Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006


தமிழ் இதழியல் வரலாற்றில் ஒரு புதிய வரவு

வீ. அரசு

டி.எஸ். சொக்கலிங்கம்
ஆசிரியர் : பொன். தனசேகரன்,
வெளியீடு : சாகித்திய அகாதெமி,
443, அண்ணாசாலை,
சென்னை - 18, விலை : ரூ. 25.00.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் தமிழ் அச்சு ஊடகம் பரவலாகத் தொடங்கியது. சமய இயக்கங்கள், மறுமலர்ச்சி இயக்கங்கள், பிரித்தானியருக்கு எதிரான போராட்டங்கள் ஆகிய பிற, அச்சு ஊடகத்தைப் பயன்படுத்தி, வெகுசன உறவை வளர்த்தெடுக்க முயன்றன. இவ்வகையில் ஜி. சுப்பிரமணிய அய்யர், பாரதி ஆகியோர் முதல் தலை முறையினர் திரு.வி.க, வரதராஜூலு நாயுடு போன்றவர்கள் இரண்டாம் தலைமுறையினர் தெ.ச. சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் ஆகிய பிறர் மூன்றாம் தலைமுறையினர் என்று கூறமுடியும். முதலிரு தலைமுறைக்குக் கிடைக்காத பல வாய்ப்புகள் மூன்றாம் தலைமுறையினருக்குக் கிடைத்தன. இக்காலத்தில் தான் மூன்றாம் தலைமுறையினருக்குக் கிடைத்தன. இக்காலத்தில்தான் இதழியல் துறை வளருவதற்கு அடிப்படையான செய்தி நிறுவனங்கள் (News Agency) உருவாயின. தமிழ்ச் சூழலில் 1930களில் செய்தி இதழ்கள் வெகுவாக வளர்ச்சியடைவதற்கு மூலமாக இருந்த திரு. சதானந்த் அவர்கள் செய்தி நிறுவனத்தை உருவாக்கி நடத்தியவர். அதில் பயிற்சி பெற்றவர் மணிக்கொடி சீனிவாசன். இந்தப் பின்புலத்தில்தான் தொ.ச. சொக்கலிங்கம் இதழாளராக உருப்பெறுகிறார். நண்பர் பொன். தனசேகரன் சொக்கலிங்கம் பற்றி எழுதியுள்ள இந்நூலை அடிப்படையாகக் கொண்டு, அவர் எவ்வகையில் இதழாளராக உருப்பெற்றார் என்பதைப் பின்வரும் வகையில் நாம் தொகுத்துக் கொள்ள முடியும்.

பிரித்தானியருக்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயது முதல் சமூக ஈடுபாடு மிக்கவராகவே வளர்ந்து வருகிறார். காந்தியக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டு செயல்படுகிறார். 1925 இல் வரதராஜூலு நாயுடு அவர்களின் தமிழ்நாடு வார இதழில் தெ.ச. சொக்கலிங்கம் பத்திரிக்கையாளராக சேருகிறார். 1926 இல் ‘தமிழ்நாடு’ நாளிதழாக வெளிவரத் தொடங்குகிறது. அவ்விதழிலிருந்து விலகி 14.04.1931 இல் ‘காந்தி’ என்ற இதழை காலணா விலையில் தொடங்குகிறார். பின்னர் 17.09.1933 இல் நண்பர்கள் வ.ரா மற்றும் சீனிவாசன் ஆகியோருடன் இணைந்து ‘மணிக்கொடி’ இதழைத் தொடங்குகிறார்கள். 11.09.1934 இல் ‘தினமணி’ ஆசிரியர் ஆகிறார். 1925-1934 என்ற காலங்களில் நான்கு இதழ்களோடு இவருக்கு நேரடித் தொடர்பு உருவானது.

தமிழ் இதழியல் வரலாற்றில் மேற்குறித்த நான்கு இதழ்கள் உருவான சூழலும், அவை தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும் குறித்த புரிதல் மூலம், தெ.ச.சொ. அவர்களின் பங்களிப்பை மதிப்பிட முடியும்.

‘தமிழ்நாடு’ இதழ் சேரன் மாதேவி குருகுலம் தொடர்பான சாதியத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியது. இதில் வரதராஜூலு நாயுடு அவர்களும் ஈ.வெ.ராவும் முன்னணியில் இருந்து செயல்பட்டனர். காங்கிரஸ் இயக்கத்தில் சாதியம் பற்றிய பார்வைகள் எவ்விதம் செயல்பட்டன என்பதற்கு இந்நிகழ்வு நல்ல சான்று. இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தில் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இயக்கங்கள் உருவாயின. ‘காந்தி’ இதழ் காந்திய அலையைத் தமிழகத்தில் உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தது. ‘மணிக்கொடி’ பிரித்தானியருக்கு எதிரான பண்பாட்டுப் போரை முன்னெடுக்க முயன்றது. ‘தினமணி’ காங்கிரஸ் சார்பு இதழாக உருப்பெற்று, தமிழ்ச் சமூக வரலாற்றில் தமிழ் நாளிதழ்களின் அடையாளமாக வடிவம் பெற்றது. இவ்விதழ்களின் மூலமே தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் வளர்ச்சியடைந்தது. இவ்விதழ்களே தமிழ்ப் படைப்புலகத்தில் நவீனத்துவம் உருப்பெற வழிகண்டன. 1930களில் தமிழின் புதிய இதழியல் உருப்பெற இவைகளே வழிகண்டன. இன்னொருபுறம் சுயமரியாதை இயக்கம் மற்றும் சோசலிச இயக்க இதழ்கள் செயல்பட்டன. தமிழில் நவீனப் படைப்பிலக்கியம் உருவாவதில் காந்தி, மணிக்கொடி தினமணி ஆகிய இதழ்களுக்குத்தான் தனித்த இடமுண்டு. இதில் திரு. சதானந்த், சீனிவாசன், வ.ரா. சொக்கலிங்கம் ஆகிய நால்வருக்கும் முதன்மையான இடமுண்டு. இவ்வகையில் செயல்பட்டு, தமிழின் நவீன இதழியல், நவீன எழுத்து ஆகியவை உருப்பெற வழிகண்டவர் என்ற வகையில் தெ.ச.சொ. அவர்களின் இடம் தனித்ததாக இருக்கிறது. இவ்வகையான மனப்பதிவை பொன். தனசேகரன் அவர்களின் நூலை வாசித்து முடித்தவுடன் பெற முடிகிறது.

வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களின் தனித்த பங்களிப்புகளை பிற்காலங்களில் பதிவு செய்யும்போது அவர்களை வழிபடுவதைவிட, அவர்களின் மூலமாக சமூகத்திற்கு என்ன கிடைத்தது? அது சமகாலத்திலும் கூட அவ்வகையில் ஏற்புடையதாக அமைகிறது என்ற புரிதல் தேவை. நண்பர் பொன். தனசேகரன் தொகுத்து வழங்கியுள்ள தொ.ச.சொ. பற்றிய அரிய தகவல்கள், அந்த மனிதரைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவுகின்றன. இதழாளரை, இன்னொரு இதழாளர் பதிவு செய்திருப்பதின் மூலம் அத்துறை சார்ந்த பல்வேறு விவரங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பாக இந்நூல் அமைகிறது. தமிழ் இதழியல் வரலாறு பற்றி அறிய விரும்பும் மாணவர்கட்கு அறிய தரவாக இந்நூல் அமைந்திருப்பதை வெகுவாகப் பாராட்டவேண்டும்.

திரு.தெ.ச. சொக்கலிங்கம் அவர்களின் இதழியல் ‘தமிழ் நாடு’, ‘காந்தி’, ‘மணிக்கொடி’, ‘தினமணி’ என்று உருப்பெற்றுப் பின்னர் ‘தினசரி’ வழியாக செயல்பட்டது. இச்செயல்பாடே இவரது அடையாளமாக கொள்ளப்பட்டாலும் இக்காலங்களில் தமிழ்ப் படைப்பாளர்களோடு இவர் கொண்டிருந்த தொடர்புகள், தமிழகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றிய இவரது பதிவுகள், இவரது இலக்கியச் செயல்பாடுகள் ஆகிய பிறவும் அவரைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. இவ்வகையானப் பதிவுகளையும் தனசேகரன் அவர்களது நூலின் மூலம் பெற முடிகிறது.

தமிழ் நூல் வெளியீட்டு வரலாற்றில் நவயுகப் பிரசுராலயம் உருவாக்கப்பட்டது என்பது மிக முக்கியமான நிகழ்வு. பலரும் கூடி கூட்டுறவாக உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, புதுமைப்பித்தன் கதைகளை வெளியிட்டது. பாரதிதாசன் முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்ட குத்தூசி குருசாமி தம்பதியினர்செயல்பாட்டோடு, புதுமைப்பித்தன் கதைகளை வெளியிட்ட நாட்டில் பிரசுலாயச் செயல்பாட்டினை இணைத்துப் பார்க்கலாம். இதில் முதன்மையான பங்களிப்பு தெ.ச.சொ. அவர்களுக்கு உண்டு. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இச்செயல் சாதாரணமன்று. பாவேந்தரும் புதுமைப்பித்தனும், இன்று நமது மொழியின் மிகச் சிறந்த வளமாக அறியப்படுகிறார்கள். அவர்களை முதன் முதல் வெளிப்படுத்தும் செயலின் முக்கியத்துவம் மிகவும் ஆழமானது. புதுமைப்பித்தன் ஆக்கங்கள் வெளிவருவதில் தெ.ச.சொவும், வ.ராவும் எடுத்துக் கொண்ட அக்கறைகள் இவ்வகையில் விதந்து பேசத்தக்கவை. 1930களில் உருவான நவீன தமிழ் எழுத்தை, அடையாளம் காணுதல் மற்றும் பதிவு செய்தல் என்ற வகையில் தெ.ச. சொ. அவர்களின் பங்களிப்பை, தனசேகரன் அவர்களின் நூல் சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறது.

தெ.ச.சொ. அவர்களின் இலக்கிய ஈடுபாடு சிறுகதை களையும் நாவல்களையும் எழுதிப் பார்க்கச் செய்துள்ளது. அவை முழுமை பெற்றதாகச் சொல்ல முடியாது. தமிழ்ச் சமூகம் அவரை இதழாளராக ஏற்றுக் கொண்ட அளவிற்கு, படைப்பாளராக ஏற்றுக் கொண்டதாகக் கூற முடியாது. ஆனால் தமிழின் குறிப்பிடத்தக்க மொழிப் பெயர்ப்பாளராக அவர் அறியப்படுகிறார். 1930 கள் மற்றும் நாற்பதுகளில் டால்ஸ்டாய் ஆக்கங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. தமிழ்ப் பதிப்புலகின் முதன்மையான செயல்பாட்டாளராக விளங்கிய சக்தி கோவிந்தன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, போரும் அமைதியும் என்ற டால்ஸ்டாய் நாவலை தெ.ச.சொ. மொழி பெயர்த்துள்ளார். இவ்வகையில் 1930-50 இடைப்பட்ட தமிழ்ச் சூழலில் தமிழ் இதழியல், தமிழ் படைப்புலகம், மொழிப் பெயர்ப்பு என்று செயல்பட்ட தெ.ச.சொ. அவர்களின் பல முகங்களைப் புரிந்து கொள்ள தனசேகரன் நூல் நல்ல ஆவணமாக அமைகிறது.

தெ.ச. சொக்கலிங்கம் வெகுசனத் தளத்தில் செயல் பட்டவர். இத்தளத்தில் செயல்பட்டவர்களின் கருத்துநிலை குறித்த மதிப்பீடுகளும் பிற்காலங்களில் கவனத்தில் கொள்ளத்தக்கவை. மனிதர்களைப் பற்றிப் பதிவு செய்யும் போது, அவரது சமகாலத்தில் இருந்த சமூக இயக்கம் பற்றிய அவரது புரிதலைப் பதிவு செய்வதும் அவசியம். காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டவர்; அன்றைய காங்கிரஸ் இயக்கத்தின் காந்திய கோட்பாடுகளை நம்பியவராகச் செயல்பட்டுள்ளார். கோயில் நுழைவுப் போராட்டத்தை எதிர்க்கும் அணிக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு அரசு சார்ந்த அலுவலகப் பணிகளில் மிகுதியாக இடம் கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இராஜாஜி - சத்தியமூர்த்தி என்ற காங்கிரஸ் உட்கட்சி அணி களில், இவர் சத்திய மூர்த்தி பற்றிய விமரிசனம் உடையவராக இருந்துள்ளார். குறிப்பாக தேவதாசி ஒழிப்பை ஏற்றுக் கொள்ளாத சத்தியமூர்த்தியை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடக்க காலங்களில் இராஜாஜி அணியில் இருந்தவர், பின்னர் அவரை விமரிசனம் செய்கிறார். பின்னர் உருவான காமராசர் அணியில் ஈடுபாடு உடையவராகச் செயல்பட்டிருக் கிறார். இவ்வகையில், தமிழகத்தின் காங்கிரஸ் இயக்கச் செயல்பாடுகளில் தனக்கெனத் தனித்த அடையாளத் துடன் செயல்பட்டிருக்கிறார். தாம் இதழியல் துறையில் பணியாற்றிய போது, தனது சக ஆசிரியர்களின் உரிமை களுக்காக தினமணி ஆசிரியர் பதவியை விட்டு விலகியிருக்கிறார். பின்னர் முதுகுளத்தூர் கலவரம் குறித்தும் விமரிசனம் செய்துள்ளார்.

மும்மொழித் திட்டத்தின் சார்பாளராகவே செயல் பட்டுள்ளார். தமிழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டம், சுயமரியாதை இயக்கம் ஆகிய அமைப்புகளை இவர் வாழ்நாள் முழுதும் விமரிசனம் செய்தவர். இதே கண்ணோட்டத்தில் பொதுவுடைமை இயக்கங்களையும் ஏற்றுக் கொண்டவரில்லை. 1930களில் பொதுவுடைமை இயக்கங்கள் நடத்திய போராட்டங் களை ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வகையான தகவல்களையும் நண்பர் தனசேகரன் பதிவு செய்திருக்கலாம். இதனால் தெ.ச. சொ. அவர்கள் குறித்த மதிப்பீடுகள் எவ்வகையிலும் குறையப் போவதில்லை.

திரு. சொக்கலிங்கம் குறித்தப் பதிவுகளைத் தமிழ்ச் சூழலில் செய்தவர்கள் மிகக் குறைவு. அவருடைய இதழியல் காலங்களில் தொடர்பு கொண்டிருந்த மயிலை நாதன் என்பவர், சொக்கலிங்கம் தொடர்பான மலர்களைக் கொண்டு வந்தார். அவர் மூலமாகவே எங்களைப் போன்றவர்கள் சொக்கலிங்கம் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. நண்பர் முனைவர் பா. மதிவாணன், தமது முனைவர் பட்ட ஆய்வகத்தில் ‘காந்தி’ இதழ்களை எடுத்துக் கொண்டு பல அரிய தகவல்களை வெளிக் கொண்டு வந்தார். சொக்கலிங்கம் அவர்களின் இதழியல், அரசியல் பணிகள் குறித்த நூலை 1988இல் வெளியிட்டார். இவ்வரிசையில் சாகித்திய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நண்பர், இதழாளர் பொன். தனசேகரன் அவர்களின் இந்நூல் வெளிவந்துள்ளது. தமிழ் இதழியல் வரலாறு மற்றும் தெ.ச. சொக்கலிங்கம் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றுக்கு மிக அரிய ஆவணம் இந்நூல். இந்நூலை உருவாக்கிய நண்பருக்கு நமது பாராட்டுகள் என்றும் உரியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com