Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

மதிப்புரை

குருமார்களும் வர்க்கங்களும்
சி.அறிவுறுவோன்

சோலைசுந்தரபெருமாளின் மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு ‘குருமார்கள்’. மூன்றுமே குருமார்களுடைய ஆதிக்க ஆளுமையை வெளிப்படுத்துவதால் தலைப்பு மிகவும் பொருத்தப்பாடாக அமைந்துள்ளது.

குருமார்கள், அடிக்கல் இரண்டும் பிராமணியத்தின் ஆதிக்கத் தன்மையையும் சுரண்டல் வெறியையும், பண்பாட்டுப்பக்க விளைவையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் வெற்றி அடைந்திருக்கின்றன. அடிக்கல், தஞ்சை நாயக்கமன்னன் சகஜியின் காலத்தைச் சார்ந்த வரலாறு தழுவிய கதை. திருவாரூர் தியாகேசன் கோவிலின் கீழக்கோபுர வாசல் பக்கமாக உற்சவமூர்த்தி வீதியுலா வரும்போது முதல் மண்டகப்படி நடத்திக் கொள்ளவும் வழிபடவும் பங்குனி உத்திரத்திருவிழா தொடக்கத்தில் ஆதிகண்டேஸ்வரர் திருவாணையைத் தாங்கி யானைமீது அமர்ந்து அறிவிக்கும் உரிமையையும் குப்பான்சாம்பானுக்கும் அவன் பரம்பரைக்கும் அளிக்கிறார் மன்னர் சகஜி. ஆனால் பிராமணியத்தின் குறியீடாகவரும் சிவாச்சாரி ஆகமவிதிகளை மாற்றிவிடுவதின் மூலம் கீழக்கோபுரவாசல் வழியாக பகவானைத் தரிசிக்கவரும் எவருக்கும் பகவானின் அருள்பாலிப்பு கிட்டாது என அறிவித்து அரசனின் ஆணையைச் செயலிழக்கச் செய்து விடுகிறார்.

முகமதியப்படையெடுப்பின்போது ஆதிதியாகசன் சிலை களவுபோய்விடக்கூடாது என்பதற்காகப் புதைத்து வைக்கப்பட்ட ஐம்பொன்சிலையை நீரூற்றுத் தோண்டும் போது புதையலாக எடுத்து மறைவாக ஒரு புதரில் வைத்துக் கொண்டு வணங்கும் குப்பான்சாம்பான், நந்தனை நினைவுபடுத்தும் வகையில் படைக்கப்பட்டுள்ளான். காலம் காலமாகக் காணாமல் போய்க்கிடந்த ஆதிதியாகேசர் சிலையைக் கண்டு பிடித்துக் கொடுத்தமைக்காகப் பெருந்தெய்வ வழி பாட்டை குப்பான் சாம்பானுக்கு வழங்கச் சொல்லி ஆரமுது கேட்டுக் கொள்வதும், ஓதுவார் அதற்கு ஆதரவாக இருப்பதுவும், சிவாச்சாரி, குப்பான்சாம்பானைத் தண்டிக்கக் கோருவதும் வழிப்பாட்டு நெறிகளில் குறிக்கிட அரசனுக்கு உரிமையில்லை என்று வாதிடுவதும் நெஞ்சில் தைக்கும்படியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சகஜி, ஆரமுது போன்றோர் ஆதிதியாகேசன் சிலையைக் கண்டு சிலிர்த்துப் போவதைக் காட்டியுள்ள பாங்கும் உயிரைப் பொருட்படுத்தாமல் பெருந்தெய்வத்தின் பால் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் தன்னை முழுச்சைவனாக மாற்றிக் கொண்ட காட்சியும் பளிச்சென்று வந்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெருந்தெய்வவழி பாடு அக்காலத்தில் மறுக்கப்பட்டிருந்தது. நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கத்தாராலும் அவர்தம் பண்பாட்டுப்பரிவாரங் களாலும் காலங்காலமாகப் பெருந்தெய்வ வழிபாட்டு மோகம் வளர்க்கப்பட்டு வந்ததன் விளைவாகவே ககஜிமன்னனும், ஆரமுதும் சிலிர்த்துப் போகிறார்கள்.

அவ்வாறே நந்தன் தொடங்கி இன்றுவரை குப்பான்சாம்பான் உள்ளடங்கலாகத் தாழ்த்தப்பட்டவர்கள் வெண்ணீறு அணிந்து பெருந்தெய்வ வழிபாட்டில் வெறியுடன் ஈடுபடுவதினால் தங்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக்கொடுமை, இழிவு போன்றவற்றிலிருந்து விடபட முடியும் எனும் நம்பிக்கை அவர்கள் ஆழ்மனத்துள் அடங்கிக் கிடக்கிறது. அதன் காரணமாகவே குப்பான் சாம்பான் போன்றோர்க்கு உயிர் ஒரு பொருட்டில்லாமல் போய் விடுகிறது. ஆனாலும் ஆகமவிதிகள் ஒன்று நத்தனை ஜோதியில் கலந்துவிடச் செய்கிறது. அல்லது சகஜி, ஆரமுது போன்றோரின் துணையிருந்தால் குப்பான்சாம்பான் போன்றவர்களை கீழே தள்ள ஆகமவிதிகளை மாற்றியமைத்துக் கொள்கிறது.

அடிக்கல் மூலமாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி இதுவே. அதே நேரத்தில் மன்னன் சகஜி தன் அதிகாரத்தைக் சிவாச்சாரியின் மீது திணித்தால் மன்னனின் சுரண்டல் மற்றும் ஆதிக்கத்தை நியாயப்படுத்திக் கொண்டிருந்த பிராமணியத்தை அழிப்பதாகி விடும். எனவே மன்னன் சகஜி பாம்பும் நோகாமல் பாம்படித்துக் கோலும் நோகாமல் நடந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது என்பதை ஆகம விதியில் மன்னன் குறுக்கிட முடியாது என்பதாகக் கூறப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

முட்டிமைதுனத்தில் ஈடுபட்டிருக்கும் வாட்டசாட்டமான துர்க்கை உபாசகன் ஒரு பிராமணன் என்று காட்டப் பட்டிருக்கிறான். பிராமணர்களின் கொழுவிய உணவுமுறையும் உடலுழைப்பற்ற தன்மையும் அவனை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. திருவையாற்றின் புஷ்யமண்டபத்துறை எத்துனைச் சீர்கேட்டுக்குக் காரணமாகவுள்ளது என்று காட்டப்பட்டுள்ளது. புரோகிதன், தங்கவேலுப்பிள்ளையிடம் தன் வரும்படிக்கான உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்வதை நன்கு காட்டியுள்ளார். இன்று புரோகிதம் ஒரு வங்கி ஊழியரின் மாதவருமானத்தை விடவும் அதிகமான வருமானத்தைத் தருவதாக உள்ளது. வங்கிவேலையை விட்டுவிட்டு புரோகிதம் செய்து வரும் சில பிராமணர்களைக் காணும்போது இப்படிக்கூறாமல் இருக்க முடியவில்லை.

இந்தப் புரோகிதம் பிராமணனாகப் பிறந்தவனுக்கு மட்டுமே வாய்க்கப்பட்ட அல்லது வாய்க்கப்பெறும் தொழிலாகும். நாவலில் முக்கிய பங்கு வகிக்கும் சங்கர் கூறுவது போல சீனிவாசன் என்னும் சலவைத் தொழிலாளி அதைச் செய்ய முடியாது. காரணம் பிறப்பு சீனிவாசனும் ராமுபண்டிதனும் சுடுகாட்டிலும் சாவு வீட்டிலும் ஈமக்கிரிகையில் ஈடுபடுகிறார்கள். இவர்களே குருமார்களோ என ஐயுறும்படிப் படைக்கப் பட்டுள்ளார்கள். ஆனால் இவர்கள் குலக்குழுச் சமூகக் காலகட்டத்தில் ராமுபண்டிதன், சீனிவாசன் இவர்களது முன்னோர்கள் மட்டுமே குருமார்களாக இருந்திருக்க முடியும். குலக்குழுக்கள் இணைந்து சாதிச்சமூகம் உருவானபிறகு சாதிகளைத் தொகுக்கும் சட்டகங்களாக வர்ணங்கள் இறுகிய காலமே பிராமணியம் நிறுவப்பெற்ற காலமாகும். இக்காலப் பகுதியில் சீனிவாசன் போன்றோர் இடுகாட்டோடும் சாவு வீட்டோடும் நிறுத்தப்பட்டனர்.

ராகுல்ஜி, ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ எனும் நூலுள் ஆன்மக்கோட்பாட்டினை திவோதாஸ் காலத்தில்ஆவிகள் உலகம் உருவாக்கம் பெற்றதனையும் பிரவாகன காலத்தில் மறுபிறவி உருவாக்கம் பெற்றதனையும் விவரிக்கிறார். இவர்கள் சத்திரியர்கள் என்று தெளிவுபடுத்தி கூறுகிறார். இந்த ஆன்ம கோட்பாடுதான் பிராமணியத்தின் ஈமக்கிரியைத் தொடர்பான புரோகிதத் தொழிலுக்கு அடிப்படையைச் சாதிச் சமூகத்தில் ஆரியர் கலக்கும்போது ஆரியர்கள் பிராமணர்களாகி விட்டார்கள் என்பது வெறும் ஊகம் மட்டுமே. இதனால் பிராமணர்கள் அனைவரும் ஆரியர் எனும் கருத்தைச் சங்கர் முன்வைப்பதையோ அழகுமுத்து போன்றவர்கள் அதை ஏற்பதையோ நாம் ஏற்பதற்கில்லை.

ஏனெனில் இந்தியத் துணைக்கண்டத்தில் பழங்கால ஆளும்வர்க்கம் தனியுடைமையைத் தோற்றுவிக்கவும் தன் சுரண்டலை நியாயப் படுத்தவும் பிராமணியத்தைக் கட்டமைத்தது. பிராமணர் களுக்கு அரசர்கள் தானம் வழங்குவது தனியுடைமையைத் தோற்றுவிக்கவும் நியாயப்படுத்தவும் உதவியது. சங்ககாலத்தில் கூட வள்ளல்கள் புலவர்களுக்குக் கொடை வழங்கியுள்ளனர். அப்போது தமிழகத்தில் பிராமணியம் கட்டமைக்கப் பட்டிருந்தால் இங்கிருந்திருந்த வள்ளல்களும் பிராமணர் களுக்குத் தானம் வழங்கியிருந்திருப்பர். எனவே இந்தியச் சமூக வளர்ச்சிப் போக்கில் தவிர்க்க முடியாமல் உருவானதே பிராமணியம் என்பதை உணரலாம்.

டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மூலக்கூறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டு அட்டவணை தயாரிக்கப்பட்டுவிட்ட இக்காலத்தில் பரிணாம வளர்ச்சியில் முதலில் தோன்றிய மனிதன் ஆணா, பெண்ணா என்ற கேள்விக்குப் பெண் என்றும் அதுவும் தோன்றிய இடம் ஆப்ரிக்கா கண்டம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பிராமணர்கள் கலப்பினமா? ஆரிய இனமா? என்பதையும் கண்டறியமுடியும். பிராமணர்கள் அன்றைய ஆரியர்கள் இல்லை என்பதை அறிவியல்படியே காண முடியும். வேண்டுமானால் அம்முயற்சியில் சங்கர், அழகுமுத்து, சீனிவாசன் போன்றவர்கள் ஈடுபட்டுத் தெளியலாம். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே தெளிந்து கொள்ள விரும்புவோர் தர்மதீர்த்த அடிகளார் எழுதிய ‘இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு’ (தமிழ் பதிப்பு சாளரம்) எனும் நூலைப்படித்து அறியவும்.

இப்போது பிராமணர்கள் ஆரியர்களா இல்லையா என்பதை விட பிராமணியம் தேவையா? இல்லையா? என்பதுதான் கேள்வி. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு இன்றைக்கும் பிராமணியம் தேவைப்படுகிறது. எனவே இடதுசாரி எழுத்தாளர்கள் வர்க்கப் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் அதே வேளையில் பிராமணிய எதிர்ப்பையும் கொண்டு வரவேண்டும். வர்க்கப் போராட்டத்தை உதறிவிட்டுப் பிராமணிய எதிர்ப்பை மட்டும் உயர்த்திப்பிடிப்பதுதான் தி.க. மற்றும் அம்பேத்காரியப் பார்வையாகும். இந்தப் பார்வையானது மார்க்சிய வரம்புக்குள் இருந்து கொண்டே பிராமணியத்தை எதிர்ப்பது என்பதற்கு நேர்மாறானது. வர்க்கப் போராட்டத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானதாகும். எனவே சோலை போன்ற எழுத்தாளர்கள் இதைக்கவனத்தில் கொள்ள வேண்டும். இறுதியாக ஆசை. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற புத்தனும் அவன் மதமும் வீழ்ச்சியடையக் காரணம் என்னவெனில் மத்திய கால

இந்தியாவின் வளர்ச்சிக்குப் பிராமணியம் தேவையாய இருந்ததால்தான் அது நேர்ந்தது. இன்றைய ஆளும் வர்க்கமும் பிராமணியத்தை ஆதரிப்பதால் தான் இடஒதுக்கீடு கொள்கையை ஒழுங்காக அமல்படுத்தாமலும் உயர்கல்வி மற்றும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களோடு நேரடியாகவோ கமுக்கமாகவோ கூட்டுசேர்ந்துள்ளார்கள். இந்த நிலையில் ஆசையைப் பரிசீலிக்க வேண்டும். வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள், சாம்பசிவஐயரின் குரு. ஓதுவார்மகாலிங்கம் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட வேதத்துக்குப் பிறந்தவன் வைத்தியநாதன் சூத்திரன். வேதம் என்னும் பெயர் பெரும்பாலும் பிராமணர்களிடமே நிலவுகிறது.

அரிதாகப் பிராமணர் அல்லாதவர்களிடம் வேதவல்லி என்றே நிலவுகிறது. எனவே வேதம் பிராமணப்பெண் என்றே கொள்ளலாம். சூத்திரனுக்குப் பிறந்த வைத்தியநாதன், சூத்திரன் என்றாலும் கணவனைப் பறிக்கொடுத்துவிட்டு உயிருக்குப் பயந்து ஓடிய வேதம், சாம்பசிவஐயரின் குருவின் காலடியில் குழந்தையைப் போட்டுவிட்டு ஓடிவிடுகிறாள். அதுமுதல் அந்தக் குருவின் பேரனாக வைத்தியநாதன் வளர்க்கப் படுகிறான். பின்னர் குரு, தன் சீடர் சாம்பசிவஐயரிடம் வைத்தியை ஒப்படைக்கிறார்.

இது முதல் வைத்தி மடைப் பள்ளியில் சாப்பிட்டுக் கொண்டு கோவிலேயே தங்கிவிடுகிறான். பிராமணர்களுக்குரிய ‘நியமநிஷ்டை’களைக் கடைப்பிடித்துக் கொண்டு கோவிலில் சாம்பசிவ ஐயருக்குத் துணையாக இருக்கிறான். சாம்பசிவஐயரின் மகன் கணேஷ் படித்துவிட்டு வேலைக்கிடைக்காமல் சினிமாக் கொட்டகையில் திருட்டு டிக்கெட் விற்றுப் பிழைக்கிறான். இது பிராமணியம் காலத்துக் கொவ்வாதது என்பதை உணர்த்துவதாகும். எனவேதான் குருக்கள், வேதக்கல்வி கற்பிக்காமல் கல்லூரிக்கு அனுப்பி யிருந்திருக்க வேண்டும். சாம்பசிவஐயரின் தங்கைமகள் சியாமளா, கணேஷை விரும்புவதும் கணேஷ் சியாமளாவை விரும்புவதும் நன்றாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐயரின் நண்பரின் உதவியால், அவரும் ஒரு ஐயர் தான் கணேஷ் நல்ல வேலையில் சேர்ந்து சென்னையில் தங்குவதும் தனக்கு வேலை போட்டுத் தந்தவரின் தங்கை வீட்டிலேயே கணேஷ் தங்க வைக்கப்படுவதும், அவர் தங்கை மகள் ஜனனியோடு பழக்க மேற்பட்டுச் சொந்த ஊரையும், உறவையும் கணேஷ் மறந்து விடுவதும் பின்பு அமெரிக்காவிலுள்ள ஜனனியின் அப்பா தன் மகளைக் கணேஷுக்குத் தரமறுத்து அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுவிடுவதும் கணேஷுக்குத் திருடன் பட்டத்தோடு காதல் தோல்வியும் சேர்ந்து கொள்ளும் முன்பே அவன் அப்பாவின் மரணம் நிகழ்ந்து விடுகிறது.

மரணத்துக்குப் போக முடியாத நிலையில் சாம்பசிவஐயருக்குப் ஈமக்கிரியை வைத்தியால் செய்துவைக்கப்படுகிறது. இப்போது சாம்பசிவக் குருக்கள் குடும்பத்தையும் கவனிக்கும் பொறுப்பு வைத்தியைச் சேர்ந்துவிடுகிறது. எனவே ஐயர் வீட்டிலேயே வைத்தி தங்கிவிடுகிறான். சியாமளா கணேஷை மணக்கவியலாததைப் புரிந்து கொண்டு வைத்தியோடு பழக முனைகிறாள். வைத்தியோ கோவிலில் கிடைக்கும் குறைந்த வருமானத்திலேயே நிறைவு கொள்கிறான்.

கணேஷ், அப்பாவின் மரணச் செய்தி கேட்டு ஊருக்கு வருகிறான். எதிர்பட்ட சியாமளாவை வாஞ்சையோடு அழைத்தும் அவள் கண்டு கொள்ளாமல் போய்விடுகிறான். சுகவாழ்வுக்கு ஆசைப்பட்டு கணேஷ் காதலையும் இழந்து அவலப்பட்டுக் கால்போனப் போக்கில் போகிறான். வைத்தி சுகபோக வாழ்க்கையைப் பற்றி யோசிக்கவில்லை. பொலிவு கிடைக்கும். அக்கிரகாரத்திலேயே வளர்ந்ததனாலும் அவன் பிறப்பு ரகசியம் சாம்பசிவஐயரோடு மடிந்து விட்டதால் அவன் இப்போது சூத்திரன் இல்லை.

சூத்திரனாய்ப் பிறந்தாலும் கோவில் காரியங்களில் சாம்பசிவஐயரைவிட சாம்பசிவஐயரே பிரமிக்கும்படிச் செய்யத் தெரிந்தவனாகிவிட்டான். ஆக வேதக்கல்வி சூத்திரனுக்குப் பொருந்திவரக்கூடியதே என்று இக்கதையில் நிறுவியுள்ளார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்பதை இக்கதை மூலம் நன்கு கொண்டு வந்துள்ளார் சோலை. இக்கதையை 1985 வாக்கில் எழுதப் பட்டுள்ளதாக நூலில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம் இதைப் படிப்பது நல்லது.

கணேஷ் வசதியான வாழ்க்கையைக் கனவு கண்ட பேராசைக்காரன். தன் சாதிக்காரர்களாலேயே பாதிக்கப்படுகிறான். யார், அவன் உயரக்காரணமாக இருந்தாரோ அவரே அவன் ஒரு கையாடல்பேர்வழி அதாவது திருடன் என்று பொய்க்காரணம் காட்டி ஜனனியின் காதலை முறித்து விடுகிறார். என்னதான் கணேஷும் ஜனனியும் ஐயர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வர்க்கம் அவர்களைப் பிரித்துவிடுகிறது. ஜனனியின் அப்பா அமெரிக்காவில் வாழ்பவர். இந்தியாவில் மூலதனம் போட்டுத் தொழில் நடத்துபவர். அவர் மைத்துனர்தான் கணேஷுக்கு உதவியவர். கணேஷ் இவர் நிறுவனத்தில், ஓர் ஊழியர். தனக்குச் சமதையான இடத்தில்தன் பெண்ணைக் கொடுக்க விரும்பியதால் கணேஷ் உதாதீனப்படுத்தப்படுகிறான்.

ஆகவே என்னதான் கணேஷ் சாதிக் காரணமாக இருந்தாலும் வர்க்கத்தில் அவன் முதலாளி இல்லை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது இல்லை. வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது எவ்வளவு உண்மையாகிறது! ஆக மூன்று கதைகளும் இருவேறு காலக்கட்டங்களுக்குரியவை. இவற்றில் வரும் குருமார்கள் அவரவர் வர்க்க நிலைக்கேற்பவே சிந்தித்துள்ளார்கள். செயல்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மன்னர் சகஜியின் காலத்தைச் சேர்ந்த திருவாரூர் சிவாச்சாரியார் அளவிற்கு வைத்தீஸ்வரன்கோவில் குருக்கள் வர்க்கத்தில் உயர்ந்தவர் இல்லை.

வைத்தீஸ்வரன் கோவில் குருக்கள் அளவிற்குச் சாம்பசிவஐயர் வர்க்க ரீதியாக உயர்ந்தவர் இல்லை. ஆகவேதான் அவரவர் சீத்துவத்துக்குத் தக்கவாறு அவர்கள் சிந்தனையும் செயல்பாடும் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. தற்காலத்தேவைகளை மனத்திற்கொண்டு நமது வாசிப்பு அமையுமாயின் இக்கதைகளின் சிறப்பம்சம் நன்கு விளங்கும். குருமார்கள் கதையில் வரும் ‘குருமார்கள்’ உடல் தினவு கொண்டவர்களாக வரும் படிக்காகவே நச்சரிப்பவர்களாகவும் கொண்டு வரப்பட்டு சுரண்டலால் கொழுத்துள்ளதற்குச் சான்றாக காட்டப்படுகின்றனர்.

குருமார்கள்

ஆசிரியர் : சோலை சுந்தரபெருமாள், வெளியீடு : நிவேதிதா புத்தகப் பூங்கா, எண். 14, இரண்டாம் தளம், பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14, விலை : ரூ. 50.00


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com