Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

கட்டுரை

அலைகடலுக்கப்பால் அருந்தமிழ்ச் சான்றோர்
ஆ. கார்த்திகேயன்

அலைகடலுக்கப்பாலுள்ள நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்து தமிழுக்குத் தொண்டுசெய்த அறிஞர்கள் பலர். அவர்களைக் குறித்த ஓர் அறிமுகத் தன்மையுடன் கூடிய அற்புத நூல் ஒன்றை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் 1948 ஆம் ஆண்டு படைத்துள்ளார். ‘கிறித்துவரால் தமிழ் மொழிக்கு உண்டான நன்மைகளைக் கூறும் நூல்’ என்று அந்நூலை அவர் அறிமுகப்படுத்துகிறார். “ஐரோப்பியரும் தமிழ்நாட்ட வருமான கிறித்துவர்களால் தமிழும் தமிழுலகும் பெற்றுக்கொண்ட பேருபகாரங்களைச் சுருக்கமாய்க் கூறுவதாய் இளைஞரும் கிரகித்துக் கொள்ளத்தக்கப் பெற்றியான தமிழ்நடை பொருந்தியதாய் விளங்குகின்ற ‘கிறித்துவமும் தமிழும்’ எனப் பெயர் சூடிய நூலைப் பார்த்து ஆனந்த வசத்தரானோம்” என்று யாழ்ப்பாணம், நல்லூர் ஞானப் பிரகாசம் அவர்கள் இந்நூலைப் பாராட்டியுள்ளார். சுவாமி விபுலானந்த அடிகளும் இந்நூலுக்கு முகவுரை வழங்கியுள்ளார். இந்த நூலினைத் தொடர்ந்து தனி நாயக அடிகள் 1968-ஆம் ஆண்டு அயல் நாடுகளில் தமிழியல் ஆய்வு (Tamil Studies Abroad) என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

தனிநாயக அடிகளார் அயல்நாடுகளில் நடைபெற்ற தமிழாய்வுகளைக் குறித்துத் தனி ஆர்வம் காட்டி அவற்றைத் தொகுக்க முயற்சி செய்தார். பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியம் 1978ஆம் ஆண்டு தில்லித் தமிழ்ச் சங்க மலரில் ‘அயல்நாடுகளில் தமிழ் வளர்ச்சி’ என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளார். டாக்டர் ச.வே.சு. அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. “உலக அரங்கில் தமிழ் வளர்ச்சியும் பயிற்சியும்” என்ற விரிவான கட்டுரை டாக்டர் ச. அகத்தியலிங்கம், டாக்டர் சு. சக்திவேல் ஆகிய இருவரால் 1980ஆம் ஆண்டு மொழியியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் இராம. சுந்தரம் அவர்களும் ‘அயல் நாடுகளில் தமிழியல் ஆய்வுகள்’ என்ற கட்டுரையை ‘தமிழர் கண்ணோட்டம்’ என்ற இதழில் வெளியிட்டுள்ளார். பேராசிரியர் இராம. சுந்தரம் போலந்தில் தமிழ் கற்பித்த அனுபவத்தால் இத்தலைப்பில் அவர் கட்டுரை எழுதத் தூண்டி இருக்கலாம்.

இவற்றைத் தவிர 1981ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது ‘உலகத் தமிழ்’ என்னும் தலைப்பில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ஒரு நூல் வெளியிட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் தமிழாய்வுகள் குறித்து பல்வேறு அறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் கட்டுரை எழுதியுள்ள பேராசிரியர்கள் அயல்நாடுகளில் பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் செ.வை. சண்முகம் ‘கிறித்துவ அறிஞர்களின் இலக்கணப் பணி’ என்ற நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழியாக வெளியிட்டிருக்கிறார். சீகன்பால்கு, பெஸ்கி ஆகியோரது இலக்கணங்களின் விசாரணை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இதற்குப் பின்னர் அண்மைக் காலத்தில் அயல் நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகளைப் பற்றி விளக்கும் நூல்கள் ஏதும் எழுந்ததாகத் தெரியவில்லை. அப்படியொரு நூல் இருந்தால் மேனாட்டில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து நம்மவர் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

நாம் நம் மொழியை, இலக்கியத்தை அணுகுகின்ற முறையின்றும் வேறுபட்டு நுட்பமாக ஆய்கிறபோக்கை அயல்நாட்டவர் ஆய்வில் காண முடிகின்றது. இந்திய, ஐரோப்பிய மொழி, இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு முடிவுகளை வெளியிடுவதை அவர்கள் ஆய்வில் உணர முடிகிறது. எனவே அயல்நாட்டவரின் ஆராய்ச்சிகளைத் தமிழில் கொண்டுவந்து அனைவருக்கும் அறிவிப்பது நமது கடமையாகும். அண்மைக்காலத்தில் தமிழுக்குழைத்த அயல்நாட்டவர்களைப் பற்றி இக்கட்டுரை சுருக்கமாக விவரிக்கின்றது.

தனிநாயக அடிகள்

இன்று தமிழ்மொழி பல்வேறு அயலகப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகின்றது. ஒரு சில இந்திய மொழிகளுக்கே இந்தப் பெருமையுண்டு. தமிழரல்லாதவர்கள் தமிழ்மொழியை ஆராய்கின்றனர். உலகத் தமிழ் மாநாடுகள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றன. இவையெல்லாம் அருட்தந்தை தனிநாயக அடிகளின் முயற்சியினால் ஏற்பட்டவை.

தனிநாயக அடிகள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கத்தோலிக்கக் குருவாகத் திகழ்ந்தார். மலேசியாவில் மலாய்ப் பல்கலைக் கழகத்தில் 1961-1969 வரை இந்தியவியல் துறைக்குப் பேராசிரியராக இருந்தார். 1963ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நடந்த தமிழ் வளர்ச்சித் துறையின் ஆண்டுக் கூட்டத்தில் ‘உலகத் தமிழ் மாநாடுகளை’ அரசாங்கம் நடத்தலாம் என்ற உயர்ந்த ஆலோசனையை வழங்கினார். 1964இல் கீழ்த்திசை அறிஞர்கள் டெல்லியில் கூடியபோது உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association for Tamil Research) தோன்றியது.

அக்கூட்டத்தில் அருட்தந்தை தனிநாயகம், செக் அறிஞர் கமில் சுவலபில், முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் போன்றோர் கலந்து கொண்டனர். இதன் விளைவாக முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-இல் கோலாலம்பூரில் நடந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம், மொரீசியஸ், மதுரை, தஞ்சாவூர் போன்ற இடங்களில் தமிழ் மாநாடுகள் நடந்தன. இந்தப் பெருமைக்குரியவர் அருட்தந்தை தனிநாயக அடிகளே ஆவார்.

யாழ்ப்பாணத்தில் 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ந் தேதி பிறந்த அடிகளார், 1945 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவரானார். ‘பழந்தமிழ்ப் பாடல்களில் இயற்கை’ என்ற ஆய்விற்காக எம்.லிட். பட்டம் பெற்றார். கல்வி முடிந்தவுடனே பல உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவில் மட்டும் தமிழ் மொழி, இலக்கியம் குறித்த 200க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் செய்தார். உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பல்வேறு நூலகங்களுக்குச் சென்று தமிழ் ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்தார்.

கார்த்தில்லா (Cartilha - 1556, தம்பிரான் வணக்கம் (1578), கிறிஸ்டியானி வணக்கம் (1579), தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி ஆகிய அரிய நூல்களை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். தனிநாயக அடிகளார் பன்மொழிப் புலமை பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றவர்கள். தமிழ்த்தூது, ஒன்றே உலகம், Landscape and Poetry, Tamil Culture and Civilization ஆகிய சிறந்த நூல்களைப் படைத்துள்ளார். அருட்தந்தை அமுதன் அடிகளார் தற்போது தனிநாயக அடிகளாரைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

பேராசிரியர் எம்.பி. எமனோ (M.B.Emeneau)

இருபதாம் நூற்றாண்டின் திராவிட மொழிகள் ஒப்பிலக்கண ஆய்வுகளுக்குப் பெரும்பணி செய்த அறிஞர்களுள் பேராசிரியர் எம்.பி. எமனோ தலையாயவர். 1904 பிப்ரவரி 28இல் லுனென்பர்க் (Lunenberg) நோவா ஸ்காட்டியா (Nova Scotia) என்ற ஊரில் பிறந்தார். இது கனடாவில் உள்ளது. டல்ஹவுசி பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். 1931 முதல் 1935 வரை எட்வர்டு சப்பியர் என்ற மிகப் பெரிய மொழியியல் பேராசிரியரிடம் மொழியியலும், மானுடவியலும் பயின்றார். பின்னர் யேல், கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார்.

எமனோ சமஸ்கிருத பேராசிரியராக இருந்தாலும் மிகப் பெரிய திராவிடவியல் அறிஞர் (Dravidologist) என்றே அறியப்பட்டவர். அவரது முக்கியமான வெளியீடு ‘திராவிட மொழிகளின் வேர்ச் சொல்லகராதி’ (Dravidian Etymological Dictionary). இந்நூல் 1961-ல் வெளியிடப்பட்டது. திராவிட மொழிகளில் காணப்படும் தொடர்புடைய சொற்களின் (cognate vocabulary) பட்டியலாக இவ்வகராதி அமைந்து திராவிடமொழி ஒப்பிலக்கண ஆய்வுக்குப் பெரிதும் துணைநிற்கின்றது.

இவரது கட்டுரைகளிலும் நூல்களிலும் தமிழிலக்கியத் தரவுகள் குறிப்பாகச் சங்க இலக்கிய மொழித் தரவுகள் விரிவாகப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இவரது collected papers என்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நூலில் மிக அரிய கட்டுரைகள் உள்ளன. ஆதிவாசி மொழிகள் (தோடா) மொழிகளைக் குறித்து மானுடவியல், நாட்டுப்புறவியல் சார்ந்த கட்டுரைகளையும் பேராசிரியர் எமனோ எழுதியுள்ளார். இவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்து திராவிட மொழிகள் ஆய்வுக்குத் தொண்டு செய்தார்.

ஆர்.இ.ஆஷர் (R.E.Asher)

இங்கிலாந்தில் கீழ்த்திசை மற்றும் ஆப்பிரிக்கப் படிப்புப் புலம் 1938 இல் தோன்றியதிலிருந்தே தென்னிந்திய மொழிகளைக் கற்பிப்பதற்கு எவராவதொரு பேராசிரியர் இருந்துகொண்டே வந்தார். 1955 வரையிலும் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. பதி என்பவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளையும் சொல்லித் தந்தார். 1955 முதல் 1957 வரை இசை விரிவுரையாளர் ஜெ.ஆ. மார் இப்பதவியை (விரிவுரையாளர்) வகித்தார். இதற்குப் பின்னர் தோன்றிய விரிவுரையாளர் பதவியை ஆர்.இ. ஆஷர் (1957-1965) வகித்தார். பேராசிரியர் ஆஷர் 1977 முதல் 1993 வரை எடின்பர்ரோ பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறைப் பேராசிரியராக இருந்தார். மிகப் பெரிய ‘மொழியும் மொழியியலும்’ எனும் தலைப்பில் கலைக்களஞ்சியம் உருவாக்கிப் பெருமை பெற்றவர். தமிழ் மொழியிலும் மலையாள மொழியிலும் புலமை பெற்று ஆய்வுகள் செய்தவர்.

இலங்கை மட்டக்களப்பு தமிழ்க் கிளைமொழி குறித்து ஆய்வு செய்துள்ளார். பேச்சுத் தமிழுக்கு ‘கூயஅடை’ எனும் இலக்கண நூல் எழுதியுள்ளார். பேச்சுத்தமிழைக் கற்றுக்கொள்ளப் பேராசிரியர் இ. அண்ணாமலை எனும் பேராசிரியருடன் இணைந்து ஒரு பாடநூல் செய்துள்ளார். உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கு பெற்றிருக்கிறார். பல ஆண்டுகள் இங்கிலாந்தில் தமிழ் கற்பித்துவரும் பேராசிரியர்களுள் ஆர்.இ. ஆஷர் முக்கியமானவர். பேராசிரியர் இராதாகிருஷ்ணன் என்பவரோடு இணைந்து உரைநடைப் பாடநூல் தயாரித்துள்ளார். மலையாள மொழியிலும் புலமைபெற்றுக் கட்டுரைகள் படைத்துள்ளார். வைக்கம் முகமது பஷீர் இருக்கையில் கோட்டயத்தில் பணியாற்றி இருக்கிறார்.

கமில் சுவலபில் (kamil v.zvelebil)

சிலருக்கு மொழி ஆய்வில் ஆர்வம் இருக்கலாம். இன்னும் சிலருக்கு இலக்கிய ஆய்வில் ஆர்வம் இருக்கலாம். தமிழ் மொழி, இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் துறைகளிலும் ஆர்வம் கொண்டு ஆய்வு நிகழ்த்தியவர் கமில் சுவலபில் என்ற அறிஞராகும். இவர் செக்கோஸ்லோவாகியாவில் 1927 இல் பிறந்தார். பிராக் (Prague) நகரில் பிறந்தார். பின்னாளில் நெதர்லாந்தில் யூட்ரிச் (Utrecht) பல்கலைக் கழகத்தில் திராவிட மொழிகள் மற்றும் பண்பாடு ஆகிய துறைக்குப் பேராசிரியராக விளங்கினார். பிராக் நகரில் சார்லஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுப் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று திராவிட மொழிகளின் அமைப்புக் குறித்து விரிவுரைகளாற்றினார்.

பிராக், ஹைடல்பர்க், சிக்காகோ, ரோசெஸ்டர், பாரீஸ், லெய்டன் ஆகிய நகரங்களில் சொற்பொழிவாற்றினார். நூற்றுக்கணக்கான கட்டுரைகள், மதிப்பீடுகள், சில மொழிபெயர்ப்புகள், சில புத்தகங்கள் இவரது கடுமையான உழைப்புக்குக் கட்டியம் கூறிக்கொண்டுள்ளன. தமிழிலக்கிய வரலாறு, திராவிட மொழிகளின் ஒப்பீட்டு ஒலியியல் (Comparative Phonology) நீலகிரிப் பழங்குடி மக்கள் மொழி (இருளர் மொழி) ஆகியவை இவரது முக்கியமான நூல்களாகும். பின்னாளில் தமிழ் நாட்டுப்புறத் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. உ.வே. சாமிநாதையரது ‘என் சரித்திரம்’ என்ற பெரிய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ், சமஸ்கிருத மொழியில் கிடைக்கும் விக்ரமாதித்தன் கதைகளையும் ஆராய்ச்சி செய்து வருகிறார். The Smile of Murugan (On Tamil Literature of South India Leiden : 1973) என்ற இவரது நூல் மிகவும் புகழ் வாய்ந்தது.

ஏ.கே. இராமானுஜம்

Every town our home town every man a kinsman

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்று அடிகளுக்கு மேற்கண்ட அழகான ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கி அப்பாடலை உலகறியச் செய்தவர் பேராசிரியர் ஏ.கே. இராமானுஜன் ஆவார். இராமானுஜம் 1929-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி மைசூரில் (கர்நாடக மாநிலத்தில்) பிறந்தார். அவர் பன்மொழிச் சூழலில் வளர்ந்தார். தாயிடம் தமிழ் மொழியும், தந்தையிடம் ஆங்கிலமும், தெருவில் கன்னடமும் கற்றுக் கொண்டார். பின்னாளில் இம்மூன்று மொழிகளிலும் சிறந்து விளங்கி ஆய்வுப்பணிகள் செய்தார். 1949ஆம் ஆண்டு மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்று கேரளா, தார்வார் ஆகிய இடங்களில் ஆசிரியர் பணி மேற்கொண்டார். 1958இல் புல்பிரைட் நல்கையில் அமெரிக்கா சென்றார். 1993 ஜூலை 13இல் இறுதிக்காலம் வரையில் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணி செய்தார். இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவர் மேக்ஆர்தர் விருது போன்ற சிறப்புகளைப் பெற்றுள்ளார்.

இராமானுஜம் கவிஞராகவும், மொழிபெயர்ப் பாளராகவும் ஆய்வாளராகவும் விளங்கினார். சங்க இலக்கியப் பாடல்களை மொழிபெயர்த்துள்ளார். The interior Lanscape Poems of Love and War என்பது அவரது முக்கியமான மொழி பெயர்ப்புகளாகும். கன்னடப் பாடல்களையும் மொழி பெயர்த்துள்ளார்; நாட்டுப் புறக் கதைகளையும் மொழிபெயர்த்துக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பாரதியின் வசன கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். Hymes for the Drowning என்ற தொகுதியில் தமிழ் பக்திப் பாடல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.

ஜார்ஜ் எல். ஹார்ட் (George L.Hart)

தமிழாய்விற்கு அமெரிக்காவிலிருந்து தொண்டு செய்யும் தமிழறிஞர்களுள் ஜார்ஜ் ஹார்ட் - உம் முக்கியமானவர். அவர் சங்க இலக்கியப் பாடல்களை அருமையான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு அல்லாமல் சங்க இலக்கியப் பாடல்களைச் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார். இவர் பெர்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் 1975 முதல் தமிழிருக்கையில் பணியாற்றி வருகிறார். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பட்டம் பெற்று 1969 இலிருந்து சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். தமிழ், வடமொழி தவிர கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளையும் கற்றவர். மலையாளம், தெலுங்கு இலக்கியங்களையும் கற்றவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் பெற்றது என்று முழக்கமிட்டவர்.

தமிழ்மொழி பழமையான மொழி; தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள் நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களை விட ஆயிரமாண்டுகள் பழமையானவை. சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தும் இலக்கியங்கள். காளிதாசரின் செவ்வியல் இலக்கியங்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் தாக்கம் செலுத்துவதற்கு முன்னரே தோன்றியவை. எனவே தமிழ் இலக்கியங்கள் (குறிப்பாக சங்க இலக்கியங்கள்) செம்மொழி அந்தஸ்து உடையன என்று கூறினார். தமிழ் இலக்கிய மரபுகள் பிராகிருத மொழி இலக்கியங்கள் வழியாகச் சமஸ்கிருத இலக்கியங் களுக்குச் சென்றன என்ற ஆய்வு முடிவை வெளியிட்டவர். இவரது மனைவி கௌசல்யா ஹார்ட் ஒரு தமிழர். கணவருக்குத் தமிழாய்வில் உதவிகள் செய்து வருகிறார்.

ஹெரால்டு ஷிப்மென் (Harold Schiffman)

தமிழ்மொழி ஆய்வில் ஆர்வம் கொண்ட அமெரிக்க அறிஞர்களுள் ஹெரால்ட் ஷிப்மென் ஒருவராவார். இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக (1966 லிருந்து) தமிழாய்வில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் மொழியைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு ‘A Transformational Grammer of the Tamil Aspectual System என்பதாகும். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் இவர் ஆய்வை முடித்தார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து தற்போது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகளின் இலக்கணங்கள், அகராதிகள் தயாரிக்கும் பணியைச் செய்து வருகிறார்.

அவர் 1979இல் உருவாக்கிய A Grammer of Spoken Tamil என்ற நூல் சிறந்த நூலாகும். தமிழ் மொழி ஆய்வு செய்வதற்குப் பல முறை தமிழகம் வந்துள்ளார். 1966 வாக்கில் திருச்சி வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்களின் மொழி அடிப்படையிலேயே இலக்கண நூலை எழுதினார். பின்னர் இந்நூலை மீண்டும் திருத்தி ‘ஹ ழுசயஅஅயச டிக ளுவயனேயசன கூயஅடை’ என்ற நூலை மீண்டும் வெளியிட்டுள்ளார்.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் தமிழ் கற்க Reader for Advanced Spoken Tamil என்ற பயிற்றுக்கருவி தயாரித்துள்ளார். ‘Language and Society in South-Asia ’ என்ற நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தமிழ் மொழியின் பல்வேறு அமைப்புகள் குறித்துப் பல மொழியியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுத் தமிழ்மொழி ஆய்வுக்கு வளம் சேர்ந்துள்ளார். இவரது மாணவர் முனைவர் வாசு. அரங்கநாதன் தற்போதும் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் தமிழாய்வு நிகழ்த்தி வருகிறார்.
.
ஆன்ட்ரனோவ் (Andronov)

டாக்டர் மைக்கேல் எஸ். ஆன்ட்ரனோவ் மாஸ்கோவிலிருந்த ஓரியண்டல் ஆய்வு நிறுவனத்தில் துறைத் தலைவராகவும் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணியாற்றியவர். 1931 ஆம் ஆண்டு மாஸ்கோவில் பிறந்த ஆண்ட்ரனோவ் மாஸ்கோ ஓரியண்டல் நிறுவனத்தில் பட்டம் பெற்று எம்.ஏ. பட்டப்படிப்பில் ‘பெங்கால் மொழியில் திராவிட மொழிக்கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வேடு படைத்தார். தமிழ்மொழியின் வினைச்சொல் அமைப்பை ஆய்வு செய்து அதற்காக 1960 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

1958-59இல் அவர் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் மாணவராக விளங்கினார். இந்திய மொழிகளைப் பற்றி நூல்களும் கட்டுரைகளும் (சுமார் 70) எழுதியுள்ளார். தமிழ் மொழி இலக்கணம் (1966), தமிழ் மொழி (1965), திராவிட மொழிகள் (1965), கன்னட மொழி (1968), தமிழ் மொழியும் அதன் கிளைமொழிகளும் (1962) போன்ற சில நூல்களை எழுதியுள்ளார். ‘ருஷ்ய-தமிழ் அகராதி’ (1965), மலையாளம் - ருஷ்யன் அகராதி, ருஷ்ய மொழியின் இலக்கணச் சுருக்கம் (1965), மலையாளம் - ருஷ்யன் அகராதி, ருஷ்ய மொழியின் இலக்கணச் சுருக்கம் (1965) ஆகிய நூல்களும் முக்கியமான நூல்களாகும்.

தமிழ் கிளைமொழிகளைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ள ஆன்ட்ரனோவ் ‘ A Standard Grammer of Modern and Classical Tamil’ என்ற நூல் மிகவும் புகழ் வாய்ந்த நூலாகும். Dr. Andronov is a scholar of Tamil who has the languages at his finger tips’ என்று சுனித் குமார் சட்டர்ஜி என்ற அறிஞர் ஆன்ட்ரனோவைப் பாராட்டியுள்ளார்.

ஜரோஸ்லேவ் வாசக் (Jaroslav Vacak)

ஜரோஸ்லேவ் வாசக் செக் நாட்டில் பிராக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழாய்வுகளை மேற்கொண்டு வருகிறார். கமில் சுவலபில் என்ற அறிஞரின் மாணவராகிய வாசக் திராவிட மொழிகளுக்கும் மங்கோலிய மொழிகளுக்கும் இடையேயுள்ள சொற்கள், ஒலியமைப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழாய்வில் ஈடுபட்டுவரும் வாசக் இலக்கணச் சொற்கள், உறவுமுறைச் சொற்கள், வினைச்சொற்கள், அடிப்படைப் பெயர்கள் ஆகிய சொற்களங்களில் திராவிட மொழிகளுக்கும் மங்கோலிய மொழிகளுக்குமிடையேயுள்ள ஒற்றுமைகளைக் (lexical parallels) குறித்து சில கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். இன்னொரு கட்டுரையில் சிரித்தல், நகுதல், இளித்தல், கொக்கரித்தல், முறுவலித்தல் ஆகிய சொற்களை ஒப்பிட்டுக் கட்டுரை எழுதியுள்ளார் வாசக் (1992).

பல்வேறு திராவிட மொழிகளிலிருந்து தொடர்புடைய சொற்களை (congnates)த் தந்துள்ளார். தமிழகத்திலிருந்தும், புதுவையிலிருந்தும் வரும் ஆய்வு இதழ்களில் தம் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். உலகத் தமிழ் மாநாடுகளிலும் கலந்துகொண்டு கட்டுரைகளை வழங்கி இருக்கிறார். சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவரது Sangam Poetry Reader என்ற நூலை வெளியிட்டுள்ளது. இந்நூல் இரண்டு தொகுதிகளைக் கொண்டது. சங்க இலக்கியப் பாடல்களைக் கற்க விரும்பும் மேனாட்டவர்க்கு இந்நூல் மிகவும் பயன்படும்.

டேவிட் சுல்மான் (David Shulman)

ஆரவாரமில்லாமல் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு ஆழமான தமிழாய்வில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியர்களில் டேவிட் சுல்மான் அவர்களும் ஒருவர். சுந்தரருக்கு வன்தொண்டர் என்ற ஒரு பெயருண்டு. வன்தொண்டர் என்ற தொடரை Harsh Devotee என்று மொழி பெயர்த்துள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாருடைய 100 பாடல்களை முதலில் மொழிபெயர்த்தார். அதைப் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் 1990 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. ‘Songs of Harsh Devotee- The Tevaram of Suntaramurti Nayanar என்பது அம்மொழி பெயர்ப்பின் தலைப்பாகும். பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் அனைத்துப் பாடல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

டேவிட் சுல்மான் ஜெருசலத்தில் ஹீபுரு பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் மற்றும் சமய ஒப்பீட்டுத் துறையில் (Indian Studies and Comparative Religion) பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கே உயராய்வு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

அவர் தமிழ்க் கோயில் தொன்மங்கள், வேள்விகள், கடவுளர்க்கு நடத்தப்படும் தெய்வீகத் திருமணங்கள் குறித்தும் நூல் செய்துள்ளார். (Tamil Temple Myths, Sacrifice and Divine Marriage in the South India Saiva Tradition, 1980). தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதப் பாடல்களை ஒப்பிட்டு கூhந றுளைனடிஅ டிக ஞடிநவள என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டிருக்கிறார். இந்நூலை 2001 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஏ.கே. இராமானுசம், பேரா. நாராயணராவ் ஆகியோருடன் இணைந்து ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளார். சிவன் முதலிய சைவ கடவுளர் பற்றி ஆய்வுகள் செய்துள்ளார்.

மார்தா ஆன் செல்பி (Martha Ann Selby)

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில், தற்போது இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் செல்பி, மார்தா சமஸ்கிருத கவிதை, பிராகிருதம், பழந்தமிழ் செய்யுள் ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகிறார். இந்திய செவ்வியல் மருத்துவத்தில் பெண்கள், பிறப்பு, நோய்கள் குறித்தும் ஈடுபாடு கொண்டவர். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்து ஆசியவியல் துறையில் (டெக்சாஸ்) பணிபுரியும் இவர் ‘Grow Long blessed night’ என்ற நூலை எழுதியுள்ளார்.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய தொகுப்புகளில் உள்ள பாடல்களைச் சமஸ்கிருத அமருசதகம் (Amarusataka), சுபாஷித ரத்னகோஷ ஆகிய பாடல்களோடும், பிராகிருத காதா சப்தசதி, வஜ்ஜாலக்கம் ஆகிய பாடல்களோடும் ஒப்பிட்டு அவற்றிற்கிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் புலப்படுத்தியிருக்கிறார். தொகை நூல்களைச் செய்வது (Anthology making), மொழி கடந்த இந்திய மரபாக விளங்குகிறது. இது அரசவை நடவடிக்கைகளில் ஒன்றாக விளங்கியது.

செவ்வியல் இலக்கிய மாந்தர்கள் தலைவன், தலைவி, தோழி, பெற்றோர், செவிலி போன்றோர் எல்லா இலக்கியங்களிலும் காணப்படுகின்றனர். தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதப் பாடல்களை ஓதுவதற்கு அவ்வவ் இலக்கிய மரபுகள் தெரிந்திருக்க வேண்டும். அந்தப் பின்னணியிலேயே அவை வாசிக்கப்படவேண்டும். தமிழில் திணைக்கோட்பாடு, சமஸ்கிருதம், பிராகிருத மொழியில் ரசம், தொனிக் கோட்பாடுகளையும் விளக்கி அந்தப் பின்னணியில் அம்மொழி இலக்கியங்களை விளக்கியிருக்கிறார். சில பாடல்களை மொழிபெயர்த்தும் தந்துள்ளார்.

முடிவுரை

மேனாடுகளில் ஏராளமான அறிஞர்கள் தமிழாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பற்றிய முழு தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. பால்மிராபில் என்ற துருக்கியில் வாழ்ந்திருந்த அறிஞர் பெரியபுராண கண்ணப்ப நாயனார் புராணத்தை (The Legent of Saint kannapa, The hunter) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பெரியபுராண கண்ணப்பர் கதையில் வரும் சில மரபுகளைத் துருக்கி நாட்டுப் பூசாரி மரபுகளுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகள் படைத்துள்ளார். கண்ணப்ப நாயனாரின் வேடர் சமூக வாழ்க்கையைத் தொல்குடி மரபுக்குரியதாக அடையாளம் காட்டுகிறார். இவற்றையெல்லாம் நாம் அறியும்போது நமக்கு வியப்பு தோன்றுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அயல் நாடுகளில் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடும் அருந்தமிழ்ச் சான்றோர் வாழ்க! வளர்க!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com