Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007
தலையங்கம்

இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு: ஆழ்ந்து சிந்திக்க ஒரு முக்கியப் பிரச்சினை

முல்லைப் பெரியாறு அணை ஓரடி உயர்த்தப்பட்டாலும் அங்கு அருகில் வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சமூட்டும் கேரள அரசின் பிரச்சாரம் ஒரு புறம்; ஒரு துளி காவிரி நீரும் தமிழகத்துக்குத் தாரோம் என மார்தட்டிச் சூளுரைக்கும் கர்நாடகம் மறுபுறம்; பாலாற்றில் அணை கட்டியே தீருவோம் என ஆந்திரத்தின் வஞ்சினம் வேறு ஒரு புறம். மூன்று மாநிலங்களும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள். 21 ஆம் நூற்றாண்டில் திராவிட மொழிகள் பேசும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் பெற்று வரும் அபாய அறிவிப்புகள், அச்சுறுத்தல்கள் இவை.

“வடவேங்கடம்” தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல் உலகம்” என்பது தொல்காப்பியம். பாலாறும் வடபெண்ணையும் அக்காலத்தில் தமிழக ஆறுகள் என்பதனை இவ்வரி சுட்டிக்காட்டுகிறது. பாரதியாரும் “காவிரி, தென்பெண்ணை, பாலாறு” எனப் பாலாற்றைத் தமிழக ஆறாகக் கண்டார்.
உங்கள் நூலகம்


இரு திங்கள் இதழ்

கௌரவ ஆசிரியர்
முனைவர். அ.அ. மணவாளன்

ஆசிரியர்
ஆர். பார்த்தசாரதி

நிர்வாக ஆசிரியர்
ஆர். சாரதா

ஆலோசகர் குழு
ஏ.எஸ். மணி
ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி
கல்பனாதாசன்

ஆசிரியர் குழு
கே.ஜி.சத்தியநாராயணன்
எஸ். சண்முகநாதன்
பா. பாஸ்கர்
சண்முகம் சரவணன்
சி.பி. ராணி

இதழ் வடிவமைப்பு
மாரிமுத்து

உங்கள் நூலகம்
நியூ செஞ்சுரி வாசகர் சங்கம்
41-B, சிட்கோ இண்ட்ஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600 098.
தொலைபேசி: 044-26251968
Email: [email protected]

தனி இதழ்: ரூ.10
ஓராண்டு சந்தா: ரூ.100
வெளிநாட்டு சந்தா: 12 டாலர்

கோள் நிலை தடுமாறி “வான் பொய்க்கினும் தான் பொய்யா மலைத் தலைய கடற் காவிரி” எனப் பட்டினப் பாலை பாடுகிறது. மேற்கு நோக்கிப் பாயும் முல்லைப் பெரியாறு தமிழகத்தை விடக் கேரளத்திற்குப் பெரும் பயன் தருவது.

இப்பின்புலத்தில் இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு பெரும் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அன்றைய சென்னை மாகாணத்தின் பொறியாளராக இருந்த ஆங்கிலேயரான சர், ஆர்தர் காட்டன் தமிழ் நாட்டில் இருந்த ஏரி, குளங்கள், ஆறுகள், அணைகள் என்பனவற்றை யெல்லாம் ஆய்ந்து கணக்கிட்டு இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு தேவை, சாத்தியம் என்றார். பரிந்துரை நிறைவேற்றப்பட்டால் தீங்குகள் பல விளையும் என எச்சரித்தவர்கள் அக்காலத்திலேயே உண்டு. ஆனால் ஆர்த்தர் காட்டன் எத்தகைய தடைகள் எழுப்பப்படும் அவற்றுக்கு விடை என்ன என்பதையும் அவர் அறிக்கையிலேயே முன் கூட்டிக் கூறியுள்ளார். இருப்பினும் காட்டனின் பரிந்துரை கவனிக்கப்படவில்லை.

அவரைத் தொடர்ந்து கர்னல் ஜே. பென்னிகுயிக் என்ற ஆங்கிலேயரும் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி. ராமசாமி ஐயரும் இப்பிரச்சினைக்கு உயிர் ஊட்டினர். இந்திராகாந்தி அம்மையார் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த விஞ்ஞானி கே.எல். ராவ் நதிகளின் இணைப்புப் பற்றி ஊக்கம் செலுத்தினார். அன்று முதல் இமையமலையிலிருந்து ஓடி வரும் நதிகளின் இணைப்பு என்பது ஒரு திட்டம், தீபகற்ப நதிகளை இணைப்பு என்பது மற்றொரு திட்டம் எனப் பேசப்பட்டு வருகின்றன. மாநிலங்களில் சிறு சிறு திட்டங்கள் இடையே நிறைவேற்றப்பட்டதும் உண்டு.

குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இரு பிரச்சினைகளை வலியுறுத்தி வருவது கண்கூடு. முதலாவது கி.பி. 2020வதுக்குள் இந்தியா எல்லாத் துறைகளிலும் முன்னேறிய நல்லரசு நாடாகி மிளிர்தல் வேண்டும்; இரண்டாவது இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு. மேலெழுந்த வாரியாகப் பார்பவர்களுக்கு இவற்றின் முக்கியத்துவம் தெரியாது. ஆனால் ஆழ்ந்து சிந்திப்பவர்க்கு இவை நன்னோக்கும், தொலைநோக்கும் உடையவை என்னும் எண்ணமும் இவற்றை அடைந்தே தீரவேண்டும் என்னும் மன உறுதியும் உண்டாகும்.

கடந்த சில ஆண்டுகளாக நதி நீர் இணைப்புப் பற்றி அரசியல் வாதிகளும், தொழில் வல்லுநர்களும், விஞ்ஞானி களும் பேசி வருகின்றனர். சிலர் நதிகள் இணைப்பால் தமிழகத்துக்கு அற்பப் பலனே கிட்டும் என்று கருதுகிறார்கள். ஆயினும் அண்டை மாநிலங்களின் அச்சுறுத்தலையும் அதனோடு மாறிவரும் உலக இயற்கைச் சூழலின் நிலைமையையும் சீர்தூக்கிச் சிந்திக்க வேண்டும்.

இயற்கையை மனிதன் வென்று வசப்படுத்தி மானுட சமுதாயத்துக்காகப் பயன்படுத்தி வந்துள்ளான். ஆற்றங் கரைகளில் தான் நாகரிகம் பிறந்தது என்பது வரலாறு காட்டும் உண்மை. “நீரின்றி அமையாது உலகு” என்னும் குறள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

சமுதாயம், பல படி நிலைகள் கடந்து மாறி அமைந்துள்ள முதலாளித்துவ அமைப்பில் இயற்கையை மனிதன் லாப வேட்டைக்காகச் சூரையாடுகிறான். ஏரி, குளம், ஆறு, கடல் என்பன மட்டுமல்ல தாவரங்களும், விலங்குகளும், கொடுமை யாகச் சூரையாடப் படுகின்றன. இன்றைய தமிழகத்தின் அவல நிலை இதுவே. சுற்றுச் சூழல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பருவங்கள் மாறி வருகின்றன. மனிதன் இயற்கையை வஞ்சித்தானேயானால் இயற்கை அவனைப் பழி வாங்கும் என்று பிரெடரிக் ஏங்கெல்ஸ் எச்சரித்தது நினைவு கூரத்தக்கது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் அணு நீர் வாயு குண்டுகளின் சோதனைகள் பெருகியுள்ளன.

தேவையில்லாதவை கடலிலும் நீரிலும் நிலத்திலும் புதைக்கப்பட்டு வருகின்றன. பூமியின் எங்கோ ஓர் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது என்னும் செய்தி இல்லாத நாளே இல்லை. நிலத்தின் அமைப்பே பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. லாப வேட்கையுடன் மரங்களும் செடி கொடிகளும் விலங்கினங்களும் அழிக்கப்பட்டு வருவதோடு. பாறையும் மலையும் உடைபடுகின்றன. இவை அனைத்தும் வானத்தைப் பொய்க்கச் செய்யும்.

கடந்த சில ஆண்டுகளாகக் கதிரவனைச் சுற்றியுள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு நலிந்து வருகிறது என விஞ்ஞானிகள் கண்டு கூறியுள்ளனர். இது வெப்பத்தைக் கடுமையாக்கி, நீர் நிலைகளையும் வற்றச் செய்யும். உலக மயமாக்கலில் உலக வாணிப மையத்தின் செயல்பாட்டில், சிலந்தி வலையில் சிக்குண்டு கிடக்கும் வளராது தவிக்கும் இந்தியா போன்ற நாடுகள், குறிப்பாக அந்நிய காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகள் மீண்டும் வேட்டைக் காடுகளாகி விடும்.

இந்தப் பின்புலத்தில் குடியரசுத் தலைவரின் இலக்குகள் நிறைவேற்றப் பட்டால்தான் உலகம் உய்யும் என்பது அறியக்கூடும். நதிகளின் ஒருங்கிணைப்பைச் சாதித்த நாடுகள் பல உள்ளன. குறிப்பாக முன்னாள் சோவியத் நாடும், மக்கள் சீனமும், மக்கள் பலன் பெற்று முன்னேறி வருவது காணலாம்.

பன்னெடுங் காலமாக ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், அமெரிக்காவிலும் எல்லாக் கண்டங்களிலும் உள்ள நாடுகளில் அடுத்தடுத்துள்ள இனம், மொழி, அரசியல் வேறுபாடுகளால் பிரிந்துள்ள தேசங்களிலும், நாடுகளிலும், ஆறுகள் பாய்ந்து வருகின்றன. “சர்வதேச சட்ட” வழிகாட்டுதல்படி தகராறு ஏதுமின்றி நதிநீர் பயன்பாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது.

ஒரே அரசியல் அமைப்புச் சட்டம், ஒரே இந்தியப் பண்பாட்டின் கீழ் வாழும் பல மொழி பேசும் இனங்களுக்குத் தன்னல நோக்கு இருத்தலாகாது. பொதுநோக்கும், நெடுநோக்கும் தேவைப்படுகின்றன. இந்திய நாட்டின் ஒருமைப்பாடும் சீர்மையும் எதிர்கால வளர்ச்சியும் உறுதிசெய்யப்பட வேண்டும். இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்திய மக்கள் முன்னுள்ள பிரச்சினைகளில் நதிநீர் ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது. எல்லாத் தரப்பட்டவருக்கும் பொறுப்புணர்ச்சியும் கடமையுணர்ச்சியும் தேவைப்படுகின்றன. நதிகளின் இணைப்பினால் புதிய காடுகளும், உழு நிலங்களும், நீர்த்தேக்கங்களும், மின்நிலையங்களும், தொழிற்சாலைகளும் மனித வளம் மேம்படக் குடியிருப்புக்களும் ஆங்காங்கே நாளடைவில் தோன்றவும் வாய்ப்புகளுண்டு. இன்றுள்ள நிலைமை மாறி விவசாயத்தில் தன்னிறைவு பெறவும் இயற்கை வளத்தைப் பயன்படுத்தி வேளாண்மையையும் மக்கள் நல்வாழ்வையும் பெருக்க, புத்தமைக்க வாய்ப்பும் வசதியும் ஏற்படும் என்பது உறுதி.

நீரை ஒட்டியே மக்கள் நாகரிகம் எழுகிறது, வளர்ந்தோங்கிச் சிறக்கிறது.

அண்மையில், இந்திய அரசின் நீர் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு சோஸ் (ளுடிண) அவர்கள் நதிநீர் இணைப்புக்கான தக்க நடவடிக்கைள் மத்திய அரசால் உடனடியாக எடுக்கப்படும் என்று அளித்த உறுதிமொழி நம்பிக்கை தருவதாக உள்ளது.

மே தினம்

நூற்று இருபத்து ஓராண்டுக்கு முன் சிக்காக்கோவில் 1886 ஆம் ஆண்டு மே முதல் நாள் நிகழ்ச்சியை நினைவு கூர்வது மே நாள். 8 மணி நேர வேலை கேட்டு ஆர்த்தெழுந்த தொழிலாளர்களைச் சிக்காக்கோ நகரில் ஹே மார்க்கட் சதுக்கத்தில் அமெரிக்க முதலாளித்துவம் சுட்டுக்கொன்று வஞ்சம் தீர்த்த நாள். அதுவே உலகத் தொழிலாளி வர்க்கம் தன் கடமையை அறிவதற்காக உணர்வூட்டும் நாள். 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று மே தின நூற்றாண்டு நினைவையொட்டி விளக்கமாக இவ்விதழில் ம. சிங்காரவேலரின் தலைமைச் சீடரான நாகை கே. முருகேசன் அவர்களும் இப்பொழுது “உங்கள் நூலகம்” இதழாசிரியராக உள்ளஆர். பார்த்தசாரதியும் இணைந்து வெளியிட்ட விளக்கமான சுற்றறிக்கை வெளிவருகிறது. மே தினத்தின் 100 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சோவியத் நாடும் கிழக்கு ஐரோப்பிய மக்கள் ஜனநாயக நாடுகளும் நிலை குலைந்து சிதறிப்போயின. இதனால் ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புகள் மிகப் பல. என்றாலும் மே தினத்தின் வரலாற்றுச் சிறப்பும் அதனைத் தொடர்ந்து அனுசரிக்க வேண்டிய கடமையும் ஒரு சிறிதும் குறையவில்லை.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முயற்சியினால் இந்தியாவில் முதன்முதலில் 1923 ஆம் ஆண்டு சென்னையில் மே தினம் கொண்டாடப் பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com