வாழ்க்கைக்குக் காரணமான சமூக பேதங்களை அம்பலப்படுத்தியும், உழைப்புச் சுரண்டலும் எதிராகக் குரலெழுப்பியும், அரசு வன்முறையை அடையாளப்படுத்தியும், வாழ்வுமைக்கான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், அடிமைச் சங்கிலிகளை நொறுக்குவதற்கான மார்க்சிய - லெனினியத்தை அறிவுறுத்தியும் எழுதப்பட்ட புதுக்கவிதைகள், கவிதைக்கான எளிய வடிவத்தை வெளிப்படுத்தின. இந்த உத்தி, உழைக்கும் மக்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. அதனால், இவ்வகையான இதழ்கள் முற்போக்கு இதழ்களாக அங்கீகரிக்கப்பட்டன.
ஆனால் சுயசொரிதல் என்னும் எதிர் இலக்கியப் பண்பாட்டினை வரித்துக் கொண்ட, ‘மணிக்கொடி’, ‘எழுத்து’, ‘கணையாழி’, ‘தீபம்’, ‘ஞானரதம்’, ‘அஃ’, ‘கசடதபற’ ஆகிய இதழ்கள், முற்போக்கு இதழ்களின் கவிதைகளை வெறும் பிரச்சார எழுத்துக்கள் என்று குற்றம் சாட்டின. அதனால், அவ் இதழ்கள் பிற்போக்கு இதழ்கள் என அறியப்பட்டன.

இந்நிலையில், இரு முகாம்களின் அல்லது எதிரெதிரான இரண்டு அரசியல் கருத்துக்களின் கவிதைகளைப் பிரசுரித்து, ‘வண்ணங்கள், ‘சதங்கை’ ஆகிய இதழ்கள் நடுநிலை வகித்தன.

இவ்வாறு, தமிழக இலக்கிய வரலாற்றின் முக்கியமான காலக்கட்டத்தில் நிகழ்ந்த இலக்கியம் குறித்த கருத்துப் போராட்டங்களின் தன்மையையும் அதனில் இருக்கும் உண்மையையும் அறிந்து கொள்வதற்கு, இரு வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட வல்லிக்கண்ணன் மற்றும் தி.க.சி. ஆகியோரின் கருத்துக்களே போதுமானதாகும்.

“இங்கு ஒரு புரட்சி வந்தால் எல்லா நிலைமைகளும் சீர்திருந்திவிடும்; அப்படி ஒரு புரட்சி நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை முதியோர் இளைஞர்கள் அனைவருக்கும் இருந்தது. அதனால், செவ் வசந்தம், சிவப்பு மலர் பூக்கும் போன்ற வார்த்தைகளில் மோகம் கொண்டு, இவர்களில் அநேகர் அவற்றை அளவுக்கு அதிகமாக, தங்கள் கவிதைகளில் அள்ளித் தெளித்திருக்கிறார்கள். கருத்துக்களைவிட வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் இவர்கள் நீளம் நீளமான கவிதைகளைப் படைக்கும் உற்சாகிகளாக விளங்கு கிறார்கள்.

‘மகாத்மாவை நோக்கி ஒரு சமூக நீதியின் கேள்வி,’ ‘இனிமேல் கிழக்கு என்றுமே இயக்கும்’, ‘இங்கே இடி முழக்கம் கேட்கிறது’ போன்ற கவிதைத் தலைப்புகள் சில உதாரணங்கள் ஆகும். ரத்தப் பிரயோகம், ரத்த ஓட்டம், செங்குருதி வெள்ளம் என்று முழக்கமிடுவதில் ஒரு வெறிவேக உவகை பெறு கிறார்கள் என்று தோன்றுகிறது” என, பிற்போக்கு முகாமின் பிரதிநிதியாக, வல்லிக்கண்ணன் வாதங்களை முன்வைக்கிறார்.
“புதுக்கவிதையின் புதுப் பாதையை, அதன் சொல்லாட்சியை, படிமச் சிறப்பை, உருவ நயத்தை நான் உணர்கிறேன்.

இப்படியும் கவிதை வரவேண்டியதுதான் என்று உணர்கிறேன். ஆயினும், புதுக்கவிஞர்களின் குரல்களை என்னால் ரசிக்க முடியவில்லை. வெறுமை, விரக்தி முனைப்பு, மனமுறிவு ஆகிய குரல்கள் பல புதுக்கவிதைகளின் அடி நாதமாக ஒலிக்கின்றன. அதுவும் இந்திய வரலாற்றின் முக்கியமான இக்கால கட்டத்தில் அழுது புலம்பிக் கையறு நிலையில் கை விரல்களைச் சொடுக்குவது, எனக்கு மிகவும் பிடிபடாத சங்கதி” என, முற்போக்கு முகாமின் பிரதிநிதியாக, தி.க.சி. எதிர் வாதமிடுகிறார்.

தி.க.சி.யின் கருத்தினை உறுதிப்படுத்தும் விதமாக, “ஒரே சமயத்தில் சமுதாயக் கண்ணோட்டமும் புத்திலக்கிய நோக்கும் கொண்ட ஒரு கவிதை இயக்கம் எங்களுடையது” என்னும் வானம்பாடி இயக்கத்தின் பிரகடனமும் அமைந்தது. இதனுடன், “சிவப்பு என்றால் ஏன் அலறுகிறீர்கள்? உங்கள் உடம்பில் ஓடும் ரத்தமும் சிவப்பு தானே!” என்னும் ஆந்திரத்தின் புரட்சிக் கவிஞர் சுப்பாராவ் பாணிக்கிரஹியின் கேள்வியையும் இணைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

இலக்கியத்தின் குறிப்பாக, கவிதையின் முக்கியமான இரு போக்குகளின் வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்த நிலையில், ‘தீபம்’ இதழில், ‘புதுக்கவிதை’, ‘தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் கட்டுரைத் தொடரை வல்லிக்கண்ணன் எழுதினார். அத்தொடர் 1973 முதல் 1975 வரையிலான 30 இதழ்களில் வெளி வந்தபோது, இலக்கிய தளத்தில் அதிர்வினை ஏற்படுத்தியது. அதனால், அதனை எதிர்கொள்ளவும், நியாய பூர்வமான மற்றும் அவசியமான புதுக்கவிதை இலக்கியத்துக்குப் புத்துயிரூட்டவும், ‘புதுக்கவிதை; முற்போக்கும் பிற்போக்கும்’ என்னும் நூலினை நா. வானமாமலை எழுத நேர்ந்தது. ஒப்பீட்டளவில், புதுக்கவிதைக் குறித்த வல்லிக்கண்ணணின் ஆய்வுகளை விடவும், உண்மையும், நம்பகத்தன்மையும் கொண்டதாக, நா. வானமாமலையின் ஆய்வுகள் அமைந்திருந்தன.

பிறகு, ‘தீபம்’ இதழின் ஆசிரியர் நா. பார்த்தசாரதி மற்றும் கவிஞர் மீரா ஆகியவர்களின் தூண்டுதலால், ‘புதுக்கவிதை: தோற்றமும் வளர்ச்சியும்’ கட்டுரைகள், நூல் வடிவம் பெற்றன. ‘எழுத்து’ வெளியீடாக, சி.சு. செல்லப்பாவால் 1977-ல் வெளியிடப்பட்ட அந்நூல், 1978ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. ஆனால், அந்நூலினைப் படிக்கும் எவரும், சாகித்ய அகாதெமியின் சார்புத் தன்மையையும், அது வழங்கும் விருதுகளின் கேலித்தன்மையையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

வல்லிக்கண்ணன் புதுக்கவிதை மீதான கட்டுரைத் தொடர் ‘தீபம்’ இதழில் எழுதி வந்த காலத்தில், 1974-ல் அவரது முதல் கவிதைத் தொகுப்பான, ‘அமரவேதனை’ வெளிவந்தது. இந்நூலும், ‘எழுத்து’ வெளியீடாகவே அமைந்தது.

ஏறத்தாழ 15 ஆண்டுகளின் வல்லிக்கண்ணன் எழுதிய 34 கவிதைகள், ‘அமரவேதனை’யில் இடம் பெற்றன. பெரும் பாலான கவிதைகள் அவரது இலக்கியக் கொள்கையைப் பிரதிபலித்தன. ஒரு சில கவிதைகள், சமூகப் பொறுப்புணர்வுடன் சில கேள்விகளை எழுப்பியிருந்தன. இருப்பினும், விரக்தியும் இயலாமையும் முன்னிறுத்தப்பட்டு, வினாக்களின் வீரியம் காயடிக்கப்பட்டிருந்தது. மேலும், பெண்ணை - மனைவியை நாய், பூனை, ஆந்தை, கொ என்றெல்லாம் அஃறிணையின் குறியீடுகளாக நிறுத்திய ஆணாதிக்கம், பளிச்செனத் தெரிந்தது.

‘அமரவேதனை’யின் கவிதைகள் எத்தன்மை வாய்ந்தன என்பதை முன்னதாக அறிவிப்பதைப் போல, வல்லிக்கண்ணனால் எழுதப்பட்ட அந்நூலின் முன்னுரை இருந்தது. அவர், முன்னுரைக்குப் ‘பிள்ளையார் சுழி’ என்று பெயரிட்டிருந்தார். இது, அவரது ஆன்மீகச் சிந்தனையையும், எதையும் முதலில் தொடங்கும் போது பிள்ளையார் சுழியோடு தொடங்கினால் தான் கடவுளின் ஆசீர்வாதம் வாய்க்கும் என்னும் மூடநம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.

எனவே, சமூகப் பிரக்ஞையற்ற படைப்பாளிகளுக்கும் படிப்பாளிகளுக்கும், ‘அமரவேதனை’யின் கவிதைகள் அமரத்துவம் வாய்ந்தனவாகத் தெரிந்தன. அதே வேளையில், சமூக அக்கறைக் கொண்டவர்களுக்கு, தூய இலக்கியம் கொடுத்து வந்த வேதனைகளின் நீட்சியாகியது.
எனினும், வல்லிக்கண்ணனின் இறுதி ஆண்டுகள், அவரது கடந்த கால நிலைப்பாடுகள் சிலவற்றைத் தவிர்ப்பதற்கு முயற்சித்ததைக் காட்டுகின்றன. அரசியல் கலக்காத தூய இலக்கியத்தைப் படைத்து வருவதாகச் சொல்லி வந்த தனது நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி, ‘ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது’ என்னும் எதார்த்தத்தை உணர முன் வந்தார் என்று அறிய முடிகிறது.

அதனால்தான், அரசியல் ரீதியான சில சமூக நிகழ்வுகளில் பங்கெடுக்கத் தொடங்கினார். குறிப்பாக, மறுமலர்ச்சி தி.மு.க., நடத்திய சில நிகழ்ச்சிகளில் உரையாற்றினார். வல்லிக்கண்ணனிடம் ஏற்பட்ட இம்மாற்றத்தின் இலக்கினைக் காண்பதற்கான வழியை, அவரது திடீர் மரணம் அடைத்து விட்டது.

பாரதி, புதுமைப்பித்தன் ஆகியவர்களின் வரிசையில் சுந்தரராமசாமியை வைத்து, நாட்டின் முதல் குடிமகனின் கைகளால் அவரது உருவப்படத்தைத் திறக்க வைத்து, சுந்தரராமசாமியை அகில இந்திய அளவில் மிக முக்கியமான மனிதராக - சாதனைப் படைத்த எழுத்தாளராகப் பதிவு செய்வதற்கு, அவரது மகன் கண்ணன் வாய்த்ததைப் போன்று, வல்லிக்கண்ணனுக்கு யாரும் இல்லாமல் போனது எதேச்சையானதல்ல; வல்லிக்கண்ணனால் திட்டமிடப்பட்ட தென்றே கருத வேண்டியிருக்கிறது. அதனால்தான் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை போலும்!

ஆனாலும் தனது புகழைப் பாடுவதற்கு, சுந்தரராமசாமியைப் போன்று, சீடர்கள் படையை உருவாக்கிக் கொள்ளாததை என்னவென்று சொல்வது?
“பார்க்கப் போனால் / வெறும் புகழில் / என்ன இருக்கிறது?” என்னும் வல்லிக்கண்ணனின் கவிதைக் கேள்வியே நமக்கான பதிலாக வினையாற்றுகிறது. “உலகில் / எப்படி முடிந்தார் / என்பதா முக்கியம்? / எப்படி வாழ்ந்தார், வாழ்கிறார் / என்பதே பெரிதாம்” என்னும் வல்லிக்கண்ணனின் கவிதை வரிகள், நேற்றும் இன்றும் நாளையும் அவரை நோக்கி எழுப்பப்படுபவைகளாக நீடிக்கும் என்பதை ஒரு போதும் மறுப்பதற்கில்லை.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com