Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

நூர் விமர்சனம்

வரலாற்றில் ஒருமைவாத வளர்ச்சி
மயிலை பாலு

காரல் மார்க்சின் சமூக அரசியல் பொருளாதார தத்துவங்கள் அணுவின் ஆற்றலைப் பெற்றவை. பெரும்பான்மையினரின் பிரதிநிதிகள் ஆட்சி செய்வதுதான் மக்களாட்சி என்றால் அது உழைக்கும் வர்க்கத்தினரின் ஆட்சியாகத்தான் இருக்கவேண்டும் என்று உலகுக்குப் பறைசாற்றியவர் அந்த மாமேதை. நாங்களும் பாட்டாளிகளுக்குக் கூட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு நாடாளுமன்றங்களையும் சட்டமன்றங்களையும் பிடித்துக் கொண்டு இன்று ஜனநாயகம் என்ற பேரால் பலர் ஆண்டு கொண்டிருந்தாலும் அது போலியானது என்பது உலகறிந்த உண்மை. பண நாயகமும் பல நாயகமும் ஒருக்காலும் ஜனநாயகம் ஆக முடியாது. அது பாட்டாளி வர்க்க ஆட்சிக்குரிய பண்பல்ல. எதிர்ப்புகள் பலவரினும் இன்று நடக்க வேண்டியது நாளை அல்லது பல நாட்கள் கழித்துதான் நடக்குமென்றாலும் அதற்காகக் காத்திருந்து பொதுக் கருத்தை உருவாக்கி எதையும் செயல்படுத்துவதுதான் பாட்டாளி வர்க்க ஜனநாயகம்.

ஜனநாயக வடிவிலேயே உயர்வான, அனைத்து அதிகாரங்களையும் பாட்டாளி வர்க்கம் பெறுகிற காலமே எந்த வொரு நாட்டுக்கும் பொற்காலமாகும். இதற்கான தத்துவங்களைத் தகவமைத்தவர் காரல்மார்க்ஸ். அவர் வாழ்ந்த காலத்திலும் மறைந்த பிறகும் அவரது தத்துவத்திற்கு விதவிதமான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. சில விளக்கங்கள் இணைந்து சென்று புதிய வெளிச்சத்தைத் தந்து நடைமுறைக்கு வழி வகுத்தன. லெனினிசம், மாவோயிசம், ஸ்டாலினிசம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மறுபக்கம் மார்க்சியத்தை மறுதலித்து சித்தப்போக்கிற்கு சிதைத்த நரோதிசம், தவறாக விளக்கமளித்த டிராட் ஸ்கியிலும், ஸ்துருவேயின் சட்டப்பூர்வ மார்க்சியம் போன்ற போக்குகளும் இருந்தன.

ரஷ்யாவில் தொழிலாளர் வர்க்கம் வளர வாய்ப்பில்லை என்றும் இந்த வர்க்கம் தலைமை தாங்காமல் விவசாயிகளின் தலைமையிலும் அறிவு ஜீவிகளின் உதவியுடனும் சோஷலிசக் கட்டுமானத்தைச் செய்து விடமுடியும் என்று கற்பனை செய்தவர்கள்; வர்க்கப் போராட்டங்கள் மூலமே வரலாறு உருவாகிறது என்பதைப் புறக்கணித்து தனிநபர் சாகச வாதமே வரலாறு என்று கருதியவர்கள் நரோத்னிக்குகள். (‘நரோத்’ என்றால் ரஷ்யமொழியில் ‘மக்கள்’ என்று பொருள். ‘நரோத்னிக்குகள்’ என்றால் ‘மக்களுக்கானவர்கள்’ என்று பொருள்) இவர்களில் ஒருவராக இருந்தவர்தான் ஜார்ஜ் வேலண்டினோவிச் பிளக்கானோவ்.

மார்க்சியத்தைத் தலைகீழாக்கி மக்களுக்கானவர்கள் என்று சொல்லிக் கொண்ட இந்த நரோதிசத்திலிருந்து விடுபட்டு உண்மை மார்க்சியத்தின் பால் இவர் ஈர்க்கப் படுவதற்குக் காரணம் ஜார் ஆட்சியே. ஆம்! செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே அறமென்றிருந்த ஜார் ஆட்சி, பிளக்கானோவைத் துரத்தியதால் அவர், ஸ்விட்சர்லாந்து நாட்டுக்குத் தப்பியோடினார். அங்கு மார்க்சிய நூல்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். கற்றதை மற்றவர்களுக்கும் விரித்துரைக்க பல கட்டுரைகளை எழுதினார். எதில் கரைந்து போக விருந்த நிலையில் கரையேறினாரோ அந்த நரோதிசத்தை எதிர்த்து கருத்துப் போராட்டம் நடத்தினார். இவரது கட்டுரைகள் ரஷ்யப் புரட்சிக்கான பாதையை அசைபோட்டுக் கொண்டிருந்த இளைஞர் லெனினுக்குப் பெரிதும் பயன்பட்டன.

இத்தகைய கட்டுரைகளிலிருந்து சாறெடுத்துத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. “வரலாற்றில் ஒருமைவாத வளர்ச்சி” என்ற பெருநூலை அப்படியே மொழி பெயர்க்காமல் எளிமையையும் இனிமையையும் நிறைத்து 42 பக்கங்களில் செறிவாகத் தந்திருக்கிறார் எஸ். தோதாத்ரி அவர்கள்.

பிளக்கானோவின் தத்துவ விளக்கங்களை அப்படியே தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளாமல் ஒருமைவாதம் என்றால் என்ன என்பதற்கு உதாரணமாக சங்கரரின் ஏகான்மவாதத்தைக் குறிப்பிட்டு அதன் உள்ளீடாகக் கருத்துமுதல்வாத ஒருமைவாதம் பொருள்முதல் வாத ஒருமைவாதம் என இது இரு தளங்களில் இயங்குவதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் முந்தைய காலத்தைப்போல் இப்போதெல்லாம் இலக்கியங்கள் முற்போக்காகப் படைக்கப் படுவது குறைந்துவிட்டது என்று குறைபட்டுக் கொள்கிறவர் களுக்குப் பதிலாகவும் ஒருபகுதியைப் பிளக்கானோவிலிருந்து சுட்டிக்காட்டுகிறார்.

சமூகச் சூழ்நிலைதான் கலைப் படைப்புகளைத் தீர்மானிக்கிறது என்பதை பிளக்கானோவ் கூறும் உதாரணத் தோடு பாரதி மீது பக்தி இலக்கியங்களும் கம்பனும் பாதிப்பு ஏற்படுத்தியதை உள்ளூர் நிகழ்வோடும் பதிவு செய்திருப்பது கவனத்துக்குரியது.

இதேபோல் ஒப்பியல் இலக்கியத்திற்கான கோட்பாட்டை விளக்கும்போது வால்மீகியின் ராமன், ராவணன் ஆகியோர் காடுவாழ் மக்கள் அமைப்பின் பண்புகளைக் கொண்டவர்கள் என்றும் கம்பனின் ராமனும் ராவணனும் நிலப்பிரபுத்துவ அமைப்பின் பண்பினைக் கொண்டவர்கள் என்றும் நூலாசிரியர் சுட்டிக்காட்டியிருப்பது சிந்திக்கத்தக்கது.

புதிய பொருளாதார அமைப்பு தோன்றும் போது அதற்கு இசைவாக உளவியலும் தோன்றுகிறது என்ற அடிப்படை நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டி யுள்ளது. பொருளாதார அடித்தளம் மாறும் பொழுது கருத்தியலும் மாறுகிறது. இந்த மாற்றத்தின்போதும் பழமையைப் பாதுகாக்க விரும்புவோர் பிற்போக்காளர்கள்; மாறுதல்களை வரவேற்போர் முற்போக்காளர்கள் என்ற வரையறை துல்லியமானது. இன்றைய சூழலோடு பொருத்தி நோக்கத்தக்கது.

நேற்றைய திரைப்படங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் குறிவைத்து எடுக்கப்பட்டதென்றால் இன்றைய திரைப்படங்கள் இளைஞர்களை மட்டுமே குறியாகக் கொண்டுள்ளதும் அதுவும் எதிலும் பிடிப்பில்லாத விட்டேற்றியாக வாழும் மனநிலையை உருவாக்குகின்றவையாக இவை இருப்பதையும் இங்கே ஒப்பிட்டுக் காணலாம்.

ஒவ்வொரு வர்க்கமும் அதன் வர்க்க நலன்களுக்கு ஏற்ற கருத்தியலை உருவாக்குகிறது என்பதுதான் உண்மை. பாட்டாளி வர்க்கக் கருத்தியலை வளர்த்தெடுத்து தலைமைப் பாத்திரம் கொடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

‘வரலாற்றில் ஒருமைவாத வளர்ச்சி’

தமிழ்ச் சுருக்கம் : எஸ். தோதாத்ரி,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 20.00



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com