Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

கட்டுரை

இலக்கியப் பரண்: மறையும் நூல்கள் வரிசை-7
பா.ஆனந்தகுமார்

இலக்குமணச் செட்டியாராகிய சிந்நயச் செட்டியார் அவர்களால் இயற்றப் பெற்ற “காசியமகவந்தாதி - மூலமும் உரையும்”, சென்னபட்டணம் வித்தியாநுபாலனயந்திர சாலையில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது, பிலவஸ்ரீ, புரட்டாதி மீ, 1901.

பாண்டி நாட்டிலுள்ள சோதிவனத்துட்சேர்ந்த தேவி கோட்டையில் (தேவகோட்டை) உள்ள மாற்றூர்க் கோயில் உறையூர் வகுப்பு வீர. இலக்குமணச் செட்டியார் அவர்கள் குமாரர் சிந்நயச் செட்டியாரால் இயற்றப்பெற்றது தான், காசியமகவந்தாதி. இதனை மேற்படியூரைச் சேர்ந்த அள.சுப. சு. சுப்பிரமணியச் செட்டியார் (நூலாசிரியரின் மாணாக்கர்) பதிப்பித்துள்ளார். காசியிலிருக்கும் சிவபெருமானின் அருட் திறத்தையும் பெருமைகளையும் விளக்குவதாகவும், அவனிடம் முக்தியினை வேண்டுவதாகவும் நூலின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான ‘அந்தாதி’ எனும் இலக்கிய வகையைச் சார்ந்ததாக நூல் அமைந்துள்ளது.

மேலும் ‘யமகம்’ எனும் சொல்லணியை அடிப்படையாகக் கொண்டும் நூல் இயற்றப்பெற்றுள்ளது. ‘அந்தாதி’ என்பது அந்தம் ஆதியாகும் (இறுதி முதலாக வரும்) உத்தியினைப் பெற்றது. அதாவது முதற்செய்யுளின் இறுதியில் இடம் பெறும் தொடரோ, சொல்லோ, எழுத்தோ அடுத்த செய்யுளின் முதலசையில் இடம்பெறும்.

“துக்கம் சுகத்திற் பெருகிற் றெனாவொரு சொல்லியம்பே” என இறுதியடி முடியும், அதற்கடுத்த பாடலின் முதலடி பின்வருமாறு தொடங்கும். “இயம்பல வாயினன் றார்க்கின்ற காசியிறைவசின்ம” (செய். 7) ‘யமகம்’ என்பது ஒரே வடிவில் அமையும் எழுத்துக் கூட்டம் (சொல் அல்லது சொற்றொடர்) வெவ்வேறு பொருள் கொள்ளும் வகையில் செய்யுள் புனைவதாகும். இது எதுகை, மோனை, மடக்கு போன்று சொல்லணிகளுள் (சப்த அலங்காரம்) ஒன்றாம்.

“வாசி வசிவசி மாறன் வயின்விற்ற வாசிவசி / வாசி வசிவசி வாவென்று இயம்பு வயங்கருணூல் / வாசி வசிவசி மாசலப் பாலின்ப மாவனத்தா / வாசி வசிவசி யஞ்செய் மின்னாரை மடநெஞ்சே” (காசி யமகவந்தாதி, செய். 49)

இச்செய்யுளுள் ‘வாசிவசிவசி’ எனும் சொற்கூட்டம் அதற்கு முன்னும் பின்னுமுள்ள சொற்களுடன் இணைந்து வெவ்வேறு சொற்பிரிப்பிற்குள்ளாகி வெவ்வேறு பொருள் தருதல் காண்க.

1. வாசி வசிவசி மாறன் வயின் விற்றவர் - குதிரையை (வாசி) கூர்மை (வசி) பொருந்தியவாள் (வசி) கொண்ட பாண்டிய மாறனிடம் விற்றவரே.

2. சிவ சிவா சிவசிவ சிவா என்று இயம்பு - சிவனே சிவனே சிவனே சிவனே சிவனே என்று கூறுவாயாக.

3. வயங்கு அருள்நூல் வாசி - விளங்கும் சைவ அருள் நூலைப்படி (வாசி)

4. வசு இமாசலப்பால் இன்பம் மாவனத்து வசி - பொன்மயமான (வசு) இமயமலையின் பக்கத்திலுள்ள காசியில் தங்கு (வசி)

5. சி வசியம் செய் மின்னாரை ஆவா சிவ - இலக்குமியை (சி/ஸ்ரீ) வசிகரிக்கின்ற மின் போன்ற பெண்டிரை அந்தோ கோபம் கொள் (ஆவோ சிவ)

மேற்காட்டிய செய்யுளைப் போன்ற நூறு செய்யுட்களைக் கொண்டமைந்துள்ளது, காசியமாக வந்தாதி. அந்தாதி இலக்கிய வகை நூறு செய்யுட்களைக் கொண்டு அமையும். இவ்நூறு செய்யுட்கள் நீங்கலாக நூலின் முதலில் விநாயகர் மீதான காப்புச் செய்யுள் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அதில் புத்தி, சித்தி எனும் பெண் யானைகளை (மனைவியரை) நாளும் தழுவிப் பேரின்ப வனத்திலிருக்கின்ற ஆண்யானையான விநாயகர் நம் நெஞ்சத் தடாகத்தில் விளையாடி விளங்குவார் எனப் பாடியுள்ளார்.

நூலுள் காசி நகர் ‘அவிமுத்தம்’ எனப் பலவிடத்துக் குறிக்கப் பெற்றுள்ளது. குமரகுருபரர் தனது காசிக்கலம் பகத்திலும் (17 ஆம் நூ.ஆ.) காசி நகரை அவிமுத்தம், ஆனந்தவனம் எனும் பெயர்களில் குறித்துள்ளார். மணிகள் நிறைந்த மாளிகைகளால் சூழப்பட்டது, சோலைகளால் சூழப்பட்டது, இமயத்தின் அருகிலுள்ளது, தேவ மகளிர் அம்மானை ஆடுமிடம், கங்கைநதி பாய்வது, மாதவனும் நான் முகனும் சிவனை வழிபடும் தலம், ஆகாயத்துள்ள சுவர்க்கத்தார் வந்து வழிபடும் தலம் என்று பலவாறு காசி நகரின் பெருமைகள் நூலில் விதந்தோதப்பட்டுள்ளன.

மட்டுமல்லாது ‘விஷ்ணுவாகிய ஆமையினது செருக்கையும் முதுகு ஓட்டினையும் ஓடித்தவன்’, ‘சமண சமயத்தைச் சங்காரம் செய்த ஞான சம்பந்தனுக்கு அருளியவன், ‘முப்புரம் எரித்தவன்’, ‘யானையின் தோலை உரித்தவன்’, ‘மார்க்கண்டனின் உயிரைக் காத்தவன்’ எனச் சிவபெருமானின் பெருமைகள் - சிவபுராணச் செய்திகள் நூலுள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தன் மடநெஞ்சை பெண்ணின்பத்துள் நின்று நீங்கும்படி வேண்டுகிறார்; ஆணையிடுகின்றார். பெண்ணுருவம் ‘பீ’ நிறைந்தபையென வெறுத்தொதுக்குகின்றார். (“இடை அல்குல் மாதர்படிவம் மலப்பை” (செய். 57). ஆயின் பெண்களின் மார்பு, இடை, அல்குல் ஆகியவற்றை லயித்து வருணித்துள்ளார். இந்த விஷயத்தில் சிவனின் மனைவி உமையம்மையும் விதிவிலக்கல்ல. (‘தீகழ் தனத்து ஆரியைகோன்’, ‘முலைப்பெண்’ ‘பொரா அல்குலாள்’).

ஆங்காங்கே ஐந்தெழுத்தை (நமச்சிவாய ஓதுவோம், சைவசித்தாந்தைச் சாருவோம், உண்பதும் உறங்குவதுமாகிய தொழில்களில் இருந்து விலகுவாய் மனமே என்ற குரல் காதும் ஒலிக்கின்றன. சிவபெருமானை வழிபட்டதால் தனது மனக் கலக்கங்கள் தீர்ந்ததாகவும் (“சித்தவிகாரக் கலக்கம் எனை விட்டுத் தீர்ந்தனவே”) சிவன் அருளைப் பொழிந்ததாகவும் கூறும் ஆசிரியர், சிலவிடத்து ‘முக்தி பாலிப்பையே’, ‘நான் உனை முன்னல் என்றே’ ‘ஒரு வார்த்தை காதிற் பணித்தருளே’ என சிவ அருளுக்காக ஏங்கவும் செய்கின்றார். காசிநம்பனை வேண்டாதாரின் முடை நாற்றமிக்க உடல் தாவரம் போன்றதென ஓரிடத்துக் கூறுகின்றார்.

“தனையணையானை இறைஞ்சார் முடையுடல் தாவரமே” (செய். 99)

இறுதிப்பாடலில் காசிநகரத் தலைவர் கொடுக்கும் வரங்கள் பல. அவை எண்ணிற் அடங்கா. அவர் தொண்டர் களிடத்து எண்ணற்ற இரத்தினமணிகளும் யானைக் கூட்டங் களும் நிறைந்திருப்பதாகக் கூறுகின்றார்.

காசியமகவந்தாதி இடைக்காலத் தமிழ்ப் புலமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. பாரதி அவன் காலத்து புலவர் குறித்துச் சொன்னது போல் ‘அகராதிகளுக்கும் கூட அர்த்தம் தட்டும்படியான வார்த்தைகள்’ - அகராதிகள் மிரண்டு திகைக்கும் வார்த்தைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. சொற் சிலம்பங்களுக்கும் நூலில் குறைவில்லை. நாம் கற்பனை செய்து பார்க்க இயலாத வண்ணம் ‘கற்றவராயின்’ என்ற சொற்றொடர் ‘கல்+தவர்+ஆயின்’ என்றும் பொருள் கொள்ளப் பட்டுள்ளன. நல்லவேளை, நூலுக்கு நூலாசிரியரே உரை செய்துவிட்டார். இல்லையென்றால் வாசகன் பாடுதிண்டாட்டம் தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com