Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மே - ஜூன் 2006


ஒடுக்கப்பட்டோரில் தலைவர்கள் ஏன் உருவாகவில்லை?

கோ. தங்கவேலு

ஆங்கிலேயர்கள் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குள் இந்தியா முழுவதையும் கைப்பற்றி ஆளமுடியவில்லை. ஆதலால் “பரந்த பாரதம்” ஆங்கில ஆட்சிக்குள்ளாக்க வேண்டுமென்பதற்காக வாரிசில்லாத நாடுகளைக் கைப்பற்றும். “காலாவதிக் கொள்கை” சுதேச மன்னர்களால் நன்கு ஆளப் படாத நாடுகளை மக்கள் நலங்கருதி “ஆங்கில ஆட்சியுடன் சேர்த்துக்கொள்ளுதல்”, வலுவற்ற சுதேச மன்னர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி அவர்களுடன் உடன்பாடு செய்துகொண்டு ஆங்கிலேயரின் படை ஒன்று அச்சுதேச மன்னர் நாட்டில் நிறுத்தி வைக்கும் “துணைப்படை முறை உடன்படிக்கை” என்னும் முறையையும் கையாண்டனர்.

இவ்வாறு, இந்திய நாடுகளை வென்று தங்களாட்சியைப் பெருக்கிக்கொள்வதை விட்டு, இந்திய விவகாரத்தில் தலையிடுவதில்லையென்று கூறிக்கொண்டே மேற்கண்ட அரசியல் தந்திரங்களைக் கையாண்டு சுதேச மன்னர்களை அடிமைகளாக்கி, அவர்களின் மண்ணையும் கைப்பற்றிக் கொண்டனர்! இத்தகைய துணைப்படை முறையைக் கொண்டு வந்து, கி.பி. 19ஆம் நூற்றாண்டின் முடிவுக்குள் இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக்கொண்டனர்: இத்துணைப்படை முறையை முதன் முதலில் கொண்டு வந்தவன் இந்தியாவை ஆண்ட தலைமை ஆளுநர் வெல்லெஸ்லி பிரபு (1798 - 1805) ஆவான்: இது ஒரு சூது நிறைந்த உடன்படிக்கையாகும். இதில் உள்ளடங்கியுள்ள சூதை எவராலும் எளிதில் உணர முடியாது!

அன்றுஆங்கிலேயரின் பரமவைரி பிரெஞ்சுக்காரன், இவனோடு ஓயாது போர் நடந்துகொண்டிருந்தது. இவன் இந்திய அரசியல் விவகாரங்களில் தலையிட்டு, சுதேச மன்னர்களோடு அரசியல் நட்புறவு கொண்டு, ஆங்கிலேயரை விரட்ட நினைத்தான். சுதேச மன்னர் ஒவ்வொருவரும் ஆங்கிலப் படையொன்றைத் தம் தலைநகரில் நிறுத்தி வைத்துக்கொண்டால் எதிரி எளிதில் சுதேச மன்னரோடு உறவு கொள்ள முடியாது. மேலும், அப்படைக்காகும் செலவை சுதேச மன்னரே ஏற்கவேண்டும்; ஆனாலும், ஆங்கிலேயரின் உத்தரவின்றி அதனைப் பயன்படுத்தக்கூடாது. ஆங்கிலேயர் “உங்கள் பாதுகாப்புக்காகவே அப்படை உள்ளது” என்ற உயரிய தந்திரமான உபசாரத்தைக் கூறி வந்தனர்.

இத்துணைப்படை முறை உள்நோக்கமே சுதேச மன்னர்களைத் தன்னம்பிக்கை இழக்கச் செய்ய வேண்டும் என்பதாகும். அவர்கள் தனிப்பட்ட முறையில் வலுப்பெற்று ஆங்கிலேயரை எதிர்க்க முற்படக்கூடாது என்பதாகும். இதனால், அவர்கள் தங்களிடமிருந்த படைகளை அறவே கலைத்துவிட்டனர். அப்படைகள் வேலை இல்லாததால் வழிப்பறிக்கொள்ளையர்களாக மாறிவிட்டனர் - அவர்கள் தான் பிற்காலத்தில் “பிண்டாரிகள்”, “தக்கர்கள்” முதலிய கொள்ளைக் கூட்டத்தினராகிவிட்டனர். இவர்களை விலங்குகளைப் போல் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி ஒழித்தனர்.

இத்தகைய கொள்ளையைத்தான் இந்துக்கள் ஒடுக்கப்பட்டோர் மீது சுமத்தினர். ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒரு சாதி இந்து ஒடுக்கப்பட்டோருக்காக பாடுபடுவதாகக் கூறி முன்வருவார், அதுவரை அவர்களிடையே உண்மையாகப் பாடுபட்ட, உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த ஒடுக்கப்பட்ட வரை ஒடுக்கப்பட்டோரே ஒதுக்கித் தள்ளும்படிச் செய்வார். பெரும்பாலான சமயங்களில் அவர்களைத் தீர்த்தே கட்டும்படிச் செய்வார்.

இத்தகையோர் சமயச் சீர்திருத்தவாதிகளாக, அல்லது அத்தகைய இயக்கத்தவராக, அல்லது ஒரு அரசியல் தலைவராக இருப்பார். எனவே, சேறு, சகதியில் சாக்கடையில் போராடித் தன் இனத்தவரை மீட்ட அந்த உத்தமத் தலைவரைத் துரோகி பட்டங்கட்டிப் புதைத்துவிடுவர். இன்றும் “அரிசன காலனிகளில்” இரட்டை மலை சீனிவாசன் மன்றமோ, அம்பேத்கர் மன்றமோ காணப்படாமைக்கும் அங்கெல்லாம் அரிசன சேவா சங்கமும், அண்ணா தெருவில் அண்ணா மன்றமுமே காணப்பெறுகின்றன; அங்கு எப்படி ஒரு தலைவன் அவர்களிடையே தோன்ற முடியும்? ஒடுக்கப்பட்ட ஒருவன் எந்தக் கட்சியில் வேட்பாளனாக நின்றாலும் ஒதுக்கப்பட்ட வேட்பாளனாக நிற்கிறான்; கட்சி மட்டும் சாதி இந்து கட்சி, அம்பேத்கர் கட்சி இல்லை! சட்டமன்றத்தில் தன் தங்கையைச் சாதி இந்து ஒருவன் கற்பழித்தான் என்று வாய் திறந்து பேசவும் அவனுக்கு உரிமை இல்லையே, தன் கட்சிக் கொரடாவைக் கேட்டு, அனுமதி பெற்றுத்தானே பேச வேண்டும். அவர் என்ன சொல்லுவார், சாதி, மதம், இவை பற்றிப் பேசக்கூடாது; இதுதான் நம் கொள்கை, கோட்பாடு என்பார். பொதுவாக நடக்கும் சாதி மோதல் பற்றி நடக்கும் விவாதத்திலும் இவன் பேசமாட்டான்; ஏனென்றால் இவனது கட்சி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது! எப்படி ஐயா ஒடுக்கப்பட்டோரில் ஒரு தலைவன் உருவாவான்? தேவையற்றவைக்கெல்லாம் வெளிநடப்பு செய்யும் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் தங்கள் இனத்தவர் பற்றி இழிவாகச் செயல்படும்போது வெளிநடப்பு செய்கிறார்களா? இல்லையே, தன் கட்சிக் கட்டுப்பாடு! தலைவர் (கொரடா) தலை அசைக்க வேண்டுமே!

ஆக அவர்களுக்கு இன்னமும் சனநாயக வாக்குரிமையே இல்லை. அம்பேத்கர் 26 சனவரி, 1950-ல் எல்லோருக்கும் வாக்குரிமை கிடைத்துவிட்டது என்றார், இந்திய அரசியல் சட்டம் கூறும் முதல் தரமான பொய் இதுதான். தீண்டாமை இன்றோடு ஒழிந்துவிட்டது என்றார். இது அப்பட்டமான பொய்! இன்றும் இரட்டைக் குவளை (தம்ளர்) உள்ளது. தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏன் எடுக்கிறார்கள்! இல்லாத ஒன்றுக்காகவா? உள்ள ஒன்றுக்காகவா? அரிசன வாரம் (இன்று மாந்தாபிமான வாரம்) ஏன்? பேரறிஞர் அண்ணா பிரிட்டானியர் அரசியல் தந்திரத்தை ஒரு மயில் கழுத்துக்கு ஒப்பிட்டுப் பேசுவார். அழகிய மயிலின் கழுத்து என்ன நிறம்? நீல நிறமா? மஞ்சள் நிறமா? கருப்பு நிறமா? மாலை வெய்யிலில் பார்த்தால் மயக்கும் நிறமாக உள்ளதே! இதை உறுதியாக அறுதியிட்டுக் கூறமுடியாது! அப்படித்தான் பிரிட்டானியர் (ஆங்கிலேயர்) அரசியல் தந்திரமும் என்பார் அதைத்தான் துணைப்படை முறையில் காண்கிறோம். இதையேதான் பல ஆயிரம் ஆண்டுகளாய் ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஓரினத்தின் தலைமையிலும் காண்கிறோம்.

இன்றைய அரசியல் தலைவனுக்காக உயிர் விட்ட பலரில் ஒடுக்கப்பட்டோரே அதிகம். புரட்சித் தலைவர் நோய்வாயுற்றிருந்த போது அவருடைய படத்தை மடியிலே கட்டிக்கொண்டு தூக்கிட்டு உயிர் நீத்த கர்ப்பிணி ஒரு ஒடுக்கப்பட்ட பெண்மணிதானே! இப்படி ஆயிரம் கூறலாம்! உலக மேதை, உத்தமன், அம்பேத்கர் மறைவின்போது எத்தனை காலனி மக்கள் திடுக்கிட்டு மாரடைப்பால் உயிர் நீத்தனர்? நானே கூட ஒரு நேர்காணலில் “அம்பேத்கர்” என்பவரைப் பற்றி கூறு என்றேன் அவர் ஒரு சினிமா நடிகர் என்றார். அந்த மாணவர் எம்.ஏ. படித்தவர் அகில இந்திய ரீதியிலான வேலைக்கு வந்தவர்!

இதற்கெல்லாம் அடிப்படைக் கரணியம் இவர்களுக்குக் கற்பிக்கவில்லை, கற்பிக்க விடவில்லை, கற்பதையும் திசை
மாற்றிவிட்டிருக்கின்றனர்! உலகறிந்த மேதை, இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி அம்பேத்கருக்கே இந்தக் கதியென்றால் ஒடுக்கப்பட்டோரின் தலைவர்கள், குறிப்பாகத் தமிழகத்தில் தோன்றியவர்களைப் பற்றி எப்படி இவர்கள் அறிய முடியும்? இன்று ஊர் தோறும் உள்ள நினைவகங்கள், விழாக்கள், வேடிக்கைகள் யார் யாருக்காகவோ உள்ளனவே. அவை பச்சைக் கொடியா அல்லது பச்சை பாம்பாயென்பதை எப்படி ஒடுக்கப்பட்டோர் தலைமுறைக்கு உணர்த்த முடியும்?

இன்று காலையில் கூட ஒருவர் ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார். அதற்கு வாலோ தலையோ “திராவிடம்” என்றுதானே ஒட்டிக்கொண்டுள்ளது. உலக மொழிகளிலே செம்மொழி உயர்வு பெற்றத் தமிழ் மொழியில் சொற்களுக்கா பஞ்சம்! ஏன் இன்று தமிழகத்தில் உள்ள 90% கட்சிப் பெயர்களில் “திராவிட”மென்ற சொல் ஒட்டிக்கொண்டுள்ளது! இதற்கொரு மூலம் இருக்குமன்றோ? ஆயின் கண்டிப்பாக அதன் மூலமே ஒதுக்கப்பட்டோரிடமே இருந்தது. அதைத்தான் அடிப்படையாகக் கொண்டு இவைகள் போலிகளாகத் தோன்றி அந்த மூலத்தையும், மூல முதல்வர்களையும் இந்த உலுத்தர்கள் கூட்டம் ஒழித்து விட்டரென்பதுதான் வரலாற்று உண்மை. இதனை உணர்ந்திருந்தால் ஒடுக்கப்பட்டோரின் தலைவர் யார் என்று தெரிந்திருக்கும்! “தனி மனித வழிபாடு” அவர்களின் உண்மையான தலைவனுக்கே சென்றிருக்குமே! “அம்மா”, “தந்தை”, “அண்ணா” முதலிய குடும்பத் தலைவர்கள் அவர்களிடமே கண்டறியப்பட்டிருப்பார்கள் அல்லவா?

வரலாற்று அடிப்படையில் 1944 சேலம் மாநாட்டில்தான் பேரறிஞர் அண்ணா “நீதிக் கட்சியை” “திராவிட இயக்கம் (கட்சி)” என்று பெயர் மாற்றம் செய்தார். அதற்குப் பிறகுதான் காலப்போக்கில் அதிலிருந்து “திராவிட முன்னேற்றக் கழகம்”, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்”, “அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” முதலியனவாக இன்று வரை கிளைவிட்டுக்கொண்டே உள்ளன.

ஆனால், 1857-லேயே “ஆதி திராவிட மகா சன சபை” என்ற பெயரில் தங்களுக்கென ஒரு கழகத்தைத் தொடங்கியுள்ளனர். அது 1891ஆம் ஆண்டு சங்கங்களின் சட்டப்படி பதிவு செய்து அதிலெடுக்கும் தீர்மானங்களின்படி, ஆதி திராவிட குமுகாயம் இயங்கி வந்துள்ளது. சட்ட மேலவைக்கு இன்னாரைத்தான் நியமிக்க வேண்டுமென இச்சபை குறிப்பிடுபவரையே அரசும் நியமித்துள்ளது. 1919ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டப்படிதான் முதன் முதலில் ஒடுக்கப்பட்டோருக்கு சட்டமன்ற மேலவையில் (Legislative council) இடம் ஒதுக்கப்பட்டது பெருந்தன்மையாக அதுவரை அரசியல் வட்டத்திலேயே கண்ணில் படாத ஆதிதிராவிட பள்ளருக்கும் ஒரு இடம் தரவேண்டுமென தந்தை சிவராஜ் கூறியதற்கேற்ப அவர்களில் ஒருவரை மேலவை உறுப்பினராக்கினார்கள்.

இவ்வாறு “அரசனை ஆக்கும் ஒப்பற்ற ஆணையமாகத் திகழ்ந்த” ஆதி-திராவிட மகா சன சபை காங்கிரசு மாயையில் சிக்கி மாண்டு மடிந்துவிட்டது. அதிலிருந்து ஆதி-திராவிட மகாசன சபை என்பதையே இந்துத்துவா இருடிகள் “பறையர் மகா சன சபை” என்றே அழைத்தனர், எழுதினர். ஒடுக்கப்பட்டோரில் தலைவர் உருவாக முடியுமா? பறையர், பஞ்சமர் முதலிய சொற்களைத் தவிர்த்து “ஆதி-திராவிடர்” என்ற சொல்லாலேயே தங்களை அழைக்க ஒரு அரசு ஆணையையும் கொண்டுவரச் செய்தனர்; இதற்காகவே தங்களை ஆதி-திராவிடர் என்று அழைக்க வேண்டும், அதன்படியே ஆவணங்களில் பதிய வேண்டுமென்றெல்லாம் இம்மக்கள் ஆளுநரையும், அரசப் பிரதிநிதிகளையும் கண்டு மனு கொடுத்தும், இச்சங்கத்தின் பெயரால் வரவேற்பு உரைகள் அளித்தும் தங்களை இந்துக்கள் அல்லர் என்று ஆவணங்களின்படி உறுதி செய்துள்ளனர். ஆனால், தந்தை பெரியார் “நீங்கள் ‘ஆதி-திராவிடர்’ என்று அழைத்துக் கொள்ளாமல் ‘திராவிடர்’ என்றே அழைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு இதில் ஆதி என்ற இரண்டு எழுத்துக்கள்தாமே நட்டம்” என்று அவர் ஒரு வியாபாரி என்ற தோரணையில் இலாப நட்ட கணக்கைக் காட்டினார்.
இதில் நடந்த ஒரு வேடிக்கையை பாருங்கள்! அரசப் பிரதிநிதியிடம் அவருடைய சபையில் ஆதி-திராவிடருக்கு ஓரிடம் கேட்டனர் ஆதி-திராவிட மகா சன சபையார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசப் பிரதிநிதியைச் சந்தித்தபோது அவர் ஆதி-திராவிட சபையாருக்குத்தான் ஒரு திராவிடரைச் சபையில் சேர்த்துவிட்டதாகக் கூறினார்; அவர் பெயர் சண்முக சுந்தர முதலியார் என்றும் கூறினார். ஆதி-திராவிட மகாசன சபையார் “ஐயா அவர் திராவிடர், நாங்கள் ஆதி-திராவிடர். அவர் முதலியார் - சாதி - இந்து, நாங்கள் சாதியும், மதமும் அற்றவர்கள்” என்று விளக்கிக் கூறியதோடு ஆதி-திராவிடருக்கென தனியிடம் கேட்டனர். இதனால்தான் தந்தை பெரியாரின் இலாப நட்டக் கணக்கையும் ஒடுக்கப்பட்டோர் உணர்ந்தனர்.

இவ்வாறே, ஆங்கில அரசு கொண்டுவந்த ஒவ்வொரு சட்டத்தையும் தங்களுக்கே பயன்படுத்திக்கொண்டு இவர்களைப் பஞ்ச, பராரிகளாய் பழையபடியே ஒடுக்கி வந்தனர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட “பஞ்சமி நிலங்கள்” இவ்வாறுதான் நய வஞ்சகர் வசமாயின. தீண்டாமை ஒழிப்புச் சட்டங்கள் மறைந்தன. இன்று சட்டமன்றத்திலேயே ஓர் உறுப்பினர் சாதிப் பெயரைச் சொல்லி மற்றொரு உறுப்பினரை விளித்தார் வன்கொடுமைச் சட்டம் பயன்படுத்தப்பட்டதா? கண்ணுக்குத் தெரிந்து எத்தனை எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் அமைச்சர்கள் இச்சட்டத்தின்படி, கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்?
ஆகவே, சட்டம், சன நாயகம் முதலியன குப்பைக் காகிதங்களே! வட்ட மேசை மாநாட்டிலேயே பாபா சாகேப் அம்பேத்கர் ஆங்கில அரசியல் மேதைகளை நோக்கி “நீங்கள் 200 ஆண்டுகள் எங்களை அடிமைகளாய் ஆண்டீர்கள், நீங்கள் ஒரு கனம் நினைத்திருந்தால் எங்களுக்குள்ளிருந்த, சாதி தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்திருக்கலாமே?” என்று வினவினார். இரண்டாவது வட்ட மேசை மகாநாட்டிற்குச் சென்றிருந்த காந்தியார் பாபா சாகேப்பை கட்டித் தழுவிக் கொண்டு “நீயல்லவோ சுத்த வீரன்! சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து எதிர்த்து பேசிவிட்டாயே! உன் தேசபக்தியே தலைசிறந்த தேசபக்தி” என்றார்.

சட்டென காந்தியாரை நோக்கி அண்ணல் அம்பேத்கர், “இருநூறு ஆண்டுகள் அடிமைகளாய் ஆண்டவனே அடிமைத்தளை அறுத்துவிட்டுச் சென்றுவிட்டானே. மூவாயிரம் ஆண்டுகளாய் எங்களை அடிமைகளாக ஒடுக்குலைத்துள்ள எங்களுக்கு விடுதலை எப்பொழுது தரப்போகிறீர்கள்?” என்று கேட்டார்! இதை ஆழமாக சிந்தித்த காந்தியடிகளார், தீண்டாமையை அடியோடு ஒழிக்கவேண்டுமென்ற மயில் கழுத்துக் கோட்பாட்டின்படி பூனா ஒப்பந்தம் செய்து தீண்டாதாரையே அரசியலில் தலையெடுக்கவிடாமல் ஒழித்து விட்டார். இதுதான் இந்துத்துவா கோட்பாடு! இந்தப் புதருக் குள்ளிருந்து ஒடுக்கப்பட்டோரின் தலைவன் முளைத்து துளிர்த்து, தழைத்துத் தலையெடுத்துத் தலைவனாக எழ முடியுமா?
இந்திய தேசியவாதிகளில் தலைசிறந்த பலரும் தீண்டாதார், தீண்டாமை என்ற சொற்களை உச்சரித்தாலே இந்தியாவே தீட்டுப்பட்டுவிடும் என்று நினைத்தனர். ஆனால், நாட்டு விடுதலை வேண்டுமென்றனர். பால கங்காதர திலகர் “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்றார். அவரே தீண்டாதவனாகப் பிறந்திருந்தால் “தீண்டாமையை ஒழிப்பது என் பிறப்புரிமை” என்று கூறியிருப்பார் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதின் பொருளை ஆழ்ந்து சிந்தியுங்கள்!

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வட்ட மேசை மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது மன்னர் பெருமானுக்கும் மற்றைய ஆண்டைகளுக்கும், தான் ஒரு அடிமையினும் அடிமை என்பதனை உணர்த்தியதோடு, அத்தகைய அடிமை தங்களின் பல கோடி இந்து அடிமைகளால் தீண்டப்படாதவன்; அடக்கி ஒடுக்கப்பட்டவன், என்றார். எதிர்கால மன்னர் பெருமான் “தான் ஆட்சிக்கு வரும்போது அந்தத் தீண்டாமைப் பேயைப் பிரம்பால் அடித்து விரட்டுவேன்” என்றார். ஆனால், தீண்டாமையை ஆங்கிலேயர்கள் வணிகப் பொருளாகவா இங்குக் கொண்டு வந்தார்கள்? அதை அடித்துவிரட்டக் கைப்பிரம்பு போதுமோ? இந்துத்துவாவின் ஜென்மத்தோடு தோன்றிய தொழுநோய் அல்லவா அது! பொது உடைமையாளர்கள், சம உடைமையாளர்கள் இப்பொழுவது சாதி, தீண்டாமையை எதிர்த்துப் போராடுவார்களா?



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com