Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2007

நூர் வெளியீட்டு விழா

தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே
அமரந்தா

30-4-2007 அன்று மாலை 6 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக பவழவிழா அரங்கில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடான ‘தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே’ எனும் நூலை முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் வெளியிட இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்மாநில துணைத்தலைவர் சி. மகேந்திரன் பெற்றுக்கொண்டார். ஆசியா, லத்தீன், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பல்வேறு கண்டங்களில் தண்ணீரை வியாபாரச் சரக்காக மாற்றும் அரசுகளின் போக்கை எதிர்த்து வெவ்வேறு விதமான போராட்டங்களின் வழியாகத் தண்ணீரை மக்களின் உரிமையாக நீடிக்கச் செய்துள்ள அமைப்புகளின் அனுபவங்களே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தியாவில் கேரளா, தில்லி, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களின் அனுபவங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் ஏற்கெனவே மலையாளத்திலும் இந்தியிலும் வெளியிடப்பட்டுவிட்டது. கன்னடம், தெலுங்கு, வங்காளி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் விரைவில் வெளிவரப் போகின்றது.

இந்நூல் வெளியீட்டு அரங்கில் (1) பொலிவியாவின் கொச்சம்பாவிலும் லாபாஸ்-எல்ஆல்டோ இணை நகரங்களிலும் நடைபெற்ற தண்ணீர் தனியார் மயமாதலை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் தலைமை ஏற்று நடத்திய ஹூலியன் பெரேஸ் (தற்போது இவர் பொலிவியா தண்ணீர் அமைச்சரவை ஆலோசகர்), வெனிசுவேலாவில் தண்ணீருக்கான உரிமை மக்கள் வசமே நிலைத்திருக்கப் போராடிய சான்தியாகோ ஆர்கொனாடா (தற்போது இந்தத் தொழிற்சங்கத் தலைவர் வெனிசுவேலா சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசகர்), (3) நெதர்லாந்தைச் சேர்ந்த ஓலீவியர் ஹொய்திமேன் (மக்கள் நீராதாரங்கள் மீட்பு இயக்கத்தின் (Reclaiming Public Water) ஒருங்கிணைப்பாளர் (ஐரோப்பாவில் நீர் மேலாண்மையைத் தனியாரிடமிருந்து பொதுத்துறைக்குக் கொணரும் இயக்கத்தலைவர்), (4) இங்கிலாந்தைச் சேர்ந்த செல்வி டாம்சின் யீஸ்ட் (உலக வளர்ச்சி இயக்கத்தின் (WDM) ஒருங்கிணைப்பாளர் ஆகிய நால்வரும் கலந்து கொண்டு தத்தமது நாடுகளில் போராடிய அனுபவங்களையும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து கண்ட போராட்டங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

தனியார் மயமாதலை எதிர்த்து இந்தியாவின் பல மாநிலங்களில் கீழ்க்கண்ட சில அமைப்புகள் போராடி வருகின்றன.

1. ‘பரிவர்த்தன்’ என்கிற உலக வங்கிக்கு எதிரான குழு. 2. ‘இன்சாஃப்’ என்னும் வில்ஃப்ரெட்டி’ கோஸ்டா தலைமையிலான தில்லி பம்பாய் நகர குழுக்கள். 3. ‘மனிதன் பதிப்பக’த்தின் திரு. ஸ்ரீபத் தர்மாதிகாரி தலைமையிலான குழு. இது நதிநீர், அணைக்கட்டு நீர் தனியார் மயமாக்கத்தைத் தடுக்கும் குழு - போபால், இந்தோர் நகரங்களில் செயல்படுவது. 4. போபால் விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு. 5. கர்நாடக மாநிலத்தின் தண்ணீர் தனியார் மய எதிர்ப்புக் குழு. 6. நதீநீர் பாதுகாப்புக்கான கேரளா மாநில குழுக்கள். 7. தனியார் மயமாக்கத்திற்கு எதிரான பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பு, கேரளா. 8. மக்கள் சிவில் உரிமைக் கழகம், கோவை.

நிகழ்வுக்குத் தலைமை தாங்கிப் பேசிய இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் தோழர் ஆர். நல்லகண்ணு, “இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சோசலிச உயிர்ப்புக்கு வழிகாட்டும் வெனிசுவேலா, பொலிவியா நாடுகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள் நம்மிடையே வந்திருப்பதால் மக்கள் சொத்தான தண்ணீரை அபகரிக்கவும், அதை மீட்கப் போராடும் மக்களை தண்டிக்கவும் கூடிய தைரியம் வந்துவிட்டது கொக்ககோலாவுக்கு. இதை முறியடிக்க மக்கள் தண்ணீரை மீட்கும் போராட்டங்களில் இணைய வேண்டும்; அதற்கொரு வழிகாட்டியாக இந்நூல் பயன்படும்” என்று கூறினார்.

முன்னதாக உலகின் பல நாடுகளிலும் இந்தியாவின் பல நகரங்களிலும் நேரில் சென்று தண்ணீர் தனியார் மயமாதலை எதிர்த்துப் போராடிய மக்கள் இயக்கங்களுடன் நேரடியாக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்ற மக்கள் சிவில் உரிமைக்கழக தமிழ்நாடு - புதுச்சேரி பிரிவின் தலைவர் முனைவர் வீ. சுரேஷ், கொச்சபம்பா (பொலீவியா) மெக்ஸிகோ சிட்டி (மெக்ஸிகோ) இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலம் குறித்து விரிவாகப் பேசினார். பொலிவியாவில் காவல்துறையும் ராணுவமும் மக்களின் வீடு புகுந்து தண்ணீர்ப் பானைகளை உடைத்து தண்ணீருக்கு விலை கொடுக்கும்படி கேட்டது; மெக்ஸிகோ சிட்டியில் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தி மக்கள் இயக்கங்களை ஒடுக்க முயன்றது.

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் மீனவர்கள் கிணறுகளிலிருந்து பெறும் தண்ணீருக்கு மீட்டர் பொருத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநில அரசு கூறியது. கட்டணம் செலுத்தாத மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று படகுகளைத் தடுத்தது. அப்போது அம்மக்கள் தண்ணீர் மக்களுடையது, மக்களுக்கு அதனைப் பயன்படுத்தும் உரிமை வேண்டும். தண்ணீரை விலைக்கு விற்கக்கூடாது என்று பெரிய அளவில் போராடத் தொடங்கினார்கள். வெளிநாட்டுக் குழுவினருடன் அங்குச் சென்ற முனைவர் சுரேஷிடம் அவர்கள் உரிய முக்கியத்துவம் அளித்து எங்கள் போராட்டம் பற்றி, நீங்கள் வெளியிடும் நூலில் இணைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே இந்த நூல் மக்கள் போராட்டங் களின் தொடரும் ஆவணமாக இருக்கிறது.

நூலை வெளியிட்டு முனைவர் மு. ஆனந்த கிருஷ்ணன் “கல்வித்துறை தனியார் மயமானபோது வலுவான இயக்கம் ஏதும் அக்கறைகாட்டி அதைத் தடுக்கமுன்வரவில்லை. எனவேதான் அத்துறை பெரும் சீரழிவுகளைச் சந்தித்தது. ஆனால் அடிப்படைத் தேவையான தண்ணீர் தனியார் மயமாவதைத் தடுக்காமல் இருக்க முடியாது. அதற்கான தருணம் இப்போது வந்துள்ளது. இது தண்ணீர் பிரச்சினை மட்டுமல்ல.... பொருளாதார சீர்திருத்தம் எனும் ஏமாற்று வழியில் தண்ணீர் தனியார் மயமாக்கல் தாரக மந்திரமாயிற்று. எதைத் தனியார் மயமாக்குவது எதைச் செய்யக்கூடாது என்பதற்கு இங்கு வரையறை ஏதுமில்லை. மக்கள் சமூகத்தின் சொத்து தண்ணீர் எனும் இயற்கை வளம். இதைச் சமூகத்தின் ஒப்புதலின்றி எவ்வாறு தனியார் மயமாக்கலாம்? தண்ணீர் அரசுக்குச் சொந்தம், அரசு அதிகாரிகளுக்குச் சொந்தம் என்று கூறி மக்களை முட்டாள்களாக்கப்பார்க்கிறார்கள். மக்கள் விழித்தெழுந்து இதை எதிர்த்துப் போராட வேண்டும்’.

‘(1) நீடித்து நிலைக்கும்படி, மக்கள் அனைவருக்கும் சொந்தமாகும்படி தண்ணீர் ஆதாரங்கள் மேலாண்மை - செய்யப்படவேண்டும் எனும் உணர்வு மக்களிடம் உருவாக மக்கள் ஒப்புதலின்றிச் செய்வது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என்று நிறுவப்பட வேண்டும்.

(2) நீராதாரங்களைக் காக்கவும் மேம்படுத்தவும் அரசு அதிகாரிகள், பெண்கள், அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள், பேராளர்கள் ஆகியோரின் திறமை மேம்பாட்டுக்குப் பயிற்சி அளிக்கப்படவேண்டும். பொதுமக்கள் ஈடுபாடும் மேற்பார்வையும் திறன்மிக்கதாக இருக்கவேண்டும்.

(3) நிறுவனமாற்றத்தில் நம்பகத்தன்மை இருக்கும்படி நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையானதாக அமைய வேண்டும்’.

‘நூலின் முதல் பகுதி வெற்றி பெற்ற மக்கள் போராட்டங் களைப் பற்றி விவரிக்கின்றது. இரண்டாம் பகுதியை நான் மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன் - காரணம் தண்ணீர் தனியார் மயமாக்கத்தைக் கைவிட்டு மக்கள் சொத்தாகத் தொடரச் செய்யப் பல்வேறு விதமான முயற்சிகளை அது விவரிக்கிறது. மூன்றாவதும் முக்கியமானதுமான பகுதி கைவிட்டுப் போனதை மீட்டெடுக்க நடைபெறும் போராட்டங்களை நடத்தும் மக்களின் கதைகளைச் சொல்கிறது.

‘கைவிட்டுப் போய் விட்டதே ஐயோ’ என்று விரக்தியில் தோய்ந்துவிடாமல், மக்கள் புரிந்துகொண்டு செயலாற்றும் வண்ணம் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து புள்ளி விவரங்களுடன் முன்வைக்க வேண்டும். தனியார்மயம் ஏன் செய்யப்படுகிறது? அதன் பயனாளி யார்? அம்பானி, பிர்லா போன்றோர். அதற்கு ஏன் மக்கள் பணம் தர வேண்டும்? என்று கேள்விகள் எழுந்து முறையானதோர் எதிர்ப்பு உருவாக வேண்டும். அப்போது வெறுப்பு விடைபெற்றுப் போராட்ட குணம் மேலெழும் - இதுவே நாட்டுக்கு நல்லது செய்யும்.

மக்களே தனியார் மூலதனம் தேவையா, அது மக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகாதா என்று கேள்வியெழுப்பி விடைகாண வேண்டும். அதற்கு எளிமையான மக்கள் மொழியில் எழுதப்பட்டு சிறுசிறு வெளியீடுகள் வரவேண்டும். பிரச்சினை என்ன? ஏன் வந்தது? எப்படி எதிர் கொள்வது? என கேள்விகளை எழுப்பி எளிய நடையில் அவற்றுக்கான பதில்கள் அடங்கிய சிறு வெளியீடுகள் லட்சக்கணக்கான மக்களை அடையச் செய்யவேண்டும்”.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிட்)யின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், ‘இந்த நூல் ஒருபுறம் அச்சமும் கவலையும் அளிப்பதாகவும், மறுபுறம் உற்சாக மூட்டுவதாகவும் இருப்பதைக் குறிப்பிட்டார். ஒருபுறம் பொதுத்துறை புறக்கணிக்கப்படுகிறது. மறுபுறம் தனியார் மயம் ஆக்கப்படுகிறது. மூன்றாவது மாற்றாக மக்கள் பங்கேற்புக்குக் கேரளாவின் ஒலவன்ன கிராமம் வழிகாட்டுகிறது. திட்ட மிடலின் போதே மக்களின் பங்கேற்பு என்பது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த உதவும் என்பதற்கு இது ஒரு சான்று. பலங்கரை கிராமம் மற்றொரு எடுத்துக்காட்டு. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மக்களால் கொக்க கோலாவை வெல்ல முடியவில்லை. இதன் பொருள் மக்கள் தோற்றார்கள் என்பதல்ல. போதுமான அனுபவம் அதைச் சரி செய்யும். இங்குத் தனியார்மயம் என்பது நீதித்துறையின் ஒப்புதலோடு நடைபெறுகிறது. நீதித்துறை இங்குக் குற்றவாளியாக - மக்களின் எதிரியாக நிற்கிறது” என்றார்.

வெனிசுவேலா குடியரசுத் தலைவரின் ஆலோசகர் சான்தியாகோ ஆர்கோனேடா, 1999 ஆம் ஆண்டு ஹூகோ சாவேஸ் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக நாடு சந்தித்து வரும் பிரச்சினைகளினுடே சாதாரண மக்கள் வாழ்வை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்குத் தேவையான தண்ணீர் வசதிகளைச் செய்து தந்துள்ளோம்.

தனியார் மயம் என்ற பிரச்சினை எங்களுக்கில்லை. காரணம் அரசியலமைப்புச் சட்டம் அதை முழுமையாகத் தடைசெய்துள்ளது. ஆனால் தண்ணீர் விநியோகம் மூலம் பணம் பண்ணும் எண்ணத்தில் சில நிறுவனங்கள் செய்த முயற்சிகளைத் தடுத்துள்ளோம். தண்ணீர் என்பது உயிர்; உயிர் காக்கத் தண்ணீர் தேவை. எனவே நாம் நம்மிடையே உள்ள அனைத்துக் கருத்து வேறுபாடுகளையும் விட்டுவிட்டு தண்ணீருக்கான போராட்டங்களில் ஒன்றிணைய வேண்டும். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது என்பது நாளும் நிகழும் போராட்டம். தண்ணீரை தனியார் மயமாக்குவது என்ற எண்ணத்தைக் கைவிட வைக்குமாறு நமது போராட்டம் உருவாக்கப்பட வேண்டும், வெற்றிக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்றார்.

பொலிவியாவின் ஹூலியன் பெரேஸ், தண்ணீர் தனியார் மயமாவதைத் தடுக்கும் போராட்டங்களில் சம்பந்தப்பட்டவராக இருப்பதால் இந்தியாவில் அதற்கான போராட்டம் மேலும் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்றார். நீர் ஆதாரங்களைப் பரம்பரையாக மக்கள் தமக்கே உரித்தான புத்திசாலித்தனமான பல வகைகளில் சேமித்து பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அதைத் தனியாருக்கு விட்டுக் கொடுத்து பணம் கொடுத்து வாங்கும் வியாபாரப் பண்டமாக மாறவிடுவது எப்படி நியாயமாகும்? எனவே கடுமையான போராட்டங்களின் வழி தண்ணீர் பொதுமக்கள் சொத்தாக நிலைக்கச் செய்வதே உயிரினங்களுக்குத் தண்ணீரை தொடர்ந்து கிடைக்கச் செய்யும் ஒரே வழி. நமக்கு மட்டுமல்ல நமது குழந்தைகளுக்காகவும் நீரைக் காப்பாற்றி வைப்பது நம் கடமை என்று கூறி உரையை நிறைவு செய்தார். மக்கள் நீராதாரங்கள் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் ஒலீவியர் ஹொய்டிமேன், மிகத் தெளிவாகத் தண்ணீர் தனியார் மயமாக்கத்தின் பின்னணியை விவரித்தார் :

“தண்ணீரைத் தனியார் மயமாக்குவது (1) அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் (2) தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படும். இவற்றால் அதிகமான மக்களுக்கு நீர் விநியோகம் செய்ய முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இது மிகத் தவறான தகவல். இது லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கிழக்காசியாவிலுள்ள நாடுகளில் படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளின் முயற்சிகள் வீணானதையொட்டி இக்காலக்கட்டம் ‘இழந்த பத்தாண்டுகள்’ (டுடிளவ னுநஉயனந) என அழைக்கப்படுகிறது.

எனவே இம்முயற்சி கைவிடப்பட்டது. உலக வங்கி இதனை நன்கறியும். மீண்டும் இந்தத் தவறான முறை எங்கும் செயல்படுத்தப்படக் கூடாது என்று அறிந்தும் - பிற நாடுகளில் கதவுகள் அறைந்து மூடப்பட்ட பின்னாலும், இந்தியாவில் விரிந்த கரங்களுடன் உலக வங்கியின் திட்டம் வரவேற்கப்படுவது முரண் நகையாக இருக்கிறது.

ஐரோப்பாவிலும், பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் இதே நிலைதான். ஊழலும், தவறான செயல்முறைகளும் சேர்ந்து மோசமான நிலையை உருவாக்கிவிட்டன. இந்தக் கையறு நிலையில் மக்கள் போராடத் தொடங்கி விட்டார்கள். முதலாளிகள் அனைத்து முதலீடுகளையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.

கிரெனோபில் என்ற முனிசிபாலிட்டி பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் பிரதேசத்தில் உள்ளது. இங்குத் தனியாரிடமிருந்து நீர் மேலாண்மை மீண்டும் பொதுத்துறைக்கு மாற்றப்பட்டது. இது மீண்டும் முனிசிபாலிட்டிக்கே நிர்வாகத்தை அளித்தது. (சுந-ஆரniஉiயீயடளையவiடிn) ஊழல் செய்த தனியார் கம்பெனி அதிகாரியும் மேயரும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். இந்த அனுபவத்தின் பிறகு பிரான்ஸ் நாட்டின் 60ரூ முனிசிபாலிட்டி களில் நீர் மேலாண்மை மீண்டும் பொதுத்துறைக்கு வந்துள்ளது. இந்த அனுபவத்தின் பிறகு பிரபலமானதுதான் பொதுத்துறை - பொதுமக்கள் கூட்டுறவு அல்லது பொதுத்துறை - பொதுத்துறை கூட்டுறவு எனப்படுகிறது.

(ஒரு பொதுத்துறை நிறுவனமும், மக்களும் இணைந்து செயல்படுத்துவது அல்லது ஒரு பொதுத்துறையும் மற்றொரு பொதுத்துறை நிறுவனமும் இணைந்து செயல்படுத்துவது) இந்த வடிவம் தற்போது பல பகுதிகளிலும் செயலுக்கு வந்துள்ளது. இது உருகுவே, பொலிவியா, அர்ஹென்தினா, பெரூ ஆகிய நாடுகளில் செயல்படுகிறது.

தற்போது ஐ.நா. தண்ணீர் வழங்கல் கூட்டுறவு புதியதோர் அமைப்பை, புதியதோர் வடிவாக இதனை ஏற்று எதிர் காலத்தில் நிலைத்திருக்கும் அமைப்பாக அறிவித்துள்ளது.

உலக வளர்ச்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் டாம்சின் யீஸ்ட், ‘உலகெங்கிலும் நீர் தனியார்மயமாக்கலுக்கு உலக வங்கி திட்டம் தீட்டுகிறது, ஆலோசனை அளிக்கிறது, கடன் வழங்குகிறது. இதில் பிரிட்டிஷ் அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை நீராதாரங்களைக் கொள்ளை யடித்து அவற்றை மக்களிடம் விலைக்கு விற்பதும் அவர்களைச் சுரண்டி உலக வங்கி பயனடைவதும் முற்றிலும் எதிர்க்கப்பட வேண்டியவை. எனவே நாங்கள் பிரிட்டிஷ் அரசு இத்திட்டத் தினை ஆதரிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது - கைவிட வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகப் போராடத் தொடங்கினோம்.

கொச்சபம்பா மக்களின் போராட்டம் உலகெங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று உலகின் பல பகுதிகளிலும் இந்தப் போராட்டம் பரவலாகி, மக்கள் தண்ணீருக்கான தங்கள் உரிமையைப் பாதுகாக்க கிளர்ந் தெழுந்துள்ளது மகிழ்வளிக்கிறது’ என்று கூறினார்.
முதலில் பொதுமக்கள் வரிப்பணத்தைக் கொண்டு அம்மக்களுக்கு எதிரான தனியார் மயமாக்கலுக்கு விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் வலுவான போராட்டங்களுக்குப் பின்னர் இந்நிலை மாறிவிட்டது. சென்ற மார்ச் 22 ஆம் தேதி, பிரிட்டிஷ் அரசு தனியார் மயமாக்கலைக் கைவிட்டு விட்டதாக அறிவித்து நீர் மேலாண்மை மீண்டும் பொதுத்துறைக்கே வந்து சேர்ந்தது.

இந்தியா அடிப்படையில் விவசாய நாடு. அதற்கென ஆற்று நீரைப் பெருமளவுக்கு நம்பியுள்ள நாடு. தற்போது நீர் ஆதாரங்கள் பலவும் சரியான பராமரிப்பின்றி வரண்டு போன நிலையில், இருக்கும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதும் அவற்றை மக்கள் பயன்படுத்தும் உரிமையைத் தக்க வைப்பதும் நமது தலையாய கடமைகளாக இருக்கவேண்டும். அவ்வுரிமை களைப் பாதுகாக்க எத்தகைய போராட்டங்களை முன்னெடுக் கவும், அவற்றுக்காகத் தியாகம் செய்யவும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தை இந்தக் கூட்டமும், ‘தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே நூலும்’ நமக்கு ஆணியடித்தாற் போல உணர்த்துகின்றன.

உருகுவே, வெனிசுவேலா இவ்விரு நாடுகளிலும் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலமாகத் தண்ணீர் மக்களின் பொதுச் சொத்து என்று நிறுவப்பட்டு விட்டது. ஐரோப்பிய யூனியன் தண்ணீரைச் சேவைகள் பட்டியலி லிருந்து நீக்கி விட்டது - அதாவது மக்களுக்கே உரிமை என்று கூறிவிட்டது. ஆனால் இந்தியா மட்டுமே காட் (ழுஹகூகூ) ஒப்பந்தத்தின் அடிப்படையில் தண்ணீரைச் சேவைகள் பட்டியலில் இணைத்து - அதாவது மக்கள் விலைக்கு வாங்கும் பண்டமாக மாற்றி அறிவித்து உள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com