Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

நூர் விமர்சனம்

வன்முறை திரைப்படம் பாலுறவு அழகியலும் அரசியலும்
சு.நலங்கிள்ளி

இன்றைய சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்றாக சினிமா உள்ளது. சொல்லப்படும் கருத்துக்கள், வன்முறை, பாலுறவு, இரட்டை அர்த்த வசனங்கள், அரசியல் மற்றும் வெற்றுக் கேலியும் கிண்டலும் தலைதூக்கி நிற்கின்றன. இவைக் குறித்த பொதுப் பார்வையை யமுனா ராஜேந்திரன் இந்நூலில் செலுத்தியுள்ளார்.

தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பாலுறவு சித்திரிப்புக் காட்சிகளுக்காக விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது பத்து வயதுடையோர் பார்க்க வேண்டிய படம், இது பதினெட்டு வயதுடையோர் பார்க்க வேண்டியப் படம், இந்தப் படத்தை அனைவரும் பார்க்கலாம் எனத் தணிக்கைக் குழுவினர் தரம்வாரியாக சரியான முறையில் பிரிக்க வேண்டும் என்கிறார். அவ்வாறே திரையரங்குகளில் மக்களை அனுமதிக்க வேண்டும். அமெரிக்காவில் வெளி வருகின்ற படங்கள் பாலுறவை வெளிப்படையாகத் தெரிவிக் கின்றன.

ஈரானில் பாலுறவு சம்மந்தமான காட்சிகளை வெளிப்படையாகக் காண்பிக்கக் கூடாது எனச் சட்டம் இருக்கிறது. மேற்சொல்லப்பட்டுவரும் செய்திக்காக ஆசிரியர் சில ஹாலிவுட் படங்களை உதாரணப்படுத்தியுள்ளார். அடுத்ததாக நாம் தமிழ்க்கலை உலகிற்கு வருவோம். நியூ, பாய்ஸ், அஆ (அன்பே ஆரூயிரே), புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விருமாண்டி போன்ற படங்கள் எந்த அளவிற்குச் சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளாயின என்பதை நாம் அறிவோம். இவை போன்ற செய்தியை முதல் கட்டுரை தெரிவிக்கிறது.

கற்பனைக்கெட்டாத உயரத்தில் கதைகளூடனான காட்சியமைப்பதில் ஹாலிவுட்காரர்கள் தலைசிறந்தவர்கள், உண்மையோ பொய்யோ கதைகளை மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க அவர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என வன்முறை நிறைந்த காட்சிகள் அதிகம் வைப்பார்கள் என்பது உறுதியான தகவல். தமிழ் சினிமாவும் ஹாலிவுட் அளவிற்கு மாறிவருகிறது. ஹாலிவுட்டின் சிறப்பென்பது; அவர்கள் கதைகளைப் பேய், பூதம் என வைத்துக் கொண்டாலும் தொழில்நுட்ப ரீதியாக படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, ஒலி அமைப்புச் சிறப்பாக இருக்கும். திரைப்படங்களில் அரசியல், உளவியல், அழகியல் ரீதியான வன்முறைகளைப் பெரும்பான்மை யான திரைப்படங்கள் சொல்லுகின்றன. இதுபோன்ற காரணத்தினால் ஹாலிவுட்டிலும் சில படங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றனவாம்.

பாலுறவு சம்மந்தமான பிரச்சினைகளைத் தினம் ஒரு செய்தியாக நாம் கேள்விப்பட்டு வருகிறோம். மேல்நாட்டு மக்களின் உடை மோகத்தாலும், சில தவறுதலான திரைப்படங் களினாலும் தமிழ் மக்கள் சீரழிகிறார்கள் என யமுனா ராஜேந்திரன் கொதிக்கிறார். பாலுறவை நவீனமாகவும் கொச்சைப்படுத்தியும் உள்ள சில அயல்நாட்டு மற்றும் சில தமிழ்மொழிப் படங்களை ஆசிரியர் பட்டியலிடுகிறார். இளம் வயதினர் பாலுறவை நாடுவதற்கான காரணங்கள் இக்கட்டுரையில் சொல்லப்படுகின்றன. தணிக்கைக் குழுவினர் பொறுப்பில் இது உள்ளது.

தணிக்கைக் குழுவிற்குச் சென்று வருகின்ற படங்களையும் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை. வசனத்திலும் ஆபாசம் தொனிக்கிறது. ஆக, தணிக்கைக் குழுவிற்கு என்ன வேலையென யோசிக்க வேண்டியிருக்கிறது. இம்மாதிரியான கருத்துக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளன.

‘பாய்ஸ்’ படத்தில் ஆபாசமான வசனமும், காட்சியமைப்பும் உள்ளதென நீதிமன்ற வழக்குகளும், சமூக அமைப்பினரின் போராட்டமும் நடைபெற்றதை நாம் அறிவோம். இன்னும் ஓர் முக்கிய செய்தி என்னவென்றால் தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், சங்க இலக்கியத்தோடு தொடர்புடையவருமான சுஜாதா தான் இப்படத்திற்கு வசனகர்த்தா. இப்படத்தைப் பற்றியான தெளிவான தன் கருத்தை வெளிப்படையாக ஆசிரியர் முன்வைக்கிறார். கலாச்சாரத் திணிப்பு உள்ள படம் என இதனைக் கூறுகிறார். இப்படியாகச் சொல்லிக்கொண்டே வரும்போது கல்லூரி மாணவர்களைச் சினிமாவில் காண்பிக்கும் போது பொறுக்கியாகத்தான் காண்பிக்க வேண்டுமா? என நியாயமான கேள்வியை யமுனா ராஜேந்திரன் சொல்கிறார். பெரும்பான்மையான படங்களில் இச்சித்திரிப்பு சொல்லப்பட்டு வருவதைக் காண முடிகிறது.

வன்முறை இருவிதமாகச் சொல்லப்படுகிறது. 1. உடல் சார்ந்தது, 2. உள்ளம் சார்ந்தது. பிராமண வர்க்கத்தை ‘சமூகம்’ எந்த அளவிற்குப் புனிதமாக நினைக்கிறதோ அதே அளவிற்குத் தமிழ்த் திரைப்படங்கள் புனிதப்படுத்தியும், கொச்சைப்படுத்தியும் சொல்லப்பட்டு உள்ளன. வில்லனாகக் காண்பிக்க கூடியவர்கள் பேட்டை ரவுடி, சமூக விரோதி எனச் சித்திரிக்கப்படுபவர்கள், சேரிபாஷை பேசுபவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும், கிறித்தவர்களாகவும் அதிகபட்சமாக நிறைய படங்கள் சொல்லியிருக்கின்றன.

தெலுங்கு மொழி பேசுபவர்கள் நக்கலுக்குரியவர்களாகவும் காண்பிக்கப் படுகின்றன. ‘கலை’ என்ற நோக்கில் வெளியிடக்கூடிய படங்கள் சாதிய வன்முறைகள் நிறைந்திருக்கின்றன. கமலஹாசனின் தேவர்மகன், விருமாண்டி போன்ற படங்கள் சாதிய வன்முறை நிறைந்தது. ஆனால் கமலஹாசன் சாதிய உணர்வோடு செயல்படுவதில்லை. செயல்படுவாரானால் இசைஞானி இளையராஜாவின் நெருங்கிய நண்பராக கமலஹாசன் இருக்கமாட்டார். தொடர்ந்து இக்கட்டுரையைப் படிக்கும்போது, தேசிய அளவிலான சில பிரச்சினை சொல்லப்படுகிறது. நல்ல விஷயங்களைக் கொடூரமாகக் காண்பிப்பது சினிமாவில் வழக்கமான பாணியாகிவிட்டது. இவ்வாறாக ஐந்தாம் மற்றும் ஆறாம் கட்டுரைகள் சொல்லுகின்றன.

போலீஸ் சம்மந்தமான கதைகள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அரசாங்க ஊழல், வன்முறை, சாதிச்சண்டை, நிலத்தகராறு என ஏதேனும் ஒன்றாய் கதை அமைத்து ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை ஆகியவற்றை ஒருசேர நகர்த்தினால் படம் வெற்றியடையும் என்பது தெளிவான உண்மை. விக்ரம் நடித்த ‘சாமி’, சூர்யா நடித்த ‘காக்க காக்க’, கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ இவை எடுத்துக்காட்டு. அதிகபட்சமாக நடிகர்கள் இம்மாதிரியான படத்தில் நடிக்கக் காரணம் அவர்களுடைய புகழ் பேசப்படும் என்பதுதான்.

காற்றுக்கென்ன வேலி, கன்னத்தில் முத்தமிட்டால், நந்தா, புன்னகை மன்னன், தெனாலி போன்ற படங்கள் இலங்கை மக்களோடும், இலங்கைத் தமிழரின் சில பிரச்சினைகளைச் சொல்வன. மணிரத்தினமும் இடை இடையே சினிமாவை விட்டுப் போயிருந்தாலும் தனக்கான இடத்தைச் சரியாகப் பதித்துக்கொள்கிறவர். பம்பாய் படத்திற்குப் பிறகு அவருக்கு வந்த பிரச்சினைகளை நாம் அறிவோம். அஜீத், விஜய், விக்ரம் என்கிற நடிகர்களுக்குக் கதை சொல்ல கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டிருக்கின்ற நபர்களுக்கு மத்தியில் இது போன்ற படங்களை நாம் வரவேற்போம்.

அரசியல் தன்மை கொண்ட படங்களை வெளியிடும் போது இரண்டு விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

1. படத்தில் காட்டப்படுகின்ற ஆணுக்கும், பெண்ணுக்கும் காதல் இருந்தே தீரவேண்டும் என்பதைத் தவிர்க்க வேண்டும்.

2. வரலாற்று ரீதியான அரசியல் முரண்பாடுகளை நேரடியானச் சித்திரிப்பில் எதிர்கொள்ள வேண்டும். காத்திர மான அரசியல் முரண்பாடுகளைத் தமிழ்சினிமா உணர்ச்சிவசக் கதை சொல்லலில் தீர்த்துக்கொள்கிற மனோரீதியான மனப்பாங்கு இங்குத் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்.

ஒன்பதாவது கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் இயக்குனர் பாலாவை நன்கு நோக்கியிருக்கிறார். பாலுமகேந்திராவிடம் திரை நுணுக்கம் கற்ற பாலா இதுவரை மூன்று திரைப்படங்களைத் தமிழ்க் கலை உலகிற்குத் தந்துள்ளார். மனநோயாளியாக விக்ரம் (சேது), தகப்பனைக் கொல்லும் சூர்யா (நந்தா), சுடுகாட்டில் பிறக்கும் விக்ரம் (பிதாமகன்) எனப் பாலா எடுத்துக்கொள்ளும் பாத்திரம் வித்தியாசமானது. ஓர் நடிகனோ, நடிகையோ அவர்கள் நடித்த முந்தைய படத்தின் பிரதிபலிப்பு ‘பாலா’ படங்களில் நடிக்கும்போது தெரிவதில்லை என பாலாவின் உண்மையான புகழ் இங்குப் பேசப்படுகிறது.

கமலஹாசனின் ‘ஆளவந்தான்’ படம் ‘குணா’ படத்தின் தொடர்ச்சி எனலாம். வழக்கமாக வருகின்ற காதல்கதை போல் இல்லாமல் சற்று மாறுதலாக வருகின்ற இந்த மாதிரியான படங்கள் ரசிப்பூட்டுவன. பல்வேறு அழுத்தமான பிரச்சினையைச் சித்திரிக்கும்போது, சித்திரிக்கிற பிரச்சினைக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை நேர்மை நமது சினிமாக்களில் காணப்படுவதில்லை.

அடுத்ததாகச் சினிமாவிற்கான அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருப்பதில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களைச் சினிமாக்காரர்கள் எதிரியாகவே நினைக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்கலை உலகத்தை ஆட்கொண்டிருக்கும் பிரச்சினை தமிழில் பெயர்வைக்க வேண்டும் என்பதுதான். இதற்கிடையே குஷ்பு, ‘கற்பைப்’ பற்றித் தெரிவித்த கருத்து ‘தங்கர்பச்சன்’ பிரச்சினையென ஒவ்வொன்றாக வந்த செய்திகள் சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளும் நிறைய போராட்டங் களும், நீதிமன்ற வழக்குகளும் ஏற்படுத்த வழிவகுத்தன. அரசியல் தலையீடுகள் இல்லாமல் எந்தப் படமும் வரமுடியாது. மக்களுக்காக முக்கியமான பொறுப்பில் அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சமுதாயத்தைச் சீர்செய்ய வேண்டும் என்கிற நோக்கில் வெளியிடக்கூடிய கருத்தைச் சினிமாக்காரர்கள் ஏற்க வேண்டும்.

மொத்தத்தில் யமுனா ராஜேந்திரன் எழுதிய இப்புத்தகம் சினிமாவின் வன்முறை, பாலுறவு, அழகியல், அரசியல் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. சினிமா சம்மந்தப்பட்டவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது. நல்ல அறநெறிகளைத் தெளிவாகக் கூறியுள்ளார். இம்மாதிரியான தலைப்பை வைத்துக்கொண்டு எழுதும்போது பெரும்பாலான எழுத்தாளர்கள் அதிக கோபப்பட்டே எழுதுகிறார்கள். ஆனால் இவர் பொறுமையாகப் பொருளை விளக்கியிருக்கிறார். சமகால மனிதர்களே...... கண்டிப்பாகப் படியுங்கள்.

வன்முறை : திரைப்படம் : பாலுறவு அழகியலும் அரசியலும், ஆசிரியர் : யமுனா ராஜேந்திரன்,

வெளியீடு : இமேஜ் & இம்ப்ரெஷன்,
11,29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம்,
சென்னை - 600 018, விலை : ரூ. 60.00


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com