Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006

சிங்காரவேலர் வழியில் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்

பா.வீரமணி

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் ஒரு பொதுவுடைமைவாதி. அதுவும் உறுதியான நாத்திகர். ஆனால், தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரோ தேசியவாதி பழுத்த ஆன்மீகவாதி. ஓர் ஆன்மீகவாதி, நாத்திகரான பொதுவுடைமைவாதியைப் எப்படிப் பின்பற்ற முடியும்? எனும் ஐயம் எவருக்கும் எழவே செய்யும். ஆனால் உண்மை அதுதான். சிங்காரவேலர் (1860 - 1946) தொடக்கக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். தமிழகத்தில் விடுதலைப் போராட்டத்தின் போது தொண்டர் படைத் தளபதியாகவும், அகில இந்தியக் காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர். மேலும் பரந்த வாசிப்பும், அறிவியல் கண்ணோட்டமும் கொண்டவர். இவற்றால் உலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை உற்று நோக்கி வந்தார். வெளிநாட்டு நூல்களையும், வெளிநாட்டுச் செய்தித்தாள்களையும் தொடர்ந்து படிப்பவராக இருந்தார். இவற்றால், இவரது உலகக் கண்ணோட்டம் விரிந்து கொண்டிருந்தது எனலாம். இவர் இளமையில் இலண்டன் சென்று சில திங்கள் தங்கியிருந்ததாலும், அவர் கண்ணோட்டத்தில் கூடுதலான வளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.

அறிவியல், தத்துவம், உளவியல், மானிடவியல் ஆகிய துறைகளில் வெளிவரும் சிறந்த நூல்களை சென்னையிலுள்ள புகழ் வாய்ந்த கடைகளில் மட்டுமல்லாமல், “சுண்டைக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம்” என்பதற்கேற்பச் சிறந்த நூல்களை மிகுந்த செலவில் அஞ்சல்வழி வருவித்தும் படித்துள்ளார். வெள்ளை ஆதிக்கம் இவரை ஒரு போல்ஷ்விக் எனக் கருதிக் கடுமையாகக் கண்காணித்துக் கொண்டிருந்த போதும், இவர் புதுச்சேரியிலிருந்து தரை வழியாகவும், கடல் வழியாகவும் பற்பல அரிய நூல்களை வருவித்துள்ளார். இச்செய்திகள் மூலம் இவர் புத்தகங்கள் மீது எத்துணைத் தாகம் கொண்டு இருந்தார் என்பதை நன்கு உணரலாம். மாளிகை போன்ற தம் வீட்டில் அக்காலத்திலேயே பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகத்தை வைத்திருந்திருக்கிறார். பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய அமிர் அய்தர்கான், தென்னிந்தியாவிலேயே தனிப்பட்ட ஒருவரின் நூலகங்களுக்குள் சிங்காரவேலரின் நூலகமே மிகப் பெரிதெனச் சுட்டிக்hட்டியுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது. இவர் நூலகத்தை, ப. ஜீவானந்தம், அறிஞர் அண்ணா, எ.எஸ்.கே. அய்யங்கார், கே.டி.கே. தங்கமணி குத்தூசி குருசாமி போன்றோர் பயன்படுத்தி உள்ளனர்.

இவர் பொதுவுடைமைவாதியாக விளங்கியதால், அறிவியல், தத்துவம் போன்ற துறைகளைப் பற்றிய நூல்களை மட்டுமல்லாமல், குரான், பைபிள், பகவத்கீதை, அத்துவைதம், கைவல்ய நவநீதம் ஆகியவற்றையும் அவைபோன்ற வேறு சில நூல்களையும் கற்றிருக்கிறார். இவர் வரலாற்றுத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுப் பின்பு, சட்டத்துறையிலும் பட்டம் பெற்று வழக்குரைஞராகத் தொழில் புரிந்தவர். காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தவுடன் அதனை ஏற்றுத் தனது வழக்குரைஞர் அங்கியை தீயிட்டுக் கொளுத்தி, வழக்கு மன்றம் செல்வதை நிறுத்திக் கொண்டார். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (8.1.19-1-27.8.1980) சிறந்த தமிழறிஞர், எனினும் ஆங்கிலம், வடமொழி, இந்தி, தெலுங்கு, பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற பல மொழிகளைக் கற்றவர். இலக்கணம், தருக்கம், மொழியியல் ஆகியவற்றையும் நன்கு கற்றவர். தத்துவம், உளவியல், சட்டம், சமயம் ஆகிய துறைகளிலும் ஞானம் இருந்ததால், இவர் பல்கலைச் செல்வர் என்னும் பாராட்டப் பெற்றார்.

1922-ஆம் ஆண்டில் பி.எல். பட்டமும் 1923 ஆம் ஆண்டில் எம்.ஏ. பட்டமும் பெற்றார். பின்பு சிறந்த வழக்கறிஞரிடத்தில் (இவர் பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதியாக விளங்கியவர்) பயிற்சி பெற்றுத் தொழில் புரிந்தவர். இவருடைய தந்தையார் பொன்னுசாமி இராமணியார். இவரும் நன்கு தமிழ் கற்றவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவரான அட்டாவதானம் சுப்பராயச் செட்டியாரின் மாணவர்தான் பொன்னுசாமி கிராமணியார். திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு முறை பொன்னுசாமி கிராமணியார் வீட்டிற்கு வருகை புரிந்திருந்ததால், அப்பெரியாரின் நினைவாக அவர் தம் பிள்ளைக்கு மீனாட்சி சுந்தரன் எனும் பெயரை வைத்துள்ளார். பெரியோரின் பெயரைப் பலர் காப்பாற்ற மாட்டார்கள். ஆனால், பொன்னுசாமி அவர்களின் மகனார் மீனாட்சி சுந்தரன், திரிசிரபுரம் மகாவித்துவானின் பெயரைக் காப்பாற்றிவிட்டார். நன்றாகக் காப்பாற்றிவிட்டார். இந்நிலையில் தெ.பொ.மீ. நம்மால் மதிக்கத்தக்கவர். நன்றி பாராட்டத்தக்கவர்.

தெ.பொ.மீ. வாழ்ந்த சிந்தாதிரிப் பேட்டையில் இலக்கணத்திலும் வேதாந்தத்திலும் சூறாவளியாக விளங்கிய கோ. வடிவேலு செட்டியார் வாழ்ந்து வந்தார். தெ.பொ.மீ. இவருடைய தலைமை மாணாக்கராக விளங்கி, இலக்கணத்தையும் வேதாந்தத்தையும் இளமையிலேயே நன்கு கற்றார். தெ.பொ.மீ. செல்வக் குடியில் பிறந்ததால் எந்தெந்த நூலில் எவரெவர் வல்லுநரோ அவர்களிடம் அவர் சென்று கற்றுள்ளார். குறிப்பாக, கோ. இராமலிங்கத் தம்பிரானிடம் (இக்கட்டுரையாசிரியரின் ஆசிரியருக்கு ஆசிரியர், தணிகைப் புராணம், சேது புராணம் ஆகிய நூல்களைக் கற்றார். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார், திருப்புறம்பியம் இராமசாமி நாயுடு ஸ்ரீரங்கம் சு. கோபாச்சாரியார் ஆகிய அறிஞர்களிடம் வைணவத்தையும், தமிழ்ப் பெருமலை மறை மலையடிகளிடத்தில் சைவத்தையும் கற்றார். இவற்றையெல்லாம் 25 வயதுகுள்ளாகவே தெ.பொ.மீ. கற்றுள்ளார்.

கோ. வடிவேலு செட்டியாரிடத்தில் தெ.பொ.மீ. வேதாந்தமும் கற்றதாலும், இளமைத் தொட்டுப் பலரிடத்தில் சமயங்களைக் கற்றதால் இறுதிவரை ஆன்மீக வாதியாகவே அவர் விளங்கினார். குறிப்பாக, வேதாந்த உணர்வு அவருக்கு இறுதிவரை இருந்தது. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவிலும், இலண்டனிலும் தேசிய நாடகத்தை நடத்திய கிருஷ்ணசாமிப் பாவலர் தெ.பொ.மீ.யின் தமையனார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்முனையும் வடமுனையும் ஓரிடத்தில் சந்திப்பதுபோல், சிந்தனைச் சிற்பியும் பல்கலைச் செல்வமும் ஓரிடத்தில் சந்தித்தனர். அந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திய இடம் எது? நாம் அறிய வேண்டாமா? அந்த இடம்தான் சென்னை நகராண்மைக் கழகம். அதாவது சென்ட்ரல் இரயில் நிலையத்துக்குப் பக்கத்திலுள்ள ரிப்பன் மாளிகை. இருவரும் நகராண்மைக் கழக உறுப்பினர்களாகச் சந்தித்துக் கொண்டார்கள். 1925 ஆம் ஆண்டில் சிங்காரவேலர் சென்னை, யமுனை கௌனி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று, ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான மதனகோபால் நாயுடுவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். தெ.பொ.மீ.யும் காங்கிரஸ் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இருவரும் காங்கிரஸ் கட்சிக்காரர்களேயானாலும், நிரம்பக் கற்றிருந்தவர்களாக இருந்தாலும் இருவரும் வேறானவர்கள்.

1917ம் ஆண்டில் சோவியத்துப் புரட்சி வெற்றி பெற்றதிலிருந்து ஒருவர் சர்வதேசியவாதியாக மாறிக் கொண்டிருந்தார். இன்னொருவரோ தமிழகத்தைத் தாண்டித் தேசியவாதியாக மலர்ந்து கொண்டிருந்தார். ஒருவர் காந்தியத்திலிருந்து மார்க்சியராக மாறிக்கொண்டிருந்தார். மற்றொருவரோ காந்தியத்திலிருந்து மார்க்சியராக மாறிக் கொண்டிருந்தார். மற்றொருவரோ காந்தியத்திலேயே மேலும் ஆழ்ந்து கொண்டிருந்தார். ஒருவர் உறுதியான நாத்திகர்; மற்றொருவர் பழுத்த ஆத்திகர். ஆனால், இருவரும் சிறந்த மனிதநேயவாதிகள். அடிப்படையில் இந்த ஒற்றுமை இருவருக்கும் இருந்ததால் இருவரும் நட்பை வளர்த்தார்கள். நண்பர்களாக விளங்கினார்கள். ஒருவர் வயதுடைய முதியவர்; மற்றொருவர் 25 வயதுடைய இளையவர் வயதுவேறுபாடு இவர்களின் நட்புக்கும் ஊறு விளைவிக்கவில்லை. கொள்கைக்கும் கேடு விளைவிக்கவில்லை. இதனால், நகராண்மைக் கழகக் கட்டத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அந்த அதிசயம் என்ன? அதனை வெளிப்படுத்துவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

26.4.1926 அன்று சிங்காரவேலர், நகராண்மைக் கழகப் பள்ளிகளில் மதங்களைப் பற்றிய பாடங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெறக் கூடாதென ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இது மிக முக்கியமானதொரு தீர்மானமாகும். மதவேறுபாட்டைக் களைவதற்கும், மனித சமுதாயத்தில் நட்பையும், உறவையும் உருவாக்குவதற்கும் வளர்ப்பதற்கும் மதப்பாடங்கள் இல்லாமல் இருப்பதே சிறந்தது. மூடநம்பிக்கை வளராமல் இருப்பதற்கும் அறிவியல் கண்ணோட்டம் பெருகுவதற்கும், சமூகத்தில் நல்லிணக்கம் வளர்வதற்கும் குதம் பற்றிய பாடங்கள் இல்லாமல் இருப்பது மிக மிக வேண்டியதாகும். மனித சமூகத்தின் நற்பயன் கருதியே சிங்காரவேலர் அக்காலத்தில் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் இப்படிப்பட்ட தீர்மானத்தை முதலில் கொண்டு வந்தவர் சிங்காரவேலரே ஆவர். சிங்காரவேலர் தொலைநோக்கு உணர்வுடன் கொண்டு வந்த இப்பயன் மிகு தீர்மானம் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இத்தகு தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்காக பொதுவுடைமை இயக்கமும் பெருமைப்படலாம். தேசிய இயக்கமும் பெருமைப் படலாம். இப்படியொரு தீர்மானத்தை இந்தியாவில் வேறு எவராவது அக்காலத்தில் கொண்டு வந்துள்ளனரா? என்பதை ஆய்வாளர்கள் ஆய்ந்து பார்க்க வேண்டும். அப்படி யாரும் கொண்டு வரவில்லை என்றால், அந்தச் சிறப்பிடம் இந்தியாவிலேயே சிங்காரவேலுக்குத் தான் கிடைக்கும். வேறுயாராவது வேறு மாநிலத்தில் கொண்டு வந்திருந்தால் அந்நிலை மேலும் போற்றத்தக்கதேயாகும்.

சிங்காரவேலர் இப்படிப்பட்ட தீர்மானம் கொண்டு வந்ததற்குச் சோவியத்து ஆட்சியே காரணமாக இருந்திருக்க வேண்டும். அதாவது, சோவியத்து ஆட்சி, புரட்சிக்குப் பின் ஏற்பட்டதும், மதம் தனிப்பட்டவரின் விடயம் என்றும் மதச் சிந்தனைகளை வளர்க்க சோவியத்து ஆட்சி ஒருபோதும் துணைபுரியாது என்றும் சட்டம் கொண்டு வந்தனர். சோவியத்து ஆட்சி மூடநம்பிக்கைக்கு எதிரான போரையும், அறிவியல் கண்ணோட்டத்தையும் தொடர்ந்து வளர்க்கும் என்றும் தெளிவுபடுத்தியது. சிங்காரவேலர், சோவியத்தின் இந்த நிலைபாட்டை நன்கு உணர்ந்தவராதலாலும் மற்றும் Religion of the open mind, (மதங்களைப் பற்றிய பொதுமனப்பான்மை) (By Gowan white – watts and co-, London) Social Record of Christianity (கிறித்து மதத்தின் சமூக வேலை) By j. Macobi watts and co, london,) போன்ற மதத்திற்கு எதிரான அரிய நூல்களை நன்கு கற்றிருந்தாலும் அத்தீர்மானத்தையும் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், தமிழகத்துக்கு இதுவொரு புதுப்பாதை; புரட்சிப் பாதை என்பதை யாராலும் மறக்க முடியாது.

மேலும், சிங்காரவேலர் நகராண்மைக் கழகத்தில் அப்போது பொறுப்பு ஏற்கும்போது, கடவுள் பெயரால் என்று கூறாமல், மனச்சான்றின் படியே பொறுப்பேற்கிறேன் என்று பொறுப்பேற்றதும் அதுவரை தமிழகம் காணத ஒன்றாகும். அக்காலத்தில் எல்லோரும் “கடவுளின் பெயரால் பொறுப்பு ஏற்கிறேன்” பதவி ஏற்கிறேன் என்று கூறியபோது, சிங்காரவேலர் இப்படி முதன் முதலில் கூறியது சாதாரணமானதன்று, மிகத் துணிச்சலானது. தந்தை பெரியார் பிற்காலத்தில் சிங்காரவேலரின் பெருமையைக் கூறும்போது, இதனைக் குறிப்பிட்டே பெரிதும் பாராட்டியுள்ளார்.

தெ.பொ.மீ. சமய நம்பிக்கையுடையவர். குறிப்பாக, அக்காலத்தில் வேதாந்தத்தில் நாட்டமுடையவராக இருந்து உள்ளார். அவரது குடும்பம் வழிவழிச் சமய மரபை உடையது. தெ.பொ.மீ.யின் தந்தையார், சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு அவருடைய மூதாதையர் பல்வேறு அறக்கட்டளைகளை நிறுவி திருவிழாவையும் நாட் பூசையையும் செய்தவற்றைப் போலவே அவரும் தொடர்ந்து செய்து வந்தார். மற்றும் அங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடைபெறும் கருட சேவைக்கு அவர் தந்தையார் வேண்டிய பொருளுதவி செய்ததுடன், கோயிலைப் பழுது பார்க்கும் பணிக்கும் பொருளுதவி செய்துள்ளார். இக்காலத்தும் அக்கோயில்களில் அறக்கட்டளை உறுப்பினர்களாக அவரின் வழி வந்தவர்கள் இருந்து வருகிறார்கள். தெ.பொ.மீ.யின் குடும்பம் இத்தகைய சமயப் பின்னணி உடையது. தெ.பொ.மீ.யின் சமூக வாழ்க்கையில் மட்டுமன்றி, அவர் மேற்கொண்ட அரசியல் வாழ்க்கையிலும் ஆன்மீகப் பின்னணியே அவரைச் சூழ்ந்தது. அவரின் பெருமதிப்பிற்குரிய தலைவராகக் காந்தியடிகள் விளங்கினார். காந்தியடிகளோ கடவுளைச் சிறிதும் மறக்காதவர். இராம ராஜ்யம் வேண்டியவர். இந்தச் சூழலில் வளர்ந்த ஒருவர், சிங்காரவேலரின் மத மறுப்புத் தீர்மானத்தை ஏற்பாரா? ஏற்க மாட்டார்.

ஆனால், தெ.பொ.மீ.யோ ஏற்றிருக்கிறார். ஆம், ஏற்றுச் சிங்காரவேலரின் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியிருக்கிறார். இது பெரும் விந்தைதானே! இந்த விந்தைக்குக் காரணம் என்ன? சிங்காரவேலரின் பேச்சுதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் மதத்தை ஏன் புகுத்தக் கூடாது என்பதற்குச் சிந்தனைச் சிற்பி கூறிய காரணங்கள் நியாயமானவையாகவும், நீதியுடையனவாகவும் இருந்திருந்ததால் தெ.பொ.மீ. அதனை ஏற்று ஆதரித்து இருக்கலாம். ஒரு சமயத்தை அன்றிப் பல சமயங்களை உணர்ந்தவர், சமயப் பின்னணியில் வளர்ந்தவர் சிங்காரவேலரின் தீர்மானத்தை ஆதரித்து இருக்கிறார். எனில், அதற்குக் காரணம் சிங்காரவேலரின் சிந்தனை மிக்க பேச்சு மட்டுமன்று; தெ.பொ.மீ.யின் பரந்த உள்ளமும் காரணம் எனலாம். எத்தனை நியாயங்களைக் கூறினாலும் சிலர் ஏற்க மாட்டார்கள். உண்மையை, நியாயங்களைக் கூறினாலும் சிலர் ஏற்கமாட்டார்கள்.

உண்மையை, நியாயத்தை ஏற்பதற்கும் ஒரு பெருந்தகவு வேண்டும். அந்தப் பெருந்தகவு பெ.பொ.மீ.யிடத்தில் இருந்துள்ளது. அந்தப் பெருந்தகவுதான் சமுதாய மேம்பாடு நோக்கி அவரை சமயத்துக்கு மாறாகச் சிந்திக்க வைத்துள்ளது.
இதனைப் போன்றே இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிய அறிஞருமான சக்லத்வாலா (இந்தியத் தொழில் அதிபர் டாடாவின் அக்காள் மகன்) இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது, அவரைச் சிறப்பாகச் சென்னை நகராண்மைக் கழகச் சார்பாக வரவேற்க வேண்டுமென சிங்காரவேலர் தீர்மானம் (1927இல்) கொண்டு வந்தார். அந்தத் தீர்மானமும் வெற்றி பெற அவருக்குத் தெ.பொ.மீ. துணையாக இருந்ததோடு மட்டுமன்றி, நகராண்மைக் கழகத்தில் நடந்த பாராட்டு விழாவிற்கும், வெளியில் நடந்த பாராட்டு விழாவிற்கும் சிங்காரவேலுடன் சேர்ந்து தெ.பொ.மீ. உழைத்துள்ளார். இது பெரிதும் பாராட்டத்தக்கது. மேலும் சென்னை நகரத்தில் கொசுத் தொல்லையையும், சாக்கடை நாற்றத்தையும் ஒழிப்பதற்குப் பாதாளச் சாக்கடையை உடனடியாகக் கட்டி விரிவாக்கவும், இவர்களிருவரும் இணைந்து செயலாற்றி வெற்றி பெற்றுள்ளனர். நகராண்மைக் கழக உறுப்பினராக இருந்தபோது சிங்காரவேலரின் சமுதாய நெறியைப் பின்பற்றிய தெ.பொ.மீ. அதனைத் தொடர்ந்து பின்பற்றியிருப்பாரேயானால் அவரது அரசியல் சூழலிலும், இலக்கியச் சூழலிலும் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம்.

நகராண்மைக் கழகத்தில் சிங்காரவேலரின் வழியைப் பின்பற்றிய தெ.பொ.மீ.கும், சிங்காரவேலருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவற்றை இங்குப் பதிவு செய்வது ஏற்றது. சிங்காரவேலரும் சட்டம் பயின்றவர்; தெ.பொ.மீ.யும் சட்டம் பயின்றவர். சிங்காரவேலர் சில மொழிகளை (தமிழ், ஆங்கிலம், உருது, பிரெஞ்சு, ரஷ்யன்) அறிந்தவர்; தெ.பொ.மீ. பல மொழிகளை அறிந்தவர். இருவரும் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிச் சிறைக்குச் சென்றவர்கள். தமிழகத்தில் உளவியலை (Psychology) தமிழில் மானவ சாத்திரம் என்று முதன் முதலில் கட்டுரைகளாக அறிமுகப்படுத்தியவர் சிங்காரவேலர். தமிழில் உளவியலை ‘மானவ சாத்திரம்’ என்ற பெயரில் முதலில் இரு நூல்களாக எழுதி வெளியிட்டவர் தெ.பொ.மீ. ஈன்ஸ்டினின் கால கோட்பாட்டை (Theory of Relativity) தமிழில் முதன் முதலாகச் சிறுகட்டுரையில் விளக்கியவர் சிங்காரவேலர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1958 ஆண்டில் ஈன்ஸ்டினின் கால கோட்பாட்டை மூன்று பொழிவுகளில் அறிமுகம் செய்தவர் தெ.பொ.மீ. சிங்காரவேலரின் முன்னோர் திருமயிலை திருப்போரூர், திருவண்ணாமலை, திருவள்ளுவர் ஆகிய கோயில்களை ஒட்டி மக்கள் தங்குவதற்காகச் சத்திரங்களைக் கட்டியுள்ளனர். தெ.பொ.மீ.யின் முன்னோரும் சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள ஆதிபுரிஸ்வரர் கோயிலுக்கு அறக்கட்டளை நிறுவியும், ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு அறப்பணி செய்தும் உதவியுள்ளார். இருவரும் செல்வக்குடியில் பிறந்து, ஏழை எளியவர்களுக்காகத் தொண்டாற்றியவர்கள். இருவரும் கதராடையை உடுத்துவதைப் பெருமையாகக் கொண்டவர்கள். காங்கிரஸ் கட்சியில், வெவ்வேறு காலங்களில் இருவரும் தொண்டர் படைத் தளபதிகளாக இருந்துள்ளவர்கள். சிங்காரவேலர் தொழிற் சங்கத்தின் தலைவராக இருந்தது போன்றே தெ.பொ.மீயும் 1925 ஆம் ஆண்டில் சென்னை அலுமினியத் தொழிலாளர் சங்கத்தலைவராக இருந்துள்ளார். தமிழ்ப் புலவரான தெ.பொ.மீ. தொழிற்சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றதற்குச் சிங்காரவேலர் நட்பும், திருவிகவின் உறவும் காரணமாக இருந்திருக்கலாம். ஒத்துழையாமை இயக்கத்தின்போது, சிங்காரவேலர் தம் வீட்டிலேயே பலருக்குச் சட்ட உதவியும், பஞ்சாயத்தும் செய்ததுபோலவே, தெ.பொ.மீ.யும் தம் இல்லத்திலேயே பலருக்குப் பஞ்சாயத்து செய்துள்ளார்.

இருவருக்கும் இத்தனை ஒற்றுமைகள் இருப்பன போலவே, ஒரு வியப்பான ஒற்றுமையும் உண்டு. என்ன ஒற்றுமை? அதுதான் இருவர் கையெழுத்துக்கும் உள்ள ஒற்றுமை. தெ.பொ.மீயின் இளமைக் காலக் கையெழுத்து மிக அழகாக இருக்கும். ஆனால், முதுமைக்காலக் கையெழுத்து சற்றுப் பெரிதாகவும் வளைந்தும் காணப்படும். இக்கையெழுத்தையும், சிங்காரவேலரின் கையெழுத்தையும் ஒப்பு நோக்கினால் ஒன்றே போன்றே தோன்றும். இருவரும் நீண்ட காலம் வாழ்ந்த சான்றோராவர். சிங்காரவேலர் 85 ஆண்டுகள் வாழ்ந்தவர்; தெ.பொ.மீ.யும் தம் தமிழ்ப் புலமையை நடத்திய தோடு, சிந்தாதிரிப் பேட்டையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவித் தமிழ்ப் புலமையையும் உணர்வையும் பெருக்கினார். சிங்காரவேலர் பல துறைகளைக் கற்றுப் பிறருக்கும் உணர்த்தினார். தெ.பொ.மீ.யும் பலதுறைகளைக் கற்றுப் பலர்க்கும் உணர்த்தினார். இருவரும் தமிழர்களுக்குச் சில முறைகளில் முன்னோடிகள். சிங்காரவேலர் முன்னோடி என்றால் தெ.பொ.மீ. அவர் வழியைப் பின்பற்றிய பின்னோடி ஆவார். பல பணிகளில் இருவருக்கும் ஒற்றுமை இருப்பது போன்றும், முதுமையில் இரு பெருஞ்சான்றோரின் கையெழுத்துகளும் ஒன்றி இருப்பது போன்றும், நட்பு ஏற்பட்ட காலம் முதல் தெ.பொ.மீ. சிங்காரவேலருடன் இணைந்து செயலாற்றியிருந்தால் எதிர்காலம் எப்படி இருந்திருக்கும்? தமிழர்களுக்கு அந்த அரிய வாய்ப்பு இல்லை போலும்! தமிழர்கள் இவ்விரு பெரியாரின் தொண்டுகளை, ஒற்றுமை - வேற்றுமைகளை ஆழ உணரவேண்டும். அந்நிகழ்வுகளை நம்மவர்கள் பாடமாக ஏற்க வேண்டும். ஏனெனில் புதுப்பாதை அமைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அன்றோ! சிந்தனைச் சிற்பின் வழியைப் பல்கலைச் செல்வர் பின்பற்றியது போன்று நாமும் பின்பற்ற வேண்டாமா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com