Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

கட்டுரை

மே நாளின் அரசியல் பின்னணி
நாகை கே.முருகேசன், ஆர்.பார்த்தசாரதி

தொழிலாளர் வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டமும் இணைந்துள்ள இயக்கமே மே நாள் பெருவிழா.

தொழிற் புரட்சி முதன் முதலில் பிரிட்டனில் வெடித் தெழுந்தது, முதலாளித்துவம் பிறந்தது. முதலாளித்துவக் கொடுமைகளால் ஆற்றொணாத் துன்பத்திலாழ்ந்த தொழிலாளி வர்க்கம் ஜனநாயக அரசியல் உரிமைகளைப் பெறச் சங்கங்களில் திரண்டது. இயக்கம் கண்டது.

லவட் என்பார் தலைமையிலியங்கிய இலண்டன் ஒர்க்ஸ்மென் அசோசியேஷன் 1837-ஆம் ஆண்டு சார்டிஸ்டு இயக்கத்தைத் தொடங்கிற்று. ஆறு கோரிக்கைகளடங்கிய சாசனமொன்றைத் தயார் செய்து ஐம்பது லட்சம் மக்கள் கையொப்பம் பெற்றுப் பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தது. பாராளுமன்றம் அதனை நிராகரித்தது.

சார்டிஸ்டு இயக்கத்தின் தலைவர்களிலொருவரான ஸ்டீபன்ஸ் பாதிரியார் சார்டிசம் என்றால் தொழிலாளருக்கு வாழ நல்ல வீடு, உண்ண நல்ல உணவு, துன்ப துயரமற்ற வாழ்க்கை, குறைந்த நேர வேலை என்று பொருள் என்று விளக்கம் தந்தார். “வடதாரகை” என்னும் இதழ் இயக்கக் கோரிக்கைகளை நாடெங்கும் பரப்பிவந்தது.

கோரிக்கைச் சாசனத்தைப் பாராளுமன்றம் நிராகரித்தது என்றாலும் இயக்கம் துவண்டு விடவில்லை. மாறாகச் சூடுபிடித்தது. மூன்றாண்டுகள் தொழிலாளர் போராட்டங்கள் அலை மோதி எழுந்தன. வேலை நிறுத்தங்களும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களும் சீறி எழுந்தன. பிரிட்டிஷ் அரசு எல்லா அடக்கு முறைக் கருவிகளையும் பிரயோகித்துக் கடுமையாக வன்முறையில் தாக்கிச் சார்டிஸ்டு இயக்கத்தை ஒடுக்கிற்று. அலை தற்காலிகமாக ஓய்ந்தது. ஆனால் இயக்கத்தின் வீச்சு நாடெங்கணும் ஒலித்தது. மக்கள் நீறுபூத்த நெருப்பாயினர்.

1845-ஆம் ஆண்டு பிரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதினார், “சார்டிஸ்டு இயக்கத் தலைவர்களில் பலர் ஏற்கனவே கம்யூனிஸ்டுகள்” என்று, இவர்களுக்கும் மார்க்ஸ்-ஏங்கெல்சுக்கும் தொடர்புண்டு. இவ்வியக்கத்தின் நேர்வாரிசுகளாகவே இலண்டனில் நீதிவாதிகள் சங்கம் (டுநயபரந டிக வாந துரளவ) என்னும் அமைப்பு உருவாயிற்று. 1847-ஆம் ஆண்டு மார்க்ஸ் ஆலோசனையின் பேரில் ஏங்கெல்ஸ் இச்சங்கத்தின் மாநாட்டில் பங்கு பெற்றார். அதே ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றம் “பத்து மணி நேரம்”, என்ற சட்டத்தை நிறைவேற்றும்படியான நிர்ப்பந்தத்துக்கு உள்ளாயிற்று. இச்சட்டம் பிரிட்டனுக்கு மட்டுமே. பிற நாடுகளில் வேலை நேரம் குறையவில்லை.

1848-ஆம் ஆண்டு மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தலைமையில் இயங்கத் தொடங்கிய பிறகே நீதிவாதிகள் சங்கம் கம்யூனிஸ்ட் லீக் என்ற பெயர் பெற்றது. “உலக மக்கள் எல்லாரும் சகோதரர்களே” என்ற விவிலிய கோஷத்துக்குப் பதிலாக, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற கோஷம் தாரக மந்திரமாயிற்று. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை 1848 பிப்ரவரி 24இல் வெளிவந்தது.

அமெரிக்கப் புரட்சியும் (1771), இரு பிரெஞ்சுப் புரட்சிகளும் (1789, 1848) ஜெர்மன் புரட்சியும் (1848) இத்தாலி, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளில் உருவான எழுச்சிகளும் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து வலுப்படுத்தின. அதேபோது முதலாளித்துவத்தை அழித்தொழிக்கும் வல்லமை வாய்ந்த தொழிலாளி வர்க்க இயக்கமும் தோன்றிற்று.

முதலாளித்துவம் படித்த அறிவாளிகளைப் படைத்தது. இவர்கள் தொழிலாளர்களிடை ஊடுருவினர். முதலாளித் துவத்துக்கு ஆதரவு திரட்டவும், அதுவே ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் நிலை நாட்டும் நோக்கமுள்ளது என்னும் கருத்தைப் பரப்பவும் முயன்றனர். முதலாளித்துவக் கொடுமை களைத் தாங்கி முதலாளித்துவக் கைக் கூலிப் பிரச்சாரகர் களையும் எதிர்காண வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது. சார்டிஸ்டு இயக்கமும், கம்யூனிஸ்டுக் கழகமும் தோன்றின. ஐரோப்பாவின் பல தலைநகர்களில் கம்யூனிஸ்டுக் கருத்துப் பரிமாற்றக் கழகத்தின் கிளைகள் தோன்றித் தொழிற்சங்கங்களை உருவாக்கின; இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்தின; கம்யூனிசக் கருத்துக்களைப் பரப்பின.

மார்க்சும், ஏங்கெல்சும் மக்கள் சோஷலிசம், உண்மை சோஷலிசம், அராஜக வாதம் என்று பல பெயர் தாங்கித் தொழிலாளரிடைப் பரவிய புல் பூண்டுகளைக் களைந்தெறிந்தனர்.

தொழிலாளர் அமைப்புகளில் திரண்டு வர்க்க உணர்வு பெற்றுப் போராடுவதை ஊக்குவிக்கவும், அரசியல் பொருளாதார மெய்யியல் தெளிவு பெறவும், மார்க்ஸ் 1864ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று இலண்டனில் முதலாவது அகிலத்தை ஏற்படுத்தினார். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களை அது ஈர்த்தது. செயல் திட்டமும் அமைப்பு விதிகளும் வரையறுக்கப்பட்டன. பிரிட்டிஷ் பாராளுமன்றம் “பத்து மணி நேரம் வேலை” என்று நிறைவேற்றிய சட்டம் முப்பதாண்டு காலமாகத் தொழிலாளி வர்க்கம் இடைவிடாது போரிட்டதன் விளைவு என்று வருணித்ததோடு, ஸ்தாபன அடிப்படையில் திரண்டு அரசியல் அதிகாரத்தை ஏற்பதற்காகப் போராடி வெற்றி பெற்றாலன்றி அவ்வர்க்கத்துக்கு விடிவில்லை என்று செயல் திட்டம் வலியுறுத்திற்று.

இச்செயல் திட்டத்தை ஒளிவிளக்காகவும், கையேடாகவும் வழி காட்டியாகவும் ஏற்ற அமெரிக்க, ஐரோப்பிய உழைக்கும் வர்க்கங்கள் எண்ணற்ற தொழிற் சங்கங்களை உருவாக்கின; ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கங்களில் திரண்டனர்; நாள்தோறும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் பின்னணியில் பாரிஸ், கம்யூன் எனப்படும் முதலாவது உலகத் தொழிலாளர் அரசு பாரிஸ் நகரில் 1871 ஆம் ஆண்டு எழுந்தது. முதலாளித்துவம் உள்நாட்டுப் போரைத் தொடங்கிற்று; உழைக்கும் வர்க்கத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. போர்ப்பயிற்சியும் சுதந்திரமும் வல்ல முதலாளிகள் படைமுன் பயிற்சியும் அனுபவமும் அற்ற தொழிலாளர் வீரப்போர் புரிந்தும் முன்னிற்க மாட்டாது தோற்றனர். முப்பதாயிரம் மக்கள் சுட்டுப் பொசுக்கப்பட்டனர், தொழிலாளர் அரசு வீழ்ந்தது.

ஆனால், உலகத் தொழிலாளி வர்க்கம் இத்தோல்வியால் துவண்டு விடாமல் மேலும் உறுதியும் வலிமையும் பெற்று அரசியல் போராட்டத்தில் ஈடுபடலாயிற்று.

மார்க்ஸ் நிறுவிய முதலாம் அகிலத்தில் நாளடைவில் அதிதீவிர இடதுசாரிகளும், அராஜகவாதிகளும் ஊடுருவினர். எனவே, ஏங்கெல்சு ஆலோசனைப்படி அகிலத்தின் தலைமைச் செயலகம் அமெரிக்க நகரம் நியூயார்க்குக்கு 1873இல் மாற்றப்பட்டது. அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கம் மிகவேகமாக வளரத் தொடங்கிற்று.

ஜெர்மனியில் பிறந்து இசை பயின்று ஆசிரியராகி கார்ல் மார்க்சின் அரிய நண்பராகி ஐரோப்பியப் புரட்சி இயக்கங்கள் பலவற்றில் நேர் பங்கு பெற்றுத் தலைவராக இலங்கிய சோர்ஜ் அமெரிக்காவில் குடியேறி இருந்தார். அவரையே அகிலம் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. மார்க்சியத்தில் நம்பிக்கையுடைய பல தொழிற்சங்கவாதிகள் செல்வாக்கு மிக்கவர்கள்; பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள். குறிப்பாக, 1871 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாள் நியூயார்க்கில் எட்டு மணி நேர வேலை கோரி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கியோர், நீக்ரோ மக்களைப் போராட்டங்களில் திரட்டியோர் இவர்களே.

ஐரோப்பாவிலிருந்து வெகு தொலைவுக்கப்பால் தலைமைச் செயலகம் மாற்றப்பட்டு விட்டதனால், ஐரோப்பியத் தொழிற்சங்கத்துடன் தொடர்பற்றுப் போய்விட்டது; இயக்கம் குறுகிற்று. ஆகவே, 1876 ஆம் ஆண்டு முதலாவது அகிலம் கலைக்கப்பட்டு விட்டது. 1870 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலை நிறுத்தங்கள் அதிகரித்தன; பங்கு பெற்ற தொழிலாளர் எண்ணிக்கையும் பன்மடங்கு பெருகிற்று.

1875ம் ஆண்டு அமெரிக்காவில் 15000 பஞ்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தனர். பத்து மணி நேர வேலை கோரி பென்சில்வேனியாவில் சுரங்கத் தொழிலாளர் ஏழு மாதம் வேலை நிறுத்தம் செய்தனர். இவ்வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தலைமை வகித்த பத்தொன்பது தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

பத்தொன்பது தலைவர்களைத் தூக்கிலிட்டதனால் தொழிலாளி வர்க்கத்தை நசுக்கி ஒழித்து விட்டோம் என்று இறுமாந்திருந்த முதலாளிகளுக்கும் அமெரிக்க அரசுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. 1886ஆம் ஆண்டு மே தினம் அறைகூவலாக வந்தது. நியூயார்க்கிலிருந்து சிகாகோ வரை பல்லாயிரக் கணக்கான தொழிலாளர் எட்டு மணி நேர வேலை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“எட்டு மணி வேலை நேரம்” என்னும் போராட்டத்துக்கு சிகாகோ மையமாக அமைந்தது. 1886 மே முதலிரு நாள்கள் 40,000 தொழிலாளர்கள் இடைவிடாது ஆர்ப்பாட்டம் நடத்தினர். நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த எண்ணிக்கை குறைந்ததன்று. ஆர்ப்பாட்டத்தைச் சீர்குலைக்க வேண்டுமென்று முதலாளிகளும் போலீசாரும் முயன்றனர். இன்னான் என்றறிய முடியாத நபர் போலீசாரை நோக்கிக் குண்டு வீசினான். ஒரு போலீஸ்காரர் இறந்தார். ஐவர் காயமுற்றனர். இது போதும் போலீசாருக்கு. தொழிலாளர்களை நோக்கிச் சகட்டு மேனிக்குச் சுட்டனர். அறுவர் மாண்டனர்; ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். இதனோடு முடியவில்லை.

ஆர்ப்பாட்டத் தலைவர்களான ஆல்பர்ட்பார்சன், ஆகஸ்டு ஸ்பைஸ், சாமுவேல் பீல்டன், யூஜென் ஸ்வாய், அடால்ப் பிஷர் ஜார்ஜ் ஏங்கெல், லூயி லிங், ஆஸ்கார் நீமே என்னும் எண்மர் மீது அரசு வழக்குத் தொடுத்தது. பலரைக் கைது செய்தது. தொழிலாளர் முற்போக்கு இயக்கங்கள்பால் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொண்ட சிலரைப் பொறுக்கி எடுத்து ஜூரர்களாக, (முதலாளிகளை, முதலாளி கைக்கூலிகளை) நியமித்தது. சாட்சிகள் விலைக்கு வாங்கப்பட்டனர். கையூட்டு தரப்பட்டது.

நிலை குலையாத சிந்தை குன்றாத உறுதி தளராத வீரம் பொங்கத் தலைவர்கள் நீதி மன்றத்தில் போராடினர். உலகத் தொழிலாளி வர்க்கம் ஆர்த்தெழுந்தது. வழக்கை எதிர்த்துத் தீர்மானங்களை நிறைவேற்றிற்று என்றாலும் எழுவருக்குத் தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் ‘நீதி மன்றம்’ வழங்கிற்று.

தண்டனை வழங்கப்பட்டவுடன் உலகெங்கணுமுள்ள தொழிலாளர் தலைவர்களும், பெர்னார்ட்ஷா, இங்கர்சால் போன்ற சிந்தனையாளர்களும் எல்லாத் தோழர்களையும் விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அமெரிக்க அதிபர் வேண்டுகோளை நிராகரித்தார். மீல்டன், ஸ்வாய் ஆகிய இருவர்க்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. லிங் என்ற இளம் தோழரைச் சிறையிலேயே அடித்துக் கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் பொய்த் தகவலை அதிகாரிகள் பரப்பினர். பார்சன்ஸ், ஸ்பைஸ், ஏங்கல், பிஷர் என்னும் நான்கு தோழர்கள் தூக்கிலிடப்பட்டனர். தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரு சில ஆண்டுகளில், வழக்கு சோடிக்கப்பட்டது. ஜுரர்கள், முதலாளிகள், முதலாளிகளது கைக்கூலிகள், சாட்சிகள் விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டது.

போலீஸ் தடியடியும், துப்பாக்கிப் பிரயோகமும், ஒடுக்கு முறைகளும் (அ) நீதி மன்றங்களும், தூக்குத் தண்டனையும், ஆயுள் சிறைவாசமும் இன்னபிற அச்சுறுத்தல்களும் தொழிலாளி வர்க்கத்தை நிலைகுலையச் செய்துவிடவில்லை. தொழிலாளர்கள் முன்னிலும் அதிகமான தெளிவும், திட சித்தமும், துணிவும், தியாக உணர்வும் பெற்றுப் போராட்டக் களத்தில் பவனி வரலாயினர்.

இந்தப் பின்புலத்தில் பிரெடரிக் ஏங்கெல்ஸ் தலைமையில் 1889 ஆம் ஆண்டு பாரிசில் இரண்டாம் அகிலம் அமைந்தது. தொடக்க மாநாட்டிலேயே ஏங்கெல்ஸ் வழிகாட்டத் தொழிலாளி வர்க்கம் வாழப் பிறந்த வர்க்கம், போராட்டமே அதன் வழி என்பதனை நினைவு கூர்வதற்காக ஒவ்வோராண்டும் மே முதல் நாள் உலகத் தொழிலாளர் விழா நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. நாடு, நிறம், இனம், மொழி, மதம், சாதி என்னும் பாகுபாடுகள் மறந்து - கடந்து உழைக்கும் வர்க்கம் ஒரே வர்க்கம் என்ற உணர்வூட்ட விழாவெடுக்கும் நாள் மே நாள்.

காமின்டர்ன் என்றழைக்கப்படும் மூன்றாவது அகிலம் 1919ஆம் ஆண்டு இரண்டாம் அகிலத்தின் தோற்றத்துக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு - லெனின் தலைமையில் 7-11-1919 இல் உலகில் 6-இல் ஒரு பாகமான ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்தது. இந்த அகிலம் தொழிலாளி வர்க்கம் வாழப் பிறந்த வர்க்கம் மட்டுமன்று, ஆளப்பிறந்த வர்க்கம் என்பதனை நினைவூட்டி வலுவூட்டு வதற்காக மே முதல் நாள் கொண்டாடப்படவேண்டும் என்று முடிவெடுத்தது.

1886-1986 : நூறு ஆண்டுகள். எத்தகைய மகத்தான மாற்றங்கள்! இரண்டு உலகப் பெரும் போர்கள், 1917 ஆம் ஆண்டு மகத்தான அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்றது. 1919 ஆம் ஆண்டு மூன்றாம் அகிலம் பிறந்தது. மே நாள் பற்றி முடிவெடுத்தது. இதன் ஒலி கேட்டு 1923 ஆம் ஆண்டு மே 1-ந் தேதி இந்தியாவில் முதன் முதலில் மே நாள் விழாவெடுத்தார் - ஏஐடியுசி தலைவரும் கம்யூனிஸ்டு தலைவருமான மா. சிங்காரவேலர் - சென்னை நகரில்.

1927 மார்ச் மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற ஏ.ஐ.டி.யூ.சி. மாநாட்டின் திறப்பு விழாவை ஆற்ற பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சக்லத்வாலா 1927 ஜனவரி லண்டனிலிருந்து பம்பாய் வந்து சேர்ந்தார். சென்னையிலிருந்து சிங்காரவேலு சென்னை நகருக்கு உடனே வரும்படி தோழர் சக்லத்வாலாவுக்கு அனுப்பி இருந்த தந்தியைப் பெற்றுக் கொண்டு, சென்னை நகருக்குத் தோழர் சக்லத்வாலா வந்தார். தோழர் ம. சிங்காரவேலு ஏற்பாடு செய்திருந்த 5 கூட்டங்களில் தோழர் சக்லத்வாலா முழங்கினார். டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் மே தினத்தை வருடா வருடம் மே 1-ந் தேதி இந்தியா பூராவும் தொழிற் சங்கங்கள் தொழிலாளர்கள் நடத்துமாறு தோழர் ம. சிங்காரவேலு தோழர் சக்லத்வாலாவிடம் வேண்டிக் கொண்டபடி, டெல்லி ஏஐடியுசி இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற தோழர். சக்லத்வாலா ஆவன செய்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் பெரும் போர் நடைபெற்ற காலம் (1939-1945) உலகத் தொழிலாளி வர்க்கத்துக்குச் சோதனை நிரம்பிய காலம். தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு நேரெதிராக அவ்வர்க்கத்தை அடக்கி ஒடுக்குவதற்காக உருவான பிற்போக்கு இயக்கம் பாசிசம். தொழிலாளர் அரசை வீழ்த்தி மாஸ்கோவில் பாசிசக் கொடியை நாட்டுவேன் என்று ஹிட்லர் கொக்கரித்து 1941 ஜூன் 22-ல் சோவியத் யூனியன் மீது படை எடுத்தான். ஆனால் காலம் அவனுக்குக் கொடும் தண்டனை விதித்தது.

வரலாறு உழைக்கும் வர்க்கத்தினர் பக்கமே உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் பெர்லினில் பாராளுமன்றக் கட்டடத்தின் மேல் தொழிலாளி வர்க்கத்தின் சின்னமான செங்கொடி உலக பாசிஸ்ட் எதிர்ப்புப் போரில் (1941-45) வெற்றி பெற்ற சோவியத் செஞ்சேனையால் ஏற்றப்பட்டது. பெர்லினில் செஞ்சேனை புகுந்தது என்று கேட்டதும், கொடும்பாவி இட்லர் தற்கொலை செய்து கொண்டு மாண்டான்.

இப்போரில் ஐந்து கோடி மக்கள் மாண்டனர்; அவர்களில் சோவியத் மக்கள் மட்டும் இரண்டு கோடி. பாழ்பட்டழிந்த செல்வம் பலகோடி. அன்று முதல் இன்று வரை உலகத் தொழிலாளி வர்க்கம் உலக சமாதானத்திற்காக அரும்பாடு பட்டு வருகிறது - உலகப் பாட்டாளி மக்களின் மாபெரும் புரட்சித் தலைவன் சோவியத் யூனியன் நல்வழி காட்டுதலின்படி. 1945-இல் று.கு.கூ.ரு. உலகத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. மே தினம் உலகில் கொண்டாடப் பட நல்வழிகாட்டிற்று.

நூறே ஆண்டுகள். மகத்தான மாற்றங்கள். உலகின் மூன்றிலொரு பகுதியில் சோஷலிசம் மலர்ந்து விட்டது. வேறு சில நாடுகள் சோஷலிசத்தை நாடிச் செல்லுகின்றன. பல நூற்றாண்டுகளாக ஏகாதிபத்திய - காலனி ஆதிக்க நுகத்தடியில் சிக்குண்டு வதைந்த நாடுகள் - நூற்றுக்கு மேல் - விடுதலை பெற்று விட்டன. ஏகாதிபத்திய நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் வாழும் கோடிக் கணக்கான உழைக்கும் மக்கள் சமத்துவத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இடைவிடாது போராடி வருகின்றனர்.

நூறே ஆண்டுகள்! மகத்தான மாற்றங்கள். ஆம்! மார்க்சியம்-லெனினியத்தின் ஈடிணையற்ற மகத்தான சாதனைகள்! வரலாற்றின் வலிமைமிக்க சகடங்கள் ஆற்றையும் மண்ணையும் மலையையும் பாலையையும் பனியையும் இன்னல்கள் - இடுக்கண்கள் பலவற்றையும் புறங்கண்டு புயல் வேகத்தில் உருண்டு முன்னேறுகின்றன.

ஆம்! உலக நாடுகள் எல்லாவற்றிலும் தொழிலாளி வர்க்கம் வெற்றி பெற்று அரியணை ஏறி ஆட்சி அமைக்கும் இறுதி நாள்வரை மே-கண்ட அரசியல் இயக்கம் நில்லாது, ஓயாது.

உழைக்கும் வர்க்க இயக்கத்தில் வீழ்ந்த எண்ணற்ற தியாகிகளுக்கு - கருகி உதிர்ந்த எண்ணற்ற மலர்களுக்குத் தலை தாழ்த்திக் கை குவித்து அஞ்சலி செய்வோம்!

உலகும் எதிர்காலமும் உழைக்கும் வர்க்கத்துக்கே சொந்தம், வெற்றிக் கனி பறிக்க விரைந்து பணியாற்றுவோம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com