Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

நூர் விமர்சனம்

மார்க்சிய சிந்தனை
பத்மாவதி விவேகானந்தன்

மார்க்சின் தத்துவம் என்பது மனிதர் அனைவரும் சமமாக இயற்கையின் வளத்தை பங்கிட்டுக்கொண்டு வளமும் நலமும் பெற்று வாழ்வதற்கான உயரிய தத்துவமாகும். மானுடம் தழைக்க விஞ்ஞான முறைப்படி எழுதப்பட்ட கருத்துப் புதையல். மக்கள் வறுமை நீங்கி வாழ்வதற்கான வழி வகைகளைச் சிந்தித்த பொருளாதார முறைமை. உலகத் தொழிலாளர்களின் விடுதலைக்கான வித்துக்களை உள்ளடக்கிய நிழல் தரும் கற்பகத்தரு. இயற்கையிலும், மனித சமுதாயத்திலும் நிகழும் மாற்றங்களை இயக்கவியல் அடிப்படையில் விளக்கும் மனித குலத்தின் விடிவெள்ளி. தனிச் சொத்துரிமையையும், சுரண்ட லையும் எதிர்த்து உலகத் தொழிலாளர்களின் விடியலுக்காய் ஒலிக்கும் பூபாளம்.

தொழிலாளர்கள் தமக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க துணைபுரியும் மாபெரும் தத்துவம். இந்த நூற்றாண்டிலும் மாபெரும் சிந்தனையாளராய் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரிய மார்க்சின் - ஏங்கல்ஸின் மார்க்சியத் தத்துவம் கற்பனா வாதிகளுக்கெதிரான ஆயுதமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இத்தனை சிறப்பு மிக்க மார்க்சின் தத்துவத்தை எளிய தமிழில் எழுத முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தோழர் கீதானந்தன். மார்க்சியத்தின் மீது அவர் கொண் டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சாட்சியாய் ‘மார்க்சிய சிந்தனை’ நூல் விளங்குகிறது. ஐம்பத்தொரு தலைப்புகளில் மார்க்சின் பல்வேறு கூறுகளையும் தேவையான சான்றுகளுடனும், ஆதாரங்களுடனும் விளக்கியிருக்கிறார். மார்க்சின் தத்துவத்தை இதுவரை எத்தனையோ பேர் எழுதி இருக்கிறார்கள். இனியும் எழுதுவார்கள்.

அந்த அளவிற்கு ஆழமான உள்ளீடான செய்திகளை உள்ளடக்கியது மார்க்சீயம். மனித குலத்திற்கு விடுதலையைத் தரும் இத்தத்து வத்தை மக்களிடம் கொண்டு செல்ல இத்தகைய நூல்கள் தேவைப்படுகின்றன. தேவைக்கேற்ப மார்க்சியம், லெனின், ஹோசிமின், மா ஓ, பிடல் காஸ்ட்ரோ, கிரெம்சி போன்றவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. மனித குலத்தில் வறுமை என்ற ஒன்று இருக்கும் வரை மார்க்சிய தத்துவமும் இருக்கும்.
உலகில் இரண்டு விதமான தத்துவங்கள் முதன்மையானவை. ஒன்று கருத்துமுதல் வாதம். இரண்டாவது பொருள் முதல் வாதம்.

கருத்துமுதல் வாதிகள் கற்பனா வாதிகள் என்று அழைக்கப்பட்டனர். உலகை அறிவினால் அடைய முடியும் என்று பொருள்முதல் வாதிகளும், இவ்வுலகை சிறிதும் அறிய முடியாது என கற்பனா வாதிகளும் வாதிட்டனர். பிரபஞ்சம் பொருள் வயமானது. அது புறநிலை உண்மையைக் குறிக்கிறது. பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள் அவற்றால் இயக்கு மிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. ‘பொருள் இல்லாத இயக்கத்தையோ இயக்கமில்லாத பொருளையோ காணயி யலாது. பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து மாறுதல்களையும் நிகழ்முறைகளையும் உள்ளடக்கியதே இயக்கம்.’ பொருள் காலத்திலும், இடத்திலும் உள்ளது. ‘பொருட்களின் இயக்கத்தின் இயல்பினை ஆராய்ந்ததால் இக்கருத்து ‘இயக்கவியல்’ என அழைக்கப்பட்டது. இயக்கவியல் தத்துவத்தின் பல்வேறு கூறுகளைத் தகுந்த சான்றுகளுடன் விளக்கும் ஆசிரியர், பொருளின் மற்றொரு முக்கிய பண்பான பிரதிபலித்தல் குறித்தும் விளக்க மளிக்கிறார்.

மனிதனின் ‘பிரதிபலிப்பு’ மூளையின் செயல்பாடான மன உணர்வாகத் தோன்றுகிறது. அது தனிமனித மன உணர்வாகவும், சமுதாய மன உணர்வாகவும் வெளிப்படுகிறது. மனவுணர்வு படைப்பு தன்மை மிக்கதாக உள்ளது. எனவே அது குறிக்கோளை நிர்ணயித்து செயல்படுகிறது என்று கூறும் ஆசிரியர், ‘இயற்கை அப்படியே இருப்பது போன்றில்லாமல் மனிதன்’ இயற்கையை மாற்றுகிறான். மனித சிந்தனையின் உடனடி அடிப்படையாகவும் மிகவும் முக்கியமான அம்சமாகவும் இது திகழ்கிறது. இதன் மூலம் மனிதன் இயற்கையை மாற்றக் கற்றுக்கொண்டான். அவனது அறிவும் வளர்ச்சி பெற்றது’ என்ற ஏங்கல்ஸின் மேற்கோளைக் கூறி அதனை மேலும் விளக்குகிறார்.

மார்க்சீயத்தின் தோற்றத்தைப் பற்றிக் கூறவரும் ஆசிரியர், மார்க்சுக்கு முந்தைய பொருளாதார மேதைகளின் கருத்துக் களையும், தத்துவங்களையும் விளக்கிக் கூறத்தவறவில்லை. ஜெர்மனியிலிருந்து எழுதிய லுட்விக் பாயர்பாக்கின் பொருள்முதல்வாத கருத்துக்களை ஆதரித்த மார்க்சும் - ஏங்கல்சும் அதிலிருந்த குறைகளைக் களைந்து இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை உருவாக்குவதும், ஜெர்மானிய தத்துவ வாதியான ஹெகல் என்பவரின் கருத்து முதல்வாத சிந்தனைகளை விளக்கி அதற்கு மறுப்பாக பொருள்முதல்வாத இயக்கவியலை நிலைநாட்டுவதும் கூறப்பட்டுள்ளது.

பிரான்சின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் முழக்கங்களும், பிரிட்டனில் தொழிலாளர் சமூகம் அனுபவித்து வந்த பல்வேறு கொடுமைகளும் மார்க்சிய சிந்தனை உருவாவதால் முக்கிய பங்கு வகித்துள்ளது. “மார்க்சின் தத்துவம் முதலாளிய தனிச் சொத்துடமைக்கும், சுரண்டலுக்கும் எதிரானதாக இருந்தது. எனவே அது உழைக்கும் மக்களுடைய தத்துவமாயிற்று” என்று கூறும் தோழர் கீதானந்தன் சமுதாயத்தின் உழைப்பைச் சுரண்டவும், ஒரு சில தனி நபர்கள் கையில் செல்வம் குவியவுமான அமைப்பைத் தகுந்த சான்றுகளுடன் அம்பலப்படுத்துகிறார்.

மார்க்சீயத்தின் பங்களிப்பை விளக்குவதும் மார்க்சு-ஏங்கல்சுக்கு பிறகு லெனினின் சாதனைகளையும் பட்டிய லிட்டிருக்கிறார். இயக்கவியல் பொருள்முதல் வாதத்தினை விளக்கும் வகையில் இயக்கவியலின் முக்கியவிதிகளான எதிர்மறைகளின் ஒற்றுமை-போராட்டம் பற்றிய விதி, அளவு மாற்றம் குணமாற்றத்தை ஏற்படுத்தும் விதி, நிலைமறுப்பின் நிலைமறுப்பு பற்றிய விதி போன்ற விதிகளை எளிய தமிழில் பாமரனுக்கும் விளங்கும் வகையில் விளக்கியுள்ள விதம் பாராட்டுக்குரியது.

‘எதிர்மறைகளின் முரண்பாடுகளை ஆராய்வதுதான் இயக்கவியல்’ என்ற மாமேதை லெனினின் மேற்கோளில் தொடங்கி முரண்பாடுகளின் வகைமைகள் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன. அறிவு, புலனுணர்வு, புலனறிவு, படிமச்சிந்தனை, கருதுகோள், அபிப்ராயம், தீர்மானம், விஞ்ஞான அறிவு, அறிதலின் நடைமுறை, மொழியின் பங்களிப்பு, புறநிலை உண்மை, அறிவு பற்றிய கொள்கையின் அடிப்படை இயக்கவியல் பொருள் முதல்வாதமாக இருத்தல் - போன்ற செய்திகள் அற்புதமாகத் தகுந்த சான்றுகளுடன் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

மானுட சமூக வரலாற்றின் பொதுவான விதிகளை, சமூக வாழ்க்கை, சமூக உணர்வு இரண்டிற்குமிடையிலுள்ள இணையுறவினை ஆராயும் வரலாற்று பொருள் முதல்வாதம் பற்றிய கட்டுரை தெளிவாக அமைந்துள்ளது. அரசியல் பொருளாதார, விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு, ‘1844-ன் பொருளாதார, தத்துவக் குறிப்புகள்’ ‘புனித குடும்பம்’, ‘ஜெர்மானியத் தத்துவம்’, ‘தத்துவத்தின் வறுமை’, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ போன்ற நூல்களில் காணப்படும் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் பற்றிய அடிப்படைக் கருத்துக்களின் அடிப்படையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ‘வாழ்நிலையைத் தீர்மானிப்பது மனிதர்களின் உணர்வல்ல. மாறாக, சமூக வாழ்நிலையே அவர்களின் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன’ என்று கூறும் ஆசிரியர், இயற்கையைப் பற்றிய மனித அறிவின் எல்லை விரிவடைந்து கொண்டே போவதையும், இயற்கையைப் பாழ்படுத்தும் மனிதனின் செயலால் இன்று தீர்விற்குக் காத்திருக்கும் பிரச்சினைகளைப் பட்டியலிடுகிறார்.

உற்பத்தி சக்திகள் - உற்பத்தி உறவுகள் - உற்பத்தி சாதனங்கள் போன்றவை தனித்தனியான விளக்கங்களுடன் இல்லாவிட்டாலும் போகிற போக்கில் வாசகன் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். மார்க்சீய நூல்களைப் படிக்கும் போது அடிப்படையான சில சொற்களுக்கான வரையறையைக் கூறவேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன். உற்பத்தி சக்தி யார்? உற்பத்தி உறவுகள் யார்? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி விடை கூறிச் சென்றால் மார்க்சீயம் பயிலும் மாணவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். மார்க்சீயம் தொடர்பான நூல்களைச் சரளமாக படித்துக் கொண்டே போவதற்கு இந்தப் புரிதல் உதவக் கூடும்.

மார்க்சீயம் கற்பிக்கும் ஆசிரியராக தோழர் கீதானந்தன் இத்தகையப் புரிதலுடன் ஒவ்வொரு பகுதியையும் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். சான்றாக, ‘உழைப்பிற்கான பொருட்களும், உற்பத்திச் சாதனங்களும் உற்பத்தியிலீடுபடும் மனிதனும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் சேர்ந்து இவற்றை உற்பத்திச் சக்திகள் என்கிறோம். இவற்றில் தொழிலாளியே முதன்மையான உற்பத்திச் சக்தியாவான்’ என்று விளக்கம் தருவதை கூறலாம். இப்படி எளிய வரையறைகள் மூலம் தரப்படும் விளக்கங்கள் வாசகனின் மனதில் அழியாச் சித்திரங்களாய் பதியும் என்ற உளவியலை மனதில் வைத்துக் கொண்டு, தேவைப்படும் இடங்களில் ஒரு சில கவிதைகளையும் பயன்படுத்தி இருக்கிறார்.

ஒவ்வொரு சமுதாய அமைப்பிலும் உற்பத்தி சக்திகளே பிரதானமானவையாய் இருக்க அதற்கேற்ப உற்பத்தி உறவுகள் அமைகின்றன. சான்றாக முதலாளிய சமுதாயத்தில் முதலாளி - தொழிலாளி என்று உற்பத்தி உறவு அமைகிறது. ‘உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கேற்ப அமைந் திருப்பது, உற்பத்தியின் முன்னேற்றத்திற்கு அடிப்படையானது’ என்ற மார்க்சின் பொதுவிதியை விளக்கமாகக் கூறியிருக்கிறார். அதே சமயம் ‘இந்தியாவில் முதலாளிய உற்பத்தி உறவுகள், வறுமை, வேலையின்மைக்குக் காரணமாக அமைவதால்தான், பிரதான தொழில்கள் பொதுத் துறையிலும், கூட்டுறவுத் துறை, கூட்டுத்துறை, சில தொழில்களில் தனியார் துறை என பொருளாதார கட்டமைப்பைச் சீரமைக்க இடதுசாரிகள் கோரி வருகின்றனர்’ என்ற இந்திய நாட்டின் உற்பத்தி உறவுகள் குறித்துத் தனது கருத்தையும் பதிவு செய்யத் தவறவில்லை.

சமுதாய-பொருளாதார அமைப்பு குறித்து எழுதும் போது மேல்கட்டுமானம் - அடித்தளம் இவற்றைத் தெளிவாக எழுதியுள்ளார். ‘உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் இணைந்ததே சமுதாயத்தின் உற்பத்தி முறை. இதுவே சமுதாயத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீதே மேற்கட்டுமானம் அமைகிறது. பொருளாதார அடித்தளம் சமுதாயத்தில் தீர்மானகரமான பங்கினை வகிக்கிறது. மேல்கட்டுமானம் அரசு முதலியவை பொருளாதார அடித்தளத்தின் மீது செல்வாக்கினைச் செலுத்த முடியும். ஆனால் அடித்தளத்தில் ஏற்படும் மாற்றமே மேற்கட்டுமானத்தில் மாற்றத்தை நிகழ்த்துகிறது. ஒரு சமூக பொருளாதார அமைப்பு மற்றொன்றாக மாறி முன்னேறிச் செல்வதே மனித குல வரலாறு என்பதை கடந்த கால மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் தெளிவான விளக்கங்களுடன் அமைந்துள்ளது.

வரலாற்றின் வளர்ச்சி சமுதாயப் புரட்சிகளின் முன்னெடுத்துச் சொல்லப்படுகிறது. சில சமயங்களில் அது பின்னடைவைச் சந்தித்த போதிலும், மேலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். சோவியத் யூனியனின் வெற்றிகரமான சாதனைகளைத் தொடர்ந்து அந்நாடு மீண்டும் சிதைந்து பின்னடைவைச் சந்தித்தது. சோசலிசத்திலிருந்து விடுபட்ட நாடு தனக்கான மாற்றை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறது. சோசலிசத்திற்கான மாற்று எதுவுமிருக்க முடியாது என்பதை உணரும்போது மீண்டும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சி அமெரிக்கா தனது ‘ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை’ கட்டவீழ்த்து விடுவதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்றாலும் தென்னமெரிக்க நாடுகளில் கியூபாவைத் தொடர்ந்து வெனிசுலாவும் இன்னும் பல சிறிய நாடுகளும் மார்க்சீயத்தின் வழி வெற்றி நடைபோட ஆரம்பித்திருப்பது நல்ல திருப்பம் என்று கூறலாம். சீனாவை தலையெடுக்க விடாமல் தடுக்கும் அமெரிக்கச் சூழ்ச்சியை முறியடித்து, இந்தியா-சீனா-ரஷ்யா நாடுகள் அமெரிக்காவின் நாடு பிடிக்கும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்பது ஆசிரியரின் விருப்பமாக உள்ளது.

உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கலின் பின்னால் இருக்கும் பிற்போக்குச் சக்திகளை இனம்கண்டு கொண்டு, முற்போக்குச் சிந்தனைகளுடன் சமூக மாற்றத்திற் கான போராட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்ய வேண்டிய கட்டாயத்தை எளிய தமிழில் விளக்கியிருக்கும் தோழர். கீதானந்தனும், நூலை வெளியிட்டிருக்கும் என்சிபிஎச் புத்தக நிறுவனமும் பாராட்டுக்குரியவர்கள்.

மார்க்சிய சிந்தனை
ஆசிரியர் : எல்.ஜி. கீதானந்தன்,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 60.00.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP