Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

கட்டுரை

எனது தமிழாக்கக் கலை
திருவைகாவூர் கோ.பிச்சை

எனது பள்ளிப் பருவத்தில் காங்கிரஸ்காரனாக இருந்த அமரர்கள் ஜீவா, ராமமூர்த்தி இவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு 1940 வாக்கில் கம்யூனிஸ்ட் ஆனேன்.

1947 முதல் 1950 வரை இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி மீது கடுமையான அடக்கு முறை ஏவி விடப்பட்ட சமயம், 1948 ஜூன் முதல் வாரம் நான் கைது செய்யப்பட்டு திருச்சி, வேலூர் சிறைகளில் பாதுகாப்புக் கைதியாக அடைக்கப் பட்டிருந்தேன்.

வேலூர் சிறையில் ஜீவா, கே.டி.கே. தங்கமணி, அனந்தன் நம்பியார், கே. முத்தையா, சங்கரய்யா, ரமணி, சிந்தன், எம். காத்தமுத்து, ஏ.எஸ்.கே. அய்யங்கார், பாலசுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம் மேலும் பல தலைவர்களுமாக 280 தோழர்களுக்கு மேல் அடைக்கப்பட்டிருந்தோம்.
சிறையில் முத்தையா பொறுப்பில் மாதம் இரு முறை ‘செங்கொடி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை வெளியாகும். இதற்குச் சில தோழர்கள் கட்டுரை எழுதுவார்கள்.

ஜீவாவின் கட்டுரைகளும் முத்தையாவின் மொழி பெயர்ப்புகளும் பிரசுரமாகும். இருவரது கட்டுரைகளையும் எனது அழகான கையெழுத்தால் நேர்த்தியாகப் பிரதி எடுத்துக் கொடுப்பேன். பிறகு முத்தையா தமிழாக்கம் செய்த ஆங்கிலக் கட்டுரைகளைப் படிப்பேன். இதன் மூலம் நானும் ஏன் மொழி பெயர்க்கக் கூடாது என்ற எண்ணம் என்னுள் முளைவிட்டது. மேலும் நான் படித்த பள்ளியில் 9, 10 வகுப்பில் 2 வாரத்திற்கு ஒரு முறை மொழிபெயர்ப்புக்கென்று ஒரு பாடநேரம் உண்டு. இதைப் பள்ளியின் தலைமை ஆசிரியரே நடத்துவார்.

ஆங்கிலப் பத்திரிகைகளில் பிரசுரமாகும் கட்டுரையைக் கொடுத்து அதைப்பற்றி பொதுவாக விளக்கம் கொடுப்பார். பிறகு மொழி பெயர்ப்போம். ஒருவாரம், காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு, சுபாஷ் சந்திர போஸூம், பட்டாபி சீதாராமய்யாவும் போட்டி யிட்டதில், பட்டாபி சீதாராமய்யா தோல்வி அடைந்தார். இது பற்றி காந்திஜி ‘Defect is mine’ இதழில் கட்டுரை எழுதியதைத் தலைமை ஆசிரியர் மொழிபெயர்க்கக் கொடுத்தார். இதைப் ‘பட்டாபியின் தோல்வி என் தோல்வி’ என்று மொழி பெயர்த்தேன்.

9-ம் வகுப்பில் கட்டுரைப் போட்டியிலும் 10-ம் வகுப்பில் பேச்சுப் போட்டியிலும் வெற்றி பெற்றதில், ‘நேருவின் சுயசரிதை’யும் காந்திஜியின் ‘சத்திய சோதனை’யும் எனக்குப் பரிசாகக் கிடைத்தன. இந்நூல்களை எல்லாம் படித்ததில் மொழிபெயர்ப்பு பற்றி என் மனத்தில் ஒரு வித ஆவல் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஜீவா, முத்தையாவைப் பார்த்து, “பிச்சையை இன்னும் நகல் எடுப்பவராகவே வைத்திருக்கிறாயே அவரையும் ஏதாவது எழுதும்படி சொல்” என்றார். அது முதல் முத்தையா சிறு கட்டுரைகளை மொழி பெயர்க்கக் கொடுப்பார். இருவரும் என் மொழி பெயர்ப்பைப் படித்து விட்டு எனக்கு உற்சாக மூட்டுவார்கள்.

ஒரு தடவை முத்தையா சீனச் சஞ்சிகை ஒன்றில் உள்ள ஒரு கட்டுரையை மொழி பெயர்க்கக் கொடுத்தார். அது சீனாவில் ஜப்பானிய படை எடுப்பு பற்றிய கட்டுரை. அதில் ஒரு வாக்கியம் “Eighteenth Regiment is the trump card of the Japanese Fascist army” என்றிருந்தது. இதைப் பதினெட்டாவது படைப் பிரிவு ஜப்பானிய பாசிஸ்டு ராணுவத்தின் மூலபல* ((கம்பராமாயணத்தில் இராவணனுடைய இராணுவத்தில் எண்ணிக்கையில் அடங்காத வீரர்கள் கொண்ட படைப் பிரிவிற்கு மூலபல சேனை என்று பெயர்.)) சேனையாகும் என்று தமிழாக்கம் செய்திருந்தேன். இதைப் படித்த ஜீவா “ராமாயணத்தில் உள்ள மூலபல சேனை எப்படி இங்கு வந்தது” என்று கேட்டார். மேலும் ‘துருப்புச் சீட்டு’ என்று இருந்தால் என்ன?” என்று என்னை ஆராயக் கேட்டார். அப்போது ஜீவாவிடம், தேசிக விநாயகம் பிள்ளை உமார்கயாம் பாடலில் ‘A Book of Verse A flask of Wine’ என்ற வரியை

கையிற் கம்பன் கவியுண்டு / கலசம் நிறைய மது உண்டு என்று தமிழாக்கம் செய்திருப்பதைச் சொன்னேன். இதைக் கேட்ட ஜீவா “இது தமிழ் மரபுக்கு ஏற்றதான மொழியாக்கம், நன்றாக இருக்கிறது தொடர்ந்து மொழியாக்கம் செய்” என்று சிரித்துக் கொண்டே என் முதுகில் தட்டிக் கொடுத்து என்னைப் பாராட்டினார். விடுதலையாகும் வரை பல சிறு கட்டுரைகளை மொழி பெயர்த்தேன். இப்படியாகத்தான் வேலூர் சிறையில் எனது தமிழாக்கப் பணி வளர்ந்தது.

விடுதலைக்குப் பிறகு கட்சிப்புனரமைப்பு - சில ஆண்டுகள் கட்சியில் முழுநேர ஊழியன். பிறகு 1964 முதல் 10 ஆண்டுகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் தஞ்சை, திருச்சி கிளை மேலாளர். திருச்சியில் இருந்தபோது என்சிபிஎச் நிறுவனம், பதினோரு நாள்கள் பயணமாக என்னை சோவியத் யூனியனுக்கு 1971-ல் அனுப்பி வைத்தது.

1956 ஜனவரி, ஜனசக்தி பொங்கல் மலரில் எனது தமிழாக்கமான ‘புது முறைக் கல்யாணம்’ என்ற சீனக் கதை பிரசுரமானது. அச்சில் வந்த எனது முதல் தமிழாக்கம் இது தான்.

2-வது கே.ஏ. அப்பாஸின் ‘பச்சை மோட்டார் கார்’ 1959 ஜூன் தாமரையில் பிரசுரம். 3-வது ‘அறிவுள்ள அல்சேஷியன்’ 1960 ஏப்ரல் ஜனசக்தி, 4-வது ‘தந்தையும் மகனும்’ தகழி சிவசங்கரன் பிள்ளை 1963 ஆகஸ்ட் தாமரை.

பிறகு 1985-லிருந்து சாகித்ய அகாடமியின் ஐனேயைn டுவைநசயவரசந படிக்க ஆரம்பித்ததும் விட்டுப் போன மொழி பெயர்ப்புப் பணியைத் தொடர்ந்தேன். 1986 ஜூனிலிருந்து ஆசிரியர் கே.சி.எஸ். அருணாசலம் என் கதைகளைத் தாமரையில் தொடர்ந்து பிரசுரித்தார். சிறையில் மொழி பெயர்ப்பில் எனக்கு ஆர்வமூட்டிய முத்தையா ‘தீக்கதிர்’ ஆசிரியராகவும் ‘செம்மலர்’ ஆசிரியராகவும் பணி புரிந்தார். ‘செம்மலரில்’ எனது கதைகளைப் பிரசுரித்தார்.

‘கல்பனா’வில் பொறுப்பாசிரியராக இருக்கும் எனது நீண்ட காலத்தோழர் வி. ராதாகிருஷ்ணன் கல்பனாவில் கணிசமாக என் கதைகளைப் பிரசுரித்தார். இப்படியாக மேலும் ஜனசக்தி, மஞ்சரி, கணையாழி, சுபமங்களா, தென்றல், சாரதா முதலிய பத்திரிகைகளிலும் என் கதைகள் பிரசுரமாயின. எல்லாப் பத்திரிகைகளிலுமாக இதுவரை எனது 172 தமிழாக்கக் கதைகள் பிரசுரமாகி உள்ளன.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான திருமதி சி.கே. கரியாலி அவர்கள் இ.ஆ. பணி அதிகாரியாகத் தேர்வு பெற்றுப் பயிற்சிக்குச் சென்றதிலிருந்து இன்று வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் ஊhநnயேi டீn டுiநே என்ற இணைய தளத்தில் பதிவு செய்துள்ளார். அதை (126 நுயீளைடினநள) 126 அத்தியாயங் களாகத் தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளேன். இதில் எனக்குக் கிடைத்த ரூ. 10/- ஆயிரத்துடன் மேலும் ரூ. 15 ஆயிரம் வசூலித்து ஜீவா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவ தாமரை ஆசிரியரிடம் கொடுத்துள்ளேன். மேலே குறிப்பிட்டுள்ள திருமதி. கரியாலியின் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூலாக வெளிவரப் போவதாகச் சொல்கிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com