Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006


நீங்கா முகம்

யுகபாரதி

கவிதைகள் தங்களை என்ன விதமாகக் காட்டிக்கொள்ள முற்படுகின்றன என்பது தனி அரசியல். அது, இலக்கிய வளர்ச்சிக்கான அரசியலா இல்லை அடையாளப் படுத்துவதற்கான அரசியலா என்று யூகிக்க முடியவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பதிப்புச் சூழலில் ஏற்பட்டு இருக்கிற அதிரடி முன்னேற்றம் இந்த குழப்பத்தை தோற்றுவித்திருக்கிறது.

குறிப்பாக, சிற்றிதழ்களின் பங்களிப்பும், அவை பதிப்புத் துறையில் செலுத்தி வரும் கவனமும் மிக முக்கிய காரணமாகக் கருதுகிற, அதே நேரத்தில் புத்தகங்களுக்கென உருவாகி இருக்கிற புதிய சந்தைக்குப் படைப்பாளிகள் பொருள்களைச் சப்ளை செய்யும் கூலிகளாக மாறியிருக்கிறார்கள் அல்லது பதிப்பகங்கள் அவர்களை அவ்விதம் மாற்றி இருக்கின்றன என்பதும் உண்மை.

ஏனிந்த திடீர் பொலிவு? ஏனிந்த திடீர் தேவை? ஏனிந்த திடீர் தடபுடல் ஆடம்பரம்? ஒரே மேடையில் ஒரே படைப்பாளி பத்தோ பதினைந்தோ புத்தகங்களை வெளியிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அறியாமை பீடித்த மக்களை அவற்றிலிருந்து மீட்டும் வேட்கையா? இல்லவே இல்லை. புத்தக ஆக்கத்திற்கு தேவையான வரவுகள் இப்போது முன்னை விட எளிதாக கிடைக்கின்றன. இணையத்தை திறந்தால் உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் தெரிந்துகொள்ளும் வசதி வந்து விட்டது.

அலைந்து திரிந்து புத்தகங்களை வாங்கி மொழி பெயர்த்து மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்ட வெ. சாமிநாத சர்மா போல இன்னும் பிறரைப் போல இன்றைக்குக் கஷ்டப்படத் தேவையில்லை. பொத்தானை அழுத்தினால் புத்தகத்திற்குத் தேவையான கச்சாப் பொருள் கைவசமாகிறது. எனவே, எழுதிய கைகள் அதையே தொழிலாக மாற்றிக் கொள்கின்றன. இணையத்தில் கிடைப்பதற்கும் புத்தக பதிப்புக்கும் உள்ள தொடர்பை விவரிக்கையில் இணையத்தில் கிடைக்கும்போது ஏன் புத்தகம் வாங்குகிறார்கள் எனக் கேள்வி எழலாம். அந்தக் கேள்வி கூர்மையானது என்றாலும், சந்தையோடு நெருங்கிய வியாபாரிகள் அதை நன்கு உணர்வார்கள். புழக்கம் அதிகமான இடத்தில் கடை பரப்புவது வியாபாரிகளின் தந்திரம்.

இப்படித் தொடங்குகிற கவிதையின் அரசியலை முன் வைத்து கோபால்தாசன் கவிதைகளை வாசிக்கும்போது அவருடைய ஏனைய கவிதைகளுக்கும் இந்த ‘அச்சாணி’. தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடிகிறது.

ஓடிக் கொண்டு இருக்கிற கால வெள்ளத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப தனது ஆக்கங்களைப் புதுப்பிக்கவோ அல்லது திருத்தி எழுதவோ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு படைப்பாளன் தள்ளப்படுகிறான். அந்த நிர்ப்பந்தத்துக்கு கோபால்தாசனின் கவிதைகளும் விதிவிலக்கல்ல என்றே படுகிறது.

வேறுமாதிரி தனது படைப்புகளை எழுதி வந்த கோபால்தாசன் இந்தத் தொகுப்பில் முற்றிலுமாகத் தன்னை புனரமைத்துக்கொள்ள முனைந்திருக்கும் தொனி வெளிப்படையாகவே தெரிகிறது. நவீன கவிதை, வேர்க்கவிதை என்னும் பாகுபாட்டில் தனது இடம் எதுவென்று அவர் தேடி இருக்கும் தேடல் பல கவிதைகளில் தென்படுகிறது.

ஒற்றைத் தன்மைக்குள் ஒண்டிக்கிடந்த தமிழ்க் கவிதைகளின் பரப்பு இன்று விஸ்தாரமாகியுள்ளது. கருத்துகளில் புதிது செய்வது போல வடிவத்திலும் பல பரிமாணங்களை எட்டியுள்ளன. புதிதாக எழுத வந்திருக்கும் பெண் படைப்பாளிகளின் பாதிப்பு பெருமளவு கவிதை உலகை மாற்று யோசனைகளுக்கு உட்படுத்தியிருக்கின்றது. நவீன கவிதைகளின் அடையாளமே அகவயமான சொல்லாடல் என்பது போல அறியப்பட்டாலும் அது அவற்றையும் தாண்டிய புதிய முயற்சி என்பதை மறுக்க முடியாது. கோபால்தாசன் “பிண்டமாற்றம்” என்ற கவிதை மேற்கூறிய முயற்சிக்கான சரியான உதாரணமாகக் கொள்ளலாம்.

இச்சூழலில் போதிய அரசியல் புரிதல் அற்ற ஒரு கவிஞனால் தனது பயணத்தை நகர்த்த முடியாத நிலை. ஒரு காலம் வரை வானம்பாடி அதற்கு முன் எழுத்து, மணிக்கொடி, சரஸ்வதி, கணையாழி, படைப்பாளிகள் போலச் சுதந்திரமாக இயங்க இயலாத அவலமும் இன்று மிகுந்திருக்கிறது. நவீன கவிதையென்னும் லேபிள் ஒட்டிக்கொண்டு நாகரிக காகிதங்களில் அச்சாகும் பல தொகுப்புகளில் வாழ்வை பிரதிபலிக்கும் யாதொரு அம்சமும் இல்லை என்பது பொதுவான கருத்து.

“பேயோட்டி” என்னும் கவிதையில் கோபால்தாசன் தமிழ்க்கவிதைகளின் தனித்த பதிவுகளை செய்ய முயன்று இருக்கிறார். தமிழ்க் கவிதைகள் உலகக் கவிதை போலப் பொதுத் தன்மையோடு இருக்க முடியாது என்பதற்கான சாட்சியே இக்கவிதை. பேயும் அதனை ஓட்டுபவனும் தொன்மம் நிறைந்த தமிழ்ச் சமூகத்தின் குறிப்புரை. இதை மொழிபெயர்க்கும் போது மொழி சாத்தியங்களை மட்டுமே செயல்படுத்த இயலும். கருத்து ரீதியான பெயர்வுக்கு விளக்க உரை தேவைப்படும்.

பக்கத்து வீட்டு அக்காவுக்கு பேய் பிடித்ததாகவும் அதனை ஓட்டவருகிறவனின் பொய்மைகளையும் ஜோடிப்புகளையும் சொல்லிக்கொண்டே வந்து இறுதியில், அவள் பித்துப் பிடித்ததைப் போல இருந்ததற்கு காரணம் வயிற்றில் வளர்ந்த கட்டி என முடிக்கிறார். மருத்துவச் சோதனைக்குப் பிறகு தெரிய வரும் உண்மையை வறட்டு நம்பிக்கையால் ஒரு தமிழ்க் குடும்பம் எவ்வாறு எதிர் கொண்டது என்பதே கவிதையின் சாரம். கவிதை இன்னும் இறுக்கமான உணர்வு தளத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சொற்களில் காணப்படாத கனத்தை கருத்து உள்வாங்கிக் கொள்கிறது.

வாசிக்கிறவனின் மனநிலைக்கு ஏற்ப ஒரு கவிதையின் புரிதல் மாறுபடும் என்றாலும் கவிஞன் தான் சொல்ல நினைப்பதை தவற விட்டுவிடாத கெட்டிக்காரத்தனம் தேவை. இது, என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். ஆளாளுக்கு ஒன்றை புரிந்துகொள்ள எழுதுவது பெருமை இல்லை. இஷ்டத்துக்கு புரிந்துகொள்ள எதற்கு நாம் எழுத வேண்டும்?

தொடர்ந்து இயங்குவது கவிஞனின் புறவயமான வளர்ச்சியைப் போல அகவயமான வளர்ச்சிக்கும் உதவும். கோபால்தாசனின் வளர்ச்சி இரண்டு புறங்களிலும் உள்ளதை இத்தொகுப்பு சுட்டுகிறது. தேவையற்ற வார்த்தைகளை நீக்கும் தைரியம் இன்னும் வராதவராகவும் ஓரிரு கவிதைகளில் முகங் காட்டுகிறார் என்றாலும், தமிழ்க் கவிதை பரப்பில் நீக்க முடியாத முகம் இவருடையது.

அச்சாணி, ஆசிரியர்: கோபால்தாசன்,
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்,
எண். 1, 3ஆவது மாடி, புதூர் 13வது தெரு, அசோக்நகர், சென்னை - 83,
விலை: ரூ. 35.00



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com