Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

நூர் விமர்சனம்

காதல் என்னும் சரண்:   ‘மஞ்சள் வெயிலை’ முன்வைத்து..
இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்

மொழி எல்லாவற்றையுமே தன்னகத்தே வைத்துக்கொண்டுள்ளது. மொழியில் காக்கப்படும் பேரரறிவுப் பிரவாகத்திலிருந்தும், அதனுள் இயங்கிக்கொண்டே இருக்கும் வாழ்வுப் பதிவுகளி லிருந்தும் ஒரு படைப்பாளி படைப்புகளை உருவாக்கிக் கொள்ள இயலும். ஆயினும் மொழியிலிருந்து தொகுக்கப்படும் / கண்டெடுக்கப்படும் படைப்புகளைவிட வாழ்விலிருந்து தொகுக்கப்படும் படைப்புகள்தான் இன்றைக்கும் தேவையாய் இருக்கின்றன. அவை ஒரு நுட்பமான படைப்பாளியால் உருவாக்கப்படும்போது, வாசகனை பேரானந்தத்திலும் அதிர்ச்சியிலும் / ஒரு இனிய அனுபவத்துள்ளும் அமிழ்த்துகின்றன.

யூமா. வாசுகியின் சொற்கள் கதிர்வீசும் தன்மை கொண்டவை. ஒரு கவிதையில் ஒரு சொல் வந்தமரும் தருணமும் இடமும், ஒரு கல் நகையின் வண்ணக்கல்போன்று பளீரிட்டு செழுமை சேர்ப்பவை. இந்தக் கவனமும், எச்சரிக்கையும், தேர்வில் பங்காற்றும் அழகுணர்ச்சியும், நாவல் போன்ற படைப்புகளில் அத்தனைக் கவனம் பெறுவதில்லை வழமையாக.

ஆனால் மஞ்சள் வெயிலில், ஒரு நிகழ்த்துக்கவிதையாக நீள்கிறது வாசுகியின் கவியாளுமை. கவிதைக்குள் இயங்கும் சிறுகதைகள், சொலவடைகள், பாடல்கள், எண்ணத்தெறிப்புகள், உவமைகள், உருவகங்கள் போன்று நாவலில் கவிதைகள் இயங்கமுடியும் என்று நிறுவியிருக்கிறது இந்நாவல்.

“பார்த்தவிடமெல்லாம் பட்டென்று திகைப்பின் தருமை பூசப்பட்டு விட்டது. காலத்துயில் நீங்கிய மலைப்பாம்பு உடல் விடைத்துத் திமிர்ப்புடன் நெளிந்து நீள்வதாக ஆர்வத்தின் பெருநாக்கு நீவும் மூளையில் பனிக்குளிர்மை. காதலை யாசித்து விரிந்திருக்கிற எண்ணித்தொலையாத என் கரங்களும், காமத்தில் எரிந்து எரிந்து அடங்கிப் புகையும் கணக்கற்ற என் தலைகளும் என் கட்டுப்பாட்டை மீறித்தன் அடையாளங்களை வெளியிட்டு விடுமோவெனும் பதைப்பு” (பக்கம் - 17) என்ற பகுதியே இதற்குச் சான்று.

காதலும் காமமும் மனிதர்களின் இயல்பான உணர்வு / உடல் தேவைகள். காதல் குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளாக நாம் பேசிக்களித்துவிட்டிருக்கிறோம். நமது சங்க அகப்பாடல் களின் காதல் உணர்வுகளின் பட்டவர்த்தனமும், எளிமையும், நேர்மையும் அது சமூக ஒழுங்குகளில் எந்த நெருடலும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டப்பாங்கும் நம்மை இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழவும் வியக்கவும் வைக்கின்றன.

ஆனால் இன்று ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாகக் கொள்ளும் காதல் உணர்வுகள் எங்ஙனம் ஒரு நுண் அரசியலாகி முக்கியத்துவம் பெற்று வன்முறைகளுக்கு இட்டுச் செல்கின்றன என்பதையும், இதில் சாதி, மதம் போன்ற நிறுவனமயமான கருத்துருக்களின் தாக்கம் எத்தனைக் கொடூரமானதாக இருக்கிறது என்பதையும் தமிழ்த்தினத்தாள்களை வாசிக்கும் யாரும் உணரலாம். மனித உணர்வுகளில் தலையாய ஒரு உன்னத உணர்வை இந்த அளவிற்கு நீர்த்துப் போகச் செய்யும், வன்முறைக்காட்படுத்தும் ஒரு சூழல் உலகில் வேறு எங்கினும் உண்டோ எனக்கேட்குமளவிற்குத் தமிழ்ச் சூழல் குழம்பிக் கிடக்கிறது அல்லது மாசுபட்டுப் போயிருக்கிறது. அதே வேளை காதல் என்கிற போர்வையில் நிகழ்ந்தேறும் குமரப்பருவத்து வன்முறைகளும், அறியாமைகளும் கணக்கிலடங்காதவை களாகவும் உள்ளன.

இத்தகையதோர் வாழ்வுச் சூழலில், காதல் என்கிற அந்த இயல்புணர்ச்சியை மிக நுட்பமாக மீள் ஆய்வு செய்கிறது இந்நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் எழும் இந்த இயல்புணர்ச்சி, சமூகத்தால் மறுக்கப்படும் சூழலை மென்மையாகச் சுட்டிச் செல்லும் விவரிப்பில், அது மறுக்கப்படும் ஒரு ஆணின் மனச்சிக்கல்களை இதுவரை தமிழ் நாவல்களில் விவரிக்கப் படாத ஒரு நுண்கோணத்தில் விவரிக்கிறது.

காதல்வயப்பட்டவர் பரவசம் கொள்வதும், தன்னிலை மறப்பதும், சூழலை மறுப்பதும் நிகழ்வதற்குக்காரணம் அது கிடைப்பதற்கரிய ஒரு வரமாக கற்பிக்கப்பட்டு, பல்வேறு காரணிகளால் மனிதர்களுக்கு அது மறுக்கப்பட்டிருப்பதுதான் என்கிற உண்மையை இந்நாவலின் பிரதான கதை மாந்தராக வரும் கதிரவனின் மன உணர்வுகளை விரிவாகப் பதிவு செய்வதன் மூலம் காட்டுகிறார் வாசுகி.

முழுவதுமே கதிரவனின் மன உணர்வுகளைக் குறிப்புகளாக அவன் எழுதுவதன் மூலம்தான் நாவல் நிகழ்த்திச் செல்லப் படுகிறது. ஒரு அனுப்பப்படாத கடிதத்தைப் போன்றும், டைரிக்குறிப்புகள் போன்றும் விரியும் நாவலின் மிக நளினமான கவித்துவமான விவரிப்பில் புதிய வசீகரத்தைத் தமிழுக்கு வழங்கியுள்ளார் ஆசிரியர். ஒரு மனிதனின் மன உணர்வுகளை நுணுகி விளக்குவதற்கு அவர் கையாளும் யுத்தி சிறப்பாக இயங்குகிறது. ஒரு நிகழ்விற்கும் இன்னொரு நிகழ்விற்கு மிடையே கதிரவன் படும் மனக்கிலேசங்களையும், ஒரு உரையாடலுக்கும் மற்றொரு உரையாடலுக்கும் இடையே அவன் மனத்தில் எழும் எண்ண அலைகளையும் அழகான மொழியில் காட்சிப்படுத்துகிறது இந்நாவல்.

எந்தச் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறதோ அந்தச் சூழலோடு தன்னைத் தகவமைத்துக் கொள்ளாத ஒருவர்தான் படைப்பாளியாகிறார். நாவல் ஒரு காதலனைப் பற்றியதாக இருப்பதோடு அது ஒரு படைப்பாளியின் தகவமைக்க மறுக்கும் போர்க்குணத்தால் அவனுக்கு விதிக்கப்படும் தனிமை, அவமானங்கள், தோல்விகள் உள்ளிட்டவற்றையும் சரியாகப்பதிவு செய்கிறது.

ஆணின் ஜீவிதமாகப் பெண்ணே இருக்கிறாள் என்கிற இயற்கையை உணர்த்தும் வகையில் பிரதானப்பாத்திரங்களில் ஒன்றிற்கு ‘ஜீவிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது பொருத்தமாக அமைகிறது. காதல் என்பது சரண். வைணவத்தில் சொல்லப் படும், மறுப்பும் பரிசீலனையுமற்ற சரண் இரண்டு தரப்பிலும் நிகழ்கிற போதுதான் அது வெற்றி பெற்றதாகவும் அல்லது இயல்பானதாகவும் (இயல்பாக வாழ்வதுதானே இந்தச் சமூகத்தில் வெற்றி என்று கருதப்படுகிறது) அமைகிறது.

காதல் முன் மொழிவுக்கால வாழ்வில் அத்தகையதொரு சரணை மேற்கொள்கிற ஆண் இல்லற வாழ்விற்குப் பிறகு வெறும் ஆணாக மேலே வந்து மேலே வந்து மிதக்கத் தொடங்குகிறான் மீனைக் கொத்திக்கொண்ட நீர்ப்பறவையைப் போல என்பதுதான் பெரும்பாலும் யதார்த்த நடைமுறையாக இருக்கிறது. ஆனால், அந்த முன்மொழிவுக்கால சரண் வாழ்வில் ஆண்கள் தங்களை எத்தனைச் சிறுமைப்படுத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறார்கள். நாயினும் மெல்லியராய் / கீழோராய்த் தங்களைக் காட்ட முற்படும் அவர்களின் தந்திரம் பிற்பாடு வெளிப்பட்டுப் போகிற நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தன் நிகழ்போக்கில் மௌனமாய் உணர்த்திப் போகிறது.

மிக மிக அகவயமாக இயங்கும் இந்நாவலில், பெண் கொண்டாடப்பட வேண்டியவள், பெண் மீதான வன்முறைகள் எதிர்க்கப்பட வேண்டியவை, குழந்தைகள், ‘எல்லாம் வழங்கப் பட’த் தகுதியுடையவர்கள், நிபந்தனைகள் இல்லாத நல்ல நட்பால் இந்த உலகம் என்றும் இயங்கக்கூடும், சமூக வன்முறைகள் செரித்துக் கொள்ளப்பட்டு நடைமுறை வாழ்வாக ஆகிவிட்டிருக்கிற அநியாயம் குறித்தெல்லாம் ஆங்காங்கே காட்சிகள் இடம்பெறுவதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

காதல் என்கிற இயல்புணர்ச்சி வரமாகவும், சாபமாகவும், வன்முறைக்கான விசையாகவும், மகோன்னதங்கள் நிறைந்த புனிதமாகவும், மேன்மையும் கீழ்மையும் நிறைந்ததாகவும், மக்களின் இயல்பில் இல்லாத ‘பிறழ்வு’ என்பதாகவும், கற்பிக்கப்படும் கருத்துருக்களைக் கேள்விக்குள்ளாக்கித் தமிழ்ச் சூழலின் காதலை நிர்நிர்மாணம் செய்கிறது இந்நாவல்.

மஞ்சள் வெயில்
ஆசிரியர் : யூமா. வாசுகி,
வெளியீடு : அகல், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 14, விலை : ரூ. 65.00


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com